அவள் ஒரு மோகனம்/சதுரங்கம் ஆடிய மனம்!

விக்கிமூலம் இலிருந்து

2. சதுரங்கம் ஆடிய மனம்!


தோ, இங்கேதான், அதாவது, விரிவடைந்திருந்த மருத்துவமனையின் விசாலமான இந்தப் பரிசோதனைக் கூடத்திலேதான் இப்பொழுது சற்றே ஓய்வாக அமர்ந்திருக்கிறாள், லேடி டாக்டர் ரேவதி.

இங்கே, காலம் சுவரிலும் ஓடியது; புள்ளிமான் வேகம். புள்ளிமான் ரேவதிக்குப் பரிபூரணமான - ஏகபோகமான உரிமை கொண்ட சுவர் ஆயிற்றே - எல்லா வித்தைகளையும் செய்யும்! மணி: ஏழு, பத்து. கொட்டாவி வந்தது.

மத்தியானம் ஓய்வெடுத்தும் கூட, உடலின் அசதி குறையாதது, உடலியல் மேதையான அவளுக்கு அதிசயமாகத் தோன்றவில்லை. மனம் எங்கே ஓய்வெடுத்தது? என்னென்னவோ சிந்தனைகள், சித்தாந்தங்கள், சலனங்கள், சிலிர்ப்புக்கள்! அம்மாடி! வாழ்க்கைதான் வேடிக்கை என்றால், மனம் அதை விடவும் வேடிக்கையாக இருக்கிறது!

பச்சை நரம்புகள் பாங்குடனே புடைத்துக் கிடந்த நெற்றியைத் தடவி விட்டுக் கொண்டாள்! “நான் இப்போ வெறும் ரேவதி கிடையாது! டாக்டர் ரேவதியாக்கும்...! ஒ, மை குட்னஸ்! ரேவதி டாக்டர் என்றால், குறிப்பாக தியாகராயநகரில் ஏக கிராக்கி!

“எஸ்... நெக்ஸ்ட், ப்ளீஸ்!” என்றாள், ஓங்கிய குரலில்; அழைப்பு மணியின் சத்தமும் இணைந்திருக்கலாம்.

“வணக்கங்க?” என்றாள், அந்த அழகி, தன் முகவரிச் சீட்டை மேஜையில் வைத்தாள்!

“வாங்க, வாங்க; அப்படி உட்காருங்க; உடம்புக்கு என்ன?” என்று விசாரித்தாள், டாக்டர் ரேவதி.

“மென்ஸஸ் டைம்லே, முன்னாடியும், பின்னாடியும் வயிற்று வலியினாலே நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுப் போறேனுங்க! எங்கள் செவர்லேட் வண்டி கொண்டாந்து விட்டுட்டுப் போகாட்டி, நான் திண்டாடியிருப்பேன்!”

“அப்படியா? கவலைப்படாதீங்க; சீக்கிரம் குணப்படுத்திடுறேன்! ஆமா, உங்கள் பேரைச் சொல்லலையே?”

“நீங்கள் கேட்கலீங்களே, டாக்டர்?”

இவள் படு டம்பக்காரியாக இருப்பாள் போலிருக்கிறது! ‘செவர்லே’யை எங்கே பிடித்தாளாம்? “அப்படியா?” என்றாள், ரேவதி.

“என் பேர் மந்தாகினி!”

“ரொம்ப அபூர்வமாகக் காதிலே விழுகிற அழகான பேர்தான். உங்கள் கணவர்...” என்று கேட்டவள், நோயாளிப் பெண்மணியின் கழுத்தில் கிடந்த தாலியை எடை போடுவதில் ஆர்வம் காட்டினாள்.

“என்னோட அத்தான், நான் வயிற்று வலியாலே துடிக்கிறதைக் கண்டாலே போதும்; அவரும் சின்னப் பையனாட்டம் செருமிச் செருமி அழத் தொடங்கிடுறாங்கம்மா! .”

“நான் அதைப் பற்றிக் கேட்கல்லே. அவரைப் பற்றித்தான் கேட்டேன்!”

“அவர்... அவர் இப்ப தமிழிலேயும் படம் எடுத்துக்கிட்டு இருக்கார். வந்து... அவர் பேர்...”

பதட்டத்துடன் குறுக்கிட்டாள் ரேவதி, “பேர் எனக்கு அவசியம் இல்லை; அது என் தொழிலுக்குத் தேவையும் கிடையாது. உங்கள் கணவர், உங்களோட நோய்க்கான சிகிச்சையை நான் நடத்துறதுக்கு ஆகக் கூடிய பணம் காசைச் செலவழிக்கக் கூடியவர்தானா என்கிற விவரம் தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.”

மந்தாகினி ஆச்சரியப்பட்டாள். டாக்டரம்மா எவ்வளவு விழிப்போடு, எச்சரிக்கையோடு செயல்படுகிறார்கள்!

“தினமும் துட்டு என்னைத் தேடி வருமுங்க!”

சோதனைகள் நுட்பமாக நடந்தன.

அந்தப் பெண் இடுப்புச் சேலையையும் மார்புச் சோளியையும் சீராக்கிக் கொண்டாள். மருந்துச் சீட்டை டம்பப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டாள். “என் அத்தான் வெளியூரிலேருந்து வந்த கையோடு உங்கள் கிட்ட அழைச்சிட்டு வந்திடுவேனுங்க, டாக்டரம்மா!” என்பதாக உறுதி சொன்னாள். தொடர்ந்து,

“பீஸ்...?” என்று கேட்டாள்.

எதிர்முனைப் பதிலைக் கேட்டதும், வியப்புடன் இருபது ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டி விட்டு, எழுந்தாள்.

“கொஞ்சம் நில்லுங்க, இந்தாங்க உங்களோட பாக்கித் துட்டு!” என்று சொல்லி, பத்து ரூபாய்ச் சலவை நோட்டை அவளிடம் நீட்டினாள், ரேவதி.

மந்தாகினி அதை வாங்கிக் கொள்ளாமல் தயங்கினாள். “நீங்களே வச்சுக்கங்க!” என்று வேண்டினாள்.

“ஊம். பிடிங்கம்மா! நான் ஒண்ணும் பேராசைக்காரியல்ல! என்னைப் பத்தி இதுவரை வெளியிலே விசாரிக்காட்டி, இனி விசாரிச்சுப் பாருங்க! நான் ரேவதி! கைராசியிலே ஓகோன்னு பேரெடுத்த கார்டியாலஜிஸ்டு டாக்டர் ரேவதி நான். ஊம், நீங்கள் போகலாம்!” என்று கட்டளையிட்டாள், ரேவதி.

“நான் கொடுத்த பாக்கிப் பணத்தைக் கோட்டை விட்டுடப் போறீங்க; ஜாக்கிரதை!” ஒய்யாரக் கொண்டைக்குச் சிவப்பு விளக்கைக் காட்டவும் தவறி விடவில்லை, அவள்.

மந்தாகினியின் பவுடர் முகத்தில் அசடு வழிந்தது; துடைத்துக் கொண்டாள். கரிய நிறம் எட்டிப் பார்த்தது. “செவர்லேட்டு கார் இனிமே எங்கே திரும்பப் போகுது?... கவிஞர் தெரு வரைக்கும் நடந்தே போயாகணும்; வாரேனுங்கம்மா; நீங்க பிள்ளை குட்டிங்களோடு ரொம்பவும் நலமா இருப்பீங்க!” வக்கணையாகப் பேசியவள், வக்கணையாக வெளியேறினாள்.

தூறல் நின்று விட்டது.

மந்தாகினி ரொம்பவும் சாகசக்காரியாகத்தான் இருக்க வேண்டும்; பட்டணத்துக் கைகாரியாகவும்தான் இருப்பாள் போலிருக்கிறது!

நோயாளி முத்தையன் நிம்மதிப் பெருமூச்சோடு டாக்டர் ரேவதிக்கு அன்போடு வழி விடுகிறானே?

ரேவதியின் இதயத்தில் உறுத்தல்தான் மிஞ்சியது.

மறுபடி மனம் சதுரங்கம் ஆடியது. கண்களை மூடினாள். கூப்பிட்ட குரலுக்குப் பயந்தும் பணிந்தும் அந்த ‘செவர்லே’ ரோஜாப்பூ நிறத்தில் புதுக்கருக்கோடு மின்னிய வண்ணம் வண்ணப் பதுமையாக ஓடோடி வந்தது.

கண்களைத் திறந்தாள்! ‘செவர்லே’ எங்கே?

‘ஓ... நான் இப்ப இருக்கிறது புதுக்கோட்டை இல்லைதான்... நான் இப்பொழுது டாக்டர் ரேவதி!’-அவளுக்கு இப்போது ஐந்தாவது ‘டோஸ்’ காப்பி வேண்டும்!

உத்தரவின்றி உள்ளே நுழைந்தவள் கீதாவாகத்தான் இருக்க முடியும்! நிமிர்ந்தாள் ரேவதி: ‘அல்சர் பேஷண்ட்’ முத்தையன் காட்டுத்தனமாகக் கூச்சல் போடப் போக, கீதாவை வீணாக் கோவிச்சுக்கிட்டேன். பாவம்!

ஆவி பறந்த ‘நெஸ் கபே’ காப்பியை ரேவதியிடம் பணிவன்புடன் நீட்டினாள், நர்சு கீதா, ‘அம்மா’ வுக்குச் சூடுதான் பிடிக்கும்!

தம்ளரைக் கனிவுடன் வாங்கிக் கழுவி வைத்த பின் “இன்னம் ஒரே ஒரு கேஸ்தான் பாக்கி. இப்பவே அனுப்பிச்சிடட்டுமா?” என்று மெல்லக் கேட்டாள்.

“இதென்ன கேள்வி, கீதா? இப்பவே அனுப்பி வை!” ரேவதிக்கும் துல்லியமான அழகுடன் சிரிக்கத் தெரியும். ஒரு காலத்தில் அவளது இந்தச் சிரிப்புக்குத் தான் எவ்வளவு விலை மதிப்பு இருந்தது!

மருந்து அலமாரிக்கு மேலே கிடந்த அன்றைய செய்தித்தாள், கிராக்கியை இழந்து விட்ட ஆற்றாமையில் படபடத்தது.

ரேவதி கொண்டைப் பூப்பந்தைச் சரி பார்த்துக் கொண்டபின், பதக்கத்தைச் சோளிக்குள் திணித்துக் கொண்டாள். அவளையும் மீறிக் கொண்டு நெடுமூச்சொன்று திமிறியது.

நாற்பதிலும் வாலைக் குமரியாக ஒருத்தி தோன்றினாள்.

“வாங்கம்மா, வாங்க”.

“நல்லா இருக்கீகளா, ஆத்தா?”

பொதுவான வரவேற்புக் கொடுத்த பாவத்துக்குப் புதிதாக விசாரணையை நடத்துகிறார்களே இந்த ஆச்சியென்று ரேவதிக்கு உள்ளூற எரிச்சல் மூளத்தான் செய்தது. ‘வாடிக்கையாளர் பட்டியலிலே இந்த அம்மாள் இருந்தாலும் பரவாயில்லே; நறுக்குத் தறிச்ச மாதிரி ரெண்டு மூணு சொல் சொல்லி, ஆஸ்பத்திரியிலே தனிப்பட்ட உறவுக்கும் உரிமைக்கும் இடமில்லே என்கிறதைப் படிச்சுக் கொடுத்திடலாம். ஆத்தாவாம்... ஆத்தா!’

மூக்கின் நுனிக்கு வந்து விட்ட கோபத்திற்குச் சமாதானம் சொல்லிய பிறகு, நடுத்தர வயதில் மங்களமாக நின்ற செட்டி நாட்டைச் சார்ந்த-சேர்ந்த அந்த அம்மணியை மேலும் கீழுமாகக் கூர்மையோடு நோக்கினாள். தொடர்ந்து “என்ன உடம்புக்கு உங்களுக்கு?” என்று வலது கையால் கேட்டாள்.

நோய் சொல்லப்பட்டது.

பரிசோதனை செய்யப்பட்டது.

டாக்டர் பேனாவை எடுத்தாள்! ‘இபொரல், பேரோஸெட்டின்...!’ மருந்துப் பெயர்கள் அணி வகுத்தன.

இதய நோயில், மூச்சடைப்பு ரகம் மிகப் பயங்கரமானதுதான்!

மருந்துச் சீட்டு கைமாறியது. ‘இ. சி. ஜி.’, ‘எக்ஸ்.ரே’ படங்களை எடுத்தாள், டாக்டர் ரேவதி; தன்னிடம் கைமாறிய ஆலோசனைக் கட்டணமான பத்து ரூபாயைப் பார்த்த கையோடு ஆச்சியையும் பார்வையிட்டாள். இந்த அம்மணிக்கு நடப்புக் கட்டண விவரம் கூடத் தெரிந்திருக்கிறதே?

ஆச்சியிடம் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய வேளை, எண்ணிக்கை விவரங்களை விளக்கினாள் பணிப்பெண் கீதா. பத்தியம் இல்லையாம்! ஆனால், பரங்கி, பூசணி, பாகற்காய் உதவாதாம்! .

கீதாவிடம் பொலிமாடு மாதிரி தலையை ‘தெரிகிறது’ என்கிற பாவனையில் இலாவகமாக ஆட்டிய மீனாட்சி, இப்போது ரேவதியை ஏதோ ஓர் உறவுடனும் உரிமையுடனும் நெருங்கினாள்; நெஞ்சுக் குழியில் தடவிக் கொடுத்தாள்; அப்புறம், கண்களை மேலே உயர்த்தினாள்; “டாக்டரம்மா! உங்கள் வீட்டுக்கார ஐயா சுகமாக இருக்காகளா? பிள்ளை குட்டிங்க எத்தனை?” என்று. இயற்கையாகச் சேர்த்திருந்த அன்போடு விசாரித்தாள், மீனாட்சி.

கேள்விகளின் அதிர்ச்சியில் இருந்து விடுதலை பெற முடியாமல், மனம் தவித்தாள், ரேவதி.

“சரி, சரி, நீங்க போங்க, அம்மா வீட்டுக்குப் புறப்பட வேணும்; இன்னும் பத்து நாளைக்கு டாக்டரம்மாவுக்குப் பங்களாவிலேயும் கடுமையான வேலைங்க இருக்கு!” என்று மெல்ல மெல்லக் கூறினாள், கீதா.

ஆனால், எதுவுமே அம்மணிக்கு உறைத்தால்தானே? “ஆத்தா, என்னை ஏழே ஏழு வருசத்துக்குள்ளவே மறந்து போயிட்டீங்களே? நீங்கள் புதுக்கோட்டையிலே ராணி ஆசுபத்திரிக்கு எதிர்த்தாப்பிலே சின்னமாக ஒரு கிளினிக்கையும் நடத்திக்கினு இருக்கையிலே, நான் புதனுக்குப் புதன் அரிமளத்திலேருந்து வந்து உங்கள்கிட்டே சோதனை பண்ணிக்கினு போவேனுங்களே? அந்த மீனாச்சி நானேதாங்கம்மா!” என்று விவரத்தை வேக வைத்து இறக்கின. பிட்டு மாதிரியாகப் பிட்டு வைத்து விட்டு, ஓசைப்படாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

உள் மனத்தின் அடிவாரத்தில் ஏற்பட்ட பயம் செறிந்த சலனம் அப்போது ரேவதியை என்னவெல்லாமோ பண்ணியது. “உங்கள் வீட்டுக்கார ஐயா சுகமாக இருக்காகளா?” ஆச்சி விதியாகவோ, அல்லது வினையாகவோ விசாரித்த அந்த ஷேமலாப விசாரிப்பின் எதிரொலி அவளது உடல் முழுவதுமே எதிரொலித்தது. கண்களை மூடிக் கொண்டே இதயத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்; வேர்வை வழிந்து கொண்டே இருந்தது.

கண்களைத் திறந்தாள்.

அறையில் சூனியம் கை கொட்டிச் சிரிக்கவே, அவள் வெண்ணிற மேலங்கி உடுப்பை மட்டிலும் கழற்றிக் கொக்கியில் பொருத்தியவளாக, வீட்டுக்கு, ஊகூம், பங்களாவுக்குப் புறப்பட்டாள்!

கழுத்தில் இதமாகவும் இங்கிதமாகவும் ‘கம்’ மென்று கிடந்த தங்கச் சங்கிலியை ஒட்டி உரசியபடி ஊசலாடிக் கொண்டிருந்தது, நாடிக் குழல். குழலை நெருடிய வண்ணம் நடந்தாள்; அங்கங்கே பூட்ட வேண்டியவற்றையெல்லாம் அவள் கைப்படவே பூட்டினாள். உடைமைகளை முறையோடும் முறையாகவும் பேணிக் காப்பதில் அவள் அந்நாளிலிருந்தே ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து வருகிறாள்.

வெளியே வெளிச்சம் கண் சிமிட்டியது.

வாசல் வெளிக்கு வந்தாள், ரேவதி! ‘பிப்ரவரி நாலில் என் பிரச்சினையெல்லாம் தீர்ந்திடும்!’ பரீட்சை நாள் நெருங்குகிறதே?

மீனாட்சிக் குங்குமத்தின் லெட்சுமிமயமான ரத்தச் சிவப்போடு புத்தெழில் துள்ளத் தயாராகக் காத்திருந்தது, ‘மாருதி’.

“கீதா, நான் புறப்படட்டுமா?... மாதவியும் கண்ணகியும் எட்டு மணி ஷிப்டுக்கு வந்ததும், அவங்க ரெண்டு பேரும் நோயாளிங்களைக் கவனிச்சுப்பாங்க. அதுக்குள்ளே, நீ அந்த டெலிவரி கேஸை உஷாராப் பார்த்துக்கணுமாக்கும்! அவங்க வந்தானதும் நேரத்தோட நீ வீட்டுக்குப் போயிடம்மா!’

“குட்நைட், டாக்டர்!”

“குட்நைட்!”

ரேவதியின் விழிகள் உயர்கின்றன.

பெயர்ப் பலகையில், ‘டாக்டர் ரேவதி எம். எஸ்., எம். பி. பி. எஸ்., டி. ஜி. ஓ., எப். ஆர். ஸி. எஸ்., எப்.ஐ.ஸி.எஸ்., எப். ஏ. ஸி. எஸ்.’ ஆகிய எழுத்துக்கள் விதியின் எழுத்துக்களைப் போலே சிரிக்கின்றன!

‘மாருதி’ புறப்பட்டது.