உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்/009

விக்கிமூலம் இலிருந்து

5. 3. கோயிலும் பள்ளர்-பறையரும்

5. 3. 0. அழகர்கோயிலுக்கு வரும் அடியவர்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவர் ஒரு கணிசமான தொகையினராவர். தாழ்த்தப்பட்ட இனத்தவர் என இங்குக் குறிப்பது பள்ளர், பறையர் ஆகிய சாதிப்பெயர்களோடு உழவுத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களையே ஆகும். வேடமிட்டு வழிபடும் அடியவர்களில் இச்சாதிகளைச் சேர்த்தவர்கள் 28 விழுக்காட்டினராவர்.1 சமூக மாற்றங்களின் காரணமாக இவர்கள் சாதிப்பெயரைக் குறிப்பிடாது ‘அரிசன்’ என்றே தங்களைக் குறிப்பிடுவதால் கள ஆய்வில் இரு சாதியினரையும் துல்லியமாகப் பிரித்தறிய முடியவில்லை.

5. 3. 1. சமயச்சார்பு :

கள்ளர்கள், வலையர்கள் ஆகியவர்களைப் போலல்லாமல் இவ்வினத்தவர் நெற்றியில் வைணவச் சின்னமான திருமண்ணும், மார்பில் துளசி மாலையும் அணிந்து, பெரும்பாலும் முத்திரை பெற்றவராக, ‘கோவிந்த’ நாம முழக்கத்துடன் வருகின்றனர். இவர்கள் சாமியாடி வரும்போது. பெரும்பாலும் பெண்கள் உட்பட உற்றார் உறவினர் புடைசூழ வருகின்றனர். பிற இனத்தவர்கள் சாமியாடி வரும்போது பெரும்பாலும் பெண்கள் உடன்வருவதில்லை. அடியார்களின் தோற்றத்தையும் பிற நடைமுறைகளையும் கருத்தில் கொள்ளும்போது, இவர்கள் சமயச்சார்பு பெற்றவர்களாகவே தோன்றுகின்றனர். அழகர்கோயிலைப் போல, தென் தமிழ்நாட்டின் பிற வைணவத் திருப்பதிகளில் இவர்களின் ஈடுபாட்டைக் காணமுடியவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட இனத்தவர்களாகிய இவர்கள், பெருந்தெய்வக் கோயில்களில் (Brahmanical deities) இக்கோயிலில் காட்டும் ஈடுபாடு ஆய்விற்குரியதாகும்.

5. 3. 2. பள்ளர் சைவரா?

வயல்களில் வேலை செய்யும் கடின உழைப்பாளிகளான பள்ளர்கள் தென்மாவட்டங்களிலேயே அதிகம் இருப்பதாக கஸ்டவ் ஆப்பர்ட் (Gustav Oppert) குறிப்பிடுகின்றார்.2 தர்ஸ்டனும். தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலேயே பள்ளர்கள் நிறையக் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.3 இருவருமே, பள்ளர்கள் அடிமைகளைப் போல வாழ்வதாகவே குறிப்பிட்டுள்ளனர்.4

“பள்ளர்கள் பொதுவாகச் சைவர்கள்; ஆயினும் நடைமுறையில் பேய்வழிபாட்டினர். கள்ளும் கறியும் வேண்டும் கிராம தேவதைகளையே பூசிக்கின்றனர்” எய்கிறார் தர்ஸ்டன்.5 “பள்ளர் பழங்காலத்தில் வேளாளர் போலச் சிவ வழிபாடு உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். பின்னர் சாதியில் தாழ்ந்து, சமூகத்தில் கீழ்நிலை அடைந்தபின் இவர்களுக்குக் கோயில் நுழைவும் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டு, இதனால் இவர்கள் கிராம தேவதை வழிபாட்டுக்குத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டனர்” என்று தங்கராஜ் கூறுகிறார்.6 சைவர்களாயிருந்ததற்கு இருவருமே சான்றேதும் காட்டவில்லை.

சிவ வழிபாட்டு நெறிக்கும் சிறுதெய்வ வழிபாட்டு நெறிக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. இரு வழிபாடுகளிலும் நெற்றிக் குறியாகத் திருநீறே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சைவநெறிக்கு அடிப்படையிலேயே முரண்படும் வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் குருதிப்பலியும், புலால் உணவும் இடம்பெறுகின்றன. அதே நேரந்தில் எச்சாதியினரும் வைணவராக நெற்றியில் திருமண் இடும்போது (புலால் உண்ணும் சாதியினர்கூடத் திருமண் இடுகின்ற காலங்களில் மட்டும்) புலால் உண்ணுவதில்லை. எனவே திருமண் அணிந்தவர் வைணவர் என அறியப்படுவதுபோல, திருநீறு அணிந்தவர் சைவர் எனக் கூற இயலாது. எனவே நடைமுறையில் சிவ வழிபாட்டினராக இல்லாவிட்டாலும் திருநீறு அணியும் காரணத்தால் பள்ளர்களைச் சைவர்கள் எனத் தர்ஸ்டன் நினைக்கிறார் என்றே தோன்றுகிறது.

5. 3. 3. பறையரும் வைணவமும் :

தமிழிலக்கியம் பழைய குடியினராகக் குறிக்கும் சாதியாரில் ‘பறையர்’ இடம்பெறுகின்றனர். ‘பறையர் வயல்வேலை செய்பவர்கள்’ என்று ஹட்டன் (Hutton) குறிப்பிடுகிறார்.7 ஒரு கிராமத்தில் பெரும்பாலும் வைணவப் பெயர்களுடன் வைணவர்களாகப் பறையர் வாழ்வதைக் கிளேட்டன் (Clayton) கண்டதாகக் குறிப்பிடும் தர்ஸ்டன், “தாதர் எனப்படும் பறையர்கள் வைணவர்களாவர்” என்றும் கூறுகிறார்.8

5. 3. 4. உழவர் தெய்வங்கள் :

1. இந்திரன்

தொல்காப்பியம் உழுதொழில் செய்வோரின் தெய்வமாக இந்திரனைக் குறிப்பிடுகிறது. தேவேந்திரன், பள்ளர்களைப் படைத்ததாக ஒரு வழக்குமரபு இருந்ததனைத் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.9 இக்காலத்தும் பள்ளர் தங்களைத் ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று கூறிக்கொள்வதாகத் தங்கராஜ் குறிப்பிடுகின்றார்.10 “மருதநில உழவர் என்ற காரணத்தினாலேயே இவர் தங்களைத் தேவேந்திர குலம், இந்திர குலம், தேவேந்திரகுல வேளாளர் என உரிமை பாராட்டி வருகின்றனர்” என்பது தேவ ஆசீர்வாதத்தின் கருத்தாகும்11 சங்க இலக்கியத்தில் இந்திர வழிபாடு பற்றிப் போதிய செய்திகள் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் ‘இந்திர விழவூர் எடுத்த காதை’யில் இந்திரவிழா பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. ஆயினும் “சிலப்பதிகாரத்தின் இந்திரவிழா, அரசரும் வணிகரும் நடத்திய விழாவேயன்றி மருதநில உழவர்களுக்கு அவ்விழாவில் பங்கு இல்லை”12 என்பது தெளிவு. எனவே சிலம்பின் காலத்திலேயே உழுதொழில் செய்வோர் இந்திர வழிபாட்டினின்றும் நீங்கி விட்டனர் என்றறியலாம். இந்திர வழிபாடு இன்று தமிழ்நாட்டில் முழுவதுமாக மறைந்துவிட்டது.

2. பலராமன்

இந்திர வழிபாட்டிலிருந்து நீங்கிய தமிழ்நாட்டு உழவர்கள் வேறெந்தத் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்பினர் என்பது அடுத்து எழும் கோள்வியாகும். சங்க இலக்கியத்திலும் சிலம்பிலும் திருமாலோடு இணைந்த ஒரு தெய்வமாக-ஆனால் தொல்காப்பியரின் நிலத்தெய்வப் பகுப்பில் இடம்பெறாத-கலப்பையினை ஆயுதமாக ஏந்திய வாலியோன் என்னும் பலராமனைக் காண்கிறோம். பலராமனுக்கு இணையான உழவர்களின் தெய்வமாகச் சைவ சமயத்தில் (Saivite Counterpart) ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். எனவே இந்திர வழிபாட்டினை விடுத்த தமிழ்நாட்டு உழவர்கள் தங்கள் தெய்வமாகத் திருமாலோடு இணைந்து நின்ற பலராமனையே வணங்கியிருக்கவேண்டும் என்று கருதலாம்.

5. 3. 5. அழகர்கோயிலும் பலராம வழிபாடும் :

திருமாலிருஞ்சோலையில் திருமாலும் பலராமனும் இணைந்து கொண்டிருப்பதாகப் பரிபாடற் பாட்டொன்று (15) கூறும். விஷ்ணு புராணத்தில் காணப்படும் கிருஷ்ணனின் இந்திர எதிர்ப்பும், தமிழகத்தில் பலராம வழிபாட்டின் அறிமுகமும் மருதநிலத்து உழவரை இந்திர வழிபாட்டிலிருந்து கிருஷ்ண வழிபாட்டிற்கு இழுக்கும் முயற்சி, பரிபாடற் காலத்திலேயே தமிழகத்தில் தொடங்கிவிட்டது என்பதற்குச் சான்றுகளாகும்.13 திருமாலாகிய முழுமுதற் கடவுளின் நான்கு வியூகங்களில் சங்கர்ஷணன் (Sankarshana) அல்லது வெள்ளை எனப்படும் பலராமன் ஒரு வியூகமாகும். பலராம வழிபாடு நிகழ்ந்த வைணவத் தலமெனத் தமிழகத்தில் அழகர்கோயிலைத் தவிர வேறெதனையும் குறிப்பிடச் சான்றுகளில்லை. மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில், கோவர்த்தனக் காட்சியினைக் (கண்ணன் குன்று குடையாக எடுத்து ஆநிரை காத்தல்) காட்டும் சிற்பம் ஒன்றில் கிருஷ்ணன், பலராமன், நப்பின்னை ஆகியோரது உருவங்களைக் காணமுடிகிறது. இச்சிற்பம் கி.பி.எட்டாம் நூற்றாண்டினது எனச் சீனிவாசன் குறிப்பிடுகிறார்.14 எனவே திருமாலிருஞ்சோலையென்னும் அழகர்கோயிலே தமிழ்நாட்டில் பலராம வழிபாட்டின் மையமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். கலப்பையினை ஏந்திய பலராமனைக் காட்டி, இந்திர வழிபாட்டினரான உழவர்களைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியைத் தமிழ்நாட்டு வைணவம் மேற்கொண்டிருக்கிறது.

திருமாலிருஞ்சோலை குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இத்தலத்தில் பலராம வழிபாடு நிகழ்ந்ததற்கான குறிப்புக்கள் இல்லை. எனவே ஆழ்வார்களின் காலத்திற்கு முன்னரே இத்தலத்தில் பலராம வழிபாடு கிருஷ்ண வழிபாட்டில் கலந்து மறைந்துவிட்டது எனக் கொள்ளவேண்டும்.15

உழுதொழில் செய்வோர், இந்திர வழிபாட்டிலிருந்து பலராம வழிபாட்டிற்குத் திரும்பினராயின், இன்று பலராம வழிபாடு மறைந்து விட்ட நிலையில் அவர்கள் திருமால் வழிபாட்டினராகவே இருத்தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் பள்ளர் தங்களைத் தேவேந்திர குலத்தார் என அழைத்துக் கொண்டாலும் பெரும்பாலும் சிறுதெய்வ வழிபாட்டினராகவே உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் சிலர் மட்டும் அழகர்கோயிலையிட்டு இன்னும் வைணவ நெறியில் வாழ்கின்றனர்.

5. 3. 6. சமயத்தாரும் ஆண்டாரும் :

அழகர்கோயில் திருமாலை ஆண்டாரின் சமயத்தார்களில் மூடுவார்பட்டி, எட்டிமங்கலம், சுந்தரராஜன்பட்டி, காரைச்சேரிச் சமயத்தார்கள் பள்ளர் சாதியினர்; சாம்பக்குளம் சமயத்தார்க்குத் (கோனார்) துணை செய்யும் ‘கொண்டித்தாதராக’ பாம்பூரைச் சேர்ந்த பள்ளரே உள்ளனர். கப்பலூர்ச் சமயத்தார் பறையர் சாதியினர். திருப்புவனம் சமயத்தாருக்குத் (நாயுடு) துணையாகப் பறையர் சாதியினரான கலியாந்தூர் கொண்டித்தாதர் உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தினரான சமயத்தாரில் காரைச்சேரி, முடுவார்பட்டி. ஆகிய இரு சமயத்தாரும் தளபதிச் சமயத்தார் ஆவர். ஏனையோர் ‘கொண்டித்தாதர்’ என்றே பெயர் பெறுகின்றனர். ‘கொண்டி’ என்ற சொல் ‘உதவி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

இப்போதுகூட (1979) முடுவார்பட்டிச் சமயத்தார் கோவிந்தனும், கப்பலூர்க் கொண்டித்தாதர் ரெங்கன் கோடாங்கியும் ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் ‘அக்கினி முத்திரை’ பெற்றுள்ளனர். இவர்கள் எப்பொழுதும் புலால் உண்பதில்லை. ஏனைய சமயத்தார்கள் திருவிழாக் காலங்களில் மட்டும் புலால் உண்ணாது விரதம் இருக்கின்றனர்.

முடுவார்பட்டிச் சமயத்தார் மட்டும் தன் சமய ஆட்சிக்குட்பட்ட கிராமங்கள் நாற்பத்தெட்டில் முப்பத்தொன்றின் பெயர்களைத் தருகின்றார். அவையனைத்தும் அலங்காநல்லூரிலிருந்து நாற்புறமும் ஆறு மைல் தொலைவுக்குள் உள்ளன.

திருப்பாலை, பிள்ளையார்நத்தம், புதுப்பட்டி, ஐயூர், எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, வலையபட்டி, லிங்காவடி, பரளி, சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, காவனூர், கருவனூர், பெத்தாம்பட்டி, மாலைப்பட்டி, வெளிச்சநத்தம், சோழனம்பட்டி, குளமங்கலம், வடுகபட்டி, தூதக்குடி, குமாரம், மயிஞ்சி, அலங்காநல்லூர், கல்லணை, ஊர்சேரி, மேட்டுப்பட்டி, அம்பட்டபட்டி, பூலாம்பட்டி, சேலார்பட்டி, முடுவார்பட்டி ஆகிய ஊர்கள் இவரது சமய ஆட்சிக்குட்பட்டன.

காரைச்சேரிச் சமயத்தாருக்கும் தன் சமய ஆட்சிக்குட்பட்ட சில கிராமங்களின் பெயர்களே தெரிந்திருக்கின்றன. வரிச்சியூர், பறையன்குளம் ஆளவந்தான், குன்னத்தூர், ஓவலூர், களிமங்கலம், உடன்குண்டு, ஆண்டார்பட்டினம், கருப்பாயிஊரணி, கோயில்குடி, எலமனூர், பொட்டப்பனையூர், மயிலங்குண்டு, புதூர் ஆகிய கிராமங்கன் இவரது சமய ஆட்சி எல்லைக்குட்பட்டன. இவையனைத்தும் மதுரைக்கு ஐந்து மைல் கிழக்கில், வையையாற்றின் வடகரையில் அமைந்தவை.

அழகர் ஆற்றிலிறங்கிய அன்று இரவு வண்டியூர்ப் பெருமாள் கோயிலில் தங்குவார். ஆண்டார் அக்கோயிலின் பின்புறம் காரைச்சேரிச் சமயத்தார் அமைத்துத்தரும் ஓலைக்கொட்டகையில் தங்குவார்.

கப்பலூர்ச் சமயத்தார் ஆண்டாருக்கு உதவியாக இருப்பார்; இவர் சித்திரைத் திருவிழாவில் ஆண்டாருக்குமுன் வெள்ளைக்கொடி பிடித்து வருவார்.

எட்டிமங்கலம் சக்கன் தாதனும், சுந்தரராஜன்பட்டி பொக்கன்தாதனும் ஆண்டாரின் சமய அரசாங்கத்தின் கோமாளிகள் ஆவர். இவர்கள் தலையில் குல்லாவுடன் குரங்குபோல் வேடமிட்டு, சோளிப்பல் வரிசை கட்டிச் சித்திரைத் திருவிழாவில் ஆண்டாருடன் வருவர். இவர்களனைவரும் ஆடித்திருவிழாவில் ஆண்டார் வழியாகக் கோயில் பரிவட்ட மரியாதை பெறுவர். தங்கள் வீட்டில் தந்தை இறந்துவிட்டால், இறந்தவரின் மகன் ஆண்டார்க்குச் சேதி சொல்லிப் பரிவட்டமும், கோயில் தீர்த்தமும், இறந்தவர்க்குரிய மரியாதையாகப் பெற்றுச்செல்வது வழக்கம்.

தற்காலத்தில் இந்த நடைமுறைகள் சிறிது சிறிதாகச் சிதைந்து வருகின்றன. காரைச்சேரி சமயத்தார் குடும்பத்தில் ஒரு பகுதியினர் கிறித்தவராக மதம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

5. 3. 7. தாழ்த்தப்பட்டோரும் தமிழ்நாட்டு வைணவமும் :

தமிழ்நாட்டு வைணவம் தாழ்த்தப்பட்ட இனத்தவரைத் தம் சமய எல்லைக்குள் ஈர்த்துக்கொள்வதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. வைணவ சமயச் சீர்திருத்தவாதியான இராமானுசர்க்கு முன்னரே, ஆளவந்தாரின் மாணவராகித் திருவரங்கத்தில் வசித்த மாறனேரி நம்பி தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவரே. பெரியநம்பி என்னும் வைணவப் பிராமணரே அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தார்.

இராமானுசர் அந்நெறியைத் தொடர்ந்தார். இதற்கு இராமானுசர் பிராமணரல்லாத திருக்கச்சி நம்பியைத் தன் வீட்டில் உண்ண வைத்தது, காவிரியில் நீராடியபின் பிராமணரல்லாத உறங்காவில்லிதாசரின் தோளில் கையிட்டு வந்தது, மேல்கோட்டை கோயிலில் தாழ்த்தப்பட்டோரை அனுமதித்தது என அடுக்கிய சான்றுகளைக் காட்டலாம். இராமானுசருக்குப் பின்னர் இந்த உணர்வு தொடர்ந்து வந்தது தமிழ்நாட்டு வைணவத்தின் சிறப்பாகும். பிற்காலத்தெழுந்த பெரிய திருமுடியடைவு, மாறனேரி நம்பியைக் குருவாகவே ஏற்றுக் கொண்ட செய்தி உணரத்தகுந்ததாகும்.

“யாமுனாசார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கஸ்தல நிவாஸிதம்
ஞானபக்த்யாதி ஜலதிம் மாறனேரி குரும் பஜே”16

(ஆளவந்தாரின் மாணவரும், திருவரங்கத்தில் வசிப்பவரும், ஞானம் பக்தி முதலியவற்றில் கடல் போன்றவருமான மாறனேரி நம்பி எனும் குருவினைத் தொழுகிறேன்).

“அகோபிலமடத்து ஆதிவண்சடகோபஜீயர் மலைச்சாதி மக்களை வைணவத்திற்கு மாற்றுவதற்கென்றே சமயப் பரப்புநர்களைக்கொண்ட நிறுவனமொன்றை ஏற்படுத்தினார்” என்று செகதீசன் கூறுகிறார்17. ஆனால் செகதீசன் கூறும் மற்றொரு கருத்தினை ஏற்கவியலாது. “தாழ்ந்த சாதிக்காரர்க்குத் தாழ்ந்த நிலையிலுள்ள குரு பஞ்ச சம்ஸ்காரம் செய்கிறார்” என்கிறார் அவர்18 அழகர்கோயில் ஆண்டார், இராமானுசரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவரான திருமாலை ஆண்டான் கால்வழியினராவர். சாதிவேறுபாடின்றி அவர் ‘பஞ்ச சம்ஸ்காரம்’ செய்கிறார். 21.4.1978 இல் அழகர்கோயிலில் தோழப்பர் அழகர் ஐயங்கார், தாழ்த்தப்பட்ட சாதியாருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வதைக் காணும் வாய்ப்பு ஆய்வாளருக்குக் கிட்டியது.

வைணவ மரபுக்கு (சம்பிரதாயத்திற்கு) உயிரான குரு பரம்பரைக் கதைகள் பற்றி வைணவ அறிஞர், அக்னிகோத்ரம், ராமானுஜ தாத்தாச்சாரியார் கருத்தும் இங்கே எண்ணத் தகுந்தது. “அநேகமாகக் குருபரம்பரைக் கதைகள் இரண்டே அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஒன்று தெய்வத் தன்மை ஜாதிக்கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பது. மற்றொன்று எவ்வளவு ஆபத்து வந்தாலும் விஷ்ணு ஒருவனே தெய்வம் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதாம்” என்கிறார் அவர்.19

5. 3. 8. வரலாற்றில் தாழ்த்தப்பட்டோர் :

தாழ்த்தப்பட்ட சாதியாருக்குத் தமிழ்நாட்டு வைணவம் சமய எல்லைக்குள் உயர்வு தந்தது. எனினும் தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சாதியினராக இன்று கருதப்படும் சில இனத்தவரே பிராமணர்கள் பெறும் இடத்தினைப் பெற்றிருந்தனர் என அறிஞர் சிலர் கருதுகின்றனர்.

“பிராமணர் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவில் இன்று அடிமைச் சாதியாராகக் கருதப்படுவோர் மிக உயர்த்த இடத்தைப் பெற்றிருந்தனர் என்பது தெரிந்த செய்தியே. அவர்களே நில உடைமையாளராக இருந்தனர். அவர்கள் பெற்றிருந்த உயர்வுகள் வினோதமான தொல்லெச்சங்களாக, சில ‘தனி உரிமை’களின் வடிவில் இன்றும் காணப்படுகின்றன. அவற்றின் தோற்றம் மறக்கப்பட்டுவிட்டதால் அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன” என்று கூறும் வாலவுஸ் (Walhouse)20 மதுரை மாவட்டத்தில் சல்லிக்கட்டு விழாக்களில் கள்ளர் சாதியினரே பூசாரியாகவும். தெய்வ வாக்கினைத் தெரிந்து சொல்பவராகவும் உள்ளதையும், திருவாரூர்க்கோயில் திருவிழாவில் ஒரு பறையர் யானை மீதேறி வருவதையும், சென்னையைச் சேர்ந்த வாணிகச் சாதியினர் சிலரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிராமணர்களும் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்குத் தாழ்ந்த சாதியாரிடம் சென்று அனுமதி பெறும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்ததனையும் எடுத்துக்காட்டுகிறார்.21

“தமிழ்நாட்டில் மாரியம்மன்கோயில் திருவிழாக்களில் பறையர்களே அத்தேவதையின் மணமகனாகக் கருதப்படுகிறார்கள்” எனக் கூறும் அனுமந்தன்,22 தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் பறையர், அரசர் ஆதரவும் சமயத் தலைமையும் பெற்றிருந்ததாகக் கூறுவர்.23

கேரளத்தில் பகவதி கோயில்களில் சாமியாடும் தாழ்ந்த சாதியாரான வெளிச்சப்பாடுகளைப் பற்றி எழுதும்போது, “ஆரியப்பிராமணர் வருகைக்கு முன்னர் பகவதி கோயில்களில் அவர்களே பூசை செய்வோராக இருந்திருக்கவேண்டும்” என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.24

திருமணத்தன்று மணமக்களுக்குப் பிராமணப் புரோகிதர் கட்டும் காப்புநாணை, மறுநாள் நாவிதர் சாதியினர் புரோகிதர்க்குரிய மரியாதையினைப் பெற்று அறுப்பது, தென்மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியாரிடம் நடைமுறையில் இருந்து வருகிறது. “பாப்பானுக்கு மூப்பு பறையன், கேப்பார் இல்லாமல் கீழ்சாதியானான்” என்னும் வழக்கு மரபு தென்மாவட்டங்களில் பெருக வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட சாதியார் பெற்றுள்ள தனி உரிமைகள் பிராமணர்கள் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை உணர்த்துகின்றன.

பிராமணர் தலைமை பெற்ற மதங்களில் தாழ்த்தப்பட்ட சாதியாருக்குத் தரப்படும் ‘தனி உரிமைகள்’ இந்த வரலாற்றுப் பின்னணியை மனத்தில்கொண்டு தோன்றிய வழக்கமாயிருக்கலாம். அழகர்கோயிலில் பள்ளர், பறையர் ஆகிய சாதியினரின் ஈடுபாடும், பிராமண குருவான ஆண்டாரிடம் அவர்கள் பரிவட்ட மரியாதை பெறுவதும்கூட முற்குறித்த தொல்லெச்சங்களில் (vestiges) ஒன்றாக இருக்க முடியும். இராமானுசர்க்குப்பின் தமிழ்நாட்டு வைணவம் தாழ்த்தப்பட்ட சாதியாரை ஈர்க்கமுயன்ற அம்முயற்சிக்கும் வைணவம் இவ்வரலாற்றுப் பின்னணியை நினைவில் கொண்டது காரணமாயிருக்கலாம்.

இந்திர வழிபாட்டினரான உழவர்களைப் பலராம வழிபாட்டினையிட்டுத் தமிழ்நாட்டு வைணவம் தன்பக்கம் ஈர்க்க முயன்றது. தமிழ்நாட்டில் தென்பகுதியில் அழகர்கோயிலை மையமாகக்கொண்டு அம்முயற்சி நடந்தது; வைணவம் அம்முயற்சியில் பெற்ற வெற்றியின் தொல்லெச்சங்கள் இன்றும் உள்ளன. தமிழ்நாட்டு வைணவம் சாதி வேற்றுமையைப் புறந்தள்ளியதனால், அவ்வெற்றி சமய வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டது.

குறிப்புகள்

1. களஆய்வு நாள்: 9, 10, 11.5.1979, பார்க்க: பிற்சேர்க்கை எண் IV:1.
2. Gustav Oppert, The Original Inhabitants of India, p. 75.
3. Edgar Thurston, Caste and Tribes of Southern India, Vol. VI, pp. 472-473.
4. Gustav Oppert. op. cit., p. 75; Edgar Thurston, op. cit., p. 473.
5. Edgar Thurston, op. cit., p. 485.
6. பி. தங்கராஜ், பள்ளர் யார், ப. 51.
7. J.H.Hutton, Caste in India, 1969, p. 122.
8. Edgar Thurston, op. cit., pp. 80-81.
9. Ibid., p. 473.
10. பி. தங்கராஜ், மு. நூல், ப. 51.
11. தேவ. ஆசீர்வாதம், மூவேந்தர் யார், ப. 179.
12. தமிழ்நாட்டில் உழுதொழில் செய்வோர் இந்திர வழிபாட்டிலிருந்து பலராம வழிபாட்டின் வழியாகத் திருமால் நெறிக்குத் திருப்பப்பட்ட செய்தி ‘தமிழ்நாட்டில் பலராமன் (வாலியோன்) வழிபாடு’ என்னும் பிற்சேர்க்கைக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. பார்க்க : பிற்சேர்க்கை எண் I : 2.
13. மேலது.
14. மேலது.
15. மேலது.
16. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் (ப. ஆ.), பெரிய திருமுடியடைவு (ஆறாயிரப்படி குரு பரம்பராப்ரபாவத்துடன் இணைந்தது), ப. 572.
17. N. Jagadeesan, History of Sri Vaishnavism in the Tamil Country, p. 326.
18. Ibid., p. 332.
19. அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், வரலாற்றில் பிறந்த வைணவம், ப. 177.
20. M.J. Walhouse, ‘Archaeological Notes, ‘The Indian Antiquary’ dated July 1874, p. 191.
21. Ibid., p. 191.
22. Hanumanthan, Untouchability-A Historical Study, p. 81.
23. lbid., pp. 96-97.
24. M. S. Gopalakrishnan. ‘Velichapad’, Madras University Journal, Vol. 31A, 1959, p. 192.

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்/009&oldid=1820739" இலிருந்து மீள்விக்கப்பட்டது