இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆழ்கடல் விலங்குகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆழ்கடல் விலங்குகள் : கடலில் சாதாரணமாக மூன்று மட்டங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன. ஒருவகை கடலில் மேல்மட்டத்திலும் மற்றொரு வகை ஒளி ஊடுருவிச் செல்லும் வரையும். மூன்றாவதுவகை கடலின் இருண்ட அடிமட்ட ஆழத்திலும் வாழ்கின்றன.

ஆழ்கடலில் வாழும் மீன்களும் விலங்குகளும் தோற்றத்திலும் வாழும் முறைகளிலும் மற்ற மீன்களையும் விலங்குகளையும்விட வேறுபட்டவையாக உள்ளன. ஆழ்கடல் பகுதியில் மிகமிகக் குறைந்த வெளிச்சமே உள்

ஆழ்கடல் மீன்

ளன. அழுத்தம் மிகுந்ததாகவும் மிகக் குளிர்ந்த பகுதியாகவும் உள்ளன. கிட்டத்தட்ட இருண்ட உலகமாகவே ஆழ்கடல் பகுதிகள் அமைந்துள்ளன.

எனவே, இத்தகைய சூழலில் வாழும் ஆழ் கடல் உயிரினங்கள் உயிர் வாழவும், வளர்ச்சி பெறவும் இனப்பெருக்கம் செய்துகொள்ளவும் மிகப் பெரும் போராட்ட வாழ்வை நடத்துகின்றன என்றே கூறவேண்டும். ஆழ்கடல் பகுதியில் தாவரம் எதுவும் இல்லை.

ஆழ்கடலில் வாழும் மீன்களும் கணவாய் போன்ற விலங்குகளும் மிகக் குறைந்த மங்கலான ஒளியில் இறை தேடி வாழவேண்டியுள்ளது. இதனால் இவற்றின் கண்கள் மிகப் பெரிதாக அமைந்துள்ளன. அக்கண்களும் தொலை நோக்கிபோல் கூரிய பார்வையுடையனவாக உள்ளன. இவற்றின் உடலில் மின் மினிப்பூச்சுக்கு உள்ளதுபோல் ஒளியை உமிழக்கூடிய சிறப்பு உறுப்புக்கள் உள்ளன. இவை தரும் ஒளியைக் கண்டு மயங்கி அருகில் பிற உயிரினங்கள் வரும். அவற்றை வாய் பெரிதான ஆழ்கடல் மீன்கள் விழுங்கி உணவாக்கிக் கொள்கின்றன. இவ்வொளி சுற்றுச் சூழலை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இருள் கவிந்த கடலின் ஆழ்கடற்பகுதியில் புற ஊதாக்கதிர், காமாக் கதிர் போன்ற அலை நீளம் குறைந்த கதிர்கள் மட்டுமே ஊடுருவ வல்லன. இங்கு வாழும் உயிரினங்களுக்குப் பார்வையைக் காட்டிலும் தொடுவுணர்வுகளுக்கே முதன்மை இடம். நன்கு வளர்ச்சி பெற்ற முனைப்புடன் செயல்படக்கூடிய நீண்ட தொடுவுணர்வு உறுப்புகள் உள்ளன. கடலடியில் தாவரங்களே இல்லையாதலால் இங்குள்ள உயிரினங்கள் கடல் மேல்மட்டப் பகுதியில் வாழும் பிற உயிர்களை உண்டே உயிர் வாழ்கின்றன. ஒன்றையொன்று உண்டு வாழ்வதும் உண்டு. ஆழ்கடல் மீன்களுக்கு வாய் அகன்றிருக்கும். இவற்றின் உடல் குட்டையாக இருக்கும். கூரிய நீண்ட பற்கள் உண்டு. கிடைக்கும் இரையை சுருட்டிக் கொள்ளத்தக்க வகையில் இவற்றிற்கு நீண்ட வலுவான வால் பகுதியும் உண்டு, இவற்றின் உடல் குட்டையாக இருப்பதற்குக் காரணம் ஆழ்கடலில் உள்ள உணவுப் பற்றாக்குறையும் நீரின் அழுத்தமுமே காரணமாகும். ஆழ்கடலில் அலைகளே இல்லாததால் ஆழ்கடல் உயிரினங்களின் உடற்பகுதி மிகவும் மென்மையாக உள்ளது.