உதட்டில் உதடு/001
உதட்டில் உதடு
தொங்கும் சூரியன் தொலைந்து, வீடு
எங்கும் விளக்கு எரியும் நேரம்,
கூவும் கோழியின் கழுத்து போன்ற
அரிவாள் மணையில் கறிகாய் தன்னை
அரிந்து கொண்டு இருந்தாள் அஞ்சலை.
அஞ்சலை, நிலக்கரி நிறந்தான்; ஆயினும்,
உடலின் அமைப்பு; உளியின் உதவியால்
கட்டிப் பாறையில் வெட்டிய சிலைதான்!
அவளது புருஷன் அஞ்சான் என்பவன்,
புளியங் கொட்டை போன்ற கண்கள்
உள்ள ஆட்டை ஓட்டிக் கொண்டு
வந்தான் வீடு. வந்தான் அவளிடம்,
நின்ற வினாக்குறி படுத்தது போல
இருக்கும் மீசையை இடது கையால்
முறுக்கிக் கொண்டே மனைவியைப் பார்த்து,
“நறுக்கிய மாம்பழச் சாறே! கேட்பாய்,
கன்னியா குமரி சென்று; அங்கே,
பள்ளக் கடலில் பதுங்கி இருக்கும்
முத்துக் குளிக்க சித்தங் கொண்டேன்.
சித்திர மயிலே! சென்று வரட்டுமா?”
என்றான். “நல்லது” என்றாள் சென்றான்.
அஞ்சான் சென்று ஐந்துநாள் ஆனது.
அஞ்சலை தூங்கியும் ஐந்துஇர வானது.
ஒருதினம் காலை ஒன்பதே கால்மணி.
பள்ளிச் செல்லும் பையன்கள் இருவர்
கன்னியா குமரிக் கடலில் பெரும்புயல்
வீசும் சேதியைப் பேசிக் கொண்டு
போவதை, அந்தப் பேதை கேட்டு,
“அவருக்கு எதுவும் ஆபத்து நேர்ந்ததோ”
என்று நினைத்தாள் நினைத்த உடனே,
அடிக்கடி அசையும் இமையில் வந்து
தொத்தி, கண்ணீர், முத்தாய் உதிர்ந்தது !
அழுத துளியும் பொழுது மாக
இருக்கும் போது, இவளுக் காக
கணவன் எழுதின கடிதம் வந்தது.
ஆவ லாக அதனைப் பிரித்தாள்:
“அஞ்சலை ! எனது ஆசையின் உதவியே !
உன்னைப் பிரிந்த ஒருமா சமாக,
இரவு உலகம் இனிக்க வில்லை.
மனசு எல்லாம் மந்தம் ஆவுது.
கொத்தும் கிளிநான் குமரிக் கரையிலும்,
கொய்யாப் பழம்நீ கூரை வீட்டிலும்,
இருப்பதால் அல்லவா இந்தத் தொல்லை !
ஆகையி னாலே தோகை மயிலே !
நாளை ராத்திரி நிச்சயம் வருகிறேன்”
என்று எழுதி இருப்பதை; வர்ணப்
பார்வை இரண்டு பார்க்க, மனதால்
வாசித்து முடித்தாள். முடிந்ததும் உதடுகள்
சந்தோ ஷத்தால் சிவந்து போயின !
அடுத்தநாள், உதயம், நடுப்பகல், முடிந்து
அந்தி நேரம் வந்து பிறந்தது.
அத்தான் ஞாபகம் அவளுக்குச் சுரந்தது.
உடனே அந்தக் குடும்பத் தலைவி
நாயின் நாக்கு போன்ற பாதம்
நாட்டியம் ஆட, தோட்டம் சென்று
பூவும் அரும்பும் பறித்துச் சூடி
வெள்ளைச் சிரிப்புடன் உள்ளே வந்து
புடவை மாற்றி பொட்டு திருத்தி
அழகை உடம்பிலும் அன்பை நெஞ்சிலும்
தேக்கிக் கொண்டே, திறந்த விழியும்
துடித்த நினைப்புமாய், படுத்துக் கிடந்தாள்.
“அன்னமே!” என்று அழைத்த படியே
ஆளன் வந்தான். அழகி பறந்து
“மச்சான்!” என்று மார்பில் படிந்தாள்.
வெடுக்கென் றணைத்தான். “விடாதீர்” என்றாள்
உடனே,
உதட்டில் உதடு புதைத்து எடுக்கும்
முத்தம், அதுதரும் சத்தம்—வளர்ந்தது.
இருந்த வெளிச்சம் இவர்களால் அணைந்தது !