உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/இதயம்

விக்கிமூலம் இலிருந்து

இதயம் : உடல் உறுப்புகளிலேயே மிக முக்கிய உறுப்பாக அமைந்திருப்பது இதயமாகும். இது உடல் முழுவதும் இரத்தத்தைப் பாய்ச்சிப் பரவச் செய்கிறது. நாம் உயிர் வாழவும் உடல் உறுப்புகள் செவ்வனே இயங்கவும் இன்றியமையாததாக அமைந்திருப்பது இரத்தமாகும். இதைக் குறிப்பிட்ட இடைவெளியில் உடல் முழுவதும் பாய்ச்சுவது இதயமாகும்.

இதயம் மார்புக் கூட்டின் இடதுபுறமாக இரு நுரையீரல்களுக்கிடையே ஒரு சவ்வுப்பையுள் உள்ளது. இப் பை 'இதய உறை' என்று அழைக்கப்படும். இதய உறைக்கும் இதயத்திற்கும் இடையே ஒருவித திரவம் உள்ளது. இத்திரவத்தில் இதயம் மிதப்பதால் எந்த அதிர்ச்சியாலும் இதயம் பாதிப்பதில்லை. இதயம் மூடிய நம் கையளவில் கூம்பு வடிவில் அமைந்துள்ளது. இதன் எடை சுமார் 800 கிராம் இருக்கும்.இதயத்தின் கீழ்ப்பகுதி அகன்றும் மேற்பகுதி குறுகியும் இருக்கும். இதயச் சுவர் இரு அடுக்குகளாய் அமைந்துள்ளது. இதயத் தசை தானாக சுருங்கி விரியும் இயல்பு உடையது.

நம் இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இதயம் வல இடப் பகுதிகளாகத் தடுப்

இதய இரத்தவோட்டம்

புச் சுவரால் பிரிக்கப்படுகிறது. நான்கு அறைகள் மேலே இரண்டும் கீழே இரண்டுமாக அமைந்துள்ளன. இரத்தம் மேலறைகளிலிருந்து கீமறைகளுக்குப் பாயும். ஆனால் கீழறைகளிலிருந்து மேலறைகளுக்குச் செல்ல முடியாது. ஒருவழிப்பாதையாக அமைந்துள்ளது. இதற்காக மேலறைகளுக்கும் கீழறைகளுக்கும் இடையே 'வால்வு' என்றழைக்கப்படும் சிறுகதவுகள் உள்ளன. இதயத்தின் இடப்பக்க வலப்பக்கங்களுக்கிடையே நடுப்புறத் தடுப்புச் சுவர் உண்டு. வலப்பக்க இதயத்தில் சிரை இரத்தமும் இடப்பக்க இதயத்தில் தமனி இரத்தமும் இருக்கும்.

உடல் முழுவதிலிருந்து வரும் இரத்தம் இதயத்தின் வலது மேல் பகுதியிலுள்ள மேலறைக்கு வந்து சேரும். மேலறை சுருங்கும் போது 'வால்வு' எனும் சிறு கதவு திறந்து கொள்ளும். இரத்தம் கீழறையை அடையும். கீழறை சுருங்கும்போது நுரையீரல் தமனி வழியாக இரத்தம் இரண்டு நுரையீரல்களுக்குச் செல்கிறது. அங்கு இரத்தத்தில் கலந்துள்ள கரியமிலவாயு எனும் கார்பன்டையாக்சைடு தனியாகப் பிரிக்கப்படுகிறது. பின் பிராண வாயு எனும் ஆக்சிஜனை ஏற்றுச் சுத்தமடைகிறது. நுரையீரல்களிலிருந்து வெளியேறும் சுத்தப்படுத்தப்பட்ட இரத்தம் இதயத்தின் இடது மேலறையைப் போய்ச் சேரும். மேலறை சுருங்கும் போது 'வால்வு' வழியாக இடது கீழறைக்குச் செல்லும். கீழறை சுருங்கும் போது பெரிய இரத்தக்குழாய் வழியாக இதயத்தை விட்டு வெளியேறும். இவ்வாறு வெளியேறும் இரத்தம் பல்வேறு இரத்தக் குழாய்கள் மூலம் உடலெங்கும் பரவிப் பாயும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு 72முறை இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தை உட லுக்குப் பாய்ச்சுகிறது. ஒரு நாளைக்கு ஒரு இலட்சம்தடவைக்கு மேல் இதயம் சுருங்கி விரிகிறது. நாம் நோயால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பில் நேர வேறுபாடு ஏற்படும்.

இதயம் ஒருமுறை சுருங்கி விரியும் போது சுமார் 60 மி.லி. இரத்தத்தை இதயத்திலிருந்து வெளியேற்றுகிறது. இது ஒரு மணிக்கு 50 காலனாகவும் இருக்கும். ஒரு நாளுக்கு 1,200 காலனாகவும் இருக்கும். ஒரு மனிதனுக்கு 60 வயது ஆகும்போது அவரின் இதயம் சுமார் 22, 000 இலட்சம் தடவைகள் துடித்திருக்கும். 1,80,000 டன் ரத்தத்தை உந்தித் தள்ளியிருக்கும். இந்த இரத்தம் சென்றிருக்கும் நாளங்களின் நீளம் 99, 200 கி. மீட்டர்களாக இருக்கும்.

இதயத்தின் துடிப்பை நாடித்துடிப்பு எனக் கூறுவர். இதனை நாடிகளைத் தொட்டு அறிவர். மருத்துவர் தன்னிடமுள்ள இதய ஒலி மானியாகிய 'ஸ்டெதஸ்கோப்’ எனும் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிவர்.

நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது பிராணவாயுவாகிய ஆக்சிஜனை அதிகமாகச் சுவாசிக்கிறோம். அவ்வாறே நாம் மூச்சை வெளிவிடும்போது கரியமில வாயுவாகிய கார்பன்டைஆக்சைடை வெளிவிடுகிறோம்.

இதயம் எக்காரணத்தாலாவது முற்றாகக் கெட்டுவிட்டதென்றால், அதனை அகற்றி அதற்குப் பதிலாக நன்றாக உள்ள வேறொருவருடைய இதயத்தை எடுத்துப் பொருத்தி இயங்கச் செய்ய முடியும். இது இதயமாற்று அறுவை சிகிச்சை முறையாகும்.