இளையர் அறிவியல் களஞ்சியம்/அமிலங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அமிலங்கள் : இவை புளிப்புச் சுவையுடையனவாகும். பல்வேறு பழங்களில் இயற்கையாக இவ்வமிலங்கள் கிடைக்கின்றன. இவ்வமிலங்கள் அனைத்தும் ஒரே வகையானவை அன்று. அவை வெவ்வேறு வகை அமிலங்களாக அமைந்துள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. திராட்சைப் பழத்திலும் புளியம்பழத்திலும் டார்ட்டாரிக் அமிலம் இருக்கிறது. ஆப்பிள் பழத்தில் மாலிக் அமிலம் அமைந்துள்ளது.

அமிலங்கள் சில வகை காரங்களை கரைக்கக் கூடியனவாகும். உலோகங்களையும் கரைக்கச் செய்கின்றன. எல்லா அமிலங்களுக்கும் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அமிலங்கள் நீரில் கரையும்போது அவற்றின் தனிக்குணங்கள் வெளிப்படும்.

அமிலங்களின் தன்மைகளை நீண்ட காலத்திற்கு முன்பே மேனாட்டாரும் நம் நாட்டவர்களும் அறிந்தே இருந்தனர். மதுவைப் புளிக்க வைக்கும் காடி எனும் அசெட்டிலின்அமிலத்தை மேனாட்டார் நன்கு அறிந்திருந்தனர். கந்தக அமிலம், அக்னி திராவகம் எனக் கூறப்படும் நைட்ரிக் அமிலங்களை நம் நாட்டு இரசவாதிகளும் சித்தர்களும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர்.

வேதியியல் துறைக்கும் ஆய்வுக்கூடங்கள். தொழிலகங்கள், வீடுகள் ஆகிய அனைத்துக்குமே ஏதேனும் ஒரு வகையில் அமிலங்கள் தேவைப்படும் பொருளாகவே உள்ளன.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கு அமிலங்கள் பயன்படுகின்றன. ஃபார்மிக் அமிலம் இறந்த உயிர்ப்பொருள்களைப் பதப்படுத்தவும் தோல் பதனிடும் போது அதிலுள்ள சுண்ணாம்புச் சத்தை அகற்றவும் பயன்படுகிறது. பருத்தி, கம்பளி இழைகளுக்குச் சாயம் ஏற்றவும் இவ்வமிலம் அவசியமாகிறது. அசெட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி மருந்துகளும் சாயப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. செயற்கைப்பட்டுத் தயாரிக்கவும் அசிட்டேட் அமிலம் பயன்படுகிறது. தாவர எண்ணெய்களிலிருந்தும் விலங்குக் கொழுப்புகளிலிருந்தும் கிடைக்கும் கொழுப்பு அமிலம் (Fatty acids) சோப்பு தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. ஆரோமாட்டிக் அமிலங்கள் பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

அமிலங்களில் மிக முக்கியமான ஹைட்ரோக் குளோரிக் அமிலம், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவை கனிம அமிலங்கள் ஆகும். இவை வீரியம் மிக்கவைகளாகும். இரும்பு, துத்தநாகம், போன்ற உலோகங்களையே அரித்துவிடக்கூடியவை. இஃது நம் உடலில் பட்டால் புண்ணாகிவிடும். அசெட்டிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகியன கரிம அமிலங்களாகும். இவை வீரியம் குறைந்தவைகளாகும்.

சோதனைக் கூடங்களில் அமிலங்களே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உர உற்பத்திக்கும் சாயத் தயாரிப்புக்கும் அமிலங்களே அதிகம் தேவைப்படுகின்றன.

நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கான ஹைட்ரோ குளோரிக் அமிலம் நம் இரைப்பையிலேயே உற்பத்தியாகிறது. இரைப்பையின் சுவர்கள் இந்த வீரியமிக்க அமிலத்தினால் பாதிப்படைவதில்லை. காரணம், இரைப்பையின் உட்சுவரின் மெல்லிய மேல் ஜவ்வில் உற்பத்தியாகும் அம்மோனியா எனும் காரம் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தோடு கலந்து அதன் வீரியத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.

ஹைட்ரோ குளோரிக் அமிலம் செங்கலின் மேலுள்ள அதிக அளவு காரையை நீக்கவும் உலோகங்களின் மீது படிந்துள்ள துரு மற்றும் படிவுகளை அகற்றவும் பயன்படுகிறது. பென்சோயிக் அமிலம் உணவுப் பொருட்களை பாதுகாக்கவும், ஆக்ஸாலிக் அமிலம் கரைகளை நீக்குவதற்கும் கார்போனிக் அமிலம் பழரச பானங்களை சீசாக்களில் பாதுகாக்கவும் போரிக் அமிலம் புண்களை கழுவுவதற்கும் பால்மிடிக் அமிலம் செயற்கை சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஆரஞ்சு, திராட்சை மற்றும் புளிப்புப் பழங்களில் காணப்படும் அஸ்கார்பிக் அமிலம் ஒரு வைட்டமின் ஆகும்.

தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் ஆஸ்ப்ரினில் காணப்படும் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ஒரு வலி நிவாரணி ஆகும்.

கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் திரவம் நீரில் கலந்த சல்ஃபுயூரிக் அமிலமாகும்.