இளையர் அறிவியல் களஞ்சியம்/வானொலி
வானொலி : தொலைக்காட்சிக் கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மக்கள் செய்தி கேட்கவும், நாடகம், சொற்பொழிவு போன்ற பிற நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழவும் வானொலிப் பெட்டிகளே பெரிதும் பயன்பட்டன. இன்றும்கூட மக்களின் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக வானொலிப் பெட்டிகள் இருந்து வருகின்றன.
எங்கோ பேசும் பேச்சை, பாடும் பாட்டை பேசும் அல்லது பாடும் அதே நேரத்தில் நாமிருக்கும் இடத்தில் இருந்தபடியே கேட்க முடிகிறது. இதற்குக் காரணம் பேசும் ஒலியை மின் காந்த அலைகளாக மாற்றி வான்வழி அனுப்பப்படுகிறது, வாயு மண்டலத்தில் உள்ள மின்னணு மண்டலம் மின்காந்த ஒலி அலைகளைப் பிரதிபலித்து மீண்டும் பூமிக்கு அனுப்புகிறது. பூமியில் உள்ள நம் வீட்டின் வானொலிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ள ஏரியல் எனப்படும் 'ஒலி அலை வாங்கி'க் கருவியால் கிரகிக்கப்படுகிறது. இதன் மூலம் வானொலிப் பெட்டியில் அவ்வொலிகள் மீண்டும் எழும்ப நாம் பேச்சையும் பாட்டையும் கேட்டு மகிழ முடிகிறது. பாடுமிடத்திலிருந்து வரும் பேசும் அல்லது பாடும் ஒலி பல மாற்றங்களைப் பெற்று மீண்டும் ஒலியாக வானொலிப் பெட்டியை வந்தடைய ஓரிரு விநாடிகளே ஆகின்றன. இவ்வொலியின் வலிமையை வானொலிப் பெட்டியில் கூட்டவோ குறைக்கவோ இயலும்.
ஒலியைப் பதிவு செய்யும் வானொலி நிலையங்கள் பல்வேறு அலை வரிசைகளில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கின்றன. ஒரே சமயத்தில் இருவேறு நிலையங்கள் ஒரே அலைவரிசையில் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில்லை. இதற்கெனத் தனி பன்னாட்டு ஒப்பந்தம் உண்டு.
வானொலிப் பெட்டிகள் சிறிதும் பெரிதுமாக பல வடிவங்களில் உண்டு. தற்காலத்தில் 'டிரான்சிஸ்டர்’ மூலம் இயங்கும் சிறிய வகை
வானொலிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கைக்கடிகார அளவில்கூட உள்ளன. இவை பேட்டரிகளால் இயங்குகின்றன.
வானொலிக் கருவி 1896இல் இத்தாலி நாட்டு மார்கோனியால் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அதில் எண்ணற்ற மாற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன. மின்காந்த அலை மூலம் இயங்கும் வானொலி அமைப்பிலேயே தொலைபேசி, "ஒளிப்பட நகல்" (Fax) அனுப்புதல் போன்ற பல்வேறு பணிகள் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எளிதாக அனுப்ப இயலுகின்றது. மக்களின் அறிவை வளர்க்கும் கல்விப் பணிக்கு வானொலி மாபெரும் துணைச் சாதனமாகப் பயன்பட்டு வருகிறது.