உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறுமுகமான பொருள்/ஞான பண்டிதன்

விக்கிமூலம் இலிருந்து



7
ஞான பண்டிதன்

முருகன் இளைஞனாக, அழகனாக மட்டும் இருக்கின்றவன் இல்லை. சிறந்த வீரனாகவும் இருப்பதை தேவ சேனாபதித் திருக்கோலத்திலே பார்க்கிறோம். இத்துடன் சிறந்த அறிஞனாகவும் இருக்கிறான். ஞானப்பழமாக அன்னைக்கும், ஞானகுருவாகவே தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன.

அன்றொரு நாள் காலையிலே, அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் அமர்ந்திருக்கிறார்கள் கைலைமலையிலே. அங்கு வந்து சேருகிறார் நாரதர். அவர் சும்மா வரவில்லை. கையில் ஒரு மாங்கனியையும் கொண்டு வருகிறார். அதை ஐயனிடம் கொடுத்து அவன்றன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம். அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்க வேண்டும் ஓர் அற்புத உண்மை. நாரதர் தந்த கனியை சிவபெருமான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஓர் ஆசை. மக்கள் இருவரையும் அழைத்து எல்லோரும் சேர்ந்து உண்ணலாமே என்று. மக்களும், ஆம். விநாயகரும் முருகனும் தான் வந்து சேருகின்றனர். இதற்குள் சிவபெருமான் நினைக்கிறார். இந்தக் கனி மூலம் ஒரு போட்டிப் பரீட்சையே நடத்தலாமே என்று. உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இக்கனி என்கிறார் சிவபெருமான். இந்தப் போட்டியில் தனக்குத் தான் வெற்றி என்று மார் தட்டிக் கொண்டு மயில் வாகனத்தில் ஏறி ககனவீதியிலே புறப்பட்டு விடுகிறான் முருகன். விநாயகருக்கோ, தம்பியுடன் தம் மூஷிக வாகனத்தில் ஏறிக்கொண்டு போட்டி போட முடியாது தான். அதனால், அவர் சாவதானமாக அன்னையையும் அத்தனையும் சேர்த்தே ஒரு சுற்றுச் சுற்றுகிறார். உலகம் உங்களிடம் தோன்றி உங்களிடம் நிலைத்து, உங்களிடம் தானே ஒடுங்குகிறது. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதாகத் தானே அர்த்தம், கொடுங்கள் கனியை என்கிறார். மறுக்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார்கள் அம்மையும் அப்பனும், விநாயகரிடம். உலகத்தை எல்லாம் சுற்றி, அலுத்து வந்த பிள்ளை, விஷயம் அறிந்து தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கோவணாண்டியாக வெளியேறி விடுகிறான் கயிலையை விட்டு. தாயாகிய பார்வதி அப்பா, நீயே ஞானப்பழமாக இருக்கும் போது உனக்கு வேறு பழம் நாங்கள் தர வேண்டுமா? என்று கூறி சமாதானப்படுத்துகிறாள். இப்படித்தான் ஞானப்பழமாகவே இருக்கும் பழநியாண்டவன் - பழநிமலை மீது ஏறி நின்று கொண்டிருக்கிறான் என்பர் புராணிகர்கள்.

இத்துடன் இன்னொரு கதை. மூவர்க்கும் முதல்வனான முருகனை, ஏனோ ஒரு நாள் பிரமன் மதியாது நடந்திருக்கிறான். அவ்வளவுதான், அவனைக் காதைப் பிடித்து இழுத்து, தலையிலே குட்டி பிரணவத்தின் பொருளை அறியாத நீ, சிருஷ்டி செய்ய அருகதை உடையவனில்லை என்று கூறிச் சிறையிலேயே அடைத்து விடுகிறான் முருகன். விஷயம் அறிகிறார் சிவபெருமான், மகனிடத்து வருகிறார். உனக்குத் தெரியுமா பிரணவத்தின் பொருள்? என்று கேட்கிறார். ஓ தெரியுமே என்று எகத்தாளமாகச் சொல்கிறான் முருகன். இப்போது சொல் பார்ப்போம் என்கிறார். சளைக்கவில்லை முருகன். 'கேட்கிறபடி இருந்து கேட்டால் சொல்லுவோம்' என்று அமுத்தலாகவே கூறுகிறான். பார்த்தார் சிவபெருமான். வேறு வழியில்லை. தன் பிள்ளையின் காலடியிலே சிஷ்யனாக அமர்ந்து கை கட்டி வாய் பொத்தி, பிள்ளை மூலமாகவே பிரணவ மந்திர உபதேசம் பெறுகிறார். இப்படித்தான் 'குருவாய் அரனுக்கும் உப தேசித்தான் குகன்' என்பர் அறிஞர்கள். இந்த ஞானபண்டிதன் தான் சுவாமிநாதன் என்ற பெயரோடு அந்தப் பழைய ஏரகம் - இன்றைய சுவாமி மலையில் இருந்து, தன் தந்தைக்கு மாத்திரம் அல்ல, உலகில் உள்ள மக்கள் எல்லோருக்குமே, ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறான்.

இதில் ஒரு வேடிக்கை - ஞானப்பழமாக நிற்கும் பழநியாண்டவனும், ஞானபண்டிதனாக விளங்கும் சுவாமிநாதனும், கோவணாண்டியாகவே நிற்கின்றனர். கையில் தண்டு ஒன்றை மட்டும் ஏந்திக் கொண்டு, மற்றைய உடமைகளை எல்லாம் துறந்து விடுகிறார்கள், சின்னஞ்சிறு பிள்ளையாக இருக்கும்போதே, ஏன் இப்படி இந்த இரண்டு மூர்த்திகள் மட்டும் முற்றும் துறந்த முனிவர்களாக இருக்கிறார்கள் இந்த இளவயதிலேயே' என்று கேட்டேன் பலரிடம். இந்தக் கேள்விக்கு விடை தேடிப் புரட்டினேன், பல புத்தகங்களை. விடை கிடைப்பதாக இல்லை. விளையாட்டாகச் சொன்னார் ஒரு பக்தர் ‘ஒரு மனைவியே சற்ற ஏறுமாறாய் இருந்தால் சந்நியாசம் கொள்ள வேண்டியதுதானே; ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்றால் ஒருவரிடமும் கூறாமல் சந்நியாசம் ஆவதைத் தவிர வேறு வழி என்ன? என்று’. ஆனால் இந்த மனைவியரை அடையுமுன்பே அல்லவா, மணம் ஆகா அந்த இளவயதிலேயே அல்லவா முருகன் பாலசந்நியாசி ஆகிவிடுகிறான்.

தமிழ்நாட்டு அறிஞன், அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான். இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால் இவ்வுலகத்தில் நாம் உடமை என்று கருதுகின்ற பொருள்களில் உள்ள ஆசையை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி ஆசையை விட விடத்தான் பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.


வேண்டின் உண்டாகத் துறக்க, துறந்தபின்
ஈண்டு இயற்பால பல

என்பது தானே அவன் சொன்ன அருமையான குறள். உண்மைதானே, உலக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன், அந்த உலகத்து உடமைகளிலேயே, பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும். ஆதலால் அவன் உடமைகளை எல்லாம் துறக்கிறான், மக்களுக்கு அவர்கள் வேண்டிய பேறுகளை எல்லாம் அளிப்பதற்காகவே. அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதினாலே தான், நாம் பெறற்கரிய பேறுகளை எல்லாம் பெறமுடிகிறது. அவன் துறவியானது நம்மையெல்லாம் துறவிகளாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருள் உடையவர்களாக மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக்கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்கு பற்று, துறவு என்றெல்லாம் உண்டா?

இத்துடன், அவன் வள்ளுவன் சொன்ன மற்றொரு உண்மையையும் நன்றாக அறிந்தவன். இவ்வுலகத்தின் செலாவணி நாணயம் பொருள். அதுபோல பேரின்ப உலகத்திற்கு செலாவணி நாணயம் அருள். இரண்டும் இல்லாமல் வாழ்வு பூர்த்தியாகாது.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்று தெரியாமலா சொன்னான் வள்ளுவன். இதைத் தெரிந்து முருகனே அருளையும் பொருளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்க, ஆண்டியாக வேடம் புனைந்து ஆண்டவன் ஆகிறான். ஞானப் பழமாக, ஞான பண்டிதனாக நின்று, நமக்கெல்லாம் ஞானம் புகட்டுகிறான்; மங்கயைர் இருவரை மணந்து நல்ல மணவாளன் ஆகிறான். செல்வம் கொழிக்கும் சீரலைவாயிலில் சிறந்த செல்வனாகவே வாழ்கிறான். எல்லாம் மக்களினம் உய்யத்தான்.


ஏரகமும் என்னகமும் பிரியாத
இளையானை இறைஞ்சல் செய்வாம்

வில்லேந்திய வேலன்

கங்கையாற்றின் கரையிலே சிருங்கிபேரபுரம் என்று ஓர் ஊர். அங்குள்ள வேடர் தலைவன் - குகன். கங்கையிருகரையையும் கணக்கிறந்த நாவாய்களையும் உடையவன் அவன். அவனுக்கு சக்ரவர்த்தித் திருமகன் ராமனிடத்து அளவிடற்கரிய அன்பு, தாய் உரைசெய, தந்தை ஏவ கானாளப் புறப்படுகின்றான் ராமன், லக்ஷ்மணனும் சீதையும் உடன் வர கங்கைக்கரை வந்து சேர்கிறான். கங்கையைக் கடக்க ஓடம் விடுகிறான் குகன். 'என் தம்பி, உன் தம்பி, இந் நங்கை நின் கொழுந்தி, நான் உன் தோழன் என்றெல்லாம் கூறி, குகனது அன்பைப் பாராட்டுகின்றான் ராமன். ராமனுடன் தானும் காட்டுக்கே வருவேன் என்று குகன் பிடிவாதம் செய்த போது, ராமன், தம்பி நீ இங்கேயே இரு. நான் நாடு திரும்புகிற போது உன்னிடம் வந்து தங்கி, உன்னையும் அழைத்துக் கொண்டே அயோத்தி செல்கிறேன் என்று சொல்லிப் பிரியா விடை பெறுகிறான். தெற்கே சென்றவர்கள் திரும்பவில்லை. குறித்த பதினான்கு வருஷமும் கழிந்ததா இல்லையா என்று கணக்கிட்டுத் தெரியவோ அறியான் குகன். ராமனோ, சீதாபஹரணத்தால் நேர்ந்த துயரில் மூழ்கிக் கிடக்கிறான். இலங்கை மீது படையெடுத்துப் போர் நடத்துகிறான். இதையெல்லாம் அறிய ஏது இல்லை குகனுக்கு. அதனால் உடல் மெலிகிறான் உள்ளம் நைகிறான். இந்த நிலையில் குகனது வழிபடு கடவுளான முருகன் அவன் துயர் தீர்க்க விரைகிறான். வள்ளியைச் சீதையாகவும், தேவகுஞ்சரியை வட்சுமணனாகவும் மாற்றி, தானும் ராமன் உருத்தாங்கி குகனது கனவில் தோன்றி தம்பி கவலைப்படாதே குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் உண்டு. அப்போது வருகிறோம். கவலையை விடு' என்று சொல்லி மறைகிறான். குகனும் அன்று முதல் தேறி வருகிறான். இப்படி அந்தக் குகனதுதுயர் துடைத்து அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்த அந்தக் குகன்தான். குகசுவாமிமூர்த்தி - ஆனந்த நாயகமூர்த்தி என்று பெயர் பெறுகிறான்.

இப்படி ஒரு கதை. புது ராமாயணம் ஆகத்தான். இதைக் கூறுகிறது திருச்செந்தூர்த் தலபுராணம்.

சுந்தரச் சிலை இராமன்
 தோற்றமும் காட்டி, ஞானம்
முந்திய பிரமானந்த
 சித்தியும் கொடுத்து, வேத
மந்திரக் குகச் சுவாமி
 என்னவும் வாய்ந்த, பேர்
ஆனந்த நாயகன் என்று
 ஓது நாமமும் குமரன் பெற்றான்

என்பது பாட்டு.

கதை எப்படியேனும் இருக்கட்டும். இந்தக் கதைக்குப் பின்னால் அமைந்து கிடக்கிறது ஓர் அற்புதமான உண்மை. தமிழ்நாட்டின் சைவ வைஷ்ணவச் சண்டை பிரசித்தம், அப்படி இருந்தும் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அங்கீகரிப்பதிலே அவனை 'மால் அயன் தனக்கும் ஏனைவானவர் தனக்கும், யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி' என்று தொழுவதிலே, இருவருமே இணைந்து நின்றிருக்கிறார்கள். அரன் மகனே மால்மருகனாகிறான். ஆதலால் வைஷ்ணவரும், தங்கள் மாப்பிள்ளைக்கு உரிய மரியாதையைக் கொடுத்து கௌரவித்து விடுகிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து வைத்ததோடு இன்னும் சில விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுக் கலைஞர்கள். முருகன் தனியே கோவணாண்டியாக இருந்தாலும் சரி, ஞான பண்டிதனாக இருந்தாலும் சரி, இல்லை இரு மனைவியரை இரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் குமரனாக இருந்தாலும் சரி, அவன் திருக்கரத்திலே வேலை வைக்க மறப்பதில்லை. 'ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்து நிற்கும்' சமர்த்தைப் பாடாத கவிஞன் இல்லை. இதைப் போலவே திருமாலின் அவதாரமான ராமனையும் அவன் ஏந்தியுள்ள கோதண்டத்தையும் பிரிப்பதே இல்லை. ‘விற்பெருந்தடந்தோள் வீரன்’ அவன். இப்படி இரண்டு மூர்த்திகள் தமிழ்நாட்டில் வேலேந்திய பெருமான் ஒருவன். வில்லேந்திய வீரன் ஒருவன். கலைஞன் ஒருவன் எண்ணியிருக்கிறான். இப்படி இருவரும் தனித்தனியே நிற்பானேன். இவர்களை இவர்களது பக்தர்களை எல்லாம் இணைக்க முடியாதா. வில்லையும் வேலையும் சேர்த்து இணைப்பதன் மூலமாக என்று இந்த நிலையிலே வேல் ஏந்திய குமரனது கையிலே வில்லையும் கொடுத்து, வில்லேந்திய வேலனை உருவாக்கியிருக்கிறான். தனுஷ் சுப்பிரமணியன் என்று பாராட்டி இருக்கிறான். இப்படி வேலும் வில்லும் ஏந்திய மூர்த்திகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பல உண்டு.

அவற்றில் பிரசித்தி பெற்றவை திருவையாற்றிலே, ஐயாறப்பன் கோவிலிலே இருக்கும் தனுஷ் சுப்பிரமணியன் ஒருவன்; பழைய காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த சாயாவனம் என்னும் சாய்க்காட்டிலே, சாயவனேஸ்வரரும், குயிலினும் நன்மொழி அம்மையும் இருக்கும் கோயிலிலே இருப்பவன் மற்றொருவன்; ஐயாறப்பன் கோயிலிலே கல்லுருவிலே இருப்பவனே சாய்க்காட்டிலே செப்புருவிலே இருக்கிறான். சாய்க்காட்டில் இருக்கும் மூர்த்தி நிரம்ப அழகு பொருந்தியவன். மூன்றடி உயரம், அதற்கேற்ற ஆகிருதி. இத்துடன் வேலையும் வில்லையும் ஏந்தி நிற்கும் தோற்றப் பொலிவுடன் விளங்குகிறான். வில்லையும் வேலையும் சேர்த்துத் தாங்க, இடையினை வளைத்து தலையினைச் சாய்த்து நிற்கும் நிலை, கலை உரைக்கும் கற்பனையை எல்லாம் கடந்திருக்கின்றது. தலையிலே நீண்டு உயர்ந்த கிரீடம், கழுத்தில் அணிகொள் முத்தாரம். தோளிலே புரளும் வாகுவலயம், காலிலே கிடக்கும் கழல், எல்லாம் அவன்றன் காம்பீரத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த வில்லேந்திய வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும், பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளிவந்தான் என்றும் கூறுகின்றனர் மக்கள். ஆம். சூரசம்ஹாரம் முடித்த பின் இவன் கடலுள் பாய்ந்து கிட்டத்தட்ட இருநூறு மைல் நீந்தி, இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே கரை ஏறி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவன் எப்படி இந்தச் சாய்க்காட்டில் வந்து நின்று கொண்டிருக்க முடியும்?


வீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல், செவ்வேள், திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.