இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/இஸ்லாம் அன்றும்-இன்றும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இஸ்லாம்
அன்றும் - இன்றும்


அபுதாபி ஐமான் சங்கம் சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டிருக்கும் பெருமானார் பிறந்த நாள் விழாவிலே பங்குபெறும் இனிய வாய்ப்பை நல்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் ஐமான் அமைப்பாளர்கட்கும் ஈமான் அமைப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள நெருக்கம் பெற கருத்துப் பரிமாற்றம்

இங்கே உங்கள் முன் உரையாற்றத் தொடங்குமுன் ஒரு எண்ணத்தை அழுத்தமாக நெஞ்சத்தில் பதியவைத்துக் கொண்டுதான் பேசுகிறேன். நான் பேசப் போகும் செய்திகள் எதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. ஆயினும், அவற்றை உங்களோடு உரசிப் பார்க்கும் வகையிலும் ஒப்பிட்டறியும் முறையிலும் ஒரு சில கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள விழைகிறேன். இன்னும் சொல்லப் போனால் உங்களோடு சேர்ந்து சில விஷயங்களை சிந்திக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

இங்கே வரவேற்புரையாற்றிய தலைவர் என்னைப் பலவாறு பாராட்டிப் பேசினார். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகும். இப்பாராட்டுக்களுக்கெல்லாம் நான் தகுதியுள்ளவன்தானா என்பதில் எனக்கு ஐயமுண்டு. மேலும், இவர்கள் எந்தச் செயல்களை - பணிகளை ஆற்றியதற்காக என்னைப் பாராட்டினார்களோ அந்தச் செயல்களை, பணிகளை ஆற்றத் தொடங்கியபோது, அதற்காக இப்படியெல்லாம் பாராட்டுவார்கள் என்று நான் எதிர்பார்த்துச் செய்யவில்லை. ஒரு முஸ்லிம் தான் பிறந்த மண்ணுக்கு, மண் சார்ந்த மக்களுக்கு, இனத்துக்கு, மொழிக்கும் தான் பின்பற்றும் மார்க்கத்திற்கும் மார்க்கம் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை முறையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேதான் என் பணிகள் அமைந்துள்ளன.

மண்ணின் வேரும் வேரடித் தூருமாக

இங்கே பேசுகின்றபோது ஒரு கருத்தைச் சொன்னார்கள். 'தமிழைப் பற்றி இவ்வளவு பேச வேண்டுமா?' என்ற ஐயப்பாடுகூட சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். தமிழை நம்மிடமிருந்து எப்படிப் பிரிக்க முடியும்? 'இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்பதுதான் ஒவ்வொரு தமிழ் முஸ்லிமின் இதயநாதம்; இன்பக் கீதம். இந்த உணர்வின் அடித்தளத்தில் வந்தவர்கள் நாம். ஏதோ நாம் இந்த அரபக மண்ணிலே பிறந்து தமிழக மண்ணிலே வாழ்ந்து வருபவர்கள் அல்ல. தமிழ் மண்ணின் வேரும் வேரடித் தூருமாக இருப்பவர்கள். எனவேதான் தமிழுக்கும் தமிழ் இன மக்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மார்க்கம் சார்ந்த மக்களுக்கும் எல்லா வகையிலும் தொண்டு செய்வது இன்றியமையாக் கடமையாகக் கருதி அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறோம்.

இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி

எனது தொண்டை இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு ஆற்றி வருகின்றேன். ஒன்று, நத்தைக்கு கூடு எவ்வளவு முக்கியமோ அதுபோல் எனக்கு என் சமுதாயம் முக்கியம். அந்தச் சமுதாயம் விழிப்புடன் இருப்பதற்கான உணர்வுகளையும் சிந்தனைகளையும் அவர்களிடத்தில் உருவாக்கி வளர்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இஸ்லாமியப் பணிகளை, இஸ்லாமிய இலக்கியப் பணிகளை ஆற்றி வருகிறேன். மற்றொன்று, தாய்மொழியான தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை, கடமைகளை முனைப்புடன் ஆற்றி வருகிறேன். நான் இதுவரை எழுதியுள்ள நூல்களை ஆற்றிவரும் பணிகளை, இந்த இரண்டு பிரிவுகளுக்குள் மட்டுமே அடக்க முடியும்.

ஆன்மீகமும் அறிவியலும் இரு கண்கள்

சிலர் என்னிடத்தில் அவ்வப்போது ஒரு கேள்வியை எழுப்புவதுண்டு. "நீங்கள் உங்கள் மார்க்க நூல்களில், இஸ்லாமிய இலக்கியங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் அதே சமயம் அறிவியல் தமிழ் வளர்ச்சியிலும் அதி தீவிர கவனம் செலுத்துகிறீர்களே?" என்பதுதான் அவர்கள் வியந்து கேட்கும் கேள்வி. அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பதுவும் அறிவியல் என்பதுவும் ஒன்றுதான். ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பதைப் போல இஸ்லாத்தில் ஆன்மீகமும் அறிவியலும் அமைந்துள்ளன. இரண்டும் வெவ்வேறானவைகளோ. அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளோ அல்ல. இரண்டுமே இறை நோக்கத்தை இனிது நிறைவேற்ற ஒருங்கமைந்தவைகளாகும். இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் சரியான கோணத்தில் பார்த்தால்தான் எதையும் தெளிவாகப் பார்க்கவும் பார்த்ததை தெளிவாக அறியவும் இயலும். அந்த முறையிலேயே நான் ஆன்மீகம், அறிவியல் ஆகிய இவ்விரண்டு பணிகளையும் ஒருசேர ஆற்றி வருகின்றேன். 'யார்?' என்பதல்ல, 'என்ன?' என்பதே முக்கியம்

இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள் ஒரு கருத்தைக் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. மணவையாரின் சமுதாயப் பணிகளை முஸ்லிம்கள் சரியான முறையில் அறிந்து, உணர்ந்து கௌரவிக்கவில்லை என்பதே அது. எங்கோ இருக்கின்ற ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவரது பணிகளைப் பாராட்டி தங்கத் தாமரையும் ஆயிரக்கணக்கில் பணமும் பரிசாகத் தந்து பாராட்டுகிறார்கள். தமிழ் நாட்டின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் முத்தையச் செட்டியார் நினைவுப் பரிசை அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையும் காஞ்சி காமகோடி பீடம், சங்கராச்சாரியார் நினைவுப் பரிசான 'சேவா ரத்னா' விருதையும் வழங்கிக் கௌரவிக்கிறது. ஆனால், நம் இஸ்லாமிய சமுதாயம் எந்த பரிசும் பாராட்டும் கௌரவமும் தந்து சிறப்பிக்கவில்லையே என்றெல்லாம் தங்கள் ஏக்கத்தை ஆதங்கமாக வெளிப்படுத்தத் தவறவில்லை. இஸ்லாமிய சமுதாயம் என்னை உரிய முறையில் மற்றவர்களைப் போன்று கௌரவிக்கவில்லை என்பதை நான் பெரும் குறையாகக் கருதவில்லை. என்னைவிட அறிவாற்றலும் செயல்திறனுமிக்கவர்கள் நம் சமுதாயத்தில் எத்தனையோ பேர் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தக்கவர்களை, தகுதி மிக்கவர்களை இனங்கண்டு போற்ற இயலாத வகையில் இந்த இஸ்லாமியத் தமிழ்ச் சமுதாயம் தடுமாறிக் கொண்டுள்ளதே என்பதுதான் என் ஆதங்கம். மற்ற சமயத்தவர்கள் எப்போதுமே 'யார்?' என்பதைவிட 'என்ன?' என்பதிலேயே கருத்தூன்றிக் கவனிக்கிறார்கள். இன்றைக்கு அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் முத்தைய நினைவுப் பரிசாக ரூபாய் ஐம்பதினாயிரமும் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளித் தட்டில் பாராட்டையும் பொறித்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கும் போது மணவை முஸ்தபா யார்? எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று பார்ப்பதில்லை. மணவை முஸ்தபா என்ன செய்திருக்கிறான் என்பதை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆகவே, இஸ்லாமியத் தமிழ்ச் சமுதாயம் சரியான கோணத்தில், காலத்தின் போக்குக்கும் தேவைக்கு மேற்பயாரெல்லாம் பாடுபடுகிறார்களோ அவர்களை உரிய முறையில் இனங்கண்டு, அவர்கள் ஆற்றும் பணியைப் பாராட்டித் தட்டிக் கொடுக்கும் மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தட்டிக் கொடுப்பதன் மூலம் மேன்மேலும் தூண்டி ஊக்குவிக்க வேண்டும். மாட்டைத் தட்டிக் கொடுத்தால் ஓடுகிறது. மனிதனைத் தட்டிக் கொடுத்தால் ஓட மாட்டானா? தட்டிக் கொடுக்கும் மனப்பான்மைக்குத்தான் கடுமையான பஞ்சம் நிலவுகிறது.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

ஒரு முஸ்லிம் என்ற முறையில் ஆக்கப்பணி எதுவாயினும் அதைத் திறம்படச் செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு இஸ்லாமியாரின் அடிப்படைப் பண்பு பணி செய்து கொண்டிருப்பதுதான். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பது பொருள் பொதிந்த மொழியாகும். சிறந்த தொண்டு எதுவாயினும் அது இறைத் தொண்டாக மாறி விடுகின்றது. நான் செய்பவை பல பேருக்குப் பயன்படுகிறது. பல பேருக்குப் பயனுள்ளவனாக வாழ வேண்டும் என்பதுதான் நம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே வல்ல அல்லாஹ் நமக்கு விதித்துள்ள விதியாகக் கருதுகிறேன்.

பிறர் நலம் பேணும் பேருள்ளம்

ஒரு முறை பெருமானார் (சல்) அவர்களை தோழர் ஒருவர் அணுகி 'மனிதர்களில் சிறந்தவர் யார்?' எனக் கேள்வி கேட்டார். உடனே அண்ணலார் அவர்கள் 'யாரொருவர் மற்றவர்கட்குப் பயனுள்ள முறையில் வாழ்கின்றாரோ அவர்தான் மனிதர்களில் சிறந்தவர்' எனப் பதிலளித்தார்.

இப் பதிலைக் கேட்டவர் மனநிறைவடையாமல் மேலும் தொடர்ந்து 'மனிதர்களில் மிகச் சிறந்த மனிதர் யார்?’ என மீண்டும் வினாத் தொடுத்தார். பெருமானார் (சல்) அவர்கள் உடனடியாக 'யாரொருவர் மற்றவர்கட்கு மிகவும் பயனுள்ள முறையில் வாழ்கின்றாரோ அவர்தான் மனிதர்களில் மிகச் சிறந்த மனிதர்' எனப் பதில் கூறினார்கள். இதிலிருந்து பிறர் நலன் நாடும் பேருள்ளம் கொண்டவர்கள் பேராண்மை மிக்கவர்களாக, இறையுவப்புக்கு உரியவர்களாக வாழ முடியும் என்பதை வள்ளல் நபி (சல்) அவர்களின் வாக்கமுது மூலம் நாம் அறிந்து மகிழ்கிறோம்.

பிறர் நலன் நாடும் நம் பணி எத்தகையதாக அமைய வேண்டும் என்பது முக்கியத்துவமுடைய ஒன்றாகும்.

இஸ்லாத்தைப் பற்றிய அறிவையும் உணர்வையும் புதுப்பிக்கும் வகையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களிடம் எடுத்துக் கூறுதல் அவசியம் என்றாலும், இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத சகோதர சமயத்தவர்கள் மத்தியிலேதான் பெருமானாரைப் பற்றி எடுத்து விளக்கிச் சொல்லப்பட வேண்டும். மனித குலத்துக்கு வழிகாட்டியாக வந்த, அழகிய முன் மாதிரியாக இறைவனால் அனுப்பப்பட்ட நாயகத் திருமேனியின் வாழ்வும் வாக்கும், அதற்கு மூலாதாரமாயமைந்துள்ள திருமறையின் கொள்கை களையும் கோட்பாடுகளையும் முஸ்லிமல்லாதவர்களின் மத்தியில் முனைப்பாகக் கொண்டு செல்ல வேண்டும்.

அறியாமையே அடிப்படை

இன்றைக்கு இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பல காரியங்கள் நடைபெறுகின்றன. தவறான போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வாத செயல்கள் பல நடைபெறுகின்றன, இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது இஸ்லாத்தைப்பற்றியும் அம்மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களைப்பற்றியும் ஏற்பட்டுள்ள தவறான புரிந்துணர்வும் அறியாமையுமே யாகும். சாதாரண மக்களிடையே மட்டுமல்ல, படித்த மேல்மட்ட மக்களிடையேயும் இதே நிலை நிலவுவதுதான் பரிதாபம். ஷாபானு வழக்கிலே தீர்ப்புச்சொன்ன நீதிபதி, தீர்ப்புச் சொன்ன பின்னால் இஸ்லாத்தைப் பற்றிச் சரிவர தெரிந்து கொள்ளாமல் முல்லாவின் முஹமடன் லாவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புச் சொல்ல முன் வந்தது ஒரு தவறாகக்கூட இருக்கலாமோ என்ற ஒரு எண்ணம் என்னை உறுத்திக் கொண்டுள்ளது என்று கூறி வருந்தியதாகக் கூறுவார்கள். இந்த அளவுக்கு மேல் மட்டத்தில் இருப்பவர்களும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் சரியாக இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாத நிலையே இன்றும் நீடித்துக் கொண்டுள்ளது. இந்நிலைமையைப் போக்க வேண்டிய இன்றியமையாக் கடப்பாடு இன்றைய முஸ்லிம் களுக்கு உண்டு. இக்கொள்கையைப் பொருத்தவரை இளமை முதலே நான் உறுதியோடிருக்கிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அக்கோணத்தை நோக்கி என் செயல்பாடுகள் அமையாமல் இருப்பதில்லை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
அண்ணலார் விழா

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது பல்கலைக் கழக மாணவர் பேரவையின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த ஆண்டில் மாணவர் பேரவையின் சார்பில் 'மீலாது விழா' கொண்டாட முடிவு செய்தேன். இதனை பேரவையுள் அடங்கியிருந்த 36 மாணவர் அமைப்புகளின் செயலாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்காக கோகலே ஹாலில் நடத்திக் கொள்வதற்கான அனுமதி பெற விரும்பி பதிவாளரைத் தொடர்பு கொண்டேன். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவரான அவர், பல்கலைக் கழகச் சார்பில் 'மீலாது விழா' என்ற பெயரில் இஸ்லாமிய விழா நடைபெறுவதை விரும்பாத அவர் அனுமதி தரத் தயங்கினார். துணை வேந்தரிடம் அனுமதி பெறுமாறு கூறிவிட்டார்.

துணைவேந்தரிடம் 'மீலாது விழா' பற்றிக் கூறியவுடனேயே பல்கலைக் கழகத்தின் சார்பில் ஒரு சமய விழாவை எப்படிக் கொண்டாடுவாய் என்று கூறினார். இப்படி ஒரு கேள்விக்காகத்தான் நான் காத்திருந்தேன். நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் வந்தவரில்லை. இறுதி இறைத் தூதராக உலகத்திற்கே வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர். அவரும் வானுலகிலிருந்து இறக்கப்பட்டவரில்லை. மக்களிலிருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் உலக மக்களுக்காக வந்தவரேயல்லாது இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமே வந்தவர் இல்லை. ஆகவே, இங்கே இருப்பவர்களுக்கும் சேர்த்துத்தான் அவர் வந்தார். ஆகவே, இந்த விழாவை நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு என்று விளக்கிக் கூறியதைக் கேட்ட துணைவேந்தர் என் கோரிக்கையை ஏற்று 'மீலாது விழா' நடத்திக் கொள்ள அனுமதியளித்தார். அனைத்து மதத்தினரும் பெருமளவில் பங்கேற்குமாறு பெரும் திருவிழாவாக அதை நடத்த முற்பட்டேன்.

விழாவில் பேசிய நான்கு பேச்சாளர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் மற்றவர்களெல்லாம் இந்து சமயம் முதலான பிற சமயங்களைச் சார்ந்தவர்கள். எதற்காக இங்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், இம்மாதிரி விழாக்களில் அதிக அளவில் பிற சமயத்தைச் சார்ந்த பேச்சாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். கேட்பதற்கும் பிற சமய மக்கள் பெருமளவில் கூடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அன்றைய விழாவில் பேசிய தத்துவத்துறைப் பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் பெருமானாரைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் இஸ்லாமிய நெறியைப் பற்றியும் திறம்படப் பேச வேண்டுமே என்பதற்காக பதினைந்து நாட்கள் எவ்வளவு நூல்கள் கிடைக்குமோ அவ்வளவு நூல்களையும் படித்து குறிப்புகளைச் சேகரித்து, மேடையில் அதியற்புதமாகப் பேசினார். பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வியல் தத்துவங்கள் மனிதகுல முன்னேற்றத்துக்கு எவ்வாறெல்லாம் அற்புத வழிகாட்டியாய் அமைந்துள்ளன என்பதையெல்லாம் சிறப்பாக விளக்கினார். மற்றவர்களும் அவ்வாறே பேசினர்.

இலக்கியத்தின் மூலம் பிரச்சாரம்

நாம் அண்ணலார் பற்றியும் இஸ்லாமிய நெறியைப் பற்றியும் சகோதர சமயத்தவர்களிடம் எதையெல்லாம் பரப்ப விழைகிறோமோ அவற்றையெல்லாம் அப் பேச்சாளர்கள் பிற சமயத்தவர் மத்தியில் மிக அருமையாக எடுத்து விளக்குகிற வாய்ப்பு உருவாகிறது. இவ்வாறு நாம் சொல்லக்கூடிய செய்திகள் அவர்கள் மூலமாக சொல்லவைத்தால் அது போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் போய் சேரும். அந்த நுட்பத்தை நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1959ஆம் ஆண்டே அறிய நேர்ந்த காரணத்தினால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி பணியிலமர்ந்த பின்னர், இஸ்லாமியப் பிரச்சாரத்தை இலக்கியம் மூலம் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டே நிகழ்த்துவதை ஒரு இயக்கமாக நடத்த முற்பட்டேன்.

இப் பணிக்கென்றே 'மீரா ஃபௌண்டேஷன்' எனும் அமைப்பை உருவாக்கினேன். 'மீரா' என்பது ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியத்திற்கும் பொதுவான பெயராகும். மேலும் 'M' - Modernity, 'E' - Enlightenment, 'E' - Equlity, 'R' - Reformation, 'A' - Ameliaration ஆகும். இவற்றின் தலைப்பெழுத்துக்களெல்லாம் ஒன்றிணைந்ததே 'MEERA' என்பது. UNESCO என்பதைப் போல் அமைந்துள்ள பெயராகும். இந்த ஐந்து ஆங்கில எழுத்துக்களினடிப்படையிலான சொற்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டதாகும். 

இம் மீரா ஃபெளண்டேஷன் மூலம் எட்டு இஸ்லாமிய இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தினேன். குட்டி மாநாடுகள் போல் நடைபெற்ற இக்கருத்தரங்குகளில் பங்குபெற்ற ஆய்வாளர்களாகட்டும் பார்வையாளர்களாகட்டும் முஸ்லிம்களைவிட முஸ்லிம்மல்லாதவர்களே அதிகம் இடம் பெற்றனர். சீறாச் செல்வர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களைக் கொண்டு உமறுப்புலவரின் 'சீறாப்புராணம்' காப்பியத்தை தொடர்ச் சொற்பொழிவாக 27 கூட்டங்களிலும் வண்ணக்களஞ்சியப் புலவரின் 'ராஜ நாயகம்' காப்பியத்தை தொடர்ச் சொற்பொழிவாக 27 கூட்டங்களிலும் சொற்பொழிவுவாற்றச் செய்தேன். கருத்தரங்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொடர்ச் சொற்பொழிவுகளையும் நூலுருவாக்கி வெளியிட நான் தவறவில்லை.

இவற்றில் பங்கேற்றுப் பேசியவர்கள் எல்லா சமயங்களையும் சார்ந்தவர்களாவர். இவர்கள் இஸ்லாம் தொடர்பான நூல்களையெல்லாம் வாங்கிப் படித்து, அதில் ஏற்படும் சந்தேகங்களையெல்லாம் தக்கவர்களிடம் கேட்டு, தெளிவடைந்து பின் பேசுவார்கள். ஏனெனில், தாங்கள் ஏதாவது பேசிவிட்டால் முஸ்லிம்களும் மற்றவர்களும் தங்களைத் தவறாகக் கருதக்கூடுமே என்ற அச்சத்தில் ஆதாரபூர்வமான செய்திகளை, கருத்துகளையெல்லாம் சேகரித்து, முறையாகப் பேசுவதில் முனைப்புக் காட்டினார்கள். இதனால் அவர்களின் இஸ்லாம் தொடர்பான பேச்சுகள் சிறப்பாகவே அமைந்தன - அமைகின்றன.

தொட்டவர்கள் சித்தர்கள், முடித்தவர்கள் சூஃபிகள்

இஸ்லாமிய இலக்கியங்களை உமறுவின் சீறாப் புராணத்தையும் வண்ணக்களஞ்சியப் புலவரின் ராஜ நாயகம் எனும் சுலைமான் நபி வரலாற்றை விரித்துரைக்கும் இலக்கியத்தையும் 50-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் தொடர்ச் சொற்பொழிவாற்றிய சீறாச் செல்வர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் ஆதாரப்பூர்வமான தகவல்களினடிப்படையில் பேசி வியக்க வைத்தார்கள். ஒரு சிறு குறையைக்கூட முஸ்லிம்களால் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு திருமறையின் துணையோடு அண்ணலாரின் வாழ்வையும் வாக்கையும் சுலைமான் நபி போன்ற பிற நபிமார்களின் வாழ்வையும் வாக்கையும் அதியற்புதமாகச் சித்தரித்துப் பேசினார்கள். அதே போன்று 'சூஃபி' கருத்தரங்கில் ஆய்வு நிகழ்த்திய பேராசிரியர் இரா. மாணிக்கவாசகம், இஸ்லாமிய சூஃபிமார்களாகிய பீர் முஹம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் போன்றவர்களின் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ்ப் பாடல்களை சித்தர்களின் பாடல்களோடு ஒப்பீட்டாய்வு செய்து பேசும்போது, ஞான இலக்கியத்தைத் தொட்டவர்கள் சித்தர்கள், திறம்பட முழுமையடையச் செய்தவர்கள் தமிழ் சூஃபிமார்கள் என்பதைத் திறம்பட ஆய்வு செய்து பேசினர். முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமய மக்களும் வியந்து போற்றினார்கள். அதே செய்தியை நான் கூறியிருந்தால் மணவை முஸ்தபா ஒரு முஸ்லிம். அவர்கள் மார்க்கப் பெருமையை அவர்கள் உயர்த்திப் பேசுவது இயல்புதானே எனக் கருதி அதற்கொரு முக்கியத்துவம் கொடுக்காமலே போயிருப்பார்கள். ஆனால், அதே விஷயத்தைப் பேராசிரியர் மாணிக்க வாசகம் பேசினால், அவர் மற்றச் சமயத்தைச் சார்ந்தவர்; சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். விஷயம் அறிந்தவர். அவரே இப்படிக் கூறுகிறார் என்றால் நிச்சயம் அது உண்மையின்பாற்பட்டதாகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் அதை ஏற்றிப் போற்றவே செய்வார்கள்.

எனவே, பிற சமயத்தவர் மத்தியில் நாம் பேச நினைப்பதை, மற்ற சகோதர சமயத்தவர்களைக் கொண்டே சொல்லச் செய்தால், பிறர் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள தவறான கண்ணோட்டம் மறையவும் சரியான தகவல்கள் சரியான கோணத்தில் சரியான இடத்தை அடையவும் வாய்ப்பேற்பட முடியும்.

நம்மைப்பற்றி நமக்கே தெரியா நிலை

ஆனால், நாம் எத்தனை பெருமைக்குரியவர்கள் என்பது நமக்கே தெரியாத ஒன்று. தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழைப் பொருத்தவரை நாம் வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள். வரலாறு படைத்தவர்கள். ஆனால், நாம் யார்? எத்தகையவர்கள்? என்பது நமக்கே மறந்து போய்விட்டது. நாம் யாரென்று நமக்கே தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை.

தமிழைக் காத்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள்

தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை ஒரு கால கட்டத்தில் அழிவை நோக்கிச் சென்ற தமிழ், இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டது. அன்றைய தமிழகத்தின் அரசியல் நிலை என்ன? தமிழகம் முழுமையும் விஜய நகர் சாம்ராஜ்ய ஆட்சியின் கீழ் வந்துவிட்டது. தமிழ் நாட்டின் பெரும்பகுதி நாயக்கர்களின் - பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ் அல்லல்பட்டது. அரசு மொழி தெலுங்கு. தமிழகத்தின் மற்றொரு பகுதி நவாபுகளின் ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகளில் உருதுமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. தஞ்சைவரை ஆண்ட மகாராஷ்டிரர்கள் ஆட்சியில் மராட்டி மொழி. அதையடுத்து ஆங்கிலேயர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், டேனிஸ்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் இன்னும் எவனுக்கெல்லாம் கப்பல் கிடைத்ததோ அவனெல்லாம் தமிழ்நாட்டை அபகரித்து ஆளத் தொடங்கிய காலகட்டம். அவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஐரோப்பிய மொழிகளின் செல்வாக்கு வேறு. எங்கும் பரவியிருந்த ஹிந்து சமயப் போர்வையில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம். தமிழுக்கோ எங்குமே இடமில்லை என்ற துயர நிலை. தமிழ் மொழியை ஆதரிக்க எந்த மட்டத்திலும் ஆளே இல்லாத நிலை. இந்த நிலையில் தமிழ் புலவருலகம் அறவே ஆதரிப்பாரற்று தேய்பிறையாக உருமாறியிருந்தது. "ஏ, மன்னா! இதைப் பாடியிருக்கிறேன் பரிசு கொடு" என்று மிடுக்கோடு கேட்ட புலவருலகம், யாரிடம் சென்று எதைப் பாடினால் பரிசு கிடைக்குமோ அதைப் பாடி வந்த இழிவான கால கட்டம். தனவந்தர்களின் வீட்டு வாசலில் பிச்சை பெற தமிழ்ப் புலவருலகம் தவம் கிடந்த கால கட்டம். பாலுணர்வைப் பச்சையாக விளக்கும் ‘கூளப்ப நாயக்கன் காதல்’ போன்ற காமச்சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய நான்காம் தர இலக்கியங்கள் போற்றி வளர்க்கப்பட்ட காலச் சூழல்.

இந்த காலகட்டத்தில்தான் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் எழுத்தாணியைக் கையிலெடுத்து இலக்கியம் படைத்தார்கள். ஒழுக்க இலக்கியம் ஏதாவது தமிழில் உருவாகாதா என்று நல்லுள்ளங்கள் ஏங்கித் தவித்தன. சமயப் போர்வையில் தல புராணங்கள் என்ற பெயரில் அதீதக் கற்பனையோடு ஒழுக்கத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாத சிற்றின்ப இலக்கியங்கள் புற்றீசல்போல் புறப்பட்ட காலத்தில், ஒழுக்கவியல் அடிப்படையில் அற்புதமான படைப்புகள் இஸ்லாமியத் தமிழ் புலவர்களால் இயற்றப்பட்டன. ஏனெனில், பாலுணர்வைப் பற்றிப் பாட இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மற்ற சமய தல புராணங்கள் போன்று இஷ்டத்துக்கு கற்பனை வளத்தோடு கதை விட இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

இஸ்லாமிய இலக்கியத்தின் கருப்பொருளாக பெருமானாரின் பெருவாழ்வோ பிற நபிமார்களின் வாழ்க்கைச் செய்திகளோ, நபித் தோழர்களின் செயற்பாடுகள், வலிமார்களின் வாழ்க்கைச் சூழல்கள், இஸ்லாமியப் பெண்களின் பெருமை பாராட்டும் செய்திகளே கருப்பொருளாக அமைய முடியும். இவர்களைப் பற்றி விவரிக்கும் இலக்கியங்களில் ஒழுக்க நெறிகளை, மார்க்க ஞானங்களை, இறைவன் திருமறை மூலம் விதித்த வாழ்வியல் நெறி முறைகளையே அடியொற்றி எழுத முடியும். இவ்வாறு, கருப் பொருட்களைத் தேர்வு செய்து, ஒழுக்கவியல் அடிப்படையில் நூற்றுக்கணக்கான இலக்கியங்களை உருவாக்கினார்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்.

புதுப்புது இலக்கிய வடிவங்கள்

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் வழிவழியாகத் தமிழில் என்னென்ன இலக்கிய வடிவங்கள் உண்டோ அத்தனை வடிவங்களிலும் காப்பியம் தொடங்கி பள்ளு இலக்கியம் வரை இலக்கிய வகைகளை உருவாக்கினார்கள். அதோடு நிற்காது பாரசீக, அரேபிய நாடுகளில் புகழ் பெற்றுத் திகழ்ந்த இலக்கிய வடிவங்கள் பலவற்றைத் தமிழ் இலக்கண, இலக்கியத் தன்மைகளுக்கேற்ப மாற்றம் செய்து, தமிழ் இலக்கிய வடிவங்களாக அறிமுகப்படுத்திய பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களையே சாரும். அவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்ட இலக்கிய வடிவங்களே கிஸ்ஸா, மஸ்அலா, முனாஜாத்து ஆகிய அரபி மொழி வடிவங்களும், 'நாமா' எனும் பர்சிய மொழி வடிவமுமாகும். அதோடு, தமிழுக்கென்றே சில இலக்கிய வடிவங்களை உருவாக்கினார்கள். சமுதாயத் தவறுகளைச் சுட்டிக்காட்டும் 'நொண்டி நாடகம்', படையையும் போரையும் விவரிக்கும் படைப்போர் இலக்கியங்களையும், 'திருமண வாழ்த்து' என்ற புதுவகை மங்கல வாழ்த்துக் கதை இலக்கியத்தையும் படைத்தளித்தார்கள். தமிழையே அரபி வரி வடிவில் எழுதும் 'அரபுத் தமிழ்’ எனும் புது வகை மொழியமைப்பையும் உருவாக்கி வளர்த்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கட்குண்டு. தமிழில் சங்க காலந்தொட்டு ஐம்பெரும் காப்பியங்களே உண்டு. ஆனால், இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இருபத்தியெட்டு காப்பியங்களை இருநூறு ஆண்டுகளில் படைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு புலவன் ஒரு காப்பியம் என்ற அளவில் பாடியிருக்க; 'புலவர் நாயகம்’ என்றழைக்கப்பட்ட சேகனாப் புலவர் நான்கு காப்பியங்களை உருவாக்கிப் புது வரலாறு படைத்துள்ளார். 

முஸ்லிமல்லாதாருக்குக் கதவு திறந்த
இஸ்லாமிய இலக்கியப் படைப்புகள்

இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ் முஸ்லிம்களுக்குப் பயன்பட்டதைவிட தமிழறிவுமிக்க தமிழ்ச் சகோதர, சமயத்தவர்கள் இஸ்லாத்தை உரிய முறையில் அறிந்து தெளியவும் இஸ்லாத்தோடு தங்களை இணைத்து இஸ்லாமானவர்களாக ஆகவும் வழியேற்பட்டது என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும். இஸ்லாம் இப்படித்தான் தமிழ் மண்ணில் பரப்பப்பட்டதே தவிர வாள் கொண்டு யாரும் இஸ்லாத்தைப் பரப்பவில்லை என்பது வரலாறு தரும் உண்மையாகும்.

இவ்வாறு தமிழ் பிறந்த தமிழகத்தில் ஆட்சியிலோ ஆலயங்களிலோ, ஆதரிப்பதற்கு ஆட்களே இல்லாத இருளடைந்த ஒரு கால கட்டத்தை இலக்கிய ஒளி மிகுந்த காலமாக மாற்றியமைத்து, வளமான வளர்ச்சிக்கு வழி கண்ட பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கட்கு உண்டு. அதே சூழல் இன்றும் தமிழுக்கு ஏற்பட்டுள்ளது என்பது நினைத்து மகிழ வேண்டிய நிதர்சன உண்மையாகும்.

இருள் படரும் இன்றைய நிலை

தமிழைப் பொருத்தவரை இன்றையத் தமிழகத்தின் நிலை என்ன? எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் கூசுகிறது. தமிழைப் போற்ற, வணங்கக் கற்றுக் கொண்ட தமிழன், அம்மொழியை ஆங்கிலத்தைப் போல், ரஷ்ய மொழியைப் போல், சீன, ஜப்பானிய மொழிகளைப் போல் காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப, ஆற்றலுள்ள அறிவியல் மொழியாக அரசு, சமுதாய அமைப்புகளின் மொழியாக ஆக்க, ஆக்கப்பூர்வமாக வளர்க்கத் தவறி விட்டான். தமிழ் நாட்டைப் பொருத்தவரை தமிழ் ஆட்சி மொழியாக 1956முதல் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சி மொழியாக அனைத்து மட்டங்களிலும் தமிழ் ஆட்சி செலுத்தவில்லை. மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் வரை அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஆங்கிலம் மட்டுமே. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் தமிழ் ஓரெழுத்தும் கற்காமல் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டம் வரை பெறும் அரிய வாய்ப்பு இத் தமிழகத்தைத் தவிர்த்து வேறு எங்குமே காண முடியாது. தமிழ் பயிற்சி மொழி என்பது கானல் நீராகவே உள்ளது. காரணம், யாரோ ஓரிரு விழுக்காட்டினர் ஆங்கிலம் படித்து பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெற நேர்வதால் ஆங்கிலம் மட்டுமே கற்றால் போதும் என்ற ஒரு வித மாயை தமிழகத்தில் இன்று அழுத்தமாகப் பதியச் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மின்னல் வேகத்தில் ஏற்பட்டு வரும் விஞ்ஞான வளர்ச்சியை விவரிக்கும் மொழிகளாக தங்கள் மொழிகளை உருமாற்றி பல நாடுகள் வளர்த்து, வளப்படுத்தி வருகின்றன. நம் தமிழகத்தில் அறிவியலுக்கும் தமிழுக்கும் அவ்வளவு அதிகத் தொடர்பில்லை என்ற உணர்வில் தமிழைப் பேணி வருகிறோம். அறிவியலைச் சொல்லுவதற்கேற்ற மொழியாக ஒரு மொழி அமையவில்லை என்றால் அம்மொழி மறைந்தொழியும் என்ற உண்மையைக்கூட நம்மவர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

உயிரை விடத் தயார், உழைக்கத் தயாரில்லை

இதையே இன்றையப் போக்கு உணர்த்துகிறது. அறிவியலை சொல்லுவதற்கேற்ற மொழியாகத் தமிழை உருமாற்றும் செயலை எந்தப் பல்கலைக் கழகமும் செய்வதாகத் தெரியவில்லை. அரசும் அந்த முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களும் மற்றைய ஆசிரியர்களும்கூட இதில் முழுக் கவனம் செலுத்தி வருவதாகக் கூற முடியவில்லை. ஆனால், தமிழை வெறுமனே புகழ்வதிலும் 'தமிழ் வாழ்க’ என முழங்குவதிலும் எவரும் சளைப்பதுமில்லை; தவறுவதுமில்லை. தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன் என முழங்குவதற்கும் தவறுவதில்லை. தமிழைக் காக்க, வளர்க்க, வளப்படுத்த உயிரைக் கொடுக்க வேண்டாம், கொஞ்சம் உழைப்பைக் கொடுங்கள் என்று கூறினால், அதைக் கொடுக்க யாரும் தயாரில்லை.

இதையெல்லாம் நினைத்து நினைத்து, வெந்து போனவன் நான். 1956இல் அன்றைய கல்வியமைச்சராக இருந்த திரு சி. சுப்பிரமணியம் ஆட்சி மொழிச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியபின், இனி, மற்றவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு வழிவகை சொல்வார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தேன். ஏதும் நடக்கவில்லை. இப்படி வெறுமனே காத்துக்கிடப்பதைவிட நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்ற முறையில் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினேன்.

அறிவியல் அடிப்படையே வளர்ச்சிக்கு வழி

அறிவியலோடு ஒரு மொழி இணைந்து வளரவில்லை என்றால் அம் மொழிக்கு எதிர்காலமே இல்லை என்ற உணர்வு இதயத்தில் அழுத்தம் பெற்றிருந்ததால், அறிவியல் அடிப்படையில் தமிழ் வளர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துச் செயல்படலானேன். அம் முயற்சி அறிவியல் தமிழ் வளர்ச்சியாக முகிழ்த்து, மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது. இதில் கடந்த நாற்பதாண்டு காலமாகத் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இதற்காக நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் செலவிட்டு வருகிறேன். என் முயற்சியை வளமான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைப் பணியாக - முன்னோடி முயற்சியாகக் கருதி, தமிழுலகம் பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 

அன்றைய வளர்ச்சியின் இன்றைய பரிமாணம்

அன்று அழிவிலிருந்து தமிழைக் காத்து, தரமான இலக்கியப் படைப்புகளினால் உரமூட்டிய இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் தொண்டின் தொடர்ச்சியாகத்தான் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வழிகாட்டிகளான கவிக்கோ அப்துல் ரகுமான், மு. முஹம்மது மேத்தா போன்றவர்களின் பணியும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு முனைப்புப் பணியாற்றி வரும் என் பணியும். என் உழைப்பிற்கு - முயற்சிகளுக்கு - உறுதுணையாயிருக்க பலரும் முன் வருகிறார்கள். காஞ்சி காமகோடி பீடம், முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு சங்கர் தயாள் சர்மா அவர்களைக் கொண்டு “சேவாரத்னா" விருதும் பரிசும் பாராட்டும் வழங்கி மகிழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், தமிழை அறிவியல் மொழியாக இருபத்தொராம் நூற்றாண்டுக்குரிய மொழியாக தமிழை வளர்த்தெடுக்கும் என் முயற்சிக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்தான்.

பெரும்பான்மையினரை விஞ்சும்
சிறுபான்மையர் பணி

இதிலிருந்து நாம் ஒரு உண்மையை உணர்ந்து தெளிய வேண்டும். பெரும்பான்மை சமயத்தவர் மத்தியில் சிறுபான்மையினராக வாழ நேர்ந்துள்ள நாம் ஆற்றும் அரும்பணிகள் பெரும்பான்மையினரின் பணியையும் விஞ்சும் அளவில் அமைவது அவசியம். இச்செயற்பாடுகள் - அரும்பணிகள் மூலம் பெரும்பான்மையினருக்கு இணையாக மட்டுமல்ல மேலான நிலையிலும் சிறுபான்மையினர் திகழ முடியும்.

இன்று இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த விண்ணியல் வல்லுநர் விஞ்ஞானி அப்துல் கலாம் இந்திய ஏவுகணையியல் துறையின் பிதாமகராகத் திகழ்கிறார். ‘பாரத ரத்னா' அப்துல் கலாமின் சாதனைப் பணி இஸ்லாமியச் சமுதாயத்தின் சாதனையாகவே போற்றப்படுவதுதான் சிறப்பு. அந்நிலையைப் பெற நாமும் நல் முயற்சிகளில் முனைப்போடு ஈடுபட வேண்டும்.

ஆனாலும், இஸ்லாமிய சமுதாயம் ஒரு இடர்ப்பாடான கால கட்டத்தை இந்தியாவில் கடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

அன்றைய சிலுவைப் போர் இன்னும் சாகவில்லை!

இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான கருத்துகளும் உணர்வுகளும் வலுவாகப் பரப்பப்பட்டு வருகின்றன. ஒரு கால கட்டத்தில் மேலை நாட்டில் சில சமயத் தலைவர்களால் வெறித்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்புணர்வு சிலுவைப் போராக உருமாற்றப்பட்டது. இதன் செயல்பாடுகளும் விளைவுகளும் கரைபடிந்த வரலாற்று ஏடுகளாகும். நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக இருந்த சிலுவைப் போர் இன்று வெவ்வேறு பெயர்களில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே வாழும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதன் சாயலில் இஸ்லாமிய நாடுகளிலும்கூட வெவ்வேறு வகையான சண்டை சச்சரவுகள் உருவாக்கப்பட்டு நடந்து வருகின்றன.

அதன் விளைவுகள் இந்தியா போன்ற கீழை நாடுகளில் பிரதிபலிக்கவே செய்கிறது. இஸ்லாத்தைப் பற்றி அறவே தெரியாதவர்கள் மத்தியில், இஸ்லாமியர்களின் பெயரிலே, வேண்டுமென்றே தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவது கண்கூடு. முஸ்லிம் மக்களிடையேகூட இஸ்லாத்தைத் தெரிந்தவர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால், உணர்ந்து தெளிந்தவர்கள் ஒரு சிலர் தேறுவதேகூட கடினமாக உள்ளது.

இஸ்லாத்தை அறிந்தவர் அநேகர் தெளிந்தவர் சிலர்

எதையும் தெரிவது வேறு; உணர்வது வேறு. சான்றாக, ஒருவன் ஒரு கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் கட்டிடம் எனக்குத் தெரியுமே என்று கூறிவிட முடியும். ஆனால் அக்கட்டிடத்தின் அகல, நீள, உயரம் எவ்வளவு; எத்தனை அறைகள் உள்ளன. அவை எவ்வகையின; என்னென்ன வசதிகள் இருக்கின்றன. இக்கட்டிடம் எந்த முறையில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் உறுதிப்பாடு என்ன? அதன் வலிவு எத்தகையது? காற்றோட்ட வசதிகள் என்ன? இதெல்லாம் தெரியாது. இவற்றையெல்லாம் நாம் அறியவோ அதிலுள்ளவைகளை அறிந்து, உணர்ந்து தெளியவோ இல்லை. தெரிந்ததெல்லாம் ஒரு கட்டிடம் என்பது மட்டுமே. அதனுள்ளே என்ன இருக்கிறது என்பது எதுவுமே தெரியாது. இதே நிலையில் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக முஸ்லிமாக இருப்பவர்களே அதிகம்.

முஸ்லிமாகப் பிறந்தும் இஸ்லாமியனாக இல்லை

இன்று காலை ஒரு சம்பவம் நடந்தது. நேற்று துபை மீலாது விழாவில் பேசும்போது தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றி அதன் ஆன்மீக, உளவியல் மற்றும் அறிவியல் அடிப்படையிலான பயன்களைப் பற்றி பேசினேன். அதைக் கேட்ட நண்பர் ஒருவர் இன்று காலை என்னை வந்து பார்த்தார். தான் ஒரு முஸ்லிமாக இருந்தும் தன் தந்தையோ தாயோ, தனக்கு இஸ்லாத்தைப் பற்றி எதையுமே கற்பிக்கவில்லை. தான் மதரஸா பக்கமும் சென்றதில்லை. பள்ளிவாசல் பக்கமும் போனதில்லை. இதற்குக் குடும்பச் சூழலும் ஒரு முக்கிய காரணம். துபைக்கு வந்த பிறகுதான் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளி வாசலுக்குள் நுழைந்தேன். இப்போதும் எனக்குத் தனியே தொழத் தெரியாது. பக்கத்திலிருப்பவரைப் பார்த்து, அவர் செய்வதுபோல் செய்து தொழுது வருகிறேன். உங்கள் பேச்சை நேற்று கேட்டதிலிருந்து வெள்ளிக் கிழமை தொழுகை மட்டுமல்லாது ஐவேளைத் தொழுகையையும் தொழ விரும்புகிறேன். அதற்கான புத்தகம் ஏதாவது இருந்தால் தாருங்கள். அல்லது நான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டுங்கள் என்று உருக்கமாக அவர் வேண்டிநின்ற போது, அவர் கண்களில் நீர் கோர்த்து நின்றன. பல பேருடைய நிலைமை இதுதான். இதை வெளிப்படையாகச் சொல்லவோ உதவி கேட்கவோ வெட்கப்பட்டு வாளாவிருந்து வருகிறார்கள்.

உதவி கேட்ட அந்தப் பெயர் தாங்கி முஸ்லிம் நண்பர்க்கு இதற்கென தமிழிலேயே நிறைய புத்தகங்கள் இருப்பதாகவும் கூறியதோடு பள்ளிவாசல் பேஷ் இமாம் தமிழ் முஸ்லிமாக இருப்பதால் அவரிடமே உதவி கேட்டு, முறையாகத் தொழுகைப் பயிற்சி பெறுங்கள் என்று கூறி ஊக்கமூட்டி அனுப்பினேன்.

எங்கும் சமயப் பெயர் தாங்கிகளே அதிகம்

இஸ்லாத்தில் மட்டும் இத்தகையவர்கள் இருப்பதாகக் கருத வேண்டாம். நாட்டிலுள்ள எல்லா மதங்களிலும் இத்தகையவர்களே அதிகம். மதங்களைச் சார்ந்த பெற்றோர்க்குப் பிள்ளைகளாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்தந்த மதச் சார்பான பெயர்களைத் தாங்கியவர்களாக உலவுகிறார்களேயன்றி, மதத் தத்துவங்களையோ சமயக் கருத்துகளையோ எதையுமே அறிந்தவர்கள் இல்லை. எனவே, முஸ்லிம் பெயர் தாங்கிகளாக உலவுகின்றவர்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைக் கருத்துகளை பெருமானார் வாழ்வு மற்றும் வாக்குகளின் அடிப்படையில், திருமறை வழியே எடுத்துக்கூறி தெளிவுறுத்த வேண்டும். அதே சமயத்தில் இஸ்லாம் பற்றி, எதுவும் தெரியாததோடு தப்பும் தவறுமாக இஸ்லாத்தைப் பற்றி எண்ணிக் கொண்டு, அதே கண்ணோட்டத்தில் நம்மைப் பார்க்கும் நம் சகோதர சமய நண்பர்களுக்கும் மார்க்கம் பற்றிய உண்மைக் கருத்துகளை தத்துவ உண்மைகளை எடுத்துக்கூறித் தெளிவுபடுத்தும் கட்டாயக் கடமையாளர்களாகவும் நாம் இன்று இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவேதான் என் இஸ்லாமியப் பிரச்சாரத்தை இஸ்லாமிய இலக்கியங்கள் மூலமும் 'தினமணி' போன்ற இதழ்கள் வாயிலாகவும் சொல்லி வருகிறேன். இன்னும் நான் சொல்ல விழைவதை சிலம்பொலி செல்லப்பனார் போன்றவர்கள் மூலமும், கருத்தரங்குகள் என்ற பெயரில் பிற சமயப் பேராசிரியர்களைக் கொண்டும் திறம்படச் சொல்லச் செய்கிறேன். மீலாது விழாக்களில் பிற சமயப் பெரியோர்களைக் கொண்டு பேசச் செய்ய வற்புறுத்தி வருகிறேன். இதனால் ஏற்படுகின்ற பயன் மிக அதிகம் என்பதை மறந்து விட வேண்டாம்.

'எம்' பெருமானார் இல்லை; 'நம்’ பெருமானார்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை செளகார் பேட்டையில் மீலாது விழா நடைபெற்றது. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் பெருமளவில் கலந்து கொண்ட பெருவிழா. அதில் நானும் சிலம்பொலி செல்லப்பனாரும் கலந்து கொண்டோம். சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் ஜஸ்டிஸ் எஸ். மோகன் அவர்கள் கலந்து கொண்டார்கள். அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியும்கூட. அதில் பேசிய மெளலவி ஒருவர், மூச்சுக்கொருமுறை ‘எம் பெருமானார்’, ‘எம் பெருமானார்' என்று கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட ஜஸ்டிஸ் எஸ். மோகன் அவர்கட்கு கோபம் வந்துவிட்டது. அவர் உரையாற்றும் போது சற்று கோபம் கலந்த கண்டிப்பான தொனியில் “இங்கே ஒரு முஸ்லிம் பெரியார் பேசும்போது 'எம் பெருமானார்', 'எம் பெருமானார்’ என்றே கூறிக் கொண்டிருந்தார். பெருமானார் முஸ்லிம்களாகிய உங்களுக்கு மட்டுமே வந்த இறைதூதர் இல்லை. எங்களுக்கும் அவர் பெருமானார்தான். ஏன், உலக மக்கள் அனைவருக்குமே அவர் பெருமானார் ஆவார். நபிகள் நாயகத்தின் நெறிமுறைகளை ஏற்றுப் பின்பற்றுபவர்கள் என்பதால், அவரை முழுமையான இறைதூதராக வழிகாட்டியாக ஏற்றதால் நீங்கள் முஸ்லிம்களாக இருக்கிறீர்கள். நாங்கள் அண்ணலாரின் நெறிமுறைகள் தெரியாததால், நீங்கள் முறையாக அவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்தாத காரணத்தால் நாங்கள் முஸ்லிம்கள் ஆகாமல் இருக்கிறோம். இது போன்ற கூட்டங்கள் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு அளிக்கின்றன. எனவே, எங்களுக்கும் சேர்த்து இறைத் தூதராக வந்த பெருமானாரை எந்த முஸ்லிமும் 'எம் பெருமானார்' என்று கூறாமல் ‘நம் பெருமானார்' என்றே பேச வேண்டும், எழுத வேண்டும் எனக் கேட்டும் கொள்கிறேன்” என்று பேசினார். அவர் பேசிய வாசகம் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தது; உண்மையின்பாற்பட்டது; இன்னும் சொல்லப் போனால் சத்திய வார்த்தைகளாகும்.

மாற்றுச் சமயங்கள் அல்ல, சகோதரச் சமயங்கள்

வேறொரு உண்மையையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் கவனித்திருக்கலாம். நான் பிற சமயங்களைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் 'மாற்றுச் சமயம்’ எனக் குறிப்பிடாமல் சகோதர சமயம் என்றே குறிப்பிடுகிறேன். பிற சமயங்களெல்லாம் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு, செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட போக்கைக் கொண்டிருந்தாலும் நான் அவற்றை இஸ்லாத்துக்கு மாறுபட்ட மதங்களாக, மாற்றமான கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்ட சமயங்களாகக் கருதி, அவற்றின் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் முறையில் 'மாற்றுச் சமயங்கள்' எனக் குறிப்பிடாமல் 'சகோதர சமயங்கள்' என்றே குறிப்பிடுகிறேன். இதுதான் இஸ்லாம் உணர்த்தும் சமயக் கொள்கை; பெருமானார் காட்டியே பெருவழி.

இன்று உலகில் இருந்து வரும் பெரும் மதங்களும், மறைத்து போய்விட்ட பெரும் மதங்களும்கூட நம் சகோதர சமயங்கள் தாம் என்ற கசப்பான உண்மையை உணர்ந்து தெளிய வேண்டும். இந்த உணர்வையே இறுதி இறை வேதமான திருமறையாம் திருக்குர்ஆனும் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். நாமெல்லாம் அறிந்துணர்வதோடு உலகத்துக்கும் அழுத்தமாக உணர்த்த வேண்டிய அடிப்படையான ஒரு தத்துவமும்கூட.

அனைத்துச் சமயங்களையும் ஒப்புக் கொள்பவனே
முழுமையான முஸ்லிம்

புத்தரை மட்டும் ஏற்றுக் கொண்டால் அவன் பெளத்தனாக இருக்கலாம். இயேசுவை மட்டும் ஏற்பவன் கிருஸ்தவனாக இருக்கலாம். மகாவீரரை மட்டும் ஏற்றுக் கொண்டால் அவன் சமணனாக, ஜைனனாக இருக்கலாம். அதே போன்று நபிகள் நாயகம் (சல்) அவர்களை மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டேன் என்றால் நான் முழுமையான முஸ்லிம் ஆகிவிட முடியுமா? என்றால் முஸ்லிமாக இருக்கலாமே தவிர முழுமையான முஸ்லிமாக இருக்க முடியாது என்பதுதான் இஸ்லாமியக் கொள்கை. அவன் முழுமையான முஸ்லிம் ஆக வேண்டுமென்றால் 'இறைவனின் இறுதித் தூதராக நபிகள் நாயகம் (சல்) அவர்களை ஏற்றுக் கொள்வதோடு, முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) தொடங்கி மண்ணுலக மக்களுக்கு இறைநெறி புகட்ட, வல்ல அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறை வேதங்களையும் ஒப்புக் கொள்வதோடு, நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதையும் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதமாக திருக்குர்ஆன் திருமறையையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று உறுதி கொண்டால் மட்டுமே அவன் முழுமையான முஸ்லிமாக ஆக முடியும்.

திருமறையாம் திருக்குர்ஆன் பல்வேறு சமயங்கள் பற்றி, அவற்றைத் தோற்றுவித்த இறை தீர்க்கதரிசிகளைப் பற்றி, இறை வாக்காகக் கூறும் இறைவசனங்கள் அடிப்படையில் தரப்படும் தகவல்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இந்திய சமயாச்சாரியர்கள் இந்தியாவில் மட்டும்
இஸ்லாமிய தீர்க்கதரிசிகள் உலகெங்கும்

பழம்பெரும் சமயங்களான, ஹிந்து சமயம், சமண சமயம், புத்த சமயம் ஆகியவற்றைத் தோற்றுவித்த தீர்க்கதரிசிகள் அனைவரும் இந்தியாவில் மட்டுமே தோன்றியிருக்கிறார்கள். இம்மதாச்சாரியர்கள் யாரும் இந்தியாவுக்கு வெளியே தோற்றம் பெற்றதாக வரலாறே இல்லை.

அதே போன்று, யூத, கிருஸ்த தீர்க்கதரிசிகள் அனைவருமே பாலஸ்தீனத்தில் மட்டுமே தோன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய தீர்க்கதரிசிகள் - இறை தூதர்களாகிய நபிமார்கள் உலகெங்கும் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். இஸ்லாமிய இறை தூதர்களாகிய நபிமார்கள் பிறக்காத நாடில்லை; இனமில்லை; மொழியில்லை. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் தோன்றியிருக்கிறார்கள். வேறு சில நபிமார்கள் ஒரு இனமக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். மற்றும் சில நபிமார்கள் ஒரு மொழி பேசிய மக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். ஆனால், இறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக மக்களை வழி நடத்த வந்துதித்த வள்ளல் நபியாவார்.

உலகெங்கும் நபிமார்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் சம்பவமொன்று அண்மையில் நடைபெற்றது.

ஏதென்சில் சாக்ரட்டீஸ் தர்கா

சமீபத்தில் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகருக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் உலகின் தத்துவக் களஞ்சியமாக அறிவுச் சுரங்கமாகத் திகழ்ந்த பகுதி அது. அங்கே புகழ் பெற்ற அக்ரோபொலிஸ் என்ற பழங்காலச் சின்னங்கள் நிறைந்த பகுதியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தேன். அப்போது ஏனோ அந்நாட்டின் மாபெரும் சாக்ரட்டீசின் நினைவு வந்தது. சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்துக் கொன்றபோது அடைக்கப்பட்டிருந்த சிறைச் சாலையை பார்க்க இயலுமா என, என்னை அழைத்துச் சென்ற நண்பரைக் கேட்டேன். அவர் ஒரு கிருஸ்தவர்; யுனெஸ்கோ கூரியர் கிரேக்க மொழிப் பதிப்பில் பணியாற்றி வருபவர். அவர் சிரித்தபடி "சாக்ரட்டீஸ் அடைபட்டிருந்த சிறைப் பகுதிக்கு மட்டு மல்ல, அவர் அடக்கமாகியுள்ள தர்காவுக்கும் சென்று உங்கள் இஸ்லாமிய மரபு முறைப்படி 'ஜியாரத்'தும் செய்து வரலாம்” எனக் கூறிச் சிரித்தார். சாக்ரட்டீசுக்கு தர்காவா? அதுவும் இஸ்லாமிய முறைப்படி 'ஜியாரத்தா?' நான் ஏதும் அறியாத நிலையில் பேந்தப் பேந்த விழித்தேன். என் ஐயப்பாடு எதுவாக இருக்க முடியும் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்ட நண்பர்,

“ஆட்டோமன் ஆட்சிக்குக் கிரீக் அடிமைப்பட்டிருந்த காலத்தில், இஸ்லாமிய அணுகுமுறையோடு ஆட்டோமன் ஆட்சியாளர்கள் கிரேக்கை ஆண்டு வந்தனர். இஸ்லாமிய மரபுப்படி கிரேக்க மக்களை வழி நடத்த வந்த நபியே சாக்ரட்டீஸ் எனக் கருதி, அவர் புதைக்கப்பட்டிருந்த புதை குழியைச் சுற்றி நாற் சதுர கட்டிடமொன்றை எழுப்பி அதை தர்கா ஆக்கியதோடு, இஸ்லாமிய முறைப்படி, விரும்புவோர் அங்கு சென்று ஜியாரத் செய்யவும் ஏற்பாடு செய்தனர். அன்று முக்கியத்துவமுடையதாக விளங்கிய அத்தர்கா இன்று முக்கியத்துவம் இழந்திருப்பினும் தர்கா வடிவிலேயே இன்றும் அமைந்துள்ளது” எனக் கூறி விளக்கி, அங்கு அழைத்துச் சென்றார். நானும் சென்று பார்த்து 'ஜியாரத்' செய்து வந்தேன்.

இவ்வாறு உலகெங்கும் தோன்றி இறை நெறி புகட்டிச் சென்ற சிறிய, பெரிய நபிமார்கள் அனைவரையும் அவர்கட்கு இறைவன் வழங்கிய வேதங்களையும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்புக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார். அதே சமயம் இறுதி இறைத் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் திருமறையையும் முழுமைாக ஏற்றுப் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறோம்.

இங்கு 'ஒப்புக் கொள்கிறோம்' என்ற சொல்லுக்கும் 'ஏற்றுக் கொள்கிறோம்' என்ற சொல்லுக்குமுள்ள வேறுபாட்டை நன்கு உணர வேண்டும். 'ஒப்புக் கொள்வது' என்பது வேறு, 'ஏற்றுக் கொள்வது' என்பது வேறு. ஒப்புக் கொள்வதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை. ஆனால், ஒன்றை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்றால், அதை முழுமையாகக் கடைப்பிடித்தொழுக வேண்டுமென்ற கட்டாயம் தானாகவே உருவாகி விடுகிறது. இப்படி உள்ளூர் நபி முதல் உலகளாவிய இறுதி நபிவரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் இறைவனால் உலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது இஸ்லாமிய மரபு வழிச் செய்தியாகும். இவர்களில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றிய செய்திகளை மட்டுமே இறை மறையாகிய திருக்குர்ஆன் தருகிறது.

இந்தக் கருத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் இறை தூதர்களில் 3 பேர் இந்தியாவில் தோன்றியிருக்கிறார்கள். அவர்கட்கு ஆறு வேதங்கள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களால் இந்தியா பிரிக்கப்பட்டால் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது இங்குக் கவனிக்கத்தக்க செய்தியாகும்.

ஏன் இத்தனை நபிமார்கள்? இத்தனை வேதங்கள்?

இறைவன், முதல் மனிதர் ஆதாம் (அலை) அவர்களையே முதல் நபியாக நியமித்து அவர் வழி வரும் சந்ததிகளுக்கு இறை நெறி புகட்ட இறைவன் பணித்திருந்தான். அவரும் அவ்வாறே செய்தார். காலப் போக்கில் அவர் போதித்த இறை நெறியை பின்வந்த சந்ததிகளில் சிலர் தங்கள் விருப்பு - வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களைச் செய்து இறைநெறிப் போக்கைத் தடம் புரளச் செய்தனர். ஆதாம் (அலை) அவர்கட்கு தந்த இறைநெறி நாளடைவில் மாசுபட, அவர் சந்ததியிலே மீண்டும் ஒருவர் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூலவடிவில் இறைச் செய்தி இறைவனால் வழங்கப்படுவதாயிற்று. காலப் போக்கில் மீண்டும் இறைநெறியில் மனிதத் தலையீட்டால் மாற்ற திருத்தங்கள். மீண்டும் நபி, இறை நெறி பெறுதல் தொடர்வதாயிற்று. சில பெரிய நபிமார்கள் ஒரே இறைவன், அவனே வணங்குதற்குரியவன் என வலுவாகப் போதிப்பர். காலப்போக்கில் இந் நபிமார்கள் மீது கொண்ட மதிப்பு, மரியாதையின் விளைவாக இந் நபிமார்களை அவர்கள் வாழ்ந்த போதே அவர் மீது கொண்ட அளப்பரிய அன்பின் காரணமாகவும் மதிப்பு, மரியாதையினாலும் அவர்களையே இறைவனாகக் கண்டு மகிழத் தொடங்கினர். அவ்வாறே அழைக்கவும் செய்தனர். அதை அறவே விரும்பாத நபிமார் அவர்களை கடிந்து கொண்டனர். இருப்பினும், அந்நபியின் மறைவுக்குப் பின்னர் அவர்களை இறைவனாகக் கண்டு வணங்கி மகிழ்வதிலே பேரானந்தம் கண்டனர். சான்றாக, ஈசா (அலை) அவர்கள் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய கர்த்தரை வணங்குங்கள் என்று உபதேசித்தார். ஆனால், அவர் மீது அளவிலா அன்பு கொண்ட அவரது அடியார்கள் ஏசுவையே கர்த்தராகக் கொண்டு ஆராதிக்க முற்பட்டனர். இதைக் கண்டு வெகுண்ட ஏசுவாகிய ஈசா (அலை) என்னை வணங்காதீர்கள். வணங்குதற்குரிய இறைவனாகிய கர்த்தரையே வணங்குங்கள் என்று பணித்ததாக இறைவேதமாகிய 'இன்ஜில்' எனும் பைபிள் கூறுகிறது.

"பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செயல்படுகிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பவனேயல்லாமல், என்னை (இயேசுவை) நோக்கி “கர்த்தரே கர்த்தரே!” என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”

(மத்தேயு 7: 21)

இதினின்று ஏசு இறைவனாகிய கர்த்தரைத் தவிர்த்து வேறு யாரையும் இறைவன் எனக் குறிப்பிடுவதை ஈசா (அலை) அறவே விரும்பவில்லை எனத் தெளிவாகிறது. எனினும், கிருஸ்தவ மக்கள் இயேசுவாகிய ஈசா (அலை) அவர்களை இறைவனாக வணங்கி மகிழ்வதை எங்கும் காண்கிறோம்.

இவ்வாறு ஒரே இறைவனை வணங்கப் பணித்தவர்களே இறைவனாக்கப்பட்டார்கள். அதற்கேற்ப இறை வேதங்களிலும் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களை உருவாக்கி மூல வேதத்தைத் தடம் புரளச் செய்து மாசுபடுத்தினார்கள். எனவே, மூல வடிவிலேயே மீண்டும் இறை வேதமும் அதனை உள்ளது உள்ளவாறே விளக்கிச் சொல்ல நபியும் இறைவனால் அனுப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அன்புப் பெருக்கால் நபிமார்களின் கொள்கைகள் எவ்வாறு அவர்களைப் பின்பற்றுபவர்களின் மதிப்பு மரியாதையினால் மூலக் கொள்கைகள் முடமாக்கப்பட்டன என்பதை ஒரு சிறுகதை மூலம் விளக்கினால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகிறேன்.

ஒரு ஊர் வளமான பகுதியாக இருந்தும் அவ்வூரில் வறுமை கோலோச்சிக் கொண்டிருந்தது. காரணம், நேரத்தைக் கணித்தறிய எந்தக் கருவியும் அப்போது கண்டு பிடிக்கப்படாததால், நேரத்தை பிரித்து, ஒழுங்காகத் தங்கள் வேலைகளைச் செய்து முடிக்க இயலாதவர்களாக இருந்தார்கள். இதனால் எங்கும் குழப்பம்; எதிலும் தாமதம்.

இந்தச்சமயத்தில் அவ்வூரைச் சார்ந்த பெரியவர் ஒருவர் நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்த ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கே எல்லாக் காரியங்களும் முறையாகவும் நேரப்படியும் செய்யப்பட்டன. எதிலும் குழப்பமில்லை. எல்லாமே சிறப்பாக நடைபெற்று வந்ததால் அங்குள்ளவர்களின் சக்தியோ நேரமோ கொஞ்சமும் வீணாகாமல் பயனடைந்து வந்தன. இதனால் மகிழ்ச்சியும் செழிப்பும் மக்கள் வாழ்வில் மேலோங்கி நின்றன.

இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆர்வத்தோடு வந்தவர் ஆராயலானார். அப்போதுதான் அந்த இரகசியம் அவருக்குத் தெரிய வந்தது.

அவர்கள் நேரத்தைப் பகுத்துக் காட்டும் ('சூரியக் கடிகை') 'சன் டயல்' எனும் நேரங்காட்டும் கருவியைக் கண்டுபிடித்திருந்தார்கள். சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை, சூரிய ஒளிபடும் முறையில் நீளமான அந்தக் கருவியை வைத்து விட்டால், அக் கருவிக்கு அருகில் விழும் நிழலின் நீளத்தைக் கொண்டு நேரத்தை அனுமானிக்க முடியும். இதனால் அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை முடிக்க முடிந்தது.

இதைக் கண்டு வியந்த வெளியூர்க்காரர் இதே போன்ற கருவியை தன் ஊருக்கும் வாங்கிச் சென்றால் அங்குள்ளவர்கள் நேரமறிந்து வேலை செய்ய முடியுமே. இதனால் வீணான குழப்பங்கள் நீங்க ஊர் மக்கள் வாழ்வில் ஒழுங்கும் மகிழ்ச்சியும் உருவாகுமே என்ற எண்ணத்தில் அப்படைப்பட்ட சூரியக் கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்.

ஊர் நடுவில் நன்கு சூரிய ஒளி படக் கூடிய மைதானத்தில் சூரியக் கடிகாரத்தை வைத்தார். அவ்வூர் மக்கள் அதன் அடியில் விழும் நிழலின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணித்தறிந்து, அதற்கேற்ப தங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செம்மையாகச் செய்து முடித்தனர். இதனால் நேரக் குழப்பம் நீங்கியது. எங்கும் சீரொழுங்கோடு அதிகப் பணிகள் நடைபெற்றன. இதனால் வளமும் மகிழ்ச்சியும் பெருகியது. தங்கள் வாழ்வில் நேர ஒழுங்கையும் செழிப்பையும் மகிழ்வையும் கொண்டு வந்த சூரியக் கடிகாரத்தை நன்றியோடு நோக்கினர். அதைக் கொண்டு வந்து நிறுவியவரைப் போற்றிப் புகழ்ந்தனர். தங்களின் வழிகாட்டியாகக் கருதி அவரை வாழ்த்தினர்.

ஒருநாள் சூரியக் கடிகாரத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் இறந்து விட்டார். தங்கள் ஊருக்குச் சூரியக் கடிகாரத்தைக் கொண்டு வந்து மக்கள் வாழ்வில் நேர ஒழுங்கும் ஊர்ச் செழுமையும் உருவாகக் காரணமாக இருந்த அந்த நல்லவரின் நினைவை என்றென்றும் போற்றும் முறையில் ஒரு பெரும் நினைவாலயத்தை எழுப்பினர். அந் நினைவாலயத்தின் உள் மைய மண்டபப் பகுதியில் அவரின் நினைவாக தங்களுக்கு நேர ஒழுங்கை யும் வளத்தையும் தரக் காணரமாக இருந்த சூரியக் கடிகாரத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தனர். சூரியக் கடிகாரம் நினைவாலயம் சென்றுவிட்டதால், மைதானத்தில் நிழலைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் நேரத்தை பகுத்து, நேரப்படி பணியாற்ற வழியில்லாமல் போய்விட்டது. மீண்டும் குழப்பம், வேலை மந்தம், வளர்ச்சிக் குறைவு. மக்கள் வாழ்க்கையில் மீண்டும் தேக்க நிலை.

இறையை உணர்த்தியவரே இறைவனாக்கப்பட்டார்

இதே போலத்தான், எந்த நபி உருவிலா ஓரிறையைவணங்கப் பணித்தாரோ, அந்த நபியின் மீது கொண்ட அளவிலா மதிப்பினாலும் மரியாதையினாலும் அந்த நபியையே இறைத் தூதராக வணங்கத் தலைப்படுவர். நபி மூலம் வந்த இறை வேதத்திலும் தங்கள் விருப்பு, வெறுப்புகளை ஏற்றி அதன் மூலக் கொள்கையை மாசுபடுத்தி விடுவர்.

எனவே, மீண்டும் ஓரிறைக் கொள்கையை நிலைநாட்ட ஒரு புது நபியை இறை தூதராகவும் அவர் மூலம் மீண்டும் மூல வடிவில் வேதமும் இறைவனால் அருளப்பட்டன. இவ்வாறு உலகெங்கும் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களும் முப்பத்தியாறு முறை இறை வேதங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களுள் இறைத் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறுதி இறைத் தூதராகவும் திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் இறைவன் அருளினான்.

இறுதி வேதக் காப்பு இறைவனுடையது

நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களைக் காக்கும் பொறுப்பை இறைவன் மனிதர்களுக்கு வழங்கினான். ஆனால், இறுதி வேதத்தைக் காக்கும் முழுப் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டு விட்டதால் மனிதர்களால் இறை வேதத்தில் ஒரு புள்ளியையும் மாற்ற இயலாமற் போய்விட்டது. ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் திருத்தமேதும் இல்லா (நீக்கமோ சேர்க்கையோ இல்லாது உள்ளது உள்ளபடி) திருமறையாகவே, மூல வடிவிலேயே விளங்கி மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகிறது.

பெருமானார் (சல்) அவர்கட்கு வழங்கப்பட்ட இறைச்செய்தி முன்னர் வந்த நபிமார்கட்கு வழங்கப்பட்ட செய்திகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது என்பதை, "(நபியே!) உமக்கு முன்வந்த இறை தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையே யன்றி வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை.”

(திருக்குர்ஆன் 41:43)

என்ற இறைவசனம் இன்றும் இயம்பிக் கொண்டுள்ளது.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முன்னதாக வந்த இறைத் தூதர்களாகிய நபிமார்கள் எல்லோருமே ஆன்மீகம் பற்றித்தான் போதித்தார்கள். அகவாழ்வின் பல்வேறு கூறுகளின் வளர்ச்சிக்கான வழிவகைகளைப் பற்றித் தெளிவாகவும் திட்பமாகவும் கூறிப் போதித்தார்கள். ஏனெனில், அவர்கள் ஆன்மீகப் போதகர்களாகவே அனுப்பப்பட்டவர்கள். எனவே, அவர்களின் நோக்கும் போக்கும் ஆன்மீகத்தைப் போதிப்பதோடு அமைவதாயிற்று. ஆனால், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பணி ஆன்மீகப் போதனையோடு அறிவியலையும் போதிப்பதாக அமைந்தது. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீக வாழ்வாகிய அக வாழ்க்கையையும் அறிவியல் சார்ந்த வாழ்வாகிய புற வாழ்க்கையையும் ஒரு சேர உணர்த்தியவர் பெருமானார் (சல்) அவர்களாவர். அதுவும் உளவியல் அடிப்படையில்.

அண்ணல் நபி ஓர் அழகிய முன் மாதிரி

மற்ற நபிமார்களெல்லாம் வெறும் போதகர்களாக விளங்கி, போதிப்பதையே தங்களின் தலையாய பணியாகக் கருதி செயலாற்றி மறைந்தார்கள்.

ஆனால், அண்ணலார் அவர்கள் போதிப்பதோடு, போதனைக்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டிய கடப்பாடுடையவராகவும் இறைவனால் அனுப்பப்பட்டிருந்தார்கள். இதை,

“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் அழகான முன்மாதிரி அமைந்திருக்கிறது.”

(திருக்குர்ஆன் 33:21)
என இறைவன் நபிகள் நாதரை நோக்கிக் கூறுவதாயமைந்துள்ள திருமறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

அண்ணலாருக்கு முன்னதாக வந்த அனைத்து நபிமார்களும் ஆன்மீகம் தொடர்பான அகவாழ்வு சம்பந்தப்பட்ட வாழ்வியல் நெறிகளைப் போதித்தார்களேயன்றி வாழ்வின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் போதித்தவர்களில்லை. ஏனெனில், அவர்களெல்லாம் வாழ்வின் அனைத்துப் படித்தரங்களிலும் வாழ்ந்து காட்டும் வாய்ப்பைப் பெற்றவர்களில்லை.

வாழ்வின் அனைத்துப் படித்தரங்களிலும்
வாழ்ந்து காட்டிய வழிகாட்டி

நபிமார்களின் குறிப்பிடத்தக்க பெரும் நபியாக விளங்கும் ஆபிரஹாம் எனும் இபுறாஹீம் (அலை) ஒரு படைத் தளபதியாகவோ மக்களை ஆட்சி செய்யும் ஆட்சித் தலைவராகவோ விளங்கியவரில்லை. அதே போன்று ஜீசஸ் என அழைக்கப்படும் ஈசா (அலை) அவர்கள் ஒரு குடும்பத் தலைவராகவோ ஒரு தந்தையாகவோ படைத் தளபதியாகவோ, ஆட்சித் தலைவராகவோ வாழ்ந்து காட்டியவர் இல்லை. தனியராக ஆன்மீக வாழ்வு பற்றி போதித்தவர். அகவாழ்வின் மேன்மை பற்றி அதிகமதிகம் பேசியவரேயன்றி மனித வாழ்வின் அகம் - புறம் எனும் இரு கூறுகளையும் பற்றிப் போதித்தவர் இல்லை.

ஆனால், அதே சமயம் நபிகள் நாயகம் (சல்) வாழ்க்கையில் எத்தனை படித்தரங்கள் - வாழ்க்கை வகைகள் உண்டோ அத்தனையிலும் வாழ்ந்து காட்டும் வாய்ப்பைப் பெற்றவர். ஒரு நல்ல கணவராக, தந்தையாக, வணிகராக, படை வீரராக, படைத் தளபதியாக, படைத் தலைவராக, ஆட்சித் தலைவராக, வாழ்வின் அகம் - புறம் போதித்த ஆசானாக, விஞ்ஞானம் பேசிய மெய்ஞ்ஞானியராக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் வாழ்ந்து காட்டும் வாய்ப்பை இறைவன் ஏந்தல் நபிக்கு மட்டுமே வழங்கியது வல்ல அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அதிலும், வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய பெருமையும் பெருமானார்க்கே உண்டு.

பெருமானாரின் பெரு வாழ்வும் அதற்கு அச்சாணியாயமைந்த இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆனும் உணர்த்துவது இறை நம்பிக்கையும் இறை வணக்கமுமேயாகும். இறை நம்பிக்கையும் அதனைச் செயல் வடிவில் நிறைவேற்றும் வணக்கமும் தனி மனித உயர்வுக்கு எல்லா வகையிலும் வலிவும் வனப்பும் ஊட்டுவதாகவே அமைந்துள்ளது.

ஐம்பெரும் கடமைகளும் வணக்கமுறைகளேயாகும்

இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் ஐம்பெரும் கடமைகளைப் பேணி நடக்கப் பணிக்கிறது. கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளாக ஈமான் எனும் இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் புனிதப் பயணம் ஆகிய ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றக் கட்டளையிடுகிறது. இந்த ஐம்பெரும் கடமைகளும் ஒருவகையில் இறை வணக்க முறைகளாகவே அமைந்துள்ளன. ஈமான் எனும் இறை நம்பிக்கை உணர்வால் நிகழ்த்தப்பெறும் இறை வணக்கமாகும். தொழுகை என்பது உடலாலும் உணர்வாலும் நிறைவேற்றப் படும் இறை வணக்கமாகும். 'நோன்பு’க் கடமை உடலால் நிகழ்த்தப் பெறும் இறை வணக்கமுறையாகும். ஜகாத் எனும் வறியோர் பங்களிப்புக் கடமை பொருளால் நிகழ்த்தப் பெறும் இறைவணக்கமாகும். ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாகிய ஹஜ் கடமை உடலாலும் பொருளாலும் நிறைவேற்றப்படும் இறை வணக்க முறையாகும். இவ்வாறு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளும் இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன.

இறைவணக்க உயிரோட்டம் தியாகமே

இஸ்லாமிய இறைவணக்க முறைகளின் உயிரோட்டமாக அமைந்திருப்பது தியாக உணர்வாகும். ஆழ்ந்து பார்த்தால் இஸ்லாமியக் கடமைகள் அனைத்துமே தியாகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாகும். சான்றாக 'ஈமான்' -ஐ எடுத்துக்கொள்வோம். மனம் ஒரு குரங்கு என்பார்கள். நல்லதோ கெட்டதோ தனக்கு இதமாக இருக்கும் எதையும், மகிழ்வூட்டக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் பற்றி பூரிப்படைவது மனதிற்குகந்த ஒன்று. ஆனால், அசையோட்ட மிக்க மனதை ஒரு நிலைப்படுத்தி, அதிலே இறையுணர்வைப் பொங்கச் செய்து, இறைவன் ஒருவனே, அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அலியுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை என்பதில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, இவ்விறை உணர்வால் மனதை நிரப்பிக் கொள்ளும்போது, இஷ்டப்படியெல்லாம் எண்ணி மகிழும் மனதைக் கட்டுப்படுத்தும் தியாகத்தை செய்தவர்களாகிறோம்.

அடுத்து, 'தொழுகை' வைகறை நேரம். விடிந்தும் விடியாத நிலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்கும் நேரத்தில் துள்ளியெழுந்து, உள்ளச் சுத்தம், உடல் சுத்தம் என்ற நிலையில் ஒளுச் செய்து வைகறைத் தொழுகையான 'பஜ்ர்' தொழுகையில் தொழுகையாளி ஈடுபடுகிறார். இதேபோல் மற்ற தொழுகை நேரங்களில் தன் அலுவலகப் பணிகளை, வணிகப் பணிகளை ஒதுக்கி வைத்து தொழுகைகளில் ஈடுபடுகிறார். இதன் மூலம் தனக்கு வருமானம் போன்ற பெரும் பயன் அளிக்கவல்ல நேரங்களைத் தொழுகையாளி தியாகம் செய்கிறார்.

நோன்புக் கடமையை நிறைவேற்ற முனையும் நோன்பாளி, நோன்பின்போது, தான் விரும்பிப் பருகி மகிழும் பானங்களையும் அடிக்கொரு முறை புகைத்து மகிழும் நோன்பாளிப் புகைப்புப் பழக்கத்தையும் பகல் நேரத்தில் விரும்பி உண்ணும் சுவைமிகு உணவையும் அடியோடு துறந்து, ஒரு சொட்டு நீரும் பருகாமல் அனைத்து உணவு வகைகளையும் தியாகம் செய்தவராகிறார்.

'ஜகாத்' எனும் ஏழையின் பங்களிப்பை வழங்குகின்ற முஸ்லிம் தான் பாடுபட்டுத் தேடிய பொருளைத் தன் கைப்படவே இரண்டரை சதவிகிதத்தைக் கணக்கிட்டு, அத் தொகையைப் பெறுவதற்கென விதிக்கப்பட்ட நபர்களைத் தேடிச் சென்று, இடது கை தருவது வலது கைக்குத் தெரியாதவாறு வழங்கி மகிழ்கின்றார். இவ்வாறு 'ஜகாத்' கடமையை நிறைவேற்றுவதன் மூலம் தான் பாடுபட்டுத் தேடிய திரவியத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்கின்றார்.

அதேபோன்று 'ஹஜ்' கடமையை நிறைவேற்ற முனையும் ஹாஜி தன் பெருளைச் செலவிட்டு, காலத்தை ஒதுக்கி, தன் குடும்பம் உற்றார் உறவினர்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை விட்டுப் பிரிந்து, இறையில்லம் ஏகுகிறார். நாற்பது நாட்கள் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு தன் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகிறார். இவ்வாறு தன் செளகரியங்கள் அனைத்தையும் தியாகம் செய்தவராகத் தன் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகிறார்.

இவ்வாறு ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகள் அனைத்துமே தியாக உணர்வை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளன எனலாம்.

இறையச்ச உணர்வே இறைநெறியூட்டும் உந்துவிசை

இத்தகைய வணக்க முறைகளால் இறையச்ச உணர்வு வலுப்படுகிறது. வலுவான இறையச்ச உணர்வே இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் உந்து விசையாயமைகிறது. இதற்கு ஏற்ற சான்றாக, இன்றுவரை வரலாறு சுட்டிக் காட்டுவது ஃபிர்அவ்னைத்தான்.

ஃபிர்அவ்ன் இறை நம்பிக்கை அறவே இல்லாத மன்னன். தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடு, தன்னை கடவுளாக மக்கள் வணங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியவன். வணங்க மறுத்தவர்களை சிறையிலிட்டும், சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்தி வந்த கொடுங்கோலன்.

மூஸா (அலை) ஃபிர்அவ்னைக் கடவுளாக வணங்க மறுத்ததோடு, உருவமிலா ஒரே இறைவனையே வணங்கப் பணித்தவர். ஃபிர்அவ்னுக்கெதிராக 'ஓர் இறை'க் கொள்கையை உரமாக மக்களிடையே பரப்பி வந்த மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்ன் கடும் பகைவராகக் கருதி, அவரை அழிக்க, அவரது ஓரிறைப் பிரச்சாரத்தை ஒடுக்க கடுமையான அடக்கு முறைகளைக் கையாண்டு துன்புறுத்தினான். அவனது கொடுங்கோன்மையை வெறுத்த மூசா (அலை) நாட்டை விட்டு வெளியேறி, தன் பிரச்சாரத்தைத் தொடர முற்பட்டார். ஓரிறைக் கொள்கையை ஏற்றுப் பின்பற்றுபவர்களை அழைத்துக்கொண்டு செங்கடலைக் கடக்க, அதனை நோக்கி நடந்தார்.

இதையறிந்த ஃபிர்அவ்ன் தன் படைகளோடு விரைந்து சென்று, மூசா (அலை) கூட்டத்தை தடுத்து நிறுத்தித் தாக்க புறப்பட்டான். செங்கடலை நெருங்கிய நிலையில் ஃபிர் அவ்ன் தன் படையுடன் தொடர்ந்து வருவதையறிந்த மூசா (அலை) தங்களைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவன் செங்கடலைப் பிளக்கச் செய்தான். பிளவுண்ட செங்கடல் பாதை வழியே மூசா (அலை) மும் அவரைப் பின்பற்றி வந்தவர்களும் விரைவாக நடந்து சென்று மறு கரையை அடைந்தனர். அவர்களைப் பின்பற்றி வந்த ஃபிர்அவ்னும் அவன் படையினரும் நடுக் கடலை அடைந்தபோது, மூசா கூட்டத்தினர் அனைவரும் மறுகரையைச் சேர்ந்து விட்டனர். உடனே பிளவுண்ட கடல் ஒன்றிணைந்தது. இதனால் ஃபிர்அவ்னும் அவன் படையினரும் செங்கடல் நீரில் தத்தளித்தனர். தனக்கு அழிவு நெருங்கி விட்டதை ஃபிர்அவ்ன் தெளிவாக உணர்ந்தான். தன்னைக் காக்க சர்வ சக்தியுள்ள இறைவனாலேயே இயலும் என்ற உணர்வு நெருப்புப் பொறியாக அவன் உள்ளத்தில் தோன்றி ஜுவாலையாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. "இறைவன் ஒருவன் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அந்த இறைவன் என்னைக் காத்து இரட்சிக்க அவனருளை வேண்டுகிறேன்” எனக் கதறியபடி கூறினான். தன் அழிவின் விளிம்பை எட்டிய நிலையில் இறையச்சத்தோடு பூரண இறை நம்பிக்கையுடன் இறைவனை வேண்ட, இறைவனும் அவனுக்கு உதவ முன் வந்தான். 'தன் வாழ்வில் இறுதி நிமிடத்தில் இறையச்சமும் இறை நம்பிக்கையும் கொண்டு இறையுதவியை வேண்டிநின்றதால், ஃபிர்அவ்னின் பூதவுடல் இவ்வுலகுள்ளளவும் அழியாமல் காக்கப்படும். இறை நம்பிக்கையாளர்கட்கு அவ்வுடல் ஒரு சான்றாக இருக்கும்’ என இறைவன் கூறியதோடு அவன் உடல் இதுவரையிலும் அழியாமல் காத்து வரப்படுகிறது. அந்த உடல் இன்றுவரை 'மம்மி'யாக எகிப்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இறையச்சம் இறைநம்பிக்கைக்கு ஊற்றுக்கண்

ஒரு நிமிடநேரம் இறையச்சம் கொண்டு இறை நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்குப் பயனாக ஃபிர்அவ்னின் உடல் உலகுள்ளளவும் பாதுகாக்க அருள் செய்த இறைவன், நம் வாழ்நாள் முழுமையும் இறையச்சமும் அழுத்தமான இறை நம்பிக்கையும் கொண்டு, இறைநெறிப் படி வாழ்வோமேயானால், நமக்கு வல்ல அல்லாஹ் எத்தகைய பெரும் பேறுகளையெல்லாம் வழங்கி மகிழ்விப்பான் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறையச்சத்தோடு கூடிய ஆழ்ந்த இறை நம்பிக்கை, நம் வாழ்க்கை செம்மையாக அமைய, எல்லா வகையிலும் வழிகாட்டியாயமைகிறது. நம் வாழ்க்கைத் தேர் வெற்றி எனும் இலக்கை எளிதாக அடைய, மாபெரும் ராஜபாட்டையாக அமைகிறதெனலாம். இஃது பல இனிய பண்புகள் உருவாக ஊற்றுக் கண்ணாக அமைகிறது என்பதில் ஐயமில்லை.

எளிமையே சுவர்க்கத் திறவுகோல்

இவ்வாறு நமக்குள் உருவாகி நிலைபெறும் பல இனிய பண்புகளில் ஒன்று எளிமை. இறை நம்பிக்கையும் இறையச்ச உணர்வும் கொண்டவனிடம் ஆடம்பரம் தலை காட்டாது. அடக்கமும் எளிமையும் அவன் வாழ்க்கைத் தேரின் இருபெரும் சக்கரங்களாக அமையும். இத்தகைய எளிமை வேட்கையாளர்களே இறை உவப்புக்கு உரியவர்களாக முடியும் என்பதைப் பெருமானார் (சல்) வாழ்வில் நடைபெற்ற ஒரு சுவையான சம்பவம் இன்றும் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்து, நம்மை இறை வழியில் ஊக்கி வருகிறது. மக்கா வெற்றியைத் தொடர்ந்து அரபகம் முழுமையும் அண்ணலாரின் ஆட்சியின் கீழ் வந்தது. அண்ணலாரின் ஆட்சி முறையின் மாட்சி கண்டு அண்டை நாட்டு ஆட்சியாளர்களெல்லாம், மன்னர்களெல்லாம் வியந்து நின்றனர். நேசக் கரம் நீட்ட முனைந்து, நேரில் வந்து உரையாடி, அறிவுரை பெற்றுச் சென்றனர். வரும் மன்னர்களின் மற்றைய அரசுப் பிரதானிகளும் ஆடை அலங்காரங்களுடன் அண்ணலாரை வந்து காண்பர். ஆனால், அண்ணலாரோ ஆடம்பரம் ஏதுமின்றி மிகமிக எளிய உடையுடன், ஒரு பக்கீரைப் போன்று காட்சி அளிப்பார். வருகின்ற மன்னர்களும் மற்றவர்களும் அமர நல்ல இருக்கைகளைத் தந்துவிட்டு, தான் சாதாரணமாக அமரும் கயிற்றுக் கட்டிலேயே அமர்ந்து உரையாடுவார். இது உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பாதித்து வந்தது. மற்ற நேரங்களில் எப்போதும்போல் இருந்தாலும் அண்டை நாட்டு மன்னர், பிரதானிகள் வரும்போது, அவர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் அரசுத் தலைவர் என்பதற்குகாகவாவது ஓரளவு ஆடம்பர உடையணிந்து பேட்டி தரக் கூடாதா? எனத் தனக்குத் தானே கேட்டுக் கொள்வார்.

ஒரு நாள் பெருமானார் தன் வீட்டில், வழக்கமான கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, நீண்ட நாளாகத் தன் உள்ளத்தை அரித்து வரும் உணர்வை, எண்ணத்தை வினா வடிவில் வள்ளல் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்கலானார்.

மற்ற சமயங்களில் எப்படியிருந்தாலும் பரவாயில்லை. மன்னர்களும் மற்றவர்களும் காண வரும்போதாவது ஓரளவு நல்ல உடைகளை அணிந்து, வருபவர்களுக்கு காட்சி தந்தால், காண்பதற்கு நன்றாக இருக்குமே. வரும், மன்னர்களுக்கும் உவப்பாக இருக்குமே என்ற முறையில் உமர் (ரலி) அவர்களின் பேச்சு அமைந்தது. உமர் (ரலி) அவர்களின் உட்கிடக்கையை உய்த்துணர்ந்து கொண்ட பெருமானார், புன்சிரிப்புப் பூத்தவராக உமர் (ரலி) அவர்களை உவப்புடன் நோக்கி 'உமர் அவர்களே! இறைவன் எப்போதும் எளிமையையே விரும்புகிறான். எளிமையாக வாழுபவர்களுக்கு எண்ணற்ற வெகுமதிகளை அளிக்கிறான். எளிமையாக வாழ்வோரே சுவர்க்கத்தில் எளிதாக நுழைய முடியும். அங்கு அவர்கட்கு விரும்புவனவெல்லாம் கிடைக்கும். அத்தகைய சுவர்க்கப் பரிசுகள் எனக்குக் கிடைப்பதை தாங்கள் விரும்பவில்லையா, உமர் அவர்களே!' என்று எதிர்வினா எழுப்பிய போது, உமர் (ரலி) அவர்கட்குத் தெளிவாகப் புரிந்தது எளிமை வாழ்வு எத்தகைய வெகுமதிகளை தேடித்தர வல்லது என்பது. தன் ஆடம்பர உணர்வு எவ்வளவு தவறானது என்பதும் உமர் (ரலி) அவர்கட்கு தெளிவாகியது.

எளிமை ஆட்சியர்க்கு அணிகலன்

எந்த அளவுக்கு எளிமையாக வாழ வேண்டும் என்பதையும் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு ஆடம்பர வாழ்வு நீங்கி, அரசுப் பணத்தை எந்த அளவுக்குச் சிக்கனமாகப் பயன்படுத்தி வாழ வேண்டும் என்பதற்கும் பெருமானாரின் பெரு வாழ்வில் பல எடுத்துக் காட்டுகளைக் காண முடிகிறது. அவைகளில் ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இன்று ஆட்சி, அதிகாரம் என்றாலே எவ்வளவு சுருட்டலாம், எத்தகைய ஆடம்பர வாழ்வை அரசுச் செலவில் அனுபவிக்கலாம். எத்தனை தலை முறைக்குச் சொத்து சேர்க்கலாம் என்பதிலேயே இன்றைய ஆட்சியாளர்கட்குச் சிந்தனை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்கள் எம் முறையில் எளிமையாக, சிக்கனமாக மற்றவர்கட்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதற்கு வள்ளல் நபி வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சான்றாகச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாயகத் திருமேனி அவர்கள் மக்கா நகரை வெற்றி கொண்ட நேரத்தில் அதற்கு ஆளுநராக ஒருவரை நியமிக்க வேண்டிய அவசிய, அவசரமேற்பட்டது. அப்போது அவர்கள் மனதில் இப் பதவிக்கு எல்லா வகையிலும் ஏற்றவராகத் தோற்றமளித்தவர் அத்தா இப்னு ஆசீத் என்பவராவார். மக்கா வெற்றி நேரம்வரை அண்ணலாரின் எதிரியாக இருந்தவர். இருப்பினும் அத்தா இப்னு ஆசீத் அவர்களின் வீரத்திலும் நேர்மையிலும் பெருமானார் பெருமதிப்புக் கொண்டிருந்தார். மக்கா வெற்றிக்குப்பின் இஸ்லாத்தில் இணைந்த அவரை அழைத்த அண்ணலார் அவரை மக்கா ஆளுநராக நியமிக்கவிருக்கும் செய்தியை வெளிப்படுத்தாமலேயே அவரை நோக்கி 'அத்தா இப்னு ஆசீத் அவர்களே! உங்களுக்கு ஒரு நாள் வாழ்க்கைச் செலவுக்குக் குறைந்தபட்சம் எவ்வளவு தேவைப்படும்?' என்று வினவினார். எதற்காக இப்படியொரு கேள்வியைத் திடுமெனப் பெருமானார் கேட்கிறார் என்பது புரியாமலே, ‘அண்ணலார் அவர்களே! என் ஒருநாள் வாழ்க்கைச் செலவுக்கு ஒரு திரஹம் இருந்தால் போதும், சமாளித்துக் கொள்வேன்' எனக் கூறினார்.

இதைக்கேட்ட நாயகத் திருமேனி அவர்கள் 'உங்களை மக்கா நகரின் ஆளுநராக நியமிக்கிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கைச் செலவுக்காக ஒரு நாளைக்கு ஒரு திரஹம் வீதம் அரசுக் கருவூலத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதுதான் உங்களுக்குரிய சம்பளம்' எனக் கூறி நியமித்ததாக வரலாறு கூறுகிறது.

இந்தப் பேருண்மையை அறிந்த, இஸ்லாமிய நெறி வழுவா பெரு வாழ்வு வாழ்ந்த அவ்ரங்கஸீப் ஆலம்கீர் இதனினும் மேம்பட்ட முறையில் வாழ்ந்து காட்டிய வாழ்க்கைச்சுவட்டை அவர் வாழ்விலே நாம் காண்கிறோம்.

தன் தனிப்பட்ட வாழ்க்கைக்காக அரசுக் கருவூலத்தில் அரைக்காசும் எடுத்துப் பயன்படுத்தாது, தொப்பி தைத்தும், திருக்குர்ஆனுக்குப் படியெடுத்தும் அவற்றை ஆள் மூலம் மக்களிடையே விற்கச் செய்து, அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டே தன் தனிப்பட்ட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொண்டார். இதுதான் இஸ்லாமியக் கொள்கை. அண்ணலார் புகட்டிய வாழ்வியல் நெறி. அரசுச் சொத்தை, மக்கள் வரிப்பணத்தைத் தங்கள் சொத்தாகக் கருதி அவைகளைச் சுரண்டிக் கொழுக்கவே, மக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருப்பதாகக் கருதிச் செயல்படும் ஊழல் அரசியல்வாதிகள் கட்டாயம் அறிந்துணர வேண்டிய செய்தி. அரசுப் பதவியிலுள்ளவர்கட்கு இயல்பாகவே ஆடம்பர மோகம் அதிகம். அதிலும் அரசியல்வாதிகள் ஆட்சிக் கட்டிலில் அதிகாரத்தோடு அமரும்போது, தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிப் பார்க்காதவர்களாக, ஒரு மட்டத்திற்குமேல் உயர்வாக வாழக் கூடியவர்களாக, வாழ வேண்டியவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இத்தகைய ஆடம்பர வாழ்விற்குத் தேவைப்படும் பணத்தைத் தங்கள் அதிகார துஷ்பிரயோகம் மூலம் பெற வழிவகைகளைத் தேடி, தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள முனைகிறார்கள். இதற்குரிய ராஜபாட்டையாக அமைவது லஞ்ச லாவண்யமாகும்.

‘கைக்கூலி' தரும் கடுந்தண்டனை

அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்ட விதிமுறைகளைப் புறக்கணித்து, சலுகை முறையில் காரியங்களைச் சாதித்துக் கொள்ள சட்டவிரோதமாகப் பெறும் லஞ்சமாகிய கைக்கூலியைப் பெறுபவர்கள் சமூக விரோதச் செயல் செய்தவர்களாவர். இதனால் முறைப்படி பலன் அடைய வேண்டியவர்கள் பலன்பெற இயலாமல் போய்விடுகிறது.

இத்தகைய சமூக விரோதச் செயலான 'லஞ்சம்’ எனும் கைக்கூலி பெறுபவர் நரகில் எத்தகைய இறை தண்டனையைப் பெறுகிறார்கள் என்பதை ஆலிப் புலவர் எழுதிய ‘மிகுராஜ் மாலை' எனும் இஸ்லாமிய இலக்கியம் மிகச் சிறப்பாக ஒரு காட்சி மூலம் விளக்குகிறது. மிகுராஜ் இரவன்று ஜிப்ரீல் (அலை) அவர்களோடு விண்ணுலகு சென்ற நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொர்க்க, நரகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து வருகிறார்கள். நரகப் பகுதியைச் சுற்றிப் பார்த்து வரும்போது ஒரு மனிதன் தடிகொண்டு பலமாகத் தாக்கப்படுகிறான். அடுத்தடுத்து தலையில் விழும் அடிகளால் தலை வீங்குகிறது. வீங்கிய தலையை நெருப்புப் பிழம்புபோல் தோற்றமளிக்கும் அம்மியில் வைத்து, அரைக்கிறார்கள். இக் காட்சியைக் காணும் பெருமானார் உள்ளம் பதைக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்களை நோக்கி 'இம்மனிதரை ஏன் இப்படி வதைக்கிறார்கள். இப்படியொரு கொடிய தண்டனை அனுபவிக்க என்ன பாவம் செய்துள்ளார்' எனக் கேட்க, அதற்கு விடை கூறவந்த ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'இம் மனிதர் சாதாரண பாவம் செய்யவில்லை. கைக்கூலி வாங்கிய குற்றத்தைச் செய்தவன். அதற்குரிய தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டுள்ளான்', என்று கூறினார்.

"பேசு நரகிற் சிலர் பெருந்தலையைத் தீ
ஆசமியில் வைத்து அரைக்குமது கண்டே
மாசினையடுத்த இம் மனிதத்தவரென்ன
தேசமில் கைக்கூலி பற்றித் தின்றவர்களென்றார்.”

இங்குக் 'கைக்கூலி' என்ற சொல்லிற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று லஞ்சத்தைக் குறிப்பது. மற்றொரு பொருள் பெண்ணை மணம் முடிக்கும்போது அவனுக்கு இஸ்லாமிய முறைப்படி 'மஹர்' எனும் வாழ்க்கைப் பணத்தை அன்பளிப்பாக பெண்ணுக்கு வழங்கி மணம் முடிப்பதற்கு மாறுபாடாக பெண்வீட்டாரிடமிருந்து பெறும் வரதட்சிணையும், கைக்கூலி என்றே அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய நெறிக்கு முற்றிலும் மாறுபாடான இப்பாவச் செயலை - கைக்கூலியைப் பெறுகின்றவனுக்கு நரகில் இத்தகைய கொடுந்தண்டனைகளே காத்திருக்கின்றது என்பதை இச் சம்பவம் சுவைபடச் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், கைக்கூலி பெறுகின்றவனைப் பற்றிப் பேசும்போது, அநியாயமாகக் கைக்கூலி வாங்கி வாழ்பவனை 'கைக்கூலி பற்றி தின்றவன்' என மிகுராஜ் மாலை ஆசிரியர் ஆலிப் புலவர் குறிப்பிடுகிறார்.

சாதாரணமாக உண்டான், சாப்பிட்டான், பருகினான், அருந்தினான் என்றுதான் கண்ணியமாகக் குறிப்பிடுவது வழக்கம். ஆடு தின்றது, மாடு தின்றது என்று கூறுவது மரபு. ஆனால், கைக்கூலி வாங்கி உண்பவனை ‘கைக்கூலி பற்றித் தின்றவர்கள்' என்று இழிவாகக் கூறுவதன் மூலம் கைக்கூலியின் இழிநிலையைப் புரிய வைக்கிறார். அத்துடன் அமையாது, 'கைக்கூலி பெற்றான்' எனக் குறிப்பிடாது கைக்கூலி பற்றித் தின்றவர்’ எனக் குறிப்பிடுவதன் மூலம் கைக்கூலி மனமுவந்து தரும் பொருள் அல்ல. ஒருவரது விருப்பத்துக்கு மாறாக, அவரிடமிருந்து வலியப் பிடுங்கும் கட்டாயமாகப் பற்றிப் பெறும் ஒன்றே என்பதை வலியுறுத்தவே 'பற்றித் தின்றவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார் என்பது கைக்கூலியின் தீங்கை இன்னொரு வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாயுள்ளது.

உலகளாவிய சமுதாய சீர்திருத்த இயக்கமே இஸ்லாம்

இஸ்லாமிய மார்க்கம், அடிப்படையில் சமூகத் தீங்குகளை அகற்றி, சமூக விழிப்புக்கும் செழிப்புக்கும் இடையறாது பாடுபட்டு, இறைநெறியில் மக்களை வாழ வழிகாட்டும் இறை மார்க்கமாகும். சமூக ஒருங்கிணைவும் சமுதாய நல்லிணக்கமும் மக்களிடையே உருவாகி நிலைபெற, அன்புவழியை, இறைநெறியை நிலைபெறச் செய்ய இடையறாது பாடுபட்டு வரும் மார்க்கம் இஸ்லாம். இறைநெறியாகிய இஸ்லாத்தை, மக்களுள்ளம் ஏற்றுப் பின்பற்ற, அன்பு வழியைப் பேணப் பணிக்கிறது இஸ்லாம். இஸ்லாமியக் கருத்துகளை யாரிடத்தும் எக் காரணம் கொண்டும் எந்தச் சமயத்திலும் திணிப்பதையோ வலியுறுத்திப் பிரச்சாரம் செய்வதையோ இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை. இத்தகைய செயல்பாடுகள் இஸ்லாமியக் கோட்பாடுகட்கு நேர்மாறானவை எனக் கூறுகிறது.

"இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை.”

(குர்ஆன் 2:256)

மேலும் திருமறை கூறுகிறது:

"(நபியே!) நீர் கூறும்: (முற்றிலும் உண்மையான) இவ்வேதமானது உம் இறைவனால் அருளப் பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம், விரும்பாதவர் (இதை) நிராகரித்து விடலாம்.” (குர்ஆன் 18:29)

எனக் கூறுவதன் மூலம் இஸ்லாமிய நெறியை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய விருப்பத்தைப் பொருத்ததேயன்றி கட்டாயத்தின்பாற்பட்டது அன்று. அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் இத்தகைய உணர்வையே ஊட்டி வருகிறது.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் கிளப்பிவிட்ட ஒன்றே "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது” என்ற மிகத் தவறான குற்றச்சாட்டு. அதிலும் இந்திய வரலாற்றை எழுத முனைந்த ஸ்மித் போன்ற ஆங்கிலேயர்கள் இந்திய மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிக்காக வரலாற்றுப் போர்வையில் கட்டிவிட்ட கற்பனையே வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற கற்பனை வாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே நாட்டினர் - இந்தியர் என்ற முறையில் ஒன்றிணைய விடாமல் அவர்களிடையே பிணக்கும் பிரிவும் என்றென்றைக்குமாக இருக்க வேண்டும் என்ற தீய உணர்வின் அடிப்படையில் உருவானதே இந்த வாதம்.

இந்திய வரலாற்றை நடுவு நிலையில் ஆராய்ந்து பார்த்தால் இது எவ்வளவு தீய திட்டமிட்ட தவறான வாதம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளியப் புலப்படும்.

இந்தியாவிற்குள் இஸ்லாமியர்கள் கால்வைத்த காலத்திலிருந்து இன்றுவரை அவர்களின் வரலாற்று ஏடுகளைப் புரட்டி பாருங்கள், எங்காவது ஒரு இடத்தில் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள் அல்லது வணிகர்களாக வந்த அவர்கள் தங்கள் செல்வம், செல்வாக்குகளைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்குள் இழுத்து வந்தார்கள் என்பதற்கு நேரடி அல்லது மறைமுகச் சான்றுகள் எதையாவது காட்ட முடியுமா?

நான் கல்லூரியில் வரலாற்றை குறிப்பாக இந்திய வரலாற்றையும் இஸ்லாமிய வரலாற்றையும் பாடமாக எடுத்துப் படித்தவன். அதிலும் புகழ் பெற்ற இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் சலாம் ஃபக்கி அவர்களிடம் வரலாற்றுப் பாடம் கற்றவன். இங்கு மட்டுமல்ல, எங்குமே இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதுதான் உண்மை.

தற்காப்புப் போரே இஸ்லாமியப் போர்

தனிப்பட்ட ஒரு முஸ்லிமுக்கும் பிற சமயத்தவர்க்கும் இடையே நடக்கும் சண்டையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு இஸ்லாமிய அரசுத் தலைவருக்கும் பிற சமய அரசுத் தலைவருக்குமிடையே நடைபெறும் போராக இருந்தாலும் சரி. சண்டையோ போரோ முதலில் தொடங்க ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை. முதலில் கையை ஓங்கவோ வாளைத் தூக்கவோ கூடாது எனக் கட்டளையிடுகிறது.

தனிப்பட்ட தாக்குதலாக இருந்தாலும் அல்லது போராகவே இருந்தாலும் மற்றவர்கள் தாக்க முனையும் போது தற்காப்புக்காக எதிர்த்துப் போராடவே இஸ்லாம் அனுமதிக்கிறது. அம் முறையிலேயே இஸ்லாமியப் போர்கள் நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

படைப்போர் இலக்கியம் புகட்டும் உண்மை

இஸ்லாமியப் போர்களைப் பற்றிய சுவையான தகவல்களின் கோவையாக இஸ்லாமியப் படைப்போர் இலக்கியங்கள் பல தமிழில் உண்டு. அவற்றின் தலைப்புப் பெயர்களெல்லாம் முஸ்லிமல்லாதவர்களின் பெயர்களாகவே அமைந்துள்ளன. சாதாரணமாகப் போரைத் தொடங்கி வீராவேசமாகப் போரிட்டு வெற்றி பெற்ற வீரர்களே இலக்கியக் கதாநாயகர்களாகப் போற்றப்படுவர். அவர்களின் பெயர்களே இலக்கியத் தலைவர்களாக இடம் பெறுவது இயல்பு. ஆனால், இஸ்லாமியப் படைப்போர் இலக்கியங்களில் வெற்றி பெற்ற வீரர்களின் பெயர் தலைப்பாக அமையாது, படையெடுத்து வந்து, போரிட்டு, தோல்வியடைந்த பிற சமய வீரர்களே, மன்னர்களே தலைப்புகளில் இடம் பெறுகின்றார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

போரை முதலில் தொடங்கியவர், படையெடுத்து வந்தவர்களாகிய பிற சமயத்தவர் பெயரிலேயே படைப்போர் இலக்கியங்கள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் தற்காப்புக்காக பிற சமயப் படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் மட்டுமே. அவர்கள் இறுதியில் வெற்றி பெற்றாலும்கூட, படையெடுப்பு நடத்திய பிற சமய வீரர்களையே கதாநாயகர்களாக அமைத்து இலக்கியம் படைத்து, இஸ்லாமியக் கோட்பாட்டை நிலைநிறுத்தியவர்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

இனி, இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா என்பதை வரலாற்றுப் பூர்வமாக சமூகவியல் அடிப்படையில் பார்ப்போம்.

இந்திய முதல் போரே தற்காப்புப் போர்

இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே நடைபெற்ற முதல் போர் சிந்துப் பகுதியிலே நடைபெற்ற போர் என வரலாற்றிலே குறிக்கப்படுகிறது. இந்தப் போர் எதற்காக நடைபெற்றது?

இந்தியாவில் தொடக்கக் காலத்தில் அராபிய வணிகர்கள் சிந்துப் பகுதியிலே வணிகம் செய்து வந்தார்கள். இவர்களின் சிறப்பான வணிகத்தைக் கண்டு பொறாமைப்பட்ட சிந்துப் பகுதியைச் சேர்ந்த பிற சமய வணிகர்கள் அளவுக்கதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு அப்பகுதியை ஆண்டு வந்த இந்து மன்னனின் ஆதரவும் இருந்து வந்தது. இதனால் அரபகம் திரும்பிய முஸ்லிம் வணிகர்கள் அன்றைய அரபக ஆட்சியாளர்களிடம் சிந்துப் பகுதியில் தங்கள் வணிகம் தொடர, பாதுகாப்புத் தருமாறு வேண்டினர். தங்கள் வணிகக் குடிகளின் கோரிக்கையை ஏற்ற அரபக ஆட்சியினர் காசிம் எனும் படைத் தளபதியின் தலைமையில் சிறு படையை சிந்துப் பகுதிக்குப் பாதுகாப்பளிக்க அனுப்பினர். வழக்கம்போல் சிந்துப் பகுதி வணிகர்கள், அப் பகுதிஆட்சியினரின் அரவணைப்போடு தாக்கப்பட்ட போது, அரபு வணிகர்கட்கு பாதுகாப்பளிக்கும் முறையில் தற்காப்புப் போரை நடத்தினர். இவ்வாறு முஸ்லிம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள காசிம் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்டது தான் சிந்துப் போர்.

இனி, இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள் தங்கள் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்குள்ள இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்திருக்கிறார்களா என்றால், அப்படி ஏதும் நடந்ததாக வரலாற்றில் எந்த ஒரு சம்பவத்தையும் நம்மால் காண இயலவில்லை. ஆயினும், இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களால் - வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்று அவ்வப்போது கூறப்பட்டே வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை.

அன்றிருந்த முஸ்லிம் விகிதாசாரமே இன்றும்

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை 600 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் கூறுவதுபோல் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு தங்கள் ஆட்சியின் கீழ் இருந்த பிற சமய மக்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்ய முற்பட்டிருந்தால் இந்தியாவிலுள்ள மக்கள் அத்தனை பேருமே முஸ்லிம்களாகியிருப்பார்கள். அவ்வாறு ஆகவில்லையே? பாபரும் அக்பரும் அவ்ரங்கஸீப்பும் ஆண்டபோது எத்தனை சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருந்தார்களோ, அதே அளவு சதவிகித மக்கள்தான் இன்றைக்கும் முஸ்லிம்களாக இந்தியாவில் உள்ளனர்.

இறுதிக் கடமையை நிறைவேற்றாத
இந்திய முஸ்லிம் மன்னர்கள்

அது மட்டுமல்ல அறுநூறு ஆண்டுகாலம் இந்திய மண்ணை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களில் பெரும்பாலோர் முழுமையான முஸ்லிம்களாக, இஸ்லாமியக் கடமைகளை முழுமையாக நிறைவேற்றியவர்களாக இருந்திருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அவ்ரங்களிபீப் ஆலம்கீர் உட்பட எந்த முஸ்லிம் மன்னரும் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. இந்நிலையில் மக்களை இஸ்லாமிய நெறியின் பால் ஈர்க்க அல்லது ஆட்சியதிகாரத் துணையுடன் வாள் கொண்டு முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என்பது எப்படி பொருந்தும். இதுவொரு வரலாற்றுப் புரட்டு ஆகும்.

இன்னும் இவ்விஷயத்தை நடைமுறைச் சிந்தனையோடு அணுகி ஆராய்ந்தால் மேலும் தெளிவேற்படும். நாடு விடுதலை பெறும்வரை காஷ்மீரை ஆண்டு வந்தவர் ஒரு ஹிந்து மன்னர். ஆனால், காஷ்மீர் மக்களில் மிகப் பெரும்பாலோர் முஸ்லிம் மக்கள்!

இன்றும்கூட கேரள மாநிலத்தில் கணிசமான பெருந் தொகையினராக வாழ்பவர்கள் முஸ்லிம் மக்கள். ஆனால், அங்கு எக்காலத்திலும் ஹிந்து மன்னர்கள் ஆட்சி மட்டுமே நடந்து வந்ததே தவிர, எந்த முஸ்லிம் மன்னரும் எந்தவொரு கேரளப் பகுதியையும் ஆண்டு வந்ததாக வரலாறே இல்லை. திப்பு சுல்தான்கூட கள்ளிக்கோட்டை வரை படையெடுத்துப் போனாரே தவிர, எந்த வெற்றியும் அடையாமல் திரும்பி விட்டார் என்பதுதான் வரலாறு.

இவ்வாறு முஸ்லிம்களின் ஆட்சியே இல்லாத காஷ்மீரிலும் கேரளத்திலும் யார் வாளால் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்? அப் பகுதி மக்களை முஸ்லிம்களாக யார் வாளால் கட்டாய மத மாற்றம் செய்தார்கள்.

எனவே, இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பது ஆதாரமே இல்லாத, திட்டமிட்டுக் கட்டிப் பரப்பப்படும் மிகத் தவறான பிரச்சாரம்.

இன்னும் சொல்லப்போனால் பிற மதத்தவரை மதிப்பதில், மத நல்லிணக்கத்தோடு பழகுவதில் முஸ்லிம்களுக்கு ஈடு யாரும் இல்லையென்று சொல்லுவதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஏகத்துவக் கொள்கையின் பிறப்பிடம் இந்தியா

அது மட்டுமல்ல, இந்திய மண்ணின், குறிப்பாகத் தமிழ் மண்ணின் மூல இறைக் கொள்கை என்ன என்று தெரியுமா? 'ஒரே இறைவன்' என்பதைக் குறிக்கும் ஏகத்துவக் கொள்கைதான் அடிப்படை இறைக் கொள்கையாக ஆரம்பத்தில் இருந்தது என்பதை நபிகள் நாயகம் (சல்) அவர்களே தெளிவாக விளக்கிக் கூறிச் சென்றுள்ளார்கள்.

பெருமானார் அவர்கள் இறையில்லமாகிய கஃபத்துல்லாவை வலம் வந்த பின்னர் 'ருக்னுல் ஹிந்த்' எனும் ஹிந்துஸ்தானத்தை நோக்கியிருக்கும் மூலைப் பகுதியில் ஹிந்துஸ்தானத்தை நோக்கி நிற்பார்கள். அப்போது தன் சட்டையின் மார்புப் பகுதியை விலக்கி வெறும் நெஞ்சை ஹிந்துஸ்தானத்தை நோக்கியவாறு காட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். அப்போத அவர்களின் முகம் மலர்ச்சி பெறும், புளகாங்கித உணர்வு பொங்க நிற்பார்கள்.

அண்ணலார் இவ்வாறு நிற்பதற்கும் பெரு மகிழ்வடைவதற்கும் என்ன காரணம் என்பது அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் சஹாபிகள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஒரு நாள் பெருமானார் (சல்) அவர்கள் மார்புச் சட்டையைத் திறந்து வைத்தவாறு இன்ப உணர்வோடு மலர்ந்த முகத்துடன் ஹிந்துஸ்தானத்தை நோக்கி நின்றபோது, ஒரு சஹாபி “நாயகமே நீங்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு இவ்வாறு நிற்பதற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டோ?” எனத் துணிந்து கேட்டு விட்டார். இதைக் கேட்ட பெருமானார் (சல்) அவர்கள் "ஹிந்துஸ்தானத்தை நோக்கி நான் இவ்வாறு நிற்கும்போது, ஏகத்துவக் கொள்கையின் விளைநிலமான ஹிந்துஸ்தானத்திலிருந்து வீசும் தென்றல் காற்று, என் நெஞ்சில்படும்போது எனக்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த இன்ப உணர்வை அனுபவிக்கத்தான் நான் இவ்வாறு இங்கு நின்று கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார்கள் என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து ஏகத்துவக் கொள்கையின் விளைநிலம் இந்துஸ்தானமாகிய இந்தியா என்பது தெளிவாகிறது.

உருவ வழிபாட்டின் உறைவிடம் கிரேக்கம்

வேத காலத்தில்கூட இந்தியாவில் உருவ வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இறைவனைப் போற்றியும் இறைவனின் பல்வேறு தன்மைகளைப் பற்றிய வர்ணனைகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இறைவனின் தன்மைகளை அவரவர் கற்பனைக்கும் கண்ணோட்டத்திற்மேற்ப மனக் கண்ணால் கண்டு போற்றி வணங்கி வந்தார்கள்.

முதன்முதலாக சிலை வணக்கத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் பாமீர் பீடபூமியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர்கள் அல்லர். அவர்கள் சிந்துப் பகுதியில் வந்து குடியேறியிருந்தபோது அப்பகுதிக்கு வணிக நிமித்தம் வந்த கிரேக்கர்களே விக்கிரக ஆராதனை செய்யும் சிலை வணக்கத்தை அறிமுகம் செய்தவர்கள். உலகிலேயே புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டு அதன் அடிப்படையில் சிலை வணக்க முறைகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் கிரேக்கர்கள் என்பது வரலாறு.

பெரும் புராணம் முதல் தலபுராணம்வரை
வளர்ந்த வரலாறு

வேதங்களில் கூறப்பட்டிருந்த இறைவனின் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து வந்த ஆரியர்கள், புராண அடிப்படையில் சிலை வணக்க முறையை ஏற்படுத்திக் கொண்ட கிரேக்கர்களைப் பின்பற்றி, வேதத்தில் கூறப்பட்டிருந்த இறைவனின் தன்மைகள் விவரிக்கப்பட்டிருந்த தற்கொப்ப கடவுள் சிலைகளை உருவாக்கி வணங்கத் தலைப்பட்டார்கள். இதில் மனிதக் கற்பனைகள் வெகுவாக இடம் பெற்றன. அவரவர் கற்பனைக்கேற்ப இறைத் தன்மைகளை சிலை வடிவங்கள் மூலம் விவரிக்கும்போக்கு வளர்ந்து கொண்டே சென்றது. அதற்கேற்ப கிரேக்கர்களைப் போல் புராணக் கதைகளையும் உருவாக்கலானார்கள். இது தலபுராணம் என்ற பெயரில் குக்கிராமங்கள்வரை அவரவர் பக்திக்கும் மனப் போக்குக்கும் கற்பனைத் திறனுக்குமேற்ப கடவுள் தன்மைகளை விவரிக்கும் கடவுளர்கள் நடவடிக்கைகள் அமையலாயின.

உலகெங்கும் இறைதூதர்கள்

ஏனெனில், மூல வேதங்கள், இஸ்லாமிய மரபுப்படி எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும், எல்லா மொழியிலும் தோன்றிய இறை தூதர்கள் மூலம், இறைச் செய்தி இறைவனால் இறக்கியருளப்பட்டன.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் பூமியில் இருக்கவில்லை” (திருக்குர்ஆன் 35:24)

மற்றும்,"(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்கு) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக்கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்." (திருக்குர்ஆன் 14:4)

எனக் கூறியிருப்பதிலிருந்து ரிக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம் ஆகியவைகளின் மூல வேத வாசகம் இறைவனால் முனிவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கலாம். இக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் காஞ்சி காமகோடி பீடப் பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்கள்,

“இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை இவற்றின் ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ இந்த வேதங்களை தாங்கள் செய்ய (இயற்ற)வில்லை என்கிறார்கள். எங்கள் மூலம் தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால்தான் எங்களை மந்திர ரிஷிகளாகச்சொல்லியிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததேயொழிய, நாங்களே அவற்றைச் சொல்ல (இயற்ற)வில்லை. நாங்கள் அப்படியே மனமடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் தான் (மந்த்ர த்ரஷ்டாக்கள்); செய்தவர்கள் அல்ல என்கிறார்கள்” என எடுத்துக் கூறுவதன் மூலம் வேதத்தின் மூல வாசகங்கள் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதும் அவை மனிதனால் இயற்றப்பட்டவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

இறைவனால் வழங்கப்பட்ட இறை வேதங்கள் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதனால் அலை மூல வடிவில் மீண்டும் மற்றொரு இறை தூதர் மூலம் வழங்கப்பட்டது என்பதுதான் வேத வரலாறு.

கிரேக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரியர்களால் போற்றி வளர்க்கப்பட்ட விக்கிரக ஆராதனை முறை கொஞ்சங் கொஞ்சமாக வடக்கேயிருந்து தெற்கு நோக்கிப் பரவலாயிற்று.

தமிழகம் வந்த உருவ வழிபாட்டு முறை

சங்க காலம் வரை சமயத் தாக்கங்களோ விக்கிரக ஆராதனை முறைகளோ தமிழகத்தில் அழுத்தக் கால் ஊன்றவில்லை. அதனால்தான் சங்க இலக்கியங்களில் கோயில்களைப் பற்றியோ பூசனை, சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியோ ஏதும் பேசப்படவில்லை. இறைவனை அனைத்தையும் கடந்து நிற்கும் 'ஏகப் பரம்பொருள்' எனும் பொருளில் 'கடவுள்' என்றும், அனைத்துயிர்க்கும் தலைமையாக இருப்பதால் 'இறைவன்' என்றும் போற்றப்பட்டது.

சங்க காலத்திலேயே இங்கு சமயத்தாக்கங்கள் ஏற்பட, தமிழர்கள் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப, கடவுளர்களை உருவாக்கிக் கொள்ள முனைந்தார்கள். அப்படி உருவாக்கப்பட்ட கடவுளர்களே முருகன், மாயோன், சேயோன் எல்லாம். இதுதான் சிலை வணக்கமுறை உருவான வரலாறு.

கிருஸ்தவத்தில் உருவ வழிபாடு புகுந்த வரலாறு

ஹிந்து சமயத்தில் மட்டுமல்ல, கிருஸ்தவ சமயத்திலும் விக்கிரக ஆராதனை முறையைப் புகுத்தியவர்கள் கிரேக்கர்கள்.

கிருஸ்தவ சமயம் கிரேக்க மண்ணில் கால் பதிக்கும் வரை அதில் விக்கிரக ஆராதனை முறை தலை தூக்கவில்லை. கிரேக்கர்கள் கிருஸ்தவர்களாக என்று மாறினார்களோ அன்றே, கிரேக்க மரபுப்படி உருவ வழிப்பாட்டு முறையில்தான் இறைவனைக் காண முடியும் என்று கருதி ஏசுவுக்கும் மரியன்னைக்கும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உருவம் கற்பித்து வழிபடத் தொடங்கினர். கிரேக்கத்துக்கு அப்பால் இருந்தவர்கள் இச் சிலை வழிபாட்டு முறையை ஏற்கவில்லை. இதனால் போரும் புகைச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியது. அப்போதெல்லாம் இஸ்லாம் தனது சகிப்புணர்வையும் சமய நல்லிணக்கப் போக்குகளையும் முற்றாகக் கடைப் பிடித்து, நடுவு நிலை பேணி வந்துள்ளதை வரலாறு நெடுகக் காண முடிகிறது. இந்தச் சிலை வணக்கப் போராட்டம், பைஸாந்தியத்தை லியோ இஸூரியன் எனும் பேரரசன் ஆளும்போது உச்சகட்டத்தை அடைந்தது.

விக்கிரக ஆராதனையை எதிர்த்த பைஸாந்திய
கிருஸ்தவ ஆட்சி

பைஸாந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கிருஸ்தவ தேவாலயங்களிலும் மடாலயங்களிலும் யாரும் விக்கிரக ஆராதனையாக சிலை வணக்கம் செய்யக்கூடாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவாலயங்களிலும் மடாலயங்களிலுமுள்ள அனைத்து விக்கிரகங்களும் அகற்றப்பட வேண்டும். மறுப்பவர் அரசு தண்டனைக்குள்ளாவார். இதை மீறும் தேவாலயங்களும் மடாலயங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்படும். சிலையிலா வணக்க முறையே பைஸாந்திய கிருஸ்தவ ஆட்சியின் இறை வணக்க முறை என அறிவித்தது.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சில தேவாலயங்களும் மடாலயங்களும் சிலைகளை அப்புறப்படுத்தி சிலை யிலா வணக்க முறைக்கு வழி வகுத்தன. கிரேக்கக் கிருஸ்தவர்களின் செல்வாக்கு மிக்க சில சர்ச்சுகள் சிலைகளை அப்புறப்படுத்த மறுத்தன. சில, கால தாமதம் செய்து வந்தன. இதனால் கோபமடைந்த மன்னன் லியோ இஸூரியன் தன் படைகளை அனுப்பி சிலை அகற்ற மறுக்கும் தேவாலயங்களையும் மடாலயங்களையும் இடிக்க உத்தரவிட்டான். அவ்வுத்தரவு அவன் படையினரால் நாடெங்கும் நிறைவேற்றப்பட்டு வந்தன. இறுதியாக அப்படையினர் மெளன்ட் சினாய் பகுதியை அணுகினர். பைஸாந்திய நாட்டின் எல்லையை ஒட்டினாற் போல் அமைந்திருந்த மெளன்ட் சினாய் பகுதியில் விக்கிரக ஆராதனையோடு கூடிய மாதா கோயிலும் ஒரு மடாலயமும் இயங்கி வந்தன.

ஆனால், அந்தக் குறிப்பிட்ட பகுதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்குட்பட்ட எல்லைப் பகுதியாக இருந்தது. லியோ இஸூரியனின் படைகள் இவற்றை இடிக்க வருவதை அறிந்த உமர் (ரலி) அவர்களின் படை வீரர்களான முஸ்லிம்கள், லியோ இஸ்லரியனின் படைவீரர்களோடு போரிட்டு, அவர்களை விரட்டி அடித்தனர். தேவாலயத்தையும் மடாலயத்தையும் முஸ்லிம் படைவீரர்கள் காப்பாற்றினர்.

லியோவைப் போன்றே முஸ்லிம்களும் சிலை வணக்க வழிபாட்டு முறைக்கு மாறுபட்டவர்கள்தான்; அவற்றை வெறுத்தொதுக்கும் இயல்பினர்தாம். ஆனால், அங்குள்ள கிருஸ்தவர்களின் சிலை வணக்க வழிபாட்டு முறையில் கொண்டிருந்த நம்பிக்கையைத் தங்கள் ஆட்சி, அதிகார, படை பலத்தைக் கொண்டு நசுக்கி அழிக்க அறவே விரும்பவில்லை. ஏனெனில், அது இஸ்லாமியக் கொள்கைக்கு நேர் மாறானதும் ஆகும். திருமறையாம் திருக்குர்ஆன்,

"அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்." (திருக்குர்ஆன் 6:108)

எனக் கூறியிருப்பது பிற சமயத்தவர்களின், நம்பிக்கையை, வணக்கமுறைகளை, உணர்வுகளை மதிக்க வேண்டுமே தவிர மிதிக்கக்கூடாது. சிதைக்கவோ ஊனப்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளதன் அடிப்படையில் முஸ்லிம் படைவீரர்கள் கிருஸ்தவ வணக்கத் தலங்களைக் காத்தார்கள். இதனால், பெரிதும் மகிழ்ந்துபோன கிருஸ்தவர்கள் முஸ்லிம்களின் உதவிக்கு நன்றி செலுத்தும் வகையில் தேவாலயங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய முறைப்படி மசூதி ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு நிலமளித்ததோடு கட்ட உதவியும் செய்தார்கள் என்பது வரலாறு தரும் செய்தி.

மாதா கோவில் தூண் பரிசளித்த கலீபா!

இந்தச் சமயத்தில் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. 1978ஆம் ஆண்டில் முதன் முறையாக இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமுக்குச் சென்றிருந்தேன். என்னை அழைத்துச் செல்ல வாட்டிகனைச் சேர்ந்த 'காலேஜியோ செயின்ட் பீட்ரோ'விலிருந்து திரு ஆன்டனி எனும் பாதிரியார் வந்திருந்தார். மிக இனிய சுபாவமுள்ளவர். நாங்கள் காரில் விமான தளத்திலிருந்து வந்து கொண்டிருந்தபோது வரும் வழியை ஒட்டியிருந்த பழங்கால மாதா கோயிலைக் காட்டி, அதையொட்டி, சிதிலமடைந்து கிடக்கும் மாபெரும் மண்டபத்தைக் காட்டி, "இதைக் கட்டியவர்கள் யார் தெரியுமா?” என்று கேட்டு, பதிலுக்கு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் சிரித்துக் கொண்டே வேடிக்கையாக "என் குடும்பத்திலிருந்து நிச்சயமாக யாரும் கட்டவில்லை. ஏனெனில், என் குடும்பத்திலிருந்து ரோம் மண்ணில் கால் வைக்கும் முதல் ஆள் நான்தான்” எனக் கூறிச் சிரித்தேன். ஆனால், அப்பாதிரியார் அடுத்து சொன்ன செய்தி எனக்கு வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துவதாயிருந்தது.

'உமர் அவர்களின் ஆட்சியின்போது இம் மாதா கோவில் கட்டப்பட்டு வந்தது. இதையறிந்த கலீஃபா உமர் அவர்கள் தன் நட்புணர்வையும் இஸ்லாத்தின் சமய நல்லிணக்க உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இம் மாதா கோயிலின் மண்டபத் தூண்கள் பன்னிரண்டையும் கட்டிக் கொடுத்ததாக ஒரு குறிப்பு வரலாற்றில் காணப்படுகிறது எனக் கூறி நன்றியுணர்வு பொங்க என் முகத்தைப் பார்த்தார். பிற சமயத்தவர் அன்பையும் நம்பிக்கையையும் பெற எந்த அளவுக்குச் சமய நல்லிணக்க உணர்வோடும் மனித நேயத்தோடும் முன்னோடிப் பணியை ஆற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார் உமர் (ரலி) போன்ற மாமனிதர்கள் என்பதை நினைக்கும்தோறும், நாமும் அவர்களின் வாழ்க்கை நெறி வழி ஒழுகி வாழ வேண்டும் என்ற வேட்கை நம்முள் பொங்கியெழவே செய்கிறது.

இதைச் சொல்லுகின்றபோது மற்றுமொரு வரலாற்றுச் சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.

உமர் (ரலி) காட்டிய உன்னதச் சமயப் பொறை

ஒரு முறை இரண்டாவது கலீஃபாவாக ஆட்சி செய்துவந்த மாமனிதர் உமர் (ரலி) அவர்கள் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்த இடம் ஒரு மாதா கோவில். அப்போது அவர்கள் நண்பகல் தொழுகையான 'லுஹர்' தொழுகையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. எனவே, தனக்கு மாதா கோவிலைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த பாதிரிமார்களிடம் தான் தொழுகை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகையால் விரைந்து சென்று தொழுகை நடத்த வேண்டும் எனக் கூறி விழைந்தார்.

இதையறிந்த பாதிரிகள், உமர் (ரலி) அவர்கள் விரும்பினால் மாதா கோயில் பகுதியிலேயே தங்கள் தொழுகையை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறி அவர் மறுமொழிக்காகப் பாதிரிமார்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

தேவாலயத்துள் தொழாமல் வெளியே சென்று தொழுகை நடத்த விரும்புவதாக உமர் (ரலி) கூறியதைக் கேட்ட தலைமைப் பாதிரியார், "அன்று மதீனாவில் அண்ணலாரைக் காண வந்த பாதிரிமார்களை, பிரார்த்தனை நேரம் நெருங்கியபோது அவர்களைப் பள்ளி வளாகத்திலேயே கிருஸ்தவ சமயச் சடங்கு முறைகளோடு பிரார்த்தனை செய்து கொள்ளப் பணித்தார். பெருமானார் அவர்கள். இரண்டு இறைவனில்லை, எங்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான். அவனை இம் மசூதி வளாகத்திலிருந்தும் நீங்கள் வணங்கலாம்” எனக் கூறி ஊக்குவித்த பெருமானார் வழிவந்த உமர் அவர்கள் இங்கு தொழத் தயங்குவது ஏனோ? என வினாவெழுப்பினர். உடனே பாதிரியாருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஒரு வேளை கலீஃபா உமர் அவர்கள் இதைவிடச் சிறந்த இடத்தைத் தேடுகிறாரோ என எண்ணிய மாத்திரத்தில் அருகில் இதை விட சிறந்ததொரு தேவாலயம் இருக்கிறது. அங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்டபடி உமர் (ரலி) அவர்கள் நன்றி கூறியபடி தேவாலயத்திற்கு முன்பிருந்த மைதானத்திற்குச் சென்று, தன் தொழுகையை முடித்துக் கொண்டு, மீண்டும் சர்ச்சுக்கே வந்தவுடன், தான் பாதிரிகளின் கோரிக்கையை ஏற்று ஏன் தேவாலயத்துள் தொழவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

"நான் இங்கு தொழுவது மிகவும் சுலபம். உங்களோடு எனக்குள்ள நட்புணர்வைக் காட்டுவதற்கு நான் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், நாளை வருகின்றவர்கள், உமர் அவர்கள் இந்த இடத்திலே தொழுதார்கள். இந்த இடத்தில் அவர்கள் நினைவாக நாங்கள் ஒரு பள்ளி வாசல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தால் உங்களுடைய நிலைமை என்னாவது? இக்கட்டான அந்நிலையை ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள மாட்டான். உங்கள் இடம் உங்களுடையதாகவே இருக்க வேண்டும். அதில் எந்த வித இடையூறும் வந்துவிடக் கூடாது. அதற்காகத்தான் நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கூறியும், பெருமானார் (சல்) அவர்கள் காட்டிய வழி முறையைச் சுட்டிக்காட்டிச் சொன்ன போதும்கூட, அவற்றையெல்லாம் மீறி, மைதானம் சென்று தொழுது விட்டு வந்ததற்குக் காரணம். நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பது தான் என் கவலை” எனக் கூறி சமாதானப்படுத்தினார் என்பது ஒரு வரலாற்றுச் சம்பவம். இவ்வாறு மனித நேய உணர்வோடு பிற சமயத்தவரை மதிக்க வேண்டும், அவர்கட்கும் அவர்தம் சமயத்திற்கும் அவர்தம் சொத்துக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்; அது ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை என்பதையும் இச்சம்பவங்கள் இன்றும் எடுத்து இயம்பிக் கொண்டுள்ளன.

உண்மைக்குப் புறம்பான பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை

இத்தகைய வரலாறுகளை அறியாத காரணத்தால் - நாமும் அவர்களை அறியச் செய்யாத காரணத்தினால் அயோத்தியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தான் பகுதியிலே அயோத்தி இருந்ததாக ஒரு ஆதாரச் செய்தி; தாய்லாந்தில் பேங்காக் நகருக்கருகில் ஒரு அயோத்தி இருந்ததாக மற்றொரு ஆதாரச் செய்தி. இந் நிலையில் பாப்ரி மசூதிக்குள் ஒரிஜினல் அயோத்தி ராமன் பிறந்த இடம் இருப்பதாக ஒரு மாய்மாலம். நாம் அந்தப் பிரச்சினைக்குள் செல்ல வேண்டியதில்லை. அது தேவையற்ற பிரச்சினை. ஏதோ ஒரு கட்டிடத்தை இடித்ததினால் முஸ்லிம்களின் உள்ளத்தை வேண்டுமானால் புண்படுத்தலாம். அதனால் வேறு பெரும் பயன் ஏதும் ஏற்பட்டு விடப் போவதில்லை. இறைவன் பாப்ரி மசூதிக்குள் மட்டும் இருப்பவன் அல்ல. வல்ல அல்லாஹ் எங்கும் இருப்பவன். முஸ்லிம்களின் உணர்வுகளை ஊனப்படுத்த வேண்டும் என்பதற்காக இச் செயல்களை மேற்கொள்வதை நினைத்துத்தான் வேதனைப்படுகிறோம்.

அண்ணலார் கூட்டிய முதல் சர்வ சமய மாநாடு

அன்று மதீனத்தில் வாழ முனைந்த அண்ணலார் (சல்) அவர்கள் அந்த நகரிலிருந்த அனைத்து மதத்தினையும் அழைத்து கூட்டம் நடத்தி வெவ்வேறு சமயச் சார்புள்ளவர்களாயினும் மதீனா நகர் குடிமக்கள் என்ற அளவில் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாய் இருந்து, நமக்கு நாமே பாதுகாப்பு அரணாக விளங்குவோம் எனக் கூறினார்கள். அனைவரும் அதை ஏற்று ஒன்றுபட்டார்கள். அதுவரை ஒற்றுமையிலா அந் நகர் மக்களைப் பந்தாடி வந்த வெளி எதிரிகள், இதன் பின் இல்லாமலே போனார்கள்.

அன்று மதீனா நகரில் வாழ்ந்த அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியாக நின்றார்கள். உலகில் நடைபெற்ற முதல் சர்வ சமய மாநாடாக அதனை இன்றும் வரலாற்றாசிரியர்கள் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துச் சமயத்தாரால்
தெரிவு செய்யப்பட்ட அண்ணலார்

தங்களை தலைமை தாங்கி வழிநடத்த எல்லா வகையிலும் தகுதி மிக்கவர் நாயகத் திருமேனி ஒருவரே என்பதை உணர்ந்த அனைத்துச் சமய மக்களும் மதீனாவின் தலைவராக அண்ணலாரைத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்தனர்.

மதீனா நகர மக்களின் அமைதியான சமூக வாழ்வுக்கும் சமுதாயப் பிளவோ பிணக்கோ ஏற்படாமல் தடுப்பதற்கும் நகரப் பாதுகாப்புக்குமான ஐம்பத்தி நான்கு ஷரத்துக்கள் கொண்ட சட்ட வடிவை உருவாக்கினார்கள். உலகிலேயே முறையான சட்ட வடிவு உருப்பெற்றது. இப்போது இதையே 'உலகின் முதல் முழுச் சட்டம்' என இன்றும் சட்ட உலகம் போற்றிப் புகழ்ந்து கொண்டுள்ளது.

அச் சட்டத்தின் சில ஷரத்துக்கள் இன்று நாம் அறிந்து பின்பற்றத் தக்கவைகள் மட்டுமல்ல, அவை என்றுமே நமக்கு வழிகாட்டியுதவும் வலுப் பெற்றவைகளுமாகும். அவற்றுள் ஒரு ஷரத்து,

"யாரேனும் ஒருவர் தன் மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிவிட்டால், அவரை யாரும் தடுக்கக் கூடாது. மதம் மாறியவரை அவர் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அவரை வற்புறுத்தியோ அல்லது ஏதேனும் தீங்கு செய்தோ மத மாற்றத்திற்கு தடை எதுவும் விதிக்கக் கூடாது” என்பதாகும்.

இச் சட்டவிதியின் மூலம் மனிதனின் அடிப்படை உரிமை முழுமையாக நிலை நாட்டப்படுவதோடு முழுமையாகப் பாதுகாக்கவும் படுகிறது. இதற்கான இனிய சூழலை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அன்றே ஏற்படுத்தியிருப்பது எண்ணி வியக்கத்தக்கதாயுள்ளது.

ஒரு சமய வணக்கத் தலத்தைக் காக்கும் பொறுப்பு
மற்ற சமயத்தவர்க்கு உண்டு

அதுமட்டுமல்ல, அந்தந்த மதத்தவரின் வணக்கத்தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்குண்டு என்றாலும், அதில் மற்ற மதத்தவர்களுக்கும் பங்கு உண்டு என்று மற்றொரு ஷரத்துக் கூறுகிறது. ஒரு பள்ளி வாசலை யாரேனும் இடிக்க வந்தால் அதைக் காக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அதற்குப் பக்கத்திலிருக்கும் யூதருக்கும் கிருஸ்தவருக்கும், இன்னும் எந்தெந்த மதத்தவர்கள் உண்டோ அவர்கட்கெல்லாம் மசூதியைக் காக்கும் பொறுப்பு உண்டு. அதே போல் ஒரு சர்ச்சை யூதர் இடிக்க வந்தால் அதைக் காக்கும் பொறுப்பு கிருஸ்தவருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் மற்றுமுள்ள பிற சமயத்தவருக்கும் உண்டு. அவ்வாறே யூத வணக்கத் தலத்தை யாரேனும் இடிக்க நேரிட்டால் யூதரோடு முஸ்லிம், கிருஸ்தவர், மற்றுமுள்ள மதத்தவர்கட்கும் உண்டு என்பது எவ்வளவு பெரிய சமுதாய ஒற்றுமைக்கும் ஒருங்கிணைவுக்கும் சமய நல்லிணகத்திற்கும் கட்டியம் கூறும் சட்ட முறைகளாக அமைந்துள்ளன என்பது எண்ணி இன்புறத்தக்கதாகும். உலக மக்களுக்கு என்றென்றும் நல்வழி காட்ட வல்ல அழகிய முன் மாதிரியாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வகுத்தளித்துள்ளதை இந்தச் சட்டத்தில் காண முடிகிறது.

ஆதாம் வழி வந்தோரே அனைவரும்

இஸ்லாத்தின் அடிப்படை உணர்வு மனித குலத்தை முழுமையாக சகோதர வாஞ்சையுடன் அணுகுவதாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை முதலில் நீ மனிதன். அதன் பிறகுதான் நீ எந்த மதம், மார்க்கம் என்பதெல்லாம் மனித குலத்துக்கு மதிப்பளிப்பது இஸ்லாம். எந்த நாட்டில் வேண்டுமானாலும் இரு; எந்த மொழியை வேண்டுமானாலும் பேசு; எந்த இனத்தைச் சேர்ந்தவனாகவும் இரு; எல்லோரும் ஆதாம் (அலை) வழி வந்த சகோதரர்கள் என்பதை மட்டும் மறந்து விடாதே. இதனை எண்பிக்கும் நிகழ்வு ஒன்று பெருமானார் (சல்) அவர்கள் வாழ்வில் நடைபெற்றது.

நாயகத் திருமேனி அவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இறந்துபோன யூதர் ஒருவரின் சடலத்தை சுமந்தபடி சிலர் வந்து கொண்டிருந்தனர். இக் காட்சியைக் கண்டவுடன் பெருமானார் (சல்) அவர்கள் எழுந்து அமைதியாக நின்றதோடு தன் தோழர்களையும் எழுந்து நிற்கச் சொன்னார். அவர்களும் நின்றனர். அச் சடலம் அவர்கள் பார்வையிலிருந்து மறையும்வரை நின்று விட்டு, பின் அமர்ந்தனர்.

பெருமானார் செயல் அவர்தம் தோழர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. காரணம், இறந்து போன யூதர் அண்ணலாருக்கு அளவிலா தொல்லையும் துயரமும் கொடுத்து வந்த துஷ்டர். வாழ்நாளெல்லாம் கெடு மதியோடு வாழ்ந்த ஒரு தீயவருக்கு எழுந்து நின்று இறுதி மரியாதை செய்ய வேண்டுமா? என நபித் தோழர்களில் ஒருவர் வினாத் தொடுத்ததற்கு இறந்தவர் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அவரும் ஆதாம் வழி வந்த நம் சகோதரரே. ஒரு சகோதரர் மற்றொரு சகோதரருக்குச் செய்ய வேண்டிய மரியாதையைத்தான் நான் செய்தேன். உங்களையும் செய்யச் சொன்னேன்” என்றார்.

இதுதான் மனித நேயம். இந்த மனித நேய உணர்வு இருக்கின்றபோது ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனிதத்துவத்தைக் காண்பானேயல்லாது, மனிதனுக்குள் இருக்கும் வெறும் சாஸ்திர சம்பிரதாய மதவுணர்வுகளைப் பார்க்க மாட்டான்; அவையெல்லாம் மனித நேய உணர்வுக்கு அப்புறம்தான். இதுதான் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நமக்குப்போதித்த, வாழ்ந்து வழி காட்டிச் சென்ற வாழ்வியல் முறை.

இஸ்லாமிய நெறிமுறை வழுவா வாழ்வே
இணையிலாப் பிரச்சாரமாகும்

இந்த உன்னதமான வாழ்க்கை முறையைப் பெருமானாரின் பெரு வாழ்வை அறிந்தவனாக ஒவ்வொரு முஸ்லிமும் இருப்பதோடு, மற்றவர்களையும் அறிந்துணரச் செய்ய வேண்டும். இதற்காக பிற மதத்தினருக்கிடையே சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து புரிய வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய நெறிமுறை வழுவாது வாழும் முறையைக் கண்ணுறும் ஒவ்வொரு சகோதரச் சமயத்தவரும் அவ்வாழ்க்கை முறையின் சிறப்பை - உயர்வை உணர வேண்டும். தாங்களும் அதைப் போன்ற வாழ்க்கைப் போக்கைப் பேண வேண்டும் என்ற வேட்கை கொள்வார்கள். இவ்வுணர்வே இஸ்லாத்தின்பால் அவர்களின் ஈர்ப்பையும் பின் அதுவே இணைப்பையும் பிணைப்பையும் ஏற்படுத்தும்.

எனவே, இஸ்லாமியப் பிரச்சாரம் என்பது பேசி, எழுதி புரியவைப்பதைவிட, நம் வாழ்வில் முழு வீச்சில் இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, மற்றவர்களின் கண் முன்னே முன் மாதிரியாக வாழ்வதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரம்

இஸ்லாமிய வாழ்வியல் நெறி முறைகளை பிசிறில்லாமல் கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கு மாறாக, இன்று இஸ்லாத்தில் இல்லாதது மட்டுமல்ல, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாறான, இன்னும் சொல்லப் போனால் அனாச்சாரமான தீய பழக்க வழக்கங்களை இன்று இஸ்லாத்தின் பெயரால் கடைப் பிடித்து, இஸ்லாமிய நெறிகளுக்குத் தீங்கிழைத்து வருகிறோம்.

அத்தகைய சமூகத் தீங்குகளில் இஸ்லாமிய சமுதாயம் கடைப்பிடித்து வரும் வரதட்சணை எனும் கைக்கூலியும் ஒன்றாகும். மணமகன் 'மஹர்' எனும் மண அன்பளிப்புத் தொகையை மணமகளுக்கு வழங்கிய பின்னரே மண வினை நிறைவேறும் என்ற இஸ்லாமிய முறைக்கு நேர் மாறாக மணமகள் வீட்டாரிடமிருந்து பணமாகவும் நகையாகவும் வாகனமாகவும் சீதனமாகவும் பெரும் பொருளைக் கட்டாயமாக வாங்கும் நிலை இருந்து வருகிறது. இஃது நிறுத்தப்பட வேண்டியது மட்டுமல்ல வேரும் வேறடித்தூறுமாகக் களையப்பட வேண்டிய சமூகத் தீங்காகும்.

அண்ணலார் இல்ல அழகிய முன் மாதிரி திருமணம்

மண்ணுலக மக்களுக்கு என்றென்றும் வாழும் சான்றாக, அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய நாயகத் திருமேனியின் இல்லத் திருமணம் எவ்வகையில் நடந்தது? இதை அழகியதொரு எழிலோவியமாக உமறுப் புலவர் சீறாப் புராணப் பெருங்காப்பியத்தில் சொல்லோவியமாக வரைந்து காட்டுகிறார்.

பெருமானாரின் அன்புத் திருமகள் பாத்திமா திருமண வயதடைந்தபோது, அன்பும் அழகும் இனிய பண்பு நலங்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அந்நங்கை நல்லாளை மணமுடிக்க பலரும் விரும்பினர். செல்வ வளமிக்கோரும் சமுதாயத்தில் உயர்நிலை பெற்றோரும் போட்டி போடவே செய்தனர். ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பணப் பொருத்தமோ அந்தஸ்துப் பொருத்தமோ பார்க்காமல் தம் அருமை மகள் பாத்திமாவின் அன்பு, அழகு,இனிய பண்பு, அறிவு, அடக்கம், எளிமை இவற்றிற்கேற்ற மணமகனைத் தேடினார். சுருங்கச் சொன்னால் மனப் பொருத்தம் பார்த்து மணம் முடிக்க விழைந்தார். தன் அருமை மகளுக்கு எல்லா வகையிலும் ஏற்ற மணமகனாக அருந்திறல் வீரர் அலி (ரலி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

வீரமும் விவேகமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற வறியரான அலி (ரலி) அவர்களிடம் மணமகளுக்கு மஹர் கொடுக்கப் பொருளில்லா வறிய நிலை. அலி (ரலி) தன் இரும்புக் கவச உடையையே மகராகத் தந்து மணமுடித்தார். உலகிலே மிகமிக எளிமையாக நடைபெற்ற திருமணம் அண்ணலாரின் அன்பு மகளார் பாத்திமா நாச்சியார் திருமணமாகும்.

திருமணம் முடிந்த மறுநாள் லுஹர் தொழுகைக்கென அண்ணல் நபி (சல்) அவர்களும் அவர்தம் மருகர் அலி (ரலி) அவர்களும் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் மணமகள் பாத்திமா நாச்சியார் தொழுகை முடித்து அமர்ந்திருந்தார்.

அச் சமயம் முதிய வறியவர் ஒருவர் பிச்சை கேட்டுக் குரல் எழுப்பினர். விரைந்து சென்ற பாத்திமா வறியவர்க்கு உணவளிக்க, அதனை உண்டு மகிழ்ந்த முதிய வறியவர் நன்றி கூறி நடக்கத் தொடங்கினார். உடலில் போதிய ஆடையில்லாததால் அவர் உடல் குளிரால் நடுங்கியது. இதைக் கண்டு வருந்திய பாத்திமாவை நோக்கி, குளிர் தாள முடியவில்லை, ஏதேனும் பழைய போர்வை இருந்தால் தரும்படி வேண்டினார்.

இதைக் கேட்ட பாத்திமா மகிழ்வோடு வீட்டிற்குள் சென்று புத்தம் புதிய சிறு போர்வையொன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். முதியவர் அதை வாங்கிப் போர்த்திக் கொண்டு அளவிலா மகிழ்வோடு சென்றார்.

பள்ளியிலிருந்து திரும்பிய அண்ணல் நபி (சல்) அவர்களும் மருகர் அலி (ரலி) அவர்களும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் இஸ்லாமிய மரபுப்படி மறுநாள் மணமகள் தன் பிறந்தகத்தைவிட்டு புகுந்தகம் செல்ல வேண்டும். இதற்காக பெண் வீட்டார் சீதனமாக பெருமானார் (சல்) அவர்கள் அளித்த ஒருசில பொருட்களை எடுத்துக் கொண்டு பாத்திமா நாச்சியார் புறப்படலானார்.

அப்போது தன் அன்பு மகளுக்குச் சிறப்புத் திருமண பரிசாக வாங்கிக் கொடுத்திருந்த அழகான சிறு மேலங்கியை அணிந்து செல்லுமாறு கூறினார். இதைக் கேட்ட பாத்திமா நாச்சியார் சற்றுமுன்புதான் குளிரால் வாடிய வறியவர் ஒருவர்க்கு அதைப் போர்த்திக் கொள்ளத் தந்ததாகக் கூறினார்.

இதைக் கேட்ட பெருமானார் உள்ளம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவராக, மேலும் தம் மகளாரை நோக்கி கேள்வி எழுப்பலானார்.

“முதியவரின் குளிரைப் போக்க போர்வை தானம் செய்ய வேண்டுமென்றால் வேறு எதையேனும் பழையவற்றைக் கொடுத்திருக்கக் கூடாதா? எந்த வசதியும் இல்லாத நான், உன் திருமணத்திற்குப் பெரும் பரிசு எதையும் வாங்கித் தர இயலவில்லை. என் வசதிக்குறைவிற்கேற்ப ஒரு குப்பாயமாகிய சிறு மேலங்கியை வாங்கித் தந்திருந்தேன். உன் கணவன் வீட்டிற்கு முதன் முதலாக மணப்பெண்ணாகப் புறப்பட்டுச் செல்லும் இத்தருணத்தில் அதை அணிந்து சென்றால் அதைப் பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?” என்ற முறையில் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தன் அன்புத் தந்தையாரின் மன உணர்வை அறிந்த பாத்திமா நாச்சியார், “நாயகம் அவர்களே! நீங்கள் தானே போதித்தீர்கள், ஒருவருக்குத் தானம் தரவேண்டும் என்றால் நம்மிடமுள்ள பொருட்களில் உயர்ந்ததும் சிறந்ததும் எதுவோ அதை அளிக்க வேண்டும் என்பதாக அவர் கேட்ட போது என்னிடம் மிக உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் நீங்கள் திருமணப் பரிசாக வாங்கித் தந்த குப்பாயப் போர்வைதான் இருந்தது. அதையே அந்த முதியவருக்குத் தானமாக தந்து மகிழ்ந்தேன். அது தவறா, தந்தையே?" எனக் கேட்டார்.

பாத்திமா நாச்சியாரின் பதில் பெருமானாரையே வியக்கவும் திகைக்கவும் வைப்பதாயிருந்தது. இதைக் கேட்ட மாத்திரத்தில் பெருமானார் கண்கள் பனித்து விட்டன.

“நான் போதித்தவைகளை என் மகளே பேணி நடக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இப்படியொரு கேள்வியைக் கேட்டேன். இப்போது, உன்னைப் பெற்றபோது அடைந்த மகிழச்சியைவிட பெருமகிழ்வடைகிறேன்” என்று பூரித்தார் என ஒரு அழகிய எழுத்தோவியமாகவே உமறுப் புலவர் தன் சீறாப் புராணத்தில் ஒரு காட்சியை,

"அழகியதெவையும் அல்லாஹ்வுக்காக
விழைவுடன் கொடுத்திட வேண்டும்
என்ற பழமறை வாக்கால் பகர்ந்ததாலரோ
மழை தவழ் கொடையினர், வழங்கினேன் என்றார்”

எனப் புனைந்துரைத்துள்ளார்.

தன் ஒரே மகள் திருமணத்திற்குத் திருமணப் பரிசாக ஒரு சிறு குப்பாயப் போர்வைதான் வாங்கித் தர இயன்றது என்றால், எவ்வளவு எளிமையாக ஆடம்பரமேதுமின்றி நடைபெற்ற மணவிழாவாக அது இருந்திருக்க முடியும் என்பதை ஒருகணம் எண்ணிப் பாருங்கள்.

ஒரு இஸ்லாமியனின் திருமணம் ஆடம்பரமேதும் இன்றி எளிமையாக, முறையாக நடைபெற வேண்டும் என்பதை நாம் உணர்ந்து, தெளிந்து, கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவர்களாக உள்ளோம் என்பதை உணர வேண்டும். இடைக்காலத்தில் கைக்கூலி எனும் வரதட்சணை போன்ற சமூகத் தீங்குகளை அறவே விட்டொழிக்க வேண்டும்.

பெண்ணுக்கு மணமகன் கட்டாயம் வழங்க வேண்டிய 'மஹர்' தொகை, மணமகனின் வசதியைப் பொறுத்து அமைவதாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தன் மகள் பாத்திமா நாச்சியாருக்கு ஏற்ற மணமகனாக அலி (ரலி) அவர்களைத் தேர்ந்தெடுத்தபோது, பெண்ணுக்கு மஹராகக் கொடுப்பதற்கு அலியாரிடம் செல்வமேதும் இருக்கவில்லை என்றாலும் தன்னிடமிருந்த இரும்புக் கவசத்தை மஹராகக் கொடுத்து, மணமுடித்தார் அலி (ரலி). அவரவர் சக்திக்கேற்ப எதை வேண்டுமானாலும் மஹராகத் தந்து மண முடிக்கலாம். ஆனால், கட்டாயமாக மஹர் தந்தே மண முடிக்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்தளித்துள்ள நியதி.

இன்று என்ன நடக்கிறது. நிக்காஹ்வின்போது, மஹரை நிக்காஹ் புத்தகத்தில் குறிப்பிடுவதோடு சரி. மணப்பெண்ணைத் தொடுமுன், கையில் மஹர் தந்து, சலாம் கூறி, அப்பெண்ணின் கரத்தைப் பற்ற வேண்டும் என்பதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, நிக்காஹ் புத்தகத்தில் குறிக்கிறோமே தவிர கொடுப்பதில்லை. வாழ்நாள் கடன். சிலர், இறப்பின் எல்லையில் இருக்கும் போது, மஹருக்காக மனம் பொருந்திக் கொள்ளுமாரும் மனைவியிடம் கூறி, கொடுக்காமலேயே இறைவனிடம் சென்று விடுவர்.

மஹரே கொடுமையாகியுள்ள விந்தை

இன்னும் எகிப்து போன்ற நாடுகளில் 'மஹர்' தொகை வரதட்சிணையைவிட கொடுமையானதாக விசுவரூபமெடுத்து, மணமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவத்தை நானே எகிப்து தலைநகரான கெய்ரோவில் சந்திக்க நேர்ந்தது.

இஸ்லாத்தில் இல்லாத வரதட்சிணை நம்மை வாட்டி வருவது போல இஸ்லாமிய நாடுகளில் அனுமதிக்கப்பட்ட மஹர் விசுவரூபமெடுத்து ஆட்டிப் படைத்து வருகிறது. இங்கே பெண் பாதிக்கப்படுகிறாள். ஆங்கே ஆண் பாதிக்கப்படுகிறான். இருவேறு நிலைகளில் இரு பெரும் சமூகத் தீங்குகளாக உருமாற நாமே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைகிறோம்.

இதிலிருந்து முற்றாக விடுபட இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடு எதுவோ, திருமறை மூலமும் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளின்படியும் வாழ நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரம் எதையும் இடம் பெற அனுமதிக்கக் கூடாது. இருக்கும் நியதிகளை கூடுதல் குறைச்சல் இல்லாதவாறு உள்ளது உள்ளபடி பின்பற்றியொழுக முற்பட வேண்டும். அதில் நாம் மனத்திண்மை மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

பற்று வேறு. வெறி வேறு

இதற்கு அடிப்படைப் பண்பாக அமைவது இஸ்லாத்தின்மீது நம்பிக்கையும் பற்றும் செயல்பாடுகளும் ஆகும். மார்க்கப் பற்றைச் சிலர் இனப்பற்றாகக் கொண்டு தடுமாறுகிறார்கள். மார்க்கப்பற்று என்பது இஸ்லாமிய நெறிகளின்பால் கொள்ளும் பற்றாகும். இனப்பற்று என்பது வெறும் முஸ்லிம் என்பதற்காகக் கொள்ளும் பற்றாகும். இன்னும் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் பலரும் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் முஸ்லிமாக வாழ்பவர்களே ஆவர். அவர்கட்கு மார்க்க அறிவோ பற்றோ அதிகம் இருப்பதில்லை. இத்தகைய இனப்பற்று சில சமயம் இன வெறியாகவும் உருவெடுத்து விடுகிறது. பற்றைப் பாராட்டும் இஸ்லாம் வெறியை அறவே வெறுக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் ஒரு முஸ்லிம் கொள்ளும் வெறித்தனமான போக்கு நபி வழியும் இல்லை; இஸ்லாமிய நெறி முறையும் இல்லை.

இனப் பற்று என்ற பெயரில் வெறித்தனமான போக்கை மேற்கொள்ளும் நிலை அன்றைக்கும் ஆங்காங்கே தலை தூக்கியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு நபித் தோழராகிய சஹாபி “நாயகத் திருமேனியை நோக்கி, நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?" என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடைக் கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் “ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக் கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது”.

இப்பதிலில் திருப்தியடையாத சஹாபி மேலும் தெளிவு பெறும் பொருட்டு, தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.

"பற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். இனத்தின்மீது தீவிரமாகப் பற்றுக் கொண்டால் அதனை மற்றவர்கள் வெறியாகக் கருதுகிறார்கள். அந்தப் பற்றுக்கும் வெறிக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார். 

இவ்வினாவுக்கு விடைகூற முனைந்த பெருமானார் “எந்த ஒரு குறிப்பிட்ட இன, மொழிகளைப் பற்றிக் கூறாமல், ஒரு இனத்தைச் சார்ந்தவன் மற்றொரு இனத்தைச் சார்ந்தவன் மீதோ அல்லது இனத்தின் மீதோ தீவிரமான, கெடுதலான, தீங்கு தரக்கூடிய, அந்த இனத்திற்கு மாபெரும் பாதகத்தை அளிக்கக்கூடிய ஒரு தீய காரியத்தை செய்யத் துணிந்து விட்டான் என்றால், நம் சமுதாயத்தைச் சார்ந்தவன் தானே, இதைத் தொடங்கியிருக்கிறான், அந்த இனத்தின் அடிப்படையில் அவனுக்குத் துணையிருப்பதுதானே முக்கியக் கடமை; நீ என்ன தீங்கு செய்தாலும் உனக்கு நான் துணையாக இருக்கிறேன் செய்! என்று அவனுக்குத் துணை போனால், அது அந்த இனத்தைச் சார்ந்தவன் மீது நீ கொண்டிருக்கும் பற்றல்ல; அது அந்த இனத்தின்மீது கொண்டிருக்கும் வெறி. அந்த வெறியோடு நீ செயல்பட்டால் நிச்சயமாக நீ அழிவாய். உன்னை நம்பி உன் துணையை எதிர்பார்த்து, அந்தச் செயலில் முனைப்பாக ஈடுபடக் கூடியவனும் அழிவான்” என்றார். இதனை, இவ்வாறு கூறும் அறிவுரைகளைச் செம்மையாகப் புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்ற ஐயம் அண்ணலாருக்குத் தலை தூக்கவே மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள உடனே ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலானார். “கிணற்றுக்குள் விழுந்துவிட்ட ஒரு ஒட்டகத்தை, ஒரு தனி மனிதன், வாலைப்பிடித்து நான் மேட்டுக்கு இழுத்து விடுவேன், கிணற்றிலிருந்து தூக்கி விடுவேன், அதனைக் காப்பாற்றி விடுவேன் என்று முனைந்து நின்றால், ஒட்டகத்தை அவனால் தூக்க முடியாதது மட்டுமல்ல; வாலைப் பிடித்த இவனும் அந்தக் கிணற்றுக்குள் விழுந்து விடுவான். விழுந்த அந்த ஒட்டகத்தோடு இவனும் அழிவான்” என்று விளக்கினார்.

ஆகவே, இனப்பற்று இருக்கலாமே தவிர அது இனவெறியாக மாறாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படை குணமாக - அடித்தளப் பண்பாக ஒவ்வொரு முஸ்லிமும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற அருமையான கருத்தை மிகச் சிறந்த முறையில் பெருமானார் அவர்கள் நமக்கு நெறியாகக் காட்டியிருக்கிறார்கள். அறிவுரையாகச் சொல்லியிருக்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் போக்கைத் திறம்பட உணர்த்தியிருக்கிறார்கள். இந்த நல்ல உணர்வுகளையும் சிந்தனைகளையும் பெருமானார் பிறந்த நாள் விழா நடைபெறும் இந்த நல்ல நாளிலே நம் நெஞ்சத்தில் தேக்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, இஸ்லாமிய நெறிகளுக்குப் புறம்பான எந்த உணர்வுகள் இருந்தாலும், எத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட்டொழிக்க வேண்டும். இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் காலங்காலமாக இருந்து வருவதுதானே என காலத்தின்மீது பழியைப் போட்டு, அத் தவறுகளையே நாமும் தொடர வேண்டும் என்ற நொண்டிச் சமாதானங்களுக்கு அறவே இடம் தரக்கூடாது. இது இஸ்லாமிய நெறி, இது இஸ்லாத்துக்குப் புறம்பான செயல்: தவறான செயல் முறைகள் எதுவாக இருப்பினும் ‘சமுதாயப் பழக்கம்' என்ற பெயரால் யார் மேற்கொண்டாலும் நாங்கள் அதனை ஏற்க மாட்டோம் என்று ஒவ்வொருவரும் உள்ளத்தளவில் உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும். இன்று இஸ்லாமிய சமுதாயத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கக் கூடிய தீய உணர்வுகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மறைய வேண்டும். இஸ்லாமிய நெறிக்குப் புறம்பான போக்குகள் அனைத்தும் மாறுவதற்கும் அழிவதற்கும் மறைவதற்கும், தூசி தட்டி தவறுகளைக் களைவதற்கு ஏற்புடையதாக நம் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கான மன வலிமையை அறிவாற்றலை - செயல் திறனை எல்லாம் வல்ல அல்லாஹ், பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் நினைத்துப் பார்க்கின்ற இந்த நேரத்தில் நமக்கு அருள் மழையாகப் பொழிய பேரருள் செய்வானாக.

(6.7.98 அன்று அபுதாபி ஐமான் சங்க மீலாது விழா உரைச் சுருக்கம்)