உள்ளடக்கத்துக்குச் செல்

இருளடைந்த பங்களா/004

விக்கிமூலம் இலிருந்து

4


‘ரெண்டுங்கெட்டான்புரம்’ அதிவிசேஷ அற்புதப் பரபரப்புச் சம்பவங்கள் நிகழும் அரங்கமாகி விட்டதாகத் தெரிய வந்தது. மிகக் குறுகிய காலத்திலே அதற்கு அந்தச் சிறப்பு வந்து சேர்ந்தது. ஆனால், அந்த ஊரிலுள்ள அப்பாவி ஜனங்கள் அதற்காகப் பெருமைப்படவில்லை. அர்த்தமற்ற கலவரத்தையே வளர்த்தார்கள். காரணத்தைக் கண்டு பிடிக்கும் வகை தெரியாது திகைத்தனால் அவர்களது கலக்கம் அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை.

அவ்வூரில் சிறப்பாகத் திகழ்ந்த பள்ளிக்கூட ஆண்டு விழாவின் இரவிலே, நாடகத்தில் நடித்து புகழ் பெற்ற மாணவி குமாரி பவானி பள்ளிக்கூடத்தை விட்டுக் கிளம்பியவள் வீடு போய்ச் சேரவேயில்லை.

‘இப்ப வருவாள்; இதோ வந்து விடுவாள்; வாரமலா போவாள்' என்று தெரு வாசலையும் வீட்டுக் கடியாரத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்களுக்கு 'பக்குப் பக்கென்று’ தானிருந்தது. இரவிலே மணி பன்னிரண்டரையாகியும் பதினாறு வயது மகள் வீடு வந்து சேரவில்லை யென்றால் அவர்களது உள்ள நிலை வேறு எப்படியிருக்கும்!

பொறுமை யிழந்த அவர்கள் அங்குமிங்கும் ஆட்களை அனுப்பினார்கள். தந்தையும் தாயும் பவானியின் நெருங்கிய சிநேகிதிகளின் வீடுகளுக்குப் போய் விசாரித்தார்கள். பலனில்லை.

‘பவானி இன்னும் வரலே? அவதான் நாடகம் முடிந்த உடனேயே வீட்டுக்குக் கிளம்பிவிட்டாளே.. பெரிய தெருவைத் தான்டி அவள் திரும்பியதைக் கூடப் பார்த்தேனே’ என்றெல்லாம் பலரும் சொன்னார்களே தவிர கடைசியாக அவளை எங்கே யார் பார்த்தது என்று திட்டமாகக் கூறுவாரில்லை.

சில வெடிவால்கள் மட்டும் ‘குட்டி எவன் கூடவாவது போயிருப்பாள். விடியட்டுமே, அப்ப வீடு போய்ச் சேர்ந்தால் போதாதா என்று எண்ணியிருப்பாள்’ என்று தங்களுக்குள் விஷப் பேச்சு உதிர்த்துச் சிரித்தார்கள்.

விடிந்த பிறகுக் கூட குமாரி பவானி வந்து சேரவில்லை; அவளைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை என்றதும்தான் அந்த ஊர் ‘ஆங், அப்படியா சமாச்சாரம்?’ என்று நிமிர்த்து உட்கார்ந்தது. வழக்கம் போல் பலரும் பலவிதமாகப் பேச்சு ஒலிபரப்பினர்கள்.

இரண்டாவது நாள் அந்திக் கருக்கலில் குமாரி பவானி கண்டெடுக்கப் பட்டாள்.

ஆமாம்; கண்டுதான் எடுத்தார்கள் அவளை! பள்ளிக் கூடத்தின் தோட்டத்திலே சில செடிகளிடையே கிடந்தது அவள் உடல். தக்காளிப் பழம் போல் ஜம்மென் மின்னிய தேகம் வெளுத்துக் கிடந்தது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. கண்கள் எதையோ கண்டு பயந்து மிரண்டது போல் நிலைகுத்தி நின்றன. உதடுகள் சற்றே பிரிந்து வெளிறிப்போய்க் காட்சியளித்தன. ரத்தம் இழந்து கிடந்தாள் அவள்.

இந்நிலை அவளுக்கு ஏற்படுவானேன்? அவள் திடீரென்று மறைந்த மாயம் என்ன? அவள் பதுங்கி யிருந்த மர்மம் யாது? அவளை யார் என்ன செய்து இக்கதிக்கு ஆளாக்கினார்கள்? — எவரெவரோ என்னென்னவோ கேட்டார்கள். பதில் யார் சொல்வது!

குமாரி சவம் போல் கிடந்தாள்.

அந்த ஊரின் பிரபல டாக்டர் பரிசோதித்து, அவள் தேகத்தில் ரத்தக் குறைவு ஏற்பட்டுள்ளது; புது ரத்தம் உடனே செலுத்தப்பட வேண்டும் என்று சொன்னார். அவ்விதம் செய்தாலும், அவன் பிழைப்பாள மாட்டாளா என்து தன்னால் உறுதி கூற முடியாது என்றும் கையை விரித்தார்.

ஆயினும் சிகிச்சை ஆரம்பமாயிற்று.

‘எல்லாம். அந்த ரத்தக் காட்டேறியின் வேலை தான்’ என்று சொன்னார்கள் ஆதியிலிருந்தே அவ் எண்ணத்தை வளர்த்தவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருளடைந்த_பங்களா/004&oldid=1896428" இலிருந்து மீள்விக்கப்பட்டது