அலெக்சாந்தரும் அசோகரும்/மகத நன்னாடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1. மாநிலம் போற்றும் மகத நன்னாடு

பொன்னாடு என்று எந்நாடும் போற்றும் பெருமை மிக்கது நம் தாய்நாடு. வீரத்திலும் தீரத்திலும் வண்மையிலும் திண்மையிலும் உயர்ந்த நாடு நம் பாரதம். பண்டைக் காலத்திலேயே நம் நாடு பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய நகரங்களைக் கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்று பாடலிபுத்திரம். மகதப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் மாற்றலர் கண்டு மலைக்கும் கோட்டையுடையது. கோட்டையில் வானோங்கி வளர்ந்த ஐந்நூற்றெழுபது கோபுரங்களும், அறுபத்து நான்கு வாயில்களும் உண்டு. நகரின் நடுவில், எழில் மிகுந்த அரண்மனையில், நவரத்தினங்கள் இழைத்த தங்கமணித் தொட்டிலில் கண்வளர்ந்து கொண்டிருந்தான் குழந்தை அசோகன் கைகளிலே ஒலிக்கும் முத்து வளையல்களும், கால்களிலே ஒலிக்கும் சிலம்புகளும் அணிந்து, பொன்னாடை புனைந்த பெண்மணிகள் பலர் சூழ்ந்து நின்று, இன்னிசை யாழ்போல் தாலாட்டுப் பாடித் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தனர். சிறிது தூரத்திலே நின்று அக்காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி சந்திரகுப்தர். அசோகனைப்போல் அவர் குழந்தையா யிருந்தபொழுது, மாடுகளுக்குப் புல்வைக்கும் மரத்தொட்டியே அவருக்குத் தொட்டிலாக இருந்தது. அவருடைய அன்னை அச்சமயம் வனத்திலே ஒரு குடிசையில் வாழ்ந்திருக்க நேர்ந்ததால், அவர் அத்தகைய ஏழ்மையில் வாழ வேண்டியிருந்தது. அவர் தம் அருமைப் பேரனுக்காகத் தங்கத் தொட்டில் மட்டுமன்றி, அவன் செங்கோல் செலுத்துவதற்காக மகதப் பேரரசையும் அமைத்து வைத்திருந்தார்.

தொட்டிலிலே துயின்ற குழந்தையைப் பார்த்து அவர் பெருமிதம் கொண்டார். அப்பொழுது அவர் என்ன எண்ணியிருப்பார் என்பதை நாம் இக்கற்பனை மூலமே கண்டுகொள்ள முடியும்:

‘குழந்தாய்! என் செல்வமே! மோரியர்தம் குலக் கொழுந்தே! அசோக வர்த்தனா! உன் சிறிய தோள்கள் இந்தப் பெரிய ஏகாதிபத்தியத்தை எப்படித் தாங்கப் போகின்றன? தங்குவதற்கு ஓர் அடி நிலம்கூட இல்லாமல் நாட்டிலிருந்து துரத்தப் பட்ட நான், உனக்காக மிக்க பரப்பினை உடைய மகதப் பேரரசை அமைத்திருக்கிறேன். என் செல்வமே! உன் தந்தை பிந்துசாரனும் பல போர்களில் வென்று ‘அமித்திர காதா’ (பகைவர்க்கு எமன்) என்னும் பட்டம் பெற்று விளங்குகிறான். ஆதலால், நீ செய்ய வேண்டிய போர்கள் அதிகமில்லை. நம் ஆட்சி பாரசீகத்தின் தென் எல்லையிலிருந்து விந்திய மலை வரையிலும், அசுவகனியிலிருந்து (ஆப்கனிஸ்தானம்) காமரூபம் (அஸ்ஸாம்) வரையிலும் பரவியுள்ளது. இனி நீ வெல்ல வேண்டிய இரு இராச்சியங்களே உள்ளன. அவை தெற்கேயுள்ள கலிங்கமும், திராவிடமும்.

‘யவன வீரனான அலெக்சாந்தரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நீ அவனைப்போல் வரவேண்டும் என்பதே என் ஆவல்.

‘துயிலும் பொழுதே நீ புன்னகை புரிவதைப் பார்த்தால், என்னையும் நீ வென்று விடுவாய் என்று ஏளனம் செய்வதுபோல் தோன்றுகின்றது. போர்களிலே என்னைப் பார்க்கிலும் அதிக வெற்றிகளை நீ பெற முடியாது. எனக்கு நல்லமைச்சராக இருந்த சாணக்கியர் நீ அரியணை ஏறும் வரை இருப்பாரோ, என்னவோ? ஆனால் அவர் எழுதி வைத்துள்ள ‘அர்த்தசாத்திர’ ஏடு உள்ளது. அதன்படி அரசியல், பொருளாதாரச் செய்திகளை ஐயம் திரிபுகள் அறக் கற்று, அதைத் துணையாகக் கொண்டு ஆட்சிபுரிந்தால், பேரரசு மக்கள் அனைவருடைய அன்பையும் நீ பெறமுடியும். ஆட்சி முறை ஒன்றிலேயே நீ என்னையும், உன் தந்தையையும், முன்னால் இருந்த பாரத நாட்டு மன்னர்களையும் வெல்ல முடியும்.’

சந்திரகுப்தர் மகதராச்சியத்தைப் பெரிய பேரரசாக அமைப்பதற்கு முன்னும் பின்னுமாக அஃது ஆயிரம் ஆண்டுக்காலம் நிலைபெற்று நின்றது. மகதம் என்பது இப்பொழுதுள்ள பீகார் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மகதத்தைப் பற்றியும், அங்கு அரசுபுரிந்த சில அரச பரம்பரைகளைப் பற்றியும் பழந் தமிழ் நூல்களில் சில குறிப்புக்கள் உள்ளன. ‘மறந்தும் மழைமறா மகதநன் னாடு’ என்பது நீர்வளமுள்ள மருத நிலங்கள் நிறைந்த அந்நாட்டின் செழிப்பை எடுத்துக் காட்டும்.

‘சோழவள நாடு சோறுடைத்து’ என்றும், ‘தொண்டை நாடு சான்றோருடைத்து’ என்றும் புகழப்பெற்றிருக்கின்றன. மகத நாடு சோற்றையும் சான்றோர்களையும் ஒருங்கே பெற்று விளங்கியது. சியவனர், ததீசி போன்ற முனிவர்களும், வடமொழித் தொல்காப்பியரான பாணினியும், அவருடைய சூத்திரங்களுக்கு உரை செய்த வரருசியும், யோக சூத்திரங்களின் ஆசிரியரான பதஞ்சலி முனிவரும், வான நூலின் தந்தை என்று புகழ்பெற்ற ஆரியபட்டரும், அசோகரின் ஆசிரியரான பிங்கலரும் மகதத்திலே வாழ்ந்து பெருமை பெற்றவர்கள். மகதத்து அமைச்சர்கள் மதிவாணர்கள் என்று மகாபாரதம் புகழ்ந்துரைக்கின்றது. உலகப் புகழ் பெற்ற தட்சசீலம், நாலந்தா, விக்கிரமசீலம் ஆகிய பல்கலைக் கழகங்கள் பாரத நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன. இவைகளில் ஆசியாவின் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயிற்சி பெற்றனர். தட்சசீலம் மகதப் பேரரசிலிருந்து பிரிந்து நெடுங்காலம் தனித்திருந்ததும் உண்டு. ஆனால் நாலந்தாவும், விக்கிரமசீலமும் மகத எல்லைக்குள்ளேயே இருந்தவை.

மகதத்திலே தோன்றிய கட்டடங்கள், மாளிகைகள், அரண்மனைகள், அணைகள், மதகுகள் முதலியவைகளைப் பார்த்தால், அங்குப் பொறியியல் நிபுணர்கள் நிறைந்திருந்தனர் என்பது புலனாகும். ஒரே பெரும் பாறையைச் செதுக்கிப் பெரிய கம்பமாக அமைக்கும் கைவினையும், சிலைகள் அமைக்கும் சிற்பக் கலையும், மற்றும் பல நுண்கலைகளும் அங்கே சிறப்புற்று வளர்ந்துவந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் புத்தரும், மகாவீரரும் பல்லாண்டுகள் வாழ்ந்து, முறையே பௌத்த தருமத்தையும், சமண சமயத்தையும் பிரசாரம் செய்த புனித நிலம் மகதம். புத்தர் ஞானமடைந்த தலமாகிய புத்தகயை அங்கேதான் உள்ளது. மகதத்தின் பழைய தலைநகரான இராஜ கிரகத்தில் இருந்து ஆட்சி புரிந்துவந்த பிம்பிசாரர் பௌத்த தருமத்தை மேற்கொண்டு, பகவானின் தலைசிறந்த அடியாருள் ஒருவராக விளங்கினார். மகாவீரர் பிம்பிசாரரின் பட்டத்து அரசிக்கு நெருங்கிய உறவினர்; இந்திய நாட்டின் முதற் பொருளாதார நிபுணர் என்று போற்றப் பெறும் சாணக்கியர், தமிழ் நாட்டின் பகுதியாயிருந்த மலையாளத்திலே பிறந்தவர். எனினும், அவர் வாழ்க்கையின் பெரும் பகுதி மகதத்திலேயே கழிக்கப் பெற்றது. இந்தியாவின் முதல் சக்கரவர்த்தியாக விளங்கிய சந்திரகுப்தர் மகத மன்னரே யாவார். உலகிலே எட்டுத் திசைகளிலும் இணையற்ற சக்கரவர்த்தியாயும், மாமுனிவராயும் வாழ்ந்த அருள் அசோகரும் அந்நாட்டு மன்னரே. பாடலிபுத்திரம் இப்பொழுது பாட்னா என்று பெயர் பெற்றுள்ளது. மொத்தத்தில் பாரத நாட்டின் பழம்பெரும் சரித்திரத்தில் முக்கால் பகுதி மகதத்தின் சரித்திரமாகும்.

மகதத்தின் பல்கலைக் கழகங்களான நாலந்தாவும், விக்கிரமசீலமும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கலைகளிலும், சாத்திரங்களிலும் பயிற்சியளித்து வந்ததுடன், பௌத்த தருமத்தின் வளர்ப்புப் பண்ணைகளாகவும் விளங்கி வந்தன. நாலந்தாவைப்பற்றிச் சீன யாத்திரிகர் யுவான சுவாங் விவரமாக எழுதி வைத்திருக்கிறார். தாமரை மலர்களுடன் பல ஏரிகள் சூழ்ந்த இடத்தில், விண்முட்டும் மாடங்களும், கோபுரங்களும் விளங்க, அப்பல்கலைக் கழகம் பதினாயிரம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு பணியாற்றி வந்ததாக அவர் குறித்துள்ளார். அங்கே கண்டிப்பான ஒழுக்க விதிகள் கடைப்பிடிக்கப் பெற்று வந்தன. மாணவர்களுடைய வினாக்களுக்கு ஆசிரியர்கள் பதில் கூறி விளக்குவதற்குக்கூடப் பகற்பொழுது போதவில்லை என்று யாத்திரிகர் வியந்துள்ளார். புத்தர் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய நாலந்தா, பின்னால் பல மன்னர்களுடைய ஆதரவு பெற்று வளர்ந்தோங்கி, 12 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பெருமையுடன் விளங்கிற்று. இத்-சிங் என்ற சீன யாத்திரிகர் அதற்கு 200 கிராமங்கள் வரை மானியமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

கிரேக்க மன்னரால் அனுப்பப்பெற்ற நல்லெண்ணத் தூதுவரான மெகஸ்தனிஸ் கி. மு. 300 இல் மகத நாட்டிற்கு வந்து, நீண்ட நாள் சுற்றிப் பார்த்து, தாம் கண்டவற்றைப் பற்றிய பல குறிப்புக்கள் எழுதியுள்ளார். ஆனால் அவை வேறு சில சரித்திர ஆசிரியர்களுடைய நூல்களிலே மேற்கோள்களாகக் காட்டப் பெற்றிருக்கின்றனவே அன்றி, அவை தனி நூலாக இல்லை. எனினும் அக்குறிப்புக்களைக் கொண்டே மகதப் பேரரசினுடைய பெருமையையும், மக்கள் நிலையையும், தலைநகரான பாடலிபுத்திரத்தின் சிறப்பையும் நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அக்காலத்தில் இந்தியர் வாழ்க்கைக்குத் தேவையான பல வசதிகளையும் ஏராளமாகப் பெற்றிருந்தனர் என்றும், நெடிய உருவமும், நிறைந்த பண்பும் பெற்றுக் கம்பீரத் தோற்றத்துடன் விளங்கினர் என்றும் அவர் எழுதியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள விவரமாவது: ‘இவர்களுடைய ஒழுக்கம் மிக்க உயர்தரமானது; நான் சந்தித்த இந்துக்கள் அனைவரும் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்தவர்களாகக் காணப்பெற்றனர். இந்தியாவில் எழுத்து வடிவமான சட்டங்களில்லை; பண்டை வழக்கத்தை அனுசரித்து நினைவின் துணைகொண்டே இம்மக்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நீதித் தலங்களில் வீணாக வழக்காடும் மனிதன் பொது நன்மைக்கு எதிராகத் தொந்தரவு கொடுப்பவனாகவே கருதப்படுகிறான். வீடுகளையும் உடைமைகளையும் மக்கள் காவலில்லாமலே விட்டுச் செல்கிறார்கள்; ஆனால், தீயணைக்கப் பயன்படும் கருவிகளை மட்டும் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள். அக்கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இல்லாவிட்டால், வீட்டுக்காரருக்குத் தண்டனை உண்டு. நாட்டில் பெருவாரியான பஞ்சம் தோன்றுவதில்லை; மழை தவறாமல் பெய்வதால், பயிர்களின் விளைவுக்குக் குறைவில்லை.

‘இங்கே நெய்யப்பெறும் மஸ்லின்கள் நான் மற்ற நாடுகளிலே பார்த்தவைகளிலெல்லாம் மென்மையானவை. கைவினைஞர்கள் தொழில் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். அரசவையில் மக்கள் அணிந்திருக்கும் உடைகள் தங்க ஜரிகை வேலைப்பாடுள்ளவை. அவைகளில் மதிப்புயர்ந்த மணிகளும் கோக்கப் பெற்றுள்ளன. மருத்துவக்கலை சிறந்து விளங்கியது. பாம்பு விடத்திற்கு நம் கிரேக்க மருத்துவர்களைப் பார்க்கிலும் அதிகப் பயன் தரும் மருந்துகளை இங்குள்ள மருத்துவர்கள் அறிந்திருக்கிறார்கள்.’

பாடலி, பாடலிபுத்திரம், குசுமபுரம் என்று அதற்குப் பல பெயர்கள் உண்டு. ஆனால், ஒரே பொருளைக் கொண்டுதான் அப் பெயர்கள் அமைந்தன என்று தெரிகின்றது. நகரிலும் நகரைச் சுற்றிலும் மலர்கள் நிறைந்த பாடலி மரங்கள் அதிகம். மற்றும் செடிகளிலும் கொடிகளிலும் பூக்கள் புன்னகை புரிந்து கொண்டேயிருக்கும். வண்டுகள் பாடுவதும், மந்த மாருதத்தால் பூங்கொடிகள் ஆடுவதும் கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கும். எனவே, பூக்களின் பெயரையே கொண்ட அந்தப் பூநகர் தன் பெயருக்கு ஏற்ற எழிலனைத்தையும் பெற்றது என்று கூறலாம்.

அத் திருநகர் சோனை ஆறும் கங்கையும் கலக்கும் கூடலுக்கு அருகில் சோணையின் வடகரையில் அமைந்திருந்தது. இரண்டு ஆறுகளும் பின்னால் தம் போக்கில் மாறிவிட்டன. தற்காலத்துப் பாட்னா நகருக்கு 19 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கடல் ஒதுங்கியுள்ளது. பாடலி இந்தியாவிலேயே பெரிய நகரம் என்று மெகஸ்தனிஸ் குறித்துள்ளார். நகரைச் சுற்றிலும் பாதுகாப்புக்காகப் பெரிய மரக்கட்டைகளால் மதில்கள் அமைக்கப் பெற்றிருந்தன. மதில்களுக்கு அப்பால், 180 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் ஆழமுமுள்ள அகழி அமைந்திருந்தது. மாமன்னராகிய அசோகர் காலத்தில் மர மதில்களை ஒட்டி வெளிப்புறத்தில் காரையாலும் கற்களாலும் பெரிய கோட்டை அமைக்கப்பெற்றதுடன், நகரிலும் அவற்றால் மாட மாளிகைகளும் கட்டப் பெற்றன. நகரில் நேரான அகன்ற சாலைகள் இருந்தன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் வணிகர்களும், யாத்திரிகர்களும் அங்குக் குழுமியிருந்ததால், வாணிகம், உச்சநிலையிலிருந்தது; சாலைகளில் எந்த நேரமும் வண்டிகளின் போக்குவரத்தும் அதிகமாயிருந்தது.

நகரில் சந்தைகளும், கடைத்தெருக்களும் நிறைந்திருந்தன, அவைகளில் முத்தும், பவளமும், வயிரமும், மணிகளும், தந்தம், தங்கம், வெள்ளியினாலான அணிகளும், பட்டும், சல்லாவும், பாண்டிய நாட்டுப் பருத்தி ஆடைகளும், வாசனைத் திரவியங்களும், மருந்துகளும் இரும்பிலும் உருக்கிலும் செய்த ஆயுதங்களும், ஏராளமான உணவுப் பொருள்களும், காய்களும், கனிகளும், மற்றும் உள்நாட்டுப் பொருள்களும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களும் நிறைந்திருந்தன. பாடலியிலிருந்து அனுப்பப் பெற்ற பொருள்கள் பல மரக்கலங்களின் மூலம் பாபிலோன், எகிப்து, கிரீஸ் மற்றும் கீழ்த்திசை நாடுகள் பலவற்றிற்கும் சென்றன.

நகரின் நடுவே முற்றிலும் மரத்தினால் கட்டப் பெற்ற அரண்மனை நடுநாயகம்போல் விளங்கியது. அது மரப் பலகைகள், கட்டைகளினாலேயே அமைந்தது எனினும், அது மிக உயரமாயும், மிக அழகான வேலைப்பாடுகளுடனும் விளங்கியதாகப் பார்த்தவர்கள் வருணித்துள்ளார்கள். தூண்களைச் சுற்றி மூடியிருந்த தங்கத் தகடுகளில் தங்கக் கொடிகளும், பூக்களும், வெள்ளிப் பறவைகளும் பதிக்கப்பெற்றிருந்ததாகவும் அவர்கள் குறித்துள்ளார்கள். அரண்மனையைச் சுற்றிப் பூந்தோட்டங்களும், பொய்கைகளும் கண்ணுக்கினிய காட்சிகளாக விளங்கின. அரண்மனைக்கு வாயில்கள் நான்கு; ஒவ்வொன்றிலும் ஈட்டிகள் முதலிய ஆயுதங்களுடன் போர் வீரர்களும், குதிரை வீரர்களும் காவல்காத்து நின்றனர். உள்ளேயும் மிகுந்த பாதுகாப்புக்கள் இருந்தன. கருவூலம், படைக்கலக் கொட்டில் முதலியவைகளுக்குச் சிறந்த பாதுகாப்பு இருந்ததுடன், அரசருக்கு அருகே அவரைக் காப்பதற்காக வில்லேந்திய வீராங்கனைகளும் படையாகத் திரண்டு நின்றனர்.

இக்காலத்தில் பெரிய நகரங்களில் நகராண்மைக் கழகங்கள் அமைந்திருப்பது போல, 2,000 ஆண்டுகட்கு முன்னரே பாடலியில் முப்பது உறுப்பினர்களைக் கொண்ட நகராண்மைக் கழகம் அமைந்திருந்தது. அக்கழகம் ஆறு குழுக்களாகப் பிரிந்து பணியாற்றி வந்தது. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து உறுப்பினர் இருந்தனர். முதல் குழு கைத்தொழில்களைக் கவனித்து வந்தது. இரண்டாம் குழு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் நலன்களைக் கவனித்து வந்தது; மூன்றாம் குழு பிறப்பு, இறப்புக்களைப் பதிவு செய்து வந்தது. நான்காம் குழு வாணிகத்தைக் கவனித்தும், பண்டங்களின் மீது தீர்வை விதித்தும், முத்திரையிட்ட நிறைகற்களையும், அளவைகளையும் சரிபார்த்தும் வாணிகத்தை முறைப்படுத்தி வந்ததுடன், அரசாங்கத்திற்கும் மிகுந்த வருவாய் தேடிக்கொடுத்து வந்தது. ஐந்தாம் குழு தொழில்களின் மூலம் கிடைத்த பொருள்களைக் கவனித்து, பழைய பொருள்கள், புதியனவாகச்செய்யப்பெற்றவை, நகரத்தில் செய்யப்பெற்றவை, உள் நாட்டில் உற்பத்தி செய்யப்பெற்றவை, வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பெற்றவை என்று வணிகர்கள் பிரித்து வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வந்தது. விற்பனைப் பொருள்களின் மீது வரி வாங்கும் பொறுப்பை ஆறாவது குழு ஏற்று நடத்தி வந்தது. விற்பனை விலையில் பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் குறித்துள்ளார். ஆனால், உணவுப் பொருள்கள், காய் கனிகள், விலையுயர்ந்த நவமணிகள், நகைகள் முதலியவற்றிற் கெல்லாம் வெவ்வேறு வகைத் தீர்வைகள் தண்டப் பெற்றன என்று தெரிகின்றது. அரசுக்கு இவ்வருவாய் மிகவும் தேவையானதால், இத்தீர்வை செலுத்தத் தவறியவர்களுக்கும், உண்மை விலைகளை மறைத்தவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப் பெற்றன; அவர்கள் திருடர்களாகவே கருதப் பெற்றனர். திருடர்களின் உறுப்புக்களை அரிதலும், மரண தண்டனை அளித்தலும் அக்காலத்திய தண்டனைகள்.

நகரில் வேடிக்கைகளுக்கும் விளையாட்டுக்களுக்கும் குறைவில்லை. இக்காலத்திய குதிரைப் பந்தயங்களைப் போல அக்காலத்திலும் இருந்தன. சில சமயங்களில் தேர்களில் இரண்டுபக்கம் குதிரைகளைக் கட்டி, நடுவில் உயர்ந்த காளையையும் கட்டி ஓட்டுவார்கள். விலங்கினங்களைச் சண்டை செய்ய விட்டு வேடிக்கை பார்த்தலும் உண்டு. இத்தகைய சண்டைகளில் களிறுகள், காண்டா மிருகங்கள், காளைகள், ஆட்டுக் கிடாக்கள் முதலியவை கோரமாக முட்டியும் மோதியும் சண்டை செய்யப் பழக்கப்படுத்தப் பெற்றிருந்தன. பிற்காலத்தில் அசோகர் தீவிரமான பௌத்த தருமப் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியதும், இவையெல்லாம் அவர் ஆணையினால் நிறுத்தப்பெற்றன.