அழகர் கோயில்/003
2. அழகர்கோயிலின் தோற்றம்
2. 0. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் பழமை சான்ற ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் பெயர் சுட்டிச் சொல்லப்பெறும் திருமால் திருப்பதி இதுவாகும்.1 முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வாரும் இக்கோயிலைப் பாடியுள்ளார்.2 இக்கோயிலின் தோற்றம் இங்கு ஆராயப்படுகின்றது.
2. 1. தோற்றம் குறித்த சான்றுகள் :
இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்று(கள்) ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார். இம்மலையில் திருமாலும் பலராமனும் இணைந்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார். ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்குப் பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ, குறிப்புக்களோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்குப் பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்தி ஏதும் காணப்படவில்லை.
2. 2. சீனி. வே. கருத்து :
இக்கோயிலின் தோற்றம் குறித்து மயிலை. சீனி. வேங்கடசாமி ஒரு கருத்தினைக் கூறுகின்றார். “அழகர்மலை என்று வேறு பெயருள்ள இந்த இடம் (திருமாலிருஞ்சோலை) இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகையில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்காராமம். அஃதாவது பௌத்த பிட்சுக்கள் வசிக்கும் இடம். அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி(அரச)மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புக்கள் யாவும் இக்கோயில் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றது.”3
2. 3. சீனி. வே. கருத்தின் ஏற்புடைமை :
பக்தி வழிப்பட்ட நோக்கில் இக்கருத்து கற்பனையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு சமயத்தார்க்குரிய கோயில் மற்றொரு சமயத்தாருடைய கோயிலாக மாறுவதோ மாற்றப்படுவதோ சமய இயக்கங்களின் வரலாற்றில் வியப்பான செய்தியாகாது. தஞ்சை மாவட்டத்தில் சிக்கல், வலிவலம், கீழ்வேளூர், தேவூர் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்கள் ஒரு காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்திருக்கலாம் என்பர் சுரேஷ் பி. பிள்ளை.4 புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள விசயாலயச் சோழிசுவரம் கோயிற் பரப்பினை (temple complex) பற்றி எழுதும் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், “வலப்பக்கத்திலுள்ள சமணக்குடகு என்ற குடபோகக் கோயில் பிற்காலத்தில் வைணவக் கோயிலாக மாறவே, அதன் அர்த்த மண்டபத்தில் திருமாலின் பன்னிரண்டு உருவங்கள மிக்க சிற்பத்திறனுடன் செதுக்கப்பட்டுள்ளன” என்கிறார்.5 “பஞ்ச ஆராமங்கள் என்று ஒரு சிவதலக் கூட்டம் ஆந்திராவில் உண்டு... இவை சங்காராமங்கள் என்ற பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் வசித்த இடங்கள் என்று கூறுவர். சங்காராம் என்று விசாகப்பட்டின மாவட்டத்தில் ஒரு ஊரிருப்பதும் இதற்குச் சான்றாகும்” என்கிறார். பி. ஆர். ஸ்ரீநிவாசன்.6 “பூரியிலுள்ள செகநாதர் கோயில் ஒரு காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததை ரைஸ்டேவிட்ஸ் ஒத்துக்கொள்கிறார்” என்று செகதீசன் குறிக்கிறார்7. கேரளத்திலும் இதற்குச் சான்று உண்டு. “மதிலகம் கோயிலும், பிற சமணக் கோயில்களும், சமண மதம் வீழ்ந்து. அம்மதத்தவர் இந்துக்களான போது இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன” என்று ஸ்ரீதரமேனன் குறிப்பிடுகிறார்.8 எனவே சீனி. வேங்கடசாமியின் கருத்தினை மிக எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. அவர் தரும் சான்றுகளைக் கூர்ந்து நோக்க வேண்டும்.
“ஆய்வாளர்கள் தொன்மையல்லாத கூறுகளை உடையது (beterodox) எனக் கருதும் ஒரு கோயில் அல்லது கோயிற் பரப்பு வேறொரு சமயத்திற்கு பௌத்தத்திற்கோ அல்லது சமணத்திற்கோ உரியதாக இருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் பெரிதாகக் கருதுவதில்லை” என்பர் சுரேஷ் பி. பிள்ளை9. சீனி. வே. குறிப்பிடும் தலவிருட்சமும், குளமும் கோயிற் பரப்பின் பகுதியாவன. ஆனால் அவர் குறிப்பிடும். பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள குகை, கோயிலிலிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. எனவே அதனைக் கோயிற் பரப்பின் பகுதியாகக் கொள்ளவியலாது.
2. 4. முதற்சான்று – ‘ஆராமம்’ :
தம் கருத்துக்கு ஆதரவாகச் சீனி. வே. தருகின்ற முதற்சான்று. கோயிலையடுத்த குளம் ஆராமத்துக்குளம் என வழங்கப்படுவது ஆகும். இவ்வழக்கு மரபு உண்மையே. இவ்வழக்கினை ஆய்வாளர் பலமுறை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘ஆராமம் என்பது தமிழ்ச் சொல் இல்லை. இது பாலிமொழிச் சொல். பௌத்த சங்கத்துக்குரிய குளம் உடைய நந்தவனத்தினை இச்சொல் குறிக்கும்’ எனச் சீனி. வே. ஆய்வாளரிடம் விளக்கினார்10 ‘ஆராமம்’ என்ற சொல்லுக்கு, ‘தோட்டம்’, ‘புறச்சோலை’ என்றும், ‘ஆராமஞ் சூழ்ந்த அரங்கம்’ என்ற தொடருக்கு, ‘மற்றைய கோயில்களால் சூழப்பட்ட அரங்கம்’ என்றும் நாலாயிர திவ்வியப்பிரபந்த அகராதி பொருள் கூறுகின்றது11 எனவே, ‘ஆராமம்’ என்ற சொல் தோட்டமும் சோலையும் கோயிலும் இணைந்த ஒரு பகுதியினைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
பௌத்த சங்கத்தாரைப் பற்றி எழுதும் உ. வே. சாமிநாதையர், “பிக்ஷக்களுக்கு ஏதேனும் குற்றம் நேரிடுமாயின் அதற்குப் பரிகாரம் நந்தவனத்துக்கு நீரிறைக்கையென்று தெரிகிறது. இதனை ‘பிக்ஷணிகளுக்குப் பிழை புகுந்தாற் பிராயச்சித்தம் புத்தர் கோயில் முற்றந்துக்கு மணற்சுமக்கை; பிக்ஷக்களுக்குப் பிராயச்சித்தம் நந்தவனத்துக்கு நீரிறைக்கை’ (நீலகேசி - அருக்கசந்திரவாதச் சருக்கம் 25 ஆம் பாட்டுரை) என்பதினாலுணர்க” எனச் சான்று காட்டி எழுதுவர்.12 எனவே, சீனி. வே. கூற்றுப்படி குளம் உடைய நந்தவனங்கள் புத்தர் கோயில்களில் இருந்த செய்தி தெளிவாகின்றது.
2. 5. இரண்டாவது சான்று – ‘தலவிருட்சம்’ :
சீனி. வே. கூறும் அடுத்த சான்று, இக்கோயிலின் பழைய தலவிருட்சங்களில் அரச (போதி) மரமும் ஒன்று என்பதாகும். இக்கோயிலுக்கு யுகத்திற்கொன்றாக நான்கு யுகங்களில் நான்கு தல விருட்சங்கள் உண்டு எனும் செய்தியை அழகர் குறவஞ்சி, சோலை மலைக் குறவஞ்சி ஆகிய இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.13 திரேதாயுகத்தில் அரசு (போதி) மரம் தலவிருட்சமாயிருந்துள்ளது. வடமொழியிலமைந்த இக்கோயில் தலபுராணம், ஒரு மரத்தினடியில் தருமதேவனுக்குக் காட்சி தருகின்ற திருமால், “இந்த ஸ்ரீவிருக்ஷமானது க்ருதயுகத்தில் ஆலவிருக்ஷமாகவும் த்ரேதாயுகத்தில் அச்வந்த (அரச) மரமாகவும், த்வாபரயுகத்தில் பில்வ விருக்ஷமாகவும் கலியுகத்தில் ஜ்யோதிர் (ப்ரதீப) விருக்ஷமாகவும் ஆகிறது. இந்த ஜ்யோதிர் விருக்ஷத்தினடியிலுள்ள என்னை என் பக்தர்களுங்கூட அர்ச்சிக்கக் கடவார்கள்” எனக் கூறுவதாகக் குறிக்கும்.14
தலபுராணத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் மற்றொரு செய்தி இதுவாகும். கலியுகத்தில் மட்டுமே ஜ்யோதிர் மரத்தடியில் பக்தர்கள் இறைவனை வழிபட முடிந்தது. திரேதாயுகத்தில் அரசமரம் தலவிருட்சமாயிருந்தபோது, இத்தலத்திறைவனைப் பக்தர்கள் வழி படக்கூடவில்லை என்பதாகும். பொதுவாக, ஒரு தலத்திற்கு நான்கு தலவிருட்சங்கள் இருந்ததாகக் கூறுவது ஒரு விதிவிலக்கான செய்தியாகும்.
2. 6. நரசிம்ம வழிபாடு :
“சமணக் கோயில்களையும், பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்க மூர்த்தியை அமைப்பது வழக்கம்” எனப் பொதுவான ஒரு கருத்தினைக கூறும் சீனி. வே.15 தம் கருந்துக்கு ஆதரவாக, ‘சமணர்கள் ஏவிய யானையினை மதுரை சோமசுந்தரக்கடவுள், நாரசிங்க வெங்கணை எய்து கொன்றார்’ என்றும், ‘யானை மலையாக மாறிய பின் அக்கணை ‘கொடிய நார சிங்கமாய்’ அவ்விடத்தில் வீற்றிருந்தது’ என்றும் கூறுகின்ற திருவிளையாடற்புராணத்து யானை எய்த படலச் செய்திகளை எடுத்தும் காட்டுகிறார்.16 அவர் கருத்து மறுக்கவியலாத ஒன்றாகும்.
இதுபோலவே ‘பௌத்தக் கோயில்’ என அவர் கருதும் அழகர்கோயிலுக்கும் இக்கருத்து பொருந்தி வருகிறதா என்று காணவேண்டும். அழகர்கோயிலுக்குள் மூன்றாம் திருச்சுற்றில் கருவறைக்கு நேர் பின்னாக, கருவறையை நோக்கியபடி யோக நிலையில் ஒரு நரசிம்மர் காணப்படுகிறார். “இரணிய கதை நிகழக் காரணமாக இருந்த சீற்றம் தன் யோகத்தால் தணியத் தானே யோகமூர்த்தியானார்” என யோக நரசிம்மத்தின் தத்துவத்தினை விளக்குகிறார் குமாரவாடி கே. ராமானுஜாசாரியார்.17 அழகர் கோயிலில் உள்ள யோக நரசிம்மரை, ‘ஜவாலா நரசிம்மர்’ என அழைக்கின்றனர். அவரது சினம் தலையிலிருந்து நெருப்புச் சுவாலையாக வெளிப்படுவதாகக் கூறுகின்றனர். இச்சிலைக்கு நேராக, கற்கூரையில் ஒரு திறப்பு வைத்துள்ளனர். நாள்தோறும் இச்சிலைக்கு எண்ணெய்க் காப்பிடுகின்றனர். யோக நரசிம்மரின் சினம் ஆவியாகி மேலே கற்கூரையிலுள்ள திறப்பு வழியாக வெளியேறுவதாகக் கூறுகின்றனர். இவ்வளவு சினத்துக்குரிய காரணம் யாது?
இது தவிர அதே பகுதியில் ஒரு லெட்சுமிநரசிம்மர் உள்ளார். கல்யாண மண்டபத்தில் இரணியனைக் கொல்ல எடுத்த கோலத்திலும், அவன் உடலைக் கிழித்த கோலத்திலுமாக இரு நரசிம்மர் சிலைகள் உள்ளன. உட்கோட்டை நுழைவாயிலின் மேலாக மற்றுமொரு நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். ‘இத்தலம் நரசிம்ம வழிபாட்டிற்கு முக்கியமானது’ என்பர் கே. என். ராதாகிருஷ்ணன்.18
வைணவப் பகைவனாக விளங்கிய இரணியனை அழிப்பதே நரசிம்ம அவதாரத்தின் நோக்கமாகும். எனவே புறமதத்தவர்களை எதிர்க்க முற்படும் போதெல்லாம். நரசிம்மமூர்த்தத்தினை வைணவர் நிறுவி வழிபடுவது பொருத்தமுடையதே. அழகர்கோயிலிலும் நரசிம்ம வழிபாடு தனித்தன்மையுடன் விவங்குவதன் காரணம் புறமத எதிர்ப்பே என்று கொள்ளலாம்.
2. 7. புறமதத்தவர் யார்?
அழகர்கோயிலில் வைணவத்தினால் எதிர்க்கப்பட்ட ‘புறமதத்தினர்’ யாவர் என்பதை அடுத்துத் தெளிவுபடுத்துதல் வேண்டும். திருமங்கையாழ்வார் இக்கோயில்,
“புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள்
ஒத்தன பேசவு முகந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்”19
இக்கோயிலுக்கு ஒரு மைல் கிழக்கே பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களோடு காணப்படும் மலைக்குகை சமணருடையதாகும். அச்சணந்தி எனும் சமணப் பெரியாரின் உருவத்துடன், ‘அச்சணந்தி செயல்’ என்னும் மிகச் சிறிய வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் இங்கே காணப்படுகிறது. அச்சணந்தியைக் குறிப்பிடும் கல்வெட்டுக்களின் எழுத்தமைதிகொண்டு அச்சணந்தியின் காலம் கி.பி.எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாகலாம் காலம் என பி.பி. தேசாய் கருதுகின்றார்.20 எனவே அழகர்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற காலத்திலும் இங்குச் சமணர் வாழ்ந்திருந்ததனையறியலாம். எனவே அழகர்கோயிற் பகுதியில் எதிர்க்கப்பட்டவர் அல்லது அழிக்கப்பட்டவர் பௌத்தர்களாகவே இருக்க முடியும்.
சீனி. வே. யின் கருத்தினை மறுப்பதற்கு வாய்ப்பில்லை; உடன்படுவதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே அழகர்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது என்று குறிப்பிடும் அவர் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. அவர் கருத்தினை வலியுருத்தும் வேறு சில சான்றுகளும் இத்தலத்தில் காணப்படுகின்றன. அவற்றினையும் தொகுத்துக் காண்பது பொருத்தமுடையதாகும்.
2. 8. சக்கரத்தாழ்வார் – ‘பிரயோக சக்கரம்’ :
திருமாலின் போர்க்கருவியான திருவாழி ஆழ்வார்க்கு இக்கோயிலில் உள்ள சன்னிதி சிறப்பானதாகும். தனக்குரிய பதினாறு ஆயுதங்களை ஏந்தி இங்கு அவர் காட்சி தருகிறார். இக்கோயில் கல்வெட்டு ஒன்று மலைமீதிருந்த திருவாழி ஆழ்வார் கோயிலைக் குறிப்பிடுகிறது. இன்று மலைமீது திருவாழிக்குக் கோயில் ஏதும் இல்லை. எனவே மலைமீதிருந்த கோயிலே அழிந்து, பின்னர் அழகர்கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டதெனக் கருதலாம்.
திருமால் கோயிலுக்குரிய நிலங்களில் திருமாலின் சக்கரம் பொறிக்கப்பட்ட கல்லை நடுவது வழக்கம். இதற்குத் ‘திருவாழிக்கல்’ எனப் பெயர். மலைமீது திருவாழி ஆழ்வார்க்குக் — சக்கரத்தாழ்வார்க்குக் கோயில் இருந்ததென்பது, மலைமீது இக்கோயிலுக்குரிய உரிமையினை நிலைநாட்டவே ஆகும். சாதாரணமாக மனிதர் நடமாடாத மலைப்பகுதிகளில் உரிமையை நிலைநாட்ட வேண்டிய தேவை, பிறர் யாரேனும் மலைக்கு உரிமை கொண்டாட முற்படும் போதே ஏற்படுகிறது. பௌத்த எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே இக்கோயிற் பகுதியில் இது நிகழ்ந்திருக்க வேண்டும்.இக்கோயிலில் மூலத்திருமேனியாக விளங்கும் திருமால், கையில் சக்கரத்தை, சுற்றிச் செலுத்தும் நிலையில் (பிரயோக நிலையில்) வைத்துள்ளார். வழிபடும் அடியார்க்கு அருள் சுரக்கும் இறைவன், எதிரிகளை அழிக்கச் செலுத்தும் சக்கரத்தை ஆயத்த நிலையில் வைத்திருப்பது யாரோ ஒரு பகைவனை அழிப்பதற்காகவே இருக்க முடியும். பொதுவாக, வைணவக் கோயில்களில் திருமாலின் கையில் சக்கரம் அணியாகவே விளங்கும்; செலுத்தும் நிலையில் இருப்பதில்லை. இக்கோயிலில் இது ஒரு விதிவிலக்கான செய்தியே.
2. 9. இலக்கியச் செய்திகள் :
சீனி. வே. யின் கருத்தினை மனத்திலிருத்தி இத்தலம் குறித்த பரிபாடலை நோக்க வேண்டும். “பகைவர்களை வெற்றி கொண்டவனுடைய இருங்குன்றத்திற்கு மனைவியோடும், பெற்றாரோடும், பிறந்தாரோடும், உறவினரோடும் செல்லுங்கள்” என்பது இப்பாடல் தரும் செய்தியாகும்.21 சங்க இலக்கியத்தில், ‘இக்கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்’ என்னும் பிரச்சாரப் போக்கில் அமைந்த பாடல் இது ஒன்றேயாகும். இருங்குன்றம் சமயப் போராட்டக் களமாக விளங்கிய குறிப்பும், இக்கோயிலுக்கு மக்கள் ஆதரவினைத் திரட்ட வைணவம் முயன்றதும் இப்பாடலில் புலப்படுகின்றன.
இத்தலம் குறித்த பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரின் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், ‘இம்மலை திருமாலுக்குரியது; இக்கோயில் திருமாலுக்குரியது’ என்னும் கருத்து பேசப்படுகிறது. இக்கருத்து மீண்டும் பேசப்படுவதற்குரிய காரணம் சிந்தனைக்குரியது.
இத்தலம் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்துள்ள பிறமத எதிர்ப்புணர்ச்சியை அவற்றுக்கான வைணவ ஆசாரியர்களின் உரைகள் நன்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. இக்கோயில் தலபுராணம் தரும் செய்தியும் இவ்விடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியதாகும்.
“...யக்ஞ சீலர்களான பிராமணர்களைக் காப்பாற்றுவதன் நிமித்தமும், இராக்ஷஸர்களை நாசஞ் செய்வதன் பொருட்டும், ஸாது ஸம்ரக்ஷ்ணத்திற்காகவும் க்ஷீராப்தி சயனத்தை (பாற்கடலை) விட்டு ஸ்ரீபகவான் சோலைமலையையடைந்தார்.”22 ‘இராக்ஷஸர்களை நாசஞ்செய்வது’ எனப் பகையழிப்பு நோக்கத்தினைத் தலபுராணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
2. 10. கருவறைப்பெயர் :
இத்தலம் குறித்த நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும், ‘நங்கள் குன்றம்’ என்ற சொல் இக்கோயிலின் கருவறைக்குப் பெயராக வழக்கிலிருந்து வருகிறது. ‘நங்கள் குன்றம்’ என்பது, ‘நம்முடைய குன்றம்’ என உரிமை சுட்டும் பெயராக அமைந்திருப்பது சிந்திக்கத்தகுந்தது. தவிரவும், கோயிலின் கருவறைப்பகுதிக்கு மட்டும் தனியே ஒரு பெயரிட்டு அழைப்பது தமிழ்நாட்டுச் சைவ, வைணவக் கோயில்களில் வழக்கத்தில் இல்லை. இக்கோயிலில் மட்டும் அமைந்திருப்பது விதிவிலக்கான ஒரு செய்தியே.
2. 11. விமான அமைப்பும் கருத்தும்:
இக்கோயிலின் விமானம் (கருவறை அடி முதல் முடி வரை) வட்டவடிவமான அமைப்புடையது. இக்கட்டிடப்பகுதி மிகப் பிற்காலத்ததாகவே தோன்றுகிறது. அடிப் (அதிட்டானப்) பகுதியில் கல்வெட்டுக்களும் இல்லை. கட்டிடப் பொருள்கள் (Materials) பிற்காலத்தனவாகத் தோன்றினாலும் இந்த அமைப்பு (Plan) காலத்தால் மாறியதாகத் தோன்றவில்லை. தென்னகத்தில் புதுக்கிக் கட்டும் போது விமானத்தின் முந்திய அமைப்பை அப்படியே பின்பற்றுவது வழக்கம் என்று சி. கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.23 அழகர்கோயில் கருவறை அமைப்பு பிற்காலச் சோழர் (Imperial Cholas) காலத்திற்கு முந்தியதென்றும், அவ்வமைப்பில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பாண்டி மண்டலத்தில் இது ஒன்றே உள்ளது என்றும் கே. வி. சௌந்தரராஜன் கருதுவர்.24
வட்டவடிவமான இக்கருவறை அமைப்பு தமிழ்நாட்டின் பழங்கோயில்களில் 1. காஞ்சிபுரம் கரபுரீசுவரர் கோயிலிலும் 2. புதுக்கோட்டை நார்த்தாமலை விசயாலயச் சோழீசுவரம் கோயிலிலும் 3. அழகர்கோயில் கள்ளழகர் கோயிலிலும் மட்டுமே உள்ளதென்று சீனி. வே. கூறுகிறார்.25 இவற்றுள் காஞ்சிபுரம் கரபுரீசுவரர் கோயிலில் பௌத்தச் சாயல்களைத் தான் நேரில் கண்டதாக சீனி. வே. ஆய்வாளருடன் நடத்திய கலந்துரையாடலில் கூறினார்.26 கோயில் ஆய்வின் பகுதியாக அது அமைந்த பகுதியினை ஆய்வு செய்ய வேண்டுமென்பர் சுரேஷ் பி. பிள்ளை.27 விசயாலயச் சோழீசுவரம் கோயிலையடுத்து வலப்பக்கத்திலுள்ள குடமோகக் கோயிலின் பெயர் சமணக்குடகு என்றும், பிற்காலத்தில் அது வைணவக் கோயிலாக மாறியதென்றும் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் கருதுவதை முன்னர்க் கண்டோம்.28 அழகர்கோயில் பற்றிய சீனி. வே. யின் கருத்தினையும் கண்டோம். எனவே வட்டவடிவக் கருவறை அமைப்புடைய மூன்று கோயில்களும் ஐயத்துக்கிடமான சில கூறுகளைப் பெற்றிருக்கின்றன.
அழகர்கோயிலில் வட்டவடிவமான கருவறையைச் சுற்றி அதனுள்ளேயே வட்டவடிவில் ஒரு திருச்சுற்றும் (பிரகாரம்) உள்ளது. பௌத்த சைத்தியங்களைச் சுற்றி இவ்வாறு வட்டவடிவத் திருச்சுற்று உண்டு என்றும், ‘துறவிகள் கூடி வாழும் விகாரைகளையொட்டி, பெரும்பாலும் சைத்தியங்களிருக்கும்’ என்றும் பர்கீஸ் (Burgess) கூறுவர்.29 எனவே சைத்தியத்தை ஒட்டிய துறவிகள் வாழும் விகாரைகளில் நந்தவனமும் குளமும் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான் பிழை செய்த ஆண் துறவிகள் பிராயச்சித்தமாக நந்தவனத்துக்கு நீரிறைக்கவும், பெண் துறவிகள் கோயில் முற்றத்துக்கு மணற்சுமக்கவும் கூடும்.
2. 12. தலைமழிக்கும் வழக்கம் :
இக்கோயிலில் அடியவர்கள் தலையினை மொட்டையடித்துக் (மழித்துக்) கொள்கின்றனர். தமிழ்நாட்டுச் சைவ வைணவ நூல்களில் ‘தலையினை மழிக்க வேண்டும்’ என்பது போன்ற குறிப்புக்கள் ஏதும் இல்லை. தலைமுடியினைக் கையினாற் பறித்துக்கொள்ளும் வழக்கம் சமணத் துறவிகளுக்குண்டு. பௌத்தத் துறவிகளே தலை முடியினைக் கத்தி கொண்டு மழிக்கும் வழக்கமுடையவர். பௌத்தத் துறவியின் உடைமையாக அனுமதிக்கப்பட்ட மூன்று ஆடைகள் உள்ளிட்ட எட்டுப் பொருள்களில் மழிகத்தியும் ஒன்றாகும்.30 தலை முடியினை மழித்துக்கொள்ளும் பௌத்தர்களின் வழக்கம் இக்கோயிலில் இன்றும் அடியவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
முடிவுரை :
சீனி. வே. தரும் இரண்டு சான்றுகளுடன், நரசிம்ம வழிபாடு, பிரயோகசக்கரம், இலக்கிய தலபுராணக் குறிப்புக்கள், கருவறையின் பெயரும் அமைப்பும், தலைமழிக்கும் வழக்கம் ஆகிய செய்திகளும், ‘இக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது’ என்னும் அவர் கருத்தினையே நிலை நிறுத்துகின்றன.
இம்மாற்றம் எக்காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று காண்பதற்குச் சான்றுகளில்லை. முதலாழ்வார்களில் பூதத்தாழ்வார் இக்கோயிலைப் பாடியிருப்பதால் அவர் காலத்துக்கு முன்னர் இம்மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இத்தலம் குறித்த பரிபாடல் பூதத்தாழ்வார் காலத்துக்கு முந்தியதாயிருத்தல் வேண்டும். ஏனெனில் ‘இருங்குன்றம்’ என்ற பெயரை நான்கிடங்களில் வழங்கும் இப்பாடலே, ‘சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்’ என்று ஒரு புதிய பெயர் வடிவத்தைத் தருகின்றது. பூதத்தாழ்வார், ‘இருஞ்சோலை’ எனக் குறிக்கின்றார். இத்தலத்தினைப் பாடும் ஆழ்வார்கள் ‘குன்றம்’ எனும் பெயர் வழக்கினைப் பயன்படுத்தவேயில்லை. எனவே இருங்குன்றம் என்னும் பெயர் வழக்கு, இப்பெயரினைக் குறிக்கும் பதினைந்தாம் பரிபாடல் ஆசிரியர் இளம் பெருவழுதியார் காலத்திற்குப்பின் மறைந்துவிடுகிறது. அவர் காலத்தில் அல்லது அதற்கும் சற்று முன்னர் இக்கோயில் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம்.
குறிப்புகள்
- 1. ‘சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்’, பரிபாடல், 15 : 23.
- 2. நாலாயிரத்திவ்விய பிரபந்தம், பாடல்கள் 3331, 3337.
- 3. மயிலை, சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப. 63.
- 4. Suresh, B. Pillai, Introduction to the study of Temple Art, Part I, Chap. 3. p. 60.
- 5. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, ப. 42.
- 6. பி. ஆர். ஸ்ரீநிவாசன், நாம் வணங்கும் தெய்வங்கள், பக். 49-50.
- 7. N. Jegadeesan, History of Srivaishnavism in the Tamil Country (post Ramanuja), p. 259.
- 8. A. Sreedhara Menon, Cultural Heritage of Kerala, pp. 11-12.
- 9. Suresh B. Pillai, op. cit., Part I, p. 1.
- 10. ஆய்வாளர்-சீனி. வே. உரையாடல், நாள்: 5. 8. 1977.
- 11. பார்த்தசாரதி ஐயங்கார், நாலாயிரத்திவ்விய பிரபந்த அகராதி ப. 139. ஆராமம் என்ற சொல் தமிழிலக்கியத்தில் முதன் முதலாக மணிமேகலையில் காணப்படுகிறது. மணிமேகலை 3 : 32.
- 12. உ. வே. சாமிநாதையர், புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம், பக். 143-144.
- 13. அழகர் குறவஞ்சி, விருத்தம், 40.
சோலைமலைக் குறவஞ்சி, பாடல் 110.
- 13. அழகர் குறவஞ்சி, விருத்தம், 40.
- 14. K. N. Radhakrishna, Thirumalirunjolaimalai (Alagarkoil) Sthalapurana, Part III, ஸ்ரீவிருஷபாத்ரி மஹாத்மியம், ப. 19.
- 15. மயிலை. சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும், ப. 252.
- 16. மேலது, பக். 252-253.
- 17. கே. ராமானுஜாச்சாரியார், வட்டமேசை, கல்கி, 9. 9. 1979, ப. 12.
- 18. K.N. Radhakrishna, op. cit., Part I, p.272.
- 19. நாலாயிரத்திவ்விய பிரபந்தம், பாடல் 1826.
- 20. P.B.Desai, Jainism in South India and Some Jaina Epigraphs, p.63.
- 21, பரிபாடல், 15:45-48.
- 22. K.N. Radhakrishna, op. cit., Part III, ஸ்ரீ விருஷபாத்ரி மஹாத்மியம், ப.12.
- 23. C. Krishnamurthy, Thiruvorriyur Temple (unpublished); p.88.
- 24. K.V. Soundararajan, Art of South India-Tamil Nadu and Kerala, p. 103.
- 25. மயிலை. சீனி.வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக். 17-19.
- 26. ஆய்வாளர்-சீனி. வே. உரையாடல், நாள் : 5. 8. 1977.
- 27. Suresh B. Pillai, op. cit., Part I, p. 54.
- 28. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், மு. நூல், ப. 42.
- 29. J.A.S. Burgess, Buddhist Art in India, pp. 20-21.
- 30. உ.வே. சாமிநாதையர், மு.நூல், பக். 142-143.