உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்/008

விக்கிமூலம் இலிருந்து


5. 2. கோயிலும் இடையரும்

5. 2. 0 அழகர்கோயில் இறைவனை வழிபடும் அடியவரில் இடையர் சாதியினரைப் பெருந்தொகையினராகக் காணலாம். ஆய்வாளர் சித்திரைத் திருவிழாவில் நடத்திய கள ஆய்வில், வேடமிட்டு வழிபடும் அடியவரில் முப்பத்துமூன்று விழுக்காட்டினர்(33%) இடையர் சாதியினராக இருப்பதை அறியமுடிந்தது.1 அழகரின் சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில் கலந்துகொள்வோரில் இச்சாதியினர் மிகுதியும் இருப்பதை டென்னிஸ் அட்சனும் குறிப்பிடுகிறார்.2 அழகர் கோயிலோடு இச்சாதியினர் கொண்டுள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

5. 2. 1. இடையர்கள் :

“வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசைநட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்”3

எனக் கலித்தொகைப் பாடல் ஒன்று பாண்டியரோடு தோன்றியதாக இச்சாதியினரின் தொன்மையைக் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் காணப்பெறும் கோவலர், இடையர், அண்டர் என்ற மூன்று சொற்களும் ஆயர்களில் மூன்று பிரிவினரைக் குறித்திருத்தல் வேண்டுமென மாணிக்கவாசகம் பிள்ளை கருதுகிறார்.4 பத்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தில் கால்நடை வளர்க்கும் தொழிலை மேற்கொண்ட எல்லாச் சாதியினரும் இடையர் என்ற பிரிவிலடங்கியதாகச் சீனிவாச ஐயங்கார் கூறுகிறார்.5 ஆயினும் அவர் தம் கருத்துக்குச் சான்றுகளேதும் தரவில்லை.

5. 2. 2. இடையர்கள் அனைவரும் வைணவரா? :

தொல்காப்பியம் முல்லைநில மக்களாகிய ஆயர்களின் தெய்வமாகத் திருமாலைக் குறிக்கிறது.6 திருப்பாவையில் கண்ணனை அடைய நோன்பு நோற்கும் ஆண்டாள், தன்னை ஓர் இடைச்சிறுமியாகக் கற்பனை செய்துகொள்கிறாள்.7 இவை போன்ற செய்திகள் தமிழகத்தில், “இடையர்களனைவரும் வைணவர்களே” என்பது போன்ற ஒரு கருத்தினை உருவாக்குகின்றன. இக்கருத்தினை அப்படியே ஏற்கவியலாது.

5. 2. 3. கோயில்களும் இடையரும் :

கோயில்கள் கற்றளிகளாகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் எழுந்தபோது கோயில்களோடு இச்சாதியினர் தொடர்பு மிகநெருக்கமாயிற்று. கோயில்களில் நந்தா விளக்கிற்கு நெய்வழங்கி, விளக்கேற்ற விரும்புவோர் தரும் ஆடுமாடுகள் இச்சாதியாரிடமே ஒப்படைக்கப்பட்டன. பாண்டியர் கல்வெட்டுக்களில் இப்பணியினர் ‘வெட்டிக்குடி’ என்று அழைக்கப்பெறுகின்றனர்.8 சைவ, வைணவ வேறுபாடின்றி எல்லாக் கோயில்களிலும் இவர்கள் இப்பணியினைச் செய்துள்ளனர்.

தஞ்சைப் பெருவுடையார்கோயில் கல்வெட்டுக்களில் முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வாறு நெய்வழங்க ஒப்புக்கொண்டு ஆடுமாடுகளைப் பெற்ற நூற்றுக்கணக்கான இடையர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர்களில் வைணவப் பெயர்கள் மட்டுமின்றிப் பனையன் வெண்காடன், முனையன் ஆரூர், நீலகண்டன் நரியன் எனச் சைவப் பெயர்களும் காணப்படுவதால்,9 இச்சாதியினர் வைணவராக மட்டுமே தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் எனக் கொள்வதற்கில்லை. சிலப்பதிகாரத்தில் திருமாலை எண்ணிக் குரவையாடுகின்ற மாதரி,

“புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்து”10

வரும் செய்தியையும் இளங்கோ அடிகள் காட்டுவதால் இடையர்கள் பெருந்தெய்வங்களோடு சிறுதெய்வங்களையும் வணங்கிய செய்தியை அறியலாம்.

5. 2. 4. இடையரும் வைணவமும் :

“இடையர்கள் வைணவர்கள். அவர்களில் நாகரிகமுடயை சிலர் வைணவப் பிராமணரைப் போல முத்திரை (branding) பெறுகின்றனர்” என்று தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.11 தமிழ்நாட்டு வைணவத் தலங்களில் பெரும்பாலானவற்றில் இவர்கள் ஈடுபாடு கொள்வதைக் காணலாம். தஞ்சை மாவட்டத்தில் தேரெழுந்தூரிலுள்ள பெருமாள் கோயிலில் இறைவனுக்கு ‘ஆ மருவியப்பன்’ என்றே பெயர் வழங்குகிறது.

ஆய்குல மன்னன் கோ கருதந்தடக்கனின் பார்த்திவ சேகரபுரச் செப்பேட்டின் மூலம், அம்மன்னன் ஒரு ஸ்ரீ கோயில் எடுத்து விஷ்ணு பட்டாரகரை ப்ரதிஷ்டை செய்து பார்த்திவ சேகரபுரம் என்று பேர் இட்ட செய்தியை அறிகிறோம். இச்செப்பேட்டின் காலம் சற்றேறக் குறைய கி. பி. 856 ஆகலாமென நடன. காசிநாதனும் கு. தாமோதரனும் கருதுகின்றனர்.12

திருவரங்கம் கோயிலில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஓதுவதற்கு, கோட்டூர் வீரசோழ முனையதரையனான ஆயர் கொழுந்து சக்ரபாணி என்பவன் 50 கழஞ்சு பொன் கொடுத்ததைக் கி.பி. 1085 இல் எழுந்த ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.13 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டொன்றில் “இடையன் முத்தழி திருமாலிருஞ்சோலை” என்ற பெயர் காணப்படுவதால்,14 திருமாலிருஞ்சோலை இறைவனையும் இச்சாதியினர் தொன்றுதொட்டு வழிபட்டுவந்த செய்தியை அறியலாம்.

5. 2. 5. ஆண்டாரின் சமயத்தாரில் இடையர்கள் :

அழகர்கோயிலில் ஆண்டார்க்குரிய சமயத்தார்களில் சாம்பக்குளம் நல்லான் தாதன் சமயம். கட்டனூர்ச் சயம், மேலமடைச் சமயம், பிள்ளையார்பாளையம் சமயம் ஆகியோர் சாதியில் இடையராவர். சாம்பக்குளம் பரமக்குடிக்குத் தெற்கே ஐந்து கல் தொலைவிலும், கட்டனூர் திருப்பாச்சேத்திக்குத் தெற்கே ஏழு கல் தொலைவிலும் உள்ளன. மேலமடையும் பிள்ளையர்பாளையமும் முறையே மதுரைக்குக் கிழக்கில் ஒரு கல் தொலைவிலும், தெற்கே இரு கல் தொலைவிலும் உள்ளன.

சமயத்தார்களில் சாம்பக்குளம் நல்லான் தாதனுக்குக் கிழக்கே இராமேசுவரம் வரையிலும், மேற்கே பார்த்திபனூர் வரையிலும், தெற்கே முதுகுளத்தார், கடுகு சந்தை வரையிலும், வடக்கே வைகையாற்று வரையிலும் சமய ஆட்சி உண்டு.

இவருடைய சமய ஆட்சி எல்லையில் 2700 சாட்டையும், 172 கொண்டியும், 270 தப்புக்காரரும் உட்படுவர். ஒரு சாட்டை என்பது ஒரு மாட்டைக் குறிக்கும். மாட்டுடன் நடந்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த தாதர், கொண்டிக்காரர் (Assistant) எனப்படுவார். மாட்டோடு பறை தட்டிக்கொண்டு வரும் பறையர் அல்லது சக்கிலியர் தப்புக்காரர் எனப்படுவார். இன்று இவ்வமைப்பு முறை சிதைந்துவிட்டது; அடியார்கள் சமயத்தார் துணையின்றியே கோயிலுக்குச் சென்று விடுகின்றனர்.

சித்திரைத் திருவிழாவுக்குப் பத்து நாட்களுக்கு முன்னர், இவர் வீட்டில் நடைபெறும் கம்பசேவை என்னும் பூசையின்போது, திருமாலடியார் சாதி வேறுபாடின்றி உண்பது வழக்கம். இப்பூசை இன்றளவும் நடந்து வருகிறது.

மேற்கூறிய நல்லான் தாதன் மரபில் தற்போதுள்ள முத்தழகுக் கோடாங்கி தான் பதினெட்டாவது தலைமுறை எனக் கூறுகிறார்15. சித்திரைப் பௌர்ணமியன்று இரவில் ஆண்டார் வண்டியூரில் காரைச்சேரி சமயத்தார் அமைத்துத்தரும் கொட்டகையில் தங்கும் போது மேலமடைச் சமயத்தார், ஆண்டாருக்கு ஒருபானைத் தயிர் கொண்டுவந்து தருவார். வேறு பணி இவர்க்கில்லை.16

கட்டனூர்ச் சமயத்தார் ஆட்சிக்குக் கிழக்கெல்லையாகப் பார்த்திபனூருக்கு வடக்கேயுள்ள அன்னவாசல் மிளகனூரும் மேற்கெல்லையாகத் திருப்புவனத்துக்குத் தெற்கேயுள்ள அச்சங்குளம், பையனூரும், தெற்கெல்லையாக வீரசோழம், இருஞ்சிறை, அத்திகுளம், நாலுரும், வடக்கெல்லையாக வைகையாறும் அமைந்துள்ளன.17

பிள்ளையார்பாளையம் சமயத்தாரின் மூதாதையர் கமுதியருகேயுள்ள தரக்குடியிலிருந்து மதுரை அருகேயுள்ள பிள்ளையார் பாளையத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள். கமுதியருகே தரக்குடி, வல்லக்குளம், புனவாசல், சுள்ளங்குடி, அகத்தாரிருப்பு உட்படப் பதினெட்டுக் கிராமங்கள் இவரது சமய ஆட்சிக்குட்பட்டவையாகும்18 இந்த ஒரு சமயத்தாரையே ஆய்வாளர் சித்திரைத் திருவிழாவில் தலையின் உருமால், மார்பில் துளசிமாலை, இடுப்பில் கச்சை, இரும்புச் சல்லடம், பாசி, கையில் வளை, கருங்காலிக் கம்பு (நாங்குலிக் கம்பு), காலில் வெள்ளித் தண்டை ஆகியவற்றோடு காணமுடிந்தது.

5. 2. 6. நடைமுறைத் தொடர்பு-சில செய்திகள் :

கோயிலுக்கு மாடு கொண்டுவருவோர், திரியெடுத்தாடுவோர், கருத்திநீர் தெளிப்போர் ஆகியோரில் முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம் வட்டங்களிலிருந்து வருவோர், பெரும்பாலும் இடையர் சாதியினராகவே உள்ளனர். வேடமிட்டு வழிபடும் அடியவரில் பதினைந்து விழுக்காட்டினராக மேற்கூறிய பகுதிகளைச் சேர்ந்த இடையர்களிருப்பதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது

ஆய்வாளர் சந்தித்த மாடு கொண்டு வருவோரில் இச்சாதியினரான ஒருவர் இராமநாதபுரத்திற்கு இரண்டு மைல் தெற்கிலுள்ள கீழக்குடிகாடு கிராமத்தினைச் சேர்ந்தவர்.19 ஏழு வயது முதல் தந்தையுடனும், பின்னர் தனியாகவும் மொத்தம் இருபத்திரண்டு வருடங்கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு மாடு கொண்டு வருகின்றார். கோயிலிலிருந்து இவருடைய ஊர் ஏறத்தாழ எழுபது மைல் தொலைவிலுள்ளது. இவ்வளவு தொலைவும் மாட்டுடன் நடந்தே வருகின்றார்.

தன்னுடைய இருபதாம் வயதில் ஆண்டாரிடம் ‘அக்கினி முத்திரை’ பெற்றிருக்கிறார். ஆண்டுதோறும் ஒரு மாட்டுடன் கோயிலுக்கு வந்து தீர்த்தந்தொட்டியில் (மலைமீதுள்ள சிலம்பாற்றில் மாட்டினை நீராட்டி, கோயிலில் இறைவனை மாட்டுடன் தரிசித்து. தனக்கும் மாட்டுக்கும் ஆண்டாரிடம் ஆசிபெற்று, ஆண்டாருக்கு ஒன்றேகால் ரூபாய் காணிக்கை செலுத்தித் திரும்புகிறார். தற்போது அவர் கொண்டு வருவது மூன்றாவது மாடாகும்; முதலிரண்டு மாடுகளும் இறந்துவிட்டன என்கிறார். ஊருக்குத் திரும்பியவுடன் மாட்டைக் கட்டிப்போடுவதில்லை ஆண்டு முழுவதும் அம்மாடு கட்டப்படாமலேயே அலையும் (படம் 9).

பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் இடையர்கள் எண்ணிக்கை மிகுதியான கிராமங்களில், தங்களில் இரண்டு குடும்பத்தினரை முறையே முக்கந்தர், கோவளர் என்று வைத்துள்ளனர். இவர்களை ‘முக்கந்தவூடு’, ‘கோவளமூடு’ எனப் பெயரிட்டழைக்கின்றனர். இவர்களில் முக்கந்தர் வீட்டார் ஆண்டுதோறும் அழகர்கோயிலுக்குச் சித்திரைத் திருவிழாவில் மாடு கொண்டு வருவது வழக்கமாகும். கோவளவீட்டு எருதுக்குக் கிராமத்தில் நடக்கும் எருதுகட்டு விழாவில் முதலிடம் தரப்படும். அழகர்கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட முக்கந்தர்வீட்டு மாடு, ஊரில் யார் வயலில் மேய்ந்தாலும் பிடித்துக்கட்டுவதோ, விரட்டுவதோ இல்லை அதனை ஒரு பேறாகக் கருதுகின்றனர்.20

5. 2. 7. இடையரும் வர்ணிப்புப் பாடல்களும் :

சித்திரைத் திருவிழாவில் ‘அழகர் வர்ணிப்பு’ பாடும் வர்ணிப்பாளர்களில் இடைச்சாதியினரை நிறையக் காணமுடிகிறது. ‘வர்ணிப்பாளர் மகாசபை’ எனப்படும் வர்ணிப்பாளர் சங்கத்திலும் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக இச்சாதியினர் தலைவர் பொறுப்பில் இருக்கின்றனர்.21 இச்சங்க வரவு-செலவுப் புத்தகத்தில், ‘வர்ணிப்புப் ஆசிரியர்கள்’ என்ற பெயரோடு குறிக்கப்படும் பதினொருவரில் அறுவர் இடைச்சாதியினராவர்.22 இவர்கள் தவிர, ‘தசாவதார வர்ணிப்புப் பாடியுள்ள சாமிக்கண்ணுக்கோனார்23 ‘அழகர் அட்டாக்கர மந்திர வர்ணிப்பு’ பாடியுள்ள கீழக்குயில்குடி மூக்கன் பெரியசாமிக் கோனார்24 ஆகியோரும் இச்சாதியாரில் வர்ணிப்பு ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர்.

5. 2. 8. கள்ளர் வேடக் கதை :

‘சித்திரைத் திருவிழாவில் அழகர் ஏன் கள்ளர் வேடம் போடுகிறார்’ என்ற கோள்விக்குப் பதிலாக ஒரு தகவலாளி ஒரு கதையினைச் சொன்னார்.

“ஒருமுறை அழகர் மதுரைக்குச் சித்திரைத் திருவிழாவிற்காக வந்து கொண்டிருந்தார். வழியில் தல்லாகுளம் மாரியம்மன் கோயிலருகில் ஒரு இடைச்சி மோர் விற்றுக்கொண்டிருந்தாள். களைப்புத்தீர அவளிடம் மோர் வாங்கிக்குடித்த அழகர், திருவிழா முடிந்து திரும்பும்போது குடித்த மோருக்குக் காசு தருவதாகச் சொன்னார். ஆனால் திரும்பும்போது கையில் காசில்லாததனால் கள்ளர் வேடம் போட்டுக்கொண்டு தப்பியோடிவிட்டார்”25

வேடமிட்டு வழிபடும் அடியவரிலும் ஐந்து விழுக்காட்டினர் (அனைவரும் கோனாரல்லாத சாதியினர்) அழகர் கள்ளர் வேடம் போடுவதற்கு இக்கதைச் செய்தியினைப் பதிலாகக் கூறினர்.26 ‘கூர்மாவதாரன் வர்ணிப்பு’ நூல்,

“காத்துட்டு மோருக்கு கள்ளர் வடிவெடுத்த
கரந்தமலைக் கண்ணா வா”27

என்று பாடுவதும் இந்நிகழ்ச்சியையே குறிப்பதாகும்.

அழகரின் கள்ளர் வேடம், கள்ளர் சாதியாரோடு தொடர்பு கொண்டது. இருப்பினும் இக்கதைப் பிறப்பிற்கு ஒரு காரணம் இருந்தல் வேண்டும்.

கள்ளர் வேடம் காரணமாக அழகருக்கும் கள்ளர் சாதியாருக்கும் ஏற்பட்ட நெருங்கிய உறவினை, பெரும்பாலும் வைணவப் பற்றுள்ள இடையர்களுக்கு ஏற்றுக்கொள்ள மனமில்லை. எனவே அழகர் கள்ளர் வேடம் போடுவதற்கான காரணத்தினைத் தங்கள் சாதியுடன் இணைப்பதற்கு அவர்கள் முயன்றிருக்கவேண்டும். அம்முயற்சியின் விளைவே மேற்குறித்த கதையாகலாம். வர்ணிப்புப் பாடுவதில் நாட்டமுடைய சாதியார் ஆகையால் வர்ணிப்புப் பாடலிலும் இக்கதை எளிதாகப் புகுந்துவிட்டது எனலாம்.

அழகர்கோயில் இறைவன் கால்நடை வளர்ப்போரின் தெய்வமாகப் பன்னூறாண்டுகளாகப் போற்றப்பட்ட செய்தியை அறியலாம். அழகர்கோயிலுக்கு ஆண்டுதோறும் அடியவர்களால் நன்கொடையாக வழங்கப்பெறும் மாடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரம் ஆகும்28 எனக் கோயில் அலுவலகத்தார் தரும் செய்தியிலிருந்து அம்மரபு இன்றும் தொடர்ந்து வருவதை அறியலாம்.

குறிப்புகள்

1. கள ஆய்வில் 100 வினாவிடைப்பட்டி நாள்: 9, 10, 11.5.79; பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 1.
2. Dennis Hudson, Siva, Minaksi, Visnu-Reflections of a Popular Myth, South Indian Temples, p. 114.
3. கலித்தொகை, 104:4-6.
4. M. E. Manickavasagam Pillai, Culture of the Ancient Cheras, p. 37.
5. M. Srinivasa Iyengar, Tamil Studies, p. 71.
6. தொல். அகத்திணையியல், நூற்பா 5.
7. ‘ஆயர் சிறுமியரோம்’ திருப்பாவை, பாடல் 16, அடி 4.
8. No. 72 of S. I. I. Vol. XIV.
9. இரா. நாகசாமி (ப. ஆ.), தஞ்சைப்பெருவுடையார் கோயிற் கல்வெட்டுகள் (முதற்பகுதி), பக். 162, 176, 177.
10. சிலம்பு, அடைக்கலக்காதை, அடிகள் 4-5.
11. Edgar Thurston, Castes and Tribes of Southern India, Vol. II, p. 363.
12. நடன. காசிநாதன் & கு. தாமோதரன் (ப. ஆ.), கல்வெட்டு ஓர் அறிமுகம், ப. 63.
13. R. Nagasamy, Alwars and Divya Prabhandam Hymus in Sri Rangam Temple, கல்வெட்டு, இதழ் 2, நளஆண்டு, ஐப்பசி, ப. 4.
14. இரா. நாகசாமி (ப. ஆ.), மு. நூல், ப. 234.
15. முத்தழகுக் கோடங்கி, சாம்பக்குளம்; பேட்டி நாள் : 25.7.77 - சாம்பக்குளம்; 21.4.78 - அழகர்கோயில்
16. பாலுச்சாமிக்கோனார், மேலமடை: 18.4.77 - மேலமடை; 24.4.78 - மதுரை
17. அய்யனார்க்கோனார், கட்டனூர்: 21.4.78 - அழகர்கோவில்
18. சமயக்கோனார், பிள்ளையார்பாளையம்: 28.5.77 - பிள்ளையார்பாளையம்; 24.4.78 - மதுரை
19. ஆனந்தன், கீழக்குடிகாடு (இராமநாதபுரம் அருகே): 22.4.78 - மதுரை
20. செ. இராமசாமி, வெங்கடங்குறிச்சி (பரமக்குடியருகே): 14.8.77
21. ஆய்வாளர் நேரில் கண்டது. நாள்: 18.6.78
22. பக்தர் : வர்ணிப்பாளர் மகாசபை வரவு- செலவுப் புத்தகம் 1978-79 ப. பின்அட்டை உட்புறம்.
23. ‘வர்ணிப்புப் பாடல்கள்’ என்னும் இயல் காண்க.
24. மேலது, ப. 177.
25. பூமிநாதன், பரமக்குடி, நாள் : 21.4.78.
26. பிற்சேர்க்கை எண் IV : 1. தகவலாளிகள் எண்: 3,18,26,46,55.
27. கூர்மாவதாரன் வர்ணிப்பு, ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு (ப. ஆண்டு இல்லை), ப. 1.
28. கோயில் மேலாளர் தெரிவித்த தகவல். நாள்: 25- 1-1979.

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்/008&oldid=1820732" இலிருந்து மீள்விக்கப்பட்டது