இளையர் அறிவியல் களஞ்சியம்/பொறியியல்

விக்கிமூலம் இலிருந்து

பொறியியல் : 'இன்ஜினியரிங்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துறையே தமிழில் பொறியியல் எனக் கூறப்படுகிறது. பொறியியலானது, எந்திரப் பொறியியல் (Mechanical Engineering) மின் பொறியியல் (Electrical Engineering) பொதுமைப் பொறியியல் (Civil Engineering) மற்றும் வேதியியல் பொறியியல் (Chemical Engineering) எனப் பலவாகும்.

பொறியியல் துறைக்கான அடிப்படை அறிவை நம் முன்னோர்கள் நெடுங்காலமாகப் பெற்றிருந்தனர் என்பதற்கு இன்றும் காட்சி தரும் கல்லணையும் வானோங்கி நிற்கும் கோபுரங்களும் ஏற்ற சான்றுகளாக உள்ளன. அவ்வாறே எகிப்தில் உள்ள பிரமிடுகளும் முற்கால பொறியியல் நுட்பத் திறனுக்குச் சான்று பகர்வனாக உள்ளன.

பிற்காலத்தில் இராணுவத்துக்கு வேண்டிய போர்த்தளவாடங்களைச் செய்வோர் பொறியாளர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இன்று மக்களுக்குப் பயன்படும் கட்டுமானத் தொழில் வல்லுநர் எந்திர அமைப்பாளர், செய்தி மற்றும் போக்குவரத்து துறை வல்லுநர் ஆகியோர் பொறியியலாளர் என்று அழைக்கப்படுகின்றனர். அத்தொழில் சார்ந்த துறைகள் பொறியியல் துறைகளாகக் கருதப்படுகின்றன.