இங்கிலாந்தில் சில மாதங்கள்/விவாக ரத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விவாக ரத்து

விவாக ரத்து செய்துகொள்ள உரிமை, வாய்ப்பு, அங்கீகாரம் இருக்கிறது என்பதாலேயே அது சகஜம் என்று கூறமுடியாது . நம் பண்பாடு பாரம்பரியம் வாழ்க்கை முறை சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுதல் மன நிறைவுகள் இவை விவாக ரத்து என்பதை விரும்பி ஏற்பது இல்லை. சில சமயம் அவசரப்பட்டுச் செய்யும் முடிவுகள் காலத்துக்கும் வேதனைகள் தருகின்றன. இங்கே பொதுவாக அதற்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாதபோது அதனைத் துணிந்து ஏற்பது என்பதற்கு ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும். மனைவி விபசாரம் செய்கிறாள் என்பது அறிந்து இனி அவளோடு வாழ முடியாது என்ற மனோ நிலையில் பொதுவாக விவாக ரத்து கோரப் படுகிறது.

கருத்து வேறுபாடுகள்; ஒருவரை ஒருவர் பிடிக்காமை; அழகு குறைவு; கொடுமைப்படுத்துதல்; பிறர் உரிமை யைத் தடுத்தல்; மதிக்காத தன்மை இவற்றின் காரணமாகத்தான் இந்த விவாகரத்துகள் ஏற்படுகின்றன.

அங்கே ‘அழகுக் குறைவு’ என்ற காரணம் ஏற்படுவதற்கு இல்லை; திடீர் என்று ஒரு பேரழகனைக் கண்டு மறு விவாகம் செய்ய நினைக்கிறாள் என்றும் கூறமுடியாது . இதற்கெல்லாம் காரணங்களை ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது, இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற நிலைக்குப் போகும்போதே இந்த விவாக ரத்து கோரப்படுகிறது.

நம் நாட்டில் சினிமா நடிகைகள் நீடித்த மணவாழ்வு சில சமயம் நடத்த முடியாமல் போகிறது. அவள் சாதாரணமாகப் பெண் என்பதை விட ‘நடிகை’ என்று ஆகும் போது அவளுடைய முழுமை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. கணவன் நடிகனாக இருந்தால் அவன் புதுமை நாடி சலிப்பின் காரணமாக அவளைக் கைகழுவிவிடுகிறான்; குடும்ப நிர்ப்பந்தத்தின் காரண மாகவும் அவன் சராசரி மனிதனாகிவிடுகிறான்.

நடிக்கும்போது அவள் மற்றவர்களிடம் சிரித்துத்தான் ஆக வேண்டும்; உடம்பு அவளுக்கு உரிமை உடைமை என்று கூறமுடியாது. அவள் பாத்திரமாக மாறும்போது அவள் எப்படி அவளாக இருக்க முடியும். கதையின் இயக்கம் அவளிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. வாய்ப்புகள் ஏற்படும்போது வசதிகள் இருக்கும்போது தடுப்புகள் இல்லை என்று ஆகும்போது ‘இப்படியும் வாழலாம்’ என்று நினைக்கவும் செயல்படவும் முடியும்போது தன்னை ஒருவனிடம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சம்பிரதாயம், கட்டுப்பாடு அவளை விட்டு விலகுவது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்று; அவள் விவாகரத்து செய்து கொண்டால் கவலை இல்லை; மற்றொருவன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவள் மேலே பறந்து கொண்டிருக்கும்போது மண்ணில் கால் ஊன்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதும் இல்லை, தேவையும் இல்லை. அவர்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் விமரிசிக்கப்படுகின்றன. எனவே உரிமையும், வசதியும், அங்கீகாரமும், வாய்ப்பும் இருக்கும்போது விவாக ரத்து நடைமுறைப் படுத்துவது எங்கும் உள்ளது. இங்கே நடிகையர் பெறும் தனி உரிமையை, வாய்ப்பை, நடைமுறையை அங்கே ஒவ்வொருவரும் பெற்றுள்ளனர். நடிகையர் ஒரு சிலர் போக்கைக்கொண்டு எல்லா நடிகையரும் விவாக ரத்து செய்து கொள்கின்றனர் என்று கூற முடியுமா. அதேபோல்தான் அங்கு.

இங்கே விதிவிலக்குகள் அங்கு நியதியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மண்ணெண்ணெயைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை; மற்றவர் காரணமாக மனம் வெறுத்துத் தம்மை மாய்த்துக்கொள்வதில்லை.