இங்கிலாந்தில் சில மாதங்கள்/பொழுது போக்கு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொழுது போக்கு

குழந்தைகளுக்கு ஒவ்வொரு நகரிலும் ‘மகிழ்வு அரங்கு’ (amusement Park) பொதுவாக நடத்துகிறார்கள். பெரியவர்களும் அங்குச் செல்கிறார்கள். உள்ளே சிறுவர்கள் ரயில் தொடரில் ஏறி அமர்கிறார்கள். நம் ஊர் பொருட்காட்சிகளில் உள்ளவை போன்றவை அவை, அதில் ஏறிச் சுற்றி வர இங்குபோல்தான் கட்டணம் செலுத்த வேண்டும்.

‘சிறு கார்கள்’ அதில் ஏறி அவர்களே அவற்றை ஓட்டுகிறார்கள். அவை மற்ற கார்களோடு மோதுகின்றன. மோதாமல் ஓட்டிச் செல்லவேண்டும். நிறைய காசு போட்டுச் சூதாடும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. விதவிதமான விளையாட்டுக்கள் அதில் காசு இட்டு இழப்பது ஒரு பொழுதுபோக்காக அமைகிறது. அங்கே பல சிறுவர்களைக் காணமுடிகிறது. பெரியோர்களும் அச் சிறுவர்களோடு வந்து அவர்கள் விளையாட்டில் பங்கு கொள்கின்றனர்.

வெய்யில் வந்தால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி; குதிரைகளில் பெண்கள் ஏறிப் பயிற்சி பெறச் செல்வது பார்க்க முடிகிறது. கடலில் ஓடங்களைச் செலுத்தி மசிழ்வு கொள்கின்றனர். மணற்பாங்கில் சூரிய ஒளி படும்படி சாய்ந்து ஓய்வு கொள்வதில் எல்லையில்லா மகிழ்வு காண்கின்றனர்.

கார்களில் குடும்பம் குடும்பமாக இந்தக் கடற்கரை ஓரங்களில் இன்பப் பொழுது போக்கை அடைய வந்து குழுமுகின்றனர். அவை விடுமுறை நாட்களாயின் கூட்டம் மிகுதியாகின்றது.