ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இராசீவின் குட்டிப் பூசாரிகள்

விக்கிமூலம் இலிருந்து

இராசீவின் குட்டிப் பூசாரிகள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது!

தமிழகத்தை நிலையாக வடநாட்டுக்கு அடிமைப்படுத்தத் துடிக்கிறார்கள்

“நடுவணரசு எல்லாவற்றையும் கவனமாகக் கவனித்துக் கொண்டு வருகிறது. இளைய தலைமையமைச்சர் இராசீவ் காந்தியின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது” - என்று சட்டப் பேரவையில் இந்திரா பேராய உறுப்பினர் ஒருவர் தமிழக எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்திப் பேசியிருக்கிறார். அவரும் ஒரு தமிழர் என்று பிறவியில் உலவுபவர்.

இராசீவ் காந்தி ஏதோ பூதம் என்று நினைத்துக்கொண்டு அவர் பேசிய அச்சுறுத்தல் பேச்சு அவரின் அறியாமையை மட்டுமன்று, கீழடிமைத்தனத்தையும் நன்கு புலப்படுத்துகின்றது. சட்டமன்ற மரபுக்கே மாறான, கேடான இவ்வகைப் பேச்சுகளை அவைத்தலைவர் நல்லவேளை - அவைக்குறிப்பிலிருந்து நீக்கச் சொல்லியுள்ளது பாராட்டப்படக் கூடியது.

மேலே குறிப்பிடப்பெற்ற அரம்பத்தனமான பேச்சைப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லர், இங்குள்ள இந்திரா பேராயக் கட்சித் தலைவர்கள் எனப்படுவோர் பலரும் இம் மாதிரிப் பேச்சுகளை அண்மைக் காலங்களில் பேசி வருவது அனைவர்க்கும்

தெரிந்ததே! குறிப்பாக அனைத்திந்திய இந்திரா பேராயக் கட்சி செயலர்களில் ஒருவரான மூப்பனார் அவர்களும், தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் பழனியாண்டி அவர்களும்கூட, ஏன் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் தங்கபாலு அவர்களும் இன்னும் அவரைச் சார்ந்தவர்களுங் கூட, பல சூழ்நிலைகளில் தமிழ்நாட்டுப் பிற கட்சித் தலைவர்களையும் அவர்கள் செயல்பாடுகளையும் மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசிவருவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். அவர்கள் ஏன் தங்களை அந்த அதிகாரத் தோரணையில் வைத்துப் பேச வேண்டும் என்பதற்குரிய காரணம் அவர்களின் மனச்சான்றுக்கே விளங்கும். அவர்கள் இராசீவ் காந்தியிடமிருந்தும் பிற வடநாட்டு முதலாளிகளிடமிருந்தும் பெறும் வாய்க்கரிசிக்காக இவ்வாறு தன்னுணர்வின்றித் தன்மானம் இன்றித் தாங்கள் பிறந்த இனநலம் கருதாமல், மொழிநலம் எண்ணாமல் பேசுகிறார்கள் என்பது உண்மை யானாலும், வடநாட்டுத் தலைவர்களில் எந்த மாநிலத்தவராகிலும், இப்படி இவர்களைப் போல தங்கள் இனநலம், மொழிநலம் ஆகியவற்றை மறந்து பேசுகிறார்களா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் இல்லாத தேசிய - இராசீவ் காந்திக் கரிசனம் - இவர்களுக்கு மட்டும் என்ன அப்படி புட்டுக் கொண்டு அழுகிறது என்று இவர்கள் சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இனி இச் சிந்தனையை விடுத்து ‘நாங்கள் இப்படித்தான் பேசுவோம்’ என்றால், 'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்' என்னும் திருக்குறள் இவர்களுக்காகவே தோன்றியுள்ளது என்பதை இவர்கள் தெரிந்து கொள்வார்களாக!

- தமிழ்றிலம், இதழ் எண். 82