இங்கிலாந்தில் சில மாதங்கள்/முதியோரின் அவல நிலை

விக்கிமூலம் இலிருந்து

முதியோரின் அவல நிலை

‘பாலும் தேனும் பாயும் நாடு’ அது என்று பார்த்த அளவில் கூற முடிந்தது; மனிதர்கள் சுதந்திரப் பிரியர்கள்; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வயது வந்ததும் வாலிப முறுக்கு அது செய்யும் கிறுக்கின் பயனாக ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அவர்கள் எதையும் தொடர்கதையாக்குவதில்லை. பேரன் வேண்டும் என்பதற்காக மகன் செய்யும் தவச் செயல் அல்ல அவன் பெறும் சின்னஞ் சிறுசுகள், பாட்டி கற்ற கதைகள், வாழ்ந்த வரலாறுகள், மடியில் அமரும் பேரன் பேர்த்திக்குச் சொல்லும் வாய்ப்புகள் அங்கு இல்லை. இங்கு அவ்வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை ஒரு தொடர் சங்கிலி.

‘எல்லாம் பொய்யாய்க் கனவாய் மெல்ல மெல்லப் போனதுவே’ என்பது போலக் கடந்த கால வாழ்வின் அடிச்சுவடி.களைத் திரும்பிப் பார்க்க முடியாது; வயது முதுமையில் முதியவர்தான் பெற்ற மகனாயிற்றே மகளாயிற்றே என்று அதிக உரிமை கொண்டாட முடியாது. இவர் செய்த தவறுகளை எல்லாம் மகன் செய்வான்; அவனும் அப்பாவின் ஸ்தானத்தை அடைகிறான்; தான் அப்பா ஆனபிறகு மற்றொருவரை அவள் அப்பா என்று கூறுவதில் பொருள் இல்லை. அந்த உறவு நாளடைவில் தேய்ந்து விடுகிறது. அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விடுகிறார்கள்.

விருந்தினர் வீட்டுக்குச் செல்வதுபோல இம் முதியவர் இல்லங்களுக்கு இளைய தலைமுறையினர் அவ்வப்பொழுது வந்து போவது உண்டு; பேரன் பேர்த்திகள் தம் பெயரைச் சொல்லித் தாம் படிக்கும் வகுப்புகளைப் பேசிப் புதிதாக வாங்கிய ஆடைகளைக் காட்டி மழலையுரை பேசி மகிழ்விப்பது, உண்டு; அதுவும் காலம் செல்லச் செல்ல அருகிய நிகழ்ச்சியாக ஆதலும் உண்டு.

ஒரு கடை மையம் (shopping centre); அங்கே ஒரு முதியவளைப் பார்க்கிறேன். அந்த வாரத்திற்கு வேண்டிய வீட்டுப் பொருள்கள் வாங்கிக் கொள்கிறாள்; குடிப்பதற்கு வேண்டிய வைன், விஸ்கி, பீர் பாட்டில்கள் வாங்கி வைத்துக் கொள்கிறாள். இவள் தனியே இவ்வாறு செயல்படுகிறாள்.

“யார் இவள்? யாருமே இவளுக்கு உதவிக்கு இல்லையா?”

“இருப்பார்கள்; இருக்கத் தேவை இல்லை; அவர்கள் தனியே இருப்பார்கள் . தமக்கு வேண்டியவற்றைத் தாமே வாங்கிக் கொள்வார்கள”

“வீட்டில் தனியாகவா இருப்பார்கள்?”

“வேறு என்ன செய்ய முடியும்”

“கணவனும் மனைவியுமாக வாழ்கிறவர் கொடுத்து வைத்தவர்கள், விதவைகள் ஆன பிறகு தனிமைப்படுத்தப் படுகின்றனர்." "மறு மணம்?”

“துணைக்காகச் செய்து கொள்வதும் உண்டு” என்று பதில் தரப்பட்டது.

“பரவாயில்லை”

இது வேடிக்கைக்காகத் தரப்பட்ட பதில். தனிமையிலேயே அவர்கள் காலம் கழிக்க வேண்டியதுதான்.

“பேச்சுத் துண”

“சமுதாய சேவகிகள் அவர்கள் வீடுகளுக்கு அவ்வப்பொழுது போய் வருவார்கள். அவர்கள் பேசுவதை அக் கரையோடு கேட்பார்கள்”

அந்தத் தனிமையை நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது; பயங்கரமாகவும் இருக்கிறது.

ஒரு அரசு மருத்துவமனை. அதில் ஒரு பகுதி முதிய அவர்களின் இல்லமாகவே விளங்குகிறது, தொண் னூறுக்கு மேற்பட்ட பழுத்த பழங்கள் அங்கே நலிந்து பராமரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு இந்தச் சுற்றுப்புற உலகப் பிரமையே இருப்பது இல்லை.

அவ்வப்பொழுது முடிந்தவரை அவர்களைத் தொலைக்காட்சி முன் உட்கார வைக்க முடிகிறது. அவர்களை அங்கே பணி செய்யும் நர்சுகள் கவனித்துக் கொள்கிறார்கள், அவர்களைத் தூக்கிச் சென்று தொட்டிலில் இட்டுக் குளிப்பாட்டுகின்றனர். வயது ஆனவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்கள் தனிமையால் ஒதுக்கப்படுவதால் வாடுகின்றனர்.

அரசு அவர்களைக் கவனித்துக்கொள்கிறது. எல்லா வசதிகளும் தரப்படுகின்றன. இங்கே பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்துவிடுகிறது, ‘உளவியல்’ பிரச்சனையை மட்டும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அங்கே நல்ல மருத்துவமும், குளிர் சூழலும், உணவும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்க உதவியும் அத்துணையும் உண்டு. ஆனால் தம் மக்களோடு பேரப் பிள்ளைகளோடு இருந்து இளமையை அனுபவிக்கும் வாய்ப்புகள் அங்கு இல்லை . முதியவர்கள் ஆயுள் நீட்டிப்போடு வாழ்கின்றனர். எண்பது, தொண்ணூறு என்பது அதிசயமல்ல; அறுபத்தைந்துக்கும் மேல் தான் ஓய்வு பெறுகின்றனர். அதற்குப் பிறகு இருபது ஆண்டுகள் சராசரி வாழ முடிகிறது; அதற்கு மேலேயும் எட்டிப் பிடிக்கிறார்கள்!.

நம் நாட்டில் முதியவர்கள் மற்றவர்க்குச் சுமையாக இல்லாமல் தம் கதையைச் சீக்கிரம் முடித்துக் கொள்கின்றனர். ஏதாவது எதிர்பாராத நோய்கள் வந்து ஆயுள் நீட்டிப்பை அதிகப்படுத்திக் கொள்ளாமல் அவர்களை அடக்கி வைக்கிறது; இங்கே, இப்பொழுது தான் சராசரி வயது கொஞ்சம் உயர்ந்து கொண்டு வருகிறது. முதியவர்களுக்குத் தனி இல்லங்கள் அமைக்கப்படுவது இல்லை. ஏன் எனில் முதியவர்களின் இல்லத்தில்தான் அவர்கள் பிள்ளைகள் பேரன் பேர்த்தியர் தங்கித் தொடர்ந்து இருக்கிறார்கள்; அறுந்து கொண்டு அறுத்துக் கொண்டு போகும் உறவுகள் இங்கு இருப்பது இல்லை.

கூட்டுக் குடும்ப அமைப்புகள் பெரியவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது. உத்தியோகம் காரணமாகப் பிள்ளைகளில் ஒரு சிலர் பிரிவை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குடித்தனம் செய்தாலும் ஒன்று இரண்டு வீட்டோடு ஒட்டிக் கொள்வதால் முதியவர்கள் பிரச்சனை இங்கு விசுவரூபம் எடுப்பதில்லை.

பெற்றோர்களின் பாதுகாப்பிலிருந்து இளைஞர்கள் ஆரம்பத்திலேயே விடுபடுகின்றனர். அதேபோல் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு உள்ளனர்.

இங்கும் ஒரு சில குடும்பங்களில் முதுமையின் தவிப்பு தனிமைத் தாக்கம் இருக்கச் செய்கிறது. உறவுப் பிள்ளைகள் வர போக இருப்பதால் அத்துன்பம் அதிகம் தெரிவதில்லை, பணம் இருந்தால் அதை நாடி மற்றவர்கள் சூழ் வதால் அதிக துன்பம் இருப்பது இல்லை. அது இல்லை என்றால் அவர்கள் அவர்களுக்கே இங்கும் தனிமையாகிவிடுவதிலிருந்து தப்ப முடியாது.

என்றாலும் அங்கு உள்ளது போல அந்தச் சூழ்நிலைகள் அண்மையில் உருவாவதற்கு வாய்ப்பு இல்லை; வராது; வந்தால் அதைத் தடுக்க முடியாது.

முடிவுரை

அங்கே நான் தங்கியது ஐந்து மாதங்கள். வசதியும் மனம் விரும்பும் சூழ்நிலையும் எல்லாம் இருக்கிறது . விருமபி இருந்தால் இன்னும் சில மாதங்கள் இருந்திருக்கலாம். அங்கே தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் வீடியோக்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் ஐம்பது தமிழ்ப் படங்களைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன், முந்தானை முடிச்சு பலமுறை பார்த்தேன். மண்வாசனை என்னைக் கவர்ந்த படமாக இருந்தது. ரேவதியின் நடிப்பைவிட தோற்றம் என்னைக் கவர்ந்தது; குழைந்து பேசும் இளமை இன்னும் மறக்க முடியலல்லை. ஒரு சிலர் முதற்படத்தில் நம் மனத்தில் பதிந்துவிடுகின்றனர் . தொடர்ந்து அவர்கள் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது அந்த உருவம் மங்கிவிடுகிறது. முந்தானை முடிச்சில் ஊர்வசியின் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். அடுத்து வரும் நடிப்புகளில் உருவங்கள் நிற்கவில்லை. சிகப்பு ரோஜாவில் ஸ்ரீதேவி மறக்கமுடியாத பாத்திரம். அதைவிட பதினாறு வயது கவர்ச்சி மிக்க பாத்திரம். மெளலியின் ‘புல்லாங்குழல் ஊதுகிறது’ மிகவும் பிரமாதமாக படம் என்று மதிப்பிட முடிந்தது. மென்மையான நகைச்சுவை; அந்த ஆந்திரப் பெண், அவளின் அருமையான நடிப்பு, மெளலியின் அங்கதம் கலந்த நகைச்சுவை இவை எல்லாம் இன்னும் நான் மறக்க முடியவில்லை.

நான் அங்கு இழந்தவை பல; தமிழ்ப் பத்திரிகைகள்; தமிழ்ப் பேச்சு, தமிழ்நாட்டு அரசியல், என்னால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது. ‘தமிழ்நாடு நான் பிறந்த மண்; உலகத்தில் எந்தப்பகுதி எப்படி இருந்தாலும் நான் தமிழ்க் நாட்டில் வாழ்ந்துவிட்டேன். வாழ்கிறேன்; இங்கே வாழ்ந்து முடிப்பேன்.