ஈட்டி முனை/005
5. இதய ஒலி
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம் !
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்!
(பாரதிதாசன்)
இலக்கியம் எல்லோருக்கும் பொது என்று கூறுகிற சிலரை பழமை விரும்பிகள் பரிகசிக்கிறார்கள்.
மக்களின் ஏழ்மையை, சிறுமைகளை துயரை மனித சமுதாயத்திலே பின்னிக் கிடக்கிற சூழ்ச்சிகளை, அனைத்தையுமே இலக்கியத்திலே உணர்ச்சிகரமாகப் பதித்து படிப்போரின் அகக் கண்களை விழிப்புறச் செய்து, அவர்களைச் சிந்திக்கும்படி தூண்ட வேணும் என்று சொல்கிறவர்களை பித்தர்கள் எனச் சிரிக்கிறார்கள் பேதைகள்!
வாழ்வின் நிர்வாணத் தன்மையை அம்பலமாக்கி அதன் கோரங்களைக்கண்டு கண்கூசும்படி, அவற்றை வெறுத்து சீருறுத்தும் உணர்வு பெறும்படி மக்களைத் தூண்ட வேண்டும் இலக்கியம் என்று சொல்லும் போது இலக்கிய சனாதனிகள் சீறுகிறார்கள்.
இலக்கிய மறுமலர்ச்சி தேவை என்று சொல்லுபவர்களைக் கண்டு கரித்துக்கொட்டுகிறார்கள் பலர். மறுமலர்ச்சி என்று சொல்லிக்கொண்டு மடமையைப் போற்றுகிறார்கள் கனவுக்குத் தாளம் போட்டு புராணத்தைக் கட்டியழ விரும்புகிற பிற்போக்குக் கும்பல்கள். சொல்லவேண்டிய உண்மைகளை ஆணித்தரமாகச் சொல்லுங்கள் உணர்ச்சியுடன் அழுத்தமாக எடுத்து எழுதுங்கள். சொல்லுக்கு உயிர் கொடுங்கள். இவை தான் முக்கியம், இவற்றுக்குக் கட்டுப்பாடுகளும் இலக்கண விதிகளும் பண்டிதச் சட்டங்களும் தடையாக இருந்தால், அவற்றைத் தகர்த்தெறியுங்கள், மனிதருக்காகத்தான் சட்டங்களும் திட்டங்களுமே தவிர, சட்டங்களுக்காக மனிதரல்ல. அவசியம் ஏற்படும் போது சட்டங்களைத் தகருங்கள் — இப்படிச் சொல்லும் போது, பெருங் கல்விப் பண்டிதர்கள் குமுறுகிறார்கள். கோபிக்கிறார்கள்!
ஆனால் காலம் இவர்களுக்காகக் காத்திருப்பதில்லை. காலத்துடன் போட்டியிட்டு வளரும் அறிவும், அறிவின் வலிமையான சிந்தனையும், சிந்தனையின் சிறப்பான இலக்கியமும் இவர்கள் அச்சுறுத்தல்களினால் பம்மிவிடப் போவதில்லை!
எழுதுவோம் எனத் துணிந்து விட்டவர்கள். இலக்கியமே உயிர் மூச்சு என்று மதித்துவிட்டவர்கள் 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்' என்பதை இதயஒலியாகப் பெற்றுவிட்டவர்கள் பிறரது கோபத்துக்கோ, பொறாமைக்கோ , புகழ்ச்சிக்கோ, வசைமாரிகளுக்கோ, நட்புக்கோ பகைமைக்கோ அடிபணிந்து விடப்போவதில்லே.
அவர்கள் உள்ளம் ஒலிக்கிறது: 'என் தாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ? உமை ஒன்று வேண்டுகின்றேன். மாசில்லாத உயர்தமிழை உயிர் என்று போற்றுமின்கள்!'
தமிழ் வளர்ப்போம் என்று சொல்லி தறுதலைத்தனம் செய்யும் கயவர்களைக் காயவே முந்துகிறது இலக்கியவாதிகளின் பேனா. தமிழை வளர்ப்பது, யார்? தமிழ் தானாக வளரும். மக்களால் வழங்கு தமிழைத் தனியொரு கும்பல் சொந்தமாக்கி வளர்க்க வேண்டிய அவசியமில்லை. 'மலையிலே பிறந்து தென்னன் மடியிலே தவழ்ந்து, நீரிலே நீந்தி நெருப்பிலே குளித்து' ஜாலங்கள் செய்த ஏட்டுக்கலையை வளர்ப்போம் என்று கூறி நாட்டைக் கெடுப்பவர்கள் மொழி வளர்க்க வகை செய்வோரல்லர், என்று மீண்டும் கூறுகிறேன். மொழியும் இலக்கியமும் கலையும் மக்களின் உரிமை. மக்களுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக என்று மீண்டும் குறிப்பிடுகிறேன்.
இவ்விதம் கூறவரும் என்னை பழமை விரும்பிகள் காய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். வசைபாட வந்தவன் என்று பேசி மகிழ்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு எதுவும் எழுதத்தெரியாத காரணத்தால் சிசுபாலதாசனாக மாறி விட்டேன் எனப் பித்தர்கள் புலம்புவார்கள்! எனது எழுத்திலே கலையில்லை, இலக்கணமில்லை என்று காசுக்கும் கனவுக்கும் எழுதி கலைவளர்ப்பதாகப் பேசுவோர் கேலி பேசலாம். ஆம். கலை இல்லை தான், அவர்கள் கனவு நோக்குப்படி. ஆமாம். கவிதை இல்லை தான் அவர்களது அடிமை உணர்ச்சி நோக்கிலே. அழகு இல்லை தான், காதலும் அந்தப்புர லீலா விநோதங்களும் எனது எழுத்திலே இல்லவே இல்லை தான், குறுகிய மனோபாவம் பெற்று விட்ட இலக்கிய சனாதனிகளின் விழிகண் குருட்டுப் பார்வைப்படி!
ஆனால் எனக்கு கவலையில்லை. என் எழுத்திலே கருத்து இருக்கிறது, சிந்தனை இருக்கிறது. உண்மை இருக்கிறது. உயிர் இருக்கிறது. புதுமை இருக்கிறது. இவை இல்லை என்று கூறுவோர் முன் வரட்டும். என் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் துணியாவிட்டாலும் எழுத்துக்கு உயிர் இல்லை என்று கூறத்தயங்குகிற — சொல்லின் வலிவைக் கண்டு வியக்கிற உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசும் உத்தமர்கள்' என்ன சொன்னால் எனக்கு என்ன எனது எழுத்துகள் இலக்கியமே அல்ல என்று கூறிவிட்டால் தான் எனக்கு என்ன கஷ்டம் பழங்காலச் சங்கப் பலகையின் வாரிசுகளோ இவர்கள் ஆனால் சங்கப் பலகைக்கு இருந்ததாகச் சொல்லப்படும் நேர்மை இவர்களிடம் இல்லை! பளாபளா!
முடியோடு முடி புனைந்து தலையை வெட்டிய ஒட்டக்கூத்தன், எட்டியமட்டும் குறும்பையுடன் காதருத்த வில்லி, குட்டிக்குட்டிப் பெருமை பெற்ற பாண்டியன், தன் தலையிலே குத்திப் பரிதபித்த சீத்தலைச் சாத்தன் ஆகியோர் அடிச்சுவட்டைப் பின்பற்ற விரும்புகிற 'கீரர்களோ' இவர்கள்! கீரனின் நெஞ்சுத் துணிவும் உண்மையைக் கூறும் ஆற்றலும் இவர்களிடம் இல்லையே!
போகட்டும், போலிப் பெருமை பேசி அகமகிழ்பவர்களின் திருப்தியை நானும் எனது நண்பர்களும் கெடுக்க விரும்பவில்லை. ஆனால் 'எதேச்சாதிகாரி'களின் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. எதிலும் சரி இவர்களைப் போன்றவர்களின் ஆதிக்க வெறி, சுரண்டல், உயர்ந்தவர் எனும் சித்தாந்தம் முதலியவற்றை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சாவுமணி அடிக்கப்பட்டு வருகிறது. சமாதிக்குழி தோண்டியாகிறது என்பதற்கு முன்னறிவிப்பு போல!' என்று தான் எச்சரிக்க விரும்புகிறோம் - எழுத்தாளச் சகோரதர்கள் என்ற முறையிலே!
'மனம் மாறுங்கள்! அல்லது மாண்டு போங்கள்!' என்று தான் விழிப்புற்ற சமுதாயம் கூறத் துடிக்கிறது.
புதுயுக இலக்கியத்தின் வெள்ளி முளைப்பு
சிந்தனைக் கட்டுரைகள், சுவையான
கதைகள், இனிய கவிதைகள்
புதிய கருத்துகள்! புதிய போக்கு!
நிறைந்த 'மாதமிருமுறை'
கிராம
ஊழியன்
ஆசிரியர் வல்லிக்கண்ணன்
அறிவு வளர்ச்சியும் சமூக முன்னேற்றம்
புதுமையும் இதன் உயிர்மூச்சு
தனிப் பிரதி விலை அணா 4-
வருட சந்தா ரூ. 6. அரை வருட சந்தா ரூ. 3-4-0
கிராம ஊழியன்
துறையூர்
திருச்சி ஜில்லா.