அலை ஓசை/எரிமலை/"பதிவிரதையானால்...?"
பதின்மூன்றாம் அத்தியாயம் "பதிவிரதையானால்...?"
வாசல் வரையில் சூரியாவைக் கொண்டு போய் விட்டு விட்டுச் சீதா திரும்பி உள்ளே வந்தாள். உட்கார்ந்திருந்த ராகவன் ஆக்ரோஷத்தோடு எழுந்து நிற்பதைக் கண்டாள். "அவனிடம் என்னடி இரகசியம் பேசினாய்?" என்று ராகவன் கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான். இன்னது சொல்கிறோம் என்பதை நன்கு உணராமலேயே "நான் என்ன பேசினால் உங்களுக்கு என்ன?" என்றாள் சீதா. "என்ன சொன்னாய்?... எனக்கு என்னவா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான். சீதா பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு, "இவ்வளவுதானா? இன்னொரு கன்னம் பாக்கி இருக்கிறது!" என்றாள். "ஓகோ அப்படியா? காந்தி மகாத்மாவின் சிஷ்யை ஆகிவிட்டாயாக்கும்! இந்தா! வாங்கிக்கொள்!?" என்று இன்னொரு கன்னத்திலும் அறைந்தான். சீதா அவனை வெறிக்கப் பார்த்துவிட்டுச் சமையலறையை நோக்கிப் போனாள். "எங்கே அவசரமாய்ப் போகிறாய்? இங்கே வா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ!" என்று ராகவன் கத்தினான். சமையல் உள்ளேயிருந்த டம்ளரில் ஓவல்டின் எடுத்துக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். "வெறும் ஓவல்டினா? அல்லது விஷத்தைக் கலந்து கொண்டு வந்தாயா?" என்று ராகவன் கேட்டான். "ஆமாம்!" என்றாள் சீதா. "அப்படியானால் நீயே சாப்பிடு...! வேண்டாம்; உனக்கும் இந்த உலகத்தில் வேலை கொஞ்சம் பாக்கியிருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தை விட்டுப் போய்விடாதே!" என்று சொல்லிக்கொண்டே ராகவன் டம்ளரைக் கையிலெடுத்து அதிலிருந்த ஓவல்டின் பானத்தை ஜன்னல் வழியாக வீசிக் கொட்டினான்.
"இப்பேர்ப்பட்ட கொலை பாதகியை வீட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் புறப்பட்டுப் போய்விடுகிறேன்" என்றாள் சீதா. "எங்கே போவதாக உத்தேசம்?" என்றான் ராகவன். "போகிறவள் எங்கே போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?" என்றாள் சீதா. "உனக்கு நான் தாலி கட்டிய புருஷனா யிருக்கிறபடியால் தான் கேட்டேன். முன்னே நான் போகச் சொன்னபோதெல்லாம் 'போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாய். இப்போது நாளைக்கே போகிறேன் என்கிறாயே? எங்கே போவதாக உத்தேசம்? யாருடன் போவதாக உத்தேசம்? சூரியாவுடனா?" "சூரியா அழைத்துக்கொண்டு போனால் அவனுடன் போகிறேன்; இல்லாவிட்டால் தனியாகப் போகிறேன்" என்றாள் சீதா. "சூரியா உன்னை எங்கே அழைத்துப் போகப் போகிறான்! அவன்தான் நித்திய கண்டம் பூரணாயுசாகப் போலீஸுக்குப் பயந்து ஒளிந்து திரிகிறானே! நீ தனியாகத் தான் போகும்படி இருக்கும், எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?" "எங்கேயாவது தொலைந்து போகிறேன்; நீங்கள்தான் வாய் ஓயாமல் தொலைந்து போ என்கிறீர்களே?" "இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், திவ்யமாய்த் தொலைந்து போ! போவதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போ!" "தொலைந்து போகப் போகிறவளிடம் கேள்வி என்ன கேட்பது? பதில் என்ன சொல்வது?" "பதில் சொல்லத்தான் வேண்டும் உன்னையும் சூரியாவையும் பற்றி எனக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது." "என்ன சந்தேகம்?" "என்ன சந்தேகமா? உங்களுடைய நடத்தையைப் பற்றிய சந்தேகந்தான்." "ரொம்ப சந்தோஷம்." "சந்தோஷமா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் ஒரே கன்னத்தில் இன்னும் இரண்டு பலமான அறை கொடுத்தான்.
சீதா அவ்விடமிருந்து நகரவும் இல்லை; கண்ணீர் விடவும் இல்லை; முகத்தைச் சுருக்கக்கூட இல்லை. "ரொம்ப சந்தோஷம் என்னை ஒரே அடியாக அடித்துக் கொன்று விடுங்கள்!" என்றாள். "எதற்காக உன்னைக் கொல்ல வேண்டும் என்கிறாய்?" என்றான் ராகவன். "கொன்று விட்டால் நாளைக்கு நான் ஓடிப் போக வேண்டிய அவசியமிராது" என்றாள் சீதா. "உன் மனதில் ஏதோ களங்கம் இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சு அடித்துக் கொள்கிறது ஆகையால் தான் 'ஓடிப் போகிறேன்' என்று சொல்கிறாய்." "என் மனதில் களங்கமும் இல்லை; நெஞ்சில் குற்றமும் இல்லை." "பின் எதற்காக 'ஓடிப் போகிறேன்' என்கிறாய்? கட்டிய புருஷனை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்?" "உங்களுடைய மனது வேற்றுமைப்பட்டுவிட்டது. இனிமேல் நமக்குள் ஒட்டாது மனது ஒட்டாதவர்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?" "என் மனது வேற்றுமைப்பட்டுவிட்டது என்றால், அதற்குக் காரணம் உன்னுடைய நடத்தை தான். நான் இல்லாத சமயம் பார்த்து சூரியா எதற்காக உன்னைப் பார்க்க வருகிறான்? இதோ பார்! நீ உண்மையில் பதிவிரதையாக இருந்தால்...?" "பதிவிரதையாக இருந்தால்..? கடவுளே! இது என்ன விசித்திர உலகம்?" என்றாள் சீதா.
"மாயா உலகத்தைப் பற்றிய வேதாந்தப் பேச்செல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீ பதிவிரதையாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிறதைச் செய்ய வேண்டும் செய்வாயா?" என்றான் ராகவன். சீதா மௌனமாக இருந்தாள். "நான் சொல்வதைச் செய்வாயா, மாட்டாயா? சொல்லு பதில்!" என்று ராகவன் அதட்டினான். "இன்ன காரியம் என்று தெரியப்படுத் தினால், என்னால் முடியும் முடியாது என்று சொல்லுகிறேன்!" "காரியத்தை முதலில் சொல்ல முடியாது நான் எது சொன்னாலும் நீ செய்யத் தயாராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த வீட்டை விட்டு நடந்து விட வேண்டும்." "நான்தான் போகத் தயார் என்று சொல்லிவிட்டேனே? இந்த நிமிஷமே வேண்டுமானாலும் கிளம்பி விடுகிறேன்." "ஆனால் நான் சொன்னதை மட்டும் செய்ய மாட்டாயாக்கும்?" "இன்ன காரியம் என்று சொல்லாமல் எப்படிச் செய்வதாக ஒப்புக்கொள்ள முடியும்?" "ஏன் முடியாது? புருஷன் சொல்வது எதுவானாலும் செய்ய வேண்டியது மனைவியின் கடமையல்லவா?" "அன்யோன்ய தம்பதிகளாயிருந்தால் சரிதான் ஆனால் உங்கள் மனம் பேதலித்துவிட்டது. என் பேரில் உங்களுக்குச் சந்தேகம்; உங்கள் பேரில் எனக்குச் சந்தேகம். அப்படியிருக்கும் போது காரியம் இன்னதென்று தெரியாமல் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?"
"என் பேரில் உனக்குச் சந்தேகமா? அழகாய்த்தானிருக்கிறது. அப்படியே இருக்கட்டும்; நீ செய்ய வேண்டியதைச் சொல்கிறது. இப்போதே - இந்த நிமிஷமே போலீஸ் ஸ்டேஷனை நீ டெலிபோனில் கூப்பிட்டு, சூரியா இங்கு வந்து விட்டுப் போனதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்." "ஒரு நாளும் மாட்டேன்." "ஏன் மாட்டாய்? சூரியா பேரில் உனக்கு என்ன அத்தனை கரிசனம்?" "சூரியா என்னுடைய மாமாவின் பிள்ளை. நம் இருவருக்கும் கலியாணம் பண்ணி வைத்ததே அவன்தான். இப்போது சூரியா தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறான். என்னிடமும் உங்களிடமும் நம்பிக்கை வைத்து, நாம் காட்டிக் கொடுக்க மாட்டோ ம் என்று உறுதியாக நம்பி, அவன் என்னைப் பார்க்க வந்தான். அவனைப் போலீஸுக்குக் காட்டிக் கொடுப்பது துரோகம்; மகா பாவம்." "உன்னுடைய அம்மாஞ்சி சூரியாவினால் எனக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. புரட்சி வேலைகளில் அவன் ஈடுபட்டவன். அப்படியிருந்தும் சர்க்கார் உத்தியோகஸ்தனாகிய என் வீட்டுக்கு அவன் வந்தது பெரும் பிசகு. அதனால் எனக்கு உத்தியோகத்தில் பிரமோஷன் தடைப்பட்டு விட்டது. எனக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாரும் எனக்கு மேலே போய் விட்டார்கள். இன்றைக்குத் தகவலாவது கொடுக்காவிட்டால், என்னுடைய உத்தியோகம் போய்விடும்." "போனால் போகட்டும், உத்தியோகத்துக்காகச் சிநேகிதத் துரோகமான இந்தக் காரியம் செய்ய வேண்டாம். நான் வீடு வீடாகப் பிச்சை எடுத்தாவது ஏதோ கொண்டு வருகிறேன்."
"சீ! நாயே! உன்னுடைய பிச்சைக் காசை எதிர்பார்த்து நான் ஜீவிக்க வேண்டுமாக்கும்! அதெல்லாம் முடியாது. உன்னுடைய மூடத்தனத்துக்காக இரண்டாயிரம் ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை விட்டுவிடச் சொல்கிறாயா? ஒரு நாளும் மாட்டேன். இந்தச் சங்கடம் குறுக்கிடாவிடில் சீக்கிரத்தில் இன்னும் பெரிய உத்தியோகம் எனக்குக் கிடைக்கும். மாதம் மூவாயிரம் நாலாயிரம் சம்பளம் வரும். அதையெல்லாம் விட்டு விடச் சொல்கிறாயா? உன்னுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்." "அப்படியே இருக்கட்டும் ஆனால் நான் போலீஸுக்கு ஒரு நாளும் தகவல் சொல்லமாட்டேன்; அதைக் காட்டிலும் உயிரையே விட்டு விடுவேன்." "எனக்குத் தான் தெரியுமே? உன்னுடைய யோக்கியதை வெளியாகட்டும் என்று உன்னை 'டெலிபோன்' பண்ணச் சொன்னேன் வெளியாகிவிட்டது. இங்கே நிற்காதே! போ! தொலை!" என்று சீதாவின் கழுத்தைப் பிடித்துப் படுக்கை அறைப் பக்கமாக அவளை ராகவன் தள்ளினான்! சீதா படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். கண்களில் ஒரு சொட்டு ஜலம் கூட வரவில்லை. கன்னத்தில் கணவன் அடித்த இடத்தில் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. இன்று நடந்ததெல்லாம் உண்மையா அல்லது தூங்கும்போது கனவு கண்டோ மா என்று வியந்தாள்.
ராகவன் இருந்த அறையில் டெலிபோன் கருவியை 'டயல்' செய்யும் சத்தம் கேட்டது. உடனே சீதாவின் காதுகள் கூர்மையாயின; அவளது உள்ளம் ஒருமுகப்பட்டது. "ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா?" என்று ராகவனுடைய குரல் காதில் கேட்டதும் சீதா பளிச்சென்று எழுந்து ஓடி வந்தாள். டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த ராகவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "யாருக்கு டெலிபோன் செய்கிறீர்கள்?" என்று கேட்டாள். கோபத்தினால் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து கொடூரமாய் விழித்த ராகவன், "உனக்கு என்ன அதைப்பற்றி?" என்றான். "எனக்கு ஏன் சம்பந்தம் இல்லை? நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணப் போகிறீர்கள் சூரியாவைப் பற்றி. அதற்கு நான் ஒருநாளும் விடமாட்டேன். என்னைக் கொன்றுவிட்டு டெலிபோன் செய்யுங்கள்" என்றாள் சீதா. "நாளைக்கு நான் ஆபீஸிலிருந்து டெலிபோன் பண்ணினால் என்ன செய்வாய்?" என்றான் ராகவன். "அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என் காதில் விழாதிருந்தால் சரி " என்றாள் சீதா. "சூரியாவிடம் உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? உனக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை, என்று சொன்னாயே!" "அப்படி நான் சொல்லவில்லை இந்த உலகத்திலேயே சூரியா ஒருவன் தான் என் பேரில் அபிமானம் உள்ளவன். எனக்காக எது வேணுமானாலும் செய்யத் தயாராயிருப்பவன். அவனை நீங்கள் காட்டிக் கொடுப்பதை நான் எப்படிப் பார்த்துக் கொண் டிருக்க முடியும்?" என்று சீதா கேட்டாள். "அடி பாதகி! சூரியாவின் மோகம் உன்னை எவ்வளவு தூரம் பைத்தியமாக்கி யிருக்கிறது என்று இப்போதல்லவா தெரிகிறது?" "ரொம்ப சந்தோஷம்." "என்னடி சந்தோஷம்? என்ன சந்தோஷம்?" என்று சொல்லிக்கொண்டு கையை ஓங்கினான் ராகவன். "இவ்வளவு படுபாதகமான விஷயத்தைச் சொல்லியும் உங்கள் நாக்கு அறுந்து விழாதது பற்றிச் சந்தோஷம்."
"என் நாக்கு அறுந்து விழவேண்டுமா? சாபம் வேறு கொடுக்கிறாயா?" என்று சொல்லிக்கொண்டே மிதமிஞ்சிய கோபாக்கிரந்தனாகியிருந்த ராகவன், டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த கையினாலேயே ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த அடி சீதாவின் காதின் மேல் விழுந்தது. அவ்வளவுதான்; சீதாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது; கண்களில் நீர் ததும்பிற்று. அடித்த காதைக் கையினால் பொத்திக் கொண்டாள். "அம்மா! அம்மா! அலை ஓசை கேட்கிறதே! அம்மா! என்னை அழைத்துக் கொண்டு போ அம்மா!" என்று விம்மலும் அழுகையுமாகக் கதறினாள். முகத்திலும் கண்களிலும் வெறி தாண்டவமாடியது! சீதாவுக்கு 'ஹிஸ்டீரியா' வந்துவிட்டது என்று ராகவன் உணர்ந்தான். உடனே அவளை மெதுவாகப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தான். தானும் பக்கத்தில் உட்கார்ந்தான், "வேண்டாம் சீதா! வேண்டாம்? நான் உன்னைச் சோதனையல்லவா செய்தேன்? உண்மையென்று நினைத்துக்கொண்டாயா?" என்று சாந்தமான குரலில் பேசிக் கொண்டே முதுகிலே இலேசாகத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டாள். விம்மலும் அழுகையும் நின்றன சீதா நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.
வீட்டுக்கு வெளியிலே சென்ற சூரியா, காம்பவுண்டு கேட்டின் கதவைத் திறந்து மூடிவிட்டு, மறுபடியும் தோட்டத் துக்குள் நுழைந்து வீட்டின் ஒரு ஓரமாகச் செடிகள் மரங்களின் மறைவில் சத்தமின்றி நடந்து வந்தான். ராகவனும் சீதாவும் இருந்த அறையின் ஜன்னலுக்கு அருகில் மறைவாக நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான். பேசிய விஷயங்கள் எல்லாம் நன்றாகக் காதில் விழவில்லை. ஆனால் கண்கள் எல்லாவற்றையும் நன்கு பார்த்தன. ராகவன் டெலிபோன் கட்டையால் சீதாவை அடித்ததையும் அவள், "அம்மா! அம்மா!" என்று அலறியதையும் பார்த்த பிறகு சூரியாவால் பொறுக்க முடியவில்லை. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் அது தவறு என்றும் பல முக்கியமான காரியங்கள் பாக்கி இருப்பதால் இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். அடுத்த காட்சியையும் பார்த்துவிட்டுச் சூரியா அங்கிருந்து நடையைக் கட்டினான்.
நள்ளிரவுக்குப் பிற்பட்ட பின்னிரவில் பழைய டில்லி நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூரியாவின் உள்ளம் அன்று வரை இல்லாத மாதிரிக் கொந்தளித்தது. "தேசம் எப்படி போனால் என்ன? சுதந்திரம் எக்கேடு கெட்டால் என்ன? தேசத்தையும் சுதந்திரத்தையும் கவனிக்க எத்தனையோ பேர், ஆனால் சீதா அனாதை, திக்கற்றவள். அவளைச் சந்தோஷமாக வைப்பதுதான் என்னுடைய முதல் கடமை. அந்தக் கடமையை எப்படி நிறைவேற்றுவது? நாளைக்குத் தாரிணியைக் கேட்டுக்கொண்டு தீர்மானிக்க வேண்டும். அதுவரையில், பாவம் அந்த ராட்சதனிடம் அகப்பட்டுக் கொண்ட என் அத்தங்காள் உயிரோடு இருக்க வேண்டுமே!" இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் சூரியா நடந்தான். போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்து படுத்துக்கொண்ட பிறகும் தூக்கம் வந்தபாடில்லை அன்று அவனுக்குச் சிவராத்திரியாயிற்று.