ஆகாயமும் பூமியுமாய்/அன்னையை மறைத்த சிலை
அன்னையை மறைத்த சிலை
கருவறைச் சுவரின் புறப்பகுதியில் எழுந்த துர்க்கையம்மன் சிலையை, ஏகாம்பரம், அன்று வித்தியாசமாகத்தான் பார்த்தார்.
அவர் கண்களுக்கு, பல்லாண்டு பல்லாண்டாய் சிலையை மறைத்தவள் அந்த மாதா. இப்போதோ அந்த மாதாவை, சிலை மறைத்தது. எந்தத் திசையில் நின்றாலும், அந்தத் திசைநோக்கி அருட்பாவை வீசுவதுபோன்ற அம்மனின் எண்திசைப் பார்வை, இப்போது முகமறியா ஒரு சிற்பியின் கைத்திறனாய் தோன்றியது. ஆணயோ, பெண்ணையோ, உறுப்புக்களை உள்வாங்காமல் மானுடக்கூறாகப் பார்க்கும் மாமனிதப் பார்வைபோல், கற்சிலை என்ற எண்ணமற்று, மானுடத்தைப் பெற்றெடுத்து, அதைப் பிறப்பெடுக்கவும் வைத்த பெருந்தாயாய் தோன்றிய எதிர்ப்பக்கம், இப்போது அவருக்கு ஆய்வுக்குரியதாய்ஆகிப்போனது. இந்தச் சிலை எந்த நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கும்? கருங்கல்லா. மாவுக்கல்லா. கவர்க்கல்லில் வடிக்கப்பட்டதா அல்லது பொருத்தப் பட்டதா. முற்சேர்க்கையா. பிற்சேர்க்கையா. துர்க்கை என்றால், பன்னிரெண்டு வயதுச் சிறுமி என்று கதையளப்பார்களே. அந்தக் கதைப்படி இந்தச் சிலையில் அந்த வயது பிரதிபலிக்கிறதா.
ஏகாம்பரம், அந்தச் சிலையை புதிதாய் பார்ப்பதுபோல பார்த்தார். புதுமையாய்ப் பார்த்தார். ஒரு பெண்ணை, அம்மாவாக பார்த்த பார்வை, இப்போது, அம்மாவை, பெண்ணாகப் பார்ப்பதுபோல் தோன்றியது.
இப்போதெல்லாம், ஏகாம்பரம், ஆண்டுக்கணக்கில் பழகிப்போன இந்தக் கோவில் பக்கமோ, கோவில் உள்ள திசைப் பக்கமோ வருவதில்லை. மெய்யாகவே மழைக்காகத்தான் ஒதுங்கினார். வீட்டுமாடியில் ஞானப் பயிற்சி செய்துவந்தவர். அன்று, ஒரு மாறுதலுக்காய், வெட்ட வெளியில், அதைச்செய்வதற்காக வெளியில் வந்தார். கடற்கரையைப் பார்த்துத்தான் நடந்தார். ஆனாலும் சொல்லாமல் கொள்ளாமல் மழை வந்துவிட்டது. மேகம்கருக்காமல், ஆகாயம் வேர்க்காமல் பருவமற்ற திடீர்மழை. ஒருவகையில் சொல்லப்போனால், அவரைப்போலத்தான். நாடாமல் கிடைத்த ஞானம்போல், தேடாமல் வந்த மழை.
மழை பிடித்துக்கொண்டதும், அந்த கோவில் மதில்ச்சுவரையொட்டி கட்டப்பட்ட பூக்கடைக்குள் தலை மறைத்தார். ஒலைச்சிதைவுகள் ஈரக்கசிவோடு, தும்பைப்பூச் சட்டையில் சாம்பல் வண்ணம் பூசியதும் கோபுர வாசலுக்குள் வந்தார். மழைத்துறல்கள் முகத்தில் அடித்தன. இது அவர் முகத்திற்கோ மூச்சிற்கோ ஏற்றதல்ல. ஆகையால், உள்ளே போனார். வாசலைத் தாண்டியதும் மொட்டையான வெட்டைவெளி அதற்குள், சன்னமான மழைத்துாறல்கள் சாட்டைகளாயின. அடிபொறுக்க முடியாமல் அவர் ஓடினார். வெட்டவெளி கடந்து ஆலயத்தின் வெளிப்பிரகாரத்திற்குள் நுழைந்தார். கூட்டமும் கும்பலுமாய் ஒரே களேபரம் கல்தூண்களில் எழுந்த அனுமனுக்கும் முருகனுக்கும் இடையே நடந்து, நடுநாயகமான வாசல் வழியாய் உட் சுற்றுக்கு வந்துவிட்டார். உள்ளே பார்க்காமல் வெளியே மழையையே பார்த்தபடி நின்றார். அது விடுவதாகத் தெரியவில்லை. எப்படி வந்தாரோ அவருக்கே தெரியாது. இந்த துர்க்கைச் சிலைக்கு முன்னால் வந்துவிட்டார். பழக்க தோசமாக இருக்கலாம். ஆன்மாவின் துருப்பிடித்த வாசனையாகவும் இருக்கலாம். மூளைக்குக் கட்டுப்படாத மனமோ... மனத்திற்கு கட்டுப்படாத உடலோ, ஏன் வந்தோம் என்பது தெரியாமலேயே எப்படியோ வந்து விட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகால மாலை நேரந்தான். ஆனாலும் ஆளரவும் இல்லை. செவ்வாய்க் கிழமை பிற்பகலிலும் வெள்ளி முற்பகலிலும் அலை மோதும் கூட்டத்தில் ஒரு ஆள்கூட தலை காட்டவில்லை. சுதந்திர தினத்திற்கு, விடுமுறை விடப்படுவதால், அலுவலகங்களில் அதற்கு முந்திய நாளே அந்தத்தினத்தை கொண்டாடி முடித்து, நாட்டிற்குத் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியில் இந்த கோவில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சியில் கார்க்கில் கலைநிகச்சி அந்த சமயம்பார்த்து ஒளிப்பரப்பு செய்யப்பட்டதால், வழக்கமாக வரும் பெரியவர்கள் கூட அன்று அம்மனை கைவிட்டார்கள். அனாதியானவள், அனாதையானாள். அன்றைக்கு மட்டும் சிலையானால், கசங்கிப்போன சிவப்பு உடுப்பு. குங்குமம் உலர்ந்து அதன் வட்டத்தைக் காட்டும் நெற்றிக்கல். சருகாய் உதிர்ந்து கொண்டிருக்கும் முன்னைய இளம்பூக்கள். தாயானவள், தன்பிள்ளைகளைக் காண வில்லையென்று வெளியே வந்து எட்டிப்பார்த்து விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ இருபுறத்து சாளரக்கதவுகளும் ஒன்றாக்கப்பட்டு இருந்தன.
இதுவே, ஏகாம்பரத்திற்கு நல்லதாய்ப் போயிற்று. நடைவழியான அந்த இடம் பொருத்தமாகப்பட்டது. எதிர்புரத்துச் சுவரோடு சுவராய் உட்கார்ந்தார். ஆனாலும் வசதிப்படவில்லை. எதிரே பார்த்தால் துர்க்கைச்சிலை, வலதுபக்கம் பார்த்தால் வள்ளி-தேவானை சகிதமான முருகச்சிலை, இடப்பக்கம் பார்த்தாலோ லிங்கங்கள். இவை அவரது பயிற்சிக்கு ஆகாதவை.
ஏகாம்பரம் எழுந்தார். பின்புறமாய் கைவளைத்து பிட்டத்தில் தூசித்தட்டினார். துர்க்கையம்மன் சிலைக்கு எதிரே, மூன்றடி உயரத்தில் நெடி தாய்ப் போய்க் கொண்டிருந்த அளிப்பாய்த்த திண்ணை இடைவெளியில் ஏறிக்கொண்டார். அம்மன் சிலையைவிட அவரது தலை சிறிது உயரமாக தூக்கி நின்றது. பத்மாசனம் போடுவதா, சித்தாசனம் போடுவதா என்று சிறிதுநேரம் யோசித்தார். இரண்டுமே அவருக்கு கால்வந்த கலை. ஆனாலும், சித்தாசனம் போட்டார். வசதிக்காக மட்டுமல்ல. சித் என்ற வார்த்தை அவருக்கு பிடிபட்ட சொல். அந்த சொல் செயல்வடிவம் பெறவேண்டும். அந்த சித்திற்காகத்தான் இத்தனை முயற்சிகள்.
ஏகாம்பரத்தின் மடித்துப்போட்ட கால்கள் செவ்வகக்கோடு டாய் படர்ந்தன. உச்சந்தலையும், வட்டக்குதமும், நோர்க்கோட்டில் நின்றன. தோளின் முனைகளும், முட்டிக் கால் முனைகளும் அவர் பறக்கப்போவதற்கான இரட்டைச் சிறகுகளாய் தோற்றம் காட்டின. ஏகாம்பரம், தனது குருநாதரை நினைத்துக் கொண்டார். இந்த மழையைப்போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்த குருநாதர் இவரை விட, அவர் பதினைந்து வயது சிறியவர். தாடி மீசை உத்திராட்சம் இத்தியாதிகளைக் கொண்ட காவியுடை குருவல்ல. ஆசிரமவாசியுமல்ல. பேண்டும் சிலாக்கும் போட்டவர். சிலசமயங்களில், சட்டையை பேண்டுக்குள் மடித்துப் போட்டு கழுத்தில் டை கூடகட்டுகிறவர். புகழில்லாத ஒரு நிறுவனத்தின் பொறியாளர். தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் மட்டுமே ஆன்மீகத் தொடர்பு வைத்திருப்பவர். கருங்கல், பளிங்காய் ஆக்கப்பட்டது போல் ஆன்ம ஒளியில் மின்னும் கருப்பர்.
ஒரு நண்பர் இவரை அவரிடம் அழைத்துச் சென்றார். கையெடுத்து கும்பிட்ட இவரது கையைப் பிடித்து 'கிளாட்டு மீட் யு' என்று குலுக்கினார். அறிமுகஉரையாடல் காலக்கணக்கைத் தாண்டிக்கொண்டிருந்த போது இவரை கூட்டிவந்தவர் குருநாதரின் காதில் கிசு கிசுத்தார். உடனே நாதரின் முகம் பற்றற்ற வெளிப்பாடானது. தொலைநோக்காய்ப் போனது. இவரை உள்ளுக்குள் தேடுவதுபோல் அவரது கண்ணொளி இவர் உடல் முழுக்கும் உட்புகுந்தது. மகிழ்ச்சியாகத் தலை ஆட்டியபடியே, இந்தப்புதிய சீடர்ருக்காக குருநாதர் ஒரு கண்ணாடித் தம்ளரில் நீரை நிரப்பினார். அதை இவர் கையில் கொடுத்தார். இவர் அந்த நீரைக் குடிக்கப்போன போது அவர் கையசைத்து தடுத்தபடியே இது உடல் தாகத்திற்காக அல்ல. உங்கள் ஆன்ம தாகத்தை தணிப்பதற்காக என்றார்.
ஏகாம்பரம் புரியாது விழித்தபோது, இவரிடம் அந்த கண்ணாடித் தம்ளரை உற்றுப் பார்க்கச் சொன்னார். நீரைத்தவிர எதுவுமே தென்படவில்லை. உடனே, குருநாதர் ஆணைப்படி, இவர் இடது கை பிடித்த தம்ளரை வலதுகையால் மூடினார். இந்த குருநாதரையே மனதில் நினைத்துக்கொள்ளச் சொன்னார். இரண்டு நிமிடம் கழித்து, தம்ளரை திறந்து பார்க்கச் சொன்னார். பார்த்தால் தம்ளரின் அடிவாரத்தில் சுருள்சுருளாய்-வட்டவட்டமாய், பாக்கு நிறத்தில் இடையிடையே பவளநிற சன்னக்கம்பியை காட்டியபடியே உத்திராட்சமாலை ஒன்று நீரில் மேல்நோக்கி நீந்துகிறது, ஏகாம்பரம் நெஞ்சுருகி, கண்ணுருகி அந்த மாலையையும், குருநாதரையும் மாறிமாறி நோக்கியபடியே, கையெடுத்துக் கும்பிட்ட போது, அந்த மாலையை எடுத்து குருநாதர் இவர் கழுத்தில் சூட்டினார். இவர் உடனே அவர் காலை தொட்டார். அவரோ இவர் மூளையைத் தொட்டார். குருநாதர் அன்று சொன்னது ஒவ்வொரு நாளும் உரத்துக்கேட்டது. நீங்கள் இதுவரை கற்றது. வீணே, பக்தி செய்தது பாழே. ஆனாலும் கவலைப்படவேண்டாம் இன்று முதல் நீங்கள் புதிய மனிதர். காலபோக்கில் ஞானப்பயிற்சியால் நீங்களே என்னைப்போல் ஒரு சித்தன் ஆகப்போகிறீர்கள்’ என்றார். ஒரு நல்ல நாளில் குத்துவிளக்கு சாட்சியாக குருநாதர் இவருக்கு ஞானப்பயிசிகளை போதித்தார். கூடவே சில சித்துகளையும் செய்துகாட்டினார். இந்த ஏகாம்பரமும் இவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.
இப்போது ஏகாம்பரம் எதிர்ப்பக்கம் கண்ணில்பட்ட அம்மனை பார்த்து விட்டு வேகவேகமாக கண்மூடினார். குருநாதரை மனதுக்குள் தியானித்தார். குருநாதர், அண்மையில்தான் அகால மரணம் அடைந்தார். அந்த மரணமே இவரை அவருள் உயிர்ப்பித்தது. அவருக்கு அஞ்சலி செலுத்துவது, அவரது பயிற்சிகளை அப்பியாசம் செய்து செய்து அவரைப்போல் ஒரு சித்தர் ஆவதுதான்.
ஏகாம்பரம், குருநாதர் கற்றுக் கொடுத்தது போல், உச்சந்தலையின் உட்பக்கத்தில் இருந்து பிட்டத்தின் அடிவாரம் வரை மானசீகமாக இரண்டு நேர்கோடுகளை போட்டுக்கொண்டார். மூன்றங்குல இடைவெளி கொண்ட ஒளிக்கோடுகள். கல்லூரிக்காலத்தில் கையாண்ட சோதனைக் குழாய் வடிவம் இந்தக்கோடுகளின், அடிவாரத்தை பிட்டத்து அடிவாரம் இட்டுநிரப்பியது. இதனை குருநாதர் பிரக்ஞை என்றார். ஆனாலும் மனம் கேட்டது. பிரக்ஞை என்றால் என்ன? குருநாதர் ஒளிவிளக்குச் காட்சியாய், இதனை விளக்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவர் வெளியேபோக வேண்டியது வந்துவிட்டது. அதற்குமேல் அவரைப் பார்க்க வாய்ப்பில்லை. வந்துவிட்டார்.
எனவே ஏகாம்பரமே பிரக்ஞை பற்றி சொந்தமாக ஒரு அனுமானத்திற்கு வரவேண்டியதாயிற்று. படித்தவவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். பிரக்ஞை என்பது, இருக்கிறேன், இருக்கிறார்கள், இருக்கின்றன என்ற பிரபஞ்ச உணர்வா? அல்லது இவையில்லை, அவையில்லை என்று தோற்ற மாயையை தூக்கி எறிவதா? சைவத்தில் கூறப்படும், பசுபதிபாச-மறுமை எதிர்பார்ப்பா. அல்லது வைணவம் விளக்கும் அவன் அவள் அது என்ற இம்மை உணர்வா? புத்த சமண சமயங்கள் கூறும் நிர்மலமா? நிர்குணமா? கல்லில், கழிவு நீக்கி சிலை எடுப்பது போன்ற மாயை நீங்கிய மனோதளமா? உணர்வு நீங்கிய பேருணர்வா? மனதை அசைத்து தான் மட்டும் அசையாமல் நிற்கும் உணர்வு பீடமா? இவற்றில் எதுதான் பிரக்ஞை? 'ஓம்' என்றால் உண்டு என்று ஒரு பொருள் உண்டு. இப்படி சொல்லிச் சொல்லி அண்டகோடிகளும் உண்டு, பிண்டகோடிகளும் உண்டு என்று அனுமானிப்பது தான் பிரக்ஞையா?
ஏகாம்பரம், வழக்கம்போல் சிறிது குழம்பிப்போனார். பட்டறிவு உதவவில்லை ஆனாலும் ஒரு தீர்வுகிடைத்தது. கட்டப்பஞ்சாயத்துத் தீர்வு... ஒளிக்கோடுகளை பிரக்ஞையாக அனுமானிக்கப் போனவர், இப்போது, பிரக்ஞையையே, ஒளியிலான சோதனைக்குழாய் போல் கற்பிதம் செய்துகொண்டார். மீண்டும் குருநாதர் சொன்னதுபோல், இந்தப் பிரக்ஞையையின் அடிவாரத்தில், குண்டளனி சக்தி சூல்கொள்ளும் ஆசன அடிவாரத்தில் மனதைகிடத்த வேண்டும். கண்களில் இருந்து இரண்டு ஒளிக்கோடுகள் பிரக்ஞைக்குழாய் வழியாய் கீழே வந்து மனதை பற்றிக் கொள்வதாக பாவிக்க வேண்டும். பாவித்துக்கொண்டார்.
ஆனால் இந்த மனதை எப்படி உருவகப்படுத்துவது? பிரக்ஞையில் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? பிரக்ஞை அசையா மணியென்றால் மனம் அதன் அசையோசையா? அப்போது அசையா மணியை அடிப்பது எது? அது ஆன்மாவா? இந்த மனதை மகிசாசூரவர்த்தனாய் அனுமானிக்கலாமா? அல்லது முயலகனாக கற்பிதம் செய்யலாமா? இங்கே உருவங்கள் வந்துவிடுகின்றனவே. உருவத்தையும் அருவமாக'பார்க்க வேண்டும் என்பதுதானே குருநாதர் ஆணை. போகட்டும். மனம் என்பது புறம் தீர்மானிக்கும் அகமா? அகம் தீர்மானிக்கும் புறமா? இந்த இரண்டின் கலவையா? அல்லது இரண்டு மூலங்களும் சேர்ந்த மூன்றாவது கூட்டுப்பொருளா? காற்றுபோல், கண்ணுக்குப் புலப்படாத ஒரு பூதமா? அல்லது நெருப்பு போல் எந்த உணர்வையாவது பற்றிக்கொண்டு நிற்பதா? இமயப் பனி மலையில் நீருற்றாய் வெளிப்பட்டு, மலைமுகடுகளில் குழந்தையாய் தத்தித்தத்தி நடந்து, சமவெளியில் பிரவாகமாகவும் கங்கையைப் போல், மூளையில் உதித்து, சுரபித் திரவங்களை கிளைநதிகளாகக் கொண்டு இறுதியில் மரணக் கடலில் சங்கமிக்கும் மகாநதியா?
இப்படி மனதை பல்வேறு உருவகங்களாய் பாவித்துக் கொண்ட ஏகாம்பரம், மேலும் உருவங்களைப் படைக்கப் போனார். இந்தப் படைப்பில் மனம் ஒரு விஷப்பூச்சியாக வந்தது. அப்படியே கற்பித்துக் கொண்டார். ஆனாலும் ஒரு சந்தேகம். மனம் எதிரியல்ல. அனுகூலசத்துரும் அல்ல. இரண்டு கெட்டான். இந்தவகையில் அது ஒரு பிள்ளைப் பூச்சி. இதை, பிரக்ஞை குளவியாய் கொட்டிக்கொட்டி அதனைப்போல் ஆக்க வேண்டும். ஏகாம்பரம் ஆனந்தப் பள்ளு பாடினார். இப்படிப்பட்ட அனுமானம், குருநாதருக்குக்கூட தோன்றியிருக்காது.
ஏகாம்பரம், மனம் என்ற பிள்ளைப் பூச்சியை ஆசனவாயின் அடிவாரத்தில் பிரக்ஞைக் கோடுகளினால் இணைக்கச்செய்தார். கண்களில் தோன்றி இந்த பிரக்ஞை வழியாக வெளிப்பட்ட ஒளிக்கோடுகளால், மனதை கவ்விப்பிடிக்கச்செய்தார். அந்த ஒளிக்கோடுகளால், அடிவாரத்தில் கிடந்த மனதை தூக்கி நாபியில் வைத்தார். மனம் வீறிட்டுக்கத்தியது. தொலைக் காட்சிபோல் பாரடாபார் என்று அவர் முன்னால் பல்வேறு காட்சிகளை ஒளிபரப்பியது. கைவிட்ட காதலியின் துரோகமாய் வெளிப்பட்டது. கைவிடப்பட்ட காதலியின் சாபமாய் சினந்தது. அவமானப்பட்ட சங்கதிகளையும், அவமானப் படுத்தப்பட்ட நிகழ்வுகளையும், பெற்றோரை கை விட்டதையும், பிறப்பித்தவர்கள் தன்னை கைவிட்டதையும், தாயோடு சேர்ந்துகொண்டு மனைவியை நோகடித்ததையும், அந்த மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு தன்னை நோகடிப்பதையும். கொண்டுவந்து போட்டது. மனதை பிடிக்கப்போன ஏகாம்பரம் இப்போது மனதால் பிடிபட்டு அரற்றினார். அதன் நினைவுச் சாம்பல்கள் நீருபூத்த நெருப்பாய் இருப்பது கண்டு கைகளை உதறினார். ஆனாலும் வழக்கப்படியான மனத்தின் கூச்சல் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அந்த மனப்பூச்சியை கண்ணொளிக் கோடுகளால் அழுந்தப் பற்றி மார்பு பிரதேசம் வழியாக தொண்டைக்குக் கொண்டுவந்தார். அங்கிருந்து மூக்கின் முனைவழியாக புருவ மத்திக்கு கொண் டு போய் , பி ன் தலைக்கு திசை திருப்பி , உச்சந்தலையில் நிலை நாட்டினார். கண்ணொளிக் கோடுகளும், பிரக்ஞைக் கோடுகளும் தனித்தனியே ஒன்றோடு ஒன்றுபட்டு இருவேறு சாய்வுக்கோடுகளாய் முக்கோணமுனையில் சந்தித்துக்கொண்டன. குலவியாய்ப் போன மனம் ஒரு வஸ்த்துவாகி, உள் உச்சந்தலை முக்கோணத்தின் அடிக் கோடாயிற்று.
இந்தச் சமயத்தில், பரிச்சயப்பட்ட ஒரு குரல் அழுகையாய் ஆவேசமாய் ஒலித்தது. அது ஞான சித்திக்குரல் என்று நினைத்து, ஏகாம்பரம் மெல்லச் சிரித்தார். குருநாதர் சொன்னதுபோல் ஏதோ ஒரு சக்தி தன்னோடு பேசப்போவதாய் அனுமானித்துக்கொண்டு அதற்கு அவர் காதுகொடுத்தார். ஆனாலும் அவர் உடம்பு உலுக்கப்பட்டது. உடனே கண்மூடித்தனமாய் கிடந்த இமைகள் விலகின. கருவிழிகள் பூத்தன. எதிரே அவரது மைத்துனர். இவரது மகனுக்கும் பெண்கொடுத்த சம்பந்தி. குய்யோ முறையோயென்று கதறினார்.
"மோசம்போயுட்டோமே மச்சான். உங்க ஒரே மகன். என்னோட மருமகன். லாரில அடிபட்டோ, கார்ல மோதியோ ஆஸ்பத்திரில கிடக்காராம். போலீஸ்காரன், விலாவாரியா சொல்லாம, போனை வைச்சுட்டான். ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லிட்டான் எழுந்திருங்க மச்சான். கடைசில உங்க மகன், என் மகள பூவும் பொட்டு இல்லாம பண்ணிடுவாரோன்னு பயம்மா இருக்கே.”
ஏகாம்பரம், அலறியடித்து எழுந்தார். உச்சி முக்கோணம் மறைந்தது. அந்த மறைவே நெருப்பாகி, அவர் உடம்பை எரித்தது. கண்கள், ஒளிக்கோட்டுத் தடங்கல் களாய் பார்வையை மறைத்தன. அவரது ஒரே மகன். அவனைப் பார்ப்பது தன்னை கண்ணாடியில் பார்ப்பது போலவே இருக்கும்.
ஏகாம்பரம் எழுந்தார். அம்மன் சிலைக்கு எதிரே திருவோடுபோல் இரண்டு கைகளையும் மார்புக்கு முன்னால் நீட்டிக் கொண்டு -
"அம்மா. அம்மா." என்று அரற்றினார்.
கல்கி தீபாவளி மலர்—1999