அழகர் கோயில்/010
5. 4. கோயிலும் வலையரும்
5. 4. 0. அழகர் மலையையொட்டிய கிராமங்களில் கள்ளர் சாதியினரையடுத்து, வலையர் என்னும் சாதியினர் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இக்கோயில், கள்ளர், அரிசனங்கள். இடையர் ஆகிய சாதியாரிடத்தில் தனது சொல்வாக்கை நிலைநிறுத்தியது போல, கோயிலையொட்டிய பகுதிகளில் வாழும் இந்தச் சாதியாரிடத்தும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி இயல்யாகவே எழுகிறது. இக்கோயிலுக்கும் வலையர் சாதியார்க்குமுள்ள தொடர்பு இங்கு ஆராயப்படுகின்றது.
5. 4. 1. வன்னியர் வலையர் - சமூக நிலை :
“மதுரை மாவட்டத்தில் இழிந்த சாதியினர்” என்ற செர்ரிங் அடிகளார் (Rev. Sherring) வலையர்களைக் குறிப்பிடுகிறார்.1
வலையர் சாதியில் தர்ஸ்டன் குறிப்பிடும் ஐந்து பிரிவினர்களில் வன்னிய வலையர், சருகு வலையர், பாசிகட்டி வலையர் என்ற மூன்று பிரிவினர் மதுரை, மேலூர், நத்தம் பகுதிகளில் வாழ்கின்றனர். “மதுரை மாவட்ட வலையர்கள் தஞ்சாவூர் வலையர்களைப் போலப் பிராமணச் சார்பு பெறவில்லை” என்கிறார் தர்ஸ்டன்.2 அவர் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வலையர்கள் மதுரை மாவட்டத்தில் புதிய சமூக மாற்றங்களை இன்னமும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
மேற்குறித்த மூன்று பிரிவினரும் தம்முள் மணவுறவு கொள்வதில்லை. அழகர்கோயிலை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போர் வன்னிய வலையர் என்னும் பிரிவினர் ஆவர். இவர்களின் சமூக நிலை அரிசனங்களைப் போன்றதே. தர்ஸ்டன் இப்பிரிவினரைப் “பள்ளி என்ற சாதியினரைப் போன்றவர்” என்று குறிப்பிடுகிறார்.3 கயிற்றுவலை கட்டிக் குளங்களிலும் வயல்களிலும் மீன், தவளை, எலி முதலியவற்றைப் பிடித்துண்ணும் பழக்கம் இவர்களிடமுண்டு.
“வலையர்களில் சிலர் எலி, பூனை, தவளை, அணில் முதலியவற்றை உண்பதாகக் கூறப்படுகிறது” என்று தர்ஸ்டன் குறிப்பிடுவது4 இப்பிரிவினரையும் சேர்த்தே எனலாம்.நீர்நிலைகளில் வலைகட்டி மீன்பிடிக்கும் பழக்கம் வலையர்களின் எல்லாப் பிரிவினருக்குமுண்டு. எனவே தமிழ்நாட்டுக் கோயில்களில் திருவிழாக்களில் தெப்பம் கட்டும் வேலையை இவர்களே செய்து வருவது கண்கூடு.
இருபதாண்டுகளுக்கு முன்வரை வன்னிய வலையரின் குடிசைகள் மலைச்சாதி மக்களுடைய குடிசைகளைப்போல வட்டமாக, கூம்பு வடிவக் கூரையோடு அமைந்திருந்தன. இப்போதுகூட, இவர்களின் கோயில் அவ்வடிவிலேயே அமைந்துள்ளது. தாலிக்குப் பதிலாக, காறைக்கயிறு எனப்படும் கயிற்றைக் கழுத்தை ஒட்டிக் கட்டிக்கொள்கின்றனர். கழுத்தில் காறை எழும்பினை ஒட்டி அணியப் பெறுவதால் இக்கயிறு ‘காறைக்கயிறு’ எனப்பட்டது போலும்.
“சிங்கப்பிடாரியும் பதினெட்டாம்படிக் கருப்பனும் இவர்களின் தெய்வங்கள் (tribal gods) ஆகும்” எனத் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.5 ஆயினும் அரியமலைச்சாமி, வீரணசாமி ஆகிய தெய்வங்கனையும் இவர்கள் வணங்குகின்றனர்.
மணமுறிவும், விதவை மறுமணமும் இவர்களிடம் வழக்கமாக உள்ளன. சாதித்தலைவர் ‘கம்பிளியார்’ எனப்படுகிறார். கிராமத்தோறும் தம் சாதிப் பஞ்சாயத்துகளுக்குச் சென்று வருவதே அவர் வேலையில் பெரும்பகுதியாக அமைகிறது.
5. 4. 2. வழக்கு மரபுகள் :
இச்சாதியினர் அழகர்கோயில் சாமி தங்களுடையதே என்று கூறிக்கொள்கின்றனர். ஒரு வலையன் அழகர்கோயிலுக்குச் சென்றபோது ‘முதல் திருநீறு’ அவர்க்குக் கொடுக்கவில்லையாம். பிறகு அவர்க்குக் கொடுக்கையில் அர்ச்சகரிடம், “உன்நெத்திலே பூசற திருநீற என் பொச்சிலே போடு” என்று வீசி விட்டு வந்துவிட்டதாக ஒரு கதை வழங்குகிறது. பொதுவாக வலையர் உலகியல் அறிவு குறைந்தவர் என்னும் கருத்துப்பட “வந்தாத்தான் தெரியும் வலையனுக்கு” என்னும் சொல்லடை இப்பகுதியில் பிற சாதியாரிடையே வழங்கிவருகிறது.6
தங்களுடைய அழகர் சாமியை மற்றவர்கள் பறித்துக்கொண்டார்கள் என்ற கோபம் இச்சாதியினர்க்கு இருக்கிறது. அழகர்கோயில் சாமியை ஒரு வலையன் தான் கண்டெடுத்தானாம்; அந்தச் சாமியை இப்பொழுதும் கோயிலுக்கள் மதுரை மூலையில் (தென்மேற்கு மூலையில்) இரட்டைச் சங்கிலி போட்டுப் பூட்டிவைத்திருப்பதாக ஒரு முதிய தகவலாளி ஆத்திரத்துடன் குறிப்பிட்டார்.7 உண்மையில் கோயிலில் அப்படி ஏதும் இல்லை.
5. 4. 3. நடைமுறைத் தொடர்பு :
நடைமுறையில் இப்பொழுது கோயிலுக்கும் வலையர்க்கும் ஒரே ஒரு தொடர்பு மட்டும் உள்ளது. சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்கையில் இறைவனுக்குரிய குடை, சுருட்டி முதலியவற்றைக் கள்ளத்திரி, சோதியாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வலையர்களே தூக்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்வரை ஆமந்தூர்ப்பட்டி வலையர்களும் சேர்ந்து இவ்வேலையினைச் செய்ததாகக் கூறுகின்றனர்.
5. 4. 4. வரலாற்றுச் செய்தி :
கோயிலோடு இவர்களுக்குள்ள தொடர்பை வரலாற்றுப்போக்கில் அறிய வேறு நடைமுறைச் சான்றுகள் இல்லை. ஒரே ஒரு எழுத்துச்சான்று மட்டும் கிடைத்துள்ளது. சகம் 1591இல் (கி.பி. 1669இல்) வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்குத் திருமலை நாயக்கர் வழங்கிய பட்டயம்.
“திருமாலிருஞ்சோலை தென்திருப்பதியில் ஆண்டவன் சன்னிதியில் வேடர்களடர்ந்து புகுந்து அநேக திருவாபரணங்களையும், சொர்ணபாத்திரம், வெள்ளிப்பாத்திரம் முதலியவைகளையும் கொள்ளை அடித்துக்கொண்டு போய்விட்டதாய் ஸ்தலத்தார் கூக்குரல் போட்டதில்” என்று குறிப்பிடுகிறது.8 இப்பகுதி மக்கள் வலையர்களை ‘வேடர்’ எனவும் குறிப்பிடுகின்றனர். மலையடிவாரத்தில் சிறு பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடுவதால் இப்பெயரும் இவர்களுக்குண்டு.
5. 4. 5. வலையன்கதை வர்ணிப்பும் விளக்கமும் :
ஆய்வாளருக்குக் கிடைத்த வர்ணிப்புப் பாடல் ஒன்று வலையன் ஒருவன் மலையடிவாரத்தில் கிழங்கு தோண்டும்போது அழகர்கோயில் இறைவன் வெளிப்பட்ட கதையினைக் கூறுகிறது.
- “வித்வசிங்கப் பொன்னுச்சாமி
- வாக்கினின்றார் எம்பெருமான்”
என்பது அப்பாடலில் வரும் ஓர் அடியாகும்.9 எனவே இப்பாடலைப் பாடியவர் பொன்னுச்சாமி வித்துவான் என்பது தெரிகிறது. பாடலில் வரும் கதை இது:
ஒரு வலையன் வள்ளிக்கிழங்கு தேடி அழகர்மலைக்கு வருகிறாள்.
- “தென்சாதி லேவதி ஆங்கோரிடத்தில் தேமாமரத்தடியில்
- சங்கூதமாய மரவள்ளி ஒன்று சதிராய் முளைத்திருக்க அதைக்
- கண்டான் வலையமகன் கடப்பாரை நீட்டிக்கடினமுடன் தோண்டலுற்றான்”10
கிழங்கு பெரியதாயிருந்தது; பெருமாள் சிரகபோல் இருந்தது; வெகுநேரம் கிள்ளினான்; சூரியன் மறையவே மலையைவிட்டு வீடு வந்து தூங்கி, காலையில் வடக்குமுகமாய் எழுந்தான்; மலைக்குப் போய் பெருமாள் சிரசிலுற்ற பெருங்கிழங்கைத் தோண்டிவிட்டான்; மண்ணுக்குள் இன்னும் கிழங்கின் பகுதி இருப்பதுபோல் தோன்றவே ஆணிக்கிழங்கையும் எடுக்கவேண்டுமென்று,
- “.... கடப்பாரையாலே இடறினான் உட்கிழங்கை
- கடப்பாரை தைத்திடவே அரிஓம் நமோ நாராயணன் சிரசில் கடுகி ரத்தம் வந்திடவே”11
வலையன் பதறிப்போய் கானகம் தாண்டி வீடுவந்துவிட்டான். யாருடனும் பேசவில்லை. அவனுக்குச் சாமிவந்து ஆடினான்; குறி சொன்னான்: பிள்ளைவரம் கொடுத்தான்.
செய்தியறிந்த பாண்டிய மகாராசன் மதுரையிலிருந்து சேனையோடு வந்தான். வலையனை “மேளதாளம் முழங்க அழைத்துக் கொண்டு மலையடிவாரத்தில் கிழங்கெடுத்த பள்ளம் நோக்கி வந்தான். பள்ளத்தை நெருங்கியதும் ஞானத்திரு நெடுமாயன் இருக்குமிடத்தில் நாடியவ்வலையன் ஓடிக் குலவையிட்டான்” அந்த இடத்தில்.
“.... ஆண்ட சாமியவர் கிருஷ்ணவதாரராய்
இனங்குமரனைப்போல் பொன்ராமத்தோடே
இருந்தார் செகமளந்தோர் எம்பெருமான்”11
அரிசனங்களை ஒத்த சமுகநிலை உடையவர்களென்றாலும். வலையர்கள் அரிசனங்களைப் போல வைணவ சமயச்சார்பு (religious identity) பெறுவதில் நாட்டம் கொள்ளவில்லை. இவர்கள் ஒரு குருவினை ஏற்று வைணவ அடியாராக வருவதோ நெற்றியில் திருமண் இடுவதோ இல்லை. அதிகமாக வைணவப் பெயர்களை இடும் வழக்கமும் இவர்களிடத்தில் இலலை. மொத்தத்தில் சமயச்சார்போடு கோயிலுக்குள் நுழைய இச்சாதியினர் முயன்றதில்லை எனத் தெரிகிறது. ஆய்வாளர் நடத்திய கள ஆய்விலிருந்து வேடமிட்டு வழிபடும் அடியவரில் மூன்று விழுக்காடே வலையர்கள் இருப்பதை அறிய முடிந்தது.
கள்ளர் சாதியினர் அழகர் ஊர்வலத்தை ஒரு காலத்தில் மறித்தவர்கள். வலையர்களும் கோயிலில் ஒருமுறை கொள்ளையிட்டிருக்கின்றனர். ஒரே நிலப்பகுதியிலேயே இரு சாதியினரும் வாழ்கின்றனர். இருப்பினும் பிற்காலத்தில் கோயில் நடைமுறைகளில் கள்ளர்க்குக் கிடைத்த பங்கும் மரியாதையும் வலையர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதற்கான காரணங்களை நோக்கவேண்டும். வலையர்கள் பொருளாதார நிலையில் இன்றளவும் வறியவர்களே. அக்காலத்தில் இவர்களது சமூகத்தகுதியும் (social status) ஏறத்தாழ அரிசனங்களோடு ஒத்ததாகவே இருந்தது. கோவிலையொட்டி ஐந்து மைல் சுற்றளவில் மட்டுமே வலையர் மிகுதியாயிருக்க, கள்ளர்களோ கிழக்கே இருபத்தைந்து மைல் தொலைவுவரை பெரும்பான்மையினராக உள்ளனர். கள்ளர்களைப் போலப் போர்க்குணமும் இவர்களுக்கு இல்லை. கள்ளர்களைப் பகைத்துக்கொண்டு சொத்துடைமை நிறுவனமான கோயில் அக்காலத்தில் நடக்க இயலாது. கோயில் பரம்பரை பிராமண ஊழியர்க்குக் கள்ளர் நாட்டுப் பகுதியில் இன்றளவும் நிலங்கள் உள்ளன. இவைபோல, கோயிலின் இயக்கத்தைத் தடைசெய்யும் எந்தச் சக்தியும் வலையர்களிடம் இல்லை. மேலும் கள்ளர்களின் ஆணையினைக் கோயில் பெற்றால், எண்ணிக்கைச் சிறுபான்மையினரான வலையர்கள் ஏதும் செய்யமுடியாது. எனவே கள்ளர்களை ஏற்றுக்கொண்ட கோயில், வலையர்களை எளிதாகப் புறந்தள்ளிவிட்டது.
கள்ளர்களைப்போல, தங்கட்குக் கோயிலில் பங்கில்லையே என்ற ஆத்திர உணர்வு வலையர்க்கு ஏற்படுவது இயற்கையே. இந்த ஆத்திர உணர்வு வெளித்தோன்ற முடியாத ஓர் எதிர்ப்புணர்ச்சியாகும். “எங்கே அநீதியும் அடக்குமுறையும் உள்ளனவோ அங்கே அவற்றிற்குப் பலியானவர்கள், நாட்டுப்புறப் பண்பாட்டியலில் தங்களுக்கு வடிகால் (solace) அமைத்துக்கொள்வதைப் பார்க்கலாம். அச்சமூட்டும், ஆனால் எதிர்க்க இயலாத தனியாரையோ நிறுவனத்தையோ நோக்கிய நாட்டுப்புற மக்களின் கோபமானது கேலிகள் (jokes). பாடல்கள், பழமொழிகள் இவற்றின் மூலமாக வெளிப்படுகிறது” என்பர் ஆலன் டண்டீஸ் (Alan Dundes).13 பிற சாதியினரோடு, குறிப்பாகக் கள்ளர்களோடு போட்டியிட்டுக் கோயில் நடைமுறைக்குள் நுழைய முடியாத நிலையில் வலையர்களிடம் சாமியைத் தாங்களே கண்டுபிடித்ததாகக் கதை நிலவியிருக்க வேண்டும். இதையே பொன்னுசாமி வித்துவான் பின்னொரு காலத்தில் வர்ணிப்புப் பாடலாகப் பாடியிருக்கவேண்டும் என்றெண்ணத் தோன்றுகிறது.
குறிப்புகள்
- 1. Rev. M.A. Sherring. Hindu Tribes and Castes, Vol. III, p. 143.
- 2. Edgar Thurston, Castes and Tribes of Southern India, Vol. VII, p. 274.
- 3. lbid., p. 274.
- 4. Ibid., p. 274.
- 5. Ibid. p. 273.
- 6. தகவலாளி : சேகர், கள்ளந்திரி, கள ஆய்வு நாள் : 27-11-1977.
- 7. தகவலாளி : ஆறுமுகம், கள்ளந்திரி, களஆய்வு நாள் 27-11-1977.
- 8. பார்க்க: பிற்சேர்க்கை எண் II : 2.
- 9. பார்க்க : பிற்சேர்க்கை எண் II : 4, வரி 83.
- 10. மேலது, வரிகள் 47—49.
- 11. மேலது, வரிகள் 58—59.
- 12. மேலது, வரிகள் 75—76.
- 13. “one of the most important function of folklore is its service as a vehicle for social protest. Whenever there is injustice and oppression, one can be sure tha the victims will find some solace in folklore. Through jokes, songs and proverbs, the anger of the folk is vent upon the often frighteningly unassailable individual or institution.”-Alan Dundes (Ed.), The Study of folklore, 1695, p. 3, Quoted by S.C.Sri Vastava, Folk Culture and Oral Tradition, p. 306.