அலெக்சாந்தரும் அசோகரும்/பேரரசின் சின்னங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. பேரரசரின் சின்னங்கள்

கலிங்க வெற்றிக்குப் பின்னர் அசோகர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்து வந்தார். பெளத்த தருமத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டினால் அத்தருமத்தை வழங்கிய புத்தர் பெருமானிடத்தும் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். உபகுப்தர் என்ற பெளத்த குருவுடன் அவர் புத்தர் வாழ்ந்த பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பெருமான் அவதரித்த தலமாகிய உலும்பினியில் 'இங்கேதான் பகவான் அவதரித்தார்' என்று உபகுப்தர் கூறக் கேட்டு, அசோகர் அங்கே ஒரு கல் தூணை நட்டு, அதிலே தாம் அங்கு யாத்திரை சென்ற செய்தியைப் பொறித்து வைத்ததுடன், உலும்பினியும், அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் தீர்வை செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்தார். புத்தர் ஞானமடைந்த புத்தகயையில் அவர் ஓர் அழகிய கோயிலை அமைத்தார். புத்தர் வாழ்ந்த கபிலவாஸ்துவிலும், அவர் பொன் உடலை நீத்த குசீநகரிலும், மற்றும் அவர் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட இடங்களிலும் அவர் பல திருப்பணிகள் செய்து, விகாரங்கள் அமைத்து அளவிடற்கரிய தான தருமங்களையும் செய்தார்.

அசோகர் அமைத்த விகாரங்கள் எண்ணற்றவை. அவை பின்னால் அழிந்து போய்விட்டன. ஆனால், அவர் நிறுவிய அழகிய வட்ட வடிவமான தூண்களிலே சில இன்னும் இருக்கின்றன. அவர் 84,000 தூண்களைக் கட்டியதாக ‘அசோகாவதானம்’ என்ற நூல் கூறுகின்றது. நாட்டின் பல பகுதிகளிலே அவர் தூண்களை நிறுவினார் என்பதை அந்நூல் மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம்.

அசோகர் அமைத்த தூண்களிலே மிகவும் புகழ்பெற்றது போபால் இராச்சியத்திலுள்ள சாஞ்சித் தூண். இது குன்றின் மேல் அமைந்தது. சிவப்புக் கற்களால் கட்டப் பெற்றுள்ள இதன் உயரம் 23 மீட்டர்; அடிப்பாகத்தில் இதன் சுற்றளவு 36 மீட்டர். சுற்றிலும் கற்களால் அமைந்த காப்புச்சுவர் உண்டு. அதில் 10 மீட்டர் உயரமுள்ள வாயில்கள் அமைந்துள்ளன. வாயில்களின் மேலே பலவித அலங்காரமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சாஞ்சியிலுள்ள பழைய கம்பத்தின் அருகில் 1952 இல் இந்திய மகாபோதி சங்கத்தார் புதிதாக ஒரு விகாரம் அமைத்துள்ளனர். புத்தர் பெருமானின் முதன்மைச் சீடர்களாகிய சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் ஆகிய இருவருடைய அஸ்திகளும் அங்கே அடக்கம் செய்யப்பெற்றுள்ளன.

அசோகர் இரு பெரு நகரங்களை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவை காஷ்மீரத்தின் தலைநகரான ஸ்ரீநகரும், நேபாளத்திலுள்ள தேவபட்டணமும் ஆகும். தேவபட்டணத்திற்கு அசோகர் சென்றிருக்கையில், அவருடைய மகள் சாருமதியும் அவள் கணவன் தேவபாலனும் அவருடன் இருந்தனர். பின்னர் அவ்விருவரும் அங்கேயே தங்கிவிட்டனர். அங்கே அசோகர் அமைத்த நான்கு பழைய தூண்கள் உள்ளன.

தலைநகரான பாடலிபுரத்தில் அசோகர் கற்களால் புதிய அரண்மனை ஒன்றை அமைத்திருந்தார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்திருந்த சீன யாத்திரிகர் பாஹியான் கற்களையெல்லாம் தேவதைகளே அடுக்கி வைத்து, சுவர்கள் எழுப்பி, சிற்பங்கள் செதுக்கி, அலங்காரங்கள் செய்து முடித்ததாகத் தாம் கேள்விப்பட்டதை எழுதி வைத்திருக்கிறார். மனிதர்களால் செய்ய முடியாத அளவில் மாட்சிமிகுந்த உயர்ந்த கட்டடங்களாகத் தோன்றியதால், அவர் அவ்வாறு நம்பி எழுதினார் போலும். அவருக்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து வந்த ஹுவான்சாங் காலத்தில் அரண்மனையும், நகரமுமே இடிந்து விழுந்து பாழடைந்திருந்ததாகக் குறித்திருக்கிறார். பாட்னா நகரைச் சுற்றிப் புதைபொருள் ஆராய்ச்சி செய்வதற்காகப் பல இடங்கள் தோண்டிப் பார்க்கப்பட்டுள்ளன. இன்னும் பெரும் பொருள் செலவு செய்து திட்டமான முறையில் தோண்டிப் பார்த்தால், பழைய பாடலியைப் பற்றியும், அசோகர் ஆட்சி பற்றியும் விளக்கம் பெறக்கூடிய பல பொருள்கள் அகப்படக் கூடும். அசோகர் அமைத்த கட்டடங்களும், விகாரங்களும் கால வெள்ளத்தில் சிதைந்தவை தவிர, பின்னர்ப் படையெடுத்து வந்த வெள்ளை ஹூணர்களாலும் அழிக்கப்பட்டன.

பல்கலைக் கழகம் அமைந்திருந்த நாலந்தாவிலும் அசோகர் பல பெரிய கட்டடங்கள் கட்டியிருந்தார், அங்கு நடந்து வரும் புதைபொருள் ஆராய்ச்சியினால் நமக்கு மேலும் பல விவரங்கள் தெரிய வரலாம்.

அசோகர் அமைத்த அரண்மனைகள், விகாரங்கள் முதலியவற்றை நாம் காண முடியாவிட்டாலும் அவரால் நடப்பெற்று ஓங்கி உயர்ந்து நிற்கும் கல் தூண்களிலே இன்னும் சில இருக்கின்றன. மிகவும் பாரமுள்ள ஒரே கல்லில், சிங்கம் முதலிய உருவங்கள் அமைந்த வேலைப்பாடுள்ள சிகரத்துடன் தூண்கள் செய்து, அவற்றில் தம் சாசனங்களைச் சிற்றுளியால் வரைந்து வைப்பதில் அசோகர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார். முப்பதுக்கு மேற்பட்ட அத்தகைய கல்தூண் சாசனங்களில் பதின்மூன்று அகப்பட்டிருக்கின்றன. இந்தத் தூண்களைப் பளபளப்பாக இழைத்து, பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் குறித்த இடங்களுக்கு அசோகருடைய பொறியியல் வல்லுநர்கள் எப்படித்தான் கொண்டுபோய்ச் சேர்த்தனரோ என்று வியக்கும்படி அவை உள்ளன. இத்தகைய கல்தூண் ஒன்றின் சிகரத்திலுள்ள மூன்று சிங்கங்களே இன்று சுதந்தர இந்திய அரசாங்கத்தின் சின்னமாக விளங்குகின்றன. அசோகர் செதுக்கி வைத்த தரும சக்கரமும் நம் நாட்டுக் கொடியின் நடுவில் இடம் பெற்றிருக்கின்றது.

பாறைகளிலே அசோகர் பொறித்து வைத்த இருபத்து மூன்று கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பெற்றிருக்கின்றன. மூன்று குகைகளிலே சிறு கல்வெட்டுக்களும் உள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லக்கூடிய பெரிய சாலைகளின் அருகிலும், உயர்ந்த பாறைகளிலும் அசோகர் தம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த விரும்பிய செய்திகளை வரைந்து வைத்ததால், நாட்டின் பல பகுதிகளிலும் பெரும்பாலான மக்கள் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அசோகர் காலத்தில் பாரத நாடு ஆசியப் பேரொளியாக விளங்கிற்று என்பதை அவர் கல்வெட்டுக்களிலிருந்தே கண்டு கொள்ளலாம். போர் முழக்கங்களைத் தருமப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தினார்; ஆயுதச் சாலைகளை அன்பு வார்க்கும் ஆலயங்களாக்கினர்; குத்தியும் வெட்டியும் கொன்று குவித்துக்கொண்டிருந்த மக்களெல்லாம் தம்மைப் போல் மனமாற்றம் அடையும்படி செய்தார்.

அசோகருடைய கட்டளைகள் பெரும்பாலானவை அவர் மக்களுக்குச் செய்யும் அறிவுரைகளாகவே அமைந்துள்ளன. அவற்றில் எவ்வித ஆடம்பரமும் இல்லை. அவை எளிய சொற்களில், யாவரும் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனத்தோடு மனம், ஆன்மாவோடு ஆன்மா பேசுவதுபோல் அமைந்திருக்கின்றன. பெரும்புலவர்கள், கவிஞர்கள் வழங்கும் சொற்றொடர்களை யெல்லாம் நீக்கி, உயர்வுநவிற்சி அணிகள் இல்லாமல், அருள் மிகுந்த அசோகர் அவ்வக் காலத்தில் தமக்குத் தோன்றிய உயர்ந்த கருத்துக்களையே கல்வெட்டுக்களாக அமைத்திருக்கிறார் மாபெரும் கல் தூண்களை நடுதல் அசோகருக்கு முன்னர்ப் பாரசீகத்து வழக்கம் என்றும், அதற்கும் முன்னர் அசீரியாவில் அம்முறை இருந்தது என்றும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். எந்த நாட்டு முறையா யிருந்த போதிலும், அசோகர் கற்களிலே தம் செய்திகளை எழுதி வைத்ததால்தான் அவை நெடுங்காலம் நிலைத்திருக்க முடிந்தது. ' கல் மேல் எழுத்து’ அழியாமலிருக்கும் என்று பலரும் நம்புதல் இயல்பு. ஆனால் எழுத்தைத் தாங்கி நின்ற கற்களே காணாமற் போய்விட்டால் என்ன செய்வது ? அசோகர் நட்டுவைத்த தூண்களில் சில உடைந்து போய்விட்டன; சில மண்ணுக்குள் மறைந்திருக்கின்றன. புத்தர் பிரான் தோன்றிய உலும்பினியில் அவர் நட்டிருந்த தூண் கீழே சாய்ந்து, அதன் மேல் பல நூற்றாண்டுகளாக மண் குவிந்து, அதை மூடிவிட்டது. மண்ணைத் தோண்டிப் பார்க்கையில் அக்கம்பம் அகப்பட்டது. இல்லையெனில் அசோகர் அங்கே சென்றிருந்த விவரம் தெரியாமற் போயிருக்கும். தவிரவும், உலும்பினியில் பகவான் புத்தர் பிறந்த இடமும் தெரிந்திராது.

அசோகருக்குப் பகவான் புத்தரிடம் அளவற்ற பக்தி இருந்ததுடன், பெளத்த சமயத்தைப் பரப்பவும் அவர் அரும் பெரும் முயற்சிகள் செய்து வெற்றியும் கண்டார். அவரது காலம்வரை பெளத்த சமயம் வட இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே பரவியிருந்தது. ஜனக முனிவரைப் போல் பேரர ச ரா கி ய அ வ ரே துறவியாகிப் பிரசாரம் செய்ய முற்பட்டதால், பெளத்தம் நாடெங்கும் பரவவும், காஷ்மீர், நேப்பாளம், சீனா , சிங்களம் முதலிய நாடுகளிலெல்லாம் பரவவும் வழி பிறந்தது. அத்தருமத்தின் பெருமையும் உச்ச நிலையை அடைந்தது.

ஆனால், அசோகர் தம்முடைய பெரும்பாலான கல்வெட்டுக்களின் மூலம் எங்தத் தருமத்தைப் பரப்பியுள்ளார்? அவற்றைப் படித்துப் பார்த்தால் , அவை எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகக் கருதப்பெறும் அடிப்படையான தருமத்தையே அவர் உபதேசம் செய்திருப்பது தெரியவரும். மானிட வாழ்க்கைக்கு வேண்டிய ஒழுக்க விதிகளையே அவர் மிகுதியும் வற்புறுத்தியுள்ளார். அவர் பெளத்தர் என்பதிலும், பெளத்த சமயத்திற்காக அவர் தீவிரமாக உழைத்தார் என்பதிலும் ஐயமேயில்லை. ஆயினும் அவர் மக்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்த அதிகாரிகளுக்கும் சர்வ சமய சமரசமான மார்க்கத்தையே வற்புறுத்தி வந்தார் என்பது தெளிவு. தாய் தந்தையரைப் பேணுதல், சத்தியம், அஹிம்சை, அன்பு முதலியவை யாருக்குத்தான் தேவையில்லை ? அவற்றையே அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டுள்ளார்•

மயச் செருக்கோ, பிற சமயப் பழிப்போ அவரிடம் துளியும் இருந்ததில்லை என்று அவர்தம் எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பாறையும், ஒவ்வொரு தூணும் உறுதி கூறுகின்றன. பெளத்த துறவிகளான சிரமணர்களை அவர் தெய்வமாக எண்ணி வழிபட்டார். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய பெரியோரையும் அவர் வனங்ககி, அவர்களுக்குத் தான தருமங்கள் செய்திருக்கிறார் என்று தெரிகின்றது. அவருக்குப் பின்னர்ப் பதினெட்டு நூற்றாண்டுகள் கழிந்த பின், பாரத நாட்டுப் பேரரசரான அக்பரிடமும் அத்தகைய சமய சமரசத்தைக் காண்கிறோம்.

கல்வெட்டுக்களிலே சுவர்க்கம், நரகம், தேவர்கள், தெய்வங்கள் என்றெல்லாம் அசோகர் கூறிய சொற்களைக் கொண்டு, அவர் பெளத்த தருமத்தில் முழுவதும் ஈடுபட்டவ ரல்லர் என்று கருதிவிடக் கூடாது. அவரது சமயக் கொள்கையில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், அக்காலத்திய மக்களுக்கு உடனே தெளிவாக விளங்குவதற்காக அவர் அச்சொற்களைப் பயன்படுத்தியதாகவே கொள்ளவேண்டும். சுவர்க்கமும் நரகமும் தனித் தனி உலகங்களாக இருக்க வேண்டியதே யில்லை. இந்த உலகிலேயே சீலம் பேணி, அறவழியில் நிற்பவர் சுவர்க்கத்தைக் காணலாம்; அல்லாதவர் நரகத்தைக் காணலாம். மேலும் இந்துக்களும் பிறரும் சுவர்க்கம், மோட்சம், முத்தி என்று கூறுவதைப் பெளத்தர்கள் 'நிருவாணம்' என்பார்கள்.

அசோகரது மனப்பான்மை தெள்ளத்தெளிவாகத் தெரிவிக்கப் பெற்றுள்ளது.எவரும், தம் ச ம ய த் தை யே பெரிதெனப் போற்றி, பிற சமயங்களை இழித்துப் பேச வேண்டா என்று அவர் கேட்டுக்கொண்டார். எவரெவர் எந்தெந்தச் சமயத்தைச் சேர்ந்திருந்தாலும், அதில் தீவிரமாக இடைவிடாமல் மேலோங்கித் திளைக்க வேண்டும் என்பதே அவர் நோக்கம். பிரமகிரி முதலாவது பாறைக் கல்வெட்டில், 'ஜம்புத் தீவில் மனிதர்கள் இப்பொழுது கலந்து உறவாடுகிறர்கள்’ என்று அவர் பொறித்திருக்கிறார். அசோகர் தாம் தருமப் பிரசாரத்தில் தீவிரமாக முயற்சி செய்த பின், மக்கள் தங்கள் சமயங்களில் மிக்க அக்கறை கொண்டுள்ளனர் என்று கருதியதையே இது குறிப்பிடுவதாக இருக்கலாம். அடுத்தாற் போல், ' இஃது என் முயற்சியின் பயன். இது சால்பு நிறைந்த பெரியோர்களுக்கே கை கூடும் என்று கருதுவது சரியில்லை. ஏனெனில், சாதாரண மனிதரும் முயற்சியின் மூலம் சுவர்க்க இலட்சியத்தை அடைய முடியும்' என்று அக் கல்வெட்டிலேயே காணப்படுகின்றது. ஆகவே, அசோகர் விரும்பியது முயற்சி-இடைவிடாத முயற்சி-என்றே தெரிகின்றது. இதிலிருந்து அவரால் வெறுக்கப்பட்டவை எவையென்றும் கண்டு கொள்ளலாம். ஒழுக்கம், சமயம் முதலியவற்றில் அக்கறையில்லாமை, எதையும் பின்னர்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளி வைத்தல், மறதி, சோம்பல், மிக்க தூக்கம் ஆகியவற்றை விலக்கினால் ஒழிய அவர் கருதிய ஆர்வம், அக்கறை, முயற்சி ஆகியவை தோன்ற முடியாது.

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்’

என்றார் திருவள்ளுவர்.

இதுவரை கிடைத்துள்ள அசோகருடைய கல்வெட்டுக்களுக்குப் பல மொழிபெயர்ப்புக்களும் தனி நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் படித்துப் பார்த்தால், அவர் எடுத்துக் கூறியுள்ள சகிப்புத்தன்மை, சமரசத்தோடு பொருந்தியிருத்தல், அமைதி, அறத்தின் வெற்றி (தரும விஜயம்) ஆகியவை எக்காலத்திற்கும் தேவையானவை என்பது தெற்றென விளங்கும். அன்றியும் அவர் காலத்தில் நம் நாட்டில் பலப்பல சமயங்கள், கொள்கைகள், தத்துவஞான நூல்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருந்ததால், அடிப்படையான சமரச மனப்பான்மை ஏற்படுவதற்காக அவர் அரும்பாடுபட்டு வந்தார். சமரசத்தின் மூலம் நெருங்கிய உறவுகள் தோன்றி, மக்கட் சமூகம் ஓர் இனமாக வளர்வதற்கு அவரது வழி உதவியாயிற்று. மேலும், இந்தியா போன்ற ஒரு பரந்த பெருநாட்டில், மக்கள் இனங்களை ஒன்று சேர்த்து, மாநிலங்களிலும், மத்தியிலும் ஓர் ஆட்சி நிலைத்து நிற்பதற்கும் மூலமாக உதவக் கூடிய ஒரு செயல் இன்றியமையாதது. அந்தச் செயலை அசோகர் தமது தருமத்தின் மூலமே அமைத்துக் கொண்டார்.

கல்வெட்டுக்கள் 'மாகதி' என்று சொல்லப் பெறும் மகத நாட்டு மொழியில் உள்ளவை. அம் மொழியைப் பிராகிருதம் என்றும் சொல்லுவர். அவற்றிலுள்ள வாக்கியங்கள் அலங்காரங்கள் இல்லாமல், சாதாரண மக்களின் பேச்சுப் போலவே உள்ளன. இவற்றைக் கொண்டு, அவை அசோகப் பேரரசரின் திருவாயிலிருந்து நேராக வந்த சொற்கள் என்றும், அவற்றை வேறு எவரும் திருத்தவோ, மாற்றவோ துணிந்திருக்க முடியாது என்றும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.