அழகர் கோயில்/005
4. ஆண்டாரும் சமயத்தாரும்
4. 0. அழகர்கோயில் பரம்பரைப் பணியாளர்களின் பதினான்கு பணிப் பிரிவுகளில் ‘ஆண்டார்’ என்பதும் ஒன்றாகும். இப்பணிப்பிரிவில் திருமாலை ஆண்டார், திருமலை தந்தான் தோழப்பன் என்ற இரண்டு நிருவாகங்களும் அடங்கும். இத்தலத்தில் ‘ஆசார்ய’ மரியாதைக்குரியவர்கள் இப்பணிப் பிரிவினரேயாவர். இவர்கள் சாதியாற் பிராமணராவர்.
4. 1. ‘ஆண்டார்’ - சொற்பொருள் :
‘ஆண்டார்’ எனுஞ் சொல் தமிழகக் கோயிற் கல்வெட்டுகளில் கோயிலுக்குப் பூ இடுவார், தழையிடுவார் ஆகியோரையே குறிக்கிறது.1 ஆயினும் இக்கோயிலில் ‘ஆண்டார்’ பணிப்பிரிவினர் இப்பணிகளைச் செய்வதில்லை. மாறாகப் ‘பண்டாரி’ என்னும் பிராமணரல்லாத பணிப்பிரிவினர் இக்கோயிலில் இறைவனுக்கு மாலை கட்டித்தரும் பணியினைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டார் பணிப்பிரிவினரின் தோற்றம் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.
4. 2. ‘திருமாலை ஆண்டான்’ - பெயர்க்காரணக் கதையும் மறுப்பும் :
இப்பணிப்பிரிவினரின் முன்னோரான திருமாலை ஆண்டானுக்கு அப்பெயர் ஏற்பட்டது குறித்து ஒரு கதை வழக்கில் இருந்து வருகிறது.
திருமாலை ஆண்டான் கோயிலில் இராமானுசருக்குத் திருவாய்மொழிப் பாடஞ் சொல்லிவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புவார். ஒருநாள், இருளில் முன்னால் தீப்பந்தம் பிடிந்து வழி காட்டிச் செல்லும் சிறுவன் தூங்கிவிட்டான். இதையறிந்த திருமாலாகிய இறைவனே அச்சிறுவன் வேடத்தில் வந்து ஆண்டானுக்கு முன்னாகத் தீப்பந்தம் பிடித்து வழிகாட்டிச் சென்றான். மறுநாள்தான் திருமாலை ஆண்டான், முதல் நாள் இரவில் தீப்பந்தம் பிடித்து வழிகாட்டி வந்தவன் இறைவனே என்பதைத் தெரிந்து கொண்டார். இறைவன் கருணையை எண்ணி வியத்தார். இவ்வாறு திருமாலையே பணியாளாக ஆண்டமையால் இவர்க்குத் ‘திருமாலை ஆண்டான்’ என்ற பெயர் ஏற்பட்டது”2 என்பது அக்கதையாகும். இக்கதையினை அழகர் கிள்ளைவிடு தூதும்.
- “ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொருப
- மானதீ பங்காட்டி வந்து நின்று-மேனாளில்
- முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின்போன
- அத்தன் திருமாலை ஆண்டான்”3
எனக் குறிக்கிறது. இராமானுசர்க்குத் திருமாலை ஆண்டான் திருவாய் மொழி கற்பித்த செய்தியைக் குருபரம்பரை நூல் கூறுகின்றது.4 அச்செய்தியிலிருந்து பிறந்ததே இக்கதையாகும். இக்கதைப் பொருளை ‘இராமானுசர்க்காக அவருடைய ஆசிரியர்க்கு இறைவன் செய்த அருள்’ என்றோ, ‘திராவிட வேதமாகிய திருவாய்மொழியினைக் கற்பித்ததால், திருமாலை ஆண்டானின் தமிழறிவுக்கு இறைவன் செய்த அருள்’ என்றோ விளக்கலாம். ஆனால் இக்கதை, திருமாலை ஆண்டானின் பெயர்ப் பிறப்புக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்பெயரில் வரும் ‘திருமாலை’ என்ற சொல்லுக்கு, ‘இறைவனுக்குச் சார்த்தும் பூமாலை’ என்பதே பொருளாகும். வடமொழியில் திருமாலையாண்டானுக்கு ‘மாலாதரர்’ என்ற பெயர் வழங்குகிறது.5 ‘மாலை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான வடசொல் ‘மாலா’ என்பதாகும். ‘திருமாலைப் பணிகொண்டவன்’ என்ற பொருள் தரும் வடமொழிப் பெயர் ஏதும் இவர்க்கு வழங்கவில்லை. மேலும் குருபரம்பரை நூல் கூறும் வைணவப் பெரியார்களின் பெயர்களை நோக்கும் போது ஒரு செய்தியினை உணரலாம். அவர்களனைவரும் ஆழ்வான், ஆச்சான், ஆண்டான், நம்பி, பட்டர், தாசர் ஆகிய பெயர்களில் ஏதேனும் ஒன்றைத் துணைப் பெயராகக் கொண்டுள்ளனர்.6 பெரியாண்டான், சிறியாண்டான், முதலியாண்டான், மாருதி ஆண்டான், மாறொன்றில்லா ஆண்டான் முதலிய பெயர்களைக் காணும்போது ‘திருமாலை ஆண்டான்’ என்ற பெயரும் அவ்வாறே அமைந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. ‘ஆண்டார்’ என்னும் சொல் கல்வெட்டுகளில் பூ இடுவாரைக் குறிப்பதனைத் திருமாலை ஆண்டான் பெயரிலுள்ள ‘திருமாலை’ என்னும் சொல் உறுதிப்படுத்துகின்றது. எனவே திருமாலை ஆண்டான், இறைவனுக்குத் திருமாலை கட்டித் தரும் பணியினையும் செய்திருக்கலாம்; அதனால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. திருமாலையாண்டான் காலம் ஏறத்தாழக் கி. பி. 988 முதல் கி. பி. 1073 வரை என்பது வைணவ அறிஞர் கருத்து.7
4. 3. ஆண்டார்-பணிகள் :
ஆண்டார், தோழப்பர் ஆகிய இரு நிருவாகத்தாரும் செய்யும் பணிகள் ‘ஆண்டார் பணிகள்’ என்றே பெயர்பெறும்.
கோயிலில் நாள்தோறும் அருச்சகருக்குப் பவித்திரம் கொடுத்தல் இறைவனுக்குப் புரிநூல் கொடுத்தல், ஒவ்வொரு பூசைக்கும் பஞ்சாங்கம் கணித்துச் சொல்லுதல், கோயிலைப் புண்ணியாவசனம் (ஆகமவிதிப்படி தூய்மை) செய்தல் ஆகியவை மேற்குறித்த இரண்டு நிருவாகத்தாருக்குமுரிய பணியாகும். இவை தவிர நாள்வழிபாட்டிலும் திருவிழாக்களிலும் திருப்பாலை, நித்யானுசந்தானம், சூக்தாதி உபநிஷத்து, திருமஞ்சனஸ்லோகம், அலங்காரஸ்லோகம், திருமஞ்சனகவி, புஷ்பாஞ்சலி, வேதவிண்ணப்பம், இதிகாசபுராணம், ஸ்தலபுராணம் முதலியவற்றை உரிய நேரங்களில் படிப்பதும் இவர்களின் பணியாகும்.
திருவிழாக்களில் அடியார், கூட்டமாகத் தமிழ் வேதம் பாடுவதும் இவர்கள் தலைமையில்தான் நடைபெற வேண்டும்.
திருவிழாக் காலங்களுக்குரிய பொறுப்புக்களையும் உரிமையையும் மட்டும் இரு நிருவாகத்தாரும் மாறிமாறிப் பெறுவது வழக்கம்.
கோயில் நடைமுறையும், தொழில், சுதந்திர அட்டவணையும்8 மேற்குறித்த செய்திகளை உறுதி செய்கின்றன.
4. 4. ‘திருமாலை ஆண்டான்’-நிருவாகப் பழமை :
“திருமாலை ஆண்டான் பரம்பரைத் தனியன்களும் வாழித் திருநாமங்களும்”9 என்னும் சிறுநூல் 1975இல் வெளிவந்தது. அப்போது பட்டத்திலிருந்த கிஷ்ணமாசாரியார் இருபத்துமூன்றாவது தலைமுறையினர் ஆவார். அவர் 1976 இல் காலமானதும் 1976 இல் இருபத்து நான்காவது தலைமுறையினராகப் பட்டத்துக்கு வந்த அவரது மருகர் சந்தான கிருஷ்ணமாசாரியர் 1977 இல் காலமானார். இவர்க்கு வாரிசில்லை. எனவே இந்நிருவாகம் கோயில் ஆட்சித் துறையில் சேர்ந்துவிட்டது. ‘திருமாலை ஆண்டான்’ பரம்பரையினர் இக்கோயிலில் மொத்தம் இருபத்து நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.
மேற்குறித்த சிறுநூலில், பதினான்கு தலைமுறையினர்க்குரிய வடமொழியிலமைந்த ஒவ்வொரு தனியனும், தமிழிலமைந்த வாழித் திருநாமங்களும் உள்ளன. ஏழாவது, ஒன்பதாவது, பதின்மூன்றாவது முதல் பத்தொன்பது (7, 9, 13-19) வரையிலான தலைமுறையினர்க்குரிய தனியன்களும் வாழித் திருநாமங்களும் காணப்படவில்லை. ‘தெரியவில்லை’ என்ற குறிப்பு மட்டும் தரப்பட்டுள்ளது.
ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வாழ்க்கைக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் கூறும் பெரிய திருமுடியடைவு, “வாமநாம்ஸ பூதரான திருமாலையாண்டானுக்குத் திருவவதார ஸ்தலம் அழகர்கோயில். திருநக்ஷத்ரம் ஸர்வதாரி வருஷம் மாசி மாஸத்தில் மகம். திருநாமங்கள் மாலாதார், ஸ்ரீஜ்நாநபூர்ணர். குமாரர் சுந்தரத் தோளுடையார். திருவாராதனம் அழகர், ஆசார்யர் ஆளவந்தார், சிஷ்யர் ஸ்ரீபாஷியகாரர். இருப்பிடம் அழகர்கோயில்” என்று குறிப்பிடுகிறது.10
திருக்கோட்டியூர் நம்பி பணித்ததின்பேரில் இராமானுசர். திருமாலையாண்டானிடமே திருவாய்மொழி என்னும் பகவத் விஷயத்தைக் கேட்டறிந்தார். ஆண்டார் பரம்பரையின் முதல்வரான இவரைப் பற்றிய வாழித் திருநாமங்கள்,
- “தேசுபுகழ் ஆளவந்தார் திருவடியோன்”11
என இவர் ஆளவந்தாரின் மாணவராக விளங்கியதையும்,
- “திண்பூதூர் மாமுனிக்குத் திருவாய் மொழிப்பொருளை
- உண்மையுடன் ஓதியருள் சீர்”12
இவரது மகன் சுந்தரத்தோளுடையார் வைணவத்தின் எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவராக அழகர்கோயிலில் இராமானுசரால் நியமிக்கப்பட்டார்.13 எனவே இராமானுசர் காலம் தொடங்கி, திருமாலை ஆண்டான் பரம்பரையினர் அழகர்கோயிலோடு உறவுபூண்டு இருபத்துநான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இக்கோயிலில் பணிபுரிந்த செய்தியினை அறிய முடிகிறது.
4, 4. ‘தோழப்பர்’-நிருவாகப் பழமை :
திருமலை தந்தான் தோழப்பன் என்ற நிருவாகம் எக்காலத்திலோ இடையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்நிருவாகத்தாரின் முன்னோர் ஒருவர் ஒரு படையெடுப்புக் காலத்தில் இறைவன் திருமேனியை ஒரு குழிக்குள் மறைத்து வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்து உயிர்நீத்த தியாகத்தால் ‘ஆண்டார்’ பணியில் அவர் வழியினர்க்குப் பங்கு தரப்பட்டது என இப்போது இந்நிருவாகப் பணியிலுள்ளவர் கூறுகிறார்.14 அழகர் கிள்ளைவிடு தூது.
- “வையங்கார் வண்ணனையே வந்துதொழும் தோழப்
- பையங்கார் என்னும் ஆசாரியரும்”15
4. 6. நடைமுறை வழக்கு :
வைணவ ஆசாரியரான பட்டரை, ‘ஸ்ரீரங்கேசப்புரோகிதர்’ எனப் பெரிய திருமுடியடைவு கூறும்.19 இதைப்போல அழகர்கோயிலில், திருமாலை ஆண்டான் வழியினர் ‘அழகப்புரோகிதர்’ என வழங்கப்படுகின்றனர்.20
முதல் திருமாலையாண்டான் ஐப்பசி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில் (சுக்கிலபட்ச துவாதசியில்) காலஞ்சென்றார். ஆண்டுதோறும் இக்கோயில் இறைவன் இந்நாளில் மலைமீதுள்ள அருவிக்கரை சென்று அவரை நினைத்துத் தைலமிட்டு நீராடி வருகின்றார். இவ்விழா தலையருவி உற்சவம் என வழங்கப்படுகிறது. இத்தலத்திறைவனான அழகரை, இந்திரனாக உருவகிக்கும் அழகம் கிள்ளைவிடு தூது, திருமாலையாண்டானைத் ‘தேவ குரு’ என்கிறது.21 முதல் திருமாலையாண்டானுக்கு அழகர் கோயிலில் தனிச் சன்னிதி ஒன்றும் உள்ளது.
சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில் அழகர் பல்லக்கிற்கு முன் ஆண்டார் பல்லக்கில் செல்வார். குருவின் பின்னால் மாணவர் செல்வதுபோல ஆண்டாரின் பின்னால் இறைவன் வருவார். ‘ஆண்டார் முன்னால் அழகர் பின்னால்’ என்பது மதுரைப்பகுதியில் வழங்கப்பெறும் ஒரு சொல்லடையாகும்.
குரு என்பதனால் அடியவர்தம் காணிக்கைகளை இவர் கை நீட்டிப் பெறுவதில்லை. திருவிழாக் காலங்களில் இவர்க்கு முன்னால் ஓர் உண்டியல் வைக்கப்பெற்றிருக்கும். அதிலேயே அடியவர்கள் இவர்க்குரிய காணிக்கையினை இடுவர்.
4. 7. சமயத்தார்கள் :
மதுரை, முகவை மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகளில் ஆண்டார்க்கு அடியாரும் பிரதிநிதிகளுமான பதினெட்டுப்பேர் உள்ளனர். இவர்களனைவரும் பிராமணரல்லாத சாதியினர்; ஆண்டார்க்கு இவர்கள் மந்திரியாகவும் தளபதியாகவும் அவருடைய சமய அரசாங்கத்தின் கோமாளிகளாகவும் கூடக் கருதப்படுகின்றனர். இவர்களனைவரும் ‘சமயத்தார்’ என்ற பொதுப்பெயரைப் பெறுகின்றனர். தாம் வாழும் பகுதி மக்களை வைணவ நெறிக்குள் அழைத்துவந்து ஆண்டாரைக் குருவாக ஏற்கும் அடியாராகச் சேர்ப்பதே இவர்களின் பணியாகும். வைணவ சமய வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதால் இவர்கள் ‘சமயத்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர் போலும் (படம் : 5).
4. 8. சமயத்தார்-சான்று மூலங்கள் :
கி. பி. 1769 எனக் கொள்ளப்பெறும் ‘விறோதி’ ஆண் பொன்றில், திருமாலை ஆண்டார், இப்போது சிவகங்கை வட்டம் கூட்டுறவுபட்டியிலிருக்கும் ‘வெள்ளலூர்ச்சமயம்’ வெள்ளையத்தாதர் என்பவருக்குச் சில உரிமைகளை ஒரு செம்புப் பட்டயத்தின் வாயிலாக அளித்துள்ளார்.22 இந்தப் பட்டயத்தின் ஓலைநகல் ஒன்றே சமயத்தார் பற்றி அறியக்கிடைக்கும் ஆவணச் சான்றாகும். இலக்கியம், கல்வெட்டுகள் ஆகியவற்றில் சமயத்தார்கள் பற்றி யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. திருவிழா நிகழ்ச்சிகள் மட்டுமே சான்றுகளாக அமைகின்றன.
4. 9. சமயத்தார் இருப்பிடம் :
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குள் வந்த பின்னரே, இவ்விறைவளை வழிபடுவோரில் நகர்ப்புற மக்களைக் காண இயலும். இது தவிர இக்கோயில் வழிபாட்டில் கிராமப்புற மக்களே மிகப்பெருந் தொகையினராக விளங்குவதைத் திருவிழாக்களில் காணலாம். “அழகரின் வைகை நோக்கிய ஊர்வலத்தில் கிராமப்புறத்தினரான தாழ்ந்த சாதியினரே பெருந்தொகையினர்” என்கிறார் டென்னிஸ் அட்சன். இவர்கள் மதுரைக்கு வடக்கிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர் கணிப்பாகும்.23
ஆய்வாளர் நடத்திய கள ஆய்விலிருந்து, சித்திரைத் திருவிழாவிற்கு வண்டி கட்டிக்கொண்டு வரும் அடியவர்களில் சிவகங்கை, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை வட்டங்களிலிருந்து வருவோரின் எண்ணிக்கை மொத்தத்தில் முறையே 21%, 18.8%, 16.8% ஆக இருப்பதை அறியமுடிந்தது.24 மதுரைக்கு வடக்கேயுள்ள நிலக்கோட்டை வட்டத்திலிருந்து 5.1% அடியவரே வண்டி கட்டித் திருவிழாவிற்கு வருகின்றனர். இப்பகுதியில் சமயத்தார்கள் இல்லை. ஆனால் சிவகங்கைக்கருகில் கூட்டுறவுபட்டியில் ஒருவரும், முதுகுளத்தூருக்கு வடக்கே சாம்பக்குளத்தில் ஒருவரும், அருப்புக் கோட்டைக்கருகே கானூரில் ஒருவரும், கட்டனூரில் ஒருவரும் ஆக, அதிகமாக வண்டி கட்டிக்கொண்டு வரும் அடியவர்கள் வாழும் பகுதியில் நான்கு சமயத்தார்கள் உள்ளனர். எனவே அட்சனின் கணிப்பு ஏற்புடையதாக இல்லை.
4. 10. சமயத்தார் எண்ணிக்கை :
ஆண்டார் பணிப்பிரிவின் இரண்டு நிருவாகத்தாரும் தங்களுக்குப் பதினெட்டுச் சமயத்தார்கள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆயினும் திருப்புவனம், கானூர், கட்டனூர், சாம்பக்குளம், கலியாந்தூர், சுந்தரராஜன்பட்டி, எட்டிமங்கலம், கூட்டறவுபட்டி, மணலூர், காரைசேரி, மேலமடை, கப்பலூர், முடுவார்பட்டி, பிள்ளையார் பாளையம் ஆகிய பதினான்கு சமயத்தார் பெயரையே அவர்களால் தரமுடிந்தது. இவர்களில் கலியாத்தூரார் திருப்புவனம் சமயத்தாருக்கு உதவி செய்யும் கொண்டித்தாதர் ஆவார். ஏனையோரைப் போலச் சமயத்தாராகக் கருதப்படுவதில்லை. வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலையும் “பாண்டிச்சமையம் பதுநெ (Sic) ட்டுக்கும்”25 என்று ஆண்டாருக்குப் பதினெட்டுச் சமயத்தார் இருந்த செய்தியை உடன்படுகிறது. ஆயினும் பட்டய நகல் ஓலையில் ஆறு பேர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். நகல் ஓலை குறிப்பிடும் பெரிய கோட்டை இருளன்தாதன், கொண்டையன் சென்னாதாதன், பளையனூர் ரெங்கன்தாதன் ஆகிய பெயர்கள் ஆண்டார் பணிப் பிரிவினர் தந்த பட்டியலில் இல்லை. நகல் ஓலை குறிப்பிடும் வெள்ளலூர் வெள்ளைநாயன் அம்பலக்காரர் சமயத்தாரா அல்லரா என்பது விளங்கவில்லை.
எனவே ஒரு சமயத்தாரின் பணி எக்காரணத்தாலோ நின்று போனால் புதிய ஒருவரை ஆண்டார் நியமித்துக்கொள்வாரென்று தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, 1976 வரை பட்டத்திலிருந்த ஆண்டார் நிருவாகத்தாரான கிருஷ்ணமாசாரியர் பல்லக்கின் முன் கொம்பில் சிறிய மணி ஒன்றினைக் கட்டுவதற்கு, ‘மணிகட்டிச்சமயம்’ என்ற ஒன்றையும், ‘சீகுபட்டி பட்டத்தரசி’ என்றொரு சமயத்தினையும் உண்டாக்கினாரென்று ஆண்டார் பணியின் மற்றொரு நிருவாகத்தாரான தோழப்பர் அழகரையங்கார் கூறுகிறார்.26 எனவே சமயத்தார் நியமனம் ஆண்டாரின் விருப்பங்களுக்கு ஏற்ப அமையும் என்று தெரிகிறது.
4. 11. ஆண்டாரின் சமய அரசாங்கம் :
ஆண்டாரின் சமயத் தலைமை அடியார்களிடத்தில் ஓர் அரசாங்கமாக உருவகிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் சமயத்தார் (நாயுடு) ஆண்டாரின் சமய அரசாங்கத்தின் மந்திரியாவார். கப்பலூர்ச் சமயத்தார் (பறையர்) சித்திரைத் திருவிழாவில், ஆண்டாரின் பல்லக்கிற்கு முன்னால் வெள்ளைக் கொடிபிடித்து வருவார். எட்டிமங்கலம் சக்கன்நாதன், சுந்தரராஜன்பட்டி பொக்கன்தாதன் (பள்ளர்) ஆகிய இரு சமயத்தாரும் ஆண்டாரின் அரசவைக் கோமாளிகள் ஆவர். இவர்கள் தலையில் கோமாளிக்குல்லாய் அணிந்து, சோளிமுத்துப் பல்வரிசை கட்டி ஆண்டாருடன் வருவர். காரைச்சேரிச் சமயத்தார் (பள்ளர்) வண்டியூரில் ஆண்டார் தங்குவதற்குக் கொட்டகை அமைத்துத் தருவார். மேலமடைச் சமயத்தார் (கோனார்) வண்டியூரில் ஆண்டார் தங்கும்போது ஒருபானைத் தயிர் கொண்டுவந்து தருவார். கலியாந்தூர்ச் சமயத்தார் (பறையர்) திருப்புவனம் மந்திரிச் சமயத்தார்க்குமுன் மஞ்சள் கொடிபிடித்து வருவார்.
பிற சமயத்தார்களும் மேற்குறித்தோரில் காரைச்சேரி சமயத்தாரும் ஆண்டாரின் தளபதிகளாவர். இவையனைத்தும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். சமயத்தார்கள் அனைவரும் புடைசூழவே ஆண்டார் சித்திரைத் திருவிழாவில் பல்லக்கில் வருவார். திருமாலை ஆண்டான் வழியினரும், திருமாலைதந்தான் தோழப்பன் வழியினரும் பல்லக்கு ஏறிவரும் சிறப்பினை ஆண்டுக்கொருவராக மாறிமாறிப் பெறுவர்.
4. 12. தளபதி சமயத்தார் பணி :
தளபதிகளான சமயத்தார் ஆண்டாரின் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றனர். இவர்களுக்குத் தங்கள் கிராமத்தையொட்டிச் சமய ஆட்சிப்பரப்பு வரையறுத்து ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட கிராமத்து மக்களை வைணவ நெறிக்குள் இழுத்து வரும் வாயிலாக இவர்கள் செயல்படுகின்றனர். ஆண்டார், அழகர்கோயிலில் குருவாக இருக்கிறார். இவர்கள் ஆண்டாரின் பிரதிநிதியாகத் தங்கள் பகுதி மக்களுக்குக் குருவாக விளங்குகின்றனர்.
எடுத்துக்காட்டாக, எழுபத்துமூன்று வயது நிரம்பிய ஒரு தகவலாளி, நாற்பது வருடங்களாகக் கையில் நாங்குலிக்கம்பு ஏந்தி, துளசிமாலையணிந்து, நெற்றியில் தென்கலைத்திருமண் இட்டு, அழகர்கோயிலுக்கு வந்து சாமியாடி, ஆண்டாரை வணங்கித் திரும்புகிறார். தன்னை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோயிலுக்கு அழைத்து வந்து ஆண்டாரிடம் ‘அக்கினி முத்திரை’ (பஞ்ச சம்ஸ்காரம்) செய்வித்தவர் வெள்ளலூர்ச் சமயத்தாரான வெள்ளையத்தாதரே என்கிறார்.27
சமயத்தார் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் திரியெடுத்து வருவோர், தம் சமயத்தாரைச் சந்தித்து அவரிடம் ‘முத்திரை’ பெறுவர். சமயத்தார் கையாலோ, பூ இதழாலோ குங்குமத்தைத் தொட்டு நெற்றியில் திருமண் குறியிடுவார். இதற்குப் ‘பூ முத்திரை’ எனப் பெயர். அக்கினி முத்திரை, பெரிய முத்திரையென்றும், கட்டி முத்திரையென்றும் வழங்கப்பெறும். இது கோயிலில் மட்டும் நடைபெறும். சங்கு, சக்கர அச்சுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு, அடியவர் (தாசர்கள்) இரு தோளிலும் வைப்பர்; சுடப்பட்ட புண் ஆறிய பின்னும் சங்கு சக்கரத் தழும்புகள் அடியவர்கள் சாகும்வரை உடலில் மாறாது இருக்கும்.
- “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தேநின்
- கோயிற் பொறியாலே ஒற்றுண்டு”28
4. 13. தளபதிச் சமயத்தார் ஆட்சி எல்லை :
தளபதிகளான சமயத்தாரின் ஆட்சி எல்லைகள் கீழ்க்காணுமாறு வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புமுறை தற்போது (1979)சிதைந்த நிலையில் உள்ளது. ஆயினும் சமயத்தார்கள் தங்கள் ஆட்சிப் பரப்பினை ஓரளவு நினைவில் வைத்திருக்கின்றனர்.
மணலூர்ச் சமயம் (கள்ளரில் சேர்வை) : வண்டியூர்த் தெப்பக்குளத்திற்குக் கிழக்கு, திருப்புவனம் ஊற்றுக்கால் பாலத்திற்கு மேற்கு, வையையாற்றுக்குத் தெற்கு, ஆவியூர்-உப்பிலிக்குண்டுக்கு (அருப்புக் கோட்டையருகே) வடக்கு.
கட்டனூர்ச் சமயம் (கோனார்) : பார்த்திபனூருக்கு அருகிலுள்ள அன்னவாசல், மிளகனூருக்கு மேற்கு, திருப்புவனத்துக்குத் தெற்கிலுள்ள அச்சங்குளம், பையனூருக்குக் கிழக்கு, வீரசோழம், அத்திகுளம், நாலூருக்கு வடக்கு, வையையாற்றுக்குத் தெற்கு.
முடுவார்பட்டிச் சமயம் (அரிசன்) : திருப்பாலை, பிள்ளையார் நத்தம், புதுப்பட்டி, ஐயூர், எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, வலையப்பட்டி, விங்காவடி, பெத்தாம்பட்டி, மாலைப்பட்டி, வெளிச்சநத்தம், பரளி சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, காவனூர், கருவனூர், சோழனம் பட்டி, குளமங்கலம், வடுகபட்டி, தூதக்குடி, குமாரம், பளஞ்சி, அலங்காநல்லூர், கல்லணை, ஊர்சேரி, மேட்டுப்பட்டி, அம்பட்டபட்டி சேலார்பட்டி, பூலாம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்கள்
காரைச்சேரி சமயம் (அரிசன்) : வரிச்சியூர், பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், வேலூர், கனிமங்கலம், சக்கிமங்கலம், உடன் குண்டு, ஆண்டார்பட்டினம், கருப்பாயி ஊரணி, கோயில்குடி, எலமனூர், பொட்டப்பனையூர், புதூர், மயிலங்குண்டு ஆகிய சிற்றூர்கள் காரைச்சேரிச் சமயத்தார்க்குரியன.
சாம்பக்குளம் சமயம் (கோனார்) : வடக்கே வையையாறு, கிழக்கே முதுகுளத்தூர், கடுகுசந்தை, மேற்கே பார்த்திபனூர், தெற்கே ராமேசுவரம் இந்நான்கெல்லைக்குட்பட்ட ஊர்கள்.
4. 14. சமயத்தார் பெறும் மரியாதை :
சமயத்தார் அனைவரும் ஆடித்திருவிழாவில் கடைசி நாளன்று ஆண்டாரிடம் பரிவட்ட மரியாதை பெறும் உரிமையுடையவர் ஆவர். சமயத்தார் காலமானால் அவர் குடும்பத்தினர் ஆண்டாருக்குத் தகவல் தெரிவித்து, அவரிடமிருந்து பரிவட்டமும், தீர்த்தமும், ஒரு சிறு தொகையும் (பெரும்பாலும் ஒன்றேகால் ரூபாய்) மரியாதையாகப் பெறுகின்றனர் இறந்தவர்க்கு அப்பரிவட்டத்தைக் கட்டி தீர்த்தம் தெளிப்பது வழக்கம்.
கோயில் பரம்பரைப் பணியாளர் இதே மரியாதையினைக் கோயிலிடமிருந்து நேரடியாகப் பெறுவது-இங்கே குறிப்பிடத்தக்கது.
4. 15. தளபதிச் சமயத்தார் காணிக்கை :
தளபதிகளான சமயத்தார், அடியவர்கள் ஆண்டாருக்குச் செலுத்தும் காணிக்கையில் பங்குபெறுகின்றனர். திரியெடுத்தாடுவோர், மாடு கொண்டுவருவோர் ஆகியோர் திருமாளிகைக் (கோயிற்) காணிக்கை, ஆண்டார் காணிக்கை, சமயத்தார் காணிக்கை என மூன்று காணிக்கைகள் செலுத்துவர். பெரும்பாலும் ஒன்றேகால் ரூபாய்தான் காணிக்கை செலுத்துவர். ஆண்டாரிடம் ‘அக்கினி முத்திரை’ பெறும் அடியவர்கள் ஆண்டாருக்கும் தங்கள் பகுதியைச் சேர்ந்த சமயத்தாருக்கும் தனித்தனியாகக் காணிக்கை செலுத்துவர்.
4. 16. சமயத்தாருக்கு ஆண்டார் தந்த உரிமை :
வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை கோயிலுக்கு அப்பன் எருது, குடை எருது கொண்டுவருவோர், கோடாங்கி, றாமதாரிகள், தடிக்கம்பில் வெள்ளிப்பூண் கட்டி கொடுவாள் இடைக்கச்சையோடு கோயிலுக்குத் திரியெடுத்து வருவோர், கூத்தாடிகள், குரங்காட்டிகள் ஆகியோர்க்குத் திருமாலை ஆண்டார் வரி விதித்து அவற்றை வாங்கும் உரிமையை வெள்ளையத்தாதர்க்குத் தந்ததைக் குறிப்பிடுகின்றது.29 மேற்குறித்த வரி விதிப்புக்குட்பட்டோர்கள் இக்கோயிலுக்கு வழிபட வரும் அடியவர்கள் என்பது புரிகிறது. இவர்கள் தவிர அம்மன் கொண்டாடி (பெண்தெய்வச் சாமியாடுவோர்), அக்கினிச் சட்டியேந்துவோர் (இது இக்கோயிலில் இல்லாத வழி பாட்டுமுறை), பச்சை மோதிரம் போடுவோர் ஆகியோர்க்கும் ஆண்டார் வரி விதித்திருப்பது எந்த அளவு அதிகாரத்தின் (authority) பேரில் என்பது விளங்கவில்லை.தமிழகத்தின் வடமாவட்டங்களில் ‘பெருமாள்மாடு’ என வழங்கப்பெறும் மாடு, தென்மாவட்டங்களில் ‘அழகப்பன் காளை’ என வழங்கப்பெறும். இதனை வைத்துப் பிழைக்கும் தெலுங்கு பேசும் சாதியார் (இவர்களிற் சிலர் தங்களைத் ‘தாசரிகள்’ எனக் கூறுகின்றனர்). இக்கோயிலுக்கு அம்மாட்டைக் கொண்டு வருவது வழக்கம் இதையே பட்டய நகல் ஓலை ‘அப்பன் எருது’ எனக் குறிப்பிடுகிறது. குடை எருது என்பது முதுகில் தம்பட்டம் தொங்கவிடப்பட்டு, கிராமங்களிலிருந்து சித்திரைத் திருவிழாவில் இக்கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு, நீராட்டித் திரும்ப ஊருக்கு அழைத்துச் செல்லப்பெறும் எருதுகளைப் குறிப்பதாகும்.
4. 17. இன்றைய நிலை :
ஆண்டார்-சமயத்தார் அமைப்புமுறை இன்றைய நிலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது நினைக்கத்தகும் செய்தியாகும்.
இந்த அமைப்புமுறை இப்போது பெருமளவு சிதைந்துவிட்டது. 1977, 1978, 1979 ஆகிய மூன்றாண்டுகளிலும் கானூர், சாம்பக்குளம், முடுவார்பட்டி, மணலூர், கட்டனூர் ஆகிய ஐந்து தளபதிச் சமயத்தார்கள் மட்டுமே திருவிழாவிற்காக ஆண்டாரிடம் வந்திருந்தனர். மந்திரி, கொடிபிடிப்போர், கோமாளிகள் ஆகிய சமயத்தார்கள் இவ்வமைப்பிலிருந்து ஒதுங்கிவிட்டனர். திருப்புவனம், கலியாந்தூர், கப்பலூர், காரைச்சேரி, மேலமடை, எட்டிமங்கலம், சுந்தரராஜன்பட்டி, பிள்ளையார்பாளையம், வெள்ளலூர் (கூட்டுறவு பட்டி) ஆகிய சமயத்தார்களை ஆய்வாளர் அவர்களது ஊருக்குச் சென்றே காணமுடிந்தது; 1977இல் சித்திரைத் திருவிழாவிற்குச் சில நாட்களுக்கு முன்னர் 34-வது தலைமுறையினரான திருமாலை ஆண்டான் நிருவாகத்தார் இறந்துவிட்டார். அவ்வாண்டு அவர் பல்லக்கு ஏறும் மரியாதை உரிமையினையுடையவர். அவர் இறந்து விட்டதால் அவ்வாண்டு அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதுமுதல் திருமாலை ஆண்டான் வழியினர் வாரிசற்றுப் போயினர். 1978இல் சித்திரைத் திருவிழாவில் தோழப்பர் நிருவாகத்தார் பல்லக்குத் தூக்குவோருடன் எழுந்த தகராறினால் பல்லக்கில் வரவில்லை. 1979இல் பல்லக்கு ஏறுவது வாரிசற்றுப்போன திருமாலையாண்டார் முறையாகும். எனவே இவ்வாண்டும் அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. இப்போது உயிருடனுள்ள தோழப்பர் நிருவாகத்தாருக்கும் வாரிசில்லை.அடியவர்களும் சமயத்தார் தொடர்பை அறுத்துக்கொண்டு விட்டனர். சித்திரைத் திருவிழா நேரத்தில் ஆண்டாரிடம் நேரடியாக வந்து முத்திரை பெறுவதுடன் நின்றுவிடுகின்றனர். அவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. சித்திரைத் திருவிழா நேரத்தில் மட்டும் ஏறத்தாழ இரண்டு லட்சம் மக்கள் வருகை தரும் அழகர்கோயிலில், ஆண்டுக்கு முப்பது முதல் நாற்பது பேர்களே அக்கினி முத்திரை பெறுகின்றனர். “சமூக மாற்றங்கள், பொருளாதாரக் காரணங்களினால் கடந்த நாற்பதாண்டுகளில் இவ்வமைப்பு பெரிதும் உலைந்துவிட்டது”31 எனத் தோழப்பர் நிருவாகத்தாரான எழுபத்தைந்து வயதுள்ள அழகரையங்கார் கூறுகிறார்.
குறிப்புகள்
- 1. மா. இராசமாணிக்கனார், சைவசமய வளர்ச்சி, ப. 289.
- 2. தகவல்: ஆண்டார் (காலஞ்சென்ற) சந்தான கிருஷ்ணையங்கார், அழகர்கோயில், நாள்: 18. 1. 1977.
- 3. அழகர் கிள்ளைவிடு தூது, கண்ணிகள் 220-221.
- 4. ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் (ப. ஆ.). ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம், 1975, பக். 198-200.
- 5. பெரிய திருமுடியடைவு, ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம், ப. 571.
- 6. மேலது, பக். 576-577.
- 7. பாரதீய பூர்வசிக ஸ்ரீ வைஷ்ணவ சபையின் பொன்விழா மலர், ஸ்ரீரங்கம், 1978, ப. 295.
- 8. தொழில், சுதந்திர அட்டவணை (28.6.1803), 1937, பக். 2-3, பார்க்க : பிற்சேர்க்கை எண் III : 3.
- 9. உ. வே. எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் (ப. ஆ.), திருமாலையாண்டான் பரம்பரைத் தனியன்களும் வாழித்திருநாமங்களும், ஸ்ரீரங்கம். 1975.
- 10. பெரிய திருமுடியடைவு, மு. நூல், பக். 571-572.
- 11. திருமாலையாண்டான் பரம்பரைத் தனியன்களும் வாழித்திருநாமங்களும், ப. 2.
- 12. மேலது, ப. 2.
- 13. ஆறாயிரப்படி, மு.நூல், ப. 270.
- 14. தகவல்: தோழப்பர் அழகரையங்கார் அழகர்கோயில், நாள்: 18-1-1978 & 8-8-1979.
- 15. அழகர் கிள்ளைவிடு தூது, கண்ணி 222.
- 16. திரு. நாராயணையங்கார் (ப. ஆ.), அழகர் பின்னைத்தமிழ், மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு, ப. 3.
- 17. மேலது, முன்னுரை, ப. கக.
- 18. பார்க்க: ‘இலக்கியங்களில் அழகர்கோயில்’ இயல்
- 19. பெரிய திருமுடியடைவு, மு. நூல், ப. 589.
- 20. அழகர் பிள்ளைத்தமிழ், ப. கக.
- 21. அழகர் கிள்ளைவிடு தூது, கண்ணி 109.
- 22. கள ஆய்வில் பட்டய நகல் ஓலை, பார்க்க: பிற்சேர்க்கை எண் III : 5.
- 23. Dennis Hudson, “Siva, Minaksi, Visnu-Reflection on a popular myth in Madurai” South India Temples. Burton Stein (Ed), 1978. p. 114.
- 24. பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 2.
- 25. பட்டய நகல் ஓலை, பார்க்க: பிற்சேர்க்கை எண் III : 5 வரி 58.
- 26. தகவல் : தோழப்பர் அழகரையங்கார், அழகர்கோயில், நாள் : 18-1-1978.
- 27. தகவல்: வீரையாத்தேவர், வயது 73, புதுத்தாமரைப்பட்டி, ஒத்தக்கடை (அஞ்.), நாள் : 13-8-1977.
- 28. நாலாயிரத் திவ்வியபிரபந்தம், பாடல் 7.
- 29. பட்டய நகல் ஓலை, பார்க்க: பிற்சேர்க்கை எண் III : 5, வரிகள் 62-65.
- 30. மேலது, வரிகள் 62-63.
- 31. தகவல்: தோழப்பர் அழகரையங்கார், நாள்: 2- 8-1977.