இங்கிலாந்தில் சில மாதங்கள்/ஹைட் பார்க்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹைட் பார்க்

லண்டனில் ‘ஹைட் பார்க்’ என்றும், அதை அடுத்து கிரீன் பார்க் என்றும் இரண்டு பூங்காக்கள் இருக்கின்றன, நெருக்கடி மிக்க நகரத்தைக் கவின் மிகு நகரமாக அமைத்திருப்பது பாராட்டத்தக்கதாகும். பழைய டெல்லி, பழைய வண்ணாரப்பேட்டை இவற்றைப் பார்க்கும்போது நகரங்கள் மக்கள் மட்டும் வாழும் இடங்கள்; தெருக்களுக்கு இடம் கிடையாது என்று பிரகடனம் செய்வது போல சந்து பொந்துகளும் பழங் கட்டிடங்களும் அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அந்த மாதிரி நிலைகள் இங்கு இல்லை, மரஞ்செடிகளும் பூங்காக்களும் மாந்தரிடையே தலைநிமிர்ந்து வாழும் இடங்களாக அந்த மாநகரங்கள் விளங்குகின்றன. இந்த நிலை பாரிஸ் ஜெர்மனி எந்தத் தேசத்து நகரிலும் காணலாம். லண்டன் மா நரில் உள்ள ஹைட் பார்க் இரண்டு அல்லது மூன்று மைல் நீள அகலம் இருக்கும் என்று நினைக்கிறேன். பூங்காவில் புல் தரைகள் , விளையாடுமிடங்கள் மிகுதி; அங்கங்கே ஓய்வு கொள்ளச் சாய்வு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ‘பிக்னிக்’ வருபவர் குடும்பம் குடும்பமாக வந்து ஆர அமர இருந்து உண்டு திரிந்து சிரித்து விளையாடி இன்பமாகப் பொழுது போக்குகின்றனர். இது அதிசயமல்ல; அந்தப் பார்க்கின் கீழே தரை மட்டத்தில் கீழ் கார்கள் நிற்கச் சுரங்க வழிகள் அமைத்திருப்பதுதான் வியப்பாக உள்ளது. இது எவ்வளவு பெரிய சாதனை; மைல் கணக்கில் கீழே சிமெண்டு கட்டிடங்கள், வெளிச்ச அமைப்புகள் கார்கள் நிற்க இடம் செய்யப்பட்டு இருக்கிறது. நகரத்தின் சுற்றுப்புற அங்காடிகள், ஆபீசுகள் அவர்கள் கட்டணம் செலுத்திக் கார்களை அங்கு நிறுத்தி வைக்கின்றனர். விண்ணைப் பிளந்து விமானங்கள் செல்வது வியப்பல்ல. மண்ணைக் குடைந்து ரயில்கள் செல்வதும், கார்கள் நிற்கச் சுரங்க வழிகள் அமைத்திருப்பதும் வியப்பாக உள்ளது. இருநூறு ஆண்டுகளாக அவை மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. மேலே இருக்கிற மரம் செடிகள் கட்டிடங்கள் அப்படியே இருக்கக் கீழே சுரங்கங்கள் அமைத்து உள்ளே குடைந்து கார் பார்க் செய்யத் தூண்கள் மீது கூரைகள் வேயப்பட்ட பரப்பு இடங்களை அமைத்து இருக்கிறார்களே அதே போன்ற நிலை இங்கு உண்டாக்க முடியுமா? சென்னை மவுண்ட்ரோடு அரசு இல்லம் இராசாசி மண்டபம் பல்கலைக் கழகக் கட்டிடங்கள் அப்படியே மேலே இருக்க அவற்றின் கீழ்ப் பூமியில் (under ground) பாதளச் சுரங்க வழிகள் அமைத்துக் கார்கள் நிற்க வழி செய்ய முடியுமா?

சென்னைக் கடற்கரையில் ரயில்பாதைக்குக் கீழே ஒரு பாலம் அமைத்திருக்கிறார்கள். அதில் அவ்வப்பொழுது நீர் ஊற்று எடுத்துப் பாதையை நிரப்பிவிடுகிறது. சதா பழுது பார்ப்பது என்பது நடைமுறை அன்றாட வேலையாக இங்கு அமைந்து விடுகிறது. அங்கு எப்படி இதைச் சாதித்து இருக்கிறார்கள்.

பாதாளத்தில் ரயில் விடுதல் மற்றொரு பெரிய சாதனை; லண்டன் மா நகர் முழுவதும் கீழே ரயில் பாதைகள் மிகப் பாதாளத்தில் அமைக்கப்பட்டுக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. நகரங்களின் பல முக்கியமான இடங்களில் உள்ளிருந்து மக்கள் வெளிக்கிளம்பி தலை காட்டுகின்றனர், போக்குவரத்து இடையூறுகள் இன்றி விரைவில் பயணம் செய்ய இப் பாதாள ரயில்கள் பயன்படுகின்றன; பாரிஸ் மா நகரிலும் இந்தப் பாதாள ரயில் பாதை அமைப்பு இடம் பெற்றுள்ளது. இவை மிகப் பெரிய சாதனைகள் என்றுதான் கூறமுடியும். எத்தனை ஆண்டுகள் எவ்வளவு இன்ஜியர்கள் எவ்வளவு தொழிலாளர்கள் எந்திரக் கருவிகள் இவற்றைச் செப்ப னிடப் பயன்பட்டன? மிகப் பழைய நகரம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.