இருண்டவீடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆசிரியர்: பாரதிதாசன்[தொகு]

இருண்ட வீடு (மூலம்)[தொகு]

பகுதி: 01(கடலின் மீது கதிரவன்)[தொகு]

(தலைவியின் தூக்கம், பால்கறப்பவன் தவறு,
தலைவனின் சோம்பல்).


கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே கட்டிலில் மங்கையை எழுப்பினான்;
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

அப்பொழுது மணியும் ஆறரை ஆனதால் //05 //
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது- உரலின் அண்டையில்
வைத்துப் போனான்; மங்கையின் கணவனோ, // 10 //
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான். // 12 //

பகுதி: 02 (தாயோ துயில்வதால்)[தொகு]

(குழந்தையின் அழுகை,
பையனின் பொய், தந்தையின் போக்கு)
தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும் // 15 //
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!
பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்த பால்செம்பை, விரைவில் // 20 //
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்! // 25 //
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.

பகுதி: 03 (பிட்டுக் காரி)[தொகு]

(பையன் காலைக்கடன் முடிக்காமல் உணவுண்ணத்
தொடங்கினான்; இரண்டு பற்களின் மறைவு)


பிட்டுக் காரி தட்டினாள் கதவையே,
திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்.
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்.
பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்.
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்,
வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது.
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வில்லம்பு போல மிகவிரை வாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்களை எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!


பகுதி: 04 (நாயின் அலறல்)[தொகு]

தலைவி எழுந்தாள், சாணமிட்டாள், கோலமிட்டாள்,
அவளைக்கண்ட பகலவன் நடுங்கினான்.


நாயின் அலறல் நற்பசுக் கதறல்
பானையின் படபடா பையனின் ஐயோ-
இத்தனை முழக்கத்தில் ஏந்திழை புரண்டு
பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே
எழுந்தாள் அவளோ, பிழிந்து போட்ட
கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள். // 50 //
இதுதான் பாதை எனும்உணர் வின்றி
மெதுவாய் அறையினின்று வெளியில் வந்தாள்
பாதி திறந்த கோதையின் விழியோ
பலகறை நடுவில் பதிந்த கோடுபோல்
தோன்றிற்று! மங்கை தூக்கம் நீங்காது,
ஊன்றும் அடிகள் ஓய்ந்து தள்ளாடினாள்.
உடைந்த பெட்டிமேல் கிடந்த பிட்டைத்
தொடர்ந்துநாய் தின்பதும் தோன்ற வில்லை
நடந்து சென்றவள் நற்பசு வுக்கெதிர்
கிடந்த சாணியைக் கிளறி எடுத்து // 60 //
மீந்தபாற் செம்பில் விழுந்து கரைத்துச்
சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து
தெருவின் குறட்டில் தெளித்தாள்! அவள்குழல்
முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல்போல்
மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது!
வாலிழந்து போன மந்தி முகத்தாள்
கோல மிடவும் குனிந்தாள்; தாமரை
போல எழுதப் போட்ட திட்டம்
சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது! // 70 //
பொன்னிறக் கதிரொடு போந்த பகலவன்,
இந்நில மக்கள்பால் தன்விழி செலுத்தினான்;
கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்
காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின!

பகுதி: 05 (குறட்டினின்று)[தொகு]

(தலைவி,தலைவன், பையனுக்கு
மருத்துவம், சாணி ஒத்தடம்.)
குறட்டி னின்று கோதை உட்சென்று
கணவனின் எதிர்வந்த கையோய்ந்து குந்தினாள்.
காலையில் புதுப்பேச்சுக் காண லாயினார்:
தன்னரு மனைவியைப் பொன்னிகர் கணவன்
"என்ன மணியடி?" என்று கேட்டான்:
சண்டிமணிப் பொறிக்குச் சாவி கொடுக்க // 80 //
அண்டை வீட்டானை அன்றே அழைத்தேன்
வரவே இல்லை மாமா என்றாள்.
அந்த நேரம் அண்டை வீட்டுக்
கந்தன், குடையும் காலிற் செருப்புமாய்
வீட்டி னின்று வெளியிற் செல்வதைப்
பார்த்த கணவன் "பாரடி அவனை
அதற்குள் வேலை அனைத்தும் முடித்துக்
கடைக்குச் செல்லும் கருத்தை" என்றான்.
"விடியா மூஞ்சி விடியு முன்பே
போனால் நீயும் போக வேண்டுமோ" // 90 //
என்று கூறி இளிக்க லானாள்.


பெரிய பையன் அருகில் வந்தான்
வடையும் கையும் வாயும் புண்ணுமாய்
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
என்ன என்ன என்று கேட்டாள்தாய்.
புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த
இரண்டு பற்கள் இல்லைஎன் றுரைத்தான்.
வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் என்றான்.
உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால்
மறுநொடி ஆறுமென்று மங்கை மருத்துவ // 100 //
மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள்.
பிறகா கட்டும் பிட்டைத் தின்பாய்
வேலைக்காரி விடிந்தபின் வருவாள்
பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள்.
எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள். // 105 //


பகுதி 06 (அழுமூஞ்சி)[தொகு]

(பிட்டை நாய்தின்றது, மீண்டும் வாங்கிய பிட்டுக்குத்
தலைவர் புறப்படுகிறார், புதிய பிட்டை உண்ணப்
பையன் உதடு இடந்தரவில்லை.)
அழுமூஞ்சி பிட்டை அணுகினான், நாயும்
நழுவிற்றுப் பிட்டை நன்று தின்று!
தொட்டுச் சுவைக்கப் பிட்டில் லாமையால்
பெரிய பையன் சிறிய நரிபோல்
ஊழ்ஊழ் என்றே ஊளையிட் டிருந்தான் // 110 //
வீடு பெருக்கும் வேம்பு வந்தாள்!
சமையல் செய்யும் சங்கிலி வந்தாள்!
கடைக்கென் றமைந்த கணக்கன் வந்தான்!
கூடத்து நடுவில் ஏடு விரித்தே
மறுபடி வாங்கிய வடையையும் பிட்டையும் // 115 //
சங்கிலி படைத்தாள்; தலைவருக் காகவே!
பல்லைச் சுரண்டுவோர் பார்த்தார் அதனை,
மெல்ல எழுந்தார், மெல்ல நடந்தார்,
காலைக் கடனைக் கழிக்கக் கருதினார்.
பிட்டையும் வடையையும், பெட்டியில் குந்திக் // 120 //
கிட்ட இழுத்தான் கிழிந்தவாய்ப் பெரியவன்
அவனுடல் கொஞ்சம் அசைந்தது வாய்எயிறு
கவலை மாட்டின் கழுத்துப் போல
வீங்கி இருந்ததால் வெடுக்கென வலித்தது!
தாங்காது கையால் தடவிப் பார்த்தான்! // 125 //
நோயையும் பெரியவன் நோக்க வில்லை!
வாயில் நுழைய வடைக்கு வழியில்லை!


பகுதி: 07 (வீட்டின் தலைவி)[தொகு]

பிள்ளையின் நோய்க்குப் பிட்டுத் திணிக்கப்படுகிறது.
மற்றவர்க்குப் பிட்டு வேண்டாம் என்று முடிந்தது;
பிள்ளைக்கு வாயில்லை.
வீட்டின் தலைவி நீட்டிய காலும்
ஆட்டின் கத்தல்போல் அருமைப் பாட்டுமாய்க்
குழந்தையை வைத்துக் குந்தி யிருந்தாள். // 130 //
இழந்த உயிரில் இம்மி யளவு
பிள்ளையின் உடலொடு பிணைந்தி ருந்ததால்
வள்ளிக் கொடியும் வதங்கிய தைப்போல்
தாய்மேற் பிள்ளை சாய்ந்து கிடந்தது.
தாயோ சங்கிலி தன்னை அழைத்து
"வாங்கி வந்த வடையையும் பிட்டையும்
கொண்டுவா பசியடி குழந்தைக்" கென்றாள்.
தட்டில் வடையும் பிட்டும் கொண்டு
சட்டென வைத்தாள் சங்கிலி என்பவள்.
கூடத்து நடுவில் ஏடு விரித்து // 140 //
வைத்த பிட்டையும் வடையையும் வந்து
மொய்த்த ஈயொடு முதல்வர் தின்றார்!
மறுபடி ஒருபிடி வாயில் வைக்குமுன்
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்.
அதனால் அதைஅவர் அருந்துதல் நீங்கி
கையினால் "வேண்டாம் வடை" என்று காட்டினார்.
பெரிய பையன் பிசைந்தான் பிட்டை!
ஒருதுளி கூட உண்ண மாட்டாமல்
கொரகொர கொழகொழ கொணகொண என்றான்.
இதன்மொழி பெயர்ப் பென்ன வென்றால்? // 150 //
"எயிறு வீங்கி இடத்தை மறித்தது
தின்பதற் கென்ன செய்வேன்" என்பதாம்.
பையனால் இப்படிப் பகர முடிந்தது
தலைவரால் அப்படிச் சாற்ற முடிந்தது
பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும்
தாயை நோக்கி அத்தடுக்குக் குழந்தை
"தாயே எனக்கிது சாகும் நேரம்"என்று
வாயால் சொல்லும் வல்லமை இல்லை
அறிவெனும் வெளிச்சம் அங்கை யி்ல்லை
மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது. // 160 //


பகுதி: 08 (தந்தியும் ஆணியும்)[தொகு]

பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது
தலைவிக்கு.
தந்தியும் ஆணியும் தளர்ந்த யாழ்போல்
கூடத்து நடுவில் வாடிய சருகுபோல்
பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்டவீடு&oldid=493818" இருந்து மீள்விக்கப்பட்டது