அழகர் கோயில்/013
8. வர்ணிப்புப் பாடல்கள்
8. 0. அழகர்கோயிலை மையமாகக்கொண்டு எழுந்த நாட்டுப்புறப் பாடல்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. இவற்றுள் சில அச்சிடப்பட்டவை; ஆய்வாளர் கள ஆய்வில் திரட்டியவை அச்சிடப்படாதவையாகும். இவை எல்லாப் பாடல்களுமே ‘வர்ணிப்பு’ என்ற பெயரோடு விளங்குகின்றன.
8. 1. கிடைத்துள்ள வர்ணிப்புகள் :
1) அச்சிடப்பட்டவை
- 1. அழகர் வர்ணிப்பு (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு)
- 2. கிருஷ்ணாவதார வர்ணிப்பு
- 3. கூர்மாவதார வர்ணிப்பு
- 4. இராமசாமிக் கவிராயர் இயற்றிய ‘பெரிய அழகர் வர்ணிப்பு’
- 5. மொட்டையக்கோன் சிஷ்யர் சாமிக்கண்ணுக்கோனார் இயற்றிய ‘சோலைமலைக் கள்ளழகர் வைகையாற்றுக்கு வந்த தசாவதார வர்ணிப்பு’
- 6. மூக்கன் பெரியசாமிக்கோன் இயற்றிய ‘ஸ்ரீ கள்ளழகர் அட்டாக்கர மந்திர வர்ணிப்பு’
2) அச்சிடப்படாதவை
- 7. வர்ணிப்பு
- 8. ராக்காயி வர்ணிப்பு
- 9. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு
- 10. வலையன்கதை வர்ணிப்பு
இவை நான்கும் ஆய்வாளரால் கள ஆய்வில் ஒலிப்பதிவு செய்யப்பட்டவை
- 11. கையெழுத்துப்படியாகக் கிடைத்த கருப்பசாமி வர்ணிப்பு
- பிள்ளையார்பாளையம் சமயக்கோனார் வீட்டில் கிடைத்த பாடல் இது. முத்திருளமாமலை நாடாரால் இது எழுதப்பட்டது என அவர் கூறினார்.1
8. 2. ‘வர்ணிப்புப்பாடல்’-விளக்கம் :
ஒரு கதை அல்லது ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு செய்தி அல்லது ஒரு காட்சியினைப் பலப்பட வருணித்துக்கூறும் பாடல்கள் ‘வர்ணிப்பு’ ஆகும். ஒரு கதையினையோ அல்லது ஒரு நிகழ்ச்சியினையோ பாடவந்தாலும் அவற்றின் முக்கியத்தன்மையினை மறந்து, வருணித்துச் சொல்லும் பாங்கிலேயே இவை கருத்தூன்றும். எனவே ஒரு காட்சி வருணனை அல்லது பல காட்சி வருணனைகளின் தொகுப்பே வர்ணிப்புப் பாடல் எனப்படும்.
ராக்காயி வர்ணிப்பு, ராக்காயி தன் குழந்தைகளுடன் தன் அண்ணன் கருப்பசாமியைக் காணவரும் நிகழ்ச்சியினையும், அவன் அவளுக்குக் காட்சி தருவதையும் பாடுகிறது. பாடல் முழுவதும் இந்த ஒரு நிகழ்ச்சியே விரித்து வருணிக்கப்படுகிறது.
வர்ணிப்புப் பாடல்கள் ஒரு கதையினைக் கூறும்போதுகூடக் கதைப்பாடல் (ballad) என்ற தகுதியைப் பெற இயலாதவை. ஒரு கதைப் பாடலுக்குரிய தோற்றம், வளர்ச்சி, உச்சம் முதலிய படி நிலைகள் வர்ணிப்புப் பாடல்களில் இருப்பதில்லை. எல்லாச் செய்திகளையும் உணர்ச்சிகளில் ஏற்ற இறக்கமின்றி, நாடகத் தன்மை இன்றி, ஒரே சீராக இவை பாடிச்செல்லும். குறிப்பிடத்தகுந்த இந்த வேறுபாட்டினால் வர்ணிப்புப் பாடல்களைக் கதைப்பாடல்கள் எனவும் மதிப்பிடமுடியாது.
‘பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி’ என்ற வர்ணிப்புப் பாடல் கோயிலைக் கொள்ளையிடவந்த பதினெட்டுப்பேர் பிடிக்கப்பட்டு, வெட்டிப் புதைக்கப்பட்ட கதையினைக் கூறுகிறது. பதினெட்டு லாடர்களையும் பலபட வருணிக்கும் இப்பாடல் மந்திர தந்திரங்களில் வல்ல இப்பதினெட்டுப்பேரையும் நாட்டார்கள் வெட்டிப் புதைந்த நிகழ்ச்சியினை-கதையின் உச்சமான பகுதியினை-இரண்டே அடிகளில் சொல்லிவிடுகிறது.
8. 3. பாடப்பெறுவன - படிக்கப்பெறுவனவல்ல :
சாதாரண நாட்களில் பாடக்கேட்டு மகிழவும், திருவிழா நேரங்களில் ஒருவர்மீது சாமி இறங்கச் செய்யவும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. எனவே வர்ணிப்புப் பாடல்களின் சுவையும் பயனும் பாடுபவரின் குரல் வளத்தைப் பொறுத்து அமையுமே தவிரப் பாடலின் கதைப்பொருளைப் பொறுத்தல்ல. ஒருவர் மீது சாமி இறங்கச் செய்ய முழுப்பாடலையும் பாடவேண்டிய தேவை இல்லை. பத்துப்பதினைந்து அடிகள் பாடுமுன்னரே சாமி இறங்கிவிடுகிறது; பாடல் நிறுத்தப்படுகிறது. எனவே இந்தப் பாடல்கள் பாடவும் கேட்கவும் படுவனவே தவிர, படிக்கப்பெறுவனவல்ல என்பதை உணரலாம்.
8. 4. ஆசிரியர்கள் :
அச்சிடப்பட்ட அழகர் வர்ணிப்பு கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, கூர்மாவதாரன் வர்ணிப்பு ஆகியவற்றைப் பாடிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. ஆய்வாளர் ஒலிப்பதிவு செய்த நான்கு வர்ணிப்புகளில் மூன்றில் ஆசிரியர் பெயர் பாடலுக்குள்ளேயே வருகின்றது. ராக்காயி வர்ணிப்பினையும் (8) பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பினையும் (9) மொட்டையக்கோன் என்பவர் பாடியுள்ளார். வலையன் கதை வர்ணிப்பினைப் (10) பாடியவர் பொன்னுசாமி வித்துவான் என்பவர் ஆவார், அச்சிடப்படாத அழகர் வர்ணிப்பின் (7) ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஸ்ரீ கள்ளழகர் பக்தர்கள் வர்ணிப்பாளர்கள் மகாசபையின் வரவு செலவுப் புத்தகத்தில் ‘வர்ணிப்பு உபாத்தியாயர்கள்’ எனப் பதினொருபேர் குறிக்கப்பட்டுள்ளனர்.2 1. கருப்பணப்புலவர், 2. நாகலிங்கக்கோன், 3. மொட்டையக்கோனார். 4. ஆறுமுகக்கோனார். 5. ராசாக்கோனார், 6. முத்திருளமாமலை நாடார், 7. மகாலிங்கம் பிள்ளை, 8. வீரணன் கோடாங்கி, 9. கன்னையாக்கோனார், 10. வீரையாபிள்ளை, 11. ஸ்ரீகுழந்தைதாசர் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆகியோர் மகாசபைப் புத்தகம் குறிக்கும் ஆசிரியர்களாவர். இவர்கள் தவிர முற்குறித்த இராமசாமிக் கவிராயர், மொட்டையக்கோனாரின் சிஷ்யர் சாமிக்கண்ணுக்கோனார், மூக்கன் பெரியசாமிக்கோனார் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
மூக்கன் பெரியசாமிக்கோனார் தவிர யாரும் தற்போது உயிருடன் இல்லை. வாய்மொழிச் செய்திகளின்படி இவர்களனைவரும் கடந்த எண்பதாண்டுகளுக்குள் வாழ்ந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது.
கருப்பணப்புலவர் அரிசன வகுப்பினர்; வீரணன் கோடாங்கி கோனார் சாதியினர்; பொன்னுசாமி வித்துவான் நாயக்கர் சாதியினர் என மகாசபைத் தலைவர் தெரிவித்தார். இராமசாமிக் கவிராயர் உவச்சர் சாதியினர் என அவரெழுதிய பெரிய அழகர் வர்ணிப்பு நூலில் குறிக்கப்படுகிறார். ஸ்ரீ குழந்தைதாசர் ஸ்ரீவெங்கடேஸ்வரர் எச்சாதியினர் எனத் தெரியவில்லை.
8. 5. பக்தர்-வர்ணிப்பாளர் மகாசபை-வரலாறு :
‘ஸ்ரீகள்ளழகர் பக்தர்கள் வர்ணிப்பாளர் மஹாசபை’ என்ற அமைப்பு 1966 ஆம் ஆண்டு மதுரை மதிச்சியம் ஆறுமுகக்கோனாரால் தொடங்கப்பெற்றுள்ளது. இச்சபையின் வரவு - செலவுப் புத்தகத்தில், ‘வர்ணிப்பு உபாத்தியாயர்கள்’ என அச்சிடப்பட்ட பகுதியில் இவரும் ஒரு வர்ணிப்பு உபாத்தியாயராகக் குறிக்கப்பட்டுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் எவையெனத் தெரியவில்லை. பாடுவதில் மட்டும் இவர் வல்லவராகப் பேசப்படுகிறார். இவர் காலமான கி.பி. 1978ஆம் ஆண்டு வரை இவரே இச்சபையின் தலைவராக இருந்துள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் மதுரை, தத்தநேரி வி. எம். பெரியசாமிக்கோன் தலைவராக இருந்து வருகிறார். பதிவு செய்யப்படாத இச்சபைக்குச் செயலாளரும் பொருளாளரும் உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் வைகைக்கரையில் இராமராயர் மண்டபத்திற்கு எதிரில் சபையின் சார்பில் ஒரு திருக்கண் ஆண்டுதோறும் அமைக்கப்படுகிறது. சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் மதுரையில் முடிந்து அழகர்கோயிலுக்கு இறைவன் திரும்பும்போது இவர்கள் பாடிக்கொண்டே பின்னால் செல்கிறார்கள். மறுநாள் தங்கள் சபையின் செலவில் இறைவனுக்குப் பூசை நடத்தி அன்னதானம் செய்கிறார்கள். அதற்கடுத்த நாள் நடைபெறும் இறைவன் திருமஞ்சன விழாவிலும் இவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
சபையின் செலவுக்காக, சித்திரைத் திருவிழாவிற்குச் சில நாட்கள் முன்னதாகவே உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் பணமும் அரிசியும் வசூல் செய்கிறார்கள். சபையின் அச்சிட்ட வரவு-செலவுப் புத்தகத்திலிருந்து முசுலிம்களிடத்திலும், கிறித்தவர்களிடத்திலும் கூட இவர்கள் வசூல் செய்திருப்பது தெரிகிறது.
இச்சபையின் 1978 ஆம் ஆண்டு வசூல் வரவு 5011 ரூபாய் செலவு 4264 ரூபாய். திருவிழாவுக்கு ஒருமாத காலம் முன்னும் பின்னுமாக ஆண்டுக்கு இரண்டு கூட்டங்கள் நடைபெறுகின்றன. சபைக்கு வேறு அலுவல்கள் இல்லை.
புதிய தலைவர், 18.6.1978 இல் நடத்திய சிறப்புக் கூட்டத்தில் ஆய்வாளர் கலந்துகொண்டபோது, அங்கு கூடிய அனைவருமே வர்ணிப்பாளர்கள் நாம் என்பதை அறிய முடிந்தது. ஆயினும் ஒரு பாடலினை முழுவதும் பாடத் தெரிந்தவர்கள் அங்கு விரல்விட்டு எண்ணுமளவிலேயே இருந்தனர்.
ஒன்றிரண்டு வர்ணிப்பு நூல்கள் அச்சேறியவுடன் இவர்களில் வாசிக்கத் தெரிந்தவர்கள் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டனர். எனவே அச்சேறாத பாடல்களையும் மறந்துவிட்டனர். சாமி இறக்குவதற்கும் ஒருசில அடிகளே போதுமானதாகி விடுகின்றன. மேலும் திருவிழாக் காலங்களில் மட்டுமே இப்பாடல்கள் நினைக்கப்பட வேண்டியதிருப்பதால் இவர்கள் பாடல்களை மறந்துபோவது எளிதாயிற்று. எனவே அச்சேறாத பல வர்ணிப்புகள் மறைந்து விட்டன. இதன் விளைவாகப் பெரும்பாலோர் முன்னும் பின்னும் தொடர்பில்லாத சில அடிகளையே திரும்பத்திரும்பப் பாடிவருகின்றனர்.
பிறவிக் குருடரான மாரியப்பன் என்பவர் மட்டும் வர்ணிப்புப் பாடல்களைப் பாடுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார். அவர் ஒருவரே பாடல்களை முழுமையாகவும் தெளிவாகவும் பாடுகிறார். தொழில்முறைப் பாடகராக வேறுயாரும் இல்லை.
நாற்பத்திரண்டுபேர் கூடிய இக்கூட்டத்தில் இவர்கள் அனைவருமே நடுத்தர வயதினராகவும், முதியவர்களாகவுமே உள்ளனர். இளைஞர்கள் பாடுவதை நாகரிகக்குறைவு எனக் கருதுகின்றனர் எனச் சங்கத் தலைவர் கூறினார். அனைவரும் நெற்றியில் தென்கலைத் திருமண் (திருநாமம்) அணிகின்றனர்; சாதி வேறுபாடுகள் கருதப்படுவதில்லை. ஆயினும் ‘கோனார்’ சாதியினர் கணிசமாக உள்ளனர்.குறைந்த அளவு பள்ளிக்கல்வி உடையவர்களாகவே அனைவரும் காணப்படுகின்றனர். பெரும்பாலோர் விவசாயிகள்; சங்கத் தலைவர் கிராமமுனிசீப் ஆகவும், மற்றெருவர் அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளராகவும் பணியாற்றுகின்றனர் அனைவருமே மதுரைக்குப் பத்து மைல் சுற்றளவில் வசிப்பவர்களே என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.3
8. 6. வர்ணிப்புகளின் மூலம் :
ஒன்றுக்கு மேற்பட்ட வர்ணிப்புக்களைக் காணும்போது இவ்வகையான பாடல் நூல்கள் தமிழில் எங்கிருந்து இவ்வடிவத்தைப் பெற்றன என்பது இயல்பாகவே எழும் கேள்வியாகும். ‘வர்ணிப்பு’ என்ற தனிச்சிற்றிலக்கிய வகை தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் இப்பாடல்கள் பிற எல்லாவகையிலும் மரபு வழிப்பட்டன என்பதால் இவற்றின் வடிவ மூலமும் தமிழில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
8. 7. வர்ணிப்பாளர் கருத்து :
வர்ணிப்பாளர் மகாசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு முதியவர்ணிப்பாளர், ‘சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானைதான் வர்ணிப்புகளுக்கெல்லாம் மூலம்’ என்று கூறினார்.4 இவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். எனவே இவர் பாகவத அம்மானையைப் படித்திருக்க இயலாது. எனவே இச்செய்தி வர்ணிப்பாளர்களிடையே செவிவழிச் செய்தியாகவே நிலவியிருக்க வேண்டும். எனினும் இவர் கூற்று ஆய்விற்குரியதே.
8. 8 பாகவத அம்மானை :
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஒன்பது கந்தங்களை மு. மாரியப்பக்கவிராயர் என்பவர் தமிழில் அம்மானையாகப் பாடினாரென்றும், பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் கந்தங்களை சங்கரமூர்த்திக்கோனார் பாடினாரென்றும், சங்கரமூர்த்திக்கோனார் பாடிய ஸ்ரீமத் பாகவத அம்மானையின் வெளியீட்டாளர் தரும் குறிப்பால் அறிய முடிகிறது.5 சங்கரமூர்த்திக்கோனார் பாகவத அம்மானையினைப்பாடி, சகம் 1739 இல் (கி. பி. 1817இல்) மதுரை யாதவர்கள் ராமாயணமண்டபத்தில் (வடக்குமாசி வீதியிலுள்ளது) ‘சொர்க்க வாசல் ஏகாதசி’ (வைகுண்ட ஏகாதசி) யன்று அரங்கேற்றியுள்ளார்.6 இந்நூல் பாகவத அம்மானையின் இரண்டாம் புத்தகமாக 1932இல் இராம. குருசாமிக்கோன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்புப் பாயிரத்தால், சங்கரமூர்த்திக்கோனார் பாகவதத்தின் கண்ணன் திருவவதாரம் தொடங்கும் பத்தாம் கந்தம் முதல் பன்னிரண்டாம் கந்தம் முடியப் பாடிய பின்னரே, மாரியப்பக் கவிராயர் முதல் ஒன்பது கந்தங்களைப் பாடினார் என்ற செய்தியை அறிகிறோம்.7 மாரியப்பக்கவிராயர் பாடிய நூல் இப்போது கிடைக்கவில்லை.
8. 9. பாகவத அம்மானை அமைப்பு :
சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானை முதனூலோ, வழிநூலோ, தழுவல் நூலோ அன்று. செவ்வைச்சூடுவார் இயற்றிய பாகவதத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் கந்தங்களில் உள்ள 82 அத்தியாயங்களின் 2335 பாடல்களையும் வரிசை பிறழாமல் மிகக்குறைந்த எழுத்தறிவுடையோரும் புரிந்துகொள்ளும்படி எளிய நடையில் பாடியுள்ளார். எழுத்தறிவில்லாதவரும் இதை வாசிக்கக் கேட்டால் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
சில இடங்களில் சில நிகழ்ச்சிகளைத் தன் சொத்தக் கவிதையால் வருணித்துள்ளார். நாற்பது ஐம்பது அடிகளுக்கொருமுறை செவ்வைச்சூடுவார். பாகவதத்தின் கதைத்தொடர்புடைய விருத்தத்தை அப்படியே கொடுத்துள்ளார். இனி எடுத்துக்காட்டுகளோடு இவற்றைக் காணலாம்.
தொடக்கம் :
“பருதி வானவன் மரபொடு பானிலாந் திங்கள்
மரபு கேட்டவேன் மன்னவன் மதிமர புதித்த
ஒருத னிச்சுடர் திருவிளை யாட்டெலாமுள்ளம்
தெருளக் கேட்பது விரும்பினன் செப்பலுற்றனளால்8
(பாகவதம்)
சூரியன்றன் வங்கிஷத்தும் சந்திரன்றன் வங்கிஷத்தும்
சீரியன்ற வேந்தர் செயலெல்லாங் கேட்டமன்னன்
சந்திர குலத்தில் தயவாக வந்துதித்த
செந்திருமால் செய்யும் திருவிளையாட்டத்தனையும்
கேட்க மிகவிரும்பிக் கெம்பீரமாய் மகிழ்ந்து
நாட்கமல மாமுகந்தான் நற்சுகனைப் பார்த்துரைப்பான்”
(பாகவத அம்மானை)
“அரவு யர்த்தவ னாடலம் படைக்கட லைவர்
ஒருகு எப்படி யாம்படி கடப்பவோர் புணையாய்க்
கருவின் மற்றெனைக் காத்தசெந் தாமரைக் கண்ணன்
பொருவின் மாக்கதை விரித்தனை புகலெனப் புகன்றான்”10
(பாகவதம்)
“திரியோதன ராஜன் சேனைப் பெருங்கடலை
அருகோர் குளம்படிபோ லைவர்கடக் கும்படிக்கு
தெப்ப மதுவாகிச் சிறியேன் பொருட்டாக
கெற்பமதில் வந்து கிருபைசெய்து தற்காத்த
எங்கோன் திருவிளையாட் டெல்லாஞ் சொல்வாயெனவே”11
(பாகவத அம்மானை)
இவ்வாறே பாகவதத்தின் ஒவ்வொரு பாடலையும் எளிய கவிதையாக்கிச் செல்லும் இம்முறையினைக் கடைசிப்பாடல் வரையில் சங்கரமூர்த்திக்கோனார் கையாளுகிறார்.
முடிவு :
“கனைத்துவண் டிமிர்துழாய்க் கண்ணன் மாக்கதை
மனத்துற வழங்குநர் மகிழ்ந்து கேட்குநர்
வினைத்திருக் கற்றுறு மெய்ம்மை யாதியா
நினைத்தன பெற்றிவண்நீடு வாழியே”12
(பாகவதம்)
“புனத்துளவ மாலைப் புருடோத்தமன் கதையை
மனத்தில் மகிழ்ச்சிபெற வாகாய்ப் படிப்பவரும்
இனித்தமு துண்பவர்போ லின்புற்றே கேட்பவரும்
நினைத்தவரம் பெற்றுலகில் நீடூழி வாழியவே”13
(பாகவத அம்மானை)
சில இடங்களில் சங்கரமூர்த்திக்கோனார் பாகவதம் கூறும் கதை நிகழ்ச்சியினைத் தன் கவிதையால் விரித்துக் கூறுகின்றார். கண்ணன் உரோகினி நாளில் பிறக்கிறான். இச்செய்தியினைக் கூறியபின்,
- “பெற்றதாய் தந்தைமுன்னாட் பேர்பெறச்செய் மாதவமோ
- குற்றமிலாச் சந்த்ர குலமுன்செய் மாதவமோ
- உத்தமனட்பாக முன்னா ளுத்தவன்செய் மாதவமோ
- சித்திரப்பொற் றேர்நடத்தத் தேர்விஜயன் செய்தவமோ
- அன்பின் முலையூட்ட வசோதைசெய்த மாதவமோ
- நம்பியைய னென்றழைக்க நந்தகோன் செய்தவமோ”14
என வரும் அம்மானைப் பகுதி சங்கரமூர்த்திக்கோனாரின் கவிதையாகும். செவ்வைச்சூடுவார் பாகவதத்தில் இப்பகுதி இல்லை. இவ்வாறு வருணித்தபின், ‘தாமரைக்கர நான்கில் வெண்சங்கொடு’ எனத் தொடங்கும் செவ்வைச்சூடுவார் பாகவதப் பாடலை அப்படியே சொல்லிவிட்டு, அதைத் தன் கவிதையில்.
- “சங்கொருகை தண்டொருகை சக்ரா யுதமொருகை
- அங்கொருகை மீதில் அலர்தா மரைதுலங்க”15
என விளக்குகிறார்.
மேற்குறித்த ஒப்புமைப் பகுதிகளிலிருந்து, பாகவத அம்மானை பாகவதத்தின் ‘வழி நூல்’ என்றோ, ‘தழுவல் நூல்’ என்றோ குறிப்பிட முடியவில்லை. உவமைகளைக்கூட அப்படியே எடுத்தாளுவதால். இப்பெயர்கள் இதற்குப் பொருந்துவனவாயில்லை. வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையிலமைந்த நம் பிள்ளை ஈட்டினைத் தமிழில் மட்டும் எழுதி அதனை ‘ஈட்டின் தமிழாக்கம்’ எனப் பெயரிட்டழைப்பர் ரா. புருஷோத்தமநாயுடு.16 பாகவத அம்மானை, தமிழிலிருந்தே எளிய தமிழ் நடைக்கு மாற்றப்பட்ட கவிதை நூலாகும். எனவே இதனைப் ‘பாகவதத்தின் எளிநடையாக்கம்’ எனக் குறிப்பிடலாம்.8. 10. பாகவத அம்மானையும் வர்ணிப்புப் பாடல்களும் :
இனி, பாகவத அம்மானைக்கும் வர்ணிப்புப் பாடல்களுக்கும் உள்ள தொடர்பினைக் காண முற்படவேண்டும்.
1. சங்கரமூர்த்திக்கோனார் பெயரும், அவர் அம்மானை என்ற பெயரில் திருமாலின் கதையினைப் பாடிய செய்தியும் வர்ணிப்புப் பாடலில் பேசப்படுகிறது.
- “கொங்கார் துலவணிந்தோன் (Sic) சுதையை
- அம்மாணை (Sic) யதாய்க் குவலயத்திலே வகுத்த
- சங்கரமூர்த்திக்கோன் பாதார விந்தமதைச்
- சாஸ்டாங்கமாய்ப் (sic) பணிந்தேன்”17
என ஸ்ரீ கள்ளழகர் அட்டாக்கரமந்திர வர்ணிப்பு ஆசிரியர் அவையடக்கம் கூறுகிறார். அவையடக்கப் பகுதியில் வரும் இவ்வடிகள் குருவணக்கம் போல அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2. கண்ணன் திருவவதார நாளை,
ஒளிமணி வண்ணத்தண்ணல் உதித்தன னுரோணிதன்னில்18 எனச் செவ்வைச்சூடுவார் பாகவதம் கூறும். சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானை இச்செய்தியினை.
- ஆவணி மாதத்தி லமரபக்ஷத் தஷ்டமியில்
- மேவு முரோகணியில் மீறிடப லக்கினத்தில்.19
என மாதமும், பட்சமும் (பிறை), திதியும் (பிறைநாள்), லக்னமும் (ஓரையும்) கூறி விரித்துப் பாடும். வர்ணிப்பு ஆசிரியர்கள் இந்த அடிகளை அப்படியே எடுத்தாளுகின்றனர்.
அமரபட்சம், இடப லக்கனம் முதலிய துல்லியமான செய்திகளைக் குறைந்த கல்வியறிவே பெற்று, ஓசை வரம்பையே யாப்பு வரம்பாகக் கொண்ட வர்ணிப்பு ஆசிரியர்கள் பாகவத அம்மானையிலிருந்தே பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
3. கண்ணன் அரக்கியான பூதனையிடம் பால்குடித்து அவளை மடிந்து வீழச் செய்கிறான். மடிந்து வீழ்ந்த அவளுடலை ஆய்ப்பாடி மக்கள் எடுத்து எரியூட்டுகின்றனர். இந்நிகழ்ச்சியைப் பாடும் செவ்வைச்சூடுவார், தம் பாகவதத்தில் தம் கற்பனையில் ஒரு செய்தினைக் கூறுகின்றார். கண்ணன் வாய்வைத்து முலையருந்திய காரணத்தால் பூதனையின் உடல் எரிகின்றபோது மணம் வந்ததாம்.
- “மேதகு கடற்பவளம் வென்றுமிளிர் செவ்வாய்
- ஆதிகதிர் மாமுலை யருந்திய திறத்தால்
- பூதனை யுடற்சுடு புகைப்படல மண்டிக்
- காதமொரு நான்குவிளை காரகில் கமழ்ந்த”22
இச்செய்தியினைப் பாகவத அம்மானை,
- “உம்பர்தமக் கன்றமுர்த முண்ணவருள் கண்ணனங்கே
- செம்பவள வாய்திறந்து செய்யமுலை யுண்டதனால்
- பூதனையாள் தேகப் புகைதான் கமகமெனக்
- காதமொரு நான்குங் கமழுமகில் மாமணமே”23
எனப் பாடுகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு இச்செய்தியினை,
- “பூதனை தன் பேருடலை செந்தணலை மூட்டிப்
- பொசுக்கலுற்றா ராயரெல்லாம்
- நாதன் வாய் வைத்ததனால் நான்கு காதமட்டும்
- நற்களபந்தான் மணக்க”24
எனப் பாடுகின்றது.
செவ்வைச்சூடுவாரின் பகவதம், பாகவத அம்மானை வழியாக, வர்ணிப்பு ஆசிரியர்களிடம் தன் செல்வாக்கினைப் பதித்திருப்பதற்கு இப்பகுதி எடுத்துக்காட்டாகும்.பாகவத அம்மானை ஆசிரியர் நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் வருணிப்பதிலும் வர்ணிப்புப்பாடல் ஆசிரியர்களுக்கு வழி காட்டியுள்ளார். செவ்வைச்சூடுவார் பாகவதப் பாடல்கள் தரும் செய்திகளை எளிய நடையில் கவிதையாக்கிய பின் அவற்றைத் தமது கவிதையில் பாகவத அம்மானை ஆசிரியர் சில இடங்களில் விரித்து வருணித்துள்ளார். அவ்வகையிலமைந்த ஒரு பகுதியை வர்ணிப்புப் பாடல்களோடு ஒத்திட்டுக் காண்பது இக்கருத்தை நன்கு விளக்கும்.
தேவகியைத் திருமணப் பெண்ணாக அலங்கரித்த நிகழ்ச்சியைப் பாகவத அம்மானை ஆசிரியர் வருணிக்கிறார் இது செல்லைச்சூடுவார் பாகவதத்தில் இல்லாத வருணனையாகும்.
- “சொருகுங் குழலில்முத்துத் தொங்கலிட்டுக் குப்பியிட்டு
- நெற்றிக்கிப் (Sic) பொட்டுமிட்டு நீள்விழிக்கி (Sic) மையுமிட்டு
- வெற்றிப்பிறைபோல் விளங்கு முருகுமிட்டு
- காதுக்குத் தோடுமிட்டு கற்பதித்த கொப்புமிட்டு
- சோதிக் குமிழ்மூக்கிற் தூக்குமூக் குத்தியிட்டார்
- முத்துச்சரமும் முழுப்பவளத் தாவடமுங்
- கொத்துச் சரப்பளியும் கோர்வையதாய் மார்பிலிட்டார்
- மாதனத்தால் வாடும் மருங்கிலொட்டி யாணமிட்டு
- பாதசரந் தண்டையொடு பாடகமுங் காலிலிட்டார்”25
முருகு, கொப்பு முதலிய காதணிகள் இன்று பெரும்பாலும் பிற்பட்ட சாதியார் அணியும் நகைகள் ஆகும். தம்மைச் சுற்றியுள்ள மக்களின் தன்மையையே தம் காவியப் பாத்திரத்துக்கும் எற்றிக் காட்டுகிறாரேயன்றி ‘உயர்ந்த’ சாதியினராகக் கற்பனை செய்யப் பாகவத அம்மானை ஆசிரியரால் இயலவில்லை.
இனி ‘அலங்கரித்தல்’ என்ற நிகழ்ச்சி வர்ணிப்புப் பாடல்களில் எப்படிக் காணப்படுகின்றது என ஒத்திட்டுக் காண்போம்.
அழகராகிய திருமால், மதுரைக்குப் புறப்படும்முன் அவரை அலங்கரிக்கின்றனர், இந்நிகழ்ச்சியினை.
- “இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்
- இசையும்படி தானணிந்து
- கைதனிலே பாசிபந்து கரியமால் வண்ணன்
- கணையாழி தானணித்து
- இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு
- இருபுறமும் பொன்சதங்கை
- காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு
- காலில் பாடகமிட்டார்”26
என்று தசாவதார வர்ணிப்பு பாடுகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு இந்நிகழ்ச்சியினை,
- “முத்தணிந்த குல்லாவைச் சுந்தரராஜனுக்கு
- முடிமேல் புனைந்தார்கள்
- நெற்றியில் பொன் நாமமிட்டார் நீலமேகத்திற்கு
- நீலமுருகு மணிந்தார்
- வயிரக்கடுக்கனிட்டார் பச்சைமால் தனக்கு
- மார்பில் பதக்கமிட்டார்”27
என வருணிக்கும். இதே நிகழ்ச்சியைப் பெரிய அழகர் வர்ணிப்பு,
- “முந்தியசவ் வாததனால் மோகினி சொரூபனுக்கு
- முன்முகத்தில் பொட்டுமிட்டு
- சார்ந்த மரகதத்தால் சங்காழிக் கையனுக்கு
- தான்மேல் முருகுமிட்டு
- வார்த்த மாணிக்கமதால் மாமுகில் வண்ணனுக்கு
- வண்டிக் கடுக்கனிட்டு
- வைத்த கணையாழிதனை மரகத மேனிக்கடவுள்
- மணிவிரலின் மேலணிந்து”28
என வருணித்துப் பாடுகின்றது.
‘அலங்கரித்தல்’ என்ற ஒரே நிகழ்ச்சியைப் பலபட வருணிக்கும் பாங்கு, பெருங் கவிஞர்களைப்போல ஒரு தொழிலுக்குப் பல வினைச் சொற்களைப் பயன்படுத்தித் தம் சொல்வளத்தைக் காட்டாமல் ‘இடுதல்’ என்ற ஒரே வினைச்சொல்லையே பயன்படுத்தும் முறை, தாமறிந்த கொப்பு, முருகு, வண்டிக்கடுக்கன் ஆகிய அணிகளின் பெயர்களையே கூறல், ஓசை வரம்பின்றி வேறு மரபிலக்கண வரம்பமையாமை- இவையனைத்தாலும் பாகவத அம்மானைப் பாடலும் வர்ணிப்புப் பாடல்களும் ஒரே வகையான நடை அமைப்பினை உடையனவாய் இருப்பதை உணரலாம்.பாகவத அம்மானை ஆசிரியருக்கும், வர்ணிப்பு ஆசிரியர்களுக்கும் சொற்களைப் பயன்படுத்தும் முறையிலும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. நாட்டுப்புற மக்களின் உணர்வலைகளை அவர்கள் பயன்படுத்தும் சொற்களிலேயே கவிதையாக்குவதும் ஓசை வரம்பையே யாப்பு வரம்பாகக் கொண்டு பாடுவதும் இவர்கள் நாட்டுப்புறக் கவிஞர்கள் என்பதைக் காட்டுகின்றன.
செவ்வைச்சூடுவாரின் பாடல்களையே எளிய நடைக்கு மாற்றினாலும் பாகவதம்மானை ஆசிரியர்க்கு வங்கிஷம், கெப்பிரம் கெற்பம், திரியோதன ராஜன், அன்பு வைத்துக்கேளும், சொல்லக்கேளும் முதலிய பேச்சுமொழிச் சொற்களையும் சொல்லமைப்பையும் தவிர்க்க முடியவில்லை.
கார்த்தாய், மாயனுடகதை, துகை, பேய்ரம்பை (ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு) களவாண்டு, திரியோதரன், தேவாமுர்தம் (கூர்மாவதாரன் வர்ணிப்பு) சருபேஸ்வரன், தெண்டித்து, ஆச்சியர் (பெரிய அழகர் வர்ணிப்பு), தொழுவு, கெந்திருவாள், கருவேலம் (அழகர் வர்ணிப்பு (1)), முதலிய பேச்சு வழக்குச் சொற்களை வர்ணிப்பு நூல்களில் நிறையக் காணலாம்.
வர்ணிப்புப் பாடல்களில் ஓரிரண்டு சொற்களில் அல்லது ஓரிரண்டு அடிகளில் கண்ணனது பெருமையாகப் பேசப்படுவனவெல்லாம் அவனது ஆய்ப்பாடித் திருவிளையாடல்களே. கண்ணன் ஆய்ப்பாடி வருதல், பூதனையாள் முத்தி பெறுதல், கண்ணன் சகடமுதைத்தல், மருதிடைத் தவழ்தல், அரவின்மேலாடல், கோவியர் துகில் கவர்தல், குன்று குடையாக எடுத்தல், கஞ்சனைக் கொல்லல் ஆகிய நிகழ்ச்சிகளே வர்ணிப்புப் பாடல்களில் மீண்டும் மீண்டும் பேசப்படுவனவாகும். இவையனைத்தும், சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானையின் முதற் கந்தத்தில் (பாகவதத்தின் பத்தாம் கந்தம்) தனித்தனி அத்தியாயங்களாக விரித்துப் பாடப்பட்டுள்ளன.
பாகவத அம்மானையையும், வர்ணிப்புப் பாடல்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது நமக்குக் கிடைக்கின்ற செய்தி இதுவேயாகும் : கண்ணனின் திருவிளையாட்டுச் செய்திகள் நாட்டுப்புறமக்கள் அறியாதவையல்ல. எனினும் கதைகளின் நுணுக்கமான சில செய்திகளும், சில பாத்திரப் பெயர்களும் நாட்டுப்புற மக்கள் அறியாதவையே. இவற்றை விரித்து விளக்கிக் கூறும் செவ்வைச்சூடுவாரின் பாகவதம் இலக்கியப் பயிற்சி உடையவர்களே உணர்ந்து சுவைக்கும் தரமுடையதாகும். நாட்டுப்புற மக்களும், நாட்டுப்புறக் கவிஞர்களும் எழுத்திலக்கியப் பயிற்சியும், யாப்பு அறிவும் பெறாதவர்கள். அவர்கள் பாகவதத்தை நேரடியாகப் படித்துணர்ந்து சுவைக்கவியலாது சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானை பாகவதத்தின் ஒவ்வொரு பாடலையும் நாட்டுப்புறமக்கள் கேட்டுச் சுவைக்கும் வண்ணம் மிக எளிமையாக்கியதோடு, இடையிடையே சில நிகழ்ச்சிகளை நாட்டுப்புறக் கவிதை நடையில் விரித்தும் கூறுகிறது. எனவே செவ்வைச்சூடுவாரின் பாகவதம் கூறும் அனைத்துச் செய்திகளும் நாட்டுப்புறக் கவிஞர்க்கும் மக்களுக்கும் பாகவத அம்மானை வழியாக எளிதிற் கிடைத்திருக்கின்றன. செவ்வைச்சூடுவாரின் பாகவதத்திற்கும் நாட்டுப்புறக் கவிஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியினைப் பாகவத அம்மானை பாலமாக நின்று இணைத்திருக்கின்றது. இதன்வழி, வர்ணிப்பு ஆசிரியர்கள் தங்கள் கதைச் செய்திகளைப் பாகவத அம்மானையிலிருந்தே எடுத்திருக்கிறார்கள். எனவேதான் வர்ணிப்புப் பாடல்களெல்லாம் பாகவத அம்மானையைப் போல் (வைணவச் சார்புடையனவாகவே) பெருகின என்று கருதலாம். சுருக்கமாகக் கூறுவதானால் ‘உயர்ந்தோர்’ இலக்கியத்தை வடிவமாற்றத்தால் ‘மக்கள்’ இலக்கியமாக்கும் ஒரு முயற்சியே பாகவத அம்மானை எனலாம். இவையனைத்தும் பாகவத அம்மானை ‘வர்ணிப்புகளின் மூலம், என்ற கருத்தினை உறுதி செய்கின்றன. இருப்பினும் வர்ணிப்புத் திறனை முக்கியப்படுத்தும்நிலை பாகவத அம்மானைக்குமுன் தமிழில் இருந்ததா என்பதையும் ஆராயவேண்டும்.
8. 11. காவிய மரபு :
சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை நூல்களிலும், நீண்ட அகப்பாடல்களில் கருப்பொருள் விளக்கமாகவும் வருணனைகள் இடம்பெற்றுள்ளன. எனினும் தமிழ்க் காவியங்களிலேயே வருணனை பெருமளவு வளர்ந்துள்ள நிலையைக் காணமுடிகிறது.
மலை, ஆறு, நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் இவையெல்லாம் காவியத்தில் இடம்பெறவேண்டும் என்பர் தண்டியாசிரியர். காவியத்தில் வாய்ப்புற்ற இடங்களில் எல்லாம் இவை வருணிக்கப்பட வேண்டும் என்பதே அவர் கருத்தாகும். காவியங்களுக்கு வருணனை இன்றியமையாத ஒரு தேவை என்றும் அவர் கருதியிருக்கிறார். அவ்வாறாயின் ஒரு வருணனைப்பகுதி, கதைப் பகுதியோடு நெருங்கிய தொடர்பின்றி வருணனைக்காகவே தமிழ்க் காப்பியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்.
கலவியும் புலவியுமாக மாதவி கோவலனுடன் இனிது வாழ்த்தாள் என்பதைக் கூறவந்த இளங்கோவடிகள், மாதவி பல்வேறு அணிகளையும் அணிந்திருந்த காட்சியை வருணிக்கிறார்.
- “பரியகம் நூபுரம் பாடகஞ் சதங்கை
- அரியகம காலுக் கமைவுற அணிந்து
- குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து
- ...................................................................
- நிறங்கிளர் பூந்துகிர் நீர்மையி னுடீஇ
- தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து
- ...................................................................
- சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை
- பரியகம் வால்வளை பவழப் பல்வளை
- அரியகம் முன்கைக் கமைவுற அணிந்து
- வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
- கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
- வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
- காந்தண் மெல்விரல் கரப்ப அணிந்து”29
என்றெல்லாம் கூறி மேலும் தொடர்ந்து மொத்தம் 32 அணிகளையும் அணிந்த இடங்களையும் விளக்குகிறார். கடலாடு காதையில் இவ்வருணனை இடம்பெறும் 27 அடிகளுக்கும், வருணனையே பொருளன்றி வேறுபொருள் இல்லை என்பது தெளிவு.
எனவே காவியங்கள் எழுந்த காலத்தில் காவியங்களில் ஓர் உறுப்பாகக் கருதுமளவு வருணனை வளர்ந்திருந்தது. அதுவே காவியங்களும் பிற சிற்றிலக்கியங்களும் எழாத நிலையில், நிறைந்த இலக்கியப் பயிற்சியில்லாத புலவர்களிடையே வர்ணிப்புகளாக மலர்ந்தது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. வர்ணிப்புப் புலவர்களுக்கு இவ்வகையில் பாகவத அம்மானை வழிகாட்டியாக அல்லது முன்னோடியாக அமைந்திருக்கலாம்.
8. 12. அழகர் வர்ணிப்புகள் :
பெருமளவு பெயர்பெற்றதும், பெரும்பாலோரால் பாடப்படுவதும் அச்சிடப்பட்டுள்ள ‘அழகர் வர்ணிப்பு’ என்ற பாடலே. சென்னை ஆவணக்காப்பகக் குறிப்புக்களிலிருந்து (Madrs Archives) இந்நூல் கி. பி 1889இல் இராமசாமிக்கவி என்பவராலும், கி.பி. 1894 இல் பெரியசாமிப்பிள்ளை என்பவராலும் அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்ற செய்தி தெரிகிறது.30 ஆனால் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பதிப்பாண்டு இல்லாத அழகர் வர்ணிப்புப் பதிப்புக்களிலும் ஆசிரியர் பெயர் இல்லை.
அச்சிடப்பட்டுள்ள அழகர் வர்ணிப்பு பெருங்குடி கருப்பணதாசன் எழுதியது என்றும், அவர் அரிசன வகுப்பினர் என்றும் வர்ணிப்பாளரான ஒரு தகவலாளி கூறுகிறார்.31
8. 13. அமைப்புமுறை :
அழகர்கோயிலிலிருந்து சித்திரைத் திருவிழாவிற்காக மதுரை நோக்கிப் புறப்படும் இறைவனின் அலங்காரம், தல்லாகுளத்தில் ஏறிவரும் சப்பரத்தின் அலங்காரம், குதிரை வாகனத்தின் அலங்காரம் ஆகியவற்றை அச்சிடப்பட்ட அழகர் வர்ணிப்பு (1) பலபட வருணிக்கும்; இடையிடையே திருவிழாவின் பிற நிகழ்ச்சிகளான திரியாட்டக்காரர் சாமியாடுதல், குறி சொல்லுதல் ஆகியவற்றையும், வழியிலமைந்த பெரிய திருக்கண்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறது. வண்டியூருக்கு அழகர் ஊர்வலம் சென்று சேரும் வரையுள்ள நிகழ்ச்சிகளை விரிவாகவும் திரும்புவதைச் சுருக்கமாகவும் இப்பாடல் வருணிக்கிறது. அச்சிடப்படாத அழகர் வர்ணிப்பு (7) திரியாட்டக்காரர் சாமியாடுதல், குறி சொல்லுதல் ஆகியவற்றை மட்டும் பாடவில்லை. இவை தவிர அச்சிடப்பட்ட (எண். 1), அச்சிடப்படாத (எண். 7) இரண்டு அழகர் வர்ணிப்புகளும் ஒரே போக்கில்தான் அமைந்துள்ளன.
8. 14. வேறுபாடு :
அச்சிடப்படாத அழகர் வர்ணிப்பு ஒரு செய்தியினைப் புதிதகாக் கூறுகிறது. ‘பிரிட்டிஷார் கமிட்டியார் போலீசார் சூழ்ந்துவர’ அழகர் ஊர்வலம் சென்றது எனக் குறிப்பிடுகிறது.32 பாடலின் போக்கில் இவர்கள் ஊர்வலப் பாதுகாப்புக்காக உடன் வந்ததாகவே தெரிகிறது. வேறு பொருள்கொள்ளுமாறு இல்லை.
8. 15. பிற வர்ணிப்புகள் :
1. ஸ்ரீகள்ளழகர் அட்டாக்கர மந்திர வர்ணிப்பு :
மிக அண்மையில் (1979) வெளிவந்த இவ்வர்ணிப்பு நூலின் பெயருக்கும் பாடலுக்கும் தொடர்பில்லை. திருவிழா நிகழ்ச்சிகளை இவ்வர்ணிப்பு பாடவேயில்லை. “ஓம் நமோ நாராயணா” என்னும் அட்டாக்கர மந்திரம், நூலின் முதலடியாக வருவதைத்தவிர மந்திர விளக்கம் எதுவும் இல்லை. திருமாலைப் பல பெயர்கள் சொல்லிப் போற்றித் துதிக்கும் பாடலாக மட்டும் இது விளங்குகிறது. நூலிலுள்ளும் அட்டாக்கர மந்திர விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
2. கூர்மாவதாரன் வர்ணிப்பு :
இந்நூலை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வர்ணிப்புப் பாடல்களில் அளவிற் சிறியதும் இதுவேயாகும். நாட்டுச்சிறப்பு என்ற தலைப்பில் நூலின் தொடக்கத்தில் 28 கண்ணிகள் அமைந்துள்ளன. அவற்றுள் பத்து இடங்களில் திருமால் ஆய்ப்பாடியில் பால், தயிர், வெண்ணெய் உண்டு வளர்ந்தவனாகக் குறிக்கப்படுகிறான். அதன் பின்னரே தேவர்களும் அசுரர்களும் பாற்கடல்கடையும்போது திருமால் ஆமையாக நின்று மந்தரமலையை மத்தாகத் தாங்கியது, மோகினி வடிவில் அமுதம் பரிமாறியது ஆகிய செய்திகள் பேசப்படுகின்றன.
3. கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு :
இதுவும் ஆசிரியர் பெயர் தெரியாத நூலே. கண்ணன் பிறப்பு, கஞ்சன் ஆலோசனை, கண்ணன் ஆய்ப்பாடி வருதல், மண்ணையுண்டல், மருதிடைத் தவழ்தல், மாடு மேய்த்தல், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல், காளிங்க நர்த்தனம், கோவியர் துகில் கவர்தல், வடமதுரை செல்லல், கஞ்சன்வதம். பாரதப்போர் ஆகிய நிகழ்ச்சிகளைப் பாடியபின் அழகர்மலைச் சிறப்புத் தொடங்கிப் பின்னர் அழகர் வர்ணிப்பைப் போலத் திருவிழா நிகழ்ச்சிகளைப் பாடுகிறது.4. தசாவதார வர்ணிப்பு :
சாமிக்கண்ணுக்கோனார் இயற்றிய இவ்வர்ணிப்புப்பாடல் அழகர் வர்ணிப்பைப் போலவே அமைந்துள்ளது. வைகையாற்றில் ராமராயர் திருக்கண்ணில் அழகர் தசாவதாரக் காட்சி தரும் நிகழ்ச்சியை மட்டும் அவதாரவாரியாகக் கதையினைக் கூறி விரிவாகப்பாடுகிறது. பின் நிகழ்ச்சிகளை அழகர் வர்ணிப்பைப் போல், ஆனால் சுருக்கமாகப் பாடி முடித்துவிடுகிறது.
5. பெரிய அழகர் வர்ணிப்பு :
இராமசாமிக்கவிராயர் இயற்றிய பெரிய அழகர் வர்ணிப்பே கிடைத்துள்ள வர்ணிப்புகளில் அளவிற் பெரியது. இரண்டு பகுதிகளாக உள்ள இந்நூலின் முதற்பகுதி விநாயகர், சுப்பிரமணியர் சரசுவதி, சோமசுந்தரர், மீனாட்சியம்மன், தேவர்கள், சித்தர்கள் திருமால், மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன், செல்லத்தம்மன், சக்கம்மா இருளப்பன், இருளாயி ஆகிய தெய்வங்களை வணங்கிவிட்டு, புரட்டாசி மாதம் ‘மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி கொலுவின்போது பேயோட்டுகிற வர்ணிப்பு’ என்ற தலைப்பில் சில சிறு தெய்வங்களோடு மீனாட்சியம்மனையும் வணங்கி விட்டு முடிந்துவிடுகிறது.
நூலின் இரண்டாவது பகுதியான அழகர் வர்ணிப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இரண்டாவது பகுதியில் கிருஷ்ணன் பிறப்பு, ஆய்ப்பாடி வருதல், பூதனை முத்திபெற்றது, கிருஷ்ணன் மருதிடைத் தவழ்ந்தது, பசு மேய்த்தது ஆகிய பகுதிகட்குப் பின் அழகர்மலைக் கோயில். சன்னிதி, தீர்த்தம், அழகர்மலையின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் சிறப்பினைக்கூறிப் பின்னர் அழகர் வர்ணிப்பினைப் போலத் திருவிழா நிகழ்ச்சிகளைப் பாடி, இராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சியில் பத்து அவதாரச் சிறப்பினைச் சற்று விரித்துப்பாடி இறைவன் அழகர்மலைக்குத் திரும்புவதையும் வருணித்து முடிகிறது.
கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு கூறும் செய்திகள், அழகர் வர்ணிப்பு கூறும் செய்திகள், தசாவதார வர்ணிப்பு கூறும் செய்திகள், தசாவதார வர்ணிப்பு கூறும் செய்திகள் முதலிய அனைத்தையும் இராமசாமிக்கவிராயர் ‘பெரிய அழகர் வர்ணிப்பு’ என்ற பெயரில் ஒரு நூலாகப் பாடியுள்ளார். இவற்றோடு தொடர்பில்லாத பிற கடவுளர் துதி நூலின் முதற் பகுதியாகத் தரப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து அச்சிட்டதற்கு வெளியீட்டாளரின் வணிக நோக்கம் தவிர வேறு காரணம் காணமுடியவில்லை.
6. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு
கள ஆய்வில் கிடைத்த இவ்வர்ணிப்பு அச்சிடப்பெறாதது. அழகர்கோயிலில் பதினெட்டாம்படிச் சன்னிதி ஏற்பட்டது குறித்து மக்கள் வழக்கில் உள்ள கதையே இவ்வர்ணிப்பின் பாடுபொருளாகும். இராமசாமிக்கவிராயரின் பெரிய அழகர் வர்ணிப்பும் ‘பதினெட்டாம்படி உண்டான விசேடம்’ என்ற தலைப்பில் இக்கதையைச் சுருக்கமாகப் பாடுகிறது.
7. ராக்காயி வர்ணிப்பு :
ராக்காயி அம்மன் அழகர்மலையில் சிலம்பாற்றின் கரையிலுள்ள ஒரு சிறுதெய்வமாகும். இப்பாடல் ராக்காயி தன் குழந்தைகளுடன் தன் தமையனான பதினெட்டாம்படிக் கருப்பனைப் பார்க்க வரும் நிகழ்ச்சியை மட்டும் விரித்துப் பாடுகிறது. கருப்பசாமி அவளுக்குக் காட்சி கொடுக்கிறார். ‘ஜெகநாதன் தங்கச்சி’ என இவ்வர்ணிப்புப் பாடல் அவளைத் திருமாலுக்கும் நங்கையாகக் குறிப்பிடுகிறது. கள ஆய்வில் கிடைத்த இவ்வர்ணிப்பும் அச்சிடப்பெறாததேயாகும்.
8. வலையன் கதை வர்ணிப்பு :
இவ்வர்ணிப்புப் பாடல், ஒரு வலையன் அழகர்மலை அடிவாரத்தில் கிழங்கு தோண்டும்போது அந்தக் குழியிலிருந்து அழகர்கோயில் இறைவன் வெளிப்பட்டார் என்ற செய்தியை வருணிக்கிறது.
9. கருப்பசாமி வர்ணிப்பு :
தொடக்கமும் முடிவும் இல்லாத கையெழுத்துப்படியாக ஆய்வாளர்க்குக் கிடைத்த இவ்வர்ணிப்பு அழகர்கோயிலில் ஆடிமாதம் பௌர்ணமி நாளில் கருப்பசாமியாக வழிபடப்பெறும் கதவுகளுக்குச் சந்தனம் பூசும் நிகழ்ச்சியை வருணிக்கிறது.
8. 6. அவதார வர்ணிப்புகள் பிறப்புக் காரணம் :
இராமசாமிக்கவிராயரின் பெரிய அழகர் வர்ணிப்பு ஆற்றிலிறங்கிய மறுநாள் இரவு அழகர் ராமராயர் மண்டபத்தில் பத்து அவதாரங்களிலும் காட்சிதரும் திருவிழா நிகழ்ச்சிகளை அவதாரக் கதைகளோடு விரிவாக வருணிக்கிறது. மாயாவதார வர்ணிப்பு முதலியவை ஒரேயொரு அவதாரத்தைப் பற்றி மட்டும் பாடும் தனித்தனி வர்ணிப்புகளாகும். பிற அவதாரங்களுக்குத் தனியான வர்ணிப்புப் பாடல்கள் கிடைக்கவில்லை.
சித்திரைத் திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி முதல் நாள் இரவு தொடங்கி மறுநாள் பொழுதுவிடியும் வரை நடைபெறும். இவற்றைக் காணவுரும் மக்கள் இரவு முழுவதும் தூங்காது விழித்திருக்கவேண்டும். எனவே இம்மக்கள் தூங்காது விழித்திருக்கவேண்டி இரவு முழுவதும் பாடும் வகையில் அவதார வர்ணிப்புகள் பிறந்திருக்க, வேண்டும். எனவே சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளே இவற்றின் பிறப்புக்கும் அடிப்படையாகின்றன. ஆயினும் தொடர்ந்து மூன்றாண்டுகளாக (1977, 1978, 1979) ஆய்வாளர் கண்டதில், இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற மக்களே நிறைந்திருப்பதை அறியமுடிந்தது. நாட்டுப்புற மக்களையோ வர்ணிப்பாளர்களையோ காணமுடியவில்லை.
8. 17. பிற பாடல்கள் :
சித்திரைத் திருவிழாவில் பாடப்பெறும் இப்பாடல்களைத் தவிர வேறுசில பாடல்களையும் வர்ணிப்பாளர் பாடுகின்றனர். அவை வர்ணிப்புப் பாடல்கள் அல்ல; கதை பொதிந்த பாடல்கள் ஆகும். எனவே அவற்றை வர்ணிப்புப் பாடல்களைப் போல் வீதியில் நின்று பாடுவதில்லை. ஓரிடத்தில் கேட்கும் ஆர்வமுள்ள பலர் அமர்ந்து, ஒருவரைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வர். சில நேரங்களில் மதுரை வட்டாரத்தில் சிறுதெய்வக்கோயில் திருவிழாக்களில் பொழுது போக்கு நிகழ்ச்சியாக ஒருவர் பாட ஏனையோர் அமர்ந்து கேட்கின்றனர். அவ்வாறு பாடப்பெறும் பாடல்கள் கிருஷ்ணன் பிறப்பு கிருஷ்ணன் தூது, கீசகன் சண்டை, திரௌபதி கலியாணம், திரௌபதி வஸ்திராபஹரணம் (துகிலுரிதல்). கண்ணன் பிறப்பு, விராட பர்வம், வீமன் சண்டை வர்ணிப்பு, பார்வதி கலியாணம் முதலியன. இவற்றுள் பார்வதி கலியாணம் தவிர ஏனையவை மகாபாரதத்திலிருந்து கதைப் பொருள் பெற்றவை என்பது சிந்தனைக்குரிய செய்தியாகும்.
8. 18. இலக்கிய மரபு :
இதிகாசங்களில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து நாடகமாகவும் காவியமாகவும் அமைக்கும் மரபு வடமொழி இலக்கிய வரலாற்றில் போற்றப்பட்டு வந்த ஒன்றாகும். இவ்வாறு அமைக்கும் காவியங்களுக்குக் ‘கண்டகாவ்யம்’ (காவியத் துண்டங்கள்) எனப் பெயர். தமிழில் நளவெண்பா, இரணியவதைப்பரணி, பாரதியின் பாஞ்சாலி சபதம் ஆகியன இவ்வகையினவாகும். ஆயினும் தமிழ் எழுத்திலக்கியங்களைவிட, நாட்டுப்புற இலக்கியங்களில் கண்ட காவியம் பாடும் இம்மரபு செல்வாக்கோடு திகழுகின்றது. மேற் குறித்த இலக்கியங்கள் அதற்குச் சான்றாகும்.
முடிவுரை :
சித்திரைத் திருவிழாவோடு இணைந்துவரும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவில் மீனாட்சியம்மன் பட்டம் சூடுதல், திருமணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் மக்கள் பெருந்திரளாகக் கூடுகின்றனர். ஆயினும் அக்கூட்டத்தினர் பெரும்பாலும் நகரமக்களே. அவர்கள் வர்ணிப்புப் பாடல்களைப் பாடுவதில்லை. ‘மீனாட்சி திருமணம்’ என்றொரு வர்ணிப்புப் பாடல் இருந்தாலும். இதுவுங்கூட இத்திருவிழாவில் யாராலும் பாடப்படுவதில்லை. வர்ணிப்புப் பாடல்களைப் படைப்போடும் படிப்போரும், கேட்போரும் நாட்டுப்புற மக்களேயாவர்.
அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவிலேயே வர்ணிப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன; பிற திருவிழாக்களில் பாடப்படுவதில்லை.
வர்ணிப்புப் பாடல்கள் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக மதிக்கத்தகுந்தவை. ஆயினும் பிற சிற்றிலக்கியங்கள் இலக்கியப் பயிற்சியும் எழுத்தறிவும் பெற்றவர்களாலேயே படைக்கவும் சுவைக்கவும்படுவன. வர்ணிப்புப் பாடல்கள் நாட்டுப்புற மக்கள் இலக்கியமாகத் தோன்றி வளர்ந்திருக்கின்றன. பாகவத அம்மானை வைணவச் சார்பானதால், அதனைப் பெருமளவு பின்பற்றி எழுந்த வர்ணிப்புப் பாடல்களும் வைணவச் சார்பானவையாயின. அழகர்கோயிலை வழிபடும் அடியவர் கூட்டத்தின் பரப்பும், இக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளும் வர்ணிப்பு இலக்கியம் வளரப் பெருங்காரணங்களாயின. குறிப்பிட்ட ஒரு கோயில் சிற்றிலக்கிய வகையொன்றின் வளர்ச்சியில் பெரும்பங்கு பெறுவது என்பது அழகர்கோயில் பெற்ற தனிச் சிறப்பாகும்.குறிப்புகள்
- 1. பார்க்க: பிற்சேர்க்கை எண் II : 3, 4, 5, 6, 7.
- 2. ஸ்ரீகள்ளழகர் பக்தர்கள் வர்ணிப்பாளர் மஹாசபை, 14 ஆவது ஆண்டு (1979) அழைப்பிதழ் 2, 13 ஆவது ஆண்டு விழா வரவு-செலவு விவரங்கள், பின் அட்டை உட்புறம்.
- 3. சபை பற்றிய தகவல் உதவியவர் : வி. எம். பெரியசாமிக் கோனார், தத்தநேரி, மதுரை, நாள் : 18.6.78.
- 4. பிச்சைக்கோனார், வயது 66, கீரைத்துறை, மதுரை, நாள் : 18. 6. 78.
- 5. அ. சங்கரமூர்த்திக்கோனார், ஸ்ரீமத் பாகவத அம்மானை, இரண்டாம் புத்தகம், 1932.
- 6. மேலது, ப. 16.
- 7. மேலது.
- 8. பாகவதம். இரண்டாம் பாகம், திருமலை- திருப்பதி தேவஸ்தான வெளியீடு, பாடல் 2636, ப. 1.
- 9. ஸ்ரீமத் பாகவத அம்மானை, ப. 1.
- 10. பாகவதம், பாடல் 2638, ப. 1.
- 11. ஸ்ரீமத் பாகவத அம்மானை, ப. 2.
- 12. பாகவதம், பாடல் 4970, ப. 624.
- 13. ஸ்ரீமத் பாகவத அம்மானை, ப. 380.
- 14. மேலது, ப. 12.
- 15. மேலது.
- 16. ரா. புருஷோத்தமநாயுடு, ஈட்டின் தமிழாக்கம், சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 1972.
- 17. ஸ்ரீகள்ளழகர் அட்டாக்கர மந்திர வர்ணிப்பு, ப. 2.
- 18. பாகவதம், பாடல் 2685, ப. 13.
- 19. ஸ்ரீமத் பாகவத அம்மானை, ப. 12.
- 20. ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, குருசாமிக்கோனார் பதிப்பு, 1930, ப, 2.
- 21. பெரிய அழகர் வர்ணிப்பு, 1970, ப. 10.
- 22. பாகவதம், பாடல் 2742, ப. 27.
- 23. ஸ்ரீமத் பாகவத அம்மானை, ப. 22.
- 24. ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, ப. 5.
- 25. ஸ்ரீமத் பாகவத அம்மானை, ப. 5.
- 26. தசாவதார வர்ணிப்பு. ப. 6.
- 27. ஸ்ரீ கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு, ப. 21.
- 28. பெரிய அழகர் வர்ணிப்பு, ப. 35.
- 29. சிலப்பதிகாரம் (உ. வே. சா. பதிப்பு) கடலாடுகாதை, அடி 82—107.
- 30. Classified Catalogue of Books Registered, From 1867-1886, p. 174; from 1890-1900, p. 145, Madras Archives.
- 31. பிச்சைக்கோனார், வயது 66, கீரைத்துறை, மதுரை, நாள் 18. 6. 78.
- 32. அழகர் வர்ணிப்பு, பார்க்க : பிற்சேர்க்கை எண் II: 3, வரி 77.