ஈட்டி முனை/006
6. எழுதுங்கள் !
கலையே வளர்! தொழில் மேவிடு!
கவிதைபுனை தமிழா!
நீதி நூல் விளை !உயிர் நூல் உரை !
நிசநூல் மிக வரைவாய்!
(பாரதிதாசன்)
இலக்கியத்திலே ஜனநாயகமா என அங்கலாய்க்கிறார்கள், தாம் தான் எழுதப் பிறந்தவர்கள் என எண்ணுகிற ஒரு சிலர். எல்லோரும் எதைப்பற்றியும் எழுதலாம்; எழுத முடியும்; எழுதும் பக்குவமும் பண்பும் பெறலாம், எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு உழைத்தால் என நான் சொல்கிறேன்.
எழுத முடியாது எல்லோரும், இலக்கிய ஜனநாயகம் வெற்றி பெறாது, இலக்கிய சர்வ வியாபகம் என்பது சரியல்ல என்று கூச்சல் போடுகிறவர்களை வீணர்கள் என எண்ணுங்கள்.
எழுத வேண்டும் என்ற ஆர்வம் வெறியாகப் பற்ற, எழுத முடியும் என்ற நம்பிக்கை அழுத்தமாகப் பதிய, எழுதி எழுதிப் பண்பு பெற்றுவிடுகிற யாரும் எழுத்தாளனாகி விட முடியும். படித்து, சிந்தித்து, அனுபவத்தால் உணர்ந்து, தான் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தெளிவாக எழுதுகிற தன்மையை யாரும் பெறமுடியும்.
ஒருசிலர் தான் சிறுகதைகளும் காவியமும் பிறவும் சிருஷ்டிக்க முடியும் என்று சொல்கிறவர்கள் சொல்லிக்கொண்டே கிடக்கட்டும், தமிழன்பர்களே, நீங்கள் எழுதுங்கள். சிந்தித்து கலையை இலக்கியத்தை வளப்படுத்த முன்வாருங்கள்.
பழமைக்கு, இருள் எண்ணங்களுக்கு, மடக் கருத்துகளுக்கு, மதக் கற்பனைகளுக்கு, இலக்கியப் புல்லுருவித்தனத்துக்கு சீட்டுக்கிழியுங்கள்.
சிறுமை காணும் போது, சிறுமைகளை வஞ்சகத்தை, பொறாமையை — மனிதப்பண்பை மாய்க்க வல்ல அனைத்தையும் — வேரறுக்க வல்ல ஈட்டி முனைகளாக்குக எழுதுகின்ற பேனாக்களை.
நிலவையும் காட்சியையும் நீராமின்னாளையும் பற்றி மலைமலையாகக் கலைநூல்கள் எழுதிக் குவித்து விட்டார்கள், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், கண்களைக் கண்கள் கவ்வ வெடித்தது காதல் என்று கூறி புராணம் பாடும் ஏடுகள் எவ்வளவோ எழுதிக்கிழித்துவிட்டார்கள். போதும் அவை. தம்பி, உலகைக் கவனி.
உலக இலக்கியம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை எண்ணிப் பார், நமதுஅருமைத் தமிழ் மொழி பழங்குட்டையாய் தேக்கமுற்றுக் கிடப்பதைத் தான் விரும்புகிறாயா?
புதுயுகத்தின் பிரதிநிதியாகிய நீ அப்படி அவாவுற மாட்டாய். அது எனக்குத் தெரியும்.
எதைப் பற்றி எழுதுவது என்று மருளாதே. ஏழைகளோடு ஏழைகளாய், உழைப்போரோடு உழைப்போராய் பழகும் நீ அவர்கள் துயரை, அவர்கள் உரிமை மூச்சை, அவர்கள் எண்ணங்களை, அவர்கள் வாழ்க்கையை எழுத்திலே சித்திரிக்க முடியும்.சமுதாயத்திலே பெரும்பாலோர் அவதியுறுவதையும் ஒருசிலர் உண்டு கொழுத்து மாடி வீட்டிலே சுகபோகபாக்கியங்களுடன் மெத்தையில் சோம்பேறிகளாய் புரளுவதையும் நீ காண்கிறாய். முன்னவர் சோக வாழ்வைப் பற்றியும், பின்னவரின் டாம்பீகத்தை, சுரண்டலைப் பற்றியும் எழுது.
போலிக் கருத்து பொசுக்கும் சொல் அனல் எரியும் கருவியாக்கு உன் பேனாவை. சிரித்துச் சிரித்து சமுதாய ஊழல்களை, மனிதரின் சிறுமைகளைச் சுட்டெரிக்கவல்ல குத்துகிற கையாண்டிச் சொற்களைத் தொடுக்கும் பானமாக்கு உனது பேனாவை.
உணர்ச்சி நிறைந்த, அழகுள்ள புதுமைக் கருத்துகள் மின்னுகிற கவிதைகள் எழுது. கவிஞனின் எண்ணங்களை, உனது அனுபவங்களை, உன் இதயத் துடிப்புகளை எழுது,
கதைகளும் நாடகங்களும் நாவல்களும் எழுதுவது மட்டும் போதாது,
உளப்பரிசோதனை நூல்கள் வேண்டும். உலக வளர்ச்சி சரிதை வேண்டும். சூன்யத்திலே அண்டங்கள் பிறந்த கதை, அக்கினிப் பிழம்பு கெட்டித்து உலகமான கதை, உயிர் பிறந்த கதை, சிருஷ்டி சக்தி ராக்ஷஸ உயிர்களில் ஆரம்பித்து உயிர்களை வைத்துப் பரிசோதனை செய்து பல இனங்களை வகுத்து மனிதரை உண்டாக்கிய கதை. —எழுதப்பட வேண்டும். இவற்றால் அடிபட்டுப் போகும் கடவுள் தத்துவத்தால் வந்த வினை, மதங்களின் பெயரால் விளையும் அநாகரீகச் செயல்கள், மதத்தின் பெயரால் மனிதரை மடையர்களாக்குவோரின் வண்டவாளங்கள் இவற்றைப் பற்றி எழுது. ஏராளமாக எழுது.வானமண்டலங்களைப்பற்றி, மிருகங்களைப்பற்றி, தாவர இனங்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, மனோதத்துவம் பற்றி, விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளை எழுது. இவற்றை ஆராய்ந்தவர்கள் வரலாறுகளை எழுது.
வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார், மனிதர் எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்க்கைப் பாதையின் மேடுகள் என்னென்ன — அவற்றின் காரணம் என்ன என்பனவற்றை மனோதத்துவ ரீதியாக ஆராய்ந்து எழுது.
வாழ்க்கையை, மனோதத்துவத்தைப் பாதித்து அதன் மூலம் சமூகத்தையும் உயிர்க்குலத்தையும் பாதிக்கிற செக்ஸ் விஷயங்களைப் பற்றி விஞ்ஞான ரீதியாகச் செய்யப் பெறுகிற ஆராய்ச்சிகளை எழுது.
ஆராய்ந்து, கண்டு கேட்டு மனோதத்துவ ரீதியாக எழுது.
கட்டிலடங்காத கவிதைகள் எழுது. தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்பும்படியாக உணர்ச்சி கொடுக்கும் பாடல்கள் எழுது.
எழுதவா விஷயமில்லை !
எழுத வேண்டிய விஷயங்களை — எப்படி எப்படி எழுதுவது என்று தெரிந்துகொண்டு எழுதப் புகுந்து உண்மையான இலக்கியத்தை வரையமுயலும் போது, எழுத விஷயங்களுக்கு பஞ்சமில்லை. எழுதத் தான் நேரமில்லை; ஓய்வு போதாது என்று உணர்வாய்.
சோர்வுறாதே. உள்ளத்தில் உறுதிகொள். உன் சிந்தனைகளில் மின்னலின் சக்தி மிளிரட்டும். உனது இதயத்தில் மின்னலின் வஜ்ரசக்தி மின்னட்டும். எழுது. உண்மையான இலக்கியங்களை எழுது. இலக்கியத்தின் பல துறைகளையும் கையாண்டு உனது எண்ணங்களை எங்கும் பரப்பு.
'வருங்காலம் நம்முடையது' என்று சொல்லித் தூங்கி வழிய வேண்டாம். இழந்தமிழ்த் தோழர்களே! வருங்காலமும் நம்முடையது தான். இந்த நிகழ்காலமும் நம்முடையது தான். நமக்கு உரிய ஸ்தானத்தை நாம் தான் கைப்பற்றியாக வேண்டும். எழுதுங்கள் சக்தி பெற்று. உண்மைகளைச் சொல்லத் தயங்கவேண்டாம். பேனா முனை ஈட்டி முனையாகவும் மாறமுடியும் என்று குத்திக் காட்டத் தயங்க வேண்டாம், சமயம் வரும் போது.
நாம் தலைநிமிர்ந்து முன்னேற முடியும். ஏன்? தமிழ் நம் தாய்மொழி, தமிழ் நம் உயிர். தமிழ் நம் மூச்சு. தமிழ் நம் வாழ்வு. நாம் தமிழர்கள், நாம் வாழ்க! நாம் வெல்க! தமிழ் வாழ்வதற்காக! தமிழினம் வெல்வதற்காக! *
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்ததேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் ! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் ! – இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்றதீ !
(பாரதிதாசன்)
ஜாலியான கதை !
குட்டிச் சாத்தான் கொஞ்சுகிறது. சிங்காரியை !
தளுக்குக்காரி பெரியமனுஷாளே ஏய்க்கும் விதம்
அப்பாவியை ஆட்டிவைக்கும் அலங்காரி
சாப்பாட்டுராமன் சண்டிப் பெண்கள்
எல்லோரும் உருளுகின்ற சுவையான
ரஷ்யக் கதை
'அன்று இரவில்’
தமிழாக்கம்: அசோகன்
அருமையான கதை அழகான பதிப்பு
விலை ரூபாய் ஒன்று
விவரங்களுக்கு :
எம்.சூரி
"சினிமா உலகம்'
ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு
மெளன்ட் ரோடு, சென்னை.
சம்பிரதாய மட்டைகள் ஊறும்
குட்டையே மனித சமுதாயம்
மனிதர்களில் பெரும்பாலோர்
புன்மைத் தேரைகள், பொட்டுப்பூச்சிகள் !
இவ்விதம் பழிக்கிறார்கள் பலர்.
இந்நிலை நீடிப்பதன் காரணம் என்ன ?
மதம், பல கடவுள் இழிந்த இலக்கியம் மூட நம்பிக்கை
இப்படிப் பல வளர்வதுதான்
இவற்றை மண்ணாக்கவேண்டும்
சமாதிகட்டவேண்டும்
ஏட்டைப் புரட்டி, சீட்டைக் கிழித்து
புதுக் கணக்கு தொடங்கவேண்டும்!
ஏன்? எப்படி ? — அதற்காகத் தான்
தில்லை வில்லாளன் எழுதியிருக்கிறார்
சாவோலை
விலை அணா எட்டுதான்
ஏஜன்டுகளுக்கு 25% கமிஷன் உண்டு
தபால் செலவு தனி
—: விவரங்களுக்கு :—
எரிமலைப் பதிப்பகம்
துறையூர், திருச்சி ஜில்லா