இலங்கையில் ஒரு வாரம்/3
3
“தமிழ் மணங் கமழ வேண்டும்” என்று மணிரங்கு ராகத்தில் கீர்த்தனம் பாடுகிறார்களே, உண்மையில் தமிழுக்கு என்று ஒரு தனி மணம் உண்டா என்று கேட்டால், கட்டாயம் உண்டு என்று நான் தயங்காது சொல்வேன். தமிழ் மணம் என்பது புகையிலைச் சுருட்டைப் புகைக்கும்போது உண்டாகும் மணமாகவே இருக்கவேண்டும். யாழ்ப்பாணத் தமிழர்களோடு பழக நேர்ந்தவர்கள் யாரும் இதை எளிதில் கண்டுகொள்வார்கள்.
யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய வாய்கள் சிறிது நேரம்கூடச் சும்மா இருப்பதில்லை. ஒன்று அவை அழகிய தமிழில் கதைத்துக் கொண்டிருக்கும்; அல்லது நறுமணச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருக்கும். அவர்கள் பேசும் தமிழில் இனிய புகை மணம் கமழும் என்பதைப் பற்றி எள்ளளவும் ஐயமில்லை.
இப்படிப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்களில் தமிழர் தலைவர்களில் பேராசிரியர் அருள் நந்தி ஒருவர். கொழும்பு தமிழ்ச் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து இவர்தான் அச் சங்கத்தின் தலைவர். இவர் முன்னாளில் இலங்கை அரசாங்கக் கல்வி இலாகாவில் உத்தியோகம் பார்த்தார். டிபுடி டைரக்டர் என்ற பதவி வரைக்கும் வந்தார். அதற்கு மேலே நியாயமாக டைரக்டர் பதவிக்கும் இவர் வந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கை சிங்கள சர்க்காரின் வேற்றுமைக் கொள்கை அதற்குக் குறுக்கே வழி மறைத்து நின்றது. நல்ல வேளையாக, இச் சமயத்தில் இலங்கையைச் சுதந்திரம் தேடிக்கொண்டு வந்தது. காந்தி மகானுடைய தவத்தினால் இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் இந்தியாவோடு நின்று விடவில்லை. கடல் கடந்து இலங்கைக்கும் சென்றது. பர்மாவுக்கும் ஜாவா-சுமத்ராவுக்கும் கூட அல்லவா அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!இலங்கைக்குச் சுதந்திரம் வந்தபோது சிங்கள மந்திரிகள் அதுவரை அரசாங்க உத்தியோகத்திலிருந்தவர்களுக்குச் சுதந்திரம் அளிக்க முன் வந்தார்கள்! “உபகாரச் சம்பளத்துடன் விலகிக் கொள்ள விரும்புகிறவர்கள் விலகிக்கொள்ளலாம்” என்றார்கள். அச் சமயம் பார்த்து உத்தியோக விலங்கை உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களில் ஸ்ரீ அருள் நந்தி ஒருவர். தற்சமயம் இலங்கை சர்வகலாசாலையில் தத்துவப் போதகராயிருந்து வருகிறார்.
பேராசிரியர் அருள் நந்தி அவர்களை அறிவுக் களஞ்சியம் என்று கூறுவது மிகையாகாது. நவீன மேனாட்டுக் கல்வியில் தலை சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பழந்தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்து கற்றவர். எவ்வளவுக்குப் படித்தவரோ, அவ்வளவுக்கு அடக்கம் வாய்ந்தவர். “நிறைகுடம் தளும்பாது” என்பதற்கு ஸ்ரீ அருள் நந்தி பிரத்யட்ச உதாரணமாவார். இவ்வளவு அடக்கம் வாய்ந்தவராயினும், அவருடைய உள்ளத்தில் பொங்கும் தமிழன்பை வெளியிடச் சந்தர்ப்பம் நேரும்போது அவருடைய அடக்கம் பறந்துவிடுகிறது. கொழும்பு தமிழ்ச் சங்க விழா இரண்டு தினங்கள் நடந்து முடியப் போகும் தறுவாயில் இவர் சில வார்த்தைகள் கூறினார். “இளம் பிராயத்தில் நான் ஒரு கவி பாடினேன். அதைக் கேளுங்கள்”! என்று ஆரம்பித்தார். கவி என்ன என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அதன் கருத்தை மட்டும் சொல்கிறேன்.
ஸ்ரீ அருள்நந்தி இந்த உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்களைக் கண்டு கலங்கினாராம். மும் மலங்களுக்கு இடமாகிய இந்தப் பிறவியை எதற்காக அளித்தாய் என்று இறைவனிடம் முறையிட்டாராம். எப்படியாவது இந்த மானிட வாழ்க்கையிலிருந்து தம்மைத் தப்புவித்துக் கரைசேர்க்கும்படி கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாராம். அச்சமயத்தில் ஒரு கன்னியைச் சந்திக்க நேர்ந்து அவள் பேரில் மோகம் கொண்டாராம். உடனே அவருடைய மனப்பான்மை அடியோடு மாறிப் போய் விட்டதாம்! “தமிழணங்கே! உன்னுடைய காதலின் இன்பத்தை அனுபவிப்பதற்காக இந்தக் கொடிய மும் மலங்களுக்கு இடமாகிய மனிதப் பிறவியைக் கூட நான் சகித்துக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்!” என்று சொன்னாராம்.
தெய்வத் தமிழ் மொழியின் பேரில் ஸ்ரீ அருள் நந்திக்கு அவ்வளவு மோகம். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசி வித்வான் கனகசுந்தரம் அவர்களுக்கோ தமிழில் மோகம் என்பது மட்டுமல்ல; அதன் காரணமாகப் பலர் மீது கோபம். தமிழைக் குறைத்துச் சொல்கிறவர்களின் மீது கோபம். தமிழ்ச் சங்க விழாவுக்கு முட்டுக்கட்டை போட்டதாக அவருக்குத் தோன்றியவர்கள் மீது கோபம். எதிர்பார்த்த அளவு அவருடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பணி செய்யாதவர்கள் மீது கோபம். இவை எல்லாவற்றையும் விட, இலங்கைக்குத் தமிழர்கள் புதிதாக வந்தவர்கள் என்று சொல்கிறார்களே, அவர்கள் மீது அவருக்கு மெத்தக் கோபம்.
“தமிழர்களா புதிதாக இலங்கைக்கு வந்து குடி யேறியவர்கள்? ஒரு நாளும் இல்லை. சிங்களவர்கள் தான் அஸ்ஸாமிலிருந்தோ, வங்காளத்திலிருந்தோ, கலிங்கத்திலிருந்தோ வந்து இலங்கையில் குடியேறினார்கள். இப்போது வந்திருக்கும் பூகம்பத்தைப் போல் அந்த நாளிலும் ஒரு பூகம்பம் வந்திருக்கும்; அதற்குப் பயந்து ஓடி வந்தார்கள். தமிழர்களாகிய நாங்கள் தான் இலங்கையின் ஆதி குடிகள். அப்படி நாங்கள் வெளியிலிருந்து வந்திருக்கும் பட்சத்தில் வடக்கிலிருந்து வந்தவர்கள் அல்ல. இலங்கைக்குத் தெற்கே லமூரியா கண்டம் கடலில் மூழ்கிய போது அங்கிருந்து கிளம்பி வந்தோம். சிலர் இலங்கையில் தங்கினோம். சிலர் தமிழகத்துக்குப் போனோம். எப்படியும் முதலில் இலங்கைக்கு வந்தவர்கள் நாங்கள் தான்!” என்று வித்வான் கனகசுந்தரம் சக்கைப் போடு போட்டார். அவரை யார் மறுத்துச் சொல்ல முடியும்? முடியவே முடியாது. லமூரியா கண்டம் இலங்கைக்குத் தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் லமூரியா கண்டம் இருந்திரா விட்டால் அது எப்படி முழுகியிருக்க முடியும்? முடியாது தானே ! எப்போது லமூரியா கண்டம் கடலில் மூழ்கிற்று என்று ஏற்பட்டதோ, அதற்கு முன்னால் வெளியே அது இருந்திருக்கத்தானே வேண்டும்!
ஆவேசமும் ஆத்திரமும் உள்ளவர்கள் தான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும். வித்வான் கனகசுந்தரம் அவர்களிடம் இந்தப் பண்புகள் இருக்கின்றன. அதோடு நிர்வாகத் திறமையும் இருக்கிறது. தமிழ்ச் சங்க ஆண்டு விழாவை அவர் இவ்வளவு சிறப்பாக நடத்தியதே அவருடைய திறமைக்குச் சான்றாகும். தமிழ்த்தாயை இலங்கையிலிருந்து ஓட்டி விடலாம் என்று யாராவது கனவு கண்டிருந்தால் அது இனி ஒருக்காலும் பலிக்கப் போவதில்லை. ஏனெனில் தமிழ்த் தாய்க்குக் கொழும்பு நகரில் ஒரு நிலையான வாசஸ்தலம் ஏற்படுத்துவதற்கு வித்வான் கனகசுந்தரம் ஏற்பாடு தொடங்கிவிட்டார். கடன் வாங்கி நிலம் வாங்கியாகி விட்டது. நிலத்துக்காக வாங்கிய கடனை அடைத்து விட்டுப் பிறகு தமிழ்த் தாய் வசிக்க அந்த நிலத்தில் ஓர் இல்லம் அமைக்க வேண்டும். கொழும்புத் தமிழ்க் சங்கத்துக்கு ஒரு சொந்தக் கட்டடம் மட்டும் ஏற்பட்டு விடட்டும்; அப்புறம் “தமிழை இலங்கையிலிருந்து விரட்டுவேன்” என்று எவன் துணிந்து சொல்ல முன் வருவான்? பார்க்கலாம் ஒரு கை!
காரியதரிசி கனகசுந்தரம் அவர்களின் மனோரதம் நிறைவேறுவது அப்படியொன்றும் பிரமாதமான காரியமன்று. விரைவிலேயே அது நிறைவேறிவிடும் என்று நம்புகிறேன். தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான தமிழர்களின் மலர்ந்த முகங்கள் எனக்கு அந்த நம்பிக்கையை அளித்தன. வித்வான் கனகசுந்தரம் இனிய தமிழ்ப் பண்புக்குரிய முறையில் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரிப் பெற்றுத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிறுவுவார் என்று நம்புகிறேன்.
தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்தவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே கூறியே தீரவேண்டும். தமிழகத்தில் சென்ற ஏழெட்டு ஆண்டுகளாகப் பல தமிழ் விழாக்கள், கவிஞர் விழாக்கள், நடந்திருக்கின்றன. “அந்த விழாக்களில் பலவற்றுக்கும் நான் சென்றிருக் கிறேன். ஆனால் இந்தக் சபையைப் போலப் பார்த்ததில்லை” என்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சொன்னேன். அதையே தான் இங்கேயும் சொல்கிறேன். அங்கே ஒன்றும் இங்கே வேறொன்றும் சொல்லும் வழக்கம் என்னிடம் கிடையாது. தமிழ் நாட்டில் நடக்கும் தமிழ் விழாக்களில் வெள்ளை வெளேரென்ற ஆடை அணிந்து மலர்ந்த முகங்களுடன் சொற்பொழிவுகளை ரஸித்து அநுபவித்துக் கொண்டிருப்போர் கூட்டத்தைச் சபையில் ஒரு பகுதியில் பார்க்கலாம். அவர்கள் செட்டி நாட்டிலிருந்து வந்த தமிழன்பர்களாயிருப்பார்கள். ஸ்ரீ சா. கணேசன் அவர்களுடைய சட்டையணியாத கரிய திருமேனி மற்றவர்களின் ஆடை வெளுப்பை நன்கு எடுத்துக் காட்டும். கொழும்பில் தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்த கூட்டம் முழுதுமே அப்படியிருந்தது. எல்லாரும் தூய வெள்ளை உடை தரித்தவர்கள். (பெரும் பாலோர் அடையாறு பாணியில் சட்டை அங்கவஸ்திரம் அணிந்தவர்கள்.) அவ்வளவு பேரும் மலர்ந்த முகத்தினர். சொற்பொழிவாளர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து உணர்ந்து அனுபவித்து ஆனந்தப் படுகிறவர்கள். ஒவ்வொரு சமயம் எனக்குத் தோன்றியது, மேடையில் ஏறிச் சொற்பொழிவு ஆற்றுகிறவர்களைக் காட்டிலும் சபையில் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் படித்து அறிந்தவர்கள் என்று. தமிழனுக்குரிய உயர்ந்த பண்பாட்டின் காரணமாகவும் தமிழன்பு காரணமாகவுமே அவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் சொற்பொழிவுகளை ரஸித்து மகிழ்கிறார்கள் என்றும் கருதினேன்.
ஆண் மக்கள் மட்டும் அல்ல; பெண் மணிகள் பகுதியிலும் அப்படியேதான். யாழ்ப்பாணத் தமிழர் குடும்பங்களில் படித்த பெண்மணிகள் அதிகம். இலங்கையின் முன்னேற்றத்துக்குப் பல துறையிலும் காரண புருஷரான ஸர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெண்கள் கலாசாலை யொன்று நிறுவினார். அதில் படித்த பெண்மணிகள் பலர் இப்போது கொழும்பில் பெரிய குடும்பங்களில் எஜமானிகளாயிருக்கிறார்கள். அவர்கள் “சைவ மங்கையர் கழகம்” என்னும் ஸ்தாபனத்தை நிறுவி நன்கு நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய கழக மண்டபத்திலேதான் தமிழ்ச் சங்க விழா நடந்தது. இதிலிருந்து தமிழ் விழாவுக்கு வந்திருந்த பெண்மணிகள் எந்தத் தரத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
மண்டபத்தில் பாதி இடத்தைத் தாய்மார்களே அடைத்துக் கொண்டார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பகுதியிலிருந்து ஏதேனும் பேச்சுச் சத்தம் அல்லது ‘குவா குவா’ சத்தம் வரவேண்டுமே? அவ்வப்போது சொற்பொழிவை ரஸித்துச் சிரிக்கும் சத்தத்தைத் தவிர வேறு சத்தமே கிடையாது. சுருங்கச் சொன்னால், அங்கே வந்திருந்த தாய்மார்கள் தங்கள் மகவுகளைக்கூட மறந்திருந்தார்கள். குழந்தைகள் அழுகையை மறந்திருந்தன. ஆண் பிள்ளைகளோ சுருட்டுப் புகைத்தலைக்கூட மறந்து தமிழின்பத்தில் லயித்திருந்தார்கள். சபையிலிருந்தவர் யாருமே சுருட்டுப் புகைக்கவில்லை! ஸ்ரீ அருள் நந்தி கூடத்தான்! இந்த விந்தையை என்ன வென்று சொல்வது? அவர்களுடைய தமிழன்பை என்ன சொல்லிப் பாராட்டுவது ? இயலாத காரியம்.
இத்தகைய அருமையான தமிழன்பர்கள் ஆயிரக் கணக்காக உள்ள நகரத்தில் தமிழ்த் தாய்க்கு ஒரு சிறிய கட்டிடம் கட்டுவதுதானா பெரிய காரியம்? நல்ல முறையில் முயற்சி தொடங்கினால், இலங்கையில் வாழும் பதினைந்து லட்சம் தமிழர்களும் அந்தத் திருப்பணிக்கு உதவி செய்வார்கள் என்பது நிச்சயம்.
★★★
“அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் சொல்லும் வழக்கமில்லை என்றீரே? சென்ற இதழில் ‘ஏழரை லட்சம்’ தமிழரைப் பற்றிச் சொல்லியிருந்தீர்? இந்த இதழில் ‘பதினைந்து லட்சம்’ தமிழர் ' என்கிறீரே! ஏழு நாளைக்குள் ஏழரை லட்சம் தமிழர்கள் அதிகமானது எப்படி?” என்று நேயர்கள் சிலர் கேட்கக் கூடும்.
என் அன்பார்ந்த நேயர்களே! கட்டாயம் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியது தான். நான் பதில் சொல்லக் கடமைப் பட்டவன். சென்ற இதழில் நான் கூறியதும் உண்மை; இந்த இதழில் நான் மேலே கூறியிருப்பதும் உண்மை. சென்ற இதழில் குறிப்பிட்ட ஏழரை லட்சம் தமிழர்கள் கடந்த நூறு ஆண்டுக்குள் தோட்டத் தொழிலாளிகளாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் சில்லறை வர்த்தகர்களாகவும் சென்று இலங்கையில் குடியேறியவர்கள். இந்த ஏழரை லட்சம் தமிழர்களின் பிரஜா உரிமைகளைப் பறித்து அவர்களை விரட்டியடித்துவிடத்தான் கருணை மிகுந்த சிங்கள மந்திரிகள் முயன்று வருகிறார்கள்.
இலங்கையில் வசிக்கும் இன்னொரு ஏழரை இலட்சம் தமிழர்களோ பழைய புராதன பூர்வீக இலங்கைக் குடிகள். அவர்கள் இலங்கையில் எப்போது வந்து குடியேறினார்கள் என்பதை வரையறுத்துக் கூற இயலவில்லை. குறைந்தபட்சம் இரண்டாயிர வருஷங்களாக இந்தப் பழந்தமிழர்கள் இலங்கைக் கடற்கரையோரப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். தமிழ் நாட்டுக்கும் இவர்களுக்கும் சரித்திர பூர்வமாகத் தொடர்பு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்த பெரியார்களான ஸ்ரீ ஆறுமுக நாவலரும் சுவாமி விபுலானந்தரும் இலங்கையின் பூர்விகத் தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே.
தவிர, இலங்கை பல துறைகளிலும் புத்துயிர் பெறுவதற்குக் காரண புருஷராயிருந்த ஸர் பொன்னம்பலம் ராமநாதன் ஈழ நாட்டுப் பழம்பெருங் குடியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இலங்கையில் ஸர் பி. ராம நாதனுக்கு இணையில்லாத செல்வாக்கு இருந்தது. பழைய யதேச்சாதிகார பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்திலும் அவருக்கு இணையில்லாத மதிப்பு இருந்தது. சர்க்காரும் மதித்தனர்: மக்களும் மதித்தனர். சிங்கள மக்களோ அவருக்கு என்றென்றும் தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டவர்கள்.
முதலாவுது மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1917-18ல், இலங்கையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்றது. இன்றைய தினம் இலங்கையின் சர்வ சக்திவாய்ந்த பிரதமராயிருக்கும் ஸ்ரீ சேன நாயகர் அப்போது சாதாரண பிரஜையாக இருந்தார். அவரும் அவருடைய சகாக்கள் சிலரும் மதுவிலக்கு இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த இயக்கத்தின் காரணமாகச் சிங்களவரிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டது. அது எப்படியோ சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் அடிதடி கலகமாக முடிந்தது. இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால், மேற்படி சமூகக் கலவரத்தை அப்போ திருந்த பிரிட்டிஷ் கவர்னர் பிரிட்டிஷ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எழுந்த பெரும் புரட்சியாக எண்ணிவிட்டார். உடனே சேன நாயகா, பேரன் ஜயதிலகா முதலிய பல முக்கியமான சிங்களத் தலைவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தார். சிங்கள மக்கள் பீதியடைந்து செய்வதறியாது திகைத்திருந்தனர். அச்சமயம் ஸர் பொன்னம் பலம் ராமநாதன் “நான் இருக்கிறேன், அஞ்ச வேண்டாம்!” என்று அபயப் பிரதானம் அளித்தார். “இங்குள்ள அதிகாரிகளிடம் மன்றாடிப் பயனில்லை. இங்கிலாந்து சென்று உண்மையை எடுத்துக்கூறி நியாயம் பெற்று வருகிறேன்!” என்று பிரயாணமானார். எம்டன் கப்பல் குண்டு போட்ட காலத்தில், கடற் பிரயாணம் மிக அபாயம் நிறைந்ததாயிருந்த காலத்தில், இங்கிலாந்துக்குக் கப்பலில் பிரயாணமானார். பிரயாணத்தின் போதே இலங்கையின் நிலைமையை விளக்கியும், சிங்களத் தலைவர்களுக்கு இழைத்த அநீதியை எடுத்துக் காட்டியும் ஒரு புத்தகம் எழுதினார். இங்கிலாந்து சேர்ந்ததும் அதை அச்சிட்டுப் பார்லிமெண்டு அங்கத்தினருக்கும் மந்திரிகளுக்கும் கொடுத்தார். பிரதமர் லாயிட் ஜார்ஜையும் மற்ற மந்திரிகளையும் பேட்டிகண்டு பேசினார். அந்த அபாயகரமான யுத்த சமயத்தில் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கருத்தையும் மாற்றினார். அதன் பலனாகச் சிங்களத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அது மட்டும் அல்ல: மேற்கூறிய அநீதிக்குக் காரண புருஷரான பிரிட்டிஷ் கவர்னர் திருப்பி அழைக்கப்பட்டார். இம்மாதிரி கவர்னரைத் திருப்பி அழைத்தது என்பது அதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. அதற்குப் பிறகு, இந்தியாவில் வைஸராய் வேவல் திருப்பி அழைக்கப்பட்ட ஒரு சம்பவம் தான் நிகழ்ந்திருக்கிறது.
ஸர் பி. ராமநாதன் இலங்கை திரும்பி வருவதற்குள் மேற்கூறியவை நடந்துவிட்டன. எனவே, ஸர் பி. ராமநாதன் கொழும்பில் வந்து இறங்கிய போது அவருக்குச் சிங்களவர்கள் அளித்த வரவேற்பைப் போல் அதற்கு முன்னும் இலங்கை பார்த்ததில்லை; அதற்குப் பிறகும் பார்த்ததில்லை. குதிரைகள் பூட்டிய ரதத்தில் அவரை வைத்துக் கொழும்பு வீதிகளில் ஊர்வலம் விட்டார்கள். ஆயிரமாயிரம் மக்கள் வீதிகளில் இருபுறமும் நின்று ஜய கோஷம் செய்தார்கள். ரதம் ஒரு முக்கியமான நாற் சந்திக்கு வந்ததும் குதிரைகளை ரதத்திலிருந்து அவிழ்த்து விட்டு விட்டுச் சிங்களத் தலைவர்கள் தாங்களே ரதத்தை இழுத்தார்கள்; ஸர் ராமநாதனிடம் தங்களுடைய அன்பையும் மரியாதையையும் நன்றியையும் காட்டுவதற்காகத்தான்.
இதெல்லாம் பழங்கதைதான். ‘கதையா? கனவா?’ என்றுகூடச் சந்தேகம் தோன்றும் வண்ணம் தற்சமயம் இலங்கையில் காரியங்கள் நடந்து வருகின்றன. சிங்கள மந்திரிகளின் மனப்போக்கு அவ்வளவு தூரம் மாறியிருக்கிறது. புதிதாக வந்த இந்தியர்களின் பிரஜா உரிமைகளைப் பறிக்கப் பார்ப்பது போல், யாழ்ப்பாணத் தமிழர்களின் பிரஜா உரிமைகளைச் சிங்கள மந்திரிகள் பறிக்க முடியாது. அவர்களை இலங்கையை விட்டுத் துரத்தி விடலாம் என்று கனவு காணவும் முடியாது.
ஆயினும் ஏழரை லட்சம் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனதில் இன்று அமைதி இல்லை; நாளை என்ன நேரிடுமோ என்ற கவலை குடி கொண்டிருக்கிறது. இன்று ஏழரை லட்சம் புதிய இந்தியர்களைத் துரத்தப் பார்க்கிறவர்கள் நாளைக்கு ஏழரை லட்சம் பழைய தமிழர்களை எப்படி நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்? இலங்கையின் மொத்த ஜனத்தொகை 67 லட்சம். பழைய தமிழரும் புதிய தமிழரும் சேர்ந்தால் பதினைந்து லட்சம். இந்தப் பதினைந்து லட்சத்தில் ஏழரை லட்சம் பேரை உரிமை அற்றவர்களாக்கிவிட்டால் மிச்சமுள்ள ஏழரை லட்சம் தமிழர்கள் மிகச் சிறுபான்மையாகிவிடுவார்கள் அல்லவா? யாழ்ப்பாணப் பழந் மிழர்களில் பெரும் பணக்காரர்களோ, தோட்ட முதலாளிகளோ அதிகம் பேரில்லை. பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர். படிப்பு, சர்க்கார் உத்தியோகம், வக்கீல் வேலை, உபாத்தியாயர் வேலை முதலியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள். வருங்காலத்தில் இவர்களுடைய நிலைமை என்ன ஆகும்? எனவே, பழந்தமிழர்களில் தீர்க்க திருஷ்டி உள்ளவர்கள் எல்லாரும் புதுத் தமிழர்கள் நடத்தும் பிரஜா உரிமைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று மனமார விரும்புகிறார்கள்.
யாழ்ப்பாணத் தமிழர்களுடைய தமிழன்பைக் குறித்து முன்னம் மகிழ்ச்சியுடன் கூறினேன். இனியும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் அவர்களுடைய அரசியலைப் பற்றி அவ்வளவு மகிழ்ச்சியுடன் சொல்வதற்கில்லை. அதைப் பற்றிச் சோகரசம் கலவாமல் சொல்லவோ எழுதவோ இயலாதுதான்.
எனக்குத் தெரிந்தவரையில் இலங்கைத் தமிழர்களிடையில் நாலு அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஒன்று, பழைய நிதானக் கட்சி, இரண்டு, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் புதிய ஒத்துழைப்புக் கட்சி; மூன்றாவது, தமிழரசுக் கட்சி அல்லது சமஷ்டிக் கட்சி: நாலாவது, சுதந்திரக் காந்தீயக் கட்சி.
பழைய நிதானக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஸர் பி. ராமநாதனுடைய மாப்பிள்ளை ஸ்ரீ எஸ். நடேசன், ஸர் அருணாசலத்தின் குமாரர் ஸர் ஏ. மகாதேவா முதலியவர்கள். இவர்கள் தமிழர்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் பின்வாங்கியவர்கள் அல்ல. சிங்கள மந்திரிகளுக்கு இவர்களிடம் மரியாதை உண்டு. அவசியமானபோது ஒத்துழைத்தும் அவசியமானபோது போராடியும் வந்தார்கள்.
இவர்களுக்குப் போட்டியாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஏற்பட்டது. இதன் தலைவர் ஸ்ரீ பொன்னம்பலம் என்பவர். பத்து வருஷத்துக்கு முன்னால் நான் இலங்கை சென்றிருந்தபோது இவரை இலங்கையின் எரிமலை என்று பலரும் சொன்னார்கள். தீப்பொறி பறக்கும்படி சிங்கள மந்திரிகளைத் தாக்கியும் தமிழர் உரிமைகளைத் தாங்கியும் பேசுவார். இவர் போகுமிடங்களுக்கெல்லாம் நெருப்பணைக்கப் பின்னோடு ஒரு ‘பயர் என்ஜின்’ போகும் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
இத்தகைய வீராவேசத்துடன் ஸ்ரீ பொன்னம்பலம் கட்சியார் சென்ற தேர்தலில் போட்டியிட்டுப் பழைய பிரமுகர்களைத் தோற்கடித்தார்கள். சில நாள் வரையில் இலங்கைப் பார்லிமெண்டில் போராடியும் வந்தார்கள். பிறகு ஒரு நாள் ஸ்ரீ பொன்னம்பலம் ஸ்ரீ சேனநாயகாவின் மந்திரி சபையில் மந்திரியாகிவிட்டார்! மந்திரி வேலை நன்றாகவே பார்த்துவருகிறார். பேச்சும் முன்னைவிடத் தீவிரமாகவே பேசிவருகிறார். எனினும், இது அவருடன் சேர்ந்திருந்தவர்களிலேயே சிலருக்குப் பிடிக்கவில்லை.
அப்படிப் பிடிக்காமல் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிச் சிலர் ‘தமிழரசுக் கட்சி’ என்ற புதிய கட்சியை அமைத்திருக்கின்றனர். இந்தக் கட்சியின் தலைவர் ஸ்ரீ செல்வநாயகம். தமது கட்சியைப் பிரசாரம் செய்வதற்காகச் “சுதந்திரன்” என்னும் தினப் பத்திரிகையை இவர் ஆரம்பித்து நடத்திவருகிறார். அதில் பொருள் நஷ்டமும் அடைந்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்.
“சுதந்திரன்” ஆசிரியரும், மற்றும் அங்குள்ள உதவி ஆசிரியர் சிலரும் என் நண்பர்கள். எனவே, அவர்களைச் சந்திக்கச் “சுதந்திரன்” காரியாலயத்துக்குப் போனேன். அங்கே ஸ்ரீ செல்வநாயகம் இருந்தார். அப்போதுதான் என்னுடைய பெருமை எனக்குத் தெரிந்தது! குறைந்த பட்சம் பதினாயிரம் பேருக்குச் சமம் நான் என்று அறிந்து கொண்டேன். ஏனெனில், பதினாயிரம் பேர் அடங்கிய கூட்டத்தில் பிரசங்கம் செய்வது போல் ஸ்ரீ செல்வநாயகம் தமது கட்சியை எனக்குச் சொற்பொழிவாகவே ஆற்றினார்!
இது ஒரு பழைய சம்பவத்தை எனக்கு ஞாபகப்படுத்திற்று. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாதம் மும்மாரி பொழிந்து தேசம் சுபிட்சமாயிருந்த காலத்தில், மகாத்மா சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தார். சுயராஜ்ய மந்திரத்தைக் கிராமங் கிராமமாகப் போய்ச் சொல்ல வேண்டு மென்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். நானும் சில கிராமங்களுக்குப் போனேன். ஒரு கிராமத்தில் தம்பட்டம் அடித்து, கிராமச் சாவடிக்கு முன்னால் மாபெரும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த பிறகு, குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு ஹரிகேன் லாந்தருடன் சாவடிக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரே ஒரு மனிதர்தான் ஆஜராயிருந்தார். அந்த ஒருவராவது வந்திருக்கிறாரே என்ற நன்றி உணர்ச்சி யுடன், பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களைப் பற்றி, சாங்கோபாங்கமாகக் கேட்பவரின் இரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்றேகால் மணி நேரம் பிரசங்கம் செய்தேன். நானே வந்தனோபசாரமும் சொல்லிக்கொண்ட பிறகு சபையோராகிய அந்தத் தனி நபரைப் பார்த்து, “ஐயா! தங்கள் தேசபக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ! எந்த ஊரோ?” என்றேன். அதற்கு அந்தப் புண்ணியவான், “என்னைத் தெரியவில்லையா, ஸாமி! நான் உம்மைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்திலிருந்து கரூர் வரையில் வந்திருக்கிறேனே? நான் சி. ஐ. டி.க்காரன்! உங்களைக் கண் காணிப்பதற்காக என்னைப் போட்டிருக்கிறார்கள்!” என்றான்.
நல்லவேளையாக நான் சி.ஐ.டி. க்காரன் அல்ல–மற்றப்படி ஸ்ரீ செல்வநாயகம் என்னை ஒரு பெரிய பொதுக் கூட்டமாக நினைத்துச் சக்கைப்போடு போட்டு விட்டார்.
ஒரு இலட்சியத்தில் ஆவேசம் உள்ளவர்கள்தான் இப்படியெல்லாம் செய்யக்கூடும். ஸ்ரீ செல்வநாயகத்துக்கு ஆவேசம் இருக்கிறது. அத்துடன் வாதத்திறமையும் அபாரமாயிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வசிக்குமிடங்கள் ஒரு தனி அரசு ஆக்கப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார். தனி அரசு என்றால் பாகிஸ்தானைப் போன்ற தனி அரசு அல்ல. உள் நாட்டுக் காரியங்களில் சர்வாதிகாரம் உள்ள தனி அரசும், வெளி நாட்டு அரசியல், போக்குவரவு, சைன்யம் முதலியவற்றுக்கு இலங்கையுடன் இணைப்பும் இவர்கள் கோருகிறார்கள். இதைச் சமஷ்டி அரசியல் என்றும் ஸ்ரீ செல்வநாயகம் கோஷ்டியார் சொல்கிறார்கள்.
தமிழரசுக் கோரிக்கைக்கு எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு, இலங்கையில் தமிழர்கள் மிகப் பெரும்பாலராய் வசிக்கும் இடங்களையெல்லாம் குறிப்பிட்டு ஸ்ரீ செல்வநாயகம் ஒரு படம் தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தின்படி கடற்கரையோரமாகக் கோடுபோட்டுக் குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் தமிழர் வாழும் பிரதேசங்கள். இலங்கையின் நடுமத்தியில் குறிப்பிட்ட பிரதேசம் புதிதாக வந்த தமிழ்த் தொழிலாளிகள் வசிக்கும் தோட்டப் பிரதேசங்கள். ஸ்ரீ செல்வநாயகம் திட்டத்தின்படி இலங்கை விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பகுதி தமிழரசாக மாற வேண்டும். இந்தக் கட்சிக்கு இலங்கையில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசம் இல்லை. ஸ்ரீ செல்வநாயகத்தின் அந்தரங்க சுத்தியான ஆர்வத்தைக் காண மட்டுமே முடிந்தது.
“சுதந்திரன்” ஆசிரியர் ஸ்ரீ சிவநாயகம் நல்ல மறு மலர்ச்சி எழுத்தாளர். அத்துடன் சிறந்த பேச்சாளர். தமிழ்ச்சங்க விழாவில் இவர் நன்கு ஒத்துழைத்து ஓர் அரிய சொற்பொழிவும் ஆற்றினார்.
ஒரு பத்திரிகையைப் பற்றிச் சொன்ன பிறகு கொழும்பில் நடந்து வரும் இன்னும் இரு தினப் பத்திரிகைகளைப் பற்றியும் சொல்லிவிட வேண்டியதுதான்.
இலங்கையில் இன்று மிகப் பிரபலமாக விளங்கும் தினத் தமிழ்ப் பத்திரிகை “வீரகேசரி” முப்பதினாயிரம் பிரதிகளுக்குமேல் இந்தப் பத்திரிகை விநியோகமாகி வருகிறது. பலவிதக் கஷ்டங்களுக்கு உள்ளாகிவரும் இந்தியர்களின் கட்சியை எடுத்துச் சொல்லி “வீரகேசரி” தீவிரமாகப் போராடி வருகிறது. யாழ்ப்பாணத் தமிழர்களின் நலன்களையும் பாதுகாக்க முயன்றுவருகிறது. ஆகவே இலங்கையிலுள்ள எல்லாத் தமிழர்களின் அபிமானத்தையும் பெற்றிருக்கிறது. இவ்வளவுடன், எந்தக் கட்சியையும் நேர்மையுடன் எடுத்துச் சொல்லிப் போராடுவதினால் இலங்கை சர்க்காரும்—சிங்கள மந்திரி களும்கூட “வீரகேசரி” யை மதித்து நடந்து கொள்ளுகின்றனர். “வீரகேசரி” " ஆசிரியர் ஸ்ரீ கே. பி. ஹரன் பரம சாத்வீகரான மனிதர். உயர்ந்த இலட்சியங்கள் படைத்தவர். சிறந்த ஆஸ்திகர்; பக்திமான். பத்திரிகைத் தொழிலுக்கு அடுத்தபடியாக ஆஸ்திக முயற்சிகளில் அவருக்குச் சிரத்தை. கொழும்பு நகரில் ஸ்ரீ சுந்தரம் பிள்ளை, ஸ்ரீ கதிர்வேலு செட்டியார் போன்றவர்கள் செய்யும் கோயில் திருப்பணிகள் கூட்டுப் பிரார்த்தனைகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஊக்கத்துடன் உதவி செய்து வருகிறார்.
“வீரகேசரி”யின் செய்திப் பகுதி ஆசிரியர் ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் அஸகாய சூரர். அறுபது டன் ருஷிய டாங்கி ஒன்றிடம் உள்ள வேகமும் ஆற்றலும் வாய்ந்தவர். இலங்கையில் அவருக்குத் தெரியாத பிரமுகர் அநேகமாக யாரும் இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலோருடைய முகம் அவருக்குத் தெரியாது. குரல் மட்டும் தெரியும். ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் டெலிபோனில் கூப்பிடுகிறார் என்றால், எப்பேர்ப்பட்ட பிரமுகரும் மற்றக் காரியங்களை நிறுத்தி வைத்துவிட்டு டெலிபோனிடம் செல்வார்கள்.
தமிழ்ச் சங்க விழா உண்மையில் “வீரகேசரி” யின் விழா என்று சொல்லும்படியாக, விழாவின் நடவடிக்கைகளை அந்தப் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார்கள் ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆஜராயிருந்தார். அவருக்குத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தெரியாது. ஆனால் அவ்வளவு பிரசங்கங்களையும் எப்படித்தான் வார்த்தைக்கு வார்த்தை சரியாயிருக்கும்படி பத்திரிகையில் பிரசுரித்தார் என்பது மிக்க வியப்பளித்தது.
ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ், “வீரகேசரி”யின் செய்தி ஆசிரியர் என்பதைத் தவிர, இந்தியாவிலும் மலேயாவிலும் உள்ள பல பத்திரிகைகளுக்கு இலங்கை நிருபராயிருந்து வருகிறார். “வீரகேசரி” வேலைகளுக்குக் குந்தகம் நேராமல் மற்ற வேலைகளைப் பார்க்கிறார்.ஒரு பொதுக் கூட்டத்தில் மாலை ஒன்பது மணி வரையில் ஆஜராயிருந்துவிட்டு, வீடு சென்று “வீரகேசரி”க்கு விவரமாக எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு பம்பாய் - மலாய் - சென்னைப் பத்திரிகைகளுக்கு எழுதி ஆகாசத் தபாலில் சேர்ப்பித்துவிட்டு, இரவு மூன்று மணிக்கு ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் தூங்கப்போவார் என்று அறிந்தேன். அவர் வாழ்க!
ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் இலங்கையின் பிரஜையாகத் தம்மைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். இது இலங்கைக்கு லாபம்: இந்தியாவுக்கு நஷ்டம். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
கொழும்பில் நடந்துவரும் மற்றொரு தினப்பத்திரிகை “தினகரன்” பொதுவாக இது இலங்கை சர்க்காரை ஆதரிக்கும் பத்திரிகை. தமிழ்ச் சங்க விழா சம்பந்தமாகத் “தினகரன்” ஒத்துழைக்கவில்லை யென்றும், செய்திகளையே போடவில்லை யென்றும் சில தமிழன்பர்கள் குறிப்பிட்டார்கள். விழா நடந்த மறு தினம் பார்த்தால், “தினகரன்” மற்றப் பத்திரிகைகளைக் காட்டிலும் ஒரு படி அதிகமாகவே தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல பத்திகள் பிரசுரித்திருந்தது.
இதிலிருந்து ஒன்று நிச்சயமாயிற்று. இலங்கையிலுள்ள தமிழர்கள் அரசியல் முதலிய துறைகளில் எவ்வளவு மாறுபட்டிருந்தாலும் தமிழ் மொழியைப் போற்றுவதில் அனைவரும் ஒன்று படுவார்கள் என்பதுதான். ஸ்ரீ தூரனுக்கும் எனக்கும் இது எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?