இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/இஸ்லாமும் பிற சமயங்களும்

விக்கிமூலம் இலிருந்து



இஸ்லாமும் பிற சமயங்களும்

என்றுமில்லாத அளவுக்குப் பிற சமயச் சகோதரர்கள் இஸ்லாத்தை அறியவும் ஆராயவும் இன்று முற்பட்டுள்ளனர். இன்று உலகெங்கும் உள்ள அறிவாளிகள் குறிப்பாக மேற்குலகைச் சார்ந்த அறிவியலாளர்கள், அறிவியல் உணர்வோடு விஞ்ஞானப் பூர்வமாக இஸ்லாத்தை அணுகவும் ஆராயவும் முற்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

நம் நாட்டைப் பொருத்தவரை, குறிப்பாகத் தமிழகத்தைப் பொருத்தவரை இஸ்லாமியப் பிரச்சாரம் நேரிடையாக மக்களிடம் பெருமளவில் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இலக்கியத்தின் மூலமே பெரும்பாலும் இஸ்லாமிய நெறி விளக்கும்முறை நிலவி வந்தது என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாறு உணர்த்திக் கொண் டுள்ளது. தமிழகத்தில் இஸ்லாம் பரவி நிலைபெற்றதற்குப் பெருங்காரணமாயமைந்தவர்கள் இஸ்லாமியத் தமிழ் புலவர்களும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் சூஃபிக் கவிஞர்களுமாவர் என்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு.

இஸ்லாம் ஆனவன் - ஆக்கப்பட்டவனல்ல

இஸ்லாம் வாள்கொண்டு, ஆட்சி, அதிகாரத் துணையோடு பரப்பப்பட்டது என்பது வடிகட்டின புனைந்துரை. இன்று தமிழகத்தில் வாழும் ஒரு முஸ்லிமைப் பார்த்து “நீங்கள் யார்?” எனக் கேட்டால், அவர் உடனடியாகக் கூறும் பதில் “நான் ஒரு இஸ்லாமானவன்” என்பதாகவே இருக்கும். இஸ்லாம் ஆனவனே தவிர, இஸ்லாம் ஆக்கப்பட்டவன் இல்லை. ஏனெனில், இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் என்பது அறவே இல்லை என்பது திருமறை தரும் இறை வாக்காகும்.

எனவே, இஸ்லாத்தை, இறை நெறியை அன்பு வழியில், இஸ்லாமல்லாதவர்களின் உள்ளம் ஏற்கும் வண்ணம் எடுத்துக் கூறி விளக்குவதில் தவறில்லை. ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளவும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள தப்பான எண்ணங்களும் தவறான உணர்வுகளும் மறையவும் சரியான தகவல்களும் கருத்துகளும் சென்று நிலை பெறவும் வாய்ப்பாக அமையும். எனவே, இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களோடு மட்டுமே பேசுவதோடமையாது. முஸ்லிமல்லாதவர்களிடமே அதிகம் விளக்கிக் கூற வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.

பெருமானாரும் இஸ்லாமியப் பிரச்சாரமும்

பெருமானார் (சல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி விளக்கும் பணியை முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்திருந்தால், அது மக்காவுக்குள் முப்பது முஸ்லிம்களோடு முடங்கிப் போயிருந்திருக்கும். ஆனால், அவர் முஸ்லிம் அல்லாதவர்களிடையே இறை நெறியாகிய இஸ்லாமிய நெறியை எடுத்துச் சொல்லி விளக்கியதன் விளைவாகத்தான் விரைந்து பரவி வளர முடிந்தது.

அவர் வழியைச் சார்ந்த நாமோ இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமிய நெறியை முஸ்லிமல்லாதவர்களிடையே, முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டே திருமறைக் கோட்பாட்டிற்கிணங்க அன்பு வழியில் அமைதி வழியில் எடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாக் கடப்பாடுடையவர்களாக உள்ளோம்.

முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டு
முஸ்லிமல்லாதவர்களிடம்

இதை மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டவனாகக் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக “இஸ்லாமியப் பிரச்சாரத்தை இலக்கியங்களின் துணையோடு முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டு முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில்” செய்வதை ஒரு 'மிஷனரி ஒர்க்காகவே' செய்து வருகிறேன்.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மற்றும் மூன்றாம் ஞாயிறுதோறும் சீறாப்புராணத் தொடர்ச் சொற்பொழிவுக் கூட்டத்தை லிங்கிச்செட்டி தெருவிலுள்ள கோயிலை யொட்டியுள்ள வடலூர் இராமலிங்க வள்ளலார் பெயரில் அமைந்துள்ள திருவருள் மண்டபத்துள் தொடர்ந்து நடத்தி வந்தேன். சீறாப்புராணத் தொடர்ச் சொற்பொழிவாளர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்களாவார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் சமண, கிருஸ்தவ, சைவ, வைணவம் போன்ற பல்வேறு சமயங்களையும் சமயப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் தலைமை தாங்குவது வழக்கம். கூட்டத்திற்கு வருகை தருபவர்களில் அறுபது விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் பிற சமயச் சகோதரர்களாவர். ஆனால், பேசப்படும் பொருள் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கையையும் வாக்கையும் விரித்துக் கூறும் உமறுப் புலவர் தந்த 'சீறாப்புராணம்' இலக்கியமாகும். ஒரு ஆண்டிற்கு மேல் நடைபெற்ற இருபத்தியேழு தொடர்ச் சொற்பொழிவுகளையும் பதிவு செய்து, பின்னர் எழுத்து வடிவாக்கி, "நெஞ்சையள்ளும் சீறா” எனும் பெயரில் 1136 பக்கங்களில் நூலாக வெளிவந்தது. 1985இல் மிகச் சிறந்த இஸ்லாமிய ஆய்வு நூல் என்பதற்கான பரிசையும் பெற்றது. இதே முறையில் சுலைமான் நபியின் வாழ்க்கையை விரித்துரைக்கும் வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம் நூல் பற்றி 27 தொடர்ச் சொற்பொழிவுகளும், தமிழில் மெய்ஞ்ஞான இலக்கியங்கள்போன்ற தலைப்புகளில் எட்டு கருத்தரங்குகளையும் நடத்திய பட்டறிவு எனக்குண்டு.

இம்முயற்சிகள் இஸ்லாமியப் பிரச்சாரம் எனும் பெயர் பெறாமலே இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளை பிற சமய மக்களிடம் இலக்கியம் வழியாக எளிதாகக் கொண்டு போக இயன்றது. நம்மவர்களும் தங்கள் இஸ்லாமிய அறிவை, உணர்வை புதுப்பித்துக் கொள்ளவும், மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் இம் முயற்சி வாய்ப்பேற்படுத்துகிறது.

எதிர் விளைவு

இதனை நாம் நீண்ட காலமாகச் செய்யாததால், செய்யத் தவறியதால் எதிர் விளைவுகள் பல விளைந்துள்ளன என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நம்மைப் பற்றி மாற்றார் தவறான பிரச்சாரத்தை வலுவாகச்செய்ய இச்சூன்ய சூழ்நிலை வாய்ப்பேற்படுத்தி தந்து விடுகிறது. இதைத் தெளிவாக அறிந்துணர ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்களைக் கொண்டு சீறப்புராணத் தொடர்ச் சொற்பொழிவு ஒன்றுக்கு மீரா ஃபெளண்டேஷன் மூலம் ஏற்பாடு செய்திருந்தேன் என்று முன்பே குறிப்பிட்டேன் அல்லவா, அதன் தொடக்க விழா லிங்கிச் செட்டித் தெருவிலுள்ள கிருஷ்ணன் கோயில் அருகில் அமைந்திருந்த திருவருள் மண்டபத்தில் நடந்தேறியது. தொடர்ந்து மாதத்தின் முதல் ஞாயிறும் மூன்றாவது ஞாயிறும் நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

முதல் தொடர்ச் சொற்பொழிவுக் கூட்டத்திற்குச் சென்ற போது, அக்கட்டிட உரிமையாளர் திரு இரா. முத்துக்குமாரசாமி வாசற்படியில் நின்றிருந்தார். என்னைக் கண்டவுடன் இன்று காலை ஒரு சுவையான சம்பவம் நடந்தது தெரியுமா? என்றார், சொன்னால்தானே தெரியும் என்று நான் கூறி முடிப்பதற்குள் அந்நிகழ்ச்சியை விவரிக்கத் தொடங்கினார். இன்று பக்கத்துக் கோயில் அர்ச்சகரான தீட்சிதர் வேகமாக என்னிடம் வந்தார். வந்த வேகத்தில் 'சீறாத் தொடர்ச் சொற்பொழிவுக் கூட்டம் தொடர்ந்து இங்கு நடக்குமா?’ என்று கேட்டு என் முகத்தை மிகவும் சீரியசாகப் பார்த்தார். அவர் கேள்வி கேட்ட தோரணையும் வேகமும் எனக்கு ஒரு வித அச்சத்தையே ஏற்படுத்திவிட்டது. 'அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க வள்ளலார் சைவ சமயப் பிரச்சாரம் செய்து வந்த திருவருள் மண்டபத்தில் இஸ்லாமியப் பிரச்சாரமா?' எனக் கேட்பது போலிருந்தது. தயக்கத்துடன் ஏன் கேட்கிறீர்கள் என்று எதிர் கேள்விபோட்டேன். அப்போது அவர் சிறிது புன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “எனக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. முஸ்லிம்கள் ஐந்து முறை நமாஸ் பண்ணுவாங்க; ஒரு மாதம் உபவாசம் இருப்பாங்க; அப்போது ஏழைகளுக்கு தானதருமம் செய்வாங்க. இதுக்குமேல் அவங்களைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சீறாப்புராணத் தொடர்ச் சொற்பொழிவு நடந்த போது இராமலிங்க வள்ளலார் சைவ சமயப் பிரச்சாரம் செய்த திருவருள் மண்டபத்தில் ஏதோ புராணச் சொற்பொழிவு தொடங்கக் கூட்டம் நடப்பதாகக் கருதி விழாவில் கலந்து கொண்டேன். அதில் பேசிய சிலம்பொலி சு. செல்லப்பனார் உட்பட பலரும் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகத்தைப் பற்றியும் பேசினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் எனக்குப் புதுத் தகவல்களாக இருந்தன. இஸ்லாத்தில் எவ்வளவு நல்ல கருத்துகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கு. அவைகளையெல்லாம் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமாகிவிட்டது. எனவேதான் தொடர்ந்து கூட்டம் நடந்தால் தொடர்ந்து கேட்கலாமே என்ற ஆசையில்தான், தொடர்ந்து நடக்குமா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். தொடர்ந்து நடக்கும் என்று நான் கூறியதைக் கேட்டு மலர்ந்த முகத்துடன் சென்றார் என்று கூறிச் சிரித்தார்.

இதே போன்ற மற்றொரு சம்பவம் அமெரிக்காவில் ஏற்பட்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நான்டல் லாசிலிருந்து ஹலிஸ்டனை நோக்கி 'கிரேஹவுண்டு' பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் அருகிலிருந்தவர் அடுத்து வந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிச் சென்று விட்டார். நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முறையில் 'யா அல்லாஹ்' எனச் சற்று உரத்துக் கூறி நெட்டுயிர்த்தேன். 'யா அல்லாஹ்' எனும் சத்தத்தைக் கேட்ட தாடிவைத்த கறுப்பர் ஒருவர் என்னருகில் காலியாக இருந்த இருக்கையில் விரைந்து வந்து அமர்ந்தபடி 'ஸலாம் அலைக்கும்' என முகமன் கூறியபடி உட்கார்ந்தார். அவரது கரிய முகத்தில் மகிழ்ச்சி, பாந்துவம் இரண்டும் கலந்த ஒரு மலர்ச்சி தெளிவாகத் தென்பட்டது. அவர் டல்லாசில் பஸ் ஏறும்போதே பார்த்தேன். ஜெபமணியை உருட்டியபடி காணப்பட்ட அவரை ஒரு கிறிஸ்தவராகவே எண்ணியிருந்தேன். நான் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்தவுடன் வாஞ்சையுடன் சலாம் கூறி, இடம் மாறி என்னருகில் உட்க்கார்ந்தவர் நான் ஏதேனும் பேச வேண்டும் என்பதை எதிர்பார்ப்பவர்போல் என் முகத்தை கூர்ந்து நோக்கினார். அவருக்குப் பதில் சலாம் கூறியப்படி, அவரைப் பற்றி அறிய விரும்பிக் கேட்டதற் கெல்லாம் பதில் கூறி வந்த அவரிடம் “நீங்கள் எப்போது முஸ்லிம் ஆனீர்கள்? அதற்கு என்ன காரணம்? உங்கள் குடும்பத்தவர் யாராவது அரபு நாடுகளில் வேலை செய்கின்றார்களா?” என்று கேட்ட உடனே அவர், “எங்கள் குடும்பத்தில் யாருமே அமெரிக்காவை விட்டு வெளியே போனதில்லை. ஒரு முறை பாக்ஸர் முஹம்மதலியின் பேச்கைக் கேட்டேன். அவர் இஸ்லாத்தைப் பற்றி அதன் கொள்கை, கோட்பாடுகளைப் பற்றி கூறிய அனைத்தும் எனக்குப் புதியதாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருந்தது. முஹம்மதலி தன் பேச்சினூடே அடிக்கடி பிலால் என்ற பெயரைக் கூறினார். நான் ஒரு முறை வாஷிங்டன் சென்று அங்குள்ள இஸ்லாமிக் ஸ்டடி சென்டரில் இருந்து பிலால் பற்றிய நூல் ஒன்றை வாங்கி வந்தேன். அதைப் படித்து முடித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவே இல்லை.

சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு கறுப்பு இனத்தவரை மிருகங்களோடு மிருகமாகக் கருதி கூட்டங்கூட்டமாகப் பிடித்து விற்பனை செய்யப்பட்ட கால கட்டத்தில், அடிமைகளாக வியாபாரப் பொருளாகக் கருதி ஏலம் போட்டு விற்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் எனும் கறுப்பரை விடுவித்து, முழு விடுதலை வழங்கியதோடு, இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக தொழுகை அழைப்பான பாங்கு ஒலி எழுப்ப பிலால் அவர்களையே பெருமானார் அவர்கள் தேர்ந்தெடுத்தார். மற்றவர்க்குச் சமமாக மட்டுமல்ல சற்று மேலான அந்தஸ்தையே எங்களுக்கு வழங்கிய இந்த இஸ்லாமிய மார்க்கம் தான் மனிதர்களை, மனிதப் புனிதர்களாக்கும் மார்க்கமெனத் தெளிந்து அதில் இணைந்தேன். நான் முன்பு இருந்த மதத்தில் பெற முடியாத மதிப்பும் மரியாதையும் இப்போது கிடைக்கிறது. சட்டத்தில் சமம் என்றிருந்தாலும் கறுப்பன் என்பதற்காக சமநிலையில் மதிக்கத் தயங்கிய வெள்ளை அமெரிக்கர்கள் இப்போது சமமாகப் பழகுகிறார்கள்; மதிக்கிறார்கள். இப்போது என் உறவினர் குடும்பங்களும் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிம்களாகி வருகின்றன. நம்மை முழுத் தகுதி பண்டத்த மனிதர்களாக மற்றவர்கள் கருதி, இஸ்லாமே வழி என்பதை அமெரிக்கக் கறுப்பர் இனமே இன்று உணரத் தலைப்பட்டுள்ளது” என ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தார். அப்போது இனங்காணாத மகிழ்ச்சிப் பெருக்கு அவரிடம் கண்ணீர்த் தேக்கமாய்க் காட்சியளித்தது. இஸ்லாமிய உணர்வைச் சுவைக்கச் செய்தால் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவர் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.

நான் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றிருந்த போது வாஷிங்டனுக்கு அருகில் இருந்த மார்ட்டின்ஸ்பர்க் எனும் ஊரில் டாக்டர் ஜியாவுதீன் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை. "இங்கு ஜும்மா தொழுகை தொழ முடியுமா” என்று கேட்டேன். அப்போது அவர் "அமெரிக்காவில் மசூதிக்குப் பஞ்சமில்லை" என்று கூறி, முக்கிய சாலையில் அமைந்திருந்த ஒரு பெரிய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஜமாத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு மாளிகையை வாங்கி, அதை மசூதியாக மாற்றியமைத்திருந்தார்கள். எல்லாம் முறைப்படி நிகழ்ந்தன. வந்திருந்தவர்களில் கருப்பர் இன முஸ்லிம்கள் 60 சதவிகிதம் இருக்கும். வெள்ளை அமெரிக்கர் பத்து சதவீதம் இருக்கும் மற்றவர்கள் வெளிநாட்டு முஸ்லிம்கள். இதுபோல் வாஷிங்டனைச் சுற்றி பல பள்ளிகள் இருக்கின்றன என்ற தகவலையும் தந்தார்.

ரமளான், பக்ரீத் போன்ற பெரு நாட்களுக்கு பெருங் கூட்டம் வருமே அதைச் சமாளிக்க என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அருகில் ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் கிளப் இன்டோர் ஆடிட்டோரியம் இருக்கிறது. ஒரு நாளைக்கு அதைப் பெற்று பெருங்கூட்டமாகக் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுகிறோம் என்று கூறினார். இப்படியொரு பக்ரீத் தொழுகையை அல்பேனியில் தொழுத அனுபவம் எனக்கு உண்டு. இத்தொழுகைகளை ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் இருந்து தொழுகிறார்கள். ஒரு இஸ்லாமியக் குட்டி மாநாடு போலவே இப் பெருநாள் தொழுகைகள் அமைகின்றன.

மொத்தத்தில் அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாம் விரைவாக மக்களை ஈர்த்துக் கொண்டுள்ளது. நான் அடிக்கடி செல்லும் பாரிசில் ஒரு புதுமையைக் கண்டு வருகிறேன். 1980 - க்குப் பிறகு உருவாகும் அரசின் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ் தளத்தில் பள்ளிவாசலுக்கு என ஒரு பகுதியை ஒதுக்கியே கட்டும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு இஸ்லாம் விரைந்து பரவி வருகிறது.

வெளிப்படும் உண்மை

இதிலிருந்து பல உண்மைகள் வெளிப்படுகின்றன. இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள, தெளிவு பெற பல உள்ளங்கள் காத்திருக்கின்றன. ஆனால், அவர்கள் உள்ளம் ஏற்கும் வண்ணம் வழங்க நாம்தான் வகையில்லாமல் இருக்கிறோம். இதனால் மாற்றார் கொண்டுள்ள மாறான கருத்துகள் துடைத்தழிக்கப்படாததால் அவை தொடரவும் நேரிடுகிறது.

அமெரிக்காவில் கண்ட அதிசயம்

அண்மையில் ஒரு சுவையான சம்பவம் எனக்கு அமெரிக்காவில் ஏற்பட்டது. நான் வாஷிங்டனில் இருந்தபோது நாக்ஸ்வில் எனுமிடத்தில் 'எரிபொருள் ஆதாரங்கள்' பற்றிய பன்னாட்டுக் கண்காட்சி நடப்பதாகக் கேள்விப்பட்டு, அதைக் காண அங்கு சென்றிருந்தேன்.

அக்கண்காட்சியில் உலக நாடுகள் பலவும் பங்கேற்றிருந்தன இந்தியாவைத் தவிர. மற்ற நாடுகளின் அரங்குகளைவிட சவூதி அரேபியா நாட்டு அரங்குமுன் மிக நீண்ட 'கியூ' வெகு நேரமாக நின்றிருந்தது. அரங்கில் ஏதோ புதுமைகள் இருப்பதாகக் கருதி நானும் வரிசையில் இடம் பிடித்து நின்றேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அமெரிக்கரிடம் பேச்சுக் கொடுத்தபோதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. 'சவூதி அரங்கினுள் கிராண்ட் மாஸ்க்' எனும் பெயரில் காஃபாவை தத்ரூபமாக அமைத்து, அதை மையமாக வைத்து, இஸ்லாமிய நெறியையும் நாயகத் திருமேனியையும் அவர்தம் கருத்துரைகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் நறுக்குத் தெரித்தாற் போலச் சொல்லப்படுகிறது. அதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை பண்புகளைத் தெளிவாக அறிந்துணர முடிகிறது என்றும் கூறியதோடு, இதை நான்காவது முறையாகத் தன் குடும்பத்தாரோடு பார்க்க வந்திருப்பதாக விளக்கிக் கூறியதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து போனேன். உள்ளே சென்று பார்த்தபோதுதான் அந்த அமெரிக்க அன்பர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை என்பது புலப்பட்டது.

இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியாத அமெரிக்க மக்களுக்கு ஒலி - ஒளிக் காட்சியாக காஃபாவை அமைத்து, மக்கள் ‘தவாப்' செய்வதுபோல் மனித உருப் பொம்மை களை நகரச் செய்து, கணிரென்ற, அதே சமயம் பவ்வியமான குரலில் 'ஓர் இறை' த் தத்துவத்தையும் அண்ணலாரின் போதனைகளையும் சிந்தைகொள் மொழியில் சொல்லு வதைக்கேட்கும்போது, இஸ்லாத்தின் மீது ஈர்ப்புக் கொள்வது இயல்பானதொன்றாக அமைந்துவிடுகிறது. சொல்ல வேண்டிய செய்தியை சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் எதுவுமே எடுபடும் என்பது எவ்வளவு பெரிய நிதர்சன உண்மை என்பது அப்போது புரிந்தது.

வெற்றிக்கான உத்தி

சாதாரணமாக மஞ்சி விரட்டு என்று அழைக்கப்படும் மாடுபிடி விளையாட்டில் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்போர் ஓர் உத்தியைக் கையாள்வர். எவ்வளவு முரட்டுக் காளையானாலும் அதை அடக்க முயல்பவர் எடுத்த எடுப்பில் மாட்டின் கொம்பைப் பிடித்து நிறுத்த முயற்சிக்க மாட்டார். அவ்வாறு செய்தால் அவரை முட்டித் தூக்கி எறிந்து விடும் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். எனவே, அவர் ஜல்லிக்கட்டு மாட்டுடன் தொடர்ந்து சிறிது நேரம் ஓடுவார். பின் முதுகுத் திமிலின்மீது கை வைத்து வளைத்து இறுகப் பிடிப்பார். அதன் பிறகும் மாட்டுக் கூடவே தொடர்ந்து ஓடியபடி, தன் காலை அதன் அடி வயிற்றில் உராயும்படி அடிக்கடி செய்வார். இது ஜல்லிக்கட்டு மாட்டுக்கு மிக இதமான உணர்வை ஊட்டும். இதனால் மாட்டின் வேகம் வெகுவாகக் குறையும். அச்சமயத்தில் அன்புணர்வு பொங்க மாட்டைத் தழுவியபடி நிற்கும் மாடுபிடியாளர் மாட்டுக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பந்தயப் பொருள்களைக் கைப்பற்றியவராய் வெற்றி பெறுவார். இதே முறையைத் தான் இஸ்லாத்தைக் கண்டு மிரண்டு நிற்பவர்களிடத்தில் இஸ்லாமிய உண்மைத் தத்துவங்களை உணர்த்தக் கையாள வேண்டும்.

இறை தூதர்களும் இறை வேதங்களும்

எவ்வளவுதான் முஸ்லிம்கள்மீது கசப்புணர்வும் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வும் புகட்டப்பட்டிருந் தாலும், இந்த உள்ளங்களில் 'உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் சமய தீர்க்கதரிசிகளும் இறைவனால் அருளப்பட்டவர்களே; இறைதூதர்கள் பிறவாத நாடில்லை; இனமில்லை; மொழியில்லை; ஒரு சமய வேதத்தின் மூலக் கொள்கைகள் மனிதரால் மாற்றப்படும்போது, மீண்டும் மூல வடிவில் வேதமும் அதைப் போதிக்க இறைத் தூதரும் வருவதுதான் வேத வரலாறு. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான இறை நம்பிக்கையாகிய ஈமான், இறை வணக்கமாகிய தொழுகை, விரதமாகிய நோன்பு, ஏழையின் பங்காகிய ஜகாத், புனிதப் பயணமெனும் ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் அனைத்துச் சமயங்களிலும் இடம் பெற்றிருப்பதே இதற்குச் சான்று' என்று விளக்கும்போது இடைவெளி குறுக, ஒருவரையொருவர் நெருங்கி வர, உள்ளங்கள் ஒன்றிணையத் தொடங்கும்.

சூஃபிகளின் உத்தி

இந்த உத்தியைத்தான் முஸ்லிம் சித்தர்கள் எனும் இஸ்லாமியச் சூஃபிமார்கள் தமிழ் மக்களிடம் கையாண்டார்கள். அதன் விளைவாகத்தான் குணங்குடி மஸ்தான் போன்ற தமிழ்ச் சூஃபிக் கவிஞர்களின் சீடர்களாக முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்களே அதிகமாக இருந்தனர் என்பது வரலாறு தரும் உண்மை.

முன் மாதிரி வாழ்க்கை

அது மட்டுமல்ல, முஸ்லிம்களின் சொல்லும் செயலும் மற்றவர்களை ஈர்ப்பது இயல்பு. இன்றைக்கும் இஸ்லாத்தை உணர்ந்து பின்பற்றும் பல முஸ்லிம்கள் மற்ற சமயத்தவர் பார்த்து வியக்குமளவுக்கு முன்மாதிரி முஸ்லிம்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்தால் பெயருக்கு முஸ்லிமாக வாழ முனையும் பெயர் தாங்கி முஸ்லிம்களால் அவ்வாறு வாழ இயலாமல் இருக்கலாம். அகத்திலும் புறத்திலும் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதை உய்த்துணர வேண்டும்.

அக - புற வாழ்வு

நம் மனித வாழ்க்கை அகம், புறம் என இரு பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். இரு பிரிவு வாழ்க்கை முறைக்கும் அவற்றின் வெற்றிக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். ஆன்மீக அடிப்படையிலான அக வாழ்வும் அறிவியல் போக்கிலான புற வாழ்வும் ஒன்றிணந்ததே இஸ்லாமிய வாழ்க்கை முறை. இதிலே அக வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் தந்து வாழ முனைந்தவர்கள் மெய்ஞ்ஞானச் செல்வர்களான சூஃபியாக்கள். அவர்களது ஞான வாழ்வின் மையப் புள்ளி உருவிலா ஓர் இறைவனாவான்.

கரு ஒன்று - உரு வேறு

ஆய்ந்து நோக்கினால் அனைத்துச் சமயங்களின் அடித்தளமும் ஓர் இறைத் தத்துவத்தாலானதாகவே இருப்பதைக் கண்டு இன்புறலாம். வடமொழியிலுள்ள இந்து சமய வேத நூல்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்த ஜெர்மன் ஆய்வியலறிஞர் மாக்ஸ்முல்லர் இந்து சமயத்தின் அசைக்க முடியா அடிப்படை 'ஓர் இறை' தத்துவமே என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து கூறியுள்ளார்.

நினைந்து வணங்கினால் மோட்சம்

பழைய இந்து சமயத்தை மீண்டும் புதுப்பிக்க தென்கோடி கேரளா முதல் வடகோடி இமயம் வரை நடந்து சென்று இந்து சமயத்துக்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கரர் 'யாருக்கு மோட்சம் கிட்டும்' என்பதை விளக்கும்போது, "ஒரே இறைவன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். கடவுளை நினைந்து வணங்கினால் மோட்சம் கிட்டும்” எனக் கூறியிருப்பதிலிருந்து ஒரே இறைவனை மனதால் மட்டுமே நினைந்து வணங்க முடியும் என்பதையும் அத்தகையவர்கட்கே மோட்சம் கிட்டும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஓர் இறைக் கோட்பாடே 'பிரம்ம வித்தை'

இந்து தர்மத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் கெளதம மகரிஷி. இவர் பிரம்ம வித்தையைக் கற்றுத் தந்த பிதாமகர் எனப் போற்றப்படுகிறார். ஆனால், இவர் 'பிரம்ம வித்தை’ என எதைக் கூறுகிறார் என்பது நினைத்தின்புறத் தக்கதாகும்.

“பல பரம்பொருள் உண்டு என்று ஒரு மதம் கூறுமானால் அது மதமல்ல; ஒரே இறைவனை வணங்குவதே பிரம்ம வித்தை"

எனக் கூறியிருப்பதிலிருந்து இஸ்லாத்தின் அடித்தள இறைக் கோட்பாட்டையே கெளதம மகரிஷியும் கூறுவதிலிருந்து அனைத்துச் சமயங்களின் அடித்தள இறைக் கொள்கை ஒன்றாகவே இருப்பதையறிந்து வியப்படைகிறோம்.

கர்த்தாவா? த்ரஷ்டாவா?

மேலும் இந்து சமயத்தில் சிவனும் விஷ்ணுவும் பெருங் கடவுளர்களாகக் கருதி பிற்காலத்தில் வணங்கப்பட்டாலும் கூட, அவர்கள் தங்களுக்கு மூலமான ஓர் பரம்பொருளை வணங்குவதாக சிவபூசை போன்ற புராணச்செய்திகள் கூறுவதிலிருந்து, எல்லாவற்றிற்கும் மேலான ஓர் சக்தியை-பரம்பொருளையே எல்லோரும் வணங்கி வந்தனர் என்பது தெளிவாகிறது. இதிலிருந்து இவர்களெல்லாம் இறை தூதர்களாக வந்தவர்கள்; பின்னர் கடவுளர்களாக்கப்பட்டனர். இறைத் தூதர்களாக வந்தவர்கள் தொடக்கத்தில் ஒரே இறைவனை வணங்கப் பணித்தனர். அவர்கள் பெற்ற வேதமும் ஒரே இறைவணக்கத்தையே போதித்தது. இறை தூதர் மறைவுக்குப்பின் அவர் மீதுகொண்ட அபரிமிதமான அன்பாலும் மதிப்பாலும் அவர்மீது அதீதமான ஆற்றல்களையும் சக்தியையும் ஏற்றிப் புகழ்வர். இதற்கேற்ப அவரவர் திறமைக்கேற்ப புதிய புதிய அதிசய செய்திகளைப் புனைந்துரைகளாகப் புகுத்துவர். இறை தூதரையே இறைவன் நிலைக்கு உயர்த்தி, வணங்கத் தலைப்படுவர். இறைத்தூதர் எந்தக் கடவுளை வணங்கப் பணித்தாரோ அந்த இறைவனின் இடத்தைத் தூதர் பெறுவார். அத்தூதர் மூலம் இறைவன் அளித்த வேதம், தூதர் கடவுளாக்கப்பட்டபின், ‘வேத விளக்கம்' என்ற பெயரில் அவ்வேதம் எல்லாவகையான மாற்ற திருத்தங்களுக்கும் ஆட்பட அதன் அடிப்படை அம்சம் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி விடும். இதுதான் இறை தூதர்களின் வரலாறாகவும் இறை வேதங்களின் போக்காகவும் இருந்து வருகிறது.

ஒவ்வொரு இறை தூதரும் வேதத்தைப் பெற்ற வரலாறு மிகவும் சுவையானது. வேத வரலாற்றை நுட்பமாக ஆய்ந்து பார்த்தால் வேத மந்திரங்கள் எவ்வாறு உருவாயின என்பது தெளிவாகும். வேத வரலாற்றை கூற வந்த சங்கராச்சாரியார் வேதங்களை ரிஷிகள் உருவாக்க(கர்த்தாக்கள்)வில்லை. மந்திரங்களைக் கண்டவர்கள் (த்ரஸ்டாக்கள்) மட்டுமே அவர்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது வேத ரிஷிகள் என்று கூறப்படுபவர்கள் யாருமே வேத வசனங்களைத் தங்கள் சிந்தனை வழி எழுதிய வேத கர்த்தாக்கள் இல்லை. கர்த்தாக்கள் என்றால் தாங்களாகவே உருவாக்கியவர்கள் அல்லது படைத்தவர்கள் அல்லது புனைந்தவர்கள் எனப் பொருள்படும். ஆனால், வேத ரிஷிகளைப் பொருத்தவரை வேதங்களைக் கண்ணெதிரே கண்டவர்களே தவிர, புதிதாக உருவாக்கியவர்கள் அல்ல.

இறைவேதம் பெற்றது எப்படி?

கண்ணெதிரே கண்டவர்கள் என்றால் எப்படிக் கண்டவர்கள்?

ஞானிகளாகிய ரிஷிகள் தங்கள் ஐம்புலன்களைக் கடுமையான மனக் கட்டுப்பாட்டால் அடக்கியவர்களாக, மனப் பக்குவம் பெற்ற நிலையில் இறை தியானத்தில் (உள் நோக்கில்) ஈடுபட்டு, இறையுணர்வு பொங்க இறை நெருக்கம் பெறுவர். அந்நிலையில் அவர்தம் புறக் கண்கள் மூடப்பட்ட நிலையில் அகக் கண்கள் திறந்து கொள்கின்றன. அப்போது அவர்கட்கு ஒரு உணர்வு தட்டுப்படும். அப்போது அவர்கள் தங்கள் புறக் கண்களைத் திறந்து வானை நோக்கிப் பார்த்தால் இறை வசனங்கள் மந்திரங்களாக எழுதப்பட்டிருக்கும். அவற்றைப் பார்த்து மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொள்வார்கள். பின்னர், அம்மந்திரங்களைத் தங்கள் சீடர்களிடம் கூறி, அவற்றை எழுத்தில் பதிந்து கொள்வார்கள். ஆகவே தான் இந்த வேத ரிஷிகள் 'த்ரஷ்டாக்கள்’ என அழைக்கப்பட்டனர்.

இறுதி இறை தூதருக்கு இறைவன் கட்டளை

இஸ்லாமிய நபிமார்களுக்குக் குறிப்பாக இறுதி நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு இறைச் செய்தி கிடைத்ததும் ஜிபுரீல் (அலை)மூலம் கேட்டதும் இதே முறையில்தான். மூல வடிவிலான இறைச் செய்தி நாளடைவில் மனிதர்களால் மாற்ற திருத்தங்களுக்கு உட்படுவதால் மீண்டும் மூலவடிவிலேயே அவ்வேதம் இறைத்தூதர் ஒருவருக்கு இறைவனால் வழங்கப்படும் என்பது தான் வேத வரலாறு. எனவே, உலகுக்கு இறைவனால் வழங்கப்பட்ட அனைத்து வேதங்களின் அடிப்படை ஒன்று போலவே இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் இறைவன் தன் திருமறையாம் திருக்குர்ஆனில், நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் கூறும் முறையில்,

"(நபியே!) உமக்கு முன் வந்த இறைதூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை”

(திருக்குர்ஆன் 41-43)

இதிலிருந்து இறை தூதர்களின் காலம் வெவ்வேறாக இருந்தாலும் தோன்றிய நாடும், மொழியும் இனமும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த சமுதாயச் சூழல் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதங்களின் அடிப்படை மட்டும் ஒரே மாதிரியுள்ளன.

இறை காக்கும் இறுதி வேதம்

அண்ணலாருக்கு முன்னர் வந்த இறை தூதர்களின் வாழ்வும் வாக்கும் அவர்கள் பெற்ற வேதங்களும் மனிதர்களால் மாற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு மாசுபட்ட போதிலும் இறுதி நபிக்கு வழங்கப்பட்ட இறுதி வேதமான திருக்குர்ஆன் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படா நிலையில், ஒரு சொல்லும் எழுத்தும் கூட மாறாமல் இன்றும் மூலவடிவிலேயே இருப்பதற்கு அடிப்படைக் காரணம், முந்தைய வேதங்களைக் காக்கும் பொறுப்பை இறைவன் மனிதர்களிடம் ஒப்படைத்திருந்தான். மாற்றதிருத்தங்களுக்கு உட்பட நேர்ந்தது. ஆனால், இறுதி நபிக்கு வழங்கப்பட்ட இறுதி வேதத்தைக் காக்கும் பொறுப்பை வல்ல அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டு விட்டதனால், அது மூல வடிவிலே இருக்கிறது. இனியும் இவ்வுலகுள்ளளவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(23.7.98 அன்று துபாய் தமிழ் உணவகத்தில் கூத்தா நல்லூர் ஜமாத்தின் சார்பில் நடைபெற்ற மீலாது விழாச் சொற்பொழிவுச் சுருக்கம்)