ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆன்மீகம் என்பது என்ன?
அண்மையில் சென்னையில் நடந்த ஒர் 'ஆன்மீக' மாநாட்டில் அமைச்சர் வீரப்பன் கலந்துகொண்டு, ஆன்மீகம் என்னும் பெயரில் அறிவியல், பகுத்தறிவு, சீர்திருத்தம் ஆகியவை பற்றித் தம் அறியாமையும், பகுத்தறிவின்மையும், மூடத்தனமும் தெளிவாக விளங்கும்படி, ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார். அவருக்கு இது வேண்டாத வேலை. அறநிலையத்துறை அமைச்சர் என்றால், மூட நம்பிக்கைகளுக்குத் துணைபோக வேண்டும் என்பது பொருளன்று; கொள்கையும் அன்று.
நம் நாட்டில் இன்று புழக்கத்தில் உள்ள இந்துமதம், சமணமதம், புத்தமதம், இசுலாம் மதம், கிறித்தவ மதம் முதலிய மதநெறிகளில் ஆன்மீகநெறி உடைய மதம் என்பது எது என்பதை அவர் விளக்க முடியுமா? எல்லா மதங்களிலும் உள்ள 'கடவுள் கோட்பாட்டை'யே ‘ஆன்மீக’ நெறி என்று வீரப்பன் கூற முன்வருவாரானால், அம் மதங்கள் தம்முள் எதற்காக முரண்பட்டுக்கொண்டு, ஒன்றையொன்று அழிக்கவும் பழிக்கவும் தாழ்த்தவும் வீழ்த்தவும் முயற்சிசெய்ய வேண்டும்? இனி, மேற்கூறிய மதங்கள் தவிர, இங்குள்ள சித்தநெறி, வேதநெறி, வள்ளலார் நெறி என்பவை யெல்லாங்கூட ‘ஆன்மீக’க் கருத்தையே கூறுகின்றன என்றால், அவையும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பது ஏன்? இருமைக் கொள்கையும் (துவைதம்), இரண்டன்மைக் கொள்கையும் (அத்துவைதம்), ஒருமை இருமைக் கொள்கையும் (துவைதாத்துவைதம்), சிறப்பு ஒருமைக் கொள்கையும் (விசிட்டாத்துவைதம்) ‘ஆன்மீக’ முறையில் ஒரே கொள்கையைத்தான் சொல்கின்றனவா என்பதை வீரப்பன் உறுதிப்படுத்திக் கூற முடியுமா? இவ்வாறு எதையுமே இன்றுவரை தெளிவுபடுத்தி வரையறுக்க முடியாததும், குழப்பம் விளைப்பதும், சூழ்ச்சிக்காரர்களின், சுரண்டல்காரர்களின், ஏமாற்றுக்காரர்களின், மதவெறியர்களின் கோட்பாடாகவுமே உள்ள மதநெறியையே வீரப்பன் ‘ஆன்மீகம்’ என்று சொல்கிறாரா? இல்லை, இந்துமதம் என்று சொல்லப்படுகின்ற மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக உள்ள ஒரு மதத்தின் நெறியைமட்டுமே ஆன்மீகநெறி என்பதாக வீரப்பன் சொல்கிறாரா? அவர் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்திப் பேசும் ‘ஆன்மீக நெறி’ எது, அதன் செயல் வரம்புகள் எவை என்பதை அவர் தெளிவாகக் கூறவேண்டும்! இல்லை, தெரியாத ஊருக்குப் போகாத பாதை காட்டும் இம் முந்திரிக்கொட்டை அமைச்சர் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்!
‘ஆன்மீகம்’ என்னும் பெயரில் இந்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக மத வல்லாண்மைக்காரர்களால் அறியாமையும், மூடநம்பிக்கையுமே பரப்பப்பட்டு வருகின்றனவே, அவற்றையெல்லாம் சரி என்று வீரப்பன் கூறுகிறாரா? இல்லை, இந்நாட்டில் பார்ப்பனிய மதம் என்று கூறப்படும் வேத வருணாச்சிரமக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு, சாதி வேறுபாடுகளை இறைவனே படைத்தான்; அவற்றின் அடிப்படையிலேயே'வாழ்வியல் அமைப்புகள், வாழ்க்கை நலன்கள் முதலியவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அரசும் அவற்றுக்கே இசைவாக நடக்கவேண்டும் என்று இந்துமதம் கூறுகிறதே, அவற்றை யெல்லாம் வீரப்பன் சரி என்று ஒப்புகிறாரா? அப்படியானால் இவர் அமைச்சராக இருக்கமுடியாதே! நாலாந்தரச் சூத்திரனுக்கு அமைச்சுப் பதவியும் ஆட்சிப் பொறுப்பும் இவர் கூறும் இந்துமத ‘ஆன்மீக நெறிப்படி’ இருக்கக் கூடாதே! அதைச் சரியென்று கூறி, ஆட்சியை விட்டு, இவர் வெளியே வந்துவிட ஒப்புகிறாரா? இவர் என்ன சொல்லுகிறார்? எதைத் தாங்க விரும்புகிறார்? ஏன் இவர்க்கு இப்படி மூளை கூழையாகிப் போனது? காஞ்சிப் பெரியவாள் கருணாநிதிக்கும் வீரமணிக்கும் வேண்டிய ‘சாவிப்பு வேண்டுதல்’ போல், இவருக்கும் பித்தம் பிடித்து உளற வேண்டும்’ என்று அவரின் ‘உறவுத் தாத்தா’ கடவுளிடம் வேண்டிக் கொண்டாரா?
‘பகுத்தறிவு, சீர்திருத்தம் என்கிற பெயரில் நடைபெறும் செயல்கள் நம்மை, அறியாமை இருளில் தள்ளுவனவாக உள்ளன. இவற்றிலிருந்து மக்களை மீட்டு, மக்கள் இனத்தை ஒன்றுபடுத்த ஆன்மீக நெறி வேண்டும் என்கிறாரே இவர், அந்தப் பகுத்தறிவும் சீர்திருத்தமும் முயன்றுதாமே இவரைப் படிக்க வைத்து அமைச்சர் வேலை பார்க்கவும் உதவின. இல்லையெனில் இங்குள்ள, சிலர் கூறும் ஆன்மீக நெறிப்படி இவர் மாடு கன்று மேய்த்துக்கொண்டோ ஊரூராகச் சென்று வணிகம் செய்துகொண்டோதானே கிடக்க வேண்டும்! இதில் எதை ஆன்மீக நெறி என்கிறார் வீரப்பன்? 'மக்கள் இனத்தை ஒன்றுபடுத்த 'ஆன்மீக' நெறி வேண்டும்' என்கிறாரே இந்த வீரப்பனாழ்வார். இங்குள்ள மதங்கள் எல்லாம் இத்தனை நூற்றாண்டுகள் வரையில் ஆன்மீகம், மதம், தர்மம், மோட்சம், புராணம், இதிகாசம் என்று பல வகையான ஏமாற்று முத்திரைகளால், இங்குள்ள மக்களை யெல்லாம் துண்டு துணுக்காக வேறுபாடுகள் அடையச்செய்து, அவர்கள் தலைகளிலெல்லாம் மிளகாயரைத்து அவர்களை அடிமைகளாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், மூடநம்பிக்கை உடையவர்களாகவும் ஆக்கி, இன்றுவரை அச் சகதிகளிலிருந்து மீளமுடியாதவர்களாகச் செய்து வைத்திருப்பதை அறியாத குருடரா இவர்?
இனி, இந்த வீரப்பன், தெரிந்தோ தெரியாமலோ, இந்த ‘ஆன்மீக’ நெறியாளர்களுக்கெல்லாம் ஒரு பொதுஇசைவு அஃதாவது உரிமம் வேறு வழங்கியிருக்கிறார். ‘ஆன்மீகப் பணி செய்துவரும் நிறுவனத்தின் மீது எந்த அரசுச் சட்டமும் நுழையாதாம்; அதன் செயற்பாடுகளில் குறுக்கே வராதாம்' எப்படி? இந்த திறந்தவாய் அமைச்சரின் சிறந்த தடை நீக்கம் செய்யும்படியான பேச்சு! ஏற்கனவே கயவர்களும், களியர்களும், திருடர்களும், முடிச்சுமாறிகளும், கள்ள உருபாத்தாள் அடிக்கும் பேர்வழிகளும், சாராயக் கடைக்காரர்களும், கடத்தல்காரர்களும் ஒன்றாகப் போயடங்கிக் கொள்ளையடிக்கும் கூடாரமாகத்தான், இவர் கூறும் ‘ஆன்மீக’ நெறியை வளர்க்கும் மடங்கள், நிறுவனங்கள், கோயில்கள், மடவளாகங்கள்(ஆதீனங்கள்) முதலியவை இருந்து வருகின்றன. இனி, அமைச்சரே அதுவும் ‘அறநிலைய’ அமைச்சரே ‘உத்தரவு’ போட்டுவிட்டார்! அரசுச் சட்டமோ, திட்டமோ எதுவும் அங்கு நுழையாதாம்! இனி, ‘ஆன்மீக’ நெறி வளர்ப்பவர்களுக்குக் கொண்டாட்டந்தான்! பகற் கொள்ளைக்குப் 'பந்தம்' பிடிக்க வீரப்பனார்' உள்ளவரை, ‘மதம்’ பிடித்த ‘ஆன்மீக’ அடிகளார்களுக்கு இனிமேல் குறையேது? எப்படியோ இங்கு ஏற்கனவே உள்ள கொஞ்சநஞ்சம் மாந்தத் தன்மைக்கும் இனி அறவே இடமில்லை என்று ஆகிவிட்டது! வாழ்க வீரப்பச் சூத்திரனார்! வளர்க அவர்தம் கொற்றம்!
- தமிழ்ச்சிட்டு, இதழ் எண் : 18, 1983