உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்/027

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை II : 7

ராக்காயி வர்ணிப்பு
(அச்சிடப்படாதது)

சோலைமா மலை சுந்தரராசா அரிநமோ நாராயணா அச்சு தானந்தா
அடர்த்தாய் ரகுராமா ஐயனே கோவிந்தா
அரிஹரி மாதவா அனைவோர்க்கும் காட்சிதந்த ஐயனேவா கோவிந்தா
கரியினிடர் தீர்த்தோன் பக்தர்களை கைதூக்கிவிட்ட கண்ணா
5 கண்ணா மணிவண்ணா பாற்கடல்வாசா கரியமாலே முகுந்தா
விண்ணவர்க்காய் கடலை முன்னைநாள் கடைந்த வித்தகா மேகநிறம் போன்ற கண்ணா
சிவசிவா நமசிவாயம் சிவனே நமசிவாயம்
சிவசிவா என்ற சொல்லைச் சிந்தையிலும் நான் மறவேன்
அரிஓம் நமசிவாயம் ஆதிலிங்க நமசிவாயம்
10 அரியும் சிவனை அனுதினமும் நான் மறவேன்
அரியை வணங்கினேன் அப்பாதம் தஞ்ச மென்றேன்
சிவனைத் தொழுதேன் சிவன்பாதம் தஞ்ச மென்றேன்
சித்தி வினாயகா உன் திருவடியைப் போற்றி செய்தேன்
பால சுப்பிரமணியா உன்பாதா ரவிந்தம் பணிந்து உன்னை நான் தொழுதேன்
15 தாயே கலைமகளே சரஸ்வதியே உன்னைத் தாள்பணிந்து தெண்டனிட்டேன்
அந்தி பகல் அறுபதி நாழிகையும்
முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாட் சுமந்திருந்து
தொந்தி சரியச்சரியத் துடை நடிங்கிப் பெற்றெடுத்த
மாதா பிதா அவர் மலரடியைப் போற்றி செய்தேன்
20 குருவைப் பணித்தேன் குருபாதம் போற்றி செய்தேன்
எல்லை வணங்கினேன் எல்லை காக்கும் எங்கள் எஜமானைத் தஞ்சமென்றேன்
மண்றை வணங்கினேன் எங்கள் மண்டு ஆரப்பாளையம் காக்கும் ஆதிசடாமுனியன்
சலுப்பர் குடிகாத்த சாமிமுனியாண்டி உந்தனையும் தாள்பணிந்தேன்
மண்றுக் கதிகாரி மகாமுனியோடு பக்கத் துணையிருக்கும் சோணையாஉன் பாதமலர் போற்றி செய்தேன்
25 சொல்ல வருந்தாய் அருள் கொடுக்கவேணும் சூட்டுக்கோல ராமலிங்கம் சொல்லியே உன்னை நான்பணிந்தேன்
மண்றுக் குகந்த தெய்வம் அத்தனையும் நான்வணங்கி
அட்டாளச் சொக்கலிங்கம் அங்கயற்கண்ணி அழகு மீனம்பாள் தலைவாசல்
பித்தாளைக் கம்பம் பொற்றாமரைக் கரையும் சித்தி விநாயகனைப் போற்றிசெய்தே
தெண்டனிட்டேன் தலங்காத்த பாண்டிமுனி பழமதுரைச் சாமி பாதாரம் நான்பணிந்தேன்
30 மதுரைக் கரசாட்சி செய்யும் வீரையாஉன் மலரடியை நான்பணிந்தேன்
மதுரை வீரனோடு தேவதைகள் எல்லாம் மலர்தூவித் தெண்டனிட்டேன்
படிவாசல் காக்கும் பார மலையாளி பகவானே கருப்பையா உன் பாதமலர் பணிந்தேன்
கம்பைக் கதிகாரி அந்தக் காணிக்கருவலம் எங்க கட்டுப்படா மேனி கருப்பன் கயிறுபடா ராணுவம்
பண்ணைக் கதிகாரி படிவாசல் காக்கும் பாரமலைக் கீதாரி
35 கோம்பைக் கதிகாரி பெரியகருப்பா நீ குடவரைக்குங் கீதாரி
எல்லைக் கதிகாரி பெரியகருப்பு எஜமான் வாசலுக்குங் கீதாரி
மலைக்கு மதிகாரி மண்மலைக்கும் கீதாரி
படிக்கு அதிகாரி எங்க பாட்டமார் ஆண்ட பதினெட்டாம்படி காக்கவந்த கருப்பையா நீ பாரமலைச் சேவுகமே
கதவில் அரிவாளாம் மலையாள வேங்கை உனக்குக் கற்படியில் சோலியுண்டாம்
40 படியில் அரிவாளம் கருப்பையா உனக்கு அந்தப் படிவாசல் சோலியுண்டாம்
கோம்பை அரிவாளாம் கருப்பையா உனக்கு அந்தக் குடவரையில் சோலியுண்டாம்
கருப்பன் வலதுபுறம் ராக்கு இடதுபுறம் இந்த விதமாகவே இருக்கும்
ராக்காயி அம்மன் சிறப்பு சீராகப் பாடுகிறேன்
.............இந்தப் பதியில் இருபுறமும் நதி ஓட
45 ............பச்சிகளும் தானெழுந்து ஏக்கும்பலாய்க் கூடி
அடர்ந்து நீரில் குளித்து ஆனந்தங் கொண்டெழுந்து
விண்ணில் பறந்துவந்து ராக்கப்பன் சாவடியில் வெகுவேக மாகத் தானமர்ந்து
அரிஅரி யென்றே ஓலமிடக் கேட்டு என்ஆசான் அவரெழுந்து
இடையினில் கமண்டலத்தைத் தான்பிடித்து வேகவதி தனிலே
50 அமர்ந்து நீரில் தான்குளித்து ஆனந்தங் கொண்டெழுந்து
பூசை முதலான அத்தனையும் முடித்து
நேமமுடன் நிமிசமதில் இடையினிற் பணிபூண்டு நித்ய பரிபூரணமாய்
சாமமொடு ருக்குயஜுர் அதர்வணம் என்றுரைக்கும் சதுர்வேத ஆகமமும்
நாமகளைப் போற்றிசெய்து நல்லகொடி நாட்டிக் கருட மேடையின் மேல்
55 அமர்ந்து கனி தொடுத்து தொடுத்ததோர் பாடலதை ஆழிய லைபோல் சபையில்
தெரிந்தவரை பாடி வைத்தார் என்ஆசான் சிரிமொட்டையக் கோன் தெளிதமிழாய்
...........விஞ்சை படியாய்ப் புகன்று குதுகலமாய்ச் சிலகாலம்
தளராது தொன்றுதொட்டுப் பிச்சையான் பெற்றுத் தனயன் வந்தேன் மாசபைக்கு
நாவால் வரும்பிழைகள் ஊகித்துணரும் நாவலரும் பாவலரும்
60 ஓர்ந்து ஒருமனதாய்க் கேட்க அவை கூறுகிறேன் அந்தக் கோபாலன் பொன்னடிக்கே
கருந்தேன் ஒழுகுதாம் அழகமலைக் காடு-என்னைப் பெத்தா ராக்கு நீயிருக்கும் கல்வயிரத் தொட்டியிலே
செந்தேன் ஒழுகுதாம் செம்பவள வாயழகி செகநாதன் தங்கச்சி செல்வி ராக்காயி நீயிருக்கு மந்தச் சித்ரவர்ணத் தொட்டியிலே
மலைத்தேன் ஒழுகுதாம் மாதாளரசி நீயிருக்கும் மாசிமலைக் காடு மாணிக்கத் தொட்டியிலே
பசுந்தேன் ஒழுகுநாம் பாரமலைக்காடு பத்தினியாள் ராக்காயி நீயிருக்கும் பவளவர்ணத் தொட்டியிலே
65 தீர்த்தம் ஒழுகுதாம் தேக்கமலைக் காடு திருமாலுட தங்கையிருக்கும் அந்த தேக்கமலைப் பண்ணை திருமஞ்சனத் தொட்டியிலே
பத்தினியாள் ராக்காயி பாரமலைக் காடு பளிங்குவர்ணத் தொட்டியிலே பாங்குடனே குலவையிட்டாள்
குலவைச்சத்தம் தான்போட்டு கோம்பைமலைக் காடு கோல வர்ணத் தொட்டியிலே குடியிருந்தாள் ராக்காயி
சிட்டுவந்து நீரருந்தும் செல்ல மலையாளி கருப்பன் கூடப்பிறந்த ராக்காயி நீயிருக்கும் சித்ரமணித் தொட்டியிலே
பச்சிவந்து நீரருந்தும் பாரமலைக் காடு பாரளந்தோன் தங்கையிருக்கும் பஞ்சவர்ணத் தொட்டியிலே
70 மயிலுவந்து நீரருந்தும் மாதாளிருக்கும் மாசிலைக் காடு மஞ்ச வர்ணத் தொட்டியிலே
குயிலுவந்து நீரருந்தும் கோம்பைமலைக் காடு கருப்பன் கூடப் பிறந்த ராக்காயி நீயிருக்கும் அந்த குளிர்ந்தவனத் தொட்டியிலே
அன்னம்வந்து நீர்குடிக்கும் அருவிமலைக் காடு அன்னக்கிளியாள்
அருங்கிளியாள் ராக்கு நீயிருக்கும் அழகுவர்ணத் தொட்டியிலே
தீர்த்தம் குறித்ததுமே திருமாலுட தங்கச்சி திருமஞ்சன நீராட
75 குளித்து நீராடினாள் கோவிந்தன் தங்கை கோலவர்ணத் தொட்டியிலே
வாகுடனே தானெழுந்து வாரிக் குளித்தாளாம் வச்ரமணித் தொட்டியிலே
குளித்து முழுகியங்கே கோலவர்ணத் துகிலுடுத்தி கோவிந்தன் தங்கச்சி
கோதி பயிருணத்தி கோடாலிக் கொண்டையிட்டு குங்குமப் பொட்டுமிட்டு
வாரி மயிருணத்தி வலமலைக் காட்டி வச்ரமணிக் கொண்டையிட்டாள்
80 தாரி மயிருணத்தி தலமலைக் காட்டி வச்ரமணிக் கொண்டையிட்டாள்
அள்ளி மயிருணத்தி அழகுவர்ணக் கொண்டையிட்டாள்
அப்போ காலநேர மாகுதென்று கருமலையைவிட்டு
காட்டு இடைச்சி மலையாள மெச்ச கருப்பனுட தங்கச்சி
கட்டழகி ராக்காயி அப்போ வெகுநேர மாகுதென்று அண்ணனுட குடவரையப்
80 பார்வையிட வேணுமென்று சொல்லி விமலி பரமேஸ்வரி
சாம்பிராணி வாசகத்தி சாமளன் தங்கச்சி சதிருடனே தானெழுந்து
மாசிப் பிறையழகி மகுடகும்பத் தேரழகி
வார்ப்புச் சிலையழகி ராக்காமி வச்ரமணிப் பொட்டழகி
செப்புச் சிலையழகி செகதாதன் தங்கச்சி செந்துருக்கப் பொட்டழகி அம்மம்மா!
90 உன் ஆடை கொடியிலே ராக்காயி உன் ஆபரணம் பொட்டியிலே
சேலை கொடியிலே ராக்காயி உன் செல்லநகை பொட்டியிலே
மாலை கொடியிலே ராக்காயி உன் மஞ்சணையோ பொட்டியிலே
பூசினாள் மஞ்சனையை அவ பூமானுட தங்கச்சி அது பொன்னுங் கழுத்திருக
இட்டாள் சிவப்பு இழுவினாள் மஞ்சனையை
95 தொட்டாள் சிவப்பு தொடுத்திட்டாள் பூஞ்சரத்தை
வெகுநேர மாச்சுதென்று விமலி பரமேஸ்வரி வெள்ளிமலை விட்டெழுந்து
மக்கள் பதினாறும் மாதரசி தானழைத்தாள்
புள்ளை பதினாறும் பெருமையுடன் அழைத்தாள்
வாருங்கள் மக்களா என் கூடப்பிறந்த அண்ணன் கருப்பன்
100 உங்க தாய்மாமன் மலையாளி இருக்குங் கதவழக நாமபோய்ப் பார்த்து வருவோ மென்றாள்
மக்களே மாலைப் பொழுதாச்சு மாடடையும் நேரமாச்சு
கால நேரமாகுது உங்கமாமன் கருப்பனுட கதவழக பார்ப்போமென்று
இக்கலிலே புள்ளையாம் இடையிலே செம்பனொண்ணாம்
கக்கத்திலே புள்ளையாம் கனக்கையில் செம்பனொண்ணாம்
105 மடியிலே புள்ளையாம் மார்பிலே மைந்தனொண்ணாம்
அட்டத்தில் புள்ளையாம் அருகிலே மைந்தனொண்ணாம்
பக்கத்தில் மைந்தரெல்லாம் பண்பாய் நடக்கவிட்டு
பாரமலை ராக்காயி அவ பாரவழிகூடி
பாலகர்களைத் தான் கூப்பிட்டழைத்து பாரக் குலவையிட்டாள்
110 குலவைச்சத்தங் கேட்டவுடன் குழந்தையெல்லாம் ஓடிவந்து
சீறிக் குலவையிட செம்பன்மார் முன்னடக்க
மாதாள் குலவையிட மைந்தன்மார் முன்னடக்க
தாயார் குலவையிட நீபெத்த தனயன்மார் முன்னடக்க
செல்வி குலவையிட செய்யன்மார் முன்னடக்க
115 அன்ன நடைநடந்து அழகமலைக் காடு அருவிமலைவிட்டு
செல்ல நடைநடந்து சித்ரவர்ணக் கதவு சீரழகப் பார்வையிட
பாலர்களைக் கூட்டி பாங்காய் வழிநடந்து
பண்ணை யிடைச்சி பந்தானச் செல்வி பலபுள்ளைக் காரி பத்தினியான் பொன்ராக்கு
கோம்பை யிடைச்சி மலையாளி கூடப்பிறந்த கொம்பனையாள் ராக்காயி
120 குழந்தைகளைக் கூட்டி அண்ணன் கருப்பன் குடியிருக்கும்
குடவரைக் கதவு கொல்லிமலைப் பொன்படியை பார்வையிட வேணுமென்று
கருப்பன் இருக்கும் பதினெட்டாம்படிக் கதவழகப் பார்ப்பதற்கு என்னைப்பெத்தா ராக்காயி
மக்களைக் கூட்டிமாதரசி வாராளாம் வடக்குக் கதவு தெற்குக்கதவு
சுப்பக்கோன் பச்சக்கோள் நாட்டிவச்ச செல்லக் கதவழக பார்வையிட
125 வாசல் திறந்து வண்ணக் குலவையிட்டு வடக்குக் குடவரையத் தேடி ராக்காயி வாராளாம்
செல்லி நடைநடந்து ஏழுமலைக் காடு இந்திரவர்ணத் தொட்டிவிட்டு இளவரசி வாராளாம்
சொல்லி நடைநடந்து சுந்தரராஜன் தங்கச்சி சோலைமலை விட்டு சுருக்குடனே வழிநடந்து
நடையாம் நடையழகி நாராங்கிப் பட்டழகி
நாராயணன் தங்கை நடுமலைப் பாப்பாத்தி
130 இடையாம் இடையழகி இளையானுட தங்கை இருண்டமலைப் பாப்பாத்தி
இண்டஞ்செடி காடு ஏழுமலைப் பண்ணை இருண்டமலை கடந்தாள்
மஞ்சமலைக் காடு அன்னங்கள் வாழும் மாவூத்துப் பண்ணைவிட்டு
மக்களைக் கூட்டி மாதரசி வாராளாம்
தேக்குபலா நிறைந்த செல்லிமலைக் காடு
135 வீரமலை விட்டு விமலியவள் வாராளாம்
காட்டுமாடு மேஞ்சடையும் கமுகு தென்னை நிறைந்த
கருமலையை விட்டுக் கட்டழகி வாராளாம்
சிட்டுமாடு மேயும் செவலைப் பசுமேயும்
செங்கமலை விட்டு செல்வியவள் வாராளாம் அண்ணன்
140 கருப்பனுட கதவு சீரழகப் பார்வையிட
மயிலைப் பசுமேயும் மண்மலையை விட்டு
மக்களைக் கூட்டி மலையாளி கருப்பன் மணிக்கதவத்- தேடி மாதரசி வாராளாம்
புள்ளிப் பசுமேயும் பொருந்துமலைக் காடு பொய்கைக்கரைவிட்டு
பூமானுட தங்கச்சி புள்ளைகளைக் கூட்டி பொற்படியாள் வாராளாம்
145 மலைப்பசு மேயும் மாசிமலையை விட்டு மக்களைக் கூட்டி
மைக்காரி ராக்காயி மாதாள் குலவையிட்டு வாராளாம்
வரும் வழிதனிலே பாரமலை யருகே பாலர்களெல்லாம்
அம்மா அம்மா என்றழைத்து பசியால் நினைத்து
பாலர் பரிதவிக்க, பசியமர்த்த வேணுமென்றாள்
150 பழம்பிறக்கிப் பசி தீர்த்தாள் பத்தினியாள் ராக்காயி
கூடைகொண்டு பழம்பிறக்கி, கொய்யாப் பழம்பிறக்கி ராக்கு
மாதுளம் பழம்பறித்து மக்கள் பசி தீர்த்தாளாம்
நவ்வாப் பழம்பறித்து நல்லபசி தீர்த்து நாலுமலை கடந்து
சீத்தாப் பழப்பறித்து செம்பன்மார் பசி தீர்த்தாளாம் செல்வியந்த ராக்காயி
155 கொய்யாப் பழம்பறித்து கோம்பை மலைமேலே குழந்தைபசி தீர்த்தாளாம் அப்போ
எலுமிச்சம் பழம்பறித்து ஏழுமலை கடந்து இருந்துபசி தீர்த்தாளாம்
கோவைக் கனிபறித்து குழந்தைகளோட கூடி வழிநடந்தாள் அப்போ
பேரீச்சம் பழம்பறித்து பெருமாள் மலையிலே ராக்காயி பிள்ளப் பசி தீர்த்தாளாம்
பழம்பிறக்கிப் பசியமத்தி வாழப்பழம் பறிக்க வடமலையைச் சுத்திவந்தாள்
160 கொடிமுந்திரி பறித்து குழந்தை பசியமத்தி
மாங்கனியும் தேங்கனியும் வாழை பலாக் கனியும்
மக்களுக்கே பறித்து மதலைபசி தீர்த்தாளாம்
பழமுதிர் சோலைவிட்டு பாலர்களே வாங்க உங்கமாமன்
கருப்பனுடைய படியழகப் பார்ப்போமென்று
165 பத்தினியாள் ராக்கு பக்குவமாய்த் தானழைத்தாள்
அந்த மாதாள் அரசி ராக்காயி மக்களைக் கூட்டி மைக்காரி வரும் பாதையிலே
மயிலுவந்து பாக்குது மலையாளி யிருக்கும் மணிக்கதவப் பார்வையிட மைக்காரி போறாளென்று
கரடிவந்து பாக்குதாம் கருப்பனுடைய கதவழகத் தேடி ராக்கு கட்டழகி போறாளென்று
சிட்டுவந்து பாக்குதாம் செங்கமலை விட்டு அண்ணன் கருப்பனுட கதவு
170 சீரழகக் காண்பதற்கு செல்வி போறாளென்று
அன்னம்வந்து பார்வையிட அண்ணன் கதவழகப் பார்ப்பதற்கு அருங்கிளியாள் போறாளென்று
பறவைகளும் சிட்டுகளும் பஞ்சவர்ணக் கிளிகளெல்லாம்
பத்தினியப் பாத்து பட்சியெல்லாம் வழியனுப்ப
நடந்தாள் ராக்காயி நடுமலையத் தான்கடந்து
175 பாலர்களைக் கூட்டி போய்வாரே னென்றுசொல்லி
பத்தினியான் ராக்காயி பாரவழி நடந்து
குழந்தைகளைக் கூட்டி ராக்காயி குலவையிட்டு முன்னடந்தாள்
கதவழகப் பார்க்க பொற்படியாள் வருகையிலே அங்கு
காட்டுப்புறா வந்தடையும் கருக்குவாச்சிப் பண்ணை கல்லூத்துச் சோங்குவிட்டு
180 கருப்பன் கதவநாடி கட்டழகி வரும்பாதை
மாடப்புறா வந்தடையும் மாசிமலைக்காடு மாணிக்கத் தொட்டிவிட்டு
மான்மயிலு தேன்கூவும் தேமாங்குயில் கூவும் தேனொழுகும் பாறை
தேவி வழிநடந்தாள் மகிழம்பூப் பாறை
வயித்துவலி தீத்துவைக்கும் பாறை வண்ணான் அருவி வழுக்குக் கல் மேடு
185 நளமகா ராசன் கோட்டை நாரணராயர் தெப்பம் மண்டையிடிக் கல்லு வயிராவி மண்டபம்
சிறுனிப்புதரு சீர்குறிஞ்சிப்பண்ணை செங்கமலக்காடு நாரண ராயர் தெப்பம் நல்லதண்ணிக் கிணறு
ஊறாக் கிணறு உள்கோட்டையும் தாண்டி உக்ராணக் களஞ்சியம்
அண்ணனுடைய கோட்டைவாசல் முன்ன நின்று அண்ணனப் பாத்து ராக்காயி
கோவிந்தா என்று குலவையிட்டாள் முன்னாலே
190 குலவைச் சத்தந் தான்கேட்டு தங்கச்சி மக்களையும் கோயிலுக்குள் தானழைத்து
தங்கச்சி என்னை விட்டுப்பிரியாத சகோதரி
கருப்பன் சகோதரி கட்டழகி ராக்காயி
அண்ணா அண்ணாஎன்று அடிவணங்கித் தெண்டனிட
அந்த தாமோதரக் கண்ணன் தங்கச்சி நம்மதம்பி மலையாள மெச்ச
195 கருப்பன் கதவை நீ கண்டு மனங் குளிர்ந்து
கருப்பன் கதவு கட்டழகு பாருமம்மா என்று காயாம்பூ வழியனுப்ப
ராக்காயி வடக்குக் கோட்டைவாசல் வண்ணக் குலவையிட்டாள்
தெற்குக் கோட்டைவாசல் தேவி குலவையிட்டாள்
கிழக்குக் கோட்டைவாசல் கெம்பீரமாய்க் குலவையிட்டாள்
மேற்குக் கோட்டைவாசல் முன்ன நின்று குலவையிட்டாள்
200 குலவைச் சத்தங் கேட்டவுடன் கருப்பன் கொண்டாட்டங் கொண்டெழுந்து
தங்கயரே வாருமம்மா அண்ணன் பதினெட்டாம் படிக்கதவு பகுமானம் பார்வையிட
சுப்பக்கோன் பச்சக்கோன் நாட்டிவச்ச கதவழகப் பாத்து கட்டழகி ராக்காயி
மக்களா உங்கமாமன் கதவழகு மகுத்துவத்தப் பாருங்களென்று
பாலருக்கு கதவழகக் காட்டி பாரமலை போரேனென்று
205 மலையாளியிடத்தில் பாங்காகச் சேதிசொல்லி
குழந்தைகளைக் கூப்பிட்டு மாமனுடகதவு குடவரைக்கதவு குளிர்ந்தமுடன் பாருங்களென்றாள்
தெற்குக் கதவுலே திருமாலுட அம்சமாம்
வடக்குக் கதவுலே வாமனர் அம்சமாம்
பக்கக் கதவுலே பகவான் அம்சமாம்
210 பெரிய கதவுலே பெருமாள் அம்சமாம்
அண்ணனுட அம்சமும் அந்தக் கட்டையினால் சேகரித்து
கணக்குடனே நாட்டிவைத்த கருப்பனுடைய கதவ ராக்காயி
கண்டு மனமகிழ்ந்து கதவழகத் தான்பார்த்து
சிரித்து மனமகிழ்ந்து செம்பன்மாரோட செல்வப் படியழகு தான் பார்த்து
215 பதினெட்டாம் படிக்கு முன்னே பாலர்களோடு பார்த்து குலவையிட்டாள்
குலவைச்சத்தம் கேட்டவுடன் கருப்பன் கொண்டாட்டங் கொண்டெழுந்து
அண்ணா எனக்கு கரந்தமலைத் தீர்த்தமும் கருப்பையா எனக்கு
காத்தட்டி வத்தலும் கானெல்லுச் சோறும் கருங்குட்டி ரத்தமும்
காட்டுத் துளசிக்கும் கானகத்துத் தீர்த்தத்துக்கும் கதம்பநல்ல மாலைக்கும்
220 கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை சூரியாள் சந்திராள் உள்ள பரியந்திரம்
இந்தக் கதவடியில் காத்திருத்து கரத்துமே உனக்கு
தொட்டியிலே முந்தாமல் வட்டிலிலே சிந்தாமல்
தங்கச்கி ராக்காயி என்று கருப்பன்
கச்சை வரிஞ்சுகட்டி கருங்கச்சை சுங்குவிட்டு
225 இடையிறுக்கிக் கச்சைகட்டி இந்த்ரவர்ணச் சுங்குவிட்டு
தாளிறுக்கிக் கச்சைகட்டி தாமரைப்பூச் சுங்குவிட்டு
கச்சை வரிஞ்சிக்கட்டி காணிக் கருப்பன் கள்ள மலையாளி
கத்தி இடையிலிட்டு கட்டாரி தோளில் வைத்தான்
குத்தி ஈட்டி வல்லயம் குடங்கையில் தான்செருகி
230 அந்த குடவரைக்கு முன்னே பெரியகருப்பன் கூத்தாடி முன்ன நின்று
கதவடியக் காத்து முத்தையா காணிக் கருவலமே கற்படிக்குச் சேவகமே
அண்ணா அண்ணாஎன்று ராக்காயி அண்ணனுட
கத்தி ஈட்டி வல்லயம் கட்டாரி தோளழகை கட்டழகி தான் பார்த்தாள்
சிரித்துக் குலவையிட்டாள் கெண்டை உருமா திமிக்கிவச்ச முண்டாசு
235 வட்டத் தலைப்பாவாம் கருப்பனுக்கு வடநாட்டு வல்லவட்டாம்
சட்டித் தலைப்பாவாம் கருப்பனுக்கு சரிகைபோட்ட லேஞ்சி யொண்ணாம்
வட்டத் தலைப்பாவாம் கருப்பனுக்கு வடநாட்டு வல்லவட்டாம்
கோணத் தலைப்பாவாம் கருப்பனுக்கு கொங்குநாட்டு வல்லவட்டாம்
சீட்டித் தலைப்பாவாம் கருப்பனுக்கு செல்லநாட்டு வல்லவட்டாம் அணிந்துமே நெற்றியிலே
240 மாற்றிவைக்கும் கால்களுக்கு மாதளம்பூச் சல்லடம்
தூக்கிவைக்கும் கால்களுக்கு துந்திப்பூச் சல்லடம்
சல்லடமுங் கச்சையுடன் கச்சை கலகலங்க கருங்கச்சை கூத்தட்ட
கருப்பனும் முன்ன நின்று கதவழகப் பார்த்தது மலையாளி கடுகி ஒரு சத்தமிட
அண்ணாஉன் கதவழகப் பாத்தேனென்று ராக்காயி
245 பாலர்களோட பகுமானமாய் பாத்துக் குலவையிட்டு
பாரமலை போரேவென்று பொன்ராக்கு பாரவழி நடந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்/027&oldid=1820768" இலிருந்து மீள்விக்கப்பட்டது