இங்கிலாந்தில் சில மாதங்கள்/கார்கள் ஹார்ன் செய்வது இல்லை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கார்கள் ஹார்ன் செய்வது இல்லை

அந்த நிலைமை இங்குப் பார்க்கவே முடியாது. ஒலி பெருக்கினால் வழி கிடைக்கும் என்று லாரிகளில் எழுதியிருக்கிறார்கள். ‘இன்டி.கேட்டர்கள்’ கார் எப்படித் திரும்புகிறது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும். பொதுவாகப் பெரிய பாதைகளில் போக ஒரு வழி; வர ஒரு வழி; எதிர் எதிரே மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. அதாவது இடது பக்கம் முழுவதும் ஒரு பாதி போகும் வண்டிகள்; வலது பக்கம் முழுவதும் எதிர் வண்டிகள். அதனால் கார்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. இங்கிலாந்தில் இடது பக்கம் போகின்றன. பிரான்சில் வலது பக்கம் போகின்றன. இங்கிலாந்து முறையைத்தான் நாம் பின் பற்றுகிறோம். இங்கிலாந்தில் இன்னும் மைல் கல் தான் கணக்கில் இருக்கின்றது. பிரான்சில் கிலோ மீட்டர்கள் கணக்கு. நாம் பழைய முறையை மாற்றி கிலோ மீட்டர் கணக்குக்கு வந்திருக்கிறோம், ரூபாய்க்கு 16 அணா பழைய கணக்கு; இப்பொழுது நூறு பைசா; நாம் அளவைகளை இப்பொழுது மாற்றிக் கொண்டோம்.

இடது பக்கம் போகும் வழியில் மூன்று பாதைகளாக இயங்குகின்றனர். மிக ஓரமாகப் போகிற வண்டிகள் மெதுவாகப் போகும் இயல்பின; அதனைக் கடக்க அடுத்த பாதையில் செல்லலாம். இடையில் நடுத்தரமான வேகம்;. இரண்டையும் கடக்க வலது ஓரம். வேகமாகச் செல்லலாம். இந்த மூன்று பாதைகள் தெளிவாக இயங்குவதால் மோதல்கள் நிகழ்வது இல்லை.

விளக்கு ஒளிகள் காட்டும் அறிகுறிகள் கொண்டு கார்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு வழி விட்டுச் செல்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ‘ஹார்ன்’ செய்வது இல்லை. வண்டிகளில் ஹார்ன்கள் பொருத்தப்பட்டு இருக்கும். மிகவும் அவசரமான நிலையில் அபாயம் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் மட்டும் ஒலி பெருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

மற்றொன்று காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர் விமானத்தில் செல்வது போல் இடுப்பைச் சுற்றி பில்டுகள் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தைகளை எந்தக் காரணைத்தைக் கொண்டும் முன் சீட்டில் உட்காரவைக்கக் கூடாது. டாக்சி ஓட்டிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அவர்களுக்கு பில்டுகள் தேவை இல்லை.

இரவில் நீண்ட வழிகளைக் கார்கள் கடந்து செல்கின்றன, வழியில் யாராவது மடக்குவார்களே என்ற அச்சமே இல்லை; அதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை.

வழியில் வண்டி. பழுது ஆகிவிட்டால் என்ன செய்வது? வழிப்பாதையில் ஆங்காங்கே இடைவெளி விட்டுத் தொலைபேசிக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து கார் பழுதுபார்க்கும் கம்பெனிக்கு போன் செய்தால் அவர்கள் வந்து பழுது பார்த்துச் சரி செய்து உதவுகிறார்கள். இவர்களை அவர்கள் கார்களில் ஏற்றி அனுப்பி விட்டு நிதானமாக வண்டியைப் பழுது பார்த்துப் பின் அவர்களிடம் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு என்று ஒரு கட்டணம் செலுத்தி அந்த நிறுவனங்களில் உறுப்பினர் ஆதல் வேண்டும். அதனால் வழியில் கார் கெட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயமே அவர்களுக்கு உண்டாவது இல்லை. வழி நெடுக ஒளி விளக்குகள் வழி காட்டுகின்றன. *எந்த நேரத்திலும் கூப்பிட்ட குரலுக்குப் போலீசு உதவி வந்து சேர்ந்துவிடும்.

பெட்ரோல் பங்குகளில் இங்கு அதன் ஊழியர்கள் வந்து பெட்ரோல் போட்டு உதவுகிறார்கள். அந்த நிலை அங்கு இல்லை. அவர்களே அந்தக் குழாயைக் காரில் பொருத்தித் தேவையான அளவிற்குப் போட்டுக்கொள்கிறார்கள். கடைக்காரர் உள்ளிருந்தே கணக்குத் தெரிந்து கொள்ளக் கருவிகள் இருக்கின்றன, இருந்த இடத்தில் இருந்தே ‘பில்’ தொகை பெற்றுக்கொள்கிறார்கள்.

கார்கள் கழுவப்பட வேண்டுமானால் அதற்கு உரிய இடத்தில் நின்றால் போதும். நாம் உள்ளேயே இருக்கலாம். அங்கு உள்ள குழாய்கள் நீரை வாரி இறைத்துச் சுத்தம் செய்து விடுகின்றன. இது ஒரு வசதி; பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் இருக்கின்றன.

கார்களுக்கு டயர்களுக்கு அடிக்கடி காற்று அடிப்பதே. இல்லை, நல்ல வலுவான டயர்கள்; ஒழுங்கான சாலைகள்; டயர்கள் தேய்வதும் இல்லை; காற்று இறங்குவதும் இல்லை.