உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாந்தரும் அசோகரும்/யவனர் படையெடுப்பு

விக்கிமூலம் இலிருந்து

2. யவனர் படையெடுப்பு

வட இந்தியா முழுவதையும் வென்று, மகதப் பேரரசை நிறுவி, வரலாற்றில் முதல் பேரரசர் என்ற பெயருடன் சந்திரகுப்தர் கி. மு. 327 முதல் 302 வரை 24 ஆண்டுகள் ஆண்டு வந்தார். அவருக்குப் பின் அவர் மைந்தர் பிந்துசாரரும் வீரப் போர்கள் புரிந்து 25 ஆண்டுகள் வெற்றியுடன் அரசுபுரிந்தார். அவரை யடுத்து, அவருடைய மைந்தர்களில் ஒருவரான அசோகர் அரியணை ஏறி, 41 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அசோகர் காலத்தில் பாரத நாட்டின் நிலைமையையும், ஆட்சி முறையையும், நாகரிக நிலையையும் நன்கு புரிந்துகொள்வதற்கு அவருக்கு முன்னாலுள்ள வரலாற்றை ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும். சந்திரகுப்தர் ஒரு பேரரசை அமைக்கத்தக்க நிலை எப்படி உருவாகியிருந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

சந்திரகுப்தர் தம் குருவும் நண்பருமான சாணக்கியருடன் வனங்களில் அலைந்து கொண்டிருந்த காலத்தில்தான், இந்தியா மேலைநாட்டவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவிலேயே கல்வி கேள்விகளிலும், நாகரிகத்திலும் அக்காலத்தில் முதன்மையாக விளங்கிய நாடு கிரீஸ் அந்நாட்டை நம்மவர் யவனம் என்றும், அந்நாட்டு மக்களை யவனர் என்றும் அழைத்தல் வழக்கம். யவன நாகரிகமே ஐரோப்பா முழுவதும் பரவி, ஆங்காங்கே கலைகளும், விஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வளர்வதற்கு உறுதுணையாயிருந்தது. இன்றைக்கும் பல நாட்டுக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கல்வி, அரசியல், தத்துவம் முதலிய துறைகளில் பண்டையவன நூல்கள் பயிலப் பெறுகின்றன. யவன நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சில அறிஞர்கள் தோன்றி, சமுதாய வாழ்க்கை பற்றியும் மக்களின் ஒழுக்கம் பற்றியும் போதனைகள் செய்தனர். அவைகளை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டின் தென் பகுதியிலே ஸ்பார்ட்டா அரசும் வடபகுதியில் அதீனிய அரசும் அமைந்திருந்தன.

இரண்டு அரசுகளுக்கும் வேற்றுமையும் பகைமையும் இருந்து வந்தன. ஸ்பார்ட்டா தலை சிறந்த ஒரு வீரனுக்குக் கட்டுப்பட்டு, வீர வாழ்க்கை நடத்தி வந்தது. அங்கே இளைஞர்களுக்குச் சிறு வயதிலிருந்தே, உடற்பயிற்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ற முறையில், கல்வித் திட்டம் அமைக்கப் பெற்றிருந்தது. மக்கள் ஆடம்பரங்களை விரும்பாமல் எளிய வாழ்க்கை நடத்தி வந்தனர். சுக வாழ்வையும், இன்பங்களையும் வெறுத்து, எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு ஏற்று வீரத்துடன் போர் புரிவதில் அவர்கள் இணையற்றவர்கள். அவர்களிலே ஏழை, பணக்காரர் என்ற வேற்றுமை குறைவு; எல்லாரும் கூடியிருந்து உணவு உண்பது அவர்கள் வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே மக்கள், வாய்க்கு வந்தபடி பேசாமல், நாவடக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி பழக்கப்படுத்தப் பெற்றிருந்தனர்.

ஏதன்ஸைத் தலைநகராகக் கொண்ட அதீனிய அரசில் மக்கள் நாகரிகத்திலும், ஆடம்பர வாழ்க்கையிலும் அதிக விருப்பமுள்ளவர்கள். அவர்கள் வாழ்க்கையின் இன்பங்களை நுகர்வதில் ஆர்வமுள்ளவர்கள். நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அவர்கள், அரசனே தேவையில்லை என்று முடிவு செய்து, குடியரசு அமைத்துக்கொண்டிருந்தார்கள். எந்தச் செய்தியையும் கூடிப்பேசியே அவர்கள் முடிவு செய்வார்கள். இதனால் பேச்சில் வல்லவர்களுக்கு அங்கே அரசியலிலும் சமூகத்திலும் முதன்மையான இடம் கிடைத்தது. சில சமயங்களில் வெறும் கிளர்ச்சிக்காரர்களின் பேச்சைக் கேட்டு, அதீனியர்கள் தங்களுக்கு மிகுந்த தொண்டு புரிந்த பெருந்தலைவர்களையும் தளபதிகளையும் இழக்க நேர்ந்தது. எனினும் அதீனியர் அனைவருமே போர் வீரர்களாக விளங்கினார்கள்.

ஸ்பார்ட்டாவுக்கும் ஏதன்ஸுக்கும் அடிக்கடி போர்கள் நடப்பதுண்டு. இவை தவிர, நாட்டிலிருந்த மற்ற நகரங்களும், ஒவ்வொன்றும் தனி அரசாகக் கருதிக் கொண்டிருந்ததால், யவனர் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்ச்சியும், அந்நியர் படையெடுத்து வருகையில் யாவரும் ஒன்றி நின்று எதிர்க்கவேண்டு மென்ற எண்ணமும் வேரூன்றி யிருக்கவில்லை.

அந்த நிலையில் ஆசியாவில் பேரரசாக விளங்கிய பாரசீகமும் யவனநாடும் பெரும் போர்கள் செய்ய நேர்ந்தது. முதலில் தரியஸ் என்ற பாரசீக மன்னர் ஏராளமான நிலப்படைகளையும், கடற்படைகளையும் கொண்டு தாக்கினார். ஏதன்ஸ் நகருக்கு 32கிலோ மீட்டர்வரை அவர் வெற்றியுடன் சென்று திரும்பினார். அவருக்குப்பின் அவர் மகன் ஸெர்ஸஸ் உலகிலேயே பெரும்படை என்று சொல்லத்தக்க படையுடன், யவன நாட்டின்மீது போர் தொடுத்தான். பல சிறு இராச்சியங்கள் அவனுக்கு அடி பணிய ஆயத்தமாயிருந்தன. அந்த நேரத்தில் ஸ்பார்ட்டாவில் ஆண்டுவந்த இரு மன்னர்களில் ஒருவனான லியோனிதாஸ் என்ற வீரன் 10,000 வீரர்களுடன், தன் படையைப் பார்க்கினும் பதின் மடங்கு பெரிய படையை எதிர்த்து நிற்கத் தீர்மானித்தான். மலைகளுக்கும் கடலுக்கும் நடுவிலிருந்த தெர்மோபிலே என்ற கணவாயைக் காத்து, பாரசீகப் படை முன்னேறிவராமல் தடுக்கும் பொறுப்பை அவன் மேற்கொண்டான். ஒடுங்கிய கணவாய் ஆதலால் ஒரே சமயத்தில் எதிரிகள் பெருவாரியாக உள்ளே நுழைய முடியாது என்றும், தானும் தன் படைவீரர்களும் இடைவிடாது போரிட்டு, எதிரிகள் வர வர அவர்களை அழித்து விடலாம் என்றும் அவன் எண்ணியிருந்தான்.

டல் அலைகளைப்போல் பெருகி நின்ற தன் சேனையைச் சொற்பமான ஸ்பார்ட்ட வீரர்கள் எதிர்த்து நின்றதைக் கண்ட ஸெர்ஸஸ் நகைத்துத் தன் ஆயுதங்களைக் கைவிடும்படி லியோனிதாஸுக்குச் சொல்லியனுப்பினான். அந்த ஸ்பார்ட்ட வீரன், “இங்கே வந்து அவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அறைகூவினான். கணவாயில் நுழைந்த பாரசீகப் படையினரை அவனும் அவன் வீரர்களும் கடுமையாகத் தாக்கி வீழ்த்திக்கொண்டிருந்தனர். இறுதிவரை அப்படியே செய்து அவர்கள் வெற்றியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இடையில் யவனத் துரோகி ஒருவன் அவர்கள் இருந்த இடத்திற்கு வருவதற்கு வேறுவகையாக வழியிருந்ததைக் காட்டிக் கொடுத்து விட்டதால் எதிரிப்படைகள் உள்ளே நுழைந்து, நாற்புறமும் வளைந்து கொண்டன. அப்பொழுதும் லியோனிதாஸ் தளரவில்லை. அவனும் யவன வீரர்களும், முன்னேறிப் பாய்ந்து, வீரப்போர் புரிந்து, வீர சுவர்க்கம் அடைந்தனர். தெர்மோபிலே கணவாயில் லியோனிதாஸ் செய்த போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை இன்றைக்கும் பல நாடுகளிலும் குழந்தைகள் படித்துப் பயனடைகின்றனர். அவன் பாரசீகப் படையைச் சிறிது காலம் தடுத்து நிறுத்தியதால், எஞ்சியிருந்த யவனர் படை தக்க இடத்திற்குச் சென்று தன்னைக் காத்துக்கொள்ள முடிந்தது.

பின்னால் பாரசீகப் பெரும்படை, கணவாயைக் கடந்து உள் நாட்டிலே புகுந்து, ஆங்காங்கே வெற்றிகள் பெற்று, ஏதன்ஸை நோக்கிச் சென்றது. அப்பொழுதும் அங்கிருந்த தலைவர்களும் தளபதிகளும் போரில் எவர் தலைமை தாங்குவது என்பது பற்றிப் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதீனியத் தளபதியாயிருந்த தெமிஸ்டாகிளிஸ் என்பான், மிகவும் திறமையோடும் வீரத்தோடும் வாதாடி, பாரசீகப் படையை எதிர்த்து நிற்க ஏற்பாடு செய்தான். முடிவில் அதீனியர்களே வெற்றி பெற்றனர். பின்னர்த் தெமிஸ்டாகிளிஸ், யவனர்களுடைய சிறு கப்பல்களைக் கொண்டு, எதிரிகளின் பெருங் கப்பல்களையும் எதிர்த்து ஓடும்படி ஏற்பாடு செய்தான். பெரும்பாலான பாரசீகக் கப்பல்கள் தகர்க்கப்பட்டன. ஸெர்ஸஸ் மிகுந்த கோபம் கொண்டு குமுறினான். பின்னர் அவன் தளபதி ஒருவனின் தலைமையில் யவனத்தில் ஒரு பெரும் படையை நிறுத்திவிட்டுத் தன் நாடு திரும்பினான். அடுத்த ஆண்டில் எல்லா இராச்சியங்களிலிருந்தும் யவன வீரர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் படையை முறியடித்து நாட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

அந்நியர் வெளியேறிய பின்னர், யவன இராச்சியங்கள் தமக்குள் மறுபடியும் போரையும் பூசலையும் வளர்த்துக் கொண்டிருந்தன. கடைசியில் ஸ்பார்ட்டப் படையினரே ஏதன்ஸ் நகரைக் கைப்பற்றி அதன் கோட்டை கொத்தளங்களை அழித்து, அதற்குரிய கப்பல்களையும் தீக்கிரையாக்கினர். அதீனியர் எவ்வளவோ நாகரிகம் பெற்றிருந்த போதிலும், சமூக நன்மைக்காக ஒன்று சேர்ந்து போராடும் மனப்பான்மையை இழந்து நின்றனர். தேர்தலும் போட்டியும் வெற்றியுமே அவர்களுடைய தலைவர்களின் இலட்சியங்களாக இருந்தன. அந்தக் காலத்தில்தான்-கிறிஸ்துவுக்கு 400 ஆண்டுகட்கு முன்-ஏதன்ஸ் நகரத்தின் ஒப்பற்ற அறிஞரான ஸாக்ரடீஸைச் சமயப் பற்றில்லாத குற்றவாளி என்று கூறி நீதிபதிகள் அவர் விடம் அருந்தி மாள வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

ஏதன்ஸ் வீழ்ச்சியுற்ற பிறகு சிறிது காலம் ஸ்பார்ட்ட மக்களே நாடு முழுவதும் செல்வாக்குப் பெற்று விளங்கினர். பின்பு அவர்களுக்குப் போட்டியாகத் தீப்ஸ் நகர மக்கள் தலையெடுத்து அவர்களை அடக்கி வென்றனர். அப்பொழுது அவர்களுக்குத் தலைமை தாங்கிய தளபதி வெற்றி வீரனான எபிமினாண்டஸ் என்பவன். அவனைப் பாராட்டிப் போற்றுவதற்கு மாறாக, அவனிடம் பொறாமை கொண்ட சிலருடைய சூழ்ச்சியால், தீப்ஸ் மக்கள் அவனை இழிவு செய்தனர். படைத் தலைமையிலிருந்து அவன் நீக்கப் பெற்று, ககரத் துப்புரவுத் தொழிலாளியாக நியமிக்கப்பெற்றான். அதீனியர்களும், ஸ்பார்ட்டர்களும், பொதுவாக எல்லா யவனர்களுமே சகுனமும் சாத்திரமும் பார்ப்பவர்கள். பகைவர் படையெடுத்து வந்த காலத்திலும், அவர்கள் சகுனங்களைப் பற்றியும், நாளையும் கோளையும் பற்றியும் விவாதம் செய்த பின்புதான் எதிர்த்து நிற்பது பற்றி முடிவு செய்வார்கள். அங்தக் காலத்திலே கூட, எபிமினுண்டஸ், ‘தாய்த்திரு நாட்டுக்காகப் போரிடுவதே நல்ல சகுனம் !’ என்று கூறிவந்தான். அத்தகைய துாய வீரனைத் தீப்ஸ் நகரத்தார் நீடித்த நாள் இழிநிலையில் வைத்திருக்க முடியவில்லை. மற்றைத் தலைவர்கள் தளர்ந்து வீழ்ச்சியுற்றபின், அவனே மீண்டும் படைத் தலைவனாக்கப் பெற்றான். யவன காட்டின் தென்பகுதியின்மீது அவன் மூன்று நான்கு முறை படையெடுத்து, ஒவ்வொரு முறையிலும் செருக்குடைய ஸ்பார்ட்ட மக்களைத் தோற்கடித்தான். இறுதியில் அவன் போரில் வெற்றி பெறுகையில், எதிரிகள் எறிந்த ஈட்டி ஒன்றினால் குத்தப்பட்டுக் கீழே சாய்ந்தான். உதிரம் ஒழுகி, தாங்க முடியாத வேதனையில் இருக்கும் போதும், அவன் நண்பர்களிடம் போர் என்ன வாயிற்று என்று வினவினானாம். அவனுடைய படைக்கே வெற்றி என்று அறிவிக்கப் பெற்றதும், "எல்லாம் நன்மையே!" என்று அவன் வியந்து கூறினான். இரண வைத்தியர்கள், அவனது உடலில் தைத்திருந்த ஈட்டியை வெளியே உருவியவுடன் அவன் மரித்து விடுவான் என்று அறிவித்தனர். அவ்வாறு ஈட்டியை எடுக்க எவரும் மனம் துணியாதிருக்கையில், எபிமினுண்டஸ், தானே தன் கரங்களால் அதைப் பறித்தெறிந்து, தாயகத்திற்காக மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிக் கொண்டான்.

அவன் மரணத்துடன் தீப்ஸின் பெருமையும் மறைந்தது. அத்துடன் கிரேக்க நாட்டின் சுதந்தரமும் ஒழிந்தது. நகரங்கள், போட்டியும் பொறாமையும் காரணமாக, ஒன்றோடு ஒன்று பொருது கொண்டிருக்கையில், வடக்கே இருந்த மாசிடோனிய நாட்டு மன்னரான பிலிப் என்பவர் வட நாட்டின்மீது படையெடுத்து வந்து ஒவ்வொரு நகரமாகப் பிடித்துக்கொண்டார். தெற்கே யிருந்த ஸ்பார்ட்ட மக்கள் மட்டும், 'நாங்கள் தலைமை தாங்கி வழிகாட்டி பழக்கப்பட்டவரே அன்றிப் பிறரைப் பின்பற்றிச் செல்வதை அறியோம்!' என்று கூறி, அவருடன் இணங்க மறுத்தனர். மாசிடோனியரும் மற்ற யவனரைப் போல அதே இனத்தைச் சேர்ந்தவரே யாவர். பிலிப்பின் நோக்கம் யவனரை ஒன்றாகத் திரட்டிப் பாரசீகத்தின்மீது படையெடுக்க வேண்டும் என்பது. ஆனால் அதற்குரிய ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கையில் அவர் கொலையுண்டு மடிந்தார்.

அவர் விட்டுச் சென்ற வேலையைச் செய்து முடிக்க அவருடைய வீரத்திருமகன் முன் வந்தான். அவன் தான் உலகப் புகழ்பெற்ற அலெக்சாந்தர். கம்பீரமான தோற்றம், நடுத்தர உயரம், கட்டமைந்தமேனி, சிவப்புநிறம் ஆகியவற்றுடன் அவன் காண்பவரைக் கவரும் அழகோடு விளங்கினான் . அவனுடைய வீரமும், மிடுக்கும், எழுச்சியும் யவனப் படைவீரர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. இளம் வயதிலேயே அவன் பல போர்களில் வெற்றி பெற்று வந்ததால், அவர்கள் அவனைத் தெய்வப் பிறவி என்றுகூட எண்ணத் தொடங்கினர். அலெக்சாந்தரும் தன்னை அவ்வாறே எண்ணியிருந்தாலும், அதில் வியப்பில்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களெல்லாம் சேர்ந்து உலகம் மிகப் பெரியது என்பது அக்காலத்திய மக்களுக்குத் தெரியாது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதியான பாரசீகத்துடன் சேர்ந்த ஐரோப்பாவே உலகம் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். அலெக்சாந்தர் அந்த உலகு அனைத்தையும் வென்று, ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்றே ஆசை கொண்டிருந்தான்.

சிறு வயதிலேயே அலெக்சாந்தர் போர்ப் பயிற்சி பெற்றிருந்தான். யவன மன்னனாக முடி சூடுவதற்கு அவன் தங்தை சீரோனீ என்ற இடத்தில் போராடுகையில், அவனும் கூடச் சென்று உதவி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது.

பொதுவாக மாசிடோனியர் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர், அலெக்சாந்தரும் இள வயதிலேயே குதிரைகளை அடக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரு நாள் ‘பூஸிபாலஸ்’ என்ற முரட்டுக் கருப்புக் குதிரை ஒன்றை அவன் தந்தையும், மற்ற வீரர் சிலரும் பார்த்து, விலை பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அக்குதிரை ஓரிடத்தில் அடங்கி நில்லாமல், துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. எவரும் அதனருகில் செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் அலெக்சாந்தர் தான் அதை அடக்குவதற்கு ஆணையிடுமாறு தந்தையை வேண்டினன். அவரும் இணங்கவே, அவன் துணிந்து அதனிடம் சென்று, நெடுநாள் அதனுடன் பழகியவன்போல், அதை அவிழ்த்து வேறிடத்திற்குக் கொண்டு சென்று, அப்படியே அதன்மீது துள்ளி அமர்ந்துகொண்டு, ஊரை ஒரு முறை சுற்றி வந்து சேர்ந்தான். அதைக் கண்ட மன்னரும் மற்றவர்களும் பெருவியப்படைந்தனர். மரங்களின் வழியாகத் தன் கண்கள் கூசும்படி செய்து கொண்டிருந்த

கதிரொளியால்தான் அக்குதிரை கலங்கிக் குதித்துக் கொண்டிருந்தது என்றும், அதன் கண்களை மறைத்து இடம் பெயர்த்துக் கொண்டு போனதும், அது கூச்சம் தெளிந்தது என்றும் அலெக்சாந்தர் எடுத்துச் சொன்ன பிறகே எல்லோருக்கும் செய்தி விளங்கிற்று. மன்னர் பிலிப் அக்குதிரையை அவனுக்கே அளித்துவிட்டார். அது முதல் பின்னர் அவன் கலந்து கொண்ட போர்களில் எல்லாம் அவன் அக்குதிரையையே பயன்படுத்தி வந்தான்.

அலெக்சாந்தர் குதிரையை அடக்குதல்

அதனிடத்தில் அவனுக்கு அளவற்ற அன்பு இருந்து வந்தது. அவன் இங்தியாவுக்கு வந்திருக்கையில், ஒரு போரின் நடுவில், அது கீழே சாய்ந்து இறந்து போனதால், அதன் பெயரால் 'பூஸி பாலஸ்' என்று ஒரு நகரத்தை அவன் நிறுவினான் என்பதிலிருந்து, அதன் மீது அவன் கொண்டிருந்த பற்று எவ்வளவு என்பது தெளிவாகும்.

யவனர்கள் ஒரே இனத்தினராக, ஒரே நாட்டில் வசித்து, ஒரே மொழியைப் பேசி வந்த போதிலும், ஆதியில் அவர்களிடம், தே சி ய ஒருமைப்பாடு இருக்கவில்லை; எனினும் சில இன்றியமையாத செயல்களுக்காக அவர்கள் கூடுவதும் வழக்கம். அத்தகைய செயல்களில் ஒன்று ஒலிம்பியா என்ற இடத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி. அதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மல்லர்களும், விரர்களும் அங்குத் திரள் திரளாகக் கூடிப் பந்தயங்களில் கலங்து கொள்வர். ஒரு சமயம் அலெக்சாந்தரின் நண்பர்களும் அவனும் அங்கு நடை பெற்ற ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். அதற்கு அவன், அதிலே கலந்துகொள்வோர் அனைவரும் அரசர்களாயும், அரசகுமாரர்களாயும் இருந்தால், தானும் செல்ல முடியும் என்று தெரிவித்தானாம். சிறு வயதிலேயே அவனுக்கு அவ்வளவு பெருமித உணர்ச்சி இருந்தது.

சந்திரகுப்தருக்குச் சாணக்கியர் வாய்த்திருந்தது போல, அலெக்சாந்தருக்கு அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் குருவாக அமைந்திருந்தார். ஆனால், அவன் அவரிடம் பதின்மூன்று வயது முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே பயிற்சி பெற முடிந்தது. அரிஸ்டாட்டில் யவன நாட்டிலேயே நிகரற்ற பேரறிஞர் என்று புகழ் பெற்றிருந்தவர். அவரிடம் தெரிந்து கொண்ட செய்திகளோடு, அலெக்சாந்தர் பிற்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆராய்ச்சி அறிவையும் பெற்றான். "என் தந்தை எனக்கு வாழ்வளித்தார்; ஆனால் எப்படி வாழவேண்டும் என்பதை எனக்குக் கற்பித்தவர் அரிஸ்டாட்டில்" என்று அவனே கூறியுள்ளான்.

யவன மகாகவி ஹோமர் எழுதிய 'இலியாது' என்ற போர்க் காவியத்தைப் படிப்பதில் அலெக்சாந்தருக்கு விருப்பம் அதிகம். இரவு நேரங்களில் அவன் அதைப் படிப்பான்; அவன் உறங்கும் போதும், அஃது அவன் தலையனை யடியிலேயே இருக்கும். பழம் பெரும் யவன வீரர்கள் டிராய் நகரை எதிர்த்துப் போராடிய வரலாறு பற்றி அக்காவியத்தில் படித்துப் படித்து, அந்த வீரர்களில் முதல்வனான அகிலிஸ் என்பவனைப் போல் தானும் விளங்கவேண்டும் என்று அவன் கருதி வந்தான். மற்றும் அவன் செயல் வீரனாகத் திகழ்வதற்கு அடிக்கடி தூண்டி ஊக்கமளித்து வந்தவள் அவனுடைய அன்னையான ஒலிம்பியஸ். அவள்,"மக்கள் உன்னைப் பெருந்தலைவனாகக் காணவே விரும்புகின்றனர்; நீ புத்தகங்கள் படிக்கிறாய் என்பதைக் கேட்பதற்காக அன்று !" என்று அவனுக்கு நினைவுறுத்துவது வழக்கம்.

அலெக்சாந்தர் இருபதாம் வயதில் அரியணை ஏறினான். அப்பொழுது நான்கு பக்கங்களிலும் அவனைப் பகைவர்கள் எதிர்த்து நின்றனர். ஆகவே அவன், முதற்கண் மாசிடோனியாவில் உள் நாட்டுக் கலகக்காரர்களை அடக்கி, வடதிசையில் வாழ்ந்த அநாகரிக மக்களை வென்று, தென் திசையில் தன் ஆட்சியை ஏற்க மறுத்த திப்ஸ் நகரை முற்றிலும் அழித்துத் தன் ஆற்றலை ஓரளவு யவனர்களுக்கு உணர்த்தினான். பல யவன இராச்சியங்களும் அவன் தலைமையை ஏற்று கொண்டு, பாரசீகத்தின் மீது படையெடுத்துச் செல்ல இசைந்து முன் வந்தன.

அந்த நிலையில் அலெக்சாந்தர் ஆசியாவுக்குள் புகுந்து, பழம் பெரும் பாரசீக நாட்டின் மீது படையெடுத்தான். பல இலட்சம் படை வீரர்களைக் கொண்ட பாரசீகத்தின் தரியஸ் மன்னரை எதிர்த்துப் போரிட அவனிடம் முப்பது அல்லது நாற்பதாயிரம் விரர்களே இருந்தார்கள். அவனுடைய படையில் மாசிடோனியக் காலாட்படையே சிறப்பானது. அப்படையிலிருந்தவர்கள் பெரும்பாலும் ஈட்டிகள் போன்ற கருவிகளை எறிந்து போரிடுவதில் வல்லவர்கள். சண்டை, அவர்கள் ஒருவர்பின் ஒருவராகவும், ஒருவர் பக்கம் ஒருவராகவும் நெருங்கி நின்று, நீண்ட சதுரமான, அணியாகச் சென்று எதிரிப் படைகளைத் தாக்கிக் சிதறச் செய்வது வழக்கம். இதற்காக அவர்கள் தனிப் பயிற்சி பெற்றிருந்தனர்.

அலெக்சாந்தர் பாரசீகப் படைகளை, கிரேனிகஸ் நதிக்கரையிலும், பின்னர் இஸ்ஸஸ் பின்ற இடத்திலும் இருமுறை முறியடித்தான். மன்னர் தரியஸ் மட்டும் உயிர் தப்பி ஒளிந்து கொண்டார். அவருடைய பரிவாரத்தார்களும், குடும்பத்தினரும் சிறைப்பட்டனர். அவர்களை அலெக்சாந்தர் அன்புடன் முறைப்படி காப்பாற்றி வந்தான். பாரசீகம் தளர்ந்து வீழ்ந்து விட்டதால், மேற்கொண்டு அதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடபகுதியிலுள்ள எகிப்தின்மீது படையெடுத்தான். எகிப்தும் அப்பொழுது பாரசீகத்திற்கு அடிமைப்பட்டிருந்தது. அங்கு வெற்றி பெற்று, நைல் நதியின் முகத் துவாரத்தில் 'அலெக்சாந்திரியா' என்று தன் பெயராலேயே ஒரு பெரு நகரையும் அமைத்துவிட்டு, ஓராண்டுக்குப்பின் அவன் மீண்டும் ஆசியாவுக்குத் திரும்பி, தரியஸைத் தேடலானான். அப்பொழுது தரியஸ், யூப்ரடிஸ் நதிக்கு மேல்புறமிருந்த நாடு முழுவதையும் விட்டுக் கொடுப்பதாகவும், மேற்கொண்டு போரை நிறுத்தவேண்டும் என்றும் அலெக்சாந்தருக்குச் செய்தி அனுப்பினார். அச்செய்தியைப் பற்றிச் சிந்திக்கக்கூட அவனுக்கு மனமில்லை. ஏனெனில், தரியஸ் தனக்குச் சமமான ஓர் அரசன் என்ற முறையில் அவருடன் சமாதானம் செய்து கொள்ளவே அவன் விரும்பவில்லை. ஆகவே அவன், தரியஸ் தன்னை ஆசியாவின் அதிபதியாக ஏற்றுக்கொண்டு, பிறகு அவருக்கு வேண்டியதைத் தன்னிடம் இரந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பதிலனுப்பிவிட்டு, பத்து இலட்சம் வீரர்களைக் கொண்ட பாரசீகப் படையை மீண்டும் முறியடித்து, தரியஸின் அரண்மனையையும் பிடித்துக் கொண்டான். தரியஸ், தப்பி ஓடுகையில், தம் ஆட்களில் ஒருவனாலேயே கொலை செய்யப்பட்டார்.

அலெக்சாந்தர் மிகுந்த தாராள சிந்தையுள்ளவன்; நிதானமாக யோசிக்கும் தன்மை பெற்றவன். ஆயினும் செருக்கும், தான் மனித நிலைக்கு மேம்பட்டவன் என்ற இறுமாப்பும் சில சமயங்களில் அவன் சிந்தையைக் கலக்கிவிடும். பணிந்தவர்களுக்கு அவன் அருள் பொழிவான். எதிர்த்து நின்றவர்களுக்கு அவன் எந்தக் கொடிய தண்டனையும் கொடுத்துவிடுவான். தன் உயிர்க்கு உயிராகப் பழகிய சில நண்பர்களைக்கூட அவன் வதைத்து விட்டுப் பின்னால் வருந்தியிருக்கிறான். முன்னர் யவனத்தில் திப்ஸ் நகரைப் பிடித்ததும், அதை அவன் சுட்டெரித்துவிட்டான். பண்டைப் பெரு நகரங்களான டைர், காஸா போன்றவைகளையும் நெருப்புக்கு இரையாக்கினான். கோடிக்கணக்கான பொருள் மதிப்புள்ள பாரசீக மன்னரின் அரண்மனையும் எரிக்கப்பட்டது. அவன் வெஞ்சினம் கொண்டு விட்டால், பிறகு அதை அடக்கிக் கொள்ளவே முடியாது. எண்ணிறந்த வெற்றிகளும், ஏராளமாகச் சேர்ந்த செல்வங்களும் அவனை இறுமாந்திருக்கச் செய்திருக்க வேண்டும்; அவற்றுடன் அளவுக்கு அதிகமான குடிப் பழக்கமும் சேர்ந்து கொண்டது.

அலெக்சாந்தர் மாசிடோனியாவிலிருந்து புறப்படும்பொழுது அவனுடைய படை, யவன வீரர்கள் அடங்கிய தேசியப் படையாக இருந்தது. ஆனால், பல நாடுகளில் வெற்றி பெற்று, ஆங்காங்கே புதிய புதிய இனத்தார்களைப் படையில் சேர்த்துக் கொண்டதால், பின்னால் அது பல நாட்டார் சேர்ந்ததாக விளங்கிற்று. ஆயினும் அதற்கும் தன் மாசிடோனியப் படையின் பயிற்சி அமைய வேண்டும் என்பதில் அலெக்சாந்தர் பிடிவாதமாயிருந்தான். அந்தப் படையில், நீண்ட சதுரமாக நின்று போராடுவதற்கு மாசிடோனியர்கள் தனிப்பிரிவாக அமைந்திருந்தனர். பாரசீக வீரர்களைக் கொண்டு குதிரைப் படை மிகவும் விரிவாகியிருந்தது. வில் வீரர் பலர் கடற்படைக்கு அனுப்பப் பெற்றனர். பாரசீகத்தில் கொள்ளையிடப் பெற்ற பெருஞ் செல்வங்களால் படை வீரர்கள் பேராசை கொண்டு, ஒழுக்கம் குறைந்து காணப்பட்டதால், வண்டி வண்டியாக வந்து கொண்டிருந்த அப்பொருள்கள் அனைத்தையும் தீயில் எரித்துவிட வேண்டும் என்று அலெக்சாந்தர் கட்டளையிட்டான். முதலில் தனக்குரிய பொருள்களை எரிக்கும்படி கூறி, அவன் மற்றவர்களுக்கு வழிகாட்டினான். அடுத்தாற்போல் அவன் தன் படையைக் கிழக்கே திருப்பி, வடமேற்கில் காவக் கௌஷான் கணவாய்களின் மூலம் இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் புகுவதற்கு ஏற்பாடு செய்தான். அவனுக்கு முன்னதாக ஹெபாஸ்டியன், பெர்டிக்கஸ் என்ற இரு தலைவர்களுடன் போர்த் தளவாடங்களும், ஊர்திகளும், பெரும் படைகளும் கைபர்க் கணவாய் வழியாகச் சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு அனுப்பப் பெற்றன.

இந்தியாவின் வடமேற்கில் பஞ்சாபிலிருந்த சில நகரங்களை அலெக்சாந்தர் கைப்பற்றி அக்காலத்தில் அசுவகனி என்று அழைக்கப் பெற்ற ஆப்கனிஸ்தான மன்னனான அசுவஜித்தின் படையை வெற்றி கொண்டான். அப்பொழுது தட்சசீலத்து மன்னரும் அவர் மகன் அம்பியும் அவனிடம் சரணடைந்து, தங்கள் படைகளையும் பொருள்களையும் அவன் பயன்படுத்திக் கொள்ளும்படி உதவி நின்றனர். அவர்கள் அருகிலிருந்த போரஸ் என்ற புருடோத்தம மன்னரிடம் பகைமை கொண்டனர். அவருக்குப் பர்வதேசுவரர் என்றும் பெயருண்டு. வல்லமை மிக்க அந்த மன்னரை அலெக்சாந்தரின் உதவி கொண்டு வீழ்த்த வேண்டும் என்பது அம்பியின் நோக்கம். அதற்கு இசைந்து, அலெக்சாந்தர் தன் படையுடன் தட்சசீலத்தில் போதிய அளவு ஓய்வெடுத்துக் கொண்டு, ஜீலம் நதியின் கீழைக்கரையில் ஆயத்தமாக நின்ற போரஸின் படையுடன் போரிட ஏற்பாடு செய்தான்.

ஆற்றின் அகலம் அதிகமாக இல்லாவிடினும், வெள்ளத்தின் வேகம் அதிகமாயிருந்தது. அதைக் கடப்பதற்குரிய பாலம் அமைப்பதற்கு ஓடங்கள் ஆயத்தமாக இருந்த போதிலும், அலெக்சாந்தரின் குதிரை வீரர்களும், காலாட் படையினரும் அக்கரையில் ஏறுவதற்கு வழியில்லாமல் இருந்தது. மாரிக்கால மழை பொழிந்து கொண்டேயிருந்தது. கரை நெடுகிலும் போரஸ் தம் யானைப் படையை நிறுத்தியிருந்தார். 30 மீட்டருக்கு ஒரு யானை வீதம் நின்று கொண்டிருந்த களிறுகளை எதிர்த்துக் குதிரைகள் மேலேற முடியாது. எனவே அலெக்சாந்தர், மேல் கரையிலேயே சில நாள் தங்கி, தன் படையைப் பல பிரிவுகளாகப் பிரித்துக் கரையில் பல இடங்களுக்குச் சென்று சுற்றி வரும்படி கட்டளையிட்டான். அவைகள் எங்த இடங்களில் ஆற்றைக் கடக்கப் போகின்றன என்பதை எதிரிகள் கண்டுகொள்ள முடியாமல் திகைப்படையவே இந்தத் தந்திரம் கையாளப்பட்டது. இதற்கு ஏற்றபடி போரஸும் தம் யானைகளை அங்குமிங்கும் அலைத்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்னால் ஆங்காங்கே ஒற்றர்களை நிறுத்திவிட்டு யானைகளை அவர் வழக்கம்போல் மற்றைப் படைகளுடன் நிறுத்திக்கொண்டார்.

ஒரு நாள் இரவில் அலெக்சாந்தர், தேர்ந்தெடுத்த குதிரைப் படைகளுடன், மேல் கரையிலேயே இருபத்தொன்பது கிலோ மீட்டர்கள் கடந்து சென்று அங்கிருந்து ஆற்றைக் கடந்து, சேற்றிலும் மண்ணிலும் உழன்று, மறுநாள் காலையில் அங்கு வந்து நின்ற போரஸின் படையைச் சந்தித்தான். அவனுடைய காலாட் படையும் விரைவிலே அங்கு வங்து சேர்ந்தது. செலியூகஸ், பெர்டிகஸ் என்ற தளபதிகளின் தலைமையில் 6,000 வீரர்கள், தங்கள் வழக்கம்போல் நீண்ட சதுர அணி வகுத்து, முன்னேறிச் சென்றனர். போரில் அலெக்சாந்தரின் அருமைக் குதிரையான பூஸிபாலஸ், தளர்ச்சியடைந்து கீழே சாய்ந்து, மாண்டு போயிற்று. அதற்கு வயதாகி விட்டது. மேலும் அஃது அன்று சேற்றைக் கடந்து வந்ததில் மிகவும் களைப்படைந்திருந்தது. பதினேழு ஆண்டுகளாகத் தனக்கு அரும்பெரும் தொண்டு புரிந்து வந்த கருப்புக்குதிரை ஆயுதங்கள் எதனாலும் தாக்கப்படாமலே இறந்து விழுந்துவிட்டதைக் கண்டு அலெக்சாந்தர் வருந்திய போதிலும், போரின் நடுவே, வேறு ஒரு குதிரையின் மேல் ஏறி, வழக்கம்போல் வாளை உருவிக்கொண்டு முன்னணிக்குச் சென்று சமர் புரிந்தான்.

போரஸின் படையிலிருந்த 300 தேர்களும் 200 யானைகளும், 4,000 குதிரைகளும், 30,000 காலாட் படையும் யவனப் படையை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டன. முன்னணியில் காலாட் படையும், அடுத்து யானைப் படையும், இரண்டு பக்கங்களிலும் தேர்களும் அவைகளுக்குப் பின் குதிரைப் படைகளும், இவை அனைத்திற்கும் பின்னால் காலாட் படை முழுவதும் அணிவகுத்து நின்று போர் செய்தல் அக்காலத்து இங்தியப் போர் முறை. அதன்படியே போரஸின் படையும் அணிவகுத்துச் சென்ற காட்சி கோபுரங்கள், கொடிகளுடன், ஒரு நகரமே பெயர்ந்து செல்வதுபோல் தோன்றியது.

அன்றைய போரைப்போல் யவனர்கள் அதுவரை பார்த்த தில்லை. அலெக்சாந்தர் எதிர்பார்த்த படி அவனுடைய குதிரைப் படைகளும் மறு கரையில் கிரேடரஸ் தலைமையில் அவன் நிறுத்தி வைத்திருந்த காலாட்படையும் முறையாகப் போர்க்களம் வந்து சேர்ந்தன. ஆனால், போரஸ் அன்று அந்த இடத்தில் போர் நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்பொழுதுமே அவர் ஆயத்தமாயிருந்த நிலையில், அன்று யவனர் படையை எதிர்த்துக் கடும் போர் புரிந்தார். யானைகள் அன்று எதிரிகளின் அணிக்குள் புகுந்து மிகுந்த நாசத்தை விளைவித்தன. அவைகளை யவனர் எவ்வாறு அடக்க முடிந்தது என்ற விவரம் தெரியவில்லை. ஒரு வேளை மாவுத்தர்கள்மீது அம்பு தொடுத்து முன்னதாக வதைத்திருக்கலாம். மாண்டு விழுந்த யானைகள் போக, எஞ்சியவைகளை யவனர்கள் பிடித்துக் கொண்டனர்.

யவனரின் அம்பு மழையையும், ஈட்டிகளையும் தாங்காமல் திரும்பி ஓடிய சில யானைகள் போரஸின் படைகளுக்கே சேதம் விளைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. யவன வரலாறுகளில் இந்தப் போரைப் பற்றிய பல விவரங்கள் இருப்பினும், களத்திலே நடந்த நிகழ்ச்சிகள் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

அலெக்சாந்தர் தன் குதிரைப் படையுடன் இந்தியக் குதிரைப் படையின் வலப் பக்கத்தில் புகுந்து தாக்கினான். அதே சமயத்தில் பின்புறத்திலிருந்தும் ஒரு யவனக் குதிரைப் படை தாக்கிக் கொண்டிருந்தது. பல மணி நேரம் மிகக் கடுமையான போர் நடந்தது. அலெக்சாந்தர், தன் குதிரை இறந்துபோன போதிலும், தன்னிடம் குவிந்திருந்த ஏராளமான படைகளைக் கொண்டு, பலவிதமான புதிய போர் முறைகளைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இறுதியில் இந்தியப் படைகள் சலிப்படைந்து களைத்துப் போய்விட்டன. 3,000 இந்தியக் குதிரை வீரர்களும், 12,000 காலாட் படையினரும் களத்தில் மடிந்ததுடன், 9,000 காலாட் படையினரும் எதிரிகளிடம் சிறைப்பட்டனர். போரஸ், கடைசிவரை முன்னணியில் நின்று போராடியதில், அவரது இடத் தோளில் காயம் பட்டிருந்தது; உடலில் வேறு எட்டுக் காயங்களும் இருந்தன. மேற்கொண்டு வெற்றிக்கு வழியில்லை என்று தெரிந்தபின், அவர் தமது யானை மீது அமர்ந்துகொண்டு, களத்திலிருந்து திரும்பி விட்டார்.

அவர் திரும்பிச் செல்வதை அறிந்த அலெக்சாந்தர், அந்த வீரரின் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்று கருதி, அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு அம்பி மன்னனை அனுப்பினான். அந்நியனைச் சரணடைந்து, நாட்டைக் காட்டிக் கொடுத்த அம்பியின் அழைப்பை அவர் பொருட்படுத்தவில்லை. பின்னர், அலெக்சாந்தரின் படை அதிகாரிகளில் ஒருவன், தம் மன்னனின் செய்தியைப் போய்த் தெரிவித்த பின்னரே, அவர் திரும்பி வந்தார்.

அப்பொழுதுதான் கிழக்கும் மேற்கும் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு மீட்டருக்குமேல் உயர்ந்திருந்த இந்திய வீரர் போரஸும் நடுத்தர உயரமுள்ள யவன வீரன் அலெக்சாந்தரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வீரன் பெருமையை வீரனே அறிவான். நீர் வேட்கையாயிருந்த போரஸுக்கு முதலில் நீர் அளிக்கப் பெற்றது. அவரது வீரத் திருவுருவையும், தோல்வியுற்றுத் திரும்பிய காலையிலும் துளங்காத உறுதியைக் கண்டு அலெக்சாந்தர், "எங்த வகையில் நான் உம்மை நடத்தவேண்டும் என விரும்புகிறீர் ?" என்று வினவினான்.

அந்தச் சொற்களை அலட்சியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த போரஸ், "ஓர் அரசரைப் போல..." என்று கூறினார்.

'சரி, உங்களுக்கு வேறு விருப்பம் ஏதாவது உண்டா?'


‘எல்லாம் அதிலேயே அடங்கியிருக்கிறது!’

இந்த உரையாடல் அன்று முதல் இன்றுவரை உலகம் எங்கும் பரவியுள்ளது. இதில் யவன வீரனின் பெருமையும் பாரத வீரரின் பெருமையும் மிகமிக உயர்ந்த நிலையை எய்திவிட்டன. அலெக்சாந்தர் போரஸின் இராச்சியத்தை அவரே ஆண்டு வரும்படி அளித்தான். ஜீலம் நதிக் கரையில் தன் வெற்றியின் நினைவுக்காக ‘வெற்றி’ என்ற பெயருடன் ஒரு நகரும், தன் குதிரை பூஸிபாலஸின் நினைவுச் சின்னமாக அதன் பெயரால் ஒரு நகரும் அமைக்கும்படி தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.

பின்னர் சீனாப், ராவி ஆகிய ஆறுகளையும் கடந்து சென்றது யவனர் படை. மலை நகரங்களான முப்பத்தெட்டு நகரங்கள் அதன் வசமாயின. மேற்கொண்டு பியாஸ் நதியைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த ஆற்றின் கரையிலிருந்தபடியே யவனப் படையினர் தம் தாயகத்திற்குத் திரும்ப விரும்பினர். அங்கிருந்து கிழக்கேயும் தெற்கேயும் இருந்த இராச்சியங்கள் எவை? நாடுகளின் அமைப்புக்கள் எப்படி? என்ற விவரம் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அலெக்சாந்தருக்கும், அம்பி முதலிய அரசர்களுக்குமே தெரியவில்லை. அந்த நிலையில் யவன வீரர்கள், தாங்கள் மேலும் செல்ல வேண்டிய இடம் ஒன்றுதான். அது தங்கள் தாய் நாடு என்பதை மன்னன் அலெக்சாந்தருக்குத் தக்க பிரதிநிதிகள் மூலம் தெரிவித்துவிட்டனர். அவனுக்கு அடங்காத சினமுண்டாயிற்று. அவன் குமுறினான்; குதித்தான்; மேலும் வெற்றி வேண்டா; இதுவரை அடைந்த வெற்றிகளை ஒன்று சேர்த்து நிலைநிறுத்திக் கொள்வோம்!' என்று வேண்டினான். அப்பொழுதும் அவன் படை வீரர்கள் தாங்கள் வந்த திசையைப் பார்த்தே திரும்பி நின்றனர். எட்டு ஆண்டுகளாக அவனுடன் கீழ்த்திசை நோக்கி வந்து போரிட்ட அவர்களுக்குப் போரில் ஊக்கமும் உற்சாகமும் இல்லாமற் போனதையும் அவன் உணர்ந்துகொண்டான்.

அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு மூன்று ஆண்டுக்காலம் நீடித்திருந்தது. இதில் இந்திய மண்ணில் அவன் தங்கியிருங்த காலம் பத்தொன்பது மாதங்களேயாம். அப்பொழுது அவன் இங்கே பல அதிசயங்களைக் கண்டான். அம்பியைப் போன்ற அடிவருடிகள் இரண்டொருவரைத் தவிர, பல்லாயிரம் பாரத வீரர்கள் முன் வைத்த காலைப் பின் வாங்காமல் உறுதியுடன் போர் செய்ததை அவன் கண்டான். போரில் இந்தியர் அறமுறை வழுவாது நின்றதிலும் அவன் வியப்படைந்தான். முன்னர் அவன் வெறும் காட்டுமிராண்டிகள் வாழும் நாடு என்று எண்ணியிருந்தது மாறி, உயர்ந்த நாகரிகமும் செல்வமும் பெற்ற நாடு இஃது என்பதை அறிந்து கொண்டான். யவனர்களைப் போலவே, கல்வியிலும் கலைகளிலும் இந்தியர்கள் ஆர்வமுள்ளவர்கள் என்பதையும், மருத்துவத்திலும், இரண சிகிச்சையிலும் மேம்பட்டவர்கள் என்பதையும் தெரிந்துகொண்டான். எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக வாழ்வில் இந்தியத் துறவிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதையும் கண்டு வியந்தான். போரஸைப் போரில் சந்தித்த பின், இந்நாட்டின் எந்தப் பகுதியையும் நெடு நாள் அடக்கி வைத்திருக்க முடியாது என்பதையும் தெரிந்திருப்பான். அவன் ஊருக்குத் திரும்பு முன்பே, அவன் பிடித்த நாடுகள் ஒவ்வொன்றாக எதிர்த்துக் கிளம்பிவிட்டன.

பஞ்சாபிலிருந்த சமயத்திலேயே, அலெக்சாந்தர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் யமுனையும் கங்கையும் பாயும் வளமான பிரதேசங்களைப்பற்றியும், மகத இராச்சியத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தான். அப்பொழுது மகதத்தில் ஆண்டு வந்த நந்த வமிசத்தைச் சேர்ந்த சுகற்பன் என்ற மன்னனிடம் 2,00,000 காலாட் படையினரும், 4,000 யானை வீரரும், 20,000 குதிரை வீரரும், 2,000 தேர்களும் இருந்தனர் என்றும், ஆனால் அந்த மன்னனிடம் மக்களுக்கு அன்பு இல்லை என்றும் அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திரகுப்தர் சாணக்கியருடன் வடதிசை சென்று அலெக்சாந்தரைக் கண்டு பேசியதாகவும் சில வரலாறுகள் கூறும். தாய் நாடு திரும்ப வேண்டும் என்று முன்னரே துடித்துக் கொண்டிருந்த யவனப் போர் வீரர்கள், நந்த மன்னனிடம் அமைந்திருந்த சேனைகளைப் பற்றி அறிந்திருந்ததால், மேலும் கலவரமடைந்திருப்பார்கள். எனவே, கி. மு. 325 இறுதியில் அலெக்சாந்தர் திரும்பிச் செல்லவே தீர்மானித்தான்.

பாரசீகத்தின் வழியாகச் செல்லும் பொழுது தன் ஆதிக்கத்திலிருந்த ஆசிய மக்களையும் ஐரோப்பியரையும் இணைத்து வைப்பதற்குரிய பல திட்டங்களைப் பற்றி அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். யவன வீரர்கள் பலர் பாரசீகப் பெண்களை மணந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்தான். பின்னர், பாபிலோன் நகருக்குச் சென்ற சமயம், கி மு. 323, ஜூன் மாதத்தில் அவன் நோயுற்று, திடீரென்று அங்கேயே உயிர் நீத்தான். அப்பொழுது அவனுடைய வயது முப்பத்து மூன்று கூட முற்றுப் பெறவில்லை. தன்னுடைய தனியாட்சிக்குப் பாபிலோன் நகரையே புதுப்பித்துத் தலைநகராக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். ஆனால், அது நிறைவேறவில்லை.

அலெக்சாந்தர் இறந்த சமயம் அவனுடன் இருந்த எகிப்திய மன்னன் தாலமியும், தளபதிகளான செலியூகஸ், பெர்டிகஸ், நீயார்கஸ், பியூ செஸ்டஸ் முதலியோரும் அவன் வென்ற நாடுகளின் ஆட்சிப் பொறுப்பைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். பின்னர் அந்தப் பேரரசே சிதறுண்டு போயிற்று. தளபதிகளே ஒருவரோடு ஒருவர் போராடினர். அவர்கள் தங்கள் இராச்சியங்களைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர், யவன நாட்டையே உரோமானியர்கள் பிடித்துக் கொண்டனர் என்பதையும் வரலாற்றில் காண்கிறோம்.