அழகர் கோயில்/032
பிற்சேர்க்கை III : 4
ஆடவிசேஷம்1 - கோடைத்திருநாள்
சித்திரைப்பெருந்திருவிழா
ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் சுக்கிலபக்ஷம் ஏகாதசியன்று கோடைத்திருநாள் ஆரம்பம். அன்று முதல் காலை ஸ்ரீ உத்ஸவர் பெருமாளுக்கு திருமஞ்சனமாகி கோடைத்திருநாளுக்காக ரக்ஷாபந்தனம் (பொற்காப்பு) செய்வித்து மாலை 6 மணிக்கு மேல் சாயான சுத்துக் கோவில்2 முடிந்தபின் அர்ச்சகர்கள் கையாக்ஷி3 சேவில்4 திருவாபரணங்கள் ஒப்புக்கொண்டு பெரிய தோளுக்கினியாவில்5 பெருமாளை எழுந்தருளச் செய்து அலங்காரம் செய்து புறப்பாட்டுத் தளிகை அமுதுசெய்து அதிகாரிகள் சேவித்து சீர்பாதம் தாங்குவோர் மரியாதையாகி பிராமணசீர்பாதமாக6 பெரிய பிராகாரம் எழுந்தருளச் செய்து ஆழ்வார் சன்னதியில் இயல்7 துடக்கம்8 தீர்த்தம் சடாரி கோஷ்டிக்கு9 சாதித்து குடவரை10 வழியாக வெளியில் நாயக்கர் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து திருவாராதனம், நித்யானுசந்தான சேவை, தளிகை அமுதுசெய்து சாற்று முறையாகி தீர்த்தம், சடாரி, பிரசாத விநியோகம் கோஷ்டி கிரமமாக நடைபெறும். பின் பெருமாளை எழுந்தருளப்பண்ணி உடையவர் சன்னதியில் இயல் சாற்றுமுறை தீர்த்தம் சடாரியாகி, சன்னதிக்குள் எழுந்தருளி அதிகாரிகள் சேவித்து அலங்காரம் களைந்து கையாக்ஷி திருவாபரணங்களை ஒப்புவித்து சம்பாக்காலம்11 நடைபெறும்.
௸ உற்சவம் இரண்டாம் நாளன்றும், மூன்றாம் நாளன்றும் மேல்கண்டபடி உற்சவம் நடைபெறும். ௸ உற்சவம் நான்காம் நாள் ஸ்ரீபெருமாள் மதுரைக்கு சித்திரா பௌர்ணமி உற்சவத்திற்காக சவாரியாக போகவேண்டியதற்கு கோவில் காலங்கள் இரவு ஆரம்பிக்கப்படும். வழக்கம்போல் சுப்ரபாதம் விஸ்வரூபம் வகையறா சுத்துக் கோவில் வரை பூஜை காலங்கள் நடந்தபின் ஸ்ரீபெருமாளை தெற்குப்படி ஏற்றத்தில் படி வழியாக சவாரி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கையாக்ஷிசேவில் அ.பட்டர்12 திருவாபரணங்களை ஒப்புக்கொண்டு பெருமாளுக்கு கள்ளர் திருக்கோலம் சாத்தி உச்சிக்காலம் நடைபெறும். பின் புறப்பாட்டுத் தளிகை அமுதுசெய்து அதிகாரிகள் சேவித்து ஜோசியர் குறித்த லக்கினப்படி பெருமாளை சூத்திரசீர்பாதமாக13 எழுந்தருளச் செய்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து காட்டுத்தளிகை தோசை பொங்கல் பிரசாதம் அமுது செய்து கோஷ்டிவிநியோகம் நடைபெறும். வெள்ளியக்குன்றம் ஜமீன்தார் (பாதுகாவலர்) கோவிலுக்கு வந்தவுடன் அருளிப்பாடு14 கொண்டு அவருக்கு மரியாதை செய்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலும் ஜமீன்தாருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து ஸ்ரீபெருமாள் பல்லக்கில் மதுரைக்கு எழுத்தருளல்.
ஸ்ரீபெருமாள் மதுரைக்கு சவ்வாரி பல்லக்கில் எழுந்தருளும் போது பெருமாளுடன் குடை, சுகுட்டி15 எடுபிடி வகையறாக்களும். கருவூலப் பெட்டி, பாத்திரப்பெட்டி, பரிவட்ட பெட்டிகள் எடுத்துவர வேண்டியதற்காக வலையப்பட்டி, நாயக்கப்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், சோதியாபட்டி கிராமங்களிலுள்ள ஊழியர்களிடம்16 ௸ சாமான்களையும் பெட்டிகளையும் ௸யார்கள் ஒப்புக்கொண்டதற்கு ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கி ஒப்புவித்து அவர் அவர்களுக்குள்ள தோசை, பிரசாதம், அரிசி, ரொக்கப்பணம். வகையறா சுதந்திரங்களை17 கொடுத்து பெருமாளுடன் ௸ சாமான்களை கூடவே கொண்டுவரும்படி செய்து கொள்ள வேண்டியது.
ஸ்ரீபெருமாள் பதினெட்டாப்படியில் பதினெட்டாம் படியானுக்கு18 கற்பூர ஆராத்தி செய்வித்து புறப்பட்டு வழிநடையில் திருமாலை ஆண்டார் மண்டபத்தில் வாசலில் நின்ற சேவையாக19 ஆண்டாருக்கு அருதிபரிவட்டம்20 கோராப்பரிவட்டம்21 மரியாதை செய்வித்து வழக்கம் போல் வழிநடை மண்டபங்களில் மண்டபதார்கள் பெருமாளை எழுந்தருளச் செய்வதற்கு ஏற்பட்ட மண்டபக் காணிக்கையை செலுத்திய மண்டபங்களில் மட்டும் பெருமானை நின்ற சேவையும், உட்கார்ந்தசேவையும்22 ஆக எழுந்தருளச் செய்து மண்டபங்களில் தேங்காய்பழம் வகையறா நிவேதனம் செய்து அந்தந்த மண்டபத்தாருக்கு குறிப்பிட்டபடிக்குள்ள நேரத்தில் மாலை பரிவட்டம் மரியாதை செய்வித்து அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் ஜமீன்தாருக்கு கோரா அருதிப்பரிவட்டம் மரியாதை செய்தும் பின் மறவர் மண்டபத்தில்23 மண்டபதாரருக்கு கோராப் பரிவட்டம் மரியாதை செய்வித்து வழிநடை மண்டபங்களில் வழக்கப்படி எழுந்தருளி மாலை 4 மணிக்கு மூன்றுமாவடி மண் டபத்திற்கு எழுந்தருளி அங்கு பல்லக்கின் மேல் பண்ணாங்கை24 அவிழ்த்தும் பல்லக்கு கொம்புகளை கீழ்ப்பாகமாக சேர்த்தும், மண்டபதாரருக்கு மரியாதையானவுடன் பெருமாள் இந்த மண்டப முதல் எழுந்தருளும் சேவையை ‘எதிர் சேவை’ என்று பக்தர்கள் கொண்டாடி தரிசிப்பார்கள். பின் பெருமாள் தல்லாகுளம் மாரியம்மன் கோவில் மாரியம்மனுக்கு கோரா அருதிப் பரிவட்டம் மரியாதை செய்து பின் பெருமாள் அம்பலகாரர் மண்டப முதல் வழிநடை மண்டபங்களில் மண்டபக் காணிக்கை செலுத்தின மண்டபங்களில் எழுந்தருளி மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து பின் பெருமாள் தல்லாகுளம் பெருமாள் கோவில் சேர்ந்து அலங்காரம் களைத்து திருவாபரணங்களை சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் சேர்த்து திருமஞ்சனமாகி திருவாராகனம் தளிகை அமுதுசெய்துலாவி ஸ்ரீபட்டர்25 திருவாபரணங்களை சவாரி கையாக்ஷியில் ஒப்புக்கொண்டு குதிரை வாகனத்தில் அலங்காரம் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமாலை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து பொருமாளுக்கு ௸ மாலை சாத்தி திருவாராதனம் தளிகை அமுது செய்தல். பின் ஸ்ரீஆண்டாளுக்கு பெருமாள் வெகுமானமாக சாதாரா,26 ஏகாந்தம்,27 காங்கு,28 ஜென்டி,29 கோரா வகையறாக்களை கொடுத்தபின் ஆண்டாள் திருமாலை எழுந்தருளப்பண்ணி வந்தவர்களுக்கு30 கோராப் பரிவட்டம் மரியாதை செய்வித்து அதிகாரிகளுக்கும் மரியாதை செய்வித்து பட்டருக்கு வாகன அருதிப்பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் குதிரைவாகனாரூடராய் தல்லாகுளம் கோவிலிலிருந்து புறப்படுதல்.
பின் முதல் மண்டபம் ஸ்ரீ ரெங்கராஜப்பட்டருக்கு மண்டபத்திற்கு எழுந்தருளி கோரா பரிவட்டம் மரியாதை செய்வித்து வழக்கம்போல் மண்டகப்படிகளில் மண்டப காணிக்கை செலுத்திய மண்டபங்களுக்கு பெருமாளை எழுந்தருளச்செய்தும் ஆண்டார், தோழப்பய்யங்கார் மண்டபங்களிலும்31 யெழுந்தருளிச் செய்து கோராப் பரிவட்டம் மரியாதை வகையறா செய்தும் வழக்கம்போல் மண்டபங்களுக்கும் எழுந்தருளியாகி தல்லாகுளம் கோவிலைச் சுற்றிவந்து பின் வெற்றிவேர் சப்பரத்தில் குதிரை வாகனத்துடன் எழுந்தருளியாகி கருப்பணசுவாமி கோவில் வரை வெற்றிவேர் சப்பரத்துடன் வழிநடை மண்டபங்களிலும் எழுத்தருளி புறப்படுதல்.
கருப்பண சுவாமி கோவில் முன் பெருமாள் வையாளியிட்டு32 கருப்பண சுவாமிக்கு மாலை கோராப்பரிவட்டம் மரியாதை செய்வித்து ஆயிரம்பொன் சப்பரத்தில்33 குதிரை வாகனத்துடன் எழுந்தருளச் செய்து கொத்தன், ஆசாரி வகையறாக்களுக்கு சந்தனம், வெற்றிலை, பாக்கு, பரிவட்டம் (வேஷ்டி) மரியாதை செய்வித்து சப்பரத்தின் சக்கரங்களில் அதிகாரிகளால் தேங்காய்கள் உடைத்து ஆயிரம்பொன் சப்பரத்துடன் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியபின் வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுந்தருளப்பண்ணி மண்பதாரர்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து குறிப்பிட்ட நேரத்தில் அதாவது சூரியோதயத்தில் பெருமாள் வைகையாற்றில் வீரராகவப் பெருமாளுடன் சந்தித்து மாலை அருதிபரிவட்டம் பட்டு வகையறா வீரராகவப் பெருமாளுக்கு சாத்தி சந்திப்புநடந்து, பெருமாள் வகையறா குதிரை வாகனத்துடன் வழிநடை மண்டபங்களில் எழுந்தருளி முன்போல் மண்டபதாரர்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து, பகல் 12 மணிக்கு பெருமாள் ராமராயர் முன் வையாளியிட்டு அது சமயம் தண்ணீர் பீச்சுகிறவர்கள்34 தங்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தியபின் பெருமாள் ராமாராயர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அங்கப்பிரதக்ஷணம்35 பிரார்த்தனை செலுத்துபவர்கள் கோரிக்கைப்படி அங்கப்பிரதக்ஷணம் மூன்று மணி நேரம் நடைபெறும். அதன்பின் மண்டபதார் வந்து மண்டபதாரருக்கு மரியாதையாகி பின் பெருமாள் ராமாராயர் மண்டபம் விட்டு நான்கு மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்துடன் புறப்பாடாகி வழிநடை மண்டபங்களில் எழுந்தருளி மண்டபகாரர்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து இரவு பத்து மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குள் சிவகங்கை கட்டளை மண்டபதாரர்கள் கும்பமரியாதையுடன் எதிர்கொண்டு சேவித்து மரியாதை பெற்றபின் குதிரை வாகன அலங்காரம் களைந்து சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் திருவாபரணங்களை அர்ச்சகர் திருபட்டர்36 ஒப்புவித்து.
சிவகங்கை தேவஸ்தானம் கட்டளை உபயமாக அலங்கார திருமஞ்சனம் செய்வித்து சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் திருவாபரணங்களை ஒப்புக்கொண்டு கோவிலுக்குச் சைத்யோபசார அலங்காரம் செய்து, திருவாராதனம், சேவகாலம், தீர்த்த விநியோகம் செய்வித்து இரவு 1 மணிக்கு பீராமண சீர்பாதமாக பெருமாள் உள்பிரகாரம் வெளிப்பிரகாரங்களில் பக்தி உலாத்தி37 பின் சிவகங்கை கட்டளை மண்டபத்தாருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து ௸ மண்டபத்தார் வெற்றிலை பாக்கு ரொக்கச் சிலவு செய்தபின் பிரசாத விநியோகமாகி பின் சைத்யோபசாரம் அலங்காரம் கலைந்து சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் அ. பட்டர் திருவாபரணங்கள் ஒப்புக்கொண்டு திருமஞ்சனம் ஆகி ஷேசவாகனத்தில் ஸ்ரீபெருமாளை அலங்காரம் செய்து பட்டருக்கு அருதிப் பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் சேஷ வாகனத்துடன் காலை 5 மணிக்கு வண்டியூர் கோவிலை விட்டுப் புறப்பாடாகி வண்டியூர் வழிநடை மண்டபங்களில் கிரமப்படி மண்டபங்களில் மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்துக் கொண்டு காலை 7 மணிக்கு தேனூர் மண்டபத்துக்கு38 வந்து சேருதல், தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம் அலங்காரம் கலைந்து தேனூர் மண்டபத்தார் செலவில் அலங்கார திருமஞ்சனமாகி கெருட வாகனத்தில் பெருமாளை அலங்காரம் செய்து திருவாராதனம் தளிகை அமுது செய்து தேனூர் மண்டபதாரருக்கு மரியாதை அருதிப்பரிவட்டம் மரியாதை செய்தபின் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசன புராணம் படிப்பதற்காக ஆண்டாருக்கும் பட்டருக்கும் அருதிப்பரிவட்டம் மரியாதை செய்து மண்டூகபுராணம்39 ஆண்டாரால் வாசித்து பின் பட்டருக்கு அரிதிப்பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் கெருட வாகனத்துடன் எழுந்தருளச் செய்து மண்டூக மகரிஷி தவம் செய்யும் மடுக்கரையில்40 பெருமாள் ரிஷிக்கு காட்சி தந்து கெருடவாகனாரூடராய் தேனூர் மண்டபத்தை சுற்றிவந்து வழிநடை மண்டபங்களில் வழக்கம் போல் எழுந்தருளி மண்டபதார்களுக்கு மரியாதை செய்வித்து வண்டியூர் ஹனுமார் கோவிலில் மண்டபத்திற்குள் எழுந்தருளியாகி அங்கு பிரார்த்தனைக்காரர்கள் அங்கப்பிரதஷனம் நடந்த பின் மண்டபத்தாரருக்கும் மரியாதை செய்வித்து கோவிந்தராவ் மண்டபத்தில் பகல் 12 மணிக்கு வந்து தங்குதல்.
மாலை 4 மணிக்கு கோவிந்தராவ் மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து ௸ மண்டபத்தை விட்டு பெருமாள் புறப்பாடாகி வழிநடை மண்டபங்களில் மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து பெருமாள் புறப்பாடாகி ராமாராயர் மண்டபமுன் மண்டபதார் பூர்ண கும்பமரியாதையுடன் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து பின் பெருமாள் மண்டபத்திற்குள் எழுந்தருளச் செய்து பின் மண்டபத்தார் வந்து பெருமாளை சேவித்து பின் கருட வாகன அலங்காரம் கலைந்து திருவாபரணங்களை பண்டாரி41 கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து அலங்கார திருமஞ்சனமாகி திருவாராதனம் தளிகை அமுதுசெய்து இரவு 9 மணிக்கு, தசாவதார சேவை ஆரம்பமாகும்.
௸ மண்டபத்தில் கீழ்கண்ட சேவைகளுக்கு வேண்டிய திருவாபரணங்களை அர்ச்சகர்கள் அவ்வப்போது சவ்வாரி கையாஷியில் ஒப்புக்கொண்டு 1. முத்தங்கி சேவை42 2. மச்சாவதார சேவை 3. கூர்ம அவதார சேவை 4. வாமனாவதார சேவை 5. ராமா வதார சேவை 6. கிருஷ்ணாவதார சேவை (திருவாராதனம் திருப்பாவாடை சமர்ப்பித்தல்).
ஒவ்வொரு சேவை அலங்காரமாகி திரை வாங்கியவுடன் மண்டபத்தார் வந்து சேவித்து போவதுண்டு. பக்தர்களும் சேவிப்பதுண்டு. மேல்கண்ட சேவைகள் முடிந்தபின் மோகினி திருக்கோலத்துக்கு வேண்டிய திருவாபரணங்களை கையாக்ஷி பெட்டியில் அர்ச்சகர்கள் ஒப்புக்கொண்டு காலை 5 மணிக்கு மோகினி திருக்கோலம் சாத்தி மண்டபத்தார் வந்து சேவித்தபின் வெளிக்கொட்டகை பத்தியில் சீர்பாதமாக பத்தி உலாத்தி ஆற்றங்கரை வரை எழுந்தருளிய பின் பெருமாள் மண்டபத்திற்குள் வந்து சேர்ந்தவுடன் மண்டபதார் சேவித்து அதிகாரிகள் சேவித்து மோகனாவதாரம் கலைந்து திருவாபரணங்களை கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து திருமஞ்சனமாக திருவாராதனம் தளிகை, அமுது செய்தபின் சவ்வாரி பெட்டியில் திருவாபரணங்களை அர்ச்சகர்கள் ஒப்புக்கொண்டு பெரு ஆனந்தராயர் பல்லக்கில்43 ராஜாங்கசேவை அலங்காரம் செய்து ராமாராயர் மண்டபதார் பெருமாளுக்கு பரிவட்டம் முதலிய உபசாரங்களுடன் பெருமாளை சேவித்து வழக்கம்போல் பரிவட்டம் மரியாதைகளை மண்டபத்தார் அதிகாரிகளுக்கு நடத்திவைத்து தானும் மரியாதை பெற்றுக் கொண்டபின் மண்டபத்தாரர் வெற்றிலை பாக்கு ரொக்கச்செலவு ஸ்தானிகாளுக்கு44 செய்தபின் பகல் 11 மணி அளவில் பெருமாள் ஆனந்தராயர் பல்லக்குடன் புறப்படும் சமயத்தில் ஸ்ரீ ரெ. பட்டர், அ.பட்டர், அமுதார், திருமலை நம்பிகள், தியாகம் செய்த அமுதார் இவர்களுக்கு கோரா அருதிப் பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் ராமாராயர் மண்டபத்தை விட்டு புறப்பாடாகி வழிநடைமண்டபங்களில் பெருமாள் எழுத்தருளி மண்டபதார்களுக்கு மரியாதை செய்வித்து ஆழ்வார்புரம் அம்மாளு அம்மாள் பண்டபத்தில் சுமார் 4 மணிக்கு பெருமாள் தங்கி பக்தர்களுக்கு சேவை சாதித்து ௸ மண்டபத்திலிருந்து ஸ்ரீசடாரியை45 வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளச் செய்து அதற்கு வேண்டும் பரிவாரங்களுடன் திருமலைராயர் படித்துறையை அடுத்து அய்யங்கார் மண்டபத்தில்46 சடாரியை எழுந்தருளச் செய்து திருமஞ்சனம், திருவாராதனம், தளிகை அமுதுசெய்து மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து திரும்ப சடாரியை ௸ பல்லக்குடன் பெருமாள் எழுந்தருளியிருக்கும் மண்டபத்திற்கு எழுந்தருளச்செய்து பின்பு மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து பெருமாளை வழிநடை மண்டபங்களில் எழுந்தருளச் செய்து மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து தல்லாகுளம் இராமநாதபுரம் ராஜா மண்டபத்திற்கு இரவு 8 மணிக்கு வந்து சேருதல்.
பின் இராமநாதபுரம் ராஜா மண்டபத்தில் மண்டபதார் சேவித்த பின் அலங்காரம் களைந்து திருவாபரணங்களைக் கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து திருமஞ்சனம், திருவாராதனம், தளிகை அமுது செய்து ஸ்ரீ ரெ. பட்டர் திருவாபரணங்கள் ஒப்புக்கொண்டு பின் பெருமாளை புஷ்பப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலம் அலங்காரம் செய்து பின் மண்டபதாரருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து வெள்ளியக்குன்றம் ஜமீன்தாரை அழைத்து வத்து ஜமீன்தாருக்கு நாகமுடி பட்டுப் பரிவட்டம் மரியாதை செய்வித்து பட்டருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து இரவு 3 மணிக்கு பெருமாள் புஷ்ப பல்லக்கில் புறப்பட்டு கருப்பணசுவாமி கோவிலுக்குமுன் வையாளியாகி கருப்பணசுவாமிக்கு மாலை கோராபரிவட்டம் சாத்தி பின் பெருமாள் வழிநடை மண்டபங்களிலும் மண்டபதார்களுக்கு வழக்கம்போல் பரிவட்டம் மரியாதை செய்வித்து காலை 7 மணிக்கு மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்குக் கோராப்பரிவட்டம் மாலை மரியாதை செய்வித்து அம்பலக்காரர் மண்டபம் போய் சேர்தல், அங்கு பக்தர்கள் சேவை நடைபெறும்.
பின் சீர்பாதக்காரர்கள் வெள்ளைச்சாமி கோனார் டிரஸ்டு மண்டபத்தில் அலங்காரத்தளிகை47 சாப்பாடு முடித்து அம்பலகாரர் மண்டபத்தில் பல்லக்கில் பட்டு பண்ணாங்கு சாத்தி மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து அம்பலகாரர் மண்டபத்தைவிட்டுக் காலை 10 மணிக்கு பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி திருமலைக்கு புறப்படுதல். வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுந்தருளச் செய்து மண்டபதார்களுக்கு மரியாதை செய்வித்து மூன்றுமாவடி மண்டகப்படிக்கு பகல் 3 மணிக்கு ௸ மண்டபத்தை விட்டு பெருமாள் சவ்வாரி பல்லக்கில் வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுந்தருளச் செய்து மண்டபதார்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து இரவு 8 மணிக்கு மறவர் மண்டபம் (சிவகங்கை தேவஸ்தானம் கட்டளை மண்டபம்) சேர்த்து மண்டபதாரர் பூரணகும்ப மரியாதையுடன் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து மண்டபத்திற்குள் சேர்ந்தவுடன் மண்டபதார் சேவித்து பின் அலங்காரம் களைந்து மண்டபதார் சிலவில் அலங்காரத் திருமஞ்சனம்48 செய்து திரும்ப கள்ளர் திருக்கோலம் சாத்தி திருவாராதனம் தளிகை அமுது செய்து மண்டபதாரருக்கு பரிவட்டம் மரியாதை செய்து வெற்றிலை பாக்கு ரொக்கச் சிலவு பிரசாத விநியோகம் நடைபெற்று இரவு 12 மணிக்கு மறவர் மண்டபம்விட்டு பொருமாள் புறப்பாடாகி வழிநடை மண்டபங்களில் வழக்கம்போல் எழுந்தருளி அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் ஜமீன்தாருக்கு கோரா அருதிப்பரிவட்டம் மரியாதை செய்வித்து, பின் வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுத்தருளச்செய்து காலை 6 மணிக்கு அழகர்கோவில் பதினெட்டாம்படியானுக்கு மாலை சாத்தி கற்பூரமாகி உடையவர் சன்னிதி வழியாக கோவிலுக்குள் தெற்குப்புறத்தின் பக்கத்தில் எழுந்தருளி அதிகாரி சேவித்து திருவந்திக்காப்பு,49 திருவாராதனம், தளிகை, அமுது செய்து சாற்றுமுறை தீர்த்தம் சடாரி பிரசாத விநியோகம் கோஷ்டி கிரமமாக நடைபெற்று ஜமீன்தாருக்கு கோராபரிவட்டம் மரியாதை செய்தபின் சூத்திர சீர்பதக்காரர்களுக்கு நாச்சியார் சேலை. பரிவட்ட மரியாதை செய்வித்து பின் அலங்காரம் களைந்து திருவாபரணங்களை சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து பெருமாளுக்கு திருமஞ்சனமாகி பிராமன சீர்பாதங்கள் பெருமாள் திருமஞ்சன அறைக்கு எழுந்தருளுதல். பின் வழக்கம்போல சன்னதிக் காலங்கள் நடைபெறும். அதிகாரி கையாட்சியிலுள்ள திருவாபரணங்கள் வகையறாக்கள் சரி பார்த்து திரும்ப கையாக்ஷிசேவில் ஒப்புவித்தல்.
குறிப்புகள்
- 1. ஆட்டவிசேஷம்-ஆட்டை விசேஷம் (annual festival)
- 2. சுத்துக்கோவில்-மூலவரோடு, பரிவார தேவதைகளுக்கும் நடக்கு பூசை
- 3. கையாக்ஷி - கையாட்சி, பொறுப்பு
- 4. சேவில் safe என்ற ஆங்கிலச்சொல் safety locker என்ற பொருளில் வந்துள்ளது.
- 5. தோளுக்கினியான்-இறைவனின் பல்லக்கிற்கு வைணவக்கோயில்களில் வழங்கும் பெயர்.
- 6. சீர்பாதம்-பல்லக்கு அல்லது சப்பரம் தூக்குவோர்.
- 7. இயல்-நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் முதலாயிரம்.
- 8. துடக்கம்-தொடக்கம்.
- 9. கோஷ்டி-ஸ்ரீவைணவர் கூட்டம்.
- 10. குடவரை-மதிலில் அமைந்த வாசல்.
- 11. சம்பாக்காலம்-இரவு 8 மணிக்கு நடைபெறும் பூசையின் பெயர்.
- 12. அ. பட்டர் - அலங்காரபட்டர்.
- 13. சூத்திர சீர்பாதம்-பல்லக்கு (அல்லது) சப்பரம் தூக்கும் பிராமணரல்லாதவர்.
- 14. அருளிப்பாடு-இறைவன் திருவாணை.
- 15. சுருட்டி-சுருட்டும் அமைப்புடைய குடை.
- 16. இவ்வூழியர்கள் கோயில் பணியாளர்கள் அல்லர்; அருகிலுள்ள கிராமத்தவர்; கள்ளர், வலையர் ஆகிய சாதியினர்.
- 17. சுதந்திரம்-உரிமைப்பொருள்.
- 18. பதினெட்டாம்படியான்—பதினெட்டாம்படிக் கருப்பசாமி
- 19. நின்றசேவை—மண்டபத்திற்கு வெளியே பல்லக்கினை நிறுத்தி வணங்குதல்.
- 20. அருதிப்பரிவட்டம்—பெரியபரிவட்டம்.
- 21. கோராப்பரிவட்டம்—மிகச்சிறிய பரிவட்டம்.
- 22. உட்கார்ந்த சேவை—மண்டபத்தினுள் பல்லக்கினை இருத்தி வணங்குதல்.
- 23. அப்பன் திருப்பதி கோயிலுக்கு முன் உள்ள மண்டபம்.
- 24. பண்ணாங்கு—பல்லக்கில் மேல் விதானமாக விரிக்கப்படும் துணி
- 25. ஸ்ரீ பட்டர்-ஸ்ரீரெங்கராஜபட்டர்.
- 26. சாதாரா-பொன்னாடை; பீதாம்பரம்.
- 27. ஏகாந்தம்-பட்டுக்கயிறு.
- 28. காங்கு-கருப்புநிறப் புடைவை.
- 29. ஜென்டி-உருமாலுக்கு மேல் கட்டும் பட்டம்.
- 30. வந்தவர்கள்-ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலையினை அங்கிருந்து நடந்தே கொண்டு வந்தவர்கள்.
- 31. கோயிற்பணியாளர் வீட்டு மண்டகப்படிக்கு மண்டபக்காணிக்கை கிடையாது.
- 32. வையாளி—இறைவன் குதிரைபாய்ந்து செல்வது போலச் சப்பரத்தைச் சப்பரம் தூக்குவோர் அசைத்தல்.
- 33. ஆயிரம்பொன் சப்பரம்—சப்பரத்தின் பெயர்.
- 34. தண்ணீர் பீச்சுகிறவர்கள்—‘சித்திரைத்திருவிழாவில் நாட்டுப் புறக்கூறுகள்’ என்னும் இயல் காண்க.
- 35. அங்கப்பிரதக்ஷணம்—கையில் ஒரு தேங்காயுடன் தரையில் உருண்டு வரல்.
- 36. திருபட்டர்—ஏறுதிருவுடையான்பட்டர்.
- 37. பத்தி உலாத்தி-இறைவன் நடையிடுவது போலச் சப்பரத்தைப் பக்கவாட்டில் அசைத்தல்.
- 38. தேனூர் மண்டபம்-தேனூர் மக்களுக்கு உரிமையானதால் இப்பெயர் பெற்றது.
- 39. கோயில் தலபுராணத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
- 40. திருவிழாவிற்காக ஆற்றுமணலில் சிறிய அளவில் தோண்டப்பட்டுள்ள குழியினையே ‘மடு’ எனக் குறிக்கின்றனர்.
- 41. பண்டாரி-கோயிலில் திருமாலை கட்டுபவர், ஸ்தானிகர் அறுவரில் ஒருவர்.
- 42. முத்தங்கி-முத்துக்கல் வைத்துத் தைக்கப்பட்டுள்ள சட்டை.
- 43. ஆனந்தராயர் பல்லக்கு-பல்லக்கின் பெயர்; ஆனந்தராயர் என்பார் இப்பல்லக்கினைச் செய்தளித்திருக்க வேண்டும்.
- 44. ஸ்தானிகாள்-அர்ச்சகர், திருமலைநம்பி, அமுதார், ஜீயர், பண்டாரி. கணக்கு ஆகிய அறுவரும் ஸ்தானிகர் எனப்படுவர்.
- 45. ஸ்ரீசடாரி—இறைவனின் திருவடியாகக் கருதப்பட்டு அடியார்
- தலைமீது வைக்கப்பெறும்; மகுடம் போன்ற அமைப்பிலுள்ளது. ‘சடகோபம்’ என்றும் கூறுவர்.
- 46. ஆற்றின் தென்கரையிலுள்ளது.
- 47. அலங்காரத்தளிகை - தளிகையை இப்பெயராலும் அழைப்பதுண்டு.
- 48. அலங்காரத்திருமஞ்சனம்-குடங்களை இறைவன் திருமுன் வைத்து நடைபெறும் திருமஞ்சனம்.
- 49. திருவந்திக்காப்பு-துளசி இலையில் தீர்த்தத்தைத் தொட்டு இறைவன் கை கால்களைச் சுத்தம் செய்தல்.