அழகர் கோயில்/026
தோற்றம்
பிற்சேர்க்கை II : 6
கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு
- ஆண்டவா ஆதிமூலம் கண்ணா உன்தமையன்
- கருப்பன் வரலாறுதனைக் கழறுவேன்யான் மதலை கைதொழுது போற்றி செய்தேன்
- சத்திக்கு மக்களாய் தவத்திலுதித்து தானே பிறந்த மக்கள்-அவர்கள்
- சேனைகளை இப்பொழுது சிறப்புடனே கூறுகின்றேன்
- 5 சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க
- சந்தனக் கருப்ப னொண்ணு சங்கிலிக் கருப்பன் ரெண்டு காளாங்கிக் கருப்பன் மூணு
- உச்சிக் கருப்பன் நாலு ஊமைக் கருப்பன் ஐஞ்சு உருளு தேரடிக் கருப்பன் ஆறு
- ஆறு கருப்பனுக்கு ஏழாவதாக பெரிய கருப்பன் எசமானாக ஏழு கருப்பனும் பிறக்க
- அந்திமாடன் சந்திமாடன் ஆகாயமாடன் சுடலைமாடன்
- 10 லாடனென்ற சன்னியாசி ஆக மாடன் கையி லைந்தும்
- மாடன் வகையி லைந்தும் ஐஞ்சும் ஏழும் பன்னிரண்டு
- சங்கன் சமையன் பன்னிரண்டும் ரண்டும் பதினாலு
- சப்பாணி சோணை சமர்த்தர்கள் காவல் ஆகப் பதினாலு ரெண்டும் பதினாறு
- வீரபத்திர னென்னும் அக்கினி வீரன் அடங்காத இருளன்
- 15 வீரன் வகையில் இவர்கள் இணைப்பு பதினெட்டு
- அந்தப் பராசக்தியின் துர்க்கை என்ற ஒன்பது பிறவியிலே மூணு பிறவி
- ஏ அம்மா! ஆத்தாள் பரமேசுவரி படிவாசல் சக்தி வல்லிப ராபரி - அவள்
- பேச்சி யென்றும் இருளாயி யென்றும் ராக்காயி எனவும் ஆக இவர்பிறவி மூணுவகை
- பதினெட்டு மூணுங் கணக்கு பந்தி இருபத்தி யொண்ணு
- 20 அஞ்சிரண்டு ஏழு இவர்களுடனே பந்தி அடங்க இருபத்தியொண்ணு
- இருபத்தோர் பந்தி அறுபத்தோர் சேனைதளம்
- அடக்கி அரசாள ஐயன் குருநாதன்
- கம்பைகளைத் தானே வாகுடனே கட்டிக் கரைகாத்துவர பிறந்த
- மக்களெல்லாம் கூட்டி மலையாள நாடு மந்திர
- 25 மகாராசன் கோட்டை வந்து தங்கி யிருக்கையிலே
- பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
- வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு
- சிறந்தாய் மலையாளம் கருப்பனுட சேனைத்தளம் சிறப்படைஞ்ச கீழ்நாடு
- பிறந்தாய் மலையாளம் கருப்பன் துலங்குவது கீழ்நாடு
- 30 மலையாள நாடுவந்து மந்திர மகாராசன் கோட்டையிலே
- இருபத்தியோர் பேரும் இருந்தரசு செய்கையிலே
- தொட்டியன் தோக்கலியன் பேக்கலியன் கம்பளத்தான்
- தெய்வங்களை யெல்லாம் கட்டிக்காக்க முடியாதென்று - அவன்
- அருமை அறிஞ்சி ஆதரிக்க மாட்டாமல்
- 35 குணத்தை மலையாள நாடு கொண்டணைக்க மாட்டாமல்
- முன்னே ஆண்டுவந்த தேவதை யெல்லாம்
- முண்டுகட்டி முண்டுடுத்து முத்தன் இருக்கும் மூணு மலையாளம்
- துண்டுகட்டி துண்டுடுக்கும் துலுக்க மலையாளம் தொட்டிய ராச்சியம்
- பெரிய மலையாளம் பேர்பெரிய சீமை-அந்தக்
- 40 காப்புலிய நாடு கனத்த மலையாளம்-அந்த
- மலையாள நாடு மந்திரத்துக்கும் மீறுதுக ளென்று சொல்லி
- மூங்கிமரம் பிளந்து பஞ்சவர்ணப் பொட்டி செய்து
- பாக்குமரம் பிளந்து பஞ்சவர்ணப் பொட்டி செய்து
- தேக்குமரம் பிளந்து சித்திரவர்ணப் பொட்டி செய்து
- 45 ஆலமரம் பிளந்து அழகுவர்ணப் பொட்டி செய்து
- கட்டை பிளந்து கருவலப் பொட்டி செய்து
- வயிரம் பிளந்து வாகுடனே பொட்டி செய்து
- ஈச்சமரம் பிளந்து இவர்களுக்கு பொட்டி செய்து-உங்களை
- வகைமை தெரிஞ்சு வச்சாள மாட்டாமல்
- 50 பன்னிரண்டு வருஷமும் பாரமழை இல்லாமல் பஞ்சம் போன காலம் பதிமூணாம் வருஷம்
- ஈழமும் கொங்கும் எதுத்து மழை பொழிய
- கொங்குமழை பொழிஞ்சு குடவனாறு தண்ணிவந்து
- மப்புமழை பொழிந்து மலட்டாறு தண்ணிவர
- ஆறும் கரையும் அலைமோதித் தண்ணிவர
- 55 சாரமழை பொழிஞ்சு சரியான வெள்ளம்வர
- வல்லமழை பொழிய வருஷநாடு தண்ணிவர உங்களை வைச்சாளமாட்டாமல்
- தொட்டியன் காப்புலியன் தேங்காய் பழமுடைத்து தீபதூபம் கொடுத்து
- பச்சரிசிப் பொங்கலிட்டு பொங்கல் தளிகைவச்சு
- இருபத்தியோர் பேருக்கும் தளிகை பரிமாறையிலே
- 60 கருப்பனும் சோணைக்கும் தளிகை சரியில்லையிண்ணு
- காப்பைக் கருவறுத்து மலையாளநாடு கம்பளத்தை வேரறுத்து
- தோப்பைக் கருவறுத்து தொட்டியனை வேரறுத்து
- அகரம் கருவறுத்து மேலமலையாளத்தில் அக்ரகாரம் கொள்ளையிட்டு
- பாப்பார் குடியைப் பறச்சேரியாக்கி வைத்தாய்
- 65 கிகரம் கருவறுத்து கருப்பா சீமையெங்கும் கொள்ளையிட்டாய்-உன்னை
- அரசு செலுத்த முடியாமல் அடைத்திட்டான் பொட்டியிலே ஆரியனு மந்நேரம்
- கட்டினான் பெட்டியிலே காலநேரமாகுதென்று கருவலப்பெட்டியை
- மலையாள நாடுவிட்டு உங்களைக் கைபோட்டுத் தான் தூக்கி
- வருஷநாட்டுத் தண்ணியிலே தள்ளிவிடப் போகையிலே
- 70 பள்ளன் ஆண்டிட்டாலென்ன உங்களைப் பறையமகன் ஆண்டாலென்ன
- கள்ளமகன் ஆண்டாலென்ன காராளரோடு கடுகுந் தவமுடையோன்-இனி
- ஆராண்டாலென்ன என்ன வென்று உங்களை
- வாகாகவே தான்தூக்கிப் போங்களென்று சொல்லி
- 75 ஆணலையும் பெண்ணலையும் அலைமோதி வருநேரம்
- பொல்லாத வேளை கருப்பையா உன் பொட்டியைத் தள்ளினான் தண்ணியிலே
- தள்ளிவிட்ட பொட்டி தங்கஇடம் இல்லாமல்
- தானே அதுமிதந்து வருகுதுபார் வைகையிலே
- குன்னூருப் பாலமாம் குடவரையுந் தான்கடந்து
- 80 அண்ணஞ்சி தேவாரம் கருப்பன்பொட்டி அடுத்ததா மன்னேரம்
- கூடலூர் கம்பமாம் கருப்பன்பொட்டி குதித்து விளையாண்டுவர
- வீரபாண்டி ஆறு மலையாளன்பொட்டி வெகுவேகமாய் நடக்க
- பெரிய குளமாம் பேர்போன நதியாம் கருப்பன்பொட்டி பிரிந்து மிதந்துவர
- தேனி அணியாம்பொட்டி சீறிக் கடந்துவர
- 85 சின்னமனூரும் சித்தாத்துப் பண்ணைவிட்டு சித்தணையாம் பேரணை
- அணையும் கடந்து கருப்பன்பொட்டி அடுத்து மிதந்துவர
- தேவதானப்பட்டி காமுதலை வாசல்விட்டு கருப்பன்பொட்டி கடந்து வெளியேறி
- போய்வாரே னென்று சொல்லி இருபத்தியோர் பேரிருக்கும் பொட்டி ஏகி வழிநடக்க
- சின்னவிளாம்பட்டி பெரியவிளாம்பட்டி பட்டிவழிபொட்டி பாங்காகவே வருக
- 90 பறையமகன் தூக்கி எடுத்துப்பார்த்து பாங்காகப் பழயபடி தள்ளிவிட
- தள்ளிவிட்ட பொட்டி தங்க இடமில்லாமல் குருவித்துறையாம்
- வல்ல கங்கைப்பெருமாள் தலைவாசல் பொட்டி வாகாகவே கடக்க
- மன்னாடிமங்கலமாம் மலையாளன் கருப்பன்பொட்டி ஏகி வழியொதுங்க
- இரும்பாடிப் பாலமாம் கருப்பட்டியைக் கடந்து கருப்பன்பொட்டி கடந்ததாம் வைகையிலே
- 95 பண்ணிமுட்டியோடு பழய மடைக்கேணி பாங்கா யதுகடக்க
- தென்கரைப்பாறை அகிலாண்டேஸ்வரி கோயில்விட்டு
- ஆன ஆத்து வடபாலாம் அடந்த கரைமேடு
- முள்ளிப்பள்ளமும் கடந்து இளந்தாரி வாசல்விட்டு இருபத்தியோர் பேரும்
- பொட்டி மிதந்துவர சோழவந்தான் படித்துறை கருப்பன் பொட்டி சுருக்காகலே கடக்க
- 100 தச்சன்வகுத்த தச்சம்பத்து எல்லை மலையாளிபொட்டி தங்கியது வழிமிதக்க
- மிதந்துவழி கூடி தேனூர் முன்றத்து ஏடகநாதர் தலைவாசல்
- திருவேடகப் படித்துறை திகையாமல் வழிநடக்க சமணர் கழுவேத்தம்
- மேலக்கழுவு மேலக்கால் பாலம்விட்டு கருப்பன்பொட்டி மேன்மையாய்த் தானொதுங்கிட
- எல்லையது கடந்து கொடிமங்கலமாம் கன்னிமார் வாசல்விட்டு கீழமாத்தூர் மேலமாத்தூர்
- 105 பக்கிரி தைக்கா சாய்புமகன் பொட்டியப் பார்த்து பாங்குடனே தள்ளிவிட
- ஒதுங்கி வழிநடக்க மாண்புகொண்ட பூமி துவரிமான் சாலை
- சாலைக்கரையும் ரெட்டைவாய்க்கால்மூலை முத்தனுந்தான் அங்குநின்ற
- கோபித்துக் கரையடைத்த கோச்சடையாம் பேச்சடங்கு முத்தன் குவலயாய்த் தானே தங்கி வழிவிலக
- பல்லவராயன் சேரி பழைய கிழமூலை படுகைமேல் பொன்னாணை
- 110 ஆரியது பாளையம் ஆரப்பாளையமூலை வைகைநதி
- கீழ்பாரிசம் போய் கருப்பன்பொட்டி கிளம்புதாம் கீழ்முகமாய்
- ஆண்டவா கருப்பையாபொட்டி அதனைக் கடந்து அன்பாகவே மிதந்து
- வைகையிலே பொட்டி வாகுடனேகிளம்பி வல்லயமாய் அது நடக்க
- தண்ணித்தொட்டி முந்தலாம் தகுந்த திருப்பரவை
- 115 எல்லைகளைத் தான்கடந்து எஜமான் பொட்டி ஏகியே தான் கிளம்பி
- புட்டு நல்லதோப்பு பூங்காவனச்சோலை பொன்னகரமூலை
- மணிநகர எல்லை மாதாள் தலைவாசல்
- மதுராபுரிக்கோட்டை மங்கை மீனம்பாள் தலைவாசல் மாசிநல்ல வீதிகளும்
- அட்டாளக்கம்பம் அறுபதடிப்பீடம் அங்கயற்கண்ணி மீனம்பா ஆச்சி தலைவாசல்
- 120 பித்தாளைக்கம்பம் சோமசுந்தரேசர் சொக்கர் தலைவாசல்விட்டு
- வைகையாம் பரிசம்பொட்டி வாகாய் அது நடக்க
- ஆனைக்கல்லு மூலை அயின்ற ராவுத்தன் பேட்டை அனுப்பான டிக் கால்வாயாம்
- அடுத்த தலைவாசல் கருப்பனுடபொட்டி சரியாய் வழிநடந்து
- போய்வாரே னென்றுசொல்லி மலையாளிபொட்டி கிழக்குமுகம் பார்வையிலே
- 125 தானே அது தான்கிளப்பி மதுரைக்குங் கீழ்கடசி மாரிதலை வாசல் தெப்பக் குளமூலை
- அயிலானூர் வெரகனூர் வண்டியூர்தாண்டி கருப்பனுடபொட்டி அடுத்தாம் கோழிமேடு
- சிலையமான் புளியங்குளம் அது மணலூருக்கோட்டை மங்கை காளி தலைவாசல்
- தட்டான்குளமாம் பொட்டியது கடந்து தானே வெகுவேகமதாய்
- தில்லைவனம் முல்லைவனம் திருப்புவனப்பூமி
- 130 பூமிக்கு முன்பிறந்த பூவணாலிங்கம் பூவணேசுவரன்வாசல்
- ஆத்துக்கு முன்பிறந்த அழகுமீனாள் தலைவாசல்
- கள்ளிவலசை கழுவேத்தான் பொட்டல் கத்தரிக்காய்ச் சித்தன்
- காத்தாண்டி மொட்டையன் கழுவேத்துமேடு சமணர் கழுவேத்தம் சரியாகவே கடந்து
- போதகுருசாமி மடம் போயலைத் தோட்டம் புதூர் நெடுஞ்சாலை புன்னைவனத்தான் காடு
- 135 திருப்புவனப் பூமிவிட்டு கருப்பனுடபொட்டி திய்யமுடனே நடந்து போய் வருவோமென்று
- மடப்புறத்து எல்லை மங்கை பத்ரகாளி தலைவாசல் பொட்டியது தான்கடந்து
- கால் நதிவழியே மலையாளன்பொட்டி கடந்து ஒதுங்கியதாம்
- எல்லையது தான்பார்த்து அந்த லாடனேந்தல் மூலை எல்லைக் கரையாம்
- லாடனேந்தல் முக்கு முக்குக்கரையாம் முடுக்குக்கரை சாய்மானம்
- 140 கீழ்மானத்திலே மலையாளிபொட்டி கிளம்பி வழியொதுங்கி அந்த லாடேனந்தல்விட்டு
- நாரை பறக்காத நாப்பத்தெட்டு மடை ராமநாதபுரம் ஜில்லா பன்னிரண்டு லட்சம் பூமி
- ராசசிங்க மங்கலம் கண்மாய் அதிலே பிரிந்த நாலுமடையாம் நடுமடைப் பாசானம்
- சேதுபதி நாடு சிவகங்கைப் பூமி சின்னமறவன் எல்லை
- மங்கல நாடு மறவன் பதிச்சீமை மலையாளக் கருப்பன்பொட்டி
- 145 தங்கின மடைக்குழி மார்நாட்டுஎல்லை ரெண்டுமடைப் பாசனம்
- செங்க மடையிலே சேதுபதி நாட்டில் பொட்டி சிறப்பாகத் தங்கி நிற்க
- விலத்தூர் மடையும் கூம்பு மடையும் அந்தப் பெரியமடை யாம் பேர்போன மடையடுத்து
- சின்ன மடையாம் செங்கமடைக் குழியில் பொட்டியது தங்கி நிற்க
- களையெடுத்த பள்ளிமாரில் கச்சனேந்தல்பள்ளி கருப்பாயி ஓர் புறமும்
- 150 காலாடிக் குடும்பன் கலப்பைகட்டி ஏர்உழுது-அந்த
- சேதுபதிப் பட்டணம் சின்னமறவன் ஆண்ட பூமி
- ஆண்டான் மறவன் ஆதரித்தான் பேமறவன்
- மறவன்பதி எல்லையிலே மடையடியவிட்டு
- காணியும் பூமியும் கருப்பையா உனக்குக் கல்ப்போட்டு மால் வாங்
- 155 காலாடிக் குடும்பனும் கருப்பாயும் கருவலப்பொட்டிய கைபோட்டுத் தான்தூக்கி
- தூக்கி எடுத்து உன்னைத் துடியாகவே வளர்த்த
- மலையாள மெச்ச மார்நாட்டுப் பொனகருப்பே
- கருப்பா வடமுகமே மார்தாட்டுச்சாமி கண்பார்ப்பாய் காவினமே
- சவரக் கிளியே மார்நாட்டு வேங்கைசாமி வாழ்விந்நேரம்
- 160 கருணையிறங்கும் கோடாங்கிகளுடைய கருத்திலேயிருந்து இசை பாடும் கவிவாணர் நெற்றியிலே
- அழையா விருந்தே மார்நாட்டுச்சாமியை அனுதினமும் கை தொழுதேன்
- தோடாத் திரவியமே கச்சனேந்தப்பள்ளி வளர்த்த எங்க கடவுளாம் மார்நாடு
- காணிக் கருவலமே உன்னைக் கடுகிஎடுத்து கருணையுடனே வளர்த்த
- அல்லும் பகலும் அறுபது நாழிகையும்
- 165 வயலோ தலகாணி வாமடையோ பஞ்சுமெத்தை
- கதிரோ தலகாணி கலுங்கடியோ பஞ்சுமெத்தை
- கலுங்குமேல் அமிர்த்திவைத்துக் கச்சனேந்தல்பள்ளி கடுகி வளர்த்து காலாடிக்குடும்பன்
- தேங்காய் பழம் உடைத்துத் தீபதூபம் கொடுத்து
- வணங்கிவரு நாளையிலே பூமிக்குச் சாமி மார்நாட்டு வேங்கை
- 170 கவிவனமாய் இருந்த கள்ள மலையாளியோ.