அழகர் கோயில்/007
5. 1. கோயிலும் கள்ளரும்
5. 1. 0. அழகர்கோயில் இறைவன் ‘கள்ளழகர்’ என்ற பெயரிலேயே இன்று அழைக்கப்படுகிறார். ‘திருமலைநம்பிகள் என்னும் பணிப்பிரிவினரின் வசமுள்ள’ கி.பி. 1863ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓர் ஆலயத்தின் மூலம் கி.பி. 1815இல் இக்கோயில் ‘கள்ளழகர் கோயில்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகின்றது.1 இப்பெயர் வழக்குக் குறித்த முதல் ஆவணச்சான்று இதுவேயாகும்.
5. 1. 1. ‘கள்ளழகர்’ என்னும் பெயர் :
சென்னையில் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள ‘திருமாலிருஞ்சோலைமலை அழகர்மாலை’ என்னும் கையெழுத்துப்படி (manuscript) நூல், கள்ளக்குலத்தார் திருப்பணி வேண்டிய ‘கள்ளழகா’ என்றும், ‘கள்ளர்க்குரிய அழகப்பிரான்’ என்றும் இப்பெயரினையும், பெயருக்குரிய விளக்கத்தினையும் தருகிறது.2 இத்தலம் குறித்தெழுந்த பாசுரங்களிலும் பாசுர உரைகளிலும் பிற்காலத்தெழுந்த சிற்றிலக்கியங்களிலும் இப்பெயர் காணப்படவில்லை. ஆனால் நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் வர்ணிப்புப் பாடல்களில் இப்பெயர் காணப்படுகிறது.3
5. 1. 2. ‘கள்ளர் திருக்கோலம்’ :
இக்கோயில் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ், அழகர் மதுரைக்கு வருவதை “ஸ்ரீசுந்தரராஜன் ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருளுகிறார்” எனக் குறிப்பிடுகிறது.4 அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரலில் இத்திருக்கோலம், ‘கள்ளர் திருக்கோலம்’ என்று குறிப்பிடப்படுகிறது.
5. 1. 3. கள்ளர் திருக்கோலத் தோற்றம் :
ஒரு கையில் வளதடி எனப்படும் வளரித்தடி. மற்றொரு கையில் வளரித்தடியும் சாட்டைக்கம்பும், ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, தலையில் உருமால், காதுகளில் அடிப்புறத்தில் கல்வைத்துக்கட்டிய வளையம் போன்று கடுக்கன்-இவற்றோடு ‘காங்கு’ எனப்படும் ஒரு கறுப்புப்புடைவை கணுக்கால் தொடங்கி இடுப்புவரை அரையாடையாகவும், இடுப்புக்குமேல் மேலாடையாகவும் சுற்றப்பட்டிருக்கும் இதுவே கள்ளர் திருக்கோலத்தின் தோற்றமாகும் (படம் 7).
5. 1. 4. பிராமணப் பணியாளர் கருத்து :
இறைவன் இத்திருக்கோலம் பூணுவதற்குக் காரணமாக இக்கோயிற் பிராமணப் பணியாளர் ஒரு கருத்தினைக் கூறுகின்றனர். “நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை” என்று பெரியாழ்வாரும். “வஞ்சக்கள்வன் மாமாயன்” என்று நம்மாழ்வாரும் இத்தலத்து இறைவனைப் பாடியிருக்கின்றனர். அப்பாசுரங்களின் பொருட்டாகவே அழகர் கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்பது அவர்களின் கருத்தாகும்.5 இக்கருத்து பாசுரங்களுக்கு உயர்வு தரும் அவர்களது மனப்பண்பினைக் காட்டுகிறது. ஆனால் இவ்வேடத்தில் இறைவன் ஏந்தியுள்ள வளரி, சாட்டைக்கம்பு, அணிந்துள்ள கடுக்கன், இட்டுள்ள கொண்டை இவற்றுக்கான காரணங்களை அவர்களால் தரமுடியவில்லை இவ்வணிகளும், கருவிகளும் கள்ளர் வேடத்தில் பொருளற்றவையாக இருப்பதாக எண்ணமுடியாது. இவற்றுக்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். எனவே பிராமணப் பணியாளர் கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை. இக்குறிப்பிட்ட வேடத்திற்கு ஏதேனும் ஒரு பிற்புலம் இருத்தல் வேண்டும்.
5. 1. 5. ‘வளரி’ ஒரு விளக்கம் :
கள்ளர் திருக்கோலத்தில் அழகர் ஏந்தியுள்ள ‘வளரி’ குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு கருவியாகும். வளதடி எனப்படும் வளரித்தடியினை ஆங்கிலேயர் Vellari Thadi என்றும், Boomerang என்றும் குறிப்பிட்டுள்ளனர்.6
- 1. அடிக்கும் கருவிகளும் நசுக்கும் கருவிகளும் (கதை, பூமராங் முதலியன)
- 2. பிளக்கும் கருவிகளும் வெட்டும் கருவிகளும் (கோடரி, வாள், கத்தி முதலியன)
- 3. குத்தும் கருவிகள் (ஈட்டி, அம்பு முதலியன)
என மனிதன் முதன்முதலாகப் பயன்படுத்திய கருவிகளை மானிடவியலாளர் காலவாரியாக மூன்று வகைப்படுத்துகின்றனர். இவற்றுள் ‘பூமராங்’ எனப்படும் வளரி மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய கருவி இனத்தைச் சார்ந்ததாகும்.7 இவ்வளரியில், இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பவும் எய்தவரிடத்திலேயே வரும் ஒரு வகையினை அந்தமான் பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர். இராசபுதனத்தில் ‘பில்லர்’ எனப்படும் பழங்குடியினர் திரும்பிவரும் அமைப்பில்லாத வளரியினைப் பயன்படுத்துகின்றனர்.8
இப்பொழுது தமிழ்நாட்டில் வளரி பயன்படுத்தப்படவில்லை. மேல்நாட்டுக் கள்ளர் சாதியாரின் வீடுகளிலும் வளரி இப்போது காணக்கிடைக்கவில்லை. சிவகங்கை சரித்திர அம்மானை, பெரிய மருது வளரி வீசி மல்லாரிராவ் என்ற தளபதியினைக் கொன்றதனை
- “செய்வளரி தன்னைத் திருமால் முதலையின் மேல்
- பேசிவிட்ட சக்கரம்போல் பெரியமரு தேந்திரனிவன்
- வீசி யெறிய விலகாமல் மல்லராவு
- தலையை நிலைகுலையத் தானறுத்துத் தாங்காமல்
- வலுவாய் வடகரையின் வாய்க்காலில் போட்டதுவே”
எனக் குறிக்கிறது.9 தன்மபுத்திரன் என்பவர் எழுதிய ‘வாளெழுபது’ என்னும் நூலும் வளரியைக் குறிப்பதாக மீ. மனோகரன் குறிப்பிடுகிறார்.10இச்செய்திகள் வளரி எனும் கருவியின் தொன்மையைப் பற்றியதாகும்.
5. 1. 6. வர்ணிப்பும் கள்ளர் வழிமறிப்பு நிகழ்ச்சியும் :
அச்சிடப்பட்ட ‘அழகர் வர்ணிப்பு’ அழகரின் சித்திரைத் திருவிழா ஊர்வலத்தினை ஒரு காலத்தில் கள்ளர்கள் வழிமறித்த நிகழ்ச்சியினைச் சொல்கிறது. அழகர், மதுரை வரும் வழியில் கள்ளந்திரிதாண்டி வரும்போது.
- “கள்ளர் வழிமறித்து-காயாம்பு மேனியை
- கலகமிகச் செய்தார்கள்
- வள்ளலா ரப்போது-நீலமேகம்
- கள்ளர்களைத் தான்ஜெயிக்க
- மாயக் கணையெடுத்து-ஆதிமூலம்
- வரிவில்லில் தான்பூட்டி
- ஆயர் தொடுத்துவிட-நரசிங்கமூர்த்தி
- அப்போது கள்ளருக்கு
- கண்ணுதெரியாமலப்போ-என்செய்வோமென்று
- கள்ளர் மயங்கி நின்றார்
- புண்ணாகி நொந்து கள்ளர்-தாயாம்பூ மேனியிடம்
- புலம்பியே யெல்லாரும்
- வழிவழி வம்சமாய்-நீலமேகத்திற்கு
- வந்தடிமை செய்யுகிறோம்
- ஒளிவு தெரியும்படி-ஆதிமூலம்
- உம்மாலவிந்த கண்ணை
- திறக்கவேணுமென்று சொல்லி கள்ளர்
- மார்க்கமுடனே பணிந்தார்”11
நாட்டுப்புற மக்களிடம் வழங்கும் கதையும் இதே செய்தியைத்தான் மாறுதலின்றிச் சொல்கிறது.12
5. 1. 7. கள்ளர் வழிமறிப்புச் சடங்கு :
அழகர் வர்ணிப்பு கூறும் இந்நிகழ்ச்சிபோல, இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் ஒரு நிகழ்ச்சி சடங்காக நடத்தப்படுகிறது. மதுரையில் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்து அழகர் தன் கோயிலுக்குத் திரும்பும் வழியில் தல்லாகுளத்தில் (இன்றுள்ள மாநகராட்சிக் கட்டிடத்தின் மேற்குவாயில் எதிரில்) சாலையில் கள்ளர் சாதியினர் சிலர் பெருஞ்சத்தத்துடன் பல்லக்கை எதிர்கொண்டு மறித்து, பல்லக்கின் கொம்புகளை ‘வாழக்கலை’ என்னும் ஈட்டி போன்ற கருவியால் குத்திக்கொண்டு இரண்டு மூன்று முறை பல்லக்கினைச் சுற்றி வருகின்றனர். (படம் 8), இச்சடங்கு நிகழ்ச்சி ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
அழகர் வர்ணிப்பு கூறும் கள்ளர் வழிமறித்த நிகழ்ச்சியும், சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் கள்ளர் வழிமறிப்புச் சடங்கும், அழகரின் கள்ளர் வேடத்திற்கும் மதுரை மாவட்டத்தில் அதிகமாக வாழும் கள்ளர் எனப்படும் சாதியினர்க்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றன. எனவே கள்ளர் சாதியினர் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.
‘தேவர்’ என்னும் சாதிப்பட்டம் உடைய புறமலைக்கள்ளர் ‘அம்பலம்’ என்னும் பட்டமுடைய மேலூர்ப் ‘பகுதிக் கள்ளர்’ ‘சேர்வை’ என்னும் பட்டமுடைய சிவகங்கைக் கள்ளர், புதுக்கோட்டை மாவட்டத்துக் கள்ளர், தஞ்சை மாவட்டத்துக் கள்ளர், ஆகியோரே தமிழ்நாட்டில் ‘கள்ளர்’ சாதியின் பெரும்பிரிவினராவர். இவர்களில் எப்பிரிவினர் அழகர் கோயிலோடு தொடர்பு கொண்டவர்கள் எனக் கண்டறிய வேண்டும்.
தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கைப் பகுதிக் கள்ளர்களுக்கு இக்கோயிலோடு நடைமுறையில் தொடர்பில்லை. நில அமைப்பிலும் அவர்கள் வாழும் பகுதிகள் கோயிலுக்குத் தூரமாகவே அமைந்து விடுகின்றன.
அழகர்மலையை ஓட்டி அதன் தென்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் அம்பலம் எனும் பட்டமுடைய கள்ளரும், அழகர்மலைக்குச் சற்றே தள்ளி மேற்குப்பகுதியில் புறமலைக் கள்ளரும் வாழ்கின்றனர். இவ்விரண்டு பிரிவினரே கள்ளர் சாதியில் இக்கோயிலுக்கருகே வாழ்வோராவர். எனவே இவர்களில் ஒரு பிரிவினரே இக்கோயிலில், தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்க முடியும் எனக் கருதலாம். எனவே இவ்விரு பிரிவினரைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
5. 1. 9. மலைக்கள்ளரும் நாட்டுக்கள்ளரும் :
கள்ளர் எனப்படும் சாதியார் மதுரை மாவட்டத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதியிலும், மேற்கு, தென்மேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். மேற்கு, தென்மேற்குப் பகுதியில் (உசிலம்பட்டி வட்டம் முழுவதும், திருமங்கலம், மதுரை வட்டங்களின் ஒன்றிரு பகுதிகள்) வாழ்கின்றவர்கள் பிரமலை அல்லது பெறமலைக் கள்ளர் எனப்படுவர். குலதெய்வ அடிப்படையில் அமைந்த ஆறுநாட்டுப் பிரிவுகள் இவர்களிடத்துண்டு.
மதுரை மாவட்டத்தின் கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் (மேலூர் வட்டம் முழுவதும், மதுரை, திருப்பத்தூர், சிவகங்கை வட்டங்களின் ஒன்றிரு பகுதிகளில்) வாழ்வோர் நாட்டார்கள்ளர், நாட்டுக்கள்ளர், மேலூர்க்கள்ளர், மேல் நாட்டுக்கள்ளர் எனப் பெயர் பெறுவர்.
கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள, ‘கள்ளர் ஜாதி விளக்கம்’ என்னும் நூல் புறமலைக்கள்ளரைப் ‘பெறமலைக்கள்ளர்’ என்றும், மேலூர்க் கள்ளரை ‘மேலநாட்டுக்கள்ளர்’ என்றும் குறிக்கிறது.13 இரு பிரிவினரும் மணவுறவு கொள்வது கிடையாது. பெறமலைக்கள்ளர்க்குரிய சாதிப்பட்டம் ‘தேவர்’ என்பதாகும். மேலநாட்டுக் கள்ளர்க்குரிய சாதிப்பட்டம் ‘அம்பலம்’ என்பதாகும். மலைக்கள்ளர், நாட்டுக்கள்ளர் என்ற பெயர்களே இவ்விரு பிரிவினரும் முறையே மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள், சமவெளிப் (நாட்டுப்) பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற வேறுபாட்டை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன.
மேலநாட்டுக்கள்ளர்களின் வழிபாட்டில் கள்ளழகரும், அழகர்கோயில் பதினெட்டாம்படிக் கருப்பனும் பேரிடம் பெறுகின்றனர். பெறமலைக்கள்ளர்க்கு நாட்டுப் பிரிவுகளில் அமைந்த குலதெய்வங்கள் உண்டு. பரம்பரையாகப் பெறமலைக்கள்ளர் நாட்டுப் பகுதிகளிலிருந்து அழகர்கோயிலுக்கு வருவோர் மிகச்சிலரே. 1979ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் ஆய்வாளரால் தொடர்ச்சியாக 24 மணி நேரம் நடத்தப்பட்ட கணிப்பின்படி அழகர்கோயிலுக்கு வந்த 287 வண்டிகளில் பெறமலைக்கள்ளர் பெரும்பான்மையினராக வாழும் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கருமாத்துர், செக்கானூரணி ஆகிய ஊர்களிலிருந்து வண்டிகள் ஏதும் வரவில்லை. உசிலம்பட்டி வட்டத்தில் ‘மங்கல்ரேவ்’ என்ற ஊரிலிருந்து மட்டும் ஒரே ஒரு வண்டி வந்துள்ளது.14
மேலநாட்டுக் கள்ளரிடத்தும் நாட்டுப்பிரிவுகள் உண்டு. அவையனைத்தும் மேலூர் வட்டாரத்தைச் சுற்றியே அமைவதால் இவர்களை மேலூர்க்கள்ளர் எனவும் வழங்குவர். கிழக்கேயுள்ள சிவகங்கைப் பகுதியில் ‘சேர்வை’ எனும் சாதிப்பட்டமுடைய கள்ளர் வசிப்பதால் இவர்கள் ‘மேலநாட்டுக்கள்ளர்’ என அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவகங்கைக் கள்ளரோடும் இவர்கள் மணவுறவு கொள்வது இல்லை.
5. 1. 10. நாட்டுக்கள்ளர்- நிலப்பிரிவுகள்
‘அம்பலம்’ என்ற பட்டமுடைய மேலநாட்டுக் கள்ளர்க்குரிய நாடுகள் பன்னிரண்டு என்பர். ஆட்சியிலும், ஆவணங்களிலும் அவை வழக்கிழந்ததனால் மக்களிடத்தும் வழக்கிழந்து விட்டன. எனவே அவற்றின் பெயர்களையும் எல்லைகளையும் முழுவதுமாகவும் தெளிவாகவும் அறிய இயலவில்லை. சான்றாக, தகவலாளிகள் கூற்றின்படி பரப்பு நாடு வேறு; திருமோகூர் நாடு வேறு. திருவாதவூர் வட்டாரத்தையே அவர்கள் பரப்புநாடு என்கின்றனர்.15 ஆனால் ஒத்தக்கடையிலிருந்து ஒரு கல் தொலைவில் கொடிக்குளத்தில் வேளாண்மைப் பல்கலைக்கழக எல்லைச்சுவரை ஒட்டியுள்ள ஒரு திருவாழிக்கல் சாசனம் அப்பகுதியை “தென்பரப்பு நாட்டுத் திருமோகூர் நாட்டு”ப் பகுதியாகக் குறிக்கிறது16 வடபரப்புநாடு எது என அறியச் சான்றுகளில்லை.
அஞ்சூர்நாடு, இறவைசேரிநாடு, ஏரியூர்-மல்லாக்கோட்டை நாடு, சிறுகுடிநாடு, நடுவிநாடு, பத்துக்கெட்டுதாடு, பரப்புநாடு, வெள்ளலூர்நாடு இவையே இன்று அறியப்படும் நாடுகளின் பெயர்களாகும்.
இவை தவிர. ‘தெரு’ எனப் பெயர் கொண்ட வட்டாரங்களும் உள்ளன. தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேற்குத்தெரு ஆகிய மூன்று தெருப் பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் சிற்சில கிராமங்கள் அடங்கும். இம்மூன்றும் சேர்ந்ததே ‘மேலநாடு’ என்று ஒரு தகவலாளி கூறுகின்றார். கிழக்குத்தெரு என்று தனிப்பிரிவு ஏதும் இல்லை என்பதும் கருதத்தக்கது. தெற்குத்தெரு என்ற பிரிவில் அதே பெயரோடு ஓர் ஊர் உள்ளது. வடக்குத்தெரு, மேலத்தெரு ஆகியவற்றில் அவ்வாறில்லை.
இந்நாட்டுப் பிரிவுகள், தெருப்பிரிவுகள் அனைத்திற்கும் நடுவில் பெரிய ஊராக அமைவது மேலூர் ஆகும். எனவே மேலூரும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் ‘நடுவிநாடு’ என அழைக்கப்படுகின்றன. அஞ்சூர்நாடு சிவகங்கைக்கு மேற்கில் ஐந்து ஊர்களைக் கொண்டதெனத் தெரிகிறது. இறவைசேரி, வெள்ளலூர், சிறுகுடி, ஏரியூர்-மல்லாக்கோட்டை ஆகிய நாட்டுப் பெயர்கள் அவற்றிலுள்ள ஓர் ஊர்ப்பெயரையே நாட்டுப்பெயராகத் தாங்கியுள்ளன.
தெற்கே வையை நதியும், தென்மேற்கே வெள்ளியக்குன்றம் ஜமீனும் (பாளையப்பட்டு), மேற்கு வடக்காக அழகர்மலையும், வடகிழக்காக நத்தம் ஜமீனும் (பாளையப்பட்டு), கிழக்கே சிவகங்கை ஜமீனும் இந்நாட்டுப் பிரிவுகளின் எல்லைகளாகும். இறவைசேரிநாடு மட்டும் சற்றுக் கிழக்கே தள்ளி தேவகோட்டைக்கருகில் உள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்த எல்லையை அடுத்துள்ள ஊர்களை முதியோர்கள் இன்றளவும் “பாளையப்பட்டுக் கிராமங்கள்” என்றே அழைக்கின்றனர். எனவே இவ்வெல்லைக்குட்பட்ட நாடுகள் எந்தவொரு பாளையப்பட்டிலும் அடங்காதவையெனத் தெரிகின்றது.5. 1. 11. நாட்டுக்கள்ளரும் நாயக்கராட்சியும் :
நாயக்கராட்சிக்கு முன்னர், மேலநாட்டுக்கள்ளர் சமூகத்தினரைப் பற்றி அறியப் போதிய சான்றுகளில்லை. நாயக்கராட்சியின்போதும் அதற்குப் பின்னரும் மதுரையின் அரசியல் தலைமையை எதிர்த்து இவர்கள் கடுமையாகப் போராடியிருக்கிறார்கள்.
- “கள்ளர் வண்டார் மக்களையும்
- கருவறுக்கவே அடங்கான்”17
என்று தளபதி இராமப்பையனை இராமய்யன் அம்மானை வருணிக்கிறது. ‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாடல் அவனைக் “கள்ளரைக் கருவறுத்த தீரன்”18 எனப் பாராட்டுகிறது. மதுரையின் அரசியல் தலைமைக்குக் கள்ளர்கள் தலைவலியாக இருந்ததற்கு இவை சான்றுகளாகும்.
மதுரையின் அரசியல் தலைமையை எதிர்த்து, இந்நாட்டுக்கள்ளர் போராடியதற்கு ஒரு முக்கிய காரணம் தெரிகிறது. தங்கள் பகுதியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் கள்ளர்கள் ‘காவல்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதன்படி, ஒவ்வொரு கிராமத்தவரும் தங்கள் உடைமைகள் களவுபோகாமலிருக்கக் கள்ளரில் ஒருசிலரைக் காவலராக ஏற்கவேண்டும். அவர்களுக்கு அதற்காக வரிகூட இவர்கள் செலுத்தவேண்டும். கள்ளர் நாட்டுப் பகுதிகளைக் கடந்து செல்லும் பயணிகளிடமும் கட்டாயமாக வரி வசூலித்தனர்.
பிற்காலத்தில் ஐரோப்பியரிடம்கூட இவ்வாறு வசூல் செய்தனர் எனக் கூறும் இந்திய இம்பீரியல் கெசட்டியர் (Imperial Gazetter of India). ‘இது இந்நாட்டின் மிகப்பழைய போலீஸ் முறையில் மிச்சம்’ என்றும் குறிப்பிடுகிறது.19
மதுரையின் ஆட்சித் தலைமையை ஏற்று அதற்கு வரி செலுத்துவோர் அனைவரும் கள்ளர்க்கும் வரி செலுத்த உடன்படுவர் என்று கூறமுடியாது. உடன்பட்டு வரி செலுத்தாதவர் உடைமைகள் கள்ளராலேயே களவாடப்பெறும் அல்லது கொள்ளையிடப்பெறும். இதைத் தட்டிக்கேட்கும் பொறுப்பு மதுரையில் அரசியல் தலைமைக்கு உண்டல்லவா? எனவே மதுரை ஆட்சித் தலைமைக்கு இது ஒரு பெரும் பொறுப்பாக உருவெடுத்தது.இது குறித்து, இராமய்யன் அம்மானை மேலும் ஒரு செய்தியைத் தருகிறது. திருப்புவனத்திலே இருந்த இராமய்யனிடம்,
- “கள்ளர் உபத்திரமும் காவலனே யாற்றாமல்
- மாடுகன்று ஆடு வாய்த்தபணங் காசுமுதல்
- சீலைத்துணி மங்கிலியம் சேரப் பறிகொடுத்தோம்”20
என மக்கள் வந்து முறையிட, இராமய்யன் கள்ளர்களின் ஊரான சிறுகுடி சென்று நாடழித்துத் தீக்கொளுத்திக் கள்ளரையும் வெட்டிச் சிறைபிடிக்கிறான்.
நாயக்கராட்சியில், கள்ளர்கள் பாளையப்பட்டுப் பிரிவுகளுக்குள் அடங்க மறுத்தனர். தங்கள் மிகப் பழைய நாட்டுப்பிரிவுகளை அங்கீகரிக்கும்படி போராடினர். எனவேதான் சிறுகுடிக்கள்ளர் இராமய்யனைப் பற்றித் திருமலைநாயக்கரிடம் வந்து முறையிடும் போது அவர் இராமய்யனுக்கு, “கள்ளர் பத்து நாடென்று கனமாய் இருக்கட்டும்”21 என்று ஓலையனுப்புகின்றார். தங்கள் பகுதி பாளையப்பட்டுக்கு உட்படாத பகுதி என்பதைக் காட்டவே தங்கள் எல்லையை அடுத்த கிராமங்களைப் ‘பாளையப்பட்டுக் கிராமங்கள்’ என்று பேச்சுவழக்கில் முதியவர்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர்.
5. 1. 12. நாட்டுக்கள்ளரும் கள்ளர் திருக்கோலமும் :
கள்ளர் திருக்கோலத்தில் அழகர் எத்தியுள்ள ‘வளரி’ என்னும் பழமை வாய்ந்த கருவியோடு மேலநாட்டுக் கள்ளருடைய தொடர்பு பல சான்றுகளால் உறுதிப்படுகிறது.
“இந்தியாவிலேயே தமிழ்ப் பகுதியிலேதான்... 1883. மார்ச்சில் சிவகங்கைக்கு அண்மையில் இந்த ‘பூமராங்குகள்’ பயன்படுத்துவதை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்று புரூஸ்புட் (Brucefoote) குறிப்பிடுகிறார்.22
“வளரியை அனுப்பிப் பெண்ணை எடு” என்ற பொருளில் மேலநாட்டுக் கள்ளர்களிடையே ஒரு சொல்லடை வழங்கி வந்ததாக (1908) எட்கர் தாஸ்டன் குறிப்பிடுகிறார்.23
கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள ‘கள்ளர் ஜாதி விளக்கம்’ எனும் நூல், ‘மேலநாட்டுக் கள்ளருடைய சங்கதி’ என்ற தலைப்பில் “...அப்பால் மாப்பிள்ளையுடைய உடன் பிறந்தவன் பெண்வீட்டுக்குப் போய் பரிசங் கொடுத்து, ஒரு சீலையுங் கொடுத்து குதிரைமயிர் காணணி பெண்ணுக்குத் தாலி கட்டி வளைத்தடி மாற்றிக்கொண்டு பெண்ணையுங் கூட்டிக்கொண்டு உறவு முறையாருடனே வருகிறது” என்று திருமணச் சடங்குகளை விளக்குகிறது.24 திருமணத்தில் வளைத்தடி மாற்றிக்கொள்ளும் வழக்கம் சிவகங்கைக்கள்ளரிடத்தோ பெறமலைக்கள்ளரிடத்திலோ இருந்ததில்லை என்பது குறிக்கத்தகும் செய்தியாகும். மேலநாட்டுக் கள்ளரிடத்தும் திருமணத்நில் வளைத்தடி மாற்றிக்கொள்ளும் வழக்கம் இப்போது மறைந்துபோய்விட்டது. கள்ளர் திருக்கோலத்தில் அழகருக்கு இடப்படும் கொண்டையும் மேலநாட்டுக்கள்ளர் சாதியில் ஆண்கள் இடுகின்ற கொண்டையே. சாதாரணமாகப் பெண்கள் இடுகின்ற கொண்டையைப்போல் பிடரியின் கீழ்ப்பகுதியில் தொடங்கி தோளை நோக்கிச் சரிந்ததாக இல்லாமல் பிடரியின் நடுப்பகுதியில் இக்கொண்டை நேரானதாக அமைந்துள்ளது. இப்பிரிவினரில் மிக அரிதாக ஓரிரு முதியவர்கள் இப்பொழுதும் இவ்வகைக் கொண்டை இட்டிருக்கிறார்கள். நெல்சன் (Nelson) “கள்ளச்சாதியில் 15 வயது ஆன ஆண்மகன், தான் விரும்புமளவு முடி வளர்த்துக்கொள்ளலாம். சிறு பையன்களுக்கு இந்த உரிமை இல்லை” என்று குறிப்பிடுவது25 இப்பிரிவினரில் ஆண்கள் கொண்டை இடும் வழக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
கள்ளர் திருக்கோலத்தில் அழகருக்கு அணியப்பெறும் கடுக்கன் சற்றுப் பெரிய வளையமாக அடிப்புறத்தில் கல்வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. மேலநாட்டுக் கள்ளரின் ஆண்கள் மட்டுமே அணியும் இக்கடுக்கனுக்கு, ‘வண்டிக்கடுக்கன்’ என்று பெயர்.
மேற்குறித்த சான்றுகளால், அழகர் மேலநாட்டுக்கள்ளர் சாதியைச் சேர்ந்த ஆண்மகளைப் போலவே தோற்றம் புனைந்து வருவது உறுதிப்படுகிறது.
5. 1. 13 வழிமறித்த ஊரினர் :
நாட்டுக்கள்ளரிலும் அழகர் ஊர்வலத்தை மறித்தவர் எந்தப் பகுதியினைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படவேண்டிய செய்தியாகும்.
தல்லாகுளத்தில் இன்றளவும் பல்லக்கை மறித்து 'வாழக்கலை என்னும் ஆயுதத்தால் தாக்கும் நிகழ்ச்சியில் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவரே பங்குபெறுகின்றனர். பிற ஊர்க்காரர்களுக்கு அவ்வுரிமை இல்லை.
மாங்குளத்துக் கள்ளர்க்குக் கோயில் நடைமுறையில் இன்னுமொரு உரிமையும் உள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பரகாலன் என்னும் திருமங்கை மன்னன் ‘கள்ளர்’ சாதியைச் சேர்ந்தவர். திருமணக்கோலத்தில் மனிதனாய் வந்த திருமாலை வழிமறித்துக் கொள்ளையிட முனைந்தபோது திருமால் இவர்க்குத் திருவடிப்பேறு காட்டி அடியாராக்கினார். திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாரானார். ‘திருமங்கையாழ்வார் வேடுபறி’ என்னும் திருவிழா நிகழ்ச்சி பெரிய வைணவக் கோயில்களில் நடந்துவருகிறது. அழகர்கோயிலில் மார்கழி மாதத்தில் அந்திருவிழா நடத்தும் பொறுப்பு வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்கு இருந்ததை. “திருமங்கையாழ்வார் லீலைபாகம் நடப்பிவித்து” என்று திருமலை நாயக்கர் பட்டயம் குறிப்பிடுகிறது.25 இன்றளவும் அத்திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு அதற்கான கோயில் மரியாதைகளை மாங்குளத்துக் கள்ளர்களே பெறுகின்றனர். தொழில் சுதந்திர அட்டவணை மார்கழி மாதத்தில் திரு அத்யயன உற்சவத்தில் பங்குபெறும் கள்ளர்க்குரிய உரிமையினை “மாங்குளம் வகையறா கள்ளர் தோசை” எனக் குறிக்கிறது; சித்திரைத் திருவிழாவிலும் மாங்குளம் கிராமத்தார்க்குத் தோசை உரிமை உண்டு என்றும் குறிக்கிறது.27
மாங்குளம் கள்ளரில் பொன்னம்பலப் புவியன், ஆனைவெட்டி தேவன், ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும், வடக்குத்தெரு அஞ்சாங்கரை அம்பலம் என்ற பிரிவினரும் ஆக ஐந்து பிரிவினர் அழகர்கோயிலில் வேடுபறித் திருவிழாவில் பங்குகொள்வதற்கான பரிவட்ட மரியாதையினை மாறிமாறிப் பெற்று வருகின்றனர்.
தவிர, நாட்டுக்கள்ளரில் மாங்குளம் கிராமத்தாருக்கு மட்டும் கோயில் எல்லைக்குள் இரணியன் வாசலருகில் ஒரு பழைய மண்டபம் உரிமையாயுள்ளது. சித்திரைத் திருவிழாவில் இறைவனின் ஆடை, அணிகலப் பெட்டியினை மதுரைக்குத் தூக்கி வரும் உரிமையும் மாங்குளத்தாருக்கே உண்டு.
மேலும் சில ஆண்டுகட்கு முன்வரை மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் திருக்கண்கள் (மண்டபங்கள்) தோறும், நான்கணா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தாருக்கு இருந்திருக்கிறது.28இச்செய்திகள் அனைத்தும் அழகர்கோயிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ மூன்று கல் தொலைவிலுள்ள மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கள்ளர்களே அழகர்கோயில் இறைவன் ஊர்வலத்தை வழிமறித்துக் கொள்ளையிட முயன்றவர்கள் என்பதனை விளக்கும் சான்றுகளாக அமைகின்றன.
5. 1. 14. நாட்டுக்கள்ளர்-கோயில் நடைமுறைத் தொடர்பு :
அழகர்கோயில் தேரோட்டத்தில், தேர் இழுக்கும் பொறுப்பு நாட்டுக்கள்ளர் கிராமங்களுக்கு உண்டு. முதல் வடம் வெள்ளியக் குன்றம் ஐமீன் கிராமங்களுக்குரியது. பிற மூன்று வடங்களை இழுக்கும் பொறுப்பு முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு ஆகிய கிராமப் பிரிவுகளுக்குரியது. இத்தெருப்பிரிவுகள் நாட்டுக்கள்ளர்க்குரியது என்று முன்னர் கண்டோம். ஒவ்வொன்றும் சில ஊர்களை உள்ளடக்கிய இப்பிரிவுகளை, கோயில் அப்படியே ஏற்றுக்கொண்டு தேரிழுக்கும் பொறுப்பைத் தந்திருப்பதாகவே தெரிகிறது.
கள்ளரின் சமூக, பொருளாதார அமைப்பில் இக்கோயிலின் செல்வாக்குக்கு மேலும் ஒரு சான்றுண்டு. தேரிழுக்கும் முன்னர் இம்மூன்று பிரிவைச் சேர்ந்தவர்களும் தேருக்குமுன் ஒன்றுகூடிக் ‘கூட்டம்’ நடத்துகின்றனர். ‘நாட்டார் கூட்டம்’ எனப்படும் இக்கூட்டத்தில், தங்கள் ஊர்களுக்கிடையிலுள்ள தகராறுகளைப் பேசித் தீர்வு காண்கின்றனர். பின்னரே தேரோட்டம் தொடங்குகிறது.
இப்பொழுது பெரும்பாலும் இத்தகராறுகள் ஏதேனும் ஒரு பிரிவினருக்குள் அந்த ஆண்டுக்குக் கோயில் மரியாதையினைத் தங்களில் யார் பெறுவது என்பதாகவே இருக்கின்றன. அருகருகே உள்ள இரண்டு கிராமத்தார்களுக்குள் கண்மாய்களில் மீன்பிடிக்கும் அல்லது ஏலம் எடுக்கும் உரிமையும் அடிக்கடி சிக்கலுக்குப் பொருளாகிறது. வைகைக்கால் சீரமைப்புக்குப்பின் வயலுக்கு நீர் இறைக்கும் உரிமை தொடர்பான சிக்கல்கள் வருவதில்லை என முதியவர்கள் கூறுகின்றனர்.
1978 ஆம் ஆண்டு தேரோட்டத்திற்குக் குறித்த நன்னேரம் தவறியும், மேலத்தெருக்காரர்களுக்குள் கோயில் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தேர் புறப்படவில்லை.5. 1. 15. வரலாற்றில் சில ஊகங்கள் :
ராபர்ட் சுவெல் தொகுத்த தென்னிந்தியச் சாசனங்களில் ஒன்று அழகர்கோயிலில் (கி.பி. 1606இல்) கலி 4707 இல் நடந்த ஒரு பஞ்சாயத்தில் நாயக்கர், கவுண்டர் இவர்களோடு அம்பலக்காரரும் (நாட்டுக்கள்ளரின் சாதிப்பட்டம் இது) கலந்துகொண்டதாகக் குறிக்கிறது.29 இது உண்மையாயின் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னரே இக்கோயிலோடு கள்ளர் நல்லுறவு கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாகும். ஏனெனில் இது கோயில் ஊழியர்க்கிடையே எழுந்த ஒரு வழக்கைத் தீர்க்கும் பஞ்சாயத்தாகும். எனவே கோயிலோடு உறவுகொண்டிருந்தோரே இதில் கலந்து கொண்டிருக்க இயலும்.
ஆனால் இப்பட்டயம் கலி 4707 ஆம் வருடத்தை ‘ஆனந்த’ வருடம் எனக் குறிக்கிறது. இவையிரண்டும் பொருந்தி வரவில்லை. கலி 4707 ஆம் வருடம் ‘பராபவ’ அல்லது ‘பிங்கல’ வருடம் ஆக வேண்டும்; ‘ஆனந்த’ வருடம் ஆகாது. எனவே இப்பட்டயம் உண்மையானது எனக் கொள்ளுதற்கில்லை.
சகம் 1591 இல் (கி.பி. 1669இல்) வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்குத் திருமலை நாயக்கர் வழங்கிய செப்புப்பட்டயம், இக்கோயிலில் வேடர்கள் புகுந்து கொள்ளையிட்டதையும், ஜமீன்தார் அவர்களைப் பிடித்து வெட்டியதையும், அதற்காகத் திருமலை நாயக்கர் ஜமீன்தாருக்கு மானியம் வழங்கியதையும் குறிப்பிடுகிறது.30
இப்பட்டயம் குறிப்பிடும் வேடர், ‘வலையர்’ எனப்படும் சாதியினர் ஆவர். ‘மூப்பனார்’ என்ற சாதிப்பட்டத்தை உடையவர்களாய் அழகர்மலை அடிவாரக் கிராமங்களில் இச்சாதியினர் இன்றும் மிகுதியாக வாழ்கின்றனர். குளம் குட்டைகளிலும் வயல்களிலும் வலைகட்டி மீன், எலி இவற்றைப் பிடித்துண்ணும் இச்சாதியினர், இப்போது பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளளர். இவர்களின் சமூக மதிப்பு (Social status) அரிசனங்களைவிடச் சற்றே உயர்ந்ததாக உள்ளது.
வலையர்களைவிட எண்ணிக்கை வலிமையும் (numerical strength) போர்க்குணமும் உடைய மேலநாட்டுக்கள்ளர் பட்டயம் குறிப்பிடும் காலத்தில் கோயிலோடு உறவுகொண்டிருப்பின் வலையர்கள் கோயிலைக் கொள்ளையிடத் துணிந்திருக்கமாட்டார்கள். எனவே இக்காலத்திலும் (கி.பி. 1669) அழகரின் வழிவழி அடியாராகி நாட்டுக்கள்ளர் கோயிலோடு உறவுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே அழகரின் ஊர்வலத்தைக் கள்ளர் மறிந்த நிகழ்ச்சி இதற்குப் பின்னரே நடைபெற்றிருக்க வேண்டும்.
அழகர்மாலை, “கள்ளக்குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா” என விளித்தாலும் அத்தொடர்பு எவ்வாறு, யார் ஆட்சியில் ஏற்பட்டது என்பதை விளக்கவில்லை.
திருமலை நாயக்கர் காலத்திற்குமுன் அழகர் ஊர்வலம் சோழ வந்தானுக்கருகிலுள்ள தேனூர் சென்றது. அவரே மதுரையில் மாசியில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணத்தையும் தேர்த்திருவிழாவையும் சித்திரை மாதத்திற்கு மாற்றி, இரண்டு நாட்கள் கழித்து அழகர் ஊர்வலத்தை மதுரைக்கு வரச் செய்தார். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருமண விழாவை, அறுவடை முடியா நிலையில் வேளாண்மைப் பெருமக்கள் காண வரமுடியவில்லை என்பதும் இதற்குக் காரணம் என்பர்.31 சித்திரை மாதத்தில் மீனாட்சி திருக்கல்யாண ஊர்வலம், சித்திரை வீதியிலல்லாது மாசி வீதியில் வருவதும் இதற்கொரு சான்றாகும்.
அழகர் ஊர்வலம் தேனூர் சென்றதற்கும் ஒரு நடைமுறைச் சான்றுள்ளது. வையையாற்றின் நடுவில், வண்டியூரருகில் அழகர் மண்டூகமுனிவருக்கு முத்தி தரும் விழா நடைபெறும் மண்டபம் இன்றும் ‘தேனூர் மண்டபம்’ என்றே அழைக்கப்படுகிறது. தேனூரைச் சேர்ந்தவர்களே இன்றும் அங்கு கோயில் மரியாதை பெறுகின்றனர்.
‘மதுரை நதிவிழா நோக்கும் கருத்துடையாய்’ என்று அழகர்மாலை ஓரிடத்தில் விளிக்கிறது.32 எனவே அழகர் மதுரை வருவதைக் குறிக்கும் அழகர்மாலை, திருமலைநாயக்கர் காலத்திற்குப் பின்னரே எழுந்திருக்க வேண்டும். இந்நூலின் காலத்தை அறுதியிட வேறு அகப்புறச் சான்றுகள் இல்லை. நூலாசிரியர் பெயரும் தெரியவில்லை. எனவே அழகர் ஊர்வல மறிப்பு எக்காலத்தில் நடந்ததென இந்நூலைக்கொண்டு அறுதியிட இயலவில்லை.
5. 1. 16. கள்ளர் வழிமறித்த காலம் :
கி. பி 1803 இல் எழுதப்பட்ட தொழில் சுதந்திர அட்டவணை கோயிலில் கள்ளர்க்குரிய மரியாதையினைக் குறிப்பிடுவதால், அதற்கு முன்னரே கள்ளர் அழகரின் ஊர்வலத்தை மறித்த நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும்.
கி. பி. 1775இல் திருமோகூர் காளமேகப் பெருமாள்கோயில் விக்கிரகங்களை ஆற்காட்டு நவாபின் படைகளும் ஆங்கிலேயப் படைகளும் கொள்ளையிட்டுக் கொண்டு போய்விட்டன. மீண்டும் அப்படைகள் திரும்ப வடக்கு நோக்கில் செல்லும்போது “திருமோகூர் விக்கிரகங்களை ஒட்டகையின் பேரில் போட்டுக்கொண்டு போகிறபோது அழகர்கோயிற் பாதையில் நாட்டுக்கள்ளர் வந்து விழுந்து விக்கிரகங்களைக் கைவசப்படுத்திக் கொண்டு கோயிலிலே கொண்டு வந்து சேர்த்தார்கள்” என்று மதுரைத் தலவரலாறு கூறுகிறது.33
இதன் பயனாகத் திருமோகூரில் தேரிழுக்கும் உரிமை கள்ளர்களின் ஆறு பிரிவுக் கிராமத்தார்க்கு வழங்கப்பட்டது. அவை, 1. திருமோகூர், 2. பூலாம்பட்டி, 3. கொடிக்குளம், 4. சிட்டம்பட்டி, 5. வவ்வாத்தோட்டம், 6. ஆளில்லாக்கரை ஆகியவையாகும். முதல் ஐந்து கரையாரும் ஆறாவது கரைக்குரிய மரியாதையை ஆளுக்கொரு ஆண்டாகப் பகிர்ந்துகொள்வர். தவிரவும் ஆண்டுதோறும் கஜேந்திர மோட்சம் திருவிழாவுக்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலுக்குக் திருமோகூர்ப் பொருமாள் வரும்போது விக்கிரகங்களைக் கள்ளர் மீட்ட செயலுக்காகக் கள்ளர் வேடம் (அழகர் கோயில் போல) புனைந்து வருவர். விக்கிரகங்களை மீட்டுத் தந்ததற்கான மரியாதை இது.
அழகர்கோயில், திருமோகூர் ஆகிய இரண்டு கோயில்களிலும் திருமால் ‘கள்ளர்’ வேடமிட்டு வந்தாலும், அழகர்கோயிலே கள்ளர் சமூகத்தில் பேரிடமும் மதிப்பும் பெறுவதனால், அழகர்கோயில் கள்ளர் வேடமே காலத்தால் முந்தியதாயிருந்தல் வேண்டும். அழகர் கோயில் கள்ளர் வேடத்தைக் கண்ட பின்னரே திருமோகூரிலும் அவ்வித மரியாதையினை நாட்டுக்கள்ளர் பெற்றிருக்கவேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
வெள்ளையர்களிடமிருந்து விக்கிரகங்களை நாட்டுக்கள்ளர் மீட்டது கி.பி. 1755 சூன் மாதத்தில் என ஆங்கிலேயர் ஆவணக் குறிப்புக்கள் கூறுகின்றன.34 எனவே திருமலைநாயக்கர் காலத்திற்குப் பின்னரும் (கி.பி. 1623-1659). கி.பி. 1755க்கு முன்னரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அழகரின் ஊர்வலத்தைக் கள்ளர் மறித்திருக்கலாம்.நாயக்கராட்சிக் காலத்தில் சமயம் பரப்ப வந்த கிறித்துவப் பாதிரியான மார்ட்டின் அடிகளார் கி. பி. 1700இல் எழுதிய கடிதமொன்றில், முந்திய இரண்டாண்டுகளில் மதுரையின் அரசுரிமை தனக்கே எனக் கிளம்பிய ஓர் இளவரசனுடன் கள்ளர்கள் சேர்ந்து கொண்டு மதுரைக் கோட்டையினையும் நகரத்தினையும் பிடித்துக் கொண்டதனையும், மிக விரைவில் அதனை இழத்து விட்டதனையும் குறிப்பிடுகிறார்.35
அவரே கி.பி. 1709இல் எழுதிய மற்றொரு கடிதத்தில் முந்திய ஐந்தாறு ஆண்டுகளில் மதுரையிலிருந்த இளவரசன் கள்ளர்களை அடக்கப் பெருமுயற்சி செய்ததனையும் அவர்களை அடக்க அவன் கட்டிய ஒரு கோட்டையினை அவர்கள் வெற்றி கொண்டதனையும் குறிப்பிடுகிறார்.36
கி. பி. 1692 முதல் 1706 வரை இராணிமங்கம்மாளும், கி.பி. 1706 முதல் கி.பி. 1732 வரை விசயரங்க சொக்கநாதனும் மதுரை நாயக்கராட்சிக்குத் தலைமை ஏற்றிருந்தனர். மார்ட்டின் அடிகளாரின் முதல் கடிதம் மங்கம்மாளின் ஆட்சியிலும், இரண்டாம் கடிதம் விசயரங்க சொக்கநாதனின் ஆட்சிக் காலத்திலும் எழுதப்பட்டவை.
நாயக்கராட்சிக் காலத்தில் கள்ளர்களைப் போராடி வென்ற மதுரை வீரன் என்னும் வீரனின் கதையினைப் பாடும் ‘மதுரை வீர சுவாமி கதை’ மார்ட்டின் அடிகளாருடைய கடிதச் செய்திகளை உறுதிப்படுத்தும் சில செய்திகளைத் தருகிறது. இந்நூலின் கடவுள் வணக்கப் பாடல் மதுரை வீரன்,
- “நிறைபுகழ் பெரும் விஜயரெங்கனெனு மன்னனது
- நீள்வாயில் காவல் செய்து”37
வந்தவன் எனக் குறிப்பிடுவதிலிருந்து மதுரை வீரன் கள்ளர்களோடு போரிட்டது இவனது ஆட்சிக் காலத்தில்தான் என அறியலாம். தன் ஆட்சியில் விசயரெங்கச் சொக்கநாதன், தலை நகரை மதுரையை விட்டுத் திருச்சிக்கு மாற்றினான். திருச்சியிலிருந்து விசயரெங்க சொக்கநாதனுக்கு மதுரையிலிருந்து.
- “தன்னரசு நாட்டுத் தனிக்காட்டுக் கள்ளரெல்லாம்
- காட்டிலுலுள்ள கள்ளரெல்லாம் நலமாகக் கூட்டமிட்டு
- அழகர் தன் கோயிலுக்கு வியாறொருவர் போனாலும்
- கண்ட விடமெல்லாங் கள்ளருபத் திரத்தால்
- உழவு நடவுமில்லை உபத்திரந் தன்னாலே
- கொல்லரி முடிப்புக் கொடுக்கப் பயமாச்சு
- இப்படியாகக் கள்ள ரிடக்குகள் செய்கிறார்கள்”38
என்ற செய்தி செல்கிறது. அங்கிருந்து விசயரெங்க சொக்கநாதன் கள்ளர்களை அடக்க மதுரைவீரனை அனுப்புகிறான். மதுரை வந்து சேர்ந்த மதுரைவீரன் ஒருநாள் கோயிலுக்குப் போய்த் திரும்பும் போது கள்ளர்களெல்லாம்.
- “கூட்டமிட்டு வளைதடியைக் கொண்டு புறப்பட்டு
- மதுரை கடைவீதிவந்து நுழைந்து கொண்டு
- காசுபணம் நாணயத்தைக் கனக்கவே கொள்ளையிட
- பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளெல்லோரும்
- கோவென்ற சத்தங் கூச்சலும் தானுமிட”39
மதுரைவீரன் அவ்விடத்திற்கு விரைந்துவந்து கள்ளர்களோடு போரிட்டு, “கள்ளர்பற்று நாட்டையெல்லாங் களையாய்ப் பறக்க விட்டு”40 வெற்றியுடன் திரும்புகிறான். ‘விசயரங்க சொக்கநாதனின் ஆட்சிக் காலம், நாட்டில் தொல்லைகள் மிகுந்து, நாடு அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்த காலம்’ என்பர் சத்தியநாதையர்.41
மார்ட்டின் அடிகளாரின் கடிதங்களிலிருந்தும், மதுரைவீர சுவாமி கதையிலிருந்தும் நாம் காணும் முடிவு இதுதான்: மதுரைப் பட்டணத்தில் உள்நுழைந்து தாக்குமளவும், அழகர்கோயிற் பகுதியில் உழவுத்தொழில் நடக்க முடியாதபடி தொல்லை தருமளவும் கள்ளர்கள் விசயரெங்க சொக்கநாதன் காலத்தில் வலிமை பெற்றிருந்தனர். எனவே இவனது ஆட்சிக் காலத்தில்தான் அழகர் ஊர்வலத்தைக் கள்ளல் மறித்த நிகழ்ச்சியும், அவர்கட்கு ‘இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை’ தருவதற்குக் கோயில் உடன்பட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றிருந்தல் வேண்டும் எனக் கொள்ளலாம்.
5. 1. 17. கள்ளரும் வைணவமும் :
அழகர்கோயில் ஆண்டாரின் சமயத்தார் பதினெண்மரில் சிவகங்கை வட்டம் கூட்டுறவுபட்டி வெள்ளையத்தாதர் நாட்டுக்கள்ளர் சாதியினர் ஆவார். கள்ளருக்கும் கோயிலுக்கும் இவ்வளவு நெருங்கிய தொடர்பிருந்தும் இச்சாதியினரில் ஒருவர் மட்டுமே சமயத்தாராக இருப்பது சிந்திப்பதற்குரியது.
1979 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் வேடமிட்டு வழிபடும் அடியவரிடத்தில் ஆய்வாளர் நடத்திய கள ஆய்வில், இச்சாதியினர் ஒரு விழுக்காடே வேடமிட்டு வழிபடுகின்றனர் என்ற முடிவே கிடைத்தது.42 எனவே அழகர்கோயில் இறைவனை வழிபட்டாலும், முத்திரைபெற்ற வைணவ அடியாராகி வைணவ சமய எல்லைக்குள் புகுவதில் இச்சாதியினர் நாட்டம் கொள்ளவில்லை எனத்தெரிகிறது. மக்கட் பெயர் வழக்கிலும், இச்சாதியினரிடத்தில் பெரியகருப்பன், சின்னக்கருப்பன், நல்லகருப்பன் முதலிய பெயர்களே பெருவழக்காக இருப்பதனையும் ஆய்வாளர் கள ஆய்வில் காண முடிந்தது.
எனவே அழகர்கோயிலில் திருமாலைவிடவும், பதினெட்டாம் படிக் கருப்பசாமியே இவர்களின் வழிபாட்டுக்குப் பெரிதும் உரியவராக விளங்குகின்றார் என்று கருத இயலுகிறது. ‘கள்ளர்களின் குலதெய்வம் கருப்பசாமி’ என்று டென்னிஸ் அட்சனும்,43 கள்ளர் நாட்டிலேயே கருப்பசாமி பெரிதும் வழிபடப்பெறுகிறார் என்று ராதாகிருஷ்ணனும்44 குறிப்பிடுவது ஏற்புடைய கருத்தாகவே தோன்றுகிறது.
குறிப்புகள்
- 1. Copy of the Register of Inams, issued by the Madurai Collectorate, dated 13.2.1864, Column No. 21.
- 2. திருமாலிருஞ்சோலைமலை அழகர்மாலை, கையெழுத்துப்படி, R 8551, கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை, பாடல்கள் 47 & 12.
- 3. ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, ராம. குருசாமிக்கோனார் வெளியீடு. ப. 19: சாமிக்கண்ணுக்கோனார், தசாவதார வர்ணிப்பு, ப. 1.
- 4. அழகர்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ், 1977, ப. 1.
- 5. இராகவையங்கார், சீனிவாசையங்கார்- அழகர்கோயிற் பணியாளர், நாள் : 10-6-1977.
- 6. மீ. மனோகரன், ‘வளரி’, சிவகங்கை மன்னர் கல்லூரி வெள்ளி விழா மலர், 1773, ப. 84.
- 7. Minendra Nath Basu & Malay Nath Basu, A Study on Material Culture, pp. 4-5.
- 8. Ibid., p. 16.
- 9. தி.சந்திரசேகரன் (ப. ஆ.), சிவகங்கை சரித்திரக் கும்மியும் அம்மானையும், ப. 148.
- 10. மீ. மனோகரன், ‘வளரி’, மு. நூல், ப. 84.
- 11. அழகர் வர்ணிப்பு, ஸ்ரீமகள் கம்பெனி பதிப்பு, பதிப்பு ஆண்டு இல்லை, பக். 6-7.
- 12. அழகுமலை, மாடக்கொட்டான், நாள் : 11-5-‘79.
- 13. கள்ளர் ஜாதி விளக்கம், R 370b, கையெழுத்துப்படி, கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.
- 14. பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 2.
- 15. தகவல் தந்தவர் : வீரப்பன் அம்பலம், மாங்குளம், நாள்: 28-6-‘78. கள்ளர்நாடு, சமூகம் பற்றிய பிற தகவல்கள் தந்துதவியவர்கள் பா. அ. மலையாண்டி அம்பலம், கொடிக்குளம், நாள் : 29-6-‘78: நல்லகருப்பன் அம்பலம், வெள்ளரிப்பட்டி, நாள் : 20-7-‘78.
- 16. ஆய்வாளர் இக்கல்வெட்டை நேரில் கண்டு வாசித்த நாள்: 29.6.78
- 17. இராமச்சந்திரன் (ப. ஆ.), இராமய்யன் அம்மானை, 1950, ப. 41.
- 18. நா. வானமாமலை (ப. ஆ.), இராமய்யன் அம்மானை, 1972, ப. 17.
- 19. “The kallans, the most criminal caste, exact for example, what amounts to blackmail from all classes, even from Europeans, by ensuring that those households which employ a watchman belonging this community shall be exempt from thefts, but that those which do not shall suffer proportionately. This practice is the relic of the old native police system”.
- —Imperial Gazetteer of India, Provincial series- Madras II, Calcutta, 1908, pp. 184-185.
- 20. இராமய்யன் அம்மானை, ப. 41.
- 21. மேலது.
- 22. R. Bruce foote, quoted by Edgar Thurston, Ethnographic Notes in Southern India, p. 558.
- 23. Ibid., p. 559.
- 24. கள்ளர் ஜாதி விளக்கம், R 370 b கையெழுத்துப்படி, கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.
- 25. J. H. Nelson, Manual of Madurai, part II, p. 55, Quoted by Rev. M.A. Sherring. Hindu Tribes and Castes, Vol. III, p. 114
- 26. வெள்ளியக்குன்றம் ஜமீன்தார் வசமுள்ள, பதிவு செய்யப்பெறாத செப்புப் பட்டயம், ஆய்வாளர் கள ஆய்வில், நேரில் கண்டது. நாள்: 9-8-1977. பார்க்க: பிற்சேர்க்கை எண் III : 2.
- 27. தொழில் சுதந்திர அட்டவணை, ப. 14.
- 28. தகவல் தந்தவர்: பெரிய மஞ்சாக்கவுண்டர், ஆனந்தூர்ப்பட்டி, நாள்: 18-7-1977.
- 29. Robert Sewell (Ed.), List of Historical Inscriptions of South India, No. 26A.
- 30. பார்க்க: பிற்சேர்க்கை எண் III : 2.
- 31. சந்திரசேகரபட்டர், ‘மதுரைத் திருவிழாக்கள்’, The Madurai Temple Complex Kumbabhishega Souvenir, 1974. p. 108.
- 32. அழகர்மாலை, R 8551, கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை, பாடல் 7.
- 33. பாண்டித்துரைத்தேவர் (ப. ஆ.), திருவாலவாயுடையார் திருப்
- பணி மாலையும் மதுரைத் தலவரலாறும், ப. 8.
- 34. Military Consultations, Madras, 19th June 1755, Vol. 4. 1912, pp. 206-207.
- 35. “This Caste of Thieves became so powerful within these few years...... not above two years since the caste in question, joining with a prince pretented a right to that crown, beseiged the city of Madura, for merely the capital of this kingdom, and taking it, kept it in their possession; however they did not enjoy it long, they being less able to defend a city in form, than to make a sudden attack”.
- -Fr. Peter Martin's letter to Fr. Le Gobien, dated 11, Dec. 1700, quoted by Sathyanatha Iyer, History of the Nayaks of Madurai, Appendix B, p. 305.
- 36. “These robbers are absolute masters of this whole country and pay no kind of tribute or tax to the prince... About five or six years since, he marched out all his troops to oppose them, and advanced so far as their forests; when making a great havoc of these rebels he built a fortress, in which he left a strong garrison to curb them. However, they soon shook of his yoke; for assembling together about a year after the expedition in question, they took the fortress by surprise, razed it, put all the garrison to the sword and possessed themselves of whole country. From that time they have been the terror of the whole district”.
- -Fr. peter Martin's letter to Fr. De Villete, dated 8, Nov, 1709, Quoted by Ibid., p. 323.
- 37. மதுரைவீரசுவாமி கதை, பி. நா. சிதம்பர முதலியார் வெளியீடு, ப. 3.
- 38. மேலது, ப. 49.
- 39. மேலது, பக். 57-58.
- 40. மேலது, ப. 59.
- 41. R. Sathyanatha Iyear, op. cit., p. 223.
- 42. பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 2.
- 43. Dennis Hudson, “Siva, Minaksi. Visnu—Reflcions on a popular Myth in Madurai”, South Indian Temples, Burton Stein (Ed.), p. 112.
- 44. K. N. Radhakrishna, Thirumalirunjolaimalai (Alagarkoil) Sthalapurana, Part I. p. 211.