இங்கிலாந்தில் சில மாதங்கள்/தனிப் பண்பாடு

விக்கிமூலம் இலிருந்து

தனிப் பண்பாடு

‘பூவே நீ பூச்சூடவா’ இதுவும் நம் தமிழ் நாட்டுக் கலாச்சாரம். பூவையரைப் பூங்கொடிகள் என அழைப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். கொடிகள் போன்று தவழும் இடையும் மென்மையும் நம் மகளிரிடம் எதிர் பார்க்கப்படுகின்றன; கரிய கூந்தலில் பூக்களைத் தாங்கி முடிப்பது அவர்களின் தனியழகு; கோயில்களுக்குச் செல்லும் நம் பாவையர் பட்டு உடுத்தி நெற்றியில் சிவப்பு இட்டுத் தலையில் பூச்சூடிச் செல்வதும் மறக்க முடியாத காட்சிகள். நம்மலர் தலையில் பூச்சூடிச் செல்லும்போது அவர்கள் அதை வியப்பாகப் பார்க்கின்றனர். பார்க்கட்டுமே; நமக்கு என்று சில அழகுகள் போற்றப்படுகின்றன, அவர்கள் இதழுக்குச் சிவப்பு ஊட்டுகின்றனர். நம்மவர்கள் நெற்றிக்குச் சிவப்பு தீட்டுகின்றனர். நிறங்கள் வேண்டும்; அந்த நிறத்தை நம்மவர் தலையில் பூக்களில் காட்டுகின்றனர். மணமும் ஊட்டுகின்றனர். செண்டுகள் அவர்களுக்குத் தரும் மணத்தை நம் மல்லிகைப்பூக்கள் கூந்தலுக்குத் தருகின்றன.

இதைப் பற்றிய ஒரு பிரச்சனையே சங்கப் பாடல் ஒன்று எழுப்பியிருக்கிறது. அதை ஒட்டித் திருவிளையாடற் புராணத்திலும் ஒரு வாதம் நடக்கிறது.

இறைவனே நக்கீரரைப் பார்த்துக் கேட்கின்றார்:

‘பார்வதிக்குக் கூந்தலில் மணம் இயற்கையா செயற்கையா?’ அவருக்கே ஒரு மயக்கம்.

“பழம்பாட்டின் கருத்து இது : தலைவியின் கூந்தலின் மணத்தை வண்டே நீ கண்டு இருக்கிறாய். நீ பல பூக்களை நாடி அதன் மனத்தை நுகர்ந்து இருக்கிருய். அந்த மணத்தோடு இதனை ஒப்பிட்டுச் சொல்; இந்த நறுமணத்தைவிட அது சிறந்ததா?” என்று தலைவன் ஒருவன் கேட்கிறான்.

அது அவன் கவிதையில் தோன்றும் நயம். அதை ஒட்டியே இந்த வாதம் எழும்பி உள்ளது.

இப்படி எந்தத் தலைவனும் ஆங்கிலப் பெண்ணின் வெட்டிய கூந்தலை வைத்துக் கவிதை புனைய முடியாது. அவள் கூந்தலும் சித்திரிக்கப்பட்ட கூந்தல்தான்; அதில் பலவகை நிறங்கள் தீட்டப்படுகின்றன. வாரி முடிக்கத் தேவை இல்லை; வாரிவிட அவை அமைந்துள்ளன. சுருள்கள் அக்கூந்தலுக்குத் தனியழகு தருகின்றன. ஏதோ இந்த நினைவு எழுந்தது; எழுதிவிட்டேன். தொடர்பு இல்லையே என்று எண்ணவேண்டாம்; நான் திட்டமிட்டுக் குறிப்பு வைத்துக்கொண்டு இதை எழுதவில்லை என்பதற்கு இது ஒரு அடையாளம்.