உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்/023

விக்கிமூலம் இலிருந்து


பிற்சேர்க்கை II : 3

அழகர் வர்ணிப்பு
(அச்சிடப்படாதது)

அச்சிடப்படாத ‘அழகர் வர்ணிப்பு’ ஆய்வாளருக்காக மதுரை கீரைத்துறை -மாகாளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சைக் கோனாரால் (வயது66) பாடப்பட்டது. ஒலிப்பதிவு செய்த நாள் 13.2.1979.

இவ்வர்ணிப்புப்பாடல் அழகர்கோயிலில் பயணத்தைத் தொடங்கும் இறைவன், வண்டியூர் சென்று சேரும் வரையிலுள்ள நிகழ்ச்சிகளை வருணிக்கிறது. அச்சிடப்பட்ட அழகர் வர்ணிப்பு கூறாத செய்திகள் சில இதில் காணப்படுகின்றன அழகர் ஏறிவரும் குதிரையினைத் தேசி, மாந்தேசி ஆகிய பெயர்களால் இப்பாடல் குறிக்கின்றது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புக்காகவோ அல்லது வேறு காரணம் கருதியோ அழகர் ஊர்வலத்துடன் கோர்ட்டாரும், போலீசாரும் உடன் வந்ததையும் இப்பாடல் குறிப்பிடுகின்றது.

ஆதிமூலம் முறகரி முகத்தோனே பழம் வேண்டி நின்ற முந்திக் கணபதியே
கரமதனில் கொம்பொடித்து பாரதம் எழுதிவைத்த கைலாச புத்ரனே
அரனுமையாள் ஈன்றெடுத்த ஐங்கரனைப் போற்றி அனந்தன் கதை கூறுதற்காய்
அன்பாய் வரமளிப்பாய் எந்தெந்தநாளும் என் இருதயம் விட்டு அகலாதிருக்க
5. திருப்பால் கடல்தனிலே கண்துயின்ற தேவன் திருமால் பாதமதை
கண்டார்கள் தேவரெல்லாம் அரிவாசுதேவா கரியமால் அப்பனே
வின்டார்கள் தொண்டரெல்லாம் அழகா புரிக்கண்ணன் விமடன் அவர்கள் தன்னை
வணங்கிடுவீர் நீங்களெல்லாம் கேத்திரபாலர் முதல் வடக்குக் குடவரையில்
களக்கமில்லாப் படிவாசல் நெய்வேத்ய பூசை கற்பூர தூபதீபம்
10. துளக்கமதாய்க் கொடுத்து மூன்று காலவேளை தொகுதிப்படி முறையாய்
குட்டிமுட்டி கோழி சேவல் அட்டியில்லாமல் தரக் கோட்டை வாசல் பக்கமதில்
மற்றிணையில்லாத கருப்பன் சகலமும் வாங்கிப் படிவாசல் காத்திருக்கார்
குருதிகொண்ட வளநாட்டில் கள்ளருட வம்சம் குலவிருத்தி யாகுமென்றார்
பட்டர் முதல் ஆண்டாரும் நாட்டார்க்குரைக்க பணித்து நமஸ்கரித்து
15. கட்டணம் தவறாமல் நடக்கிறோமெந்த நாளும் கருவளமே என்றுரைத்து
எல்லோரும் கோவிந்தாயென்று பொய்கைக் கரைப்பட்டி ஏகினார் பட்டர் முதல்
சென்று திரும்பிவரப் பரமசாமிப் பட்டரிடம் செப்புவார் செந்திருமால்
வாமனரே வைகைவளம் நாளைப் பயணம் வைக்கலாம் தென் கூடலுக்கு
நேம விதிப்படியே நான்கு கோட்டை வாசலுக்குள் நேமியும் பன்முறைபோய்
20. உள்கோட்டை வாசலிலே ஆழ்வார் கெருடாழ்வார் உடையாழ்வார் காவலுடன்
செல்வதற்குள் மடப்பள்ளி திருப்பரிச்சி முதலாக திருமால் அவர் கானலென்றார்.
கருமண்டபமும் களஞ்சியம் காணிக்கைக் குடவரையும் கல்படியோன் காவலென்றார்
திருமாலுடைய தொட்டிபட்டி அயராமணி மண்டபம் சுரங்க முதலாகச் சித்தர்கள் காவலென்றார்
மறுகு மலரணிந்த மாதவன் சொல்படியே வாமனன் கட்டளையில்
25. வருமலர் இணைமாற்றித் தீர்த்தமதை வழங்குகின்ற மஞ்சனையாள் பேராக்கு
பெருகும் படையொடுக்கிச் சமர்முடிந்து வந்த சித்தர் பிரான் மலையை
காத்து வருவீரெல்லாம் வற்றாமல் தீர்த்தம் கலங்காமல் ஈயெறும்பு
காவலுடன் நானிருப்பேன் செருபூபதியே நீங்கள் கலவைநதி போங்களென
ஆவலுடன் செங்கமலன் மஞ்சநதி ராக்குரைக்க திருமாலும்
30. தாமோதரக் கண்ணன் தானமலர்த் தண்டியலைத் தான்தூக்கி வாங்களென்றார்.
போய் வாரேனென்று சொல்லி சேவகரும் மாறணமைக்காரரும் பல்லக்கைத் தூக்கி பட்டர் வலம் புரிச் சங்கூதிடவே
நாட்டார்கள் கொம்பூத சேகண்டி நாதம் நாலுதிக்கும் தான் முழங்க
கோர்ட்டார்கள் கூடிவர காட்டுப் பிள்ளையாரிடத்தில் கூறிய சேதிகளை
நடந்தார் பெருமாளும் பொய்கைக் கரைப்பட்டி கலவநதியும் நல்லதென்று கடந்து
35. நடந்தார் பெருமாளும் நல்லதென்று கள்ளரெல்லாம் நாதனை எதிர்பார்த்து நிற்க
கூடினார் கள்ளரெல்லாம் கோவிந்தனைப் பார்த்து குலவையிட்டு
ஆடினார் நாட்டார்கள் நமக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் இது நல்லதென்று
பல்லாக்கைத் தானிறுத்தி ஆபரணத்தைக் கழத்தி அவர் பட்டயமெல்லாம் பறிக்க
எல்லாத் திருக்கூத்தும் பரமசாமிபட்டர் பட்ட இடையூறெல்லாம் நினைத்து
40. மாலழகா பூந்துளபா உலகமதை உண்ட மாதவனே கோவிந்தா
சீதரனே கார்மேகம் இங்கு நடந்த தீதுனக்குச் சம்மதமோ
பதறியே கை நடுங்கிப் பரமசாமிப்பட்டர் பகவான்முகம் பார்த்தவுடன்
சிதறியே பொறிபறக்க கண்விழித்துப் பார்க்க திடுக்கிட்டுக் கள்ளரெல்லாம்
இருட்டடைந்து எல்லோரும் கண்ணு தெரியாமல் ஏங்கிமுகம் வாடிநின்று
45. குருட்டடைய வைத்த மாதவா கோவிந்தா எங்கள் குலமுழுதும் நீ காப்பாய்
நந்தா முகுந்தா என்று எல்லோரும் கூடி நாதனைப் போற்றி செய்தார்
நன்று நீங்கள் இத்தொழிலை இன்றுமுதல் விட்டு நாட்டிலனக்கு
ஊழியங்கள் செய்து வந்தீராமானால் கண்ஒளிவு தந்து சேவை தாரேனென்றுரைத்தார்
மெய்மகிழ்ந்து கள்ளரெல்லாம் வயித்துக் கொடுமையால் முகுந்தா நாங்கள் இத்தொழிலை
50. உங்களிடம் செய்ததினால் எங்களுக்குப் பதவி உலகமதில் நீ தருவாய்
நந்தா முகுந்தா என்று எல்லோரும் கூடி நாதனைப் போற்றி செய்தார்
ஒளிவுதந்து கார்மேகம் வளநதிக்குப் போய் உண்டியலை ரெப்பிவாரேன்
வரும் தருணமதில் உங்களுக்கோர் கைப்பணம் மானிலத்தில் வரமளித்தேன்
என்றுரைத்துத் திருமாலும் அப்பன் திருப்பதியை இறைவன் வழிகடந்து
55. மயிலும் குயிலும் கூடியுலாவுகின்ற குளிர்ந்த வனமடர்ந்த மாஞ்சோலை
மாஞ்சோலை பேர் நதியாம் பூண்டியார் கட்டளையில் பூமான் அவரிருந்து
தாண்டி வழிகடந்து மறவர் மண்டபத்தில் சாரங்கன் இளைப்பாறி
எழுந்து பயணமானார் காரைக்கிணர்தேடி எம்பொருமான் வருகையிலே,
வழிமறித்தார் கடச்சனேம்பு காங்காப் புளியம்பழம் வல்லபன் கட்டளையில்
60. கடிதிலே கோபாலன் உண்டு அருந்தக் காட்சி அழைத்துமேதான்
அழியாத முத்தி பிரளயத்தில் ஈந்தோன் காரைக் கிணற்றருகே அமர்ந்து இளைப்பாறி
சங்கு முழங்கிட புங்க இளஞ்சோலைகூடி சாரங்கன் பயணமானார்
செங்கரத்தில் சங்கோதி மூணுமாவடியில் ஸ்ரீமான் சயனித்திருந்து
சங்கதி யெல்லாமறிந்து பூதனைப் பல்லாக்கில் சகலாத்துத் தான்மாத்தி
மாலைநேர மாச்சுதென்று சாடையறிந்து மாயோன் அவசரமாய்
சேலைதுகில் கவர்ந்தோன் திருக்கண்கள் தோறும் தீர்த்தா பிஷேகம் தெரிசித்துத் தான்கடந்து
நடந்தார்கள் நாட்டாரும் குடைசுருட்டி ஈட்டி நாளணியும் முன்னடக்க
தொடர்ந்தார்கள் கொம்பூதி யானைபரிசேனை தூயோனைச் சூழ்ந்துவர
நட்டுவ தாளத்துடனே நாகூர் நாயக்கர் கட்டளையில் நாதன் போய் நுழைய
70. கட்டுத் திட்டத்துடனே சர்க்கரைப் பொங்கல் கனிவுள்ள சம்பாவும்
தட்டுத் தட்டாகவே வைத்த சூட நெய்வேத்யம் தானளிக்கவே சுமந்து
கொட்டுச் சத்தத்துடனே அதிர்வேட்டுப் போட கோவிந்தன் வெளியேறி
எதிரில் நிற்கும் மானிடர்க்கு திருக்கண்கள் தோறும் இறைவன் பதவிதந்து
கதிரோனொளி மறைய ஒட்டுமாஞ் சோலையிலே கண்ணபிரான் அங்குவந்து
75. ஆல விருக்ஷகத்தருகில் நாலுகால் சவுக்கை அனந்தனும் தங்கியிருந்து
மேலாம் பதமளித்து அன்பர்களைப் பார்க்க மெய்யனவன் தான் நினைத்து
சூழ்ச்சியாப் பிரிட்டிஷார் கமிட்டியார் போலீசும் சேவை தாங்கிச் சூழ்ந்துவர
ஆழ்ச்சி கொண்டு தானெழுந்து சூப்பிரண்டு பங்களா அத்தனையும் தான்கடந்து
நாட்டார்கள் சேவிக்க ராமையர் மண்டபத்தில் நாதனவர் உள் நுழைய
80. கோர்ட்டார்கள் காவலுடன் நரசிங்கம்பட்டி குளத்தழகன் அம்பலமும்
விண்ணில் புகழ்பெருக மண்ணிலுள்ளோர் கொண்டாட விசித்திரப் பதுமையுடன்
நுண்ணிதமாய் மண்டபத்தைக் கமான் வரைந்த சித்திர நூலில் முறைப்படியே
அடுக்கடுக்காய் மாளிகையும் சப்ரமஞ்ச ஊஞ்சல் நாலுபக்கம் தொடுத்து அடுத்தபத்தி மாடிகளும்
தொடுத்து வைத்து பீதாம்பரம் அணிந்த திரைச்சீலை தானணிந்து
85. திண்டு தலகாணியுடன் சுவாமியவர்க்கேற்ற சிகரமணி விளக்கு வைத்து
கண்டுகளிப்படைய கொத்துப்பூ திரைக்காட்சிச் சீலையிட்டும்
வானவரும் விபரமதைக் காணவரும் பேர்கள் மகிழ்வாய்த் தரிசிக்கத்
தானவரும் மானிடரும் அம்பலவன் கட்டளையில் தாழ்ந்துபணி போற்றிசெய்ய
ஞானபரன் செந்திருமால் அங்கு சற்று தங்கி நாட்டார்க்குப் பதமளித்து
90. தண்டியலைத் தானடத்தி வண்டியூர்போக சங்கு தொனிகிளம்ப
உண்டியலும் பின்னடக்க அதிர்வேட்டுப் போட உலகளத்தோன் அன்புகொண்டு
விரதங்கொண்ட நாச்சியார் அரண்மனை போவதற்கு வேதன அவர் நினைத்து
குளித்து மயிருணத்தி அரிநாமவேதன் கோடாலிக் கொண்டையிட்டு
தளிர்த்த மலர்சூடி செங்கமல நாதன் சங்கு சக்கரமேந்தி
95. கிருஷ்ணா எனும் ஒளிபறக்க முத்துக்கிரீடம் கேசவனும் தானணிந்து
பீதாம் பரத்துடனே வஸ்திர காரியமும் கெம்பீரமாய்ச் சூடி
சீதா சமேதன் அசுவமதை அப்ப சீக்கிரத்தில் வரவழைத்து
ஏறி லகானிழுத்து வீரமணிச் சவுக்கெடுத்துத் திருமாலும்
ஏறியவர் சுண்டிடவே நாலுகால் சவுக்கையிலே புரவி வாருதாம் முன்காலை
100. தாண்டியே திருக்கண அபிஷேகத் தீர்த்தம் தான்அருந்தி தேசியுமே
வேண்டியவர் துதிக்க ஆயிரம் பொன்னாலிழைத்த விமான மணிச் சப்பரத்தை
கண்டதாம் கண்ணாலே வேதனைத் தூக்கி கால்மாறி நடனமிட்டு
நின்றதாம் மாந்தேசி படிவாசல் முத்தன் நிமிசம் தனிலெழுந்து
வணங்கி நமஸ்கரித்த அரிவாசு தேவா மாதவா கோவிந்தா
105 கணம்கொண்ட கேசவா என்னை ஆளடிமைகொண்ட கடவுளெனைக் காத்திடுவாய்
சலசேத்திரம் அணிந்த வளநதிக்குப் போக சப்பரத்தைச் செப்பனிட்டோன்
சுலபமதாய்ச் சாரதியைச் சப்பரத்தில் மாற்றிச் சீக்கிரத்தில் செல்வதற்கு
மகாநேர மாச்சுதென்றார் மாயவனும் அப்போது மனங்குளிர்ந்து ஏதுசெய்தார்
கதிரா மணிச்சவுக்கை திருக்கரத்தில் தூக்கிக்கரியமால் அவ்விடத்தில்
110 தட்டிடவே இரும்புரவி கடிவாளம் முத்தன் தான்பிடிக்கச் சப்பரத்தைத்
தொட்டிழுத்த பாவனைபோல் சாக்குருதி கொள் சுந்தரமாந் தேசியது
அசையா வழிகடந்து திருக்கண்ணெல்லாங் கடந்து யானைக் கிடங்குவந்து
இசையுள்ள கொட்டகை கட்டிப் பந்தல் மண்டபம் யெல்லாயிடங்களிலும்
வகையுள்ள சம்பா சக்கரை நெய்வேத்யம் தளுகை முதலாக மணிவண்ணன் தானருத்தி
115 பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில் பாரளந்தோன் அங்குவந்து
நதிதீரச் செங்கமலன் அங்கிருக்கும் மானிடர்க்குக் காட்சியுமே தானீந்து
அளித்துப் பதவியும் மானிடர்கள் சூழ யானைத்திரள் முன்டைக்க
ஜொலிக்க குடைசுருட்டி சங்கு நாதத்தோடு திருமாலும் வைகையிலே
வண்ணமலர் சொரிய விண்ணில் அரும்பெரிய மாலழகன் திருத்தோளில்

120 அந்த நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாலையினை அணிந்த கார்மேகம்
பவளவர்ணப் புரவிதன்ளை வளநதிக்குப் பகவானும் சூழ்ந்திடவே
குவலயத்தோர் கொண்டாட அம்பிகைமீனாள் கும்பிட் டடிபணிய
சிறப்பளிக்கத் திருவரதன் உள்ளமதில் எண்ணி செப்புவார் தங்கையர்க்கு
வைகைநதி மேல்சார்பை அம்பிகைக்கு சீர்வரிசை மாதவனும் அங்குதந்து
125 பையரவன் சங்கரர்க்கு வளநதியைப் பாதி பகிர்ந்துமே கீழ்முகமாய்
வடகரையில் புரவிதனைச் சூழ்ந்து தென்கரையை திரும்பியே மாதவையர்
பால் அபிஷேகம் தர வாங்கியருந்தி பச்சைமால் இச்சையுடன்
நால்வேத வாத்தியங்கள் ரங்கநாதபுரம் திருக்கண் கண்டு நாதனவர் உள்நுழைய
ஐதீகம் மாறாமல் ஷராப்பு நாயக்கர் கட்டளையில் அனந்தனும் தங்கியிருந்து
130 இழுத்த கடிவாளமதைச் சுண்டின வேகத்தால் எழுந்ததாம் மாந்தேசி
குலுக்கிக் குமுறியதாம் முத்துச்செட்டி மண்டபம் கொட்டகைக்குள் போய் நுழைய
தூத்தினார் பூமலரை எங்கோமான் மேற்சொரிய துடிக்குதாம் மாந்தேசி
அடுத்த திருக்கண்ணுக்குப் போசு நினைக்கவே அதிர்வேட்டு-போட்டிடவே
எடுத்ததாம் சவ்வாரி தென்னந் தோப்பருகே இடையருட மண்டபத்தைக்
135 கண்டு மனமகிழ்ந்து சந்தோஷமாகவே காட்சியளித்து
நின்று திரும்பி ராமராயர் மண்டபத்தை நினைத்துக் கனைத்ததுவாம்
தாள்கிளப்பி மண்டியிட்டு முழிய மருட்டி மணிமுடியத் தான்குலுக்கி
அதனை வாரி இறைத்ததுபோல் ஆத்துமணல் தூள்பறக்க
நாட்டியங்கள் ஆடி அடிமாற்றி வைத்து நடனமிட்டுக் குதிரையது

140 தாஷ்டிக மாகவே தான்கூட வாத்தியங்கள் முழங்க திருக்கண்களெல்லாம்
கடந்துமே விண்புரவி நாலுகால் திட்டில் கரியமாலைக் கொண்டே நிறுத்தி
தடந்தேர் நடத்திநின்ற தாமோதரக் கண்னது தங்கி நிற்க ராயர்மகன்
நதியில் நிற்கும் சாமளனை சகல வீணை வாத்தியங்களோடு நட்டுவ தாளத்துடனே
கொட்டு மேளங்களெல்லாம் நகராமணி ஓசையோடு கோவிந்தன் முன்புடனே
145 கட்டுமாறாமல் சீர்சிறந்த புஷ்பமாலை பரிவட்டம் கட்டி எங்கள் சேகரமாய்
எதிர்நின்று எஜமானை மஞ்சு நீராட்டு நெய்வேத்யம் ஈந்து நிமலனைப் போற்றிசெய்து
நாணல் ஒருகரை வடகோடித் திட்டில் பக்தர்களெல்லாம் அந்த நாராயணன் அடியில்மேல்
பன்னீர் தோல் தோப்பையுடன் வண்ணமலர் மாரிபல வாத்திய முழங்க
தண்ணீர் பீய்ச்சித் தொண்டரெல்லாம் ஆண்டாரும் உடையாரும் சாரங்களைச் சூழ்ந்து நிற்க
150 தேசிமேலே யிருக்கும் பட்டர்முத லாழ்வாரும் மாரி பொறுக்காமல் திரையினால் போற்றிடவே
மூன்றுகால கட்டளைக்குப் புரவி மிதந்தோடி ராயர்மகன் முன்பாக வந்துநிற்க
வாசிமனம் பதற அண்டரெல்லாம் கூடி மலர் மாரியாய்ப் பொழிந்தார்
மூன்றுகால கட்டளைக்குப் புரவி.............................................................நிற்க
தொண்டு செய்ய மால்பதத்தை இருகரத்தாலும் தொட்டு அடி பணிந்து
மாலழகா பூந்துளபா உலகமதை உண்ட மாதவா கோவிந்தா
155 கீதநாராயணா பரம சிருஷ்டியாய் நின்ற கேசவா, ரகுராமா
வடவாலைவிட்டு பல்லாயிரங்கோடி ஜீவனுக்கும் முத்தியிந்த வளநதியில் நீயளிக்க
கடலாழியைக் கடந்து, அமுதளித்த பாவனைபோல் கரியமால் இங்குவந்து
எந்தனுக்கு அமுதளிப்பாய் என்று ஆடிப்பரதவித்து இறைவன் இளைப்பாற
160 தன் சவரப் பஞ்சணையாம் சப்ரமணி ஊஞ்சல் சகலாத்துமெத்தையிட்டு
தங்கவைத்து மலர்வீசி சாமரங்கள் போட்டுச் சாரங்கனைக் கொண்டாட
கொங்கு முடியணிந்தோன் வணங்கி நிற்கு மானிடர்க்குப் பொழு தாவுதென்று சொல்லி
வீரமணிப் புரவிதன்னை பெருவிரலால் சூழ்ந்து வெகுவேகமாய்த் தூக்கி
வாரணத்தைக் காத்த வள்ளல் வண்டியூர் தோக்கி வளநதிக்குள்ளே நடக்க
165 பக்தர்களும் தொண்டர்களும் ஊழியங்கள் செய்து பகவானைச் சூழ்ந்துவர
சித்தர்களைக் காவல் வைத்தோன் தென்திருமலைச் சாரியில் திருமால் ஒருகரையாய்
நாளை வாரேன் கருடன்மேல் கட்டளை தவறாமல் நடத்தியே காட்சிதரும்
வேளை யிதுவறிந்து வண்டியூர் போயி சற்றுநேரம் தங்கி விமலிக்குச் சேதி சொல்ல
சுண்டினார் சவுக்காலே தேவியை நினைத்து குளிர்ந்த மணலில் துவளுதாம் குதிரையது
170 மண்டியிட்டு மணல்வாரி வாலைக் கிளப்பி இளந்தோப்பைத் தேடிவருகுதாம் மாந்தேசி
நெல்லிமலைக் காடு மூங்கிவளப் பண்ணை நெருஞ்சித் திடல் கடந்து
மல்லிகைப்பூ பூட்டி தென்னை வளப்பூமி தாண்டுது
லகானை யிழுத்த கையோடு வேர்வையது சிந்த நாடகஞ்சூழ் தென்றலினால்
உலகாதிபன் தேனூரார் கட்டளையில் உள்நுழையத் தேசிதன்னை
175 வெண்சாமரம் வீசி பீதாம்பர மணிந்து நெய்வேத்யம் ஈந்து விமலனைப் போற்றியேதான்
தஞ்சமென்றே காராளர் சம்பாதளுகை செய்து தாள்பணிந்து போற்றிசெய்து
திரையொதுக்கித் திருமாலும் பக்தர்முகம் பார்த்து சூடதீபம் தான் கொடுத்தார்
பறையோசை தானோங்க அதிர்வேட்டுப் போட பலவாத்தியம் முழங்க
நாளணியும் முன்நடக்க குடைசுருட்டி யீட்டி நகரா மணியசைய
180 பாரளந்தோன் பரிசூழ்ந்த கோவிந்தா என்ற சத்தம் பாரில் உள்ளோர் போற்றுவராம்
உதறி மயிர்குலுங்கி முழிய மருட்டி அனுமார்பட்டி பாதையினைத் தேடி உல்லாசமாயப் புரவி
பதறி நடுநடுங்கித் திக்குத் திசைமாற மாலைப்பொழுதில் பாயுதாம் ஓர்கரையில்
ஆனைசேனை முன்னடக்க கழறா மணிச்சதங்கை அசையா கூமுறி இலங்க
மானை நிகர்த்த முழியாள் செண்பகவல்லி நாச்சியார் அம்மன் மாதரசி தன்மனையில்
185 எண்ணினார் இருகணத்தில் ஜெயதிருஷ்டி மாயோனை இரு விழியால் பார்க்கஎன்று
உன்னிதமான தொனியோசை முழங்க மேமூலைச்சாரி ஓடிவந்து பார்த்து நின்றாள்
செய்மேகங்கள் கூடித் திரண்டு வருவதுபோல் புரவி வரப பார்த்துத் தேவி மனங்குளிர்ந்து
கார்மேகம் வந்ததென்று புன்சிரிப்புக்கொண்டு கைகொட்டி நடனமிட்டு
189 ஆனந்தக் கூத்தாடி மண்டப மாளிகையில் அலங்கரித்தாள் பள்ளியறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்/023&oldid=1820762" இலிருந்து மீள்விக்கப்பட்டது