இருளடைந்த பங்களா/001
இருளடைந்த பங்களா
1
ஊரின் ஒரு கோடியிலிருந்த பெரிய பங்களாவில் நிரந்தரமாகக் குடியிருந்த இருளை விரட்டிவிட்டுத் திடீரென்று ஒளி சிரிக்கத் தொடங்கியது ஊராரின் பேச்சுக்குரிய பொருளாயிற்று.
அந்தப் பெரிய வீட்டில் வசிக்க வந்தது யாராகயிருக்கும் என்ற கவலை எல்லோருக்கும் ஏற்பட்டது ஆச்சர்யமல்ல. பலரது கவனத்தையும் கவர்ந்த கட்டிடம் அது.
நகரமுமல்லாத பட்டிக்காடு மில்லாத ஒரு ஊர் அது. பெயர் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே! ஏதோ ஒரு 'ரெண்டும் கெட்டான் புரம்! அங்கு தண்ணீர் ஓடாத பெரு நதி ஒன்று உண்டு. மணல் பரந்து கிடக்கும் ஆற்றையடுத்து நாணல் புதர்.
நாணல் என்றால் வெறும் குச்சி குச்சியாக நிற்பதல்ல காடாக மண்டிக் கிடக்கும். ஒரு ஆள் உயரத்திற்கு — சில சமயம் ஏழு ஏழரை அடி உயரம் கூட — வளர்ந்து வெளிப் பஞ்சுத் தொகுதிகள் போல் பூ முடிகள் நிமிர்த்திக் காற்றிலே சரசரத்து நிற்கும். எவனையாவது அடித்துக் கொன்று உள்ளே எறிந்து விட்டால், ஊறுகாய்ப் பானையில் போட்ட மாங்காய்மாதிரி, அந்த உடல் அலுப்பற்றுக் கிடக்கும் என்று நம்பலாம்.நாணல் கவித்த படுகையை யொட்டி உயர்ந்த கரை. அங்கு, அதிகத் தண்ணீரை நம்பி வாழாத ஒருவகைக் கொடி பேயாய் படர்ந்து கிடக்கும். மழை பெய்து நின்ற சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால் கரை பூராவும் ஒரே பச்சைக்காடுதான். அப்புறம் சில தினங்களிலேயே ஏகமாகப் பூக்கள் மலர்ந்து திகழும். பழைய காலத்துப் ‘பூவந்திராப் பெட்டி’ (கிராமபோன்)களில் ஒலிபெருக்கிகளாகக் குழாய்கள் வைத்திருப்பார்களே, அவை போல – ஊமத்தம் பூ இனத்தைச் சேர்ந்த – புஷ்பங்கள் வானைப்பார்த்து வாய்பிளந்து கிடக்கும். அவற்றின் நிறத்தை வாடாமல்லி வண்ணத்தின் மங்கிய தோற்றம் என்றும் கொள்ள முடியாது; பழுப்பு என்றும் கூறமுடியாது. சம்பா அரிசிக் கழுநீரின் நிறத்தை அதனுடன் ஏகதேசமாக ஒப்பிடலாம்.
அவ்விதம் அடர்ந்து கிடக்கும் கொடிகளிடையே யாராவது அஜாக்கிரதையாக நடக்க முயன்றால், முழங்கால் வரை உள்ளே போய்விடும். காலை வெளியே இழுத்து மறு எட்டு வைத்து அடி அடியாக முன்னேறுவது என்பது கத்திக் கம்பிமீது கடக்கிற சர்க்கஸ் வித்தை மாதிரித்தான். யாரையாவது கழுத்தைக் திறுகி உள்ளே வீசிவிட்டால் அந்த ஆசாமி மரகதப் பசுங்கொடிச் சமாதியிலே நிம்மதியாக ஓய்வு பெற்றுக் கிடக்கலாம்.
இந்தப் பகுதியை ஒட்டி அழகான தோப்புகள். மா மரங்கள், தென்னை, சவுக்கை முதலியவைகளுடன் நாலைந்து தேக்கு மரங்களும் நன்கு வளர்ந்து நின்றன. விவசாய இலாக்காவினரின் போதனைகளில் அக்கறை கொண்டு புதிய புதிய பயிர்ச் சோதனைகளில் ஈடுபட்ட புண்ணியவான் யாரோ ஒருவர் பல வருஷங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் வாசஞ் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள் அந்த ஊரிலே. தோப்புகளின் நடுவிலே கம்பீரமாக நின்றது அந்த பங்களா. வாழ்க்கை வசதிகள் பலவும் அங்கு நிறைந்திருக்கும் என்றே எண்ணத் தூண்டும் தோற்றம். அழகான முகப்புடன் விளங்கிய அக் கட்டிடத்தினுள் ஊர்க்காரர்கள் நுழைந்து பார்க்க ஒரு சக்தர்ப்பம் கூடக் கிட்டவில்லை. ஆகவே, பங்களாவின் உட்புறம் எப்படியிருக்கும், எத்தனை அறைகள், அங்கு என்னென்ன அற்புதங்களைக் காணலாம் என்பது எதுவும் அவர்களுக்குத் தெரியாது.
பங்களாவின் முன் பக்கம் பெரிய இரும்பு கேட்டும், சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டுச் சுவர்களும் சேர்ந்து பங்களாவின் மர்மச் சூழ்நிலையாக உதவின. ஜமீன்தார் எவரோ கட்டிய பங்களா; அவரது ஆசை நாயகியை அடைத்த வைத்துக் கிளி போல் காப்பதற்காக அமைக்கப்பட்டது; அங்கு கூட ஒரு கள்ளக் காதலன் வந்து போக அவள் ஏற்பாடு செய்து விட்டாள்; அதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தார் அவளைக் கொன்று போட்டார்; அவள் பிசாசாக மாறி நன்கு வாழ்கிறாள் என்று சிலர் சொல்வது உண்டு.
இதற்கு ஒரு ‘பாடபேத’மும் உண்டு. ஜமீன்தாரின் ஆசைநாயகி கொலை செய்யப்படவில்லை; அவளாகவே ‘நாணிட்டு நின்று’ செத்துப் போனாள்; அப்படிச் செத்தவள் பிசாசாக சுற்றித் திரியாமல் என்ன செய்வாளாம். இது பலரது சவால்.
நாம் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அந்த பங்களாவிற்கு ஊராரின் பேச்சு மர்மச் சாயம் பூசி வந்தது என்று அறிந்து கொண்டால் போதும்.
சிலர் ஏதோ குஷியில் பெரிய பெரிய கட்டிடங்களாகக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அப்புறம் வருஷந்தோறும் வெள்ளையடித்து அதைச் சுத்தமாக வைத்திருக்கும் சிரத்தை கூட இல்லாதவர்களாகி விடுகின்றனர். காலப் போக்கிலே பழுது பார்க்கவும், பளிச்சிடும் சோபை தரும் வகையில் சுண்ணாம்பு பூசவும் வக்கற்றுப் போகிறார்கள். இதனாலெல்லாம் பல கட்டிடங்கள் பாசிபடிந்த பழமைத் தோற்றம் பெற்று அழுமூஞ்சித்தனமாக காட்சி தருகின்றன.
‘ரெண்டுங்கெட்டான்புரம்’ ஊரின் ஒரு மூலையிலே நின்ற பெரிய பங்களாவும் காலப்பாசம் படிந்த சமாதி போல்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அதை ஒரேயடியாக அடைத்துப் போட்டு விட்டதனால் அதற்கு இருளடைந்த தன்மை படித்திருந்தது. அதை வெளவால்களும் குருவிகளும் சுகவாச ஸ்தலமாக எவர் அனுமதியும் பெறாமலே உரிமை கொண்டாடி மகிழ்ந்தன.
வருஷக் கணக்கில் அடைத்துக் கிடந்த அந்த பங்களாவிற்கு சாப விமோசனம் பிறந்ததென்றால் அது பரபரப்பிற்குரிய செய்திதானே! அங்கு குடியிருக்க வந்த தைரியசாலி யார் என்று அறியும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டது இயல்புதான்!
அந்த ஆசையும் இயல்பும் வளர்ந்தன. பங்களாவில் நிகழ்ந்த புதுமைகளை அறிய அறிய கட்டிடம் பழுது பார்க்கப்பட்டது. சுவர்களுக்கு வெள்ளையடித்து, கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் வர்ணம் பூசி அழகுபடுத்தினார்கள். அழுது வடியும் மூளி மாதிரியிருந்த தோற்றம் இத்தகைய மாறுதல்களினால் கண்கவரும் மேக்கப் சுந்தரியின் பகட்டுத்தனம் பெற்றது. பங்களாவுக்குப் போகும் பாதை சரிவர இல்லாதிருந்தது. அதைச் சரிப்படுத்தி கார் போய்வர வசதியான நல்ல ரோடாக மாற்றி வைத்தார்கள். சுற்றிலும் குப்பைக் காடுகளாக விளங்கிய தோப்புக்களைச் சுத்தப்படுத்தினார்கள்.
இவ்வேலைகளைச் செய்த நபர்களிடம், ‘யார் இந்த பக்களாவிற்கு வரப்போகிறார்கள்?’ என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான் கிடைத்தது. ‘அது எங்களுக்குத் தெரியாது. யார் வந்தால் என்ன! எங்களுக்கு வேண்டியது கூலி. அது தாராளமாகக் கிடைக்குது. அதைத் தரும் புண்ணியவானைப் பற்றி நாங்க ஏன் வீணாக விசாரிக்கணும்?’ இந்த பதிலில் உழைத்தவர்களின் திருப்தி தொனித்தது; ஆனால் ஊராரின் ஆவலைக் கிளறிவிடும் தன்மையுமிருந்தது.
தேவையான வேலைகள் எல்லாம் முடிவடைந்து சூழ்நிலை அமைதியும் அழகும் பெற்ற தினத்திலிருந்து அந்த பங்களாவில் ஜீவகளை பிறந்தது. அங்கு யாரோ குடிவந்து விட்டார்கள் என்று தெரிந்ததே தவிர, ‘யார் வந்தது, எத்தனைபேர் வந்திருக்கிறார்கள்; ஆண்களா பெண்களா; அவர்களுக்கு என்ன வேலை; எந்த ஊர்?’ என்பன போன்ற விவரம் எதையும் யாருமே புரிந்து கொள்ள இயலவில்லை. முன் வாசலின் பெரிய கேட் சதா சாத்தியே கிடந்தது. உள்ளுலகத்திலிருந்து வெளியே வந்து புறவுலகுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அங்கிருப்பதாகக் தெரியவில்லை. முன்பு பாசி படிந்த பழைய சமாதி போல் தோன்றிய கட்டிடம் இப்போது கண்ணே உறுத்தும் புதிய சமாதி மாதிரி விளங்கியது. அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்நிலை பலரகமான பேச்சுகள் பிறந்து பரவத் துணை புரிந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை இரவு பத்து மணிக்கு மேலே கார் வெளியே போகும் சத்தம் கேட்கிறது என்கிறார்கள் சிலர். நடுச் சாமத்திலே கார் வந்து பங்களாக் காம்பவுண்டிற்குள் போவதாகத் தெரிகிறது என்றார்கள் ஒன்றிருவர். விவசாயப் புதுமைப் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தாரே ஒருவர், அந்தப் பழைய கறுப்பர்தான் இப்போது வெள்ளையடித்துப் புதிய கிரகப்பிரவேசம் நடத்தி யிருக்கிறார் என்றார்கள். எவனோ கள்ள நாணயம் அடிக்கிற எத்தன் வந்திருக்கிறான்; கொள்ளைக்கார ஜமீந்தார் குடி வந்திருக்கிறான்; கொலைகாரப் பாவியாகத் தானிருக்கும்; அரசியலில் ஈடுபட்டு ‘அண்டர் கிரவுண்டு’ ஆகிவிடும் வேஷக்காரன் எவனோ இங்கு வந்து புது நாடகம் நடத்துகிறான்; கொடு நோய் பற்றிய பணக்காரன் தனி வாழ்வு வாழ முயல்கிறான் — இப்படி மனம்போனவாறெல்லாம் கற்பித்துப் பேசினர் அவ்வூர் அளப்பர்கள்.
ஒருநாள் ஒருவன் அமுத்தலாகச் சொன்னான்; ‘குட்டி களை இழுத்து வந்து ஜல்ஸாப் பண்ணி மகிழ்கிற ஆசாமி எவனோதான் அந்த பங்களாவிற்கு வந்திருக்கிறான்’ என்று.
‘ஆங், அப்படியா! ‘என்னண்ணேய் விஷயம்?’ ‘சட்டுப் புட்டுன்னு விஷயத்தைச் சொல்லுமய்யா!’ என்று உற்சாகக் குரல்கள் கூவின.
நேத்து ராத்திரி பதினோரு மணியிருக்கும். எனக்கு வயிற்றைக் கலக்குற மாதிரியிருந்தது. ஆற்றுப் பக்கமாப் போயிட்டு வரலாமேன்னு போனேன். நான் வழக்கமாக அந்த ஊரடிப் பாலத்துக்கிட்டே ஒத்தையடித் தடம் இறங்குதே, அந்த வழியாகத்தான் போறது. போயிட்டுத் திரும்பி வந்து ரோட்டிலே ஏறக் காலத் தூக்கினேன். கண்ணைக் குருடாக்குற மாதிரி வெளிச்சமடிச்சுது. மோட்டர்க்காரு லயிட்டு வெளிச்சம். காரிலே யாரு வாறா பார்க்கலாமேன்னு நின்னு கவனிச்சேன். பாலத்தைத் தாண்டித் தானே பங்களாத் தோப்புக்குள்ளே போகனும்.காரு எங்கேதான் போகுமின்னு எனக்கு ஒரு எண்ணம். நின்னு கவனிச்சேன். கார் வந்தது. ரொம்ப வேகமா வரல. விளக்குகளை அணைக்கவுமில்லை. நிதானமாத்தான் வந்தது. உள்ளே மங்களான வெளிச்சமிருந்தது. காரை ஓட்டினவன் தவிர ஒரு ஆம்பிளையும் பொம்பிளையும் இருந்தாங்க, அவ ஷோக்கான உருப்படி. அடடா, பிக்சர்ன பிக்சர்தான். மணியான குட்டி!...
எல்லோரும் ஒருவர் மூஞ்சியை ஒருவன் பார்த்துக் கொண்டனர். அவர்கள் கண்களில் பொறாமை சிற்றொளி சிதறி விட்டுப் பம்மியது. அவர்கள் ஆர்வம் எவ்வியது. ‘ஆங், அந்த ஆசாமி எப்படியிருந்தான்?’ பலரும் அறிய அளாவியது. இதே தான்.
‘அவனை நான் நல்லாக் கவனிக்கலியே. அவளைத் தான் பார்த்தேன். இருந்தாலும், பார்வையிலே பட்டதிலிருந்து பெரிய மனுசனாகத்தானிருக்கும்னு தீா்மானிக்க வேண்டியிருக்கு. மூஞ்சி சரியாகப் பார்வையிலே படலே. நாற்பது நாற்பத்தைந்து வயது ஆசாமி, பணமும் அந்தஸ்தும் பெற்றவன் மாதிரித் தோணிச்சு, அதுக்குள்ளே காரு என்னைக் தாண்டிப் போயிட்டுது பங்களாவுக்குத்தான் போச்சு’ என்றான் கண்ணால் கண்டவன்.
இவ்வளவு கண்டு விட்டதால் அந்தக் கும்பலில் அவன் பெரியவனாகி விட்டான்! ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்டுத் தொணதொணத்ததால் அவன் எாிந்து விழ நோ்ந்தது. பணக்காரன் கூட்டிவந்த ‘சோக்கான உருப்படி’யைப் பார்த்து விட்டானே பயல் என்ற ஆற்றாமையினால் சிலர் அவன்மீது கிண்டல் சொற்கள் எறிவதில் மனத் தினவைத் தீர்த்துக் கொள்ள முயன்றர்கள்.
‘நீ சுத்த சோப்ளாங்கியடா! அவன் எப்படிப் பட்டவன்கிறதைக் கவனிக்காமல் போயிட்டியே. எவளோ ஒரு பொம்பிளையைப் பாத்ததும் ஈயின்னு இளிச்சுக்கிட்டு நின்னுட்டானய்யா. தேன் குடிச்ச நரியாட்டம்!’ என்று கேலி பேசினர். என்றாலும், அந்த ‘பிக்சர்னு பிக்சர்தான்’ பியூட்டியைக் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு கூடத் தங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏக்கம் தீரவில்லை அவர்களுக்கு.