உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் ஒரு வாரம்/4

விக்கிமூலம் இலிருந்து

4

றுபது டன் ருஷிய டாங்கிக்கு இணையான ஆற்றல் வாய்ந்த ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் என்பவரைப் பற்றி முன்னர் குறிப்பிட்டேன் அல்லவா? அப்படிப்பட்ட ஸ்ரீ கே. வி. எஸ். வாஸின் ஆற்றலைக்கூட மீறிவிட்ட ஒரு செய்தியை இப்போது கூற விரும்புகிறேன். திருவாளர் விபீஷண அழ்வார் அவர்களுக்குச் சில நாளைக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்குக் கூறியே தீர வேண்டும். கூறாவிட்டால் விபீஷண ஆழ்வாருக்கு மன நிம்மதி ஏற்படாது.

திருவாளர் விபீஷண ஆழ்வார் தனிப்பெரும் சிரஞ்சீவித் தமிழர் என்பது ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்ப முடிந்த செய்தியாகும். இராவணன் எப்போது தமிழனோ, அப்போது அவனுடைய தம்பி விபீஷணனும் தமிழன்தான். இராவணன் தமிழன் என்பது அவனுடைய பத்துத் தலைகளின் மேலும் அடித்துச் சத்தியம் செய்து முடிந்துபோன செய்தி. அவன் முப்புரி நூல் அணிந்து, யாழ் என்னும் இசைக் கருவியை மீட்டிக் கொண்டு, சாம வேதத்தை ஓதிச் சிவபெருமானைப் புகழ்ந்து பாடிய திலிருந்து இராவணன் தமிழன் என்பது உள்ளங்கை தென்னங்கனியாக விளங்கியிருக்கிறது. இராவணனைத் தமிழன் என்றோ குறைந்த பட்சம் திராவிடன் என்றோ, நாம் ஒப்புக்கொண்டு விடுவதே நலம். இல்லாவிடில், நமது ஆராய்ச்சிக்காரர்கள் கிஷ்கிந்தா புரிவாசிகளுக்குத் தமிழர் பட்டத்தைக் கட்டித்தொலைத்து விடுவார்கள். வாலி இறந்ததும் தாரை புலம்பிய கட்டத்தை எடுத்துக் காட்டி, “ஒரு தனித்தமிழ்க் கைம்பெண்ணைத்தவிர வேறு யார் இப்படி அருமையாகப் புலம்பி யிருக்கமுடியும்?” என்று ஒரு பெரிய போடாகப் போட்டு நம்மைத் திணற அடித்து விடுவார்கள்! நிற்க.

நமது சிரஞ்சீவி விபீஷண ஆழ்வார் நெடுங்காலம் இலங்கையை ஆண்டு வந்த பிறகு கலியுகம் தொடங்கிற்று. உடனே விபீஷணரின் கவலையும் தொடங்கிற்று. சீதையும் இராமருமாகச் சேர்ந்து நம்மை இப்படி மோசம் செய்து கெடுத்து விட்டார்களே என்று வருந்தினார். இந்த உலகில் என்றென்றைக்கும் இருக்கும்படி சொல்லிவிட்டுப் போனார்களே என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். அதிலும் ஸ்ரீராமர் என்ன சொன்னார்?

இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம்!

இந்தா! இந்தா! இந்தா!

என்று பல்லவி, அநுபல்லவி, சரணங்களாகச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்! அவருக்கென்ன சொல்வதற்கு? இந்த இலங்காபுரி ராஜ்யத்தை என்றென்றைக்கும் யார் கட்டிக்கொண்டு மாரடிப்பது?... இப்படிக் கவலைப் பட்டுக்கொண்டே விபீஷண ஆழ்வார் கலியுக ஆரம்பத்தில் கொழும்புக்கு அருகில் உள்ள ஒரு குன்றின் குகையில் படுத்து அண்ணன் கும்பகர்ணனுடைய தொழிலை மேற்கொண்டார். தமிழர்களின் தொழிலை மேற்கொண்டார் என்று சொல்வதும் தவறாகாது.

ராட்சதர்களுடைய காலக்கணக்கின்படி ஒரு ஜாம நேரம் தூங்கிவிட்டு எழுந்து பார்த்தால், இலங்கையில் எல்லாம் மாறுதலாயிருக்கக் கண்டார். அவர் தூங்கும் சமயத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. தூங்குகிறவனுடைய தொடையில் கயிறு திரிப்பவர்கள் அல்லவா ஐரோப்பியர்கள்? முதலில், போர்ச்சுகீயர் வந்தார்கள்; பிறகு டச்சுக்காரர் வந்தார்கள். இந்த இரு சாராரையும் எடுத்து விழுங்கக்கூடிய ஜான்புல் கடைசியாக வந்து சேர்ந்தார். ஜான்புல் பல வருஷ காலம் ஆட்சி செலுத்திவிட்டுத் தனக்குச் சரியான வார்ஸு சிங்களவர்கள் தான் - அதிலும் கனம் சேனநாயகாதான்–என்று தீர்மானித்து, அவருடைய கையில் இலங்கா ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். எனவே விபீஷண ஆழ்வார் தூங்கி எழுந்ததும் முழி முழி என்று முழிக்கும்படி நேர்ந்தது. இராஜ்யம் கையை விட்டுப் போனதில் விபீஷணருக்கு ஒரு மாதிரி சந்தோஷந்தான். எனவே “வாழ்க தூக்கம்” என்று கோஷித்து விட்டு, இலங்கையில் இனி சாதாரண பிரஜையாக வாழ்வது என்று தீர்மானித்தார். இங்கேதான் அவருக்குச் சங்கடங்கள் பல ஏற்பட்டன.

பிரஜா உரிமைப் பதிவு அதிகாரியிடம் சென்று “என்னை இலங்கையின் பிரஜையாகப் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதிகாரி அவரிடம் ஒரு கத்தை நமுனாக்களைக் கொடுத்துப் பூர்த்தி செய்து தரச்சொன்னார். விபீஷண ஆழ்வார் அந்த நமுனாக்களைப் பார்த்துவிட்டுத் திறுதிறு வென்று விழித்தார்.

“எழுதப் படிக்கத் தெரியாதா?” என்று அதிகாரி கேட்டார்.

“தெரியும் ; ஆனால் நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் எழுத்துக்கள் வேறு விதமாயிருந்தன. ஆகையால் அதிகாரி அவர்களே நமுனாக்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்!”

அதிகாரி கருணைகூர்ந்து விபீஷணரைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

“உம்முடைய பெயர் என்ன?”

“விபீஷணன்.”

“தகப்பனார் பெயர்?”

“புலஸ்தியர்.”

“பாட்டனார் பெயர்!”

“பிரம்மா.”

“தகப்பனாரும் பாட்டனாரும் இலங்கையில் பிறந்து இலங்கையில் வசித்தவர்கள்தானா?”

“தகப்பனார் புலஸ்தியர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய பெயரால் பொலன்னருவா என்ற நகரமும் இருக்கிறது.”

“பாட்டனார் விஷயம் என்ன?”

“பாட்டனார் திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிறந்து பிரம்மலோகத்தில் வசித்திருப்பவர்!...”

“அப்போதே நினைத்தேன்!” என்றார் அதிகாரி. விபீஷணரை ஏற இறங்கப் பார்த்து, “அப்படியானால் உம் பாட்டனார் இலங்கைவாசி இல்லை!” என்றார்.

“இல்லை. ஆனால் அண்ணன் இராவணனுக்குப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லச் சிலசமயம் இங்கே வந்ததுண்டு.”

“சரி! நீர் இலங்கையின் வம்சாவளிப் பிரஜை உரிமை பெறமுடியாது.”

“அது இல்லாவிட்டால், வேறு எந்தப் பிரஜா உரிமை கொடுத்தாலும் சரிதான்.”

“நீர் இலங்கையில் பிறந்ததற்கும் இருந்ததற்கும் சாட்சி உண்டா?”

விபீஷணர் சிறிது யோசித்துவிட்டு “பிறந்ததற்குச் சாட்சி கிடையாது. இருந்ததற்கு அனுமார் என்று ஒருவர் சாட்சி சொல்லக்கூடும். ஆனால் அவரைத் தேடிப் பிடிப்பது கஷ்டம்!” என்றார்.

“அந்த மாதிரி வாய்மூல சாட்சி உபயோகமில்லை. எழுத்து மூலமான ஆதரம் வேண்டும்.”

இதைக் கேட்ட விபீஷணர் சுருசுருப்புடன் சென்று, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசி தாஸ் ராமாயணம், ராம நாடகக் கீர்த்தனை ஆகிய புத்தகங் களைக் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தார்.

அதிகாரி அவ்வளவு புத்தகங்களையும் புரட்டிப் பார்த்துவிட்டு, “இதெல்லாம் பழைய கதைகள். உபயோகமில்லை. திரேதா யுகத்துச் செய்தி இங்கே யாருக்கு வேணும்! 1938-ம் வருஷத்திலிருந்து 1945-ம் வருஷம் வரையில் நீர் எங்கே இருந்தீர்?” என்று கேட்டார்.

“இலங்கையில்தான் இருந்தேன்.”

“இதற்கு ஏதாவது தஸ்தவேஜு மூலமான சாட்சியம் இருக்கிறதா?”

“எந்த மாதிரி?”

“இந்தியாவிலிருந்து ஏதாவது கடிதம், ரிஜிஸ்தர், மணியார்டர் மேற்படி ஆறு வருஷங்களில் வந்ததுண்டா? வந்த கடிதங்களின் உறைகளைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறீரா?”

“இல்லை.”

“அப்படியானால், உமக்குப் பிரிஜா உரிமையும் இல்லை.”

இதைக் கேட்ட விபீஷணர் மூர்ச்சை யடைந்து விழுந்து எழுந்த பிறகு, “இனி இலங்கையில் இருப்பதா? வைகுண்டத்துக்குப் போய் முறையிடுவதா?” என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

இதைக் கேள்விப்பட்டதும் விபீஷணரைப் பற்றிய கவலையில் நான் ஆழ்ந்தேன். முருகனைப் பற்றிய கவலை தோன்றிய பிறகுதான் அவரை மறக்க முடிந்தது.

ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒரு மனிதருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதையறிந்த சிநேகிதர் ஒருவர் வந்து தமது அநுதாபத்தைத் தெரிவித்தார். “உமக்குக் கூச்சல் என்றால் பிடிக்காதே ! இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கூச்சல் போட்டால் பெருந் தொல்லையாயிருக்குமே?” என்று கேட்டார். “அது தான் இல்லை! ஒற்றைக் குழந்தையாக இருந்தால்தான் கூச்சல் தொந்தரவு. இரண்டு குழந்தைகள் சேர்ந்து கூச்சலிடும்போது ஒன்றின் கூச்சல் இன்னொன்றின் கூச்சலில் மறைந்துவிடும் அல்லவா?” என்று சொன்னார் இரட்டைக் குழந்தையின் புத்திசாலித் தகப்பனார்.

இதுபோலவே முருகனைப் பற்றி எனக்கு ஏற்பட்ட கவலையினால் விபீஷணரின் கவலையை நான் மறக்கலாயிற்று.

ரத்மனாலை விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியதும் அங்கே கூடியிருந்த நண்பர்களின் முகங்களுக்கு மத்தியில் ஒரு முகம் பளிச்சென்று மலர்ச்சியுடன் காட்சி தந்தது. யாரோ தெரிந்தவராய்த்தான் இருக்குமென்று அவரைப் பார்த்துப் புன்னகை செய்துவைத்தேன். உடனே அவரும் புன்னகை செய்து, நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும். தெரியுமா? கோவிலுக்குக் கட்டாயம் வரவேண்டும். இல்லாவிட்டால் உங்களைத் திரும்பிப் போக விடமாட்டோம்!” என்றார்.

டாக்டர் நல்லநாதனின் இல்லம் சேர்ந்ததும் மறுபடியும் அதே நண்பரைப் பார்த்தேன். “நீங்கள் கோவி லுக்கு வர வேண்டும். எங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்! இல்லா விட்டால் விட மாட்டேன்!” என்றார். இந்த நண்பரின் பெயர் கே. வி. எஸ். சுந்தரம் என்றும், கொழும்பில் பிரபல வர்த்தகர் என்றும் அறிந்தேன்.

“கோவிலுக்கு வரவேண்டும்; கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விட மாட்டேன்!” என்று அவர் மேலும் பத்துப் பன்னிரண்டு தடவை சொன்ன பிறகு, எனக்குக் கோபம் வந்து விட்டது.

“எந்தக் கோவிலுக்கு?” என்று கேட்டேன்.

“முருகன் கோவிலுக்கு” என்றார் ஸ்ரீ கே. வி. எஸ். சுந்தரம்.

“எந்த முருகன்?” என்றேன்.

சிறிது திகைத்துவிட்டு, “ஒரே முருகன் தான். அவர்தான்!” என்றார்.

“ஒரே முருகன் தான் என்றால், அவரை நான் தமிழ் நாட்டில் பார்த்தேனே? இங்கே எப்போது வந்தார் ?”

“முன்னமே வந்துவிட்டார். வெகு காலமாக இங்கேதான் இருக்கிறார்.”

“இது என்ன ஐயா, வேடிக்கை? வெகு காலமாக இங்கே இருக்கிறார் என்றால், இலங்கையின் பிரஜையாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறாரா?”

ஸ்ரீ சுந்தரம் விழித்துப்போனார். அவருடைய விழிப்புக்கு எனக்குக் காரணம் தெரியாமலில்லை. முருகப்பெருமான் இப்போதைய இலங்கைப் பிரஜா உரிமை விதிகளின் கீழ்ப் பதிவு செய்து கொள்ள முடியாது. ஏனெனில், அவர் வள்ளி, தேவயானை ஆகிய இரண்டு பத்தினிகளையும் இரண்டு கண்களாக வைத்துக் கொண்டிருப்பவர் அல்லவா?

ஆகவே, முருகன் இலங்கையின் பிரஜை ஆக முடியாது. இரண்டு மனைவிகள் உள்ளவர் யாருமே இலங்கைப் பிரஜையாக முடியாது. ஒருத்தியை மனைவி என்றும், இன்னொருத்தியை வேறு ஏதாவது பெயர் சொல்லியும் அழைத்தால் புகழ்பெற்ற இலங்கையின் பிரஜையாகலாம்/ இருவரையும் மனைவிமார் என்று அழைத்தால் அது சாத்தியமில்லை.

இருதார மணத்தைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் எதிரிடையானதுதான். ஒரு தார மணங்கூட அவ்வளவு புத்திசாலித்தனமானது என்று நான் சொல்ல முடியாது. ஒரு தடவை, ஏதோ போனால் போகிறது என்று மன்னித்து விடலாம். இரண்டாந் தடவையும் ஒரு தவறைச் செய்தால் அதை யார்தான் சரி என்று ஒத்துக் கொள்ள முடியும்?

ஆகவே, இருதார மணத்தை நான் அவ்வளவாக விரும்புகிறவன் அல்ல. ஆனாலும், இந்தக் காரணத்தைக்கொண்டு அநேக ஆயிரம் இந்தியர்களுக்குப் பிரஜா உரிமை இல்லையென்று அடித்து விடுவதாயிருந்தால், அதை எப்படி நியாயம் என்று ஒத்துக் கொள்ள முடியும்? இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இரு தாரப் பிரச்னையின் இரகசியம் இது தான். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யப் போன இந்தியத் தொழிலாளிகளில் பலர் ஒரு மனைவிக்கு மேலே கலியாணம் செய்துகொண்டிருக்கிறார்களாம். முன்னே யெல்லாம் தோட்ட முதலாளிகளுக்கு இது சௌகரியமா யிருந்தது. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்குப் பெண்கள் அதிகம் தேவை. அவர்களுக்குச் சம்பளம் குறைவாகக் கொடுத்தால் போதும். சுதந்திரமாக ஸ்திரீகளைக் கொண்டு வந்து தோட்டங்களில் விடுவதற்கில்லை. அதனால் பல சிக்கல்கள் ஏற்படும். ஆகையால் தோட்டத் தொழிலாளிகள் இரண்டு அல்லது மூன்று மனைவியர்களை மணந்து கொள்வதை முதலாளிகள் விரும்பினார்கள். அதிகக் கூலி வருமானம் வரும் என்ற காரணத்தினால் பல தொழிலாளிகள் அவ்விதம் இருதார மணம் செய்து கொண்டார்கள்.

இப்போது சிங்கள சர்க்கார் கொண்டு வந்திருக்கும் சட்டத்தின்படி மேற்படி வழக்கம் பிரஜா உரிமைக்குப் பெரும் இடையூறாக ஏற்பட்டிருக்கிறது. “பிரஜா உரிமையைக் கைவிடுவதா? அல்லது கட்டிய மனைவி யைக் கைவிடுவதா?” என்ற தர்ம சங்கடமான நிலைமை பல ஏழைத் தொழிலாளிகளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. பாவம்! இரண்டு பெண்டாட்டிக்காரர்களுக்கு உள்ள கஷ்டங்கள் போதாவென்று இந்த நெருக்கடி வேறு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடியான பிரச்னை நமது முருகப் பெருமானுக்கும் ஏற்படத்தானே செய்யும் என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. எனவே, நண்பர் சுந்தரம் அவர்களிடம் “முருகனை இந்தியாவுக்கே திரும்ப அனுப்பி விடுவது தானே?” என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தேன். நண்பர் சுந்தரம் “அது முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டார்.

பிறகு அவருடைய வற்புறுத்தலுக்கிணங்க, ஜிந்துப் பட்டி ஸ்ரீ சுப்பிரமண்ய ஸ்வாமி கோவிலுக்குப் போய்ப் பார்த்த போது, நண்பர் சுந்தரம் அநுமதி கொடுத்தாலும் முருகன் அங்கிருந்து இலேசில் கிளம்பி விட மாட்டார் என்று நான் முடிவு செய்ய வேண்டியதாயிற்று.

கோவில் என்றால், இதுவல்லவா கோவில்? பக்தி என்றால் இதுவல்லவா பக்தி? பிரார்த்தனை என்றால், இதுவல்லவா பிரார்த்தனை?

கோவில் பிராகாரத்தில் அமைந்திருந்த விஸ்தாரமான மண்டபத்தில் அலங்கரித்த அழகிய ஊஞ்சல் மஞ்சத்தில் வள்ளி, தேவயானை சமேதராக முருகன் வீற்றிருந்தார். ஊஞ்சல் இலேசாக ஆடிக்கொண்டிருத்தது. முருகன் பக்தர்களுக்கு அருள் புரிய நெருங்கி நெருங்கி வருவது போலத் தோன்றியது.

ஸ்ரீ சுந்தரம் அவர்களும் அவருடைய சகோதரரும் பட்டை பட்டையாக வெள்ளைத் திருநீறு அணிந்து, பலப் பல ருத்திராட்ச வடங்களைத் தரித்து, சிவபக்தியே வடிவங் கொண்டவர்களாக விளங்கினார்கள். இவர் களைப் போல் இன்னும் நூற்றுக் கணக்கான அடியார்கள் அச்சபையில் சேர்ந்திருந்தார்கள். திருச்செந்தூரிலிருந்து வந்திருந்த ஒரு பக்தர் இனிய குரலில் திருப்புகழ் பாடினார். அனைவரும் ஒரு முகமாக மனங் குவிந்திருந்து பிரார்த்தனை நடத்தினார்கள். பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்படிபட்ட இடத்திலிருந்து புறப்படுவதற்கு முருகன் இலேசில் இணங்கிவிடுவாரா!

கொழும்பில் நாங்கள் தங்கிய சில தினங்களில் இன் னொரு ஆலயத்துக்குச் செல்லும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. கொழும்புக்குப் பக்கத்தில் கப்பித்தாவத்தை என்னும் விசித்திரப் பெயர் உள்ள ஊரில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் என்னும் பழமையான ஆலயம் இருக்கிறது. இது வெகு காலமாகச் சிதிலமாகக் கிடந்தது. ஸ்ரீ வி. எஸ். சாமிநாத செட்டியார் என்னும் வணிக வைசியர் அந்தப் பழைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் திருப்பணியில் ஈடுபட்டார். பதின்மூன்று ஆண்டுகள் முயன்று, தம் குலத்துப் பிரமுகர்கள் பலருடைய உதவியுடன் திருப்பணியை முடித்துக் கும்பாபிஷேகமும் கடத்தினார். கும்பாபிஷேகம் நடந்த மூன்று மாதத்திற்கெல்லாம் இறைவன் அந்தப் பெரியாரைக் கைலாசத்துக்கே அழைத்துக்கொண்டார்.

இந்தப் புனிதமான ஆலயத்தை எங்களுக்குத் தரிசனம் செய்துவைத்தவர் ஸ்ரீ பி. ஸி. கதிர்வேல் செட்டியார் என்னும் மற்றொரு பிரபல இந்திய வர்த்தகர். இவரும் சிறந்த பக்திமான். நம் திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரின் குழாத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் இவர் சிரத்தை கொண்டிருப்பதோடு கூட, இன்னும் பல பொது நலத்தொண்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். “இந்தியர்கள் இலங்கையில் பணம் சம்பாதித்து இந்தியாவுக்குக் கொண்டு போவதில் முனைந்திருக்கிறார்களே தவிர இலங்கையில் நிரந்தரமான தர்மம் எதுவும் செய்வதில்லை” என்ற புகார் இவரால் ஓரளவு நீங்கி வருகிறது என்று நண்பர்கள் சொன்னார்கள்.

தமிழ்ச் சங்க ஆண்டு விழாவின்போது பெற்ற அநுபவங்களிலிருந்தும் இந்த இரண்டு ஆலயங்களில் கண்ட காட்சிகளிலிருந்தும் ஸ்ரீ தூரனுக்கும் எனக்கும் ஒரு நிச்சயம் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் இப்போது சிலர் “தமிழை ஒழித்து விடுவோம்!” என்றும், இன்னும் சிலர் “கடவுளைத் தொலைத்து விடுவோம்!” என்றும் பயமுறுத்தி வருகிறார்கள் அல்லவா? அப்படியே இவர்களுடைய கட்சி பிரமாதமான வலிமை பெற்று வெற்றியடைந்தாலும், நம்முடைய தமிழும் தமிழரின் கடவுளும் கட்டாயம் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். தமிழையும் தமிழரின் சமயத்தையும் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் கைவிட்டாலும்கூட இலங்கையிலுள்ள தமிழர்கள் போற்றிக் காப்பாற்றி வருவார்கள். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இத்தகைய உறுதி பெற்றுக்கொண்டு கொழும்பு நண்பர்களிடம் விடையும் பெற்றுக்கொண்டு, ஸ்ரீ தூரனும் நானும் யாழ்ப்பாணத்துக்குக் கிளம்பினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இலங்கையில்_ஒரு_வாரம்/4&oldid=1651159" இலிருந்து மீள்விக்கப்பட்டது