அழகர் கோயில்/001
முன்னுரை
கோயில் பற்றிய ஆய்வுகள் நாட்டு வரலாற்றாய்வாக மட்டுமன்றிச் சமூக, பண்பாட்டாய்வுகளாகவும் விளங்கும் திறமுடையன. தமிழ்நாட்டில், கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகளும், கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைச் சிறப்புகளுமே பெரிதும் ஆராயப்படுகின்றன. கே.கே. பிள்ளையின் ‘சுசீந்திரம் கோயில்’, கே.வி. இராமனின் ‘காஞ்சி வரதராஜஸ்வாமி கோயில்’ ஆகிய நூல்களும், சி. கிருஷ்ணமூர்த்தியின் ‘திருவொற்றியூர்க் கோயில்’ எனும் அச்சிடப்படாத ஆய்வு நூலும் குறிப்பிடத் தகுந்தவையாகும். தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் திரு வெள்ளறை. திருவையாறு ஆகிய ஊர்க்கோயில்களைப் பற்றி நூல்கள் வெளியிட்டுள்ளனர்.
இவையன்றி ஒரு கோயிலுக்கும் அதனை வழிபடும் அடியவர்க்கும் உள்ள உறவு, கோயிலைப்பற்றிச் சமூகத்தில் வழங்கும் கதைகள், பாடல்கள், வழக்கு மரபுச் செய்திகள், அக்கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள், திருவிழாக்களில் அவை வெளிப்பயடும் விதம் ஆகியவை பற்றிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் பெருகி வளரவில்லை. பினாய் குமார் சர்க்கார் என்பவர் கிழக்கிந்தியப் பகுதிகளில் கொண்டாடப்பெறும் ‘கஜல்’, ‘கம்பீரா’ எனும் இரண்டு திருவிழாக்களை மட்டும் ஆராய்ந்து ‘இந்துப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்’ எனும் ஆங்கில நூலை 1917-இல் எழுதினார். இவ்வகையான ஆய்வு நெறி தமிழ்நாட்டில் பிள்ளைப் பருவம் தாண்டாத நிலையிலேயே உள்ளது.
நோக்கம்
‘அழகர்கோயில்’ என்பது இந்த ஆய்வின் தலைப்பாகும். இக்கோயில் மதுரைக்கு வடகிழக்கே பன்னிரண்டுகல் தொலைவிலுள்ளது. கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டும் ஆகா. அவை சமூக நிறுவனங்களுமாகும். எனவே சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் கோயில் உறவு கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு அரசர்களும் உயர்குடிகளும் கொண்ட உறவினைப் போலவே, ஏழ்மையும் எளிமையும் நிறைந்த அடியவர்கள் கொண்ட உறவும் ஆய்வுக்குரிய கருப்பொருளாக முடியும். அவ்வகையில் அழகர்கோயிலோடு அடியவர்கள் – குறிப்பாக நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உறவினை விளக்க முற்படும் முன் முயற்சியாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சியில் கோயிலின் பரம்பரைப் பணியாளர்க்கும் பங்குண்டு என்பதால் அவர்களும் உளப்படுத்தப் பட்டுள்ளனர்.
அழகர்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் பழமை சான்ற ஒன்றாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளோடு முகவை மாவட்டத்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப் புற அடியவர்கள் வருகின்றனர். பொதுவாகச் சமூகத்தோடும், குறிப்பாகச் சிறு தெய்வ நெறியில் ஈடுபாடுடைய சாதியாரோடும் இப்பெருந்தெய்வக் கோயில் கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மையினையும் விளக்க முற்படுவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுப் பரப்பு
இக்கோயிலை ஒட்டிய நிலப்பரப்பில் வாழும் வலையர், கள்ளர் ஆகிய சாதியாரோடும், கோயிலுக்கு வரும் அடியவர்களில் பெருந்தொகையினரான அரிசனங்கள், இடையர் ஆகிய சாதியாரோடும். கோயிற் பணியாளரோடும் இக்கோயில் கொண்டுள்ள உறவு தமிழ்நாட்டு வைணவ சமயப் பின்னணியில் ஆராயப்பட்டுள்ளது. சமூக ஆதரவினைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டு வைணவம் சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையும் இக்கோயிலை முன்னிறுத்தி விளக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மூலங்கள்
சமூக நிறுவனமாகிய கோயில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியாரோடு கொண்ட உறவினையறியக் கல்வெட்டுக்கள் போதிய அளவு துணை செய்யவில்லை. இக்கோயிலைப் பற்றிய இலக்கியங்களும். கோயிலில் காணப்படும் நடைமுறைகளும், திருவிழாச் சடங்குகளும், திருவிழாக்களில் வெளிப்படும் கதைகள், பாடல்கள், நம்பிக்கைகள் முதலியனவும், ஆய்வாளர் கள ஆய்வில் கண்டுபிடித்த இரண்டு செப்பேடுகளும், செப்பேட்டு ஓலை நகல் ஒன்றும் ஆய்வு நாட்டுப்புற மக்களை வைணவ அடியாராக்கி ஆண்டாரிடம் சமய முத்திரைபெறச் செய்வர். பெருமளவு சிதைந்துவிட்ட இவ்வமைப்பு கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
‘கோயிலும் சமூகத் தொடர்பும்’ என்ற ஐந்தாவது இயலில் அழகர்கோயிலோடு மேலநாட்டுக்கள்ளர், இடையர், பள்ளர்-பறையர், அழகர்கோயிலை ஒட்டிய சிற்றூர்களில் வாழும் வலையர் ஆகிய சாதியார் கொண்டுள்ள உறவு விளக்கி மதிப்பிடப்பட்டுள்ளது. மேலநாட்டுக்கள்ளரும் வலையரும் வைணவ சமயத்தில் ஈடுபாடு உடையவராக அன்றிப் பிற சமூகக் காரணங்களால் கோயிலோடு உறவு கொண்டனர். இடையரும், பள்ளர்-பறையரும் வைணவத்தில் நாட்டமுடையவர்களாய்க் கோயிலோடு உறவு கொண்டுள்ளனர். பள்ளர்-பறையர் ஆகிய உழுதொழிலாளர் இந்திர வழிபாட்டிலிருந்து பலராம வழிபாட்டின் வழியாகத் திருமால் நெறிக்குள் அழைத்து வரப்பட்டனர் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது.
‘திருவிழாக்கள்’ என்ற ஆறாவது இயலில் சித்திரைத் திருவிழா தவிர்ந்த பிற திருவிழாக்கள் விளக்கப்படுகின்றன. அவற்றுள் சமூகத்தொடர்புடைய சில திருவிழாக்கள் விரிவாக விளக்கப்பட்டு மதிப்பிடப்பெறுகின்றன.
இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய மூன்று இயல்களில் விளக்கப்படுகிறது. ‘சித்திரைத் திருவிழாவும் பழமரபுக்கதையும்’ என்னும் ஏழாவது இயலில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டு மதிப்பிடப்பெறுகின்றன. இப்பழமரபுக் கதை பற்றிய டென்னிஸ் அட்சனின் கருத்துக்கள் மதிப்பிடப்பெறுகின்றன.
‘வர்ணிப்புப் பாடல்கள்’ எனும் எட்டாவது இயலில் அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவில் பாடப்பெறும் வர்ணிப்புப் பாடல்கள் ஆராயப்படுகின்றன. நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் இவ்வகைப் பாடல்களின் தோற்றமும், மதுரை வட்டாரத்தில் அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவினால் இவை வளர்க்கப்பட்ட செய்தியும் விளக்கப்படுகின்றன.
‘நாட்டுப்புறக் கூறுகள்’ எனும் ஒன்பதாவது, இயலில் இக்கோயில் சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புற அடியவர்கள் வேட மிட்டு வழிபடும் முறைகள், காணிக்கை செலுத்துதல் போன்றவை வினாப்பட்டி வழியாகப் பெற்ற செய்திகளைக் கொண்டு விளக்கப்படுகின்றன.
‘கோயிற் பணியாளர்கள்’ எனும் பத்தாவது இயலில் கோயிற் பரம்பரைப் பணியாளர் பற்றிய ஆவணச் செய்திகளும், நடைமுறைகளும் விளக்கப்படுகின்றன.
‘பதினெட்டாம்படிக் கருப்பசாமி’ என்னும் பதினோராவது இயலில் இக்கோயிலில் அடைக்கப்பட்ட இராசகோபுர வாசலிலுள்ள கருப்பசாமி எனும் தெய்வம் பற்றிய செய்திகள் ஆராயப்படுகின்றன. இக்கோயில் கோபுரக் கதவு அடைக்கப்பட்ட செய்தி, கருப்பசாமியின் தோற்றம் முதலிய செய்திகள் ஆராயப்படுகின்றன.
‘முடிவுரை’ என்னும் இறுதி இயவில் ஆய்வு முடிவுகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அதனையடுத்துத் துணை நூற் பட்டியல் தரப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு:
‘அழகர்கோயிலில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இருந்தது’ எனும் நம்பிக்கை பின்னிணைப்பில் உள்ள ‘ஆறுபடை வீடுகளும் பழமுதிர் சோலையும்’ எனும் கட்டுரையில் ஆராயப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது.
பின்னிணைப்பில் உள்ள மற்றொரு கட்டுரையான ‘தமிழ்நாட்டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு’ உழுதொழில் செய்வோர் பலராம வழிபாட்டின் மூலம் திருமால் நெறிக்குள் அழைத்துவரப்பட்டனர் என ஆய்வுக் கட்டுரையில் கூறப்படும் கருத்துக்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
ஆய்வாளர் கள ஆய்வில் ஒலிப் பதிவு செய்த அச்சிடப்படாத ஐந்து வர்ணிப்புப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
சமயத்தாரின் ஆட்சி எல்லைகளை விளக்கும் இரண்டு வரைபடங்களும், அழகர்கோயில் அமைப்பினைக் காட்டும் வரைபடமொன்றும் தரப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு, திருவிழா நிகழ்ச்சிகள் இவற்றுள் சிலவற்றைக் காட்டும் புகைப்படங்களும் தரப்பட்டுள்ளன.கள ஆய்வில் உதவிய அன்பர்கள்
- ஆண்டார் (காலஞ்சென்ற) சந்தானகிருஷ்ணையங்கார், மதுரை.
- திரு. இராகவையங்கார், அழகர்கோயில்.
- திரு. சீனிவாசையங்கார், அழகர்கோயில்.
- தோழப்பர் அழகரையங்கார், மதுரை.
- வெள்ளியக்குன்றம் ஜமீன்தார் இம்முடி கனகறாம செண்பகராஜ பாண்டியன்.
- டாக்டர் மு இராமசாமி.
- திரு. இராதாமணி, காரைமடை.
- டாக்டர் ப. க. இராசாராம்.
- டாக்டர் திரு. பா. அ. ம. மணிமாறன்.
- புலவர் திரு. தமிழேந்தியார், திருமுட்டம்.
- டாக்டர் திரு. கு. அழகேசன்.
- டாக்டர் சு. வேங்கடராமன்.
- திரு. செல்வின்குமார்
- திரு. சௌந்தரராஜன்.
- திரு. சாந்தநாதன்.
- திரு. சீனிவாசன்.
- திரு. ரவிகுமார்.
- திரு. சங்கர்.
- அழகர்கோயில் பக்தர் - வர்ணிப்பாளர் மகாசபையினர்.
- ஆரப்பாளையம் மாரியப்பன், வர்ணிப்பாளர்.
- பிச்சைக்கோனார், வர்ணிப்பாளர்.
பொருளடக்கம்
பக்கம்
1 |
7 |
16 |
28 |
59 |
68 |
69 |
91 |
100 |
111 |
118 |
139 |
166 |
190 |
213 |
227 |
249 |
Ⅰபிற்சேர்க்கை
258 |
264 |
273 |
II
285 |
287 |
288 |
299 |
304 |
314 |
322 |
333 |
III
337 |
340 |
343 |
361 |
372 |
IV
383 |
392 |
400 |
402 |
415 |
சுருக்கக் குறியீடுகளின் விளக்கம்
1. | அகம். | — அகநானூறு | ||
2. | ஆண். | — ஆண்டாள் | ||
3. | உ. வே. சா. பதிப்பு | — உ. வே. சாமிநாதைய்யர் பதிப்பு | ||
4. | கழகப் பதிப்பு | — திருநெல்வேலித் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகப் பதிப்பு | ||
5. | சிலம்பு. | — சிலப்பதிகாரம் | ||
6. | சீனி. வே. | — மயிலை. சீனி. வேங்கடசாமி | ||
7. | திருமங். | — திருமங்கையாழ்வார் | ||
8. | தொ. ஆ. | — தொகுப்பாசிரியர் | ||
9. | தொழில் சுதந்திர அட்டவணை | — திருமாலிருஞ்சோலை ஸன்னதி கைங்கர்ய பரானின் தொழில் சுதந்திர அட்டவணை | ||
10. | நம். | — நம்மாழ்வார் | ||
11. | ப. | — பக்கம் | ||
12. | ப. ஆ. | — பதிப்பாசிரியர் | ||
13. | பக். | — பக்கங்கள் | ||
14. | பூத. | — பூதத்தாழ்வார் | ||
15. | பெரி. | — பெரியாழ்வார் | ||
16. | மு. நூல். | — முற்காட்டிய நூல் | ||
17. | மேலது. | — மேற்காட்டிய நூல் | ||
18. | A R E. | — Annual Report on Epigraphy | ||
19. | Chap. | — Chapter | ||
20. | Ed. | — Edition | ||
21. | Ibid. | — Ibidem | ||
22. | Op. Cit. | — opera cited | ||
23. | P. | — page | ||
24. | PP. | — pages | ||
25. | S I I. | — South Indian Inscriptions | ||
26. | Trans. | — Translation | ||
27. | Vol. | — Volume |
இந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976-79 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாகும்.
பெரும்பாலும் கள ஆய்வின் அடிப்படையில் எழுந்த இந்த நூல் உருவானபோது துணை நின்றவர் பலராவர். முதற்கண் துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய வாய்ப்பளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தார் என் நன்றிக்குரியர்.
எனக்கு ஆய்வு வழிகாட்டியாக அமைந்த, பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்துச் சண்முகனார் அவர்களின் விரிந்த மனமும் நிறைந்த பரிவுணர்ச்சியும் என்னால் மறக்கவியலாதவை.
இந்த ஆய்வு நூலின் கருத்துச் செம்மைக்குத் துணை நின்ற டாக்டர் கோ. விசயவேணுகோபாலன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் டாக்டர் வேங்கடராமன், தட்டச்சுப் படிகளையும், இப்போது அச்சுப்படிகளையும் திருத்தி உதவிய அன்பினர் டாக்டர் மு. மணிவேல், டாக்டர் ம. திருமலை, சில புகைப்படங்களைத் தந்து உதவிய புகைப்படக் கலைஞர் இராமச்சந்திரன், தொல்லியல் துறை அதிகாரி மா. சந்திரமூர்த்தி, வரைபடங்களை உருவாக்கித் தந்த இளங்கோவன், டாக்டர் மு. இராமசாமி ஆகியோரை நான் நன்றியுடன் நினைக்கின்றேன்.
கள ஆய்வில் உதவிய நண்பர்கள், ஆய்வு வாய்ப்பும் பட்டமும் அளித்ததுடன் நூலாகவும் வெளியிட்டு உதவிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தார் ஆகியோர்க்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி உரியது.
இந்நூலைச் செம்மையாக அச்சிட்டு உதவிய மீரா அச்சகத்தார்க்கும் நான் நன்றியன்.
மதுரை-9.
தொ.பரமசிவன்