உள்ளடக்கத்துக்குச் செல்

இருளடைந்த பங்களா/003

விக்கிமூலம் இலிருந்து

3


அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா எல்லோருக்குமே விசேஷமான திருவிழா. மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் கிடைக்கும்; போட்டிப் பக்தயங்களினால் உற்சாகம் கிட்டும். ஊர் மக்களுக்கு அவற்றையெல்லாம் கண்டு களிப்பதில் தனி மகிழ்ச்சி.

இரவில் மாணவர்களும் மாணவிகளும் பங்கெடுத்துக் கொள்ளும் நாடகமும் நடைபெறுவது வழக்கம்.

அவ் வருஷத்திய விழா ஏனைய ஆண்டு விழாக்களை விட முக்கியத்துவம் பெற்ற விட்டது. ஆரம்பமே அதிவிசேஷமானதுதான். பங்களாவின் பெரிய மனிதர் பள்ளிக்கூடத்தின் வளர்ச்சியைக் கருதிப் பத்தாயிர ரூபாய் நன்கொடை அளித்திருந்தார். அவர் வள்ளல்தனத்தைப் பாராட்டும் விழாவாகவும் அது அமைந்தது.

வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பெரிய மணிதரை — திடீரென்று பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள்ளலை — காண வேண்டும் என்ற ஆசை ஊரருக்கு இருப்பது இயல்புதானே ஆகவே திரண்டு வந்தார்கள் விழா நடைபெறும் இடத்திற்கு.

பங்களாவாசி ஜனங்களை ஏமாற்ற வில்லை. பாலிஷ் குன்றாத வனப்புக் கார் ஒன்றிலே வந்து இறங்கினார். பள்ளிக்கூட நிர்வாகிகள் அவருக்கு ஏகப்பட்ட மரியாதைகள் காட்டினர். எல்லோவது கண்களும் அவர் மீதே மொய்த்தன.

சாதாரணத் தோற்றமுள்ள மனிதர். கொஞ்சம் கிழடு தட்டியிருந்தது. நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்குள் எதோ ஒரு வயது என்று மதிக்கலாம். ஸுட்டும் ஹாட்டும் அணிந்து நாகரிகமாகத்தான் விளங்கினர். தொப்பியைத் தலையிலிருந்து நீக்கியதும், ‘க்ளோஸ் கட் க்ராப்’ பெற்றிருந்த மண்டையில் வெள்ளே மயிர் காட்சி தந்தது. அவரிடம் அசாதாரணமாக ஏதாவது இருந்ததா என்றால், அவரது கோட்டில் செருகியிருந்த சிவப்புப் பூவைத் தான் குறிப்பிட வேண்டும்.

செக்கச் சிவந்த புஷ்பம் அது. அவர்மீது பார்வை எறிகிறவர்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும் சிவப்புப் பூ. வெள்ளைத் துணி மீது சிதறிக் கிடக்கும் ரத்தம் போல — அல்லது, நன்கு வெள்ளையடித்த சுவரிலே அலட்சியமாகத் துப்பிய வெற்றலை எச்சில் மாதிரி — கண்களை உறுத்தும் தன்மை இருந்தது அதில், திடீரென்று பிரேக் போட்டால் சில பிளஷர் கார்களின் பின்புறத்திலே செக்கச் சிவந்த ‘டேஞ்சர் ளைட்டு’கள் தனி வனப்புடன் பளிச்சிடுகின்றனவே, அத்தகைய ஒளிக் கவர்ச்சி மிளிர்ந்தது. அந்தப் பூவிலே. அடுக்கடுக்காய்த் தனி எழிலுடன் திகழ்ந்த அந்தப் பூவை ஒரு தரம் பார்த்தால் வைத்த கண் வாங்காது பார்த்து நிற்கும் ஆசை எழும். கூர்ந்த கவனித்தாலோ கண்களை உறுத்தும். அதை பார்க்க கூடாது என்று வெறுத்துத் திரும்பினால், மீண்டும் மீண்டும் கண்கள் அதன் மீதே தாவிச் சுழலும். ஏதோ வசிய சக்தியிருந்தது அம்மலரிலே. ரத்தம் சிந்திப் பெருகுவது வெறுப்பு, பயம், அருவருப்பு, ஆச்சர்யம், வேடிக்கை பார்க்கும் எண்ணம் போன்ற விதவித உணர்ச்சிகளைக் கிளறி விடுவது போலவே, அந்தச் சிவப்புப் பூவும் மனித உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது. அதை ஒரு தரம் கண்டவர்கள் என்றுமே மறக்க முடியாது. ஆகையினால் அதை மிடுக்காகச் சூடியிருந்த அந்த மனிதரையும் அவர்கள் மறக்க முடியாது.

‘இவர் நல்ல மனிதராகத்தான் தோன்றுகிறார். இல்லையெனில், பொரியரிசி மாதிரிப் பத்தாயிரம் ரூபாயை அள்ளிக் கொடுக்க மனசு வருமா?’ என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். அவர் அந்த ஊருக்கு வந்த புதிதில் அவரைப் பத்தி இஷ்டம் போல் வம்பளந்ததற்காக மனமாற வருந்திய நல்ல மனிதர்கள் சிலரும் இல்லாமல் போகவில்லை அந்தக் கூட்டத்திலே.

அவர் பெயர் ருத்ரமூர்த்தி என்ற உண்மை பரவி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ‘நல்ல மனிதருக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. அவரைப் பெற்றெடுத்த பாக்கியவான்கள்’ என்று குறைப்பட்டனர் சிலர். இவருக்கு ஏன் தான் டேஞ்சர் லைட் மாதிரிப் பளிச்சிடுகிற சிவப்புப் பூவிலே மோகம் விழுந்ததோ தெரியவில்லை என்று அங்கலாய்த்தார்கள் சிலர்.

உலகம் பலவிதம்! அந்த உலகத்தையே அலட்சியமாக மதிப்பவர் போல நடந்து கொண்டார் அவர். என்றாலும், விழா நிகழ்ச்சிகளின் இறுதிக் கட்டம் வரை பொறுமையுடனிருந்தார் அவர். நாடகத்தைக் கூடக் கண்டு மகிழ்ந்தார். அதில கதாநாயகியாக பிடித்த குமாரி பவானிக்கு அவரே தங்கப் பதக்கம் ஒன்று பரிசளித்து, அவளது திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு தமது காரிலேறிப் போய்ச் சேர்ந்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருளடைந்த_பங்களா/003&oldid=1896426" இலிருந்து மீள்விக்கப்பட்டது