ஈஸ்வர.../005
லட்சுமி கண்ணை மூடி உறங்கி நாலு நாளாயிற்று. ஒவ்வொரு கணத்திலும் நெஞ்சுக்குள் ஐஸ்கட்டியை சொருகிய மாதிரி சிலீரோட்டம். அடிவயிற்றுக்குள் பகீர், பகீரென்கிற சூன்யம்.
‘அண்ணன் வருவானே... வந்து நிப்பானே... இந்த மனுசர் என்ன கூப்பாடு போடுவாரோ... எம்புட்டு ஆட்டம் ஆடுவாரோ... ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதிப்பாரோ... செய்த கேவலத்துக்கெல்லாம் பழிவாங்குகிற மாதிரி ரணகாளியாக கூத்தாடுவாரோ... ஊரே கூடி நின்னு கூத்து பாக்குமே... கைகொட்டிச் சிரிக்குமே... கேவலமாப் போகுமே.
நா என்ன செய்ய?’
லட்சுமிக்குள் ஒவ்வொரு நிமிசமும் நடுக்கம். மனசுக்குள் பதற்றம். ‘என்ன கூத்து நடக்குமோ... என்ன கேவலம் வந்து விடியுமோ... ஊரே கூடி வேடிக்கை பாக்குற வீடா... நம்ம வீடு மாறிருமோ...’
ஒவ்வொரு சத்தத்திலும் நடுங்கினாள். ‘அண்ணன் வந்துட்டானோ’ ஒவ்வொரு சைக்கிள் வருகிற சத்தத்திலும் பயந்து செத்தாள். டவுன் பஸ் வந்து திரும்பினால்... ஒரு கால் மணி நேரத்திற்கு மனசு கிடந்து ‘திக்திக்’கென்று அடித்துக்கொள்ளும். பதறிப் பதைக்கும்.
லட்சுமி ஒவ்வொரு நிமிசமும் செத்துச் செத்துப் பிழைத்தாள். அத்தனைக்கும் மத்தியில் உள்மனசுக்குள் ஓர் ஆர்வக் குறுகுறுப்பு. மர்மத் திகைப்பு.
‘இம்புட்டு அக்குருமம் செய்ஞ்சுட்டு... ‘ஓந்தயவே எனக்குத் தேவையில்லே’ன்னு திமிர் வாதம் பேசிட்டு... கால்லே வந்து வுழற மாதிரி காயிதம் எழுதியிருக்கானே அண்ணன், இப்ப என்னத்துக்கு வர்றான்? தானா குழைஞ்சு நெளிஞ்சு... குளுர்ந்த வார்த்தை பேசி எதுக்காக நெருங்கி வாரான்?’ அவளுக்குள் பிடிபட மறுக்கிற மர்மம். காரணம் புரியாத திகைப்பிருட்டு.
அன்றைக்கு-
மூன்று மணி பஸ் வருகிற சமயம். வீட்டுக்கு அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தாள் லட்சுமி. காட்டில் வேலை. பருத்தி எடுப்பு. அன்றைக்கு அடித்த வெயில் முழுவதும் அவள் தலையில்தான். திரேகமே உலர்ந்து போய் - காய்ந்து போய் காய்ச்சல் கண்டது போல் கணகணத்தது. உடம்பெல்லாம் உலர்ந்த வியர்வையின் உப்பு வெள்ளைக்கோடுகள்.
ஆடு குட்டிகளுக்கு இரையை கட்டிவிட்டு, கழிவுத் தண்ணீரை தூக்கி வைத்தாள். அதுகள் குடிக்கட்டுமென்று. அப்புறம்தான் இவள் வீட்டுக்குள் வந்தாள். செம்புத் தண்ணீரை தாகத் தகிப்போடு ‘மடக், மடக்’கென்று ஆவல் பறப்போடு குடித்தாள். நாடி, நெஞ்சு முழுவதும் தண்ணீர் வழிந்தது.
வீட்டு வேலைகள் காத்துக் கிடந்தன. குப்பையாய் கிடக்கும் வீடு முழுவதையும் கூட்டிப் பெருக்கணும். சட்டிப் பானையை கழுவணும். ‘காபித் தண்ணி’ போடணும். சோத்துக்கு உலை வைக்கணும்.
இப்படி ஏகப்பட்ட ‘ணும்’ கள் காத்துக் கிடந்தன.
ஆனால்... காட்டில் கொட்டிய உயிர். பட்ட பாடு. குனிந்து குனிந்து நிமிர்ந்து எடுத்த பருத்தி. பெருவிரல் நகம் முழுவதும் கொத்திப் பிடுங்கும் வலி. எலும்பின் ஒவ்வொரு இணுக்கும் ‘படு, படு’ என்று கெஞ்சிக் கூத்தாடியது.
தலைவாசலில் தலை வைத்து நடையில் படுத்து விட்டாள். வெக்கையான காற்று வெதுவெதுப்பாக வந்தது. தழுவிப் படர்ந்து பரவசப்படுத்திய காற்று. வேல்க்கனி வந்தான்.
இவளைத் தாண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
கண்ணைச் சொருகிக் கொண்டு வந்த மயக்கமான அயற்சி. கிறுகிறுப்பான சோர்வு. புருஷனின் காலடிச் சத்தம். ஆத்மாவுக்குள் தனித்து முகம் காட்டுகிற சத்தம்.
“சாப்புட்டுடீகளா...?”
“ம். நீ பேசாம படுத்துரு! அலுத்த ஒடம்பு.”
“பாடுபடத்தானே பொறந்துருக்கம்? வேற என்னத்தைக் கண்டோம்.”
“சித்தே படுத்துரு.”
“ம்...”
கண்ணயர்ந்தாள். நீட்டி விட்ட கால். முழங்காலுக்குள் நெறுநெறுக்கிற சுகம். குறுக்கெலும்பெல்லாம் நீவிவிட்ட மாதிரி ஒரு சுக மயக்கம். லேசாகக் கண்ணயர்ந்த கணத்தில் —
வாசலில் யாரோ வந்து நிற்கிற சத்தம். மனசுக்குள் அந்நியமாய் ஒலிக்கிற காலடிச்சத்தம். ‘அண்ணன் வந்து நிக்கானா?’
மனசுக்குள் தீப்பிடித்த மாதிரியோர் அதிர்ச்சி. நரம்புகளின் நுனிவரை பரவிப்படர்ந்த உணர்வதிர்வுகள்.
‘திக்திக்’கென்று அடித்துக் கொள்கிற மனசு.
பதறிப் பதைத்துப் போய் தடபுடவென்று எழுந்தாள். அண்ணனேதான்!
இவளுக்குள் குபுக்கென்று பீறிட்டு வந்த வார்த்தை. “வாங்கண்ணே” என்று உள்ளிருந்து ஓடிப் பாய்ந்து வந்த வார்த்தை, தொண்டைக்குழியிலேயே நின்றுகொண்டது. விக்கிக்கொண்டது மாதிரி தொண்டையில் சிக்கிக்கொண்டது. வெறுப்பும் கசப்புமான, அலை அலையாக பழைய அனுபவங்கள்.
திறந்த வாய், உலர்ந்த உதடுகள், திகைத்த முகம் ‘என்ன செய்ய’ என்றறியாத குழப்பம். வெலவெலப்பு.
கனத்த கணம். நிமிர்ந்து பார்த்துவிட்ட இமை தட்டாத கண்கள். வரவேற்க அசையாமல் உறைந்து போன உதடுகள் ‘வா’ என்பாளா... ‘போ’ என்பாளா என்ற குழப்பமும் திகிலுமாய் கணேசராஜ்.
மௌனமான கணம். மனசுக்குள் உணர்ச்சிகளின் ஆரவாரக் கூச்சலிட்ட கனத்த கணம். முட்டி மோதிக் கொண்ட சகோதரப் பார்வைகளின் மௌன உரசல். ஓட மறந்த கால நதி உறைந்து விட்ட மாதிரி நின்று நிலைத்து கனத்த கணம்.
அந்த மௌனமான கனத்த கணத்தை வேல்க்கனி தான் சத்த உரசலால் நகர்த்தினான். கடத்தினான்.
“வாங்க மச்சான்... வாங்க... எப்ப வந்தீக?” என்ற உபசரிப்பில்தான் உறைந்த கால நதி இயங்கி நடக்கத் துவங்கியது.
“ஆமா... மாப்புளே” உயிரில்லாத குரலில் கணேசராஜ். இன்னும் அசையாமல் வாசலுக்கு வெளியே.
லட்சுமிக்குள் பேராச்சர்யம். பிரமித்துப்போய்க் கிடந்தாள். “எந்த நாயும் வரக்கூடாது. வந்தா... மரியாதை கெட்டுப் போவும்” என்ற வேல்க்கனியா மரியாதை செய்வது? வீட்டு வாசலுக்கு வந்துவிட்ட எவரையும் வரவேற்றாகணும் என்கிற நாகரிகம் மட்டும்தானா? அதற்கும் மேல் மனம் நெகிழ்ந்து போயா?
“என்ன... அங்கேயே நின்னுக்கிட்டு? வாங்க மச்சான் வீட்டுக்குள்ளே...”
கணேசராஜ் மெலிந்திருந்தான். தேன் நிறம் மங்கியிருந்தது. சுரத்தில்லாத குரலில், வீட்டுப் பொருளாதாரத்தின் தளர்ச்சி தெரிந்தது. நொடித்திருக்கிறான். நொந்துபோயிருக்கிறான்.
“லட்சுமி, எந்தி. உங்க அண்ணன் வந்துருக்காரு. காபித் தண்ணி போடு... சோறாக்கு...”
“என்னண்ணே... நீ நல்லாயிருக்கீயா?”
“இந்தா பாக்கேல்லே...? இருக்கேன்” சோர்வுக்குள் சுருண்டு விழுந்த குரல்.
எழுந்தாள். விறுவிறுவென்று வேலைகளில் மூழ்கினாள். நாலைந்து நாளாய் பெரும் கண்டமாய் நின்று மிரட்டிக் கொண்டிருந்த மலைப்பிரமாண்டம், வேல்க்கனியின் இளக்கத்தால் பனியாய் மாறி மறைந்து போன மாயத்தை நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்.
“நல்லவேளை... யாரு செய்ஞ்ச புண்ணியமோ... சுமுகமாக முடிஞ்சு போச்சு! அண்ணன் வந்து நின்னா... பூகம்பம் வெடிக்கும்னு பயந்து செத்தோமே... நல்லவேளை, பூகம்பம் வெடிக்கலே. பூமழையா வுழுந்துருச்சு...”
சூழல் சுமுகமாயிற்று. அவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்க, இவள் சமையலில் இருந்தாள். அண்ணன் வந்த சந்தோஷம். அமைதி தவழ்ந்த மகிழ்ச்சி. சமையல் செய்ய ஓடி ஓடிப் பரபரத்தாள். மனசுக்குள் ஓர் உற்சாகத் துள்ளல். உல்லாச றெக்கையடிப்பு, உடன்பிறப்பு. ரத்தப் பிறப்பு! அலையடித்து அலை விலகுமா என்ன?
வேல்க்கனியும் கணேசராஜும் திண்ணையில் உட்கார்ந்து சௌஜன்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மனசுக்குள் முரண்பட்ட உணர்வலைகள். கசப்பான பழைய நினைவுகளின் ஆரவாரமான அலைமோதல். வெறுப்பும் அவமதிப்பும் நிறைந்த அனுபவங்களின் ஆர்ப்பாட்டப் பேரலைகள். நாக்கு நுனி வரை வந்து வந்து முட்டி மோதி, முட்டி மோதித் திரும்புகிற வெக்கை வார்த்தைகள். வார்த்தைக்கங்குகள். உள் நாக்கின் எச்சிலில் சூடு தணிகிற தீக்கட்டிகள்.
‘அவரு செய்ஞ்ச தீவினையை அவரே அனுபவிச்சுட்டுப் போவட்டும். வீடு தேடி வந்த மனுசரை ‘வா’ன்னு சொல்லி உக்காரவைச்சுட்டு... பழசைச் சொல்லி ‘குத்திக்காட்றது’ மனுசத் தன்மையில்லே. குத்திக் காட்டிப் பேசி... பழிவாங்குறதாலே நமக்கு ஆகப் போறதென்ன?’ என்று மழைக்கால ஓடைத் தண்ணீராக ஒரு குளிர் நினைவு, வேல்க்கனியின் உள்மனசுக்குள் தித்திப்பாய் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால்-
லட்சுமி மனசுக்குள் முள்முள்ளாய் உறுத்துகிற ஒரு நினைப்பு. ‘என்னத்துக்கு வந்துருக்கான்? என்ன ஜோலி?’
உட்கார்ந்து சாப்பிடும்போதுதான்-
கணேசராஜ் அந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னான். அதுவும் தயங்கித் தயங்கி... மெல்ல மெல்ல... “லட்சுமிக்கு பச்சைச் சேலை, பச்சைச் சட்டை, பச்சைப் பாவாடை, பச்சை வளையல்... மஞ்சக்கயிறு, குங்குமச்சிமிழ் தங்கக் குண்டுமணி வாங்கித் தரணும்னு ஆசைப்படுதேன். அவள் வந்து வாங்கிக்கணும்.”
“என்னத்துக்கு மச்சான்? என்ன இது சாத்திரம்?”
“நாடெல்லாம் செய்றாக. நாமளும் செய்றோம்.”
“அதான் கேக்கேன், அது என்ன விஷயம்?”
“இது ஈஸ்வர வருஷம், பச்சை வாழை மட்டை வைச்சு அடுப்பெரிக்கிற அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டவ நல்லதங்கா... கொடுமை தாங்காம மனசு கொதிச்சு, சாபம் வுட்டுட்டு... ஏழு புள்ளைகளையும் கெணத்துலே போட்டு, தானும் வுழுந்து செத்து மாண்டது, இந்த ஈஸ்வர வருஷத்துலேதானாம்...”
“ம்...”
“சாபம் வுட்டு செத்த நல்லதங்காளோட மனக் கொதிப்பை ஆத்தித் தணிய வைக்குறதுக்குத்தான் இந்தப் பச்சைச் செய்முறை. பச்சைதானே கொதிப்பைத் தணிக்கும்? வளத்தைக் கொடுக்கும்...”
“யாருக்கு?”
“வாக்கப்பட்டுப் போன கூடப்பொறந்த தங்கச்சிக்கு அண்ணன் மாரு செய்ற செய்முறை இது. நல்லதங்கா வுட்ட சாபத்துலேயிருந்து தப்பிக்கிறதுக்கான செய்முறை. கூடப்பொறந்த தங்கச்சிக்கு இந்தச் செய்முறை செய்ஞ்சா... அதை வாங்கிக்கிட்டு, தங்கச்சிக மனசு நெறைஞ்சு வாழ்த்தினா... சாபத்துலேயிருந்து தப்பிச்சு அண்ணன் குடும்பம் பச்சை பச்சையா வளம் கொழிக்கும்னு ஒரு நம்பிக்கை...”
“அப்ப... லட்சுமிக்குப் பச்சை அயிய்ட்டங்களா செய்றது உங்க பாவத்துக்கு நீங்க செய்ற பரிகாரம். இல்லே? உங்க குடும்பம் செழிக்குறதுக்கும் தழைக்குறதுக்கும் செய்ற செய்முறை. இல்லே?”
“ஆமா... மாப்புள்ளே. ஆயிரம் கொடுமை செய்ஞ்சிட்டாலும் அண்ணன் குடும்பம் கெட்டுப் போகணும்னு எந்தத் தங்கச்சியும் நெனைக்கமாட்டா. அவ கட்டை வேகுற வரைக்கும் உசுருலே பொறந்த வீட்டு நெனைப்பு ஓடிக்கிட்டேயிருக்கும் மாப்ள்ளே.” பேச்சு பேச்சாக நீண்டுகொண்டே போக...
வேல்க்கனி மனசுக்குள் இப்போது வேறு வகையான நினைப்பு. லட்சுமி மனசுக்குள் முற்றிலும் வேறு வகையான நினைப்பு.
பலத்த உபசரிப்பு. பிறகு, விடைபெற்றுப் போனான் கணேசராஜ். ‘லட்சுமி வருவாளா... வந்து வாங்கிக்கொள்வாளா... வரமாட்டாளா’ என்று கட்டண்ரைட்டாக துல்லியமாகச் சொல்லாமல் சமாளித்து அனுப்பிய வேல்க்கனியின் சாமர்த்தியம். விலாங்குமீனாக நழுவிய அவனது தந்திரம். பேசின பேச்சில் கேட்ட கேள்விகளில் வேல்க்கனியின் குத்தல். கிள்ளல். மெல்லிய நையாண்டி. எல்லாமே கணேசராஜ் மனசின் ஆழத்தில் நிழலாடியது.
‘வருவாளா... லட்சுமி வரமாட்டாளா’ என்ற குழப்பத்துடன் கணேசராஜ் ஊருக்குப் புறப்பட்ட பிறகு தான்.
இந்த வீட்டில் முட்டலும் மோதலுமாய் வாக்குவாதம் தீப்பறந்தது. முரண்பாடான வாக்குவாதம்.
‘போகவே வேண்டாம்’ என்று கட்சி கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிற வேல்க்கனி.
எதுவும் செய்ய முடியாமல் மருகித் தவிக்கிற லட்சுமி.
“வீடு தேடி வந்த மனுசனை வெரட்டக்கூடாது. ‘வா’ன்னு சொன்னோம். ‘உக்காரு’ன்னு சொன்னோம். ‘சாப்பிடு’ன்னு சொன்னோம். அது நம்ம பண்பாடு. அத்தோடு முடிஞ்சுது. அவ்வளவுதான். ஒருத்தரு மேலே ஒருத்தரு வுழுந்து ஒறவு கொண்டாடணும்னு ஒண்ணும் அவசியமில்லே. இழவுதள்ளுன ஆளோட என்ன உறவு வேண்டிக்கிடக்கு? அம்புட்டுத்தான். இழவுதள்ளிட்டா... எல்லாமே தள்ளிடவேண்டியது தான். ஒன்னையும் கேவலப்படுத்தி... என்னையும் ஊரறிய கேவலப்படுத்துன ஆளோட என்ன உறவு வேண்டிக்கிடக்கு? நீ ஒண்ணும் போக வேண்டாம். அந்த ஆளோட வீட்டுவாசலை மிதிக்கவும் வேண்டாம். பச்சைச் சேலை வாங்கவும் வேண்டாம்.”
இதுதான் வேல்க்கனியின் கண்ணியம். கனல் பறக்கும் வைராக்கியம்.
“இம்புட்டுத் தூரம் கேவலப்படுத்தின ஆளோட வீட்டு வாசல்லே போய் நின்னு, பச்சைச்சேலையை கையேந்திப் பிச்சையாக வாங்குனா... அது மானங்கெட்ட வேலை. ஈனத்தனம். ஊர் கூடிச் சிரிக்கும். கைகொட்டிச் சிரிக்கும்.” என்று சீறிச் சினந்தான். காய்ந்த சட்டியில் போட்ட கடுகாகப் பொரிந்தான்.
அவன் சொல்வதெல்லாம் நியாயமாகவேபட்டது. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மாணிக்கம் என்று நெஞ்சில் ஒற்றிக்கொள்ளலாம் போலத் தோன்றியது லட்சுமிக்கு.
ஆயினும் -
அத்தனையையும் தாண்டி ஒரு மறுப்பு லட்சுமிக்குள் உட்கார்ந்திருந்தது. அந்த மறுப்பு அவளைப் பொறுவத்தவரை வலுவானது. நுட்பமானது.
அண்ணன் வீடு போய்... விருந்து சாப்பிட்டு... அவன் தருகிற ‘பச்சை பரிசுகளை’ப் பெற்றுக் கொண்டு அவன் குடும்பத்தை வாழ்த்த வேண்டுமென்று விரும்புகிறாள்.
அதற்கான நியாயம் இருக்கிறது. ஆனால் -
இவளுக்கே புரியவில்லை. இதுதான் இப்போதைய பிரச்சினை.
லட்சுமியின் இந்த மௌனம், சம்மதத்திற்கான மௌனமல்ல. மறுப்பின் மறுமுகம். இறுகிப் போயிருக்கிறாள். எதுவும் பிடிபடாத மர்ம இருட்டின் இறுக்கமாக இருக்கிறாள்.
எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருக்கிறாள் லட்சுமி. நிமிர்ந்து இவனையே இவனையே பார்க்கிறாள். பார்வையின் தீவிரம். சலனமற்ற விழிகள் இவனையே அலுங்காமல் பார்க்கின்றன.
குழப்பமாக இருந்தது வேல்க்கனிக்கு.
‘என்ன நினைக்கிறாள் இவள்?’
அவனது சீற்றம் நின்றுபோயிருந்தது. குரலின் உஷ்ணம் தணிந்திருந்தது. சற்றே நிதானித்தான்.
“மானங்கெட்ட பொழைப்பு பொழைக்க வேண்டிய அவசியமில்லே நமக்கு. நாம ஒண்ணும் கதிகெட்டுப் போயிருக்கலே. உங்க அண்ணங்கிட்டே கையேந்துற அளவுக்கு நாம வழியத்துப் போகலே... வேணும்னா சொல்லு... பச்சைச் சேலை மாதிரி பத்துச் சேலை எடுத்துத் தாரேன்” என்று ரோஷாக்னியோடு கையை நீட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்த வேல்க்கனியின் வேகம், லட்சுமியின் மௌனத் தீவிரத்தில் மட்டுப்பட்டிருக்கிறது. ஆனால், மடிந்து விடவில்லை.
லட்சுமியின் மனசுக்குள் பெரும் போர்க்களம்.
அடுப்புக்குள் விறகைத் திணித்தாள் லட்சுமி. சோறு ஒரு அடுப்பிலும் குழம்பு ஒரு அடுப்பிலும் கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த மஞ்சள் நிற வெளிச்சமாகவும் வெக்கையாகவும் இருந்த தீயின் நாக்குகளையும் உற்றுப் பார்க்கிறாள்.
அவள் மனசிலும் வெக்கை நினைவுகளின் வெளிச்சம். எதையோ பற்றிப் பிடிக்க எம்பி எம்பித் தாவுகிற நாக்குகளைப் போலவே, அவளுக்குள் நினைவுகள்.
அன்றைக்கு-
வேல்க்கனியும் கணேசராஜும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். ஏழு வருஷத்திற்குப் பிறகு மச்சானும் மச்சினனும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிற அழகு, ஒரு புதிய தரிசனம். ஒரு புதிய உறவுப் பூவின் மலர்ச்சி. மலர்வின் ஒளிர்வு. இவள் மனசின் சகல மூலைகளின் இண்டு இடுக்குகளிலும் படர்ந்து பரவிய ஒளிர்வு. அதன் நறுமணம்.
அவளுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.
அதே நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் பச்சைச் சேலை... பச்சைச் சட்டை... மஞ்சள் கயிறு... குண்டுமணித் தங்கம்... நல்லதங்காள்...
இவளுக்குள் ஏதேதோ எண்ணங்கள். பூரிப்பும் பெருமிதமுமாய் மனசுக்குள் நிறையப் பூக்கள். பூனைக்கும் ஒரு காலம் வந்திருக்கிறது. அவமதிக்கப்பட்டவர்களும் மதிக்கப்படுகிற ஒரு யோகம், ஒரு சமயம், ஒரு வாய்ப்பு.
அண்ணனும் கணவனும் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்குள்... உள் சோகமாய் ஒரு நினைவு.
‘அண்ணே... எனக்கு எம்புட்டோ கெடுதல் பண்ணியிருக்கே. நகையைக் குறைச்சே... இன்னும் எத்தனையோ கெடுதல் பண்ணுனே. கேவலப்படுத்துனே... சிங்காரிச்சு மூக்கறுத்தே. நாதியத்தவளா ஆக்கி நாசக்காடு பண்ணுனே. எல்லாக் கொடுமைகளையும் கூடப்பொறந்த பாவத்துக்காக நா பொறுத்துக்கிரலாம். மறந்துரலாம். ‘போய்த் தொலை’ன்னு விட்டுத்தொலைச்சிரலாம்.’
ஆனா... அவரு? என் புருஷன்?
அரவணைக்க வேண்டியவன் நீ. அழுது சிந்துற கண்ணீரைத் துடைக்கவேண்டியவன் நீ. வெரட்டுப்பட்டு, அடிபட்டு வந்தா... பாசத்தோட... பரிவோட புகல் தர வேண்டிய தாய்வீடா இருக்கவேண்டியவன் நீ.
ஆனா... நீ வெட்டுன காயத்துக்கெல்லாம் அடிச்ச அடிக்கெல்லாம் தாய்வீடு மாதிரி நின்னு ஆதரிச்சவரு அந்த மனுசரு. கண்ணீரைத் தொடைச்சவரு? ‘சீர்வரிசை பெரிசில்லே’ன்னு சொன்ன சீரான பெரிய மனுசரு அவரு.
அவரை நீ கேவலப்படுத்தினியே... இழவுக்கு வராம இழிவு செய்தீயே... ஊர்ச்சபையிலே வேட்டித்துண்டு கட்டி உரிய மரியாதை செய்யாம... ‘அம்போ’ன்னு வுட்டு, அவரு மூஞ்சியிலே கரியைப் பூசினீயே...
அதை எப்படிப் பொறுத்துக்கிட? அதை எப்படிச் சகிச்சிக்கிட? என் மூஞ்சியிலே காறித்துப்புனா... நா சகிப்புத்தன்மையோட தொடைச்சிக்கிடலாம். எம்புருஷன் மூஞ்சியிலேயும் துப்புனீயே... அதை எப்படித் தாங்கிக்கிட முடியும்?
‘அந்த அவமானத்துக்கு ஈடு செய்யாம... ஓங்கூட ஒறவேயில்லை. அவரு மூஞ்சியிலே நீ பூசின கரியை நீயே தொடைச்சாத்தான்... ஒன்னோட நா சங்காத்தம் வைச்சிக்கிடுவேன். இல்லேன்னா... இல்லே. செத்தாலும் சரி... நல்லதங்காளைவிடக் கேவலமாய்ச் செத்தாலும் சரி... ஒன்னோட பச்சைச் சேலையும் வேண்டாம்... பந்தபாசமும் வேண்டாம்.’
லட்சுமிக்குள் ஓடிக்கொண்டிருந்த நினைவுகள். தாம்பத்ய வாழ்க்கையின் மனக்கரைசலில் தன் உணர்வை விடவும் தன் புருச உணர்வைப் புனிதமாகக் கருதிய அவளது இயல்புத்தன்மை. சுவாசத்தைப் போன்ற இயல்புத்தன்மை.
வேல்க்கனி சாமர்த்தியமாகப் பேசி... பிடி கொடுக்காமல் வெளியே போய்விட்ட பின்பு.
தங்கச்சியிடம் தனிமையில் வந்த கணேசராஜ்.
“என்ன லட்சுமி, இம்புட்டு நேரமா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கோம். நீ ஒண்ணுமே சொல்லலே. நீ என்ன சொல்லுதே?”
“அண்ணே... முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம ஒண்ணே ஒண்ணுதான் என் நெஞ்சுக்குள்ளே கெடக்கு. அந்தத் தீயை அணைக்காம... என் மனசு அடங்காது. அந்தத் தீயை நீதான் வைச்சே. நீதான் அணைக்கணும்.”
“என்னம்மா லட்சுமி... இந்தப் பாவி வைச்ச தீ ஒண்ணா ரெண்டா? ஞாபகத்தில் இருக்க... நீ எந்தத் தீயைச் சொல்லுதே?”
“தாய்க்குத் தாயா, தகப்பனுக்குத் தகப்பனா... புருஷனுக்குப் புருஷனா இருந்த அந்த மனுசருக்கு நீ செய்ஞ்ச அவமரியாதையிருக்கே... இழவுக்கு வேட்டி துண்டு கட்டாம வுட்டீயே...”
“லட்சுமி, நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். ஊர்ச்சபையிலே நா செய்யாத மரியாதையை... ரெண்டே நாள்லே வேட்டி துண்டோட நா வந்து, கால்லே வுழுந்து மரியாதை செய்றேன்... போதுமா? அதை நா செய்ஞ்ச பெறகு... நீ எங்க வீட்டுக்கு வந்தாப் போதும். சரிதானா?”
“அது போதும். இந்த மனுசரு ரொம்பத் தங்கமான ஆளு. அந்த ஆளு மூஞ்சியிலே கரிபூசி... அவரு மனசு கொதிச்சதுன்னா... அதைவிடப் பெரிய பாவமும் சாபமும் வேற ஒண்ணுமில்லே.”
“சரி, லட்சுமி... நீ சொல்லிட்டே. நானும் புரிஞ்சிக்கிட்டேன். செய்றேன். உடனே செய்ஞ்சுடுறேன். போதுமில்லே?”
“அதுதான் எனக்கு வேணும்ண்ணே.”
தணிந்த லட்சுமியின் குரல். கொதிநிலையின் உஷ்ணம் குறைந்து... மனம் திருப்தியில் நிறைவுற்று குளிர்ந்த மாதிரியிருந்தது.
கணேசராஜ் இன்னும் தேங்குகிறான். கலங்கிச் சிவந்த அவன் கண்கள். சிவப்பு மெல்லிய ரேகைகள் உருளாமல் நிலைத்து நிற்கிற கருமுழிகள். அசைய முயல்கிற அண்ணனின் உதடுகள். இன்னும் என்னமோ கேட்க விழைகிறான். விரும்பினாலும் தயங்குகிறான். இன்னும் எதற்கோ கெஞ்ச விரும்புகிறான்.
“என்னண்ணே.”
“ஒண்ணுமில்லேம்மா.”
“ம்... ஆமம்மா...”
“அதான்... என்னண்ணே?”
“இல்லேம்மா... நான் வந்த காரியம் முடிஞ்சுதா, இல்லையான்னு தெரியலியேம்மா.”
அவன் பொத்திப் பொத்திச் சொல்கிற காரியம், இவளுக்குப் புரியத்தான் செய்கிறது. இருந்தாலும் தெளிவாகத் தெரிந்து கொள்ளணுமே என்பதற்காக புரியாததைப் போல மருள் மருள முழித்தாள்.
“நீ என்னண்ணே சொல்லுதே?”
“லட்சுமி... மாப்புள்ளேகிட்டே இம்புட்டு நேரம் பேசிக்கிட்டிருந்தேன். நீயும் கேட்டுக்கிட்டிருந்தீல்லே? எழவு தள்ளுன ஈனப்பய நா. வாசல்லே வந்து நின்ன என்னை ‘வா’ன்னு கூப்புட்டதே, மாப்பிள்ளையோட பெருந்தன்மை. உக்காருன்னு சொன்னாரு. சாப்புடச் சொன்னாரு. பழைய புண்ணு எதையும் கிண்டிக் கிளறாம, சிரிக்கச் சிரிக்க சௌஜன்யமாய் பேசுனாரு. மாப்புள்ள தங்கமான மனுசருதான். அதுலே எந்த மாத்தும் இல்லே. ஆனா... ஆனா...?”
“சொல்லுண்ணே... என்ன ஆனா?”
“பச்சைச் சீர்வரிசை செய்றேன்னு சொன்னேன். வரச்சொல்லிக் கூப்புட்டேன். ‘லட்சுமியை அனுப்பலே’ன்னும் சொல்லலே. ‘அனுப்புறேன்னும் சொல்லலே’ மாப்புள்ளே மர்மப் பேச்சா பேசிட்டுப் போறாரு. பிடி குடுக்காம சாமர்த்தியமாய்ப் பேசிட்டுப் போயிட்டாரு...”
“ஆமா... நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்...”
‘என்னாலேயும் என்ன செய்ய முடியும்’ என்பது போல வருத்தமாகத் தலையாட்டுகிற லட்சுமி. ‘அவரு சொல்லை மீறி நா மட்டும் தனிச்சு வர முடியாதே’ என்று கையறுநிலையில் புலம்புகிற ஒரு தொனியும் தோரணையும் அந்தத் தலையசைப்பில் ஒளிந்திருந்தது. மெளமான மறுப்பு போல அச்சுறுத்துகிறது.
கணேசராஜுக்கு அடிவயிற்றில் கலக்கம். மச்சினர்தான் கோணல்காலைச் சாத்துகிறார் என்றால்... கூடப்பொறந்த ரத்தப் பொறப்பு தங்கச்சியும் ‘மர்மத் தலையசைப்பு’ செய்கிறாளே.
‘வரமாட்டேன்’ என்பாளோ...
‘ஓங்கிட்டே வந்து பச்சைச் சேலையை பிச்சையா வாங்குறதைவிட... நானே ஒண்ணுக்கு ரெண்டா புதுச்சேலை எடுத்துக்கிடுதேன்...’ என்று வீம்பு பேசி விடுவாளோ... வீராப்புகாட்ட ஆரம்பித்து விடுவாளோ?...
கணேசராஜுக்குள் ‘திக்திக்’கென்றது. திகிலும் கிலியும் மனசைப் போட்டுப் பின்னியது.
ஊரிலிருந்து புறப்பட்டு வரும்போதும் இதே திகிலும் இருந்தது. மனசு கிடந்து பயந்து தவித்தது. ‘திக், திக்’கென்று அடித்துக் கொண்டது.
‘போய் வாசலில் நின்றால்... என்னென்ன மாதிரியான அவமதிப்பெல்லாம் கிடைக்கப் போகிறது’ என்று அலைஅலையாய் திகில் கற்பனைகள். கிலிக் காட்சிகள். அடிவயிற்றில் பீதியைப் பரப்புகிற யூகங்கள்.
“வா” என்று வரவேற்காமல் மௌனம் காத்து விடுவார்களோ... “எந்த மூஞ்சியோட இந்த வீட்டு வாசப்படியிலே கால் வைக்க நெனைச்சே?”ன்னு விளக்குமாறடி விழுமோ.
“வந்த வழியைப் பார்த்து ஊருபோய்ச் சேரு. வாசப்படியிலே கால் வைச்சீன்னா... மரியாதை கெட்டுப் போவும். ஊர் சிரிக்க மானம் கெட்டுப் போவும்.” என்று ‘வௌம், வெளமாக’ சீறிச் சினந்து பாய்வார்களோ. நல்லவேளை அப்படி எதுவும் நடந்து விடவில்லை. நாகரிகமாக - மரியாதையாக - நடத்தி கௌரவப்படுத்திவிட்ட மச்சினர் வேல்க்கனி.
கடைசி கடைசியாக... மெயின் காரியத்தில் பல்லைக் கடிக்கிறார்கள்...! வெள்ளாமைக்காலம் முழுவதும் நல்ல தோற்றம் காட்டி நம்பிக்கையூட்டிய கம்மங்கதிர்கள், விளைந்த பிறகு மழைக்குள் மாட்டிக் கொண்ட மாதிரி... கடைசி நேரத்தில் காலை வாரி விடுகிறார்களே... வெட்டிக் கிடக்கும் குழிக்குள் விழுத்தாட்டுகிறார்களே.
“லட்சுமி...”
அவனது உள்மன உணர்ச்சி முழுமையும் மொத்தமாய்த் ததும்பியது.
“என்னண்ணே?”
“நீ எந்தங்கச்சி. ஆயிரம் கொடுமைக பண்ணியிருந்தாலும் நா ஒனக்கு அண்ணன். ஒரே ரத்தம். அய்யா அம்மாவோட ரத்தம்தான் நம்ம நரம்புகளிலே ஓடுது...”
“அதுக்கு என்ன... இப்போ?”
“இல்லேம்மா... நம்மளைச் சுமந்து பெத்த அம்மா இருந்து வாழ்ந்த வீடு. நம்ம வீடு அய்யா இருந்து நம்மளையும் புஞ்சைகளையும் வெளைய வைச்சாரு. அவரு வேர்வை சிந்துன புஞ்சை, நம்ம புஞ்சைக. நீயும் நானும் சின்னப்புள்ளையிலேயிருந்து உழுத புழுதியிலே பாதம் பதிச்சு ஓடித்திரிஞ்ச பூமி நம்ம புஞ்சைக. நம்ம புஞ்சைக நல்லா வெளையணும். ‘நம்ம அய்யா அம்மா கட்டுன வீடு பச்சைப்பசேல்னு செழிச்சுப் பொங்கணும்’னு நீதான் நினைப்பே. நீ வைச்ச வேப்பமரம் பட்டுப் போயிரக்கூடாது. நீ வளர்த்து விட்ட ஆடு குட்டிக மலடாயிரக்கூடாதுன்னு நீதான் பதறுவே. ‘தானாடாட்டாலும் சதையாடும்’னு பெரியாளுக சொல்லுவாக.”
உருகி வழிந்து உணர்ச்சிபொங்க மருகி மருகி பேசுகிற கணேசராஜ். குறுக்கிடுகிற லட்சுமி. அவளது பொறுமைச் சிதைவு.
“அதெல்லாம் சரிண்ணே... இப்ப என்ன செய்யணும்?”
“மாப்புள்ள மறுத்தாலும், வேண்டாம்னு வெட்டிச் சென்னாலும் என்னோட ரத்தப் பொறப்பு நீதான் அவருக்கு எடுத்துச் சொல்லணும். அவரைச் சம்மதிக்க வைக்கணும்.”
“அதல்லாம் புரியுது. ஆனா... நா என்ன செய்ய முடியும்? ஒனக்குப் பிந்திப் பொறந்த சின்னவ... நா... பொட்டச்சி, பொம்பளையால என்ன செய்ய முடியும்? ஓம் மச்சினரு ஆம்பளை. தாலி கட்டுன புருஷன். அவருக்குள்ளே கட்டுப்பட வேண்டிய பொட்டச்சி நா. என்னாலே என்ன செய்ய முடியப் போகுது? அதை நெனைச்சாத்தான் மலைப்பா இருக்கு.
சரிண்ணே... நீ இம்புட்டுச் சொல்லி மருகணுமா? எந்தப் பொம்பளைக்கும் பொறந்த வீட்டுப் பாசம் ரத்தத்துலேயே இருக்கும் கட்டை வேகுற வரைக்கும். ‘தங்கச்சி குடும்பம் தழைக்கணும்’னு நினைக்காத அண்ணமாரு ஒலகத்துலே ஒண்ணு ரெண்டு இருந்தாலும் இருப்பாக. ஆனா... ‘அண்ணன் குடும்பம் கெட்டுப்போகணும்’னு எந்த தங்கச்சியும் கனவுலேகூட நெனைக்கமாட்டா... இதான் நெசம். நீ நிம்மதியாக போய்ட்டு வா... நா அவருகிட்டே கட்டாயம் பேசுதேன். போதுமாண்ணே?”
“இது போதும்மா... இது போதும்மா... நீ இம்புட்டுச் சொன்னதே எனக்குப் போதும்மா” என்று சிரிப்பும் கண்ணீரும் கண்ணில் மின்ன பரவசப்பட்ட அண்ணன். ஆனந்தக்கூத்தாடுகிற மனசின் முகமாக உதட்டு ஈர மின்னல். முகத்தில் பூவின் புது மலர்ச்சி. மலர்ச்சியின் வெளிச்சம்.
காலைப்பிடிக்கிற கலக்கத்தோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் அவளது கையைப் பிடித்த அண்ணன். கையில் குளிர் ஸ்பரிசம். அதற்குள் உரசிய மனசின் மொழி. பாச உணர்வு. அன்புக் குழைவு.
ரொம்பக் காலத்துக்கு முந்தைய அண்ணனின் உள்முகம், அந்த உள்ளங்கை ஸ்பரிசத்தில் தெரிந்தது. வெள்ளை மனசு அண்ணன். நல்ல மனசு மட்டுமே உள்ள அண்ணன். கல்மிஷம் கலக்காத பாச அண்ணன். காசு, பணம் என்கிற கபடவிஷம் விழாமல்... தூய பாலாக இனித்த சகோதர வாஞ்சை மட்டுமே ததும்பிய அந்தக் காலத்து அண்ணன்.
மனசெல்லாம் குழைந்துகிடந்த லட்சுமி. அடுப்பில் எரியும் தீஜ்வாலையின் நிறத்தையே பார்க்கிறாள். மனசுக்குள் அலைஅலையாக நினைவுகள். வேல்க்கனியின் வீராப்பு, முறைப்பு, மறுப்பு, வேண்டாம் என்று போடுகிற ரோஷத் தடை இதை எப்படிச் சமாளிக்க? முடியுமா? தாம்பத்ய உறவே இதில் உடையுமா?
லட்சுமிக்குள் கலக்கம். ஆத்ம நடுக்கம். இத்தனை தூரம் சரணாகதியடைந்த பிறகும் அண்ணன் மேல் கோபப்படுவதற்கான நியாயம் அவளுக்குள்ளேயே இருப்பது போல ஒரு மர்மமுகம் மனசுக்குள் உறுத்துகிறது.