உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/நம்பிக்கைத் துரோகம்

விக்கிமூலம் இலிருந்து

5. நம்பிக்கைத் துரோகம்

இங்கிலாந்து தேசத்தில் ஜேம்ஸ் என்ற வர்த்தகன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன்; ஒருவரையும் மனம் நோகும்படி பேச மாட்டான்; நம்பினவரை மோசம் செய்ய மாட்டான். அவனுக்குப் ‘பட்லர்’ என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் மிகவும் கெட்டவன்; ஆனாலும், தன்னை நல்லவன் என்று உலகத்தார் மதிக்கும்படி நடந்து வந்தான்.

ஒரு நாள், ஏதோ அவசர காரியமாக ஜேம்ஸ் வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டி நேர்ந்தது. அவன், ஒரு வேங்கை மரத்தடியில், பட்லரைச் சந்தித்து, தன் பொருள்களையெல்லாம் அவனிடம் கொடுத்து, தான் திரும்பி வரும் வரையில், அவற்றைக் காப்பாற்றும்படி அவனை வேண்டினன். பட்லரும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

ஆறு மாதங்கள் கழிந்த பின்னர், வர்த்தகன் இங்கிலாந்தை அடைந்து, தன் நண்பனைக் கண்டான்; தன் பொருள்களைத் தருமாறு அவனை வேண்டினான். பட்லர் அவனைப் பார்த்து, ‘என்ன! உன் பொருள்களா! உனக்கென்ன பைத்தியமா? நான் உன்னை இது வரையில் பார்த்ததேயில்லையே! இஃது என்ன கொடுமை!’ என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஜேம்ஸ், இடியோசை கேட்ட நாகம் போல நடுங்கினான். ‘ஐயா, என்ன! என்னை நீ அறியாயா? நான் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அந்த வேங்கை மரத்தடியில், என் பொருள்களை உன்னிடம் கொடுக்கவில்லையா ? என்னை மோசம் செய்யப் பார்க்கின்றாயே! வெகு நன்று! மரியாதையாக என் பொருள்களைக் கொடுத்தால் விடுவேன்; அல்லாவிடின், இந்நகர நீதிபதியிடம் சென்று, உன் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்துவேன்!’ என்று வருத்தத்துடனும், கோபத்துடனும் சொன்னான்.

ஜேம்ஸ் கூறிய மொழிகளைக் கேட்ட பட்லர், ‘ஐயா, நீ போய் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள். அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டுவதில்லை. நீ ‘கொடுத்தேன்,’ என்கிறாய். நான் ‘கொடுக்கவில்லை,’ என்கிறேன். நீ என்னிடம் கொடுத்ததற்குச் சாட்சியும் இல்லை. உன் வார்த்தையை யார் நம்புகிறார் பார்ப்போம்!’ என்று கூறிப் பரிகாசம் செய்தான்.

ஜேம்ஸ் மனம் கொதித்தது; கண்களில் நீர் தாரை தாரையாய் வடிந்தது. அவன் நீதிபதியிடம் சென்று, தன் வழக்கைக் கூறினான்; தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதியை வேண்டிக் கொண்டான்.

நீதிபதி ஒரு சேவகனை அனுப்பி, பட்லரை அழைத்து வரச் சொன்னார். உடனே பட்லர் வந்து, நீதிபதியை நமஸ்கரித்து நின்றான். நீதிபதி அவனை நோக்கி, ‘ஐயா, நீர் மிகவும் நல்லவரைப் போலக் காணப்படுகிறீர். இவர் யார்? இவரை உமக்குத் தெரியுமா ? இவர் பொருள்களை வாங்கியதுண்டா?’ என்று வினவினர்.

பட்லர்: பிரபுவே, இவர் யார் என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இவர் பொருளைத் தரவில்லை. இவர் தவறுதலாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டார்.

நீதிபதி: ஜேம்ஸ், நீர் இவருக்கு எந்த இடத்தில் பொருளைக் கொடுத்தீர்?

ஜேம்ஸ்: பிரபுவே, ஒரு வேங்கை மரத்தடியில் கொடுத்தேன்.

நீதிபதி: நீர் அதை இவரிடம் கொடுக்கையில், யாராவது பார்த்ததுண்டா?

ஜேம்ஸ்: ஒருவரும் பார்க்கவில்லை. இவர் இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்வாரென்று யான் கனவிலும் நினைக்கவில்லை. ஆதலால், நான என் பொருளை ஒருவர் முன்னிலையிலும் கொடுத்துச் செல்லவில்லை.

நீதிபதி: ‘ஐயா, நீர் பொருளைக் கொடுத்ததாகச் சொல்லுகிறீர். இவரோ, வாங்கவில்லை என்கிறார். நீர் கொடுத்ததை நிரூபிக்கச் சாட்சியும் இல்லை. நீர் எந்த மரத்தின் அடியில் இருந்து கொண்டு உம் பொருளைக் கொடுத்தீரோ, அந்த மரத்தையாவது இங்கு அழைத்து வாரும்,’ என்று கூறி, ஏதோ சமிக்கை செய்தார்.

உடனே ஜேம்ஸ் வெளியே சென்றான். ஒரு மணி நேரம் கழிந்தது. நீதிபதி பட்லரை நோக்கி, ‘ஜேம்ஸ் திரும்பி வந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்,’ என்றார்.

பட்லர் தன்னை மறந்தவனாய்; ‘ஐயா, அது முடியாது; அம்மரம் நெடுந்தூரத்தில் இருக்கிறது,’ என்றான்.

உடனே நீதிபதி, ‘அடா, துஷ்டா! அம்மரமிருக்கும் இடத்தைத் தெரிந்திருக்கும் நீ, அவரது பொருளை வாங்கவில்லை என்று ஏன் சாதிக்கின்றாய்? உண்மையைக் கூறினால், உயிர் பிழைப்பாய்! அன்றேல், உன்னைச் சிரச்சேதம் செய்து விடுவேன்!' என்று பயமுறுத்தினார்.

குற்றம் பொருந்திய மனமுடைய பட்லர் பயந்து விட்டான். அவன் நீதிபதியின் கால்களில் வீழ்ந்து அழுதான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். ஜேம்ஸ் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை, அவன் மீண்டும் ஜேம்ஸுக்குக் கொடுத்து விட்டான். நீதிபதி, அவனை ஐந்து வருட காலம் கடுங்காவலில் வைத்தார்.

கேள்விகள்:

1. ஜேம்ஸ் என்ற வர்த்தகன் நீதிபதியிடம் தொடுத்த வழக்கு யாது?

2. பட்லர் நீதிபதி கேட்ட போது கூறிய பதில் என்ன?

3. நீதிபதி ஜேம்ஸ் பொருளை எவ்வாறு பட்லரிடம் இருந்து பெற்றார்?

4. ஜேம்ஸ்-பட்லர் பாடத்தால் நீ அறிந்து கொள்ளும் நீதி என்ன?