இந்தியப் பெருங்கடல்/கடல் ஆராய்ச்சியின் நிலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. கடல் ஆராய்ச்சியின் நிலை

முழு அளவுக்கு இந்தியக் கடலை ஆராயாவிட்டாலும் ஓரளவுக்கு அதை இந்தியா ஆராய்ந்துள்ளது. கடல் நூல் அறிவைப் பெருக்கியுள்ளது.

ஆந்திரப் பல்கலைக் கழகம்

கடல் ஆராய்ச்சியைப் பல கிளைகளில் மேற்கொண்ட முதல் நிலையம் ஆந்திரப் பல்கலைக் கழகமாகும். இந்தியக் கடற்படை அளித்த கப்பல்களைக் கொண்டும், அமெரிக்கக் கடல் நூல் அறிஞர் லா பாண்ட் தலைமையிலும், பல்கலைக்கழக அறிஞர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர்.

பேராசிரியர் லா பாண்ட் முதலில் 1952-53 இல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு தங்கினர். மீண்டும் 1955-56இல் புல்பிரைட் திட்டத்தின் ஆதரவில் ஆந்திரப் பல்கலைக்கழகத்திற்கு வரலானர். வந்ததின் நோக்கம் இதுவே: வங்காள விரிகுடாவில் முறையாக ஆராய்ச்சி செய்ய; இயற்கைக் கடல் நூல், கடல் நில அமைப்பு நூல், கடல் உயிர் நூல் ஆகியவற்றில் முறையாக ஆராய்ச்சி செய்ய, அவருடைய அரும் பணிகளுக்காக டாக்டர் என்னும் விஞ்ஞானத் துறைச் சிறப்புப் பட்டத்தை, அவருக்கு ஆந்திரப் பல்கலைக்கழகம் அளித்தது.

கடல் ஆராய்ச்சியில் ஆந்திரப் பல்கலைக்கழகம் கொண்ட முடிவுகளைத் தன் வெளியீடுகளிலும்வெளியிட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள விஞ்ஞான இதழ்களிலும் அவை வெளியிடப்பட்டன. மேலும் பல முடிவுகள் வெளியிடப்படுவதற்கு ஆயத்தமாய் உள்ளன.

ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் இயற்கைக் கடல் நூல் குழுவினர் இரு கருவிகளையும் அமைத்துள்ளனர். அவற்றில் ஒன்று எடைக் குறைவான தர்மிஸ்டர் வெப்பமானி ஆகும். கடலின் மேற்பரப்பு வெப்ப நிலையையும்; அதன் கொந்தளிக்கும் அடுக்கிலுள்ள நுண்ணிய வெப்பநிலை மாற்றங்களையும் இதைக் கொண்டு பதிவு செய்யலாம்.

மற்ருெரு கருவி கலங்கலை அறியும் மானி. இனால் கடல் நீர்களின் ஒளி ஊடுருவும் தன்மையை ஆராயலாம்.

இயற்கைக் கடல் நூல் ஆராய்ச்சி என்பது பலவகைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணக் கூடியது. அச்சிக்கல்கள் கடல் நீர்களின் இயக்கத்தோடு தொடர்பு உடையவை. வேறுபட்ட பல மாதங்களில் வங்காள விரிகுடாவின் உப்புத் தன்மை, வெப்ப நிலை ஆகியவை பற்றிச் செய்திகள் திரட்டப்பட்டன. காற்றுகளாலும் நீரோட்டங்களாலும் கடற்கரை நீர்களில் பருவநிலைக்கேற்ப உயர்வு தாழ்வுகள் இருப்பதாக அச்செய்திகள் தெரிவித்தன. கடல் அலை ஆராய்ச்சிகளிலிருந்து வெளியான முடிவுகள், கோதாவரியில் காக்கிநாடா விரிகுடாவை அமைப்பதற்கும், அதற்கடுத்துள்ள கரையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கும் உரிய வழிவகைகளைக் காணுவதற்கும் உதவும். கடல் நில அமைப்பு நூல் துறையிலும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு நல்ல முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலின் அடியிலிருந்து எடுக்கப்படும் பொருளின் கதிரியக்கம், அவை இருக்கும் இடத்திற்கேற்ப மாறுபடுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தகுந்த ஆராய்ச்சியின் வாயிலாகப் படகுகளும் கப்பல்களும் கடல் உயிர்களால் அரிக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தடையாற்றல் அதிகமுடைய பல வகை மரங்களும், சிறந்த வண்ணங்களும் இரசாயனப் பொருள்களும் தேவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

மைய ஆராய்ச்சி மன்றம்

மைய அரசோடு தொடர்புடைய மன்றம் ஒன்று உள்ளது. இதற்கு விஞ்ஞான - தொழில் ஆராய்ச்சி மன்றம் என்று பெயர். கடல் நூல் தொடர்பான பல திட்டங்களுக்கு இம்மன்றம் ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகிறது.

கடல் ஆராய்ச்சியில் பேர் போனதாக ஆந்திரப் பல்கலைக் கழகம் விளங்குகிறது. இளைஞர்கள் பலர் கடல் நூல் துறையின் பல பிரிவுகளில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். உலகின் சிறந்த கடல் ஆராய்ச்சி நிலையங்களிலும் அதற்குப் பின் பணியாற்றி மேலும் தங்களது அறிவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.

மற்ற நிலையங்கள்

ஆந்திரப் பல்கலைக் கழகத்தைத் தவிர, மற்ற மையங்கள் சிலவும் உள்ளன. அவையாவன : சென்னையிலுள்ள விலங்கு நூல் ஆராய்ச்சிச் சாலைகள், மண்டபத்திலுள்ள கடல் மீன் மைய ஆராய்ச்சி நிலையம், திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தின் கடல் உயிர் நூல் துறை, பறங்கிப் பேட்டையிலுள்ள கடல் உயிர் நூல் நிலையம்.

மிதக்கும் உயிர்களான டையாட்டம் முதலியவற்றின் பரவல்பற்றியும் முறையாக ஆராயப்பட்டுள்ளது. இவை ஜனவரி-ஜூன் மாதங்களில் அதிகமாகவும், ஜூலை-டிசம்பர் மாதங்களில் குறைவாகவும் காணப்படுகின்றன. இவை மீன்களுக்குச் சிறந்த உணவாகும். இவற்றின் அளவைப் பொறுத்தே மீன்களின் அளவும் அமைகிறது. ஆகவே, அவற்றை ஆராய்வது மிக இன்றியமையாதது. பறங்கிப்பேட்டையிலுள்ள கடல் உயிர் நூல் நிலையம் கழிமுக உயிர்களைப் பற்றி ஆராய்வதில் அதிக நாட்டம் செலுத்தியுள்ளது.

மண்டபத்திலுள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையமும் அதன் கிளைகளும் வாணிப நோக்கில் சிறப்புடைய மீன்களை ஆராய்ந்த வண்ணம் உள்ளன.

கருவிகள்

பொதுவாக, இந்தியாவில் கடல் ஆராய்ச்சிக்குப் பயன்படும் கருவிகளாவன:

நீர் வெப்பநிலை வரைவி

இது கடலில் பல இடங்களில் வெப்பநிலை மாற்றங்களைச் செங்குத்தாகப் பதிவு செய்யும்.

நேன்சன் சீசாக்கள்

விரும்பிய ஆழங்களில் கடல் நீரை எடுத்து, அதன் உப்புத் தன்மை, இயைபு ஆகியவற்றை ஆராய இவை பயன்படும்.

நீரோட்ட அளவுமானி

கடலில் விரும்பிய இடத்தில் நீரோட்ட அளவைக் கணக்கிட இது உதவும்.

மாதிரி எடுக்கும் கருவிகள்

கடலின் அடியிலுள்ள படிவுகளை மாதிரி எடுப்பதற்கு இவை பயன்படும். மாதிரிகளை வேறுபட்ட ஆழங்களில் எடுக்கலாம்.

வலைகள்

கடல் உயிர்களைப் பிடிப்பதற்கு இவை பயன்படும்.

மேனாட்டுக் கருவிகள்

மேனாடுகளில் புதை நீர்ப் புகைப்படப் பெட்டிகள், நிலநடுக்க வெடிப்பை ஆராயும் கருவிகள், தொலைக்காட்சிக் கருவி அமைப்புக்கள் முதலியவை கடல் ஆராய்ச்சிக்குப் பயன்படுகின்றன. மிக அண்மைக்கால ஆராய்ச்சிக் கருவிகளான இவை இனி இந்தியக் கடல் ஆராய்ச்சிக்கும் பயன்படும்.

உலக அளவில் இந்தியக் கடலை ஆராய முன்னேற்ற நாடுகள் பலவும் முனைந்திருப்பதால், இந்தியக் கடல் ஆராய்ச்சி திண்ணிய முறையில் நடைபெறும். அதனால் நல்ல பல முடிவுகளும் கிடைக்கும். கடல் நூல் அறிவும் பெருகும். கடல் நூல் அரிய விஞ்ஞானமாக மாறும்..