ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/சேலம் உருக்காலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சேலம் உருக்காலைக் குடியிருப்பில் பார்ப்பனரின் கொட்டம்!
அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம், இந்தி, சமசுக்கிருதம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் கொடுமை!

தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப் பெறுகிறது!

தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை என்றால், தமிழன் தமிழ்மொழியைப் படிப்பது எங்கு? எப்போது?

தமிழ்நாட்டு அரசு இதுபோன்ற கொடுமைகளையெல்லாம், தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்தவில்லையானால் தமிழின் எதிர்காலமே இருண்டு போகும்!

அரசு உடனே தலையிட்டு ஆவன செய்க!

சேலம் உருக்காலை(Steel Plant)க்கென மோகன் நகர் என்னும் பெயரில் நகரியம்(Township) ஒன்று உள்ளது. இம் மோகன் நகரில் ஏறத்தாழ 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இக் குடும்பத்தினரின் பிள்ளைகளும், அதனைச் சுற்றியுள்ள சிற்றுர்களில் வாழ்ந்துவரும் உருக்காலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் படிப்பதற்கென ஒரு தனியார் பள்ளி உண்டு. இதன் பெயர் ‘வித்யா மந்திர்’ (தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப் பெறும் பள்ளிகளுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி, பார்ப்பனர்கள் தமிழில் பெயரிடுவதில்லை என்பதை, இந்த மானங்கெட்டத் தமிழர்கள் முதலில் உணரவேண்டும்.) இந்த ‘வித்யா மந்திர்’ ஒப்பந்த அடிப்படையில் ஏற்பட்ட தனியார் பள்ளி. இது சென்ற ஆண்டு சூன் திங்கள் தொடங்கப்பெற்று நடைபெற்று வருகிறது.

இப் பள்ளியில் நடுவணரசுப் பாடத் திட்டப்படி கல்வியமைப்பு உள்ளது. அதன்படி இங்கு ஆங்கிலம் முதல்மொழியாகவும், இந்தி இரண்டாம் மொழியாகவும் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகின்றன. மூன்றாம் பாடம் விருப்பப்பாடம். இதில் சமசுக்கிருதமும் தமிழும் பயிற்றுவிக்கப் பெறுகின்றன. மேலும் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியாக(English Medium) மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. தமிழ் வழியாகப் (Tamil Medium) பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புகள் இல்லை. பள்ளி தொடங்கப்படும் பொழுதே தமிழைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்ப்பனர்கள் செயல்பட்டதாகத் தெரிகிறது. எனவே தமிழ்வழியாகவோ, தமிழிலோ கற்பிக்கப்படும் எண்ணமே அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்று உணர முடிகிறது.

மேலும் இப்பள்ளி ஒப்பந்த அடிப்படையில் இங்கு அமைந்திடக் காரணம், பெரும்பாலான அதிகாரிகளின் பிள்ளைகள் சுவர்ணபுரி (இது அழகாபுரம் என்று தமிழ்ப் பெயரால் இருந்த பகுதி. இதையும் பார்ப்பனர்கள் 'ஸ்வர்ணபுரி' என்று வடமொழி மாற்றம் செய்திருக்கின்றனர்.) என்னும் சேலம் நகர்ப் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தவர்கள் என்பதே.

மாதம் ஒன்றுக்கு 'வித்யா மந்திர்' பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரிடம் 30 உருபா கல்விக் கட்டணமாகத் தண்டப் பெறுகிறது. இதில் உருக்காலை ஆளுமை நிர்வாகம் மாணவரின் தந்தையான பணியாளர்க்கு ஏறத்தாழ 50 விழுக்காடு திரும்ப வழங்குகிறது. இது தவிர, பள்ளிக் கட்டிடம், மின்சாரம், மிசைகள், நாற்காலிகள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களை ஒப்பந்தரக்காரர்க்கு இலவயமாக வழங்குவதுடன், அவர்களுக்கு ஏற்படும் இழப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

இதில் இன்னோர் உண்மை என்னவென்றால் அங்குள்ள உருக்காலையில் பணியாற்றும் பணியாளர்களில் ஒரு கணிசமான தொகையினர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியாகக் கற்பிக்க விருப்பமிருந்தும், வேறு வழியில்லாததால் அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில வழியாகப் படிக்கவும், அவர்களுக்கு இந்தி கற்பிக்கவுமே நேரிடுகிறது என்பதே.

இனி, இவ்வுருக்காலை வளாகத்தில் I.N.T.U.C., C.I.T.U. ஆகிய இரண்டு தொழிலாளர் இயக்கங்களும், அதிகாரிகளுக்கென ஒரு கூட்டமைப்பும், முத்தமிழ் மன்றம் ஒன்றும் (பெரும்பாலும் பார்ப்பனர்களைக் கொண்டது) இருப்பினும், இக்குறைபாட்டினை நீக்கிட எந்த அமைப்பும் முனைந்ததாகத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 17.3.1983 அன்று தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் சேர்ந்து ஒன்றுகூடி, தமிழ்க்கல்வி வகுப்பின் தேவை குறித்துப் பேசியிருப்பதாகத் தெரிய வருகிறது. அதன் முடிவாக, சேலம் உருக்காலை அனைத்துப் பணியாளர் தமிழ்க் கல்வி கோரும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் தலைவராகப் பயிற்சித் துறை மேலாளர் ஒருவரும், கூட்டு அமைப்பாளராக ஒருவரும் ஆகிய இரண்டு தமிழர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளனராம். அக்குழு இனி, அங்குள்ள பள்ளியில் தமிழ்க் கல்வியை வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே தமிழ்க் கல்வி மறுக்கப்படும் பொழுது, நாம் எப்படி, கருநாடகத்திலும், அந்தமானிலும் தமிழ்வழிக் கல்வியையும், தமிழ்க் கல்வியையும் வலியுறுத்த முடியும்? இஃதென்ன கொடுமை! தமிழ் நலமும், தமிழின நலமும் நாடும் தமிழர் கட்சிகளும், அமைப்புகளும் தங்களுக்குள் மாறுபட்டும் வேறுபட்டும் இயங்கிக் கொண்டிருப்பதாலன்றோ, பார்ப்பனர்கள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், இப்படி இந்திக்கும் சுமசுக்கிருதத்திற்கும் ஆக்கந்தேடிக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு உண்மையிலேயே தமிழ்நலம் நாடுகின்ற அரசாக இருக்குமானால் இப்படிப்பட்ட தமிழுக்கு மாறான செயல்முறைகள், தமிழகத்திற்குள்ளேயே நடக்க இயலுமா? இளிச்சவாய்த் தமிழர்களும், இரண்டக ஆட்சியாளர்களும் எண்ணி ஆவன செய்வார்களாக.

- தமிழ்நிலம், இதழ் எண். 15, 1983