இருளடைந்த பங்களா/002
2
‘ரெண்டுங் கெட்டான் புரத்தின் மணலாற்றிலே கூடச் சிலசமயம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதுண்டு. மழைகாலத்தில் மாதக்கணக்காக கொஞ்ச நீர் சலசலத்து உருண்டாேடும். சில தினங்களிலே பெருவெள்ளம் பொங்கிப் பிரவகித்துக் குதித்து கரைகளிடையே வெறியாட்டயர்ந்து
அகப்பட்டவைகளேயெல்லாம் சுருட்டிச் சுழன்றோடும்.
வெள்ளத்தின் வேகம் தணிந்து தண்ணீர் வற்றிய பிறகு மணல் படுகையில் பலரகமான பொருள்களும் தட்டுப்படுவது சகஜம். எங்கிருந்தாவது எதையேனும் இழுத்து வரும் நீர்ப்பெருக்கு எங்காவது அதைப் போட்டுவிட்டு மறைந்து விடும், விளையாட்டுத்தனச் சிறுபிள்ளை போல.
இருளடைந்த பங்களா பற்றிய செய்தியின் சூடு ஆறிப்போய்க் கொண்டிருந்த சமயம் ‘அச்சு அசல் பிக்சர்’ பியூட்டியைப் பற்றி எல்லோரும் பேசிப்பேசி அலுப்படைத்து விட்ட வேளை, வேறொரு பரபரப்பான சேதி ஆடிக் காற்றின் வேகத்திலே பரவியது எங்கும்.
மணலாற்றிலே திடீரென வெள்ளம் கரைபுரண்டோடியது. அதன் மூலஸ்தான மலையிலே பெய்த பெருமழையின் விளைவானது. ஆகவே, இரண்டே நாட்களில் நீர்ப் பெருக்கு வந்தது போல் வடிந்து விட்டது. அது செய்த வேலை தான் மிகப் பெரியது!
ஜனங்கள் அதிகம் இறங்கி ஏறும் ஒரு பாதையினருகிலே அரசமரம் ஒன்று நின்றது. கரையோரத்தில் நின்ற மரத்தின் வேர்கள் சில ஆற்றினுள்ளும் பரவியிருந்தன. அவற்றினூடே பாய்ந்து புகுந்து வெள்ளம் மணலை அரித்துச் சென்று விட்டது. அதற்கு ஈடாக அளித்தது போல் மனித உடல் ஒன்றை அங்கு திருகல் முறுகலாகத் திணித்து வைத்திருந்தது.
அந்தப் பிரேதத்தை முதன் முதலில் பார்த்த பெருமை யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ தெரியாது. அதைப் பற்றி எவரும் கவலை கொள்ளவுமில்லை. ‘அது யார்? அந்தப் பிணம் எங்கிருந்து வந்திருக்கும்? கொலையா, தற்கொலையா, விபத்துதானா?’ இப்படி எவ்வளவோ புதிர்கள் கிளைத்துப் படர்த்தன அந்த ஊராரைத் திண்ற வைக்கும் விதத்திலே.போலீஸார் வந்து, கவனிக்க வேண்டியவைகளை எல்லாம் சரிவரச் செய்து முடித்து, மனித உடலைக் கரையேற்றியதும் அது ஒரு பெண்ணின் சவம் என்று புரிந்தது. ‘ஆங். பொம்பிளையா!’ என்ற அதிர்ச்சி கும்பலை வேடிக்கை பார்க்கப் புடதியைப் பிடித்து நெருக்கித் தள்ளவே, தடியடிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் போலீசுக்கு ஏற்பட்டது.
‘ஆமா. பொம்பிளைதான். இவளை நான் எங்கேயோ பார்த்த மாதிரித் தோணுது’ என்று தலையைச் சொரிந்தார் ஒரு பிரதர். ‘அன்றைக்கொரு நாள் காரிலே பார்த்ததேனே ஒரு பியுட்டி, அவ முகம் போலே இருக்குது’ என்று சொல்லலாமாே வேண்டாமா எனத் தலையைச் சொரிந்தார் அவர். ‘கண்டவர் விண்டிலர்’ என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பதே மெத்தப் புத்திசாலித்தனம் என்றும் முடிவு செய்த மெளனத்தில் ஆனந்தமும் காணத் துணிந்தார் தோழர்.
எனினும் அவர் மனம் மாத்திரம் குறுகுறுத்துக் கொண்டுதாணிருந்தது; ஒருவேளை இது அவளாகவே இருக்குமோ? அப்படியானால், அவள் எப்படிச் செத்தாள்? கொலை செய்து நாணல் புதருக்குள் வீசி எறிந்திருப்பாா்களோ? ஏன்?...படுபாவிகள் அன்பாக அழைத்து வந்து எதற்காக அப்படிச் செய்யத் துணிந்தாகள்?
இவையெல்லாம் அவரது அறிவுக்குத் தெளிவாகாப் பிரச்னைகள். இத்தகைய புதிர்கள் பல அவ்வூராரின் நினைவுப் பரப்பிலே குமிழிட்டுக் கொப்புளித்தன. அவரவா் மனப்பக்குவத்திற்கேற்ப விளக்கமும் கூறிக் கொண்டனர்.
‘நம்மூரு நாணல்காட்டுப் பிசாசு அறைஞ்சு கொண்ணுயிருக்குமய்யா. உடலை எப்படிக் கொரக்கக் கொரக்கக் கொண்டு போயிருக்கு பார்த்திரான்னேன்! ஈரவேட்டியைத் திருகிப் பிழிகிற மாதிரியிலே. யேங் ?...‘இந்தப் பக்கத்திலே ரத்தக் காட்டேறி ஒண்னு அலையிறதாகக் கேள்வி. அது செய்த வேலையாகத்தானிருக்கணும். பிரேதத்தைக் கவனித்தீர்களா? ரத்தம் செத்துப் போயி. ரத்தமேயில்லாமல் செத்துப்போன மாதிரியில்லா யிருந்தது? என்ன நான் சொல்றது?’ ... ரத்தக் கொதிப்பெடுத்த மனிதப் பிசாசுகள்தான் அவளைப் பயன்படுத்திச் சாகடித்துச் சக்கையை வெள்ளத்திலே வீசியெறிந்திருக்கும்!’...‘நகை நிறையப் போட்டிருந்திருப்பா. கொள்ளைக்காரப் பயல்கள்தான் இந்தப் பக்கத்திலே நாலணா, எட்டணாவுக்குக் கூடக் கொலை பண்றாங்களே. அவங்களுக்குக் காசு தான் பெருசு; மனுச உசுரு அல்பமாத்தான் படுது’. இப்படிப் பேசுபவர்கள் பலரகம் அந்த வட்டாரத்திலே ஒலித்தன.
பிரேதப் பரிசோதனை செய்த நிபுனர்களால் எதையும் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண் தானகவே செத்திருக்கலாம்; கொலை செய்யப்பட்டிருப்பதும் சாத்தியமே; எப்படியோ ரத்தமிழந்து அதனால் மரணமடைந்திருக்க வுேண்டும்; இறந்து நாலைந்து தினங்களிருக்கும்; தண்ணீரில மூன்று தினங்கள் கிடந்திருப்பதாகத் தோன்றுகிறது – இப்படி முடிவு செய்தார்கள் அந்த அறிவாளிகள்.
இந்தத் தீர்ப்பு ‘ரத்தக் காட்டேறி’க் கட்சியினருக்கு ஒரு சாட்சியாக வந்து சேர்ந்தது. ‘கேட்டீர்களா, நாங்கள் என்ன சொன்னோம் !’ என்று பெருமையடித்துக் கொண்டார்கள் அவர்கள். ‘காட்டேறிதான இப்படி சத்தத்தை ஒரே உறிஞ்சாக உறிஞ்சித் தீர்த்துவிடும்’ என்றார்கள்.
இந்தச் சம்பவம் பற்றிய பரபரப்பும் ஒடுங்கிவிடத் தான் செய்தது. புதிர் விடுபடவில்லை. எதனாலோ மரணமடைந்து விட்ட ஏதோ ஒரு அநாதைப் பிரேதம் அது என்ற அபிப்பிராயம் தான் நிலைத்து நின்றது.