இங்கிலாந்தில் சில மாதங்கள்/திட்டமிட்ட வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

திட்டமிட்ட வாழ்க்கை

‘குடும்ப நலத் திட்டங்கள் என்பது ஒரு தேசத்தின் அடிப்படையாகும். இங்கு சந்துக்கு ஒரு விளம்பரம், இரண்டுக்கு மேல் வேண்டாம் என்று வீதி முடுக்குகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சின்னஞ் சிறுசுகள் அர்த்தமில்லாத இந்த வாசகங்களைப் பால பாடமாகப் பயிலும் விளம்பரங்கள் பெருகிவிட்டன.

இப்படி ஒரு விளம்பரத்தை அங்குக் காண முடியாது. இந்த விளம்பரம் தேவைதானா? ஏன் இந்தப் பொறுப்பு உணர்ச்சி நமக்கு உண்டாகவில்லை. செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் என்று கடவுள் மீது பாரம் போட்டுக் கடமை செய்யும் நாடு இது, இங்கே பயம் அதிகம்; பிறக்கும் குழந்தைகளுக்கு உறுதியான பாதுகாப்பு இல்லை. அதனால் இளமை இருக்கும்போதே இரண்டு மூன்று பெற்றுப்போட்டு விட்டால் நல்லது என்ற நினைப்பு எழுந்துவிடுகிறது, பெண் என்றால் அவள் தாயாக வேண்டும். அதுவே அவள் வாழ்வின் பயன் என்ற நம்பிக்கையில் ஊறி வந்துவிட்டோம். அதையும் கடந்து அவள் வாழ முடியும் என்ற நிலைமை இங்கு உருவாகவில்லை. அங்கே அவர்கள் எப்பொழுது குழந்தை வேண்டும் எத்தனை வேண்டும் என்று திட்டமிட்டே தாம்பத்திய வாழ்க்கையை நடத்துகிறார்கள், குடும்பக்கட்டுப்பாடு முறை அவர்கள் வாழ்வின் நடைமுறைகளில் ஊறிவிட்டது. இங்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ‘ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன்’ என்ற சித்தாந்தம் தலையெடுக்கிறது. அடுத்தது ஆண் பிறக்கும் என்ற நம்பிக்கை இனவிருத்திக்குத் துணை செய்கிறது. அங்கு ஆண் பெண் இருவரும் சமம். பெண் பிறந்துவிட்டால் வருந்தும் நிலை இல்லை.