உதட்டில் உதடு/002
எச்சில் முத்தம்
சந்திரனைப் போல்தோசை!
சுவையுள்ள அதிரசங்கள்,
வெந்துபல மடைந்த
கொழுக்கட்டை, கிழங்குவகை,
வளைந்த நிலாப்பிறையின்
வடிவத்தைக் காட்டுகின்ற
சுளையுள்ள நாசத்தை,
சத்துள்ள வேர்க்கடலை,
சுற்றிவைத்த கம்பிச்
சுருள்முறுக்கு, நாவல்மரம்
பெற்றெடுத்துக் கொடுத்த
பழங்கள்—இவற்றை எல்லாம்
அங்காடிக் கூடையிலே
எடுத்துவைக்கும் தன்மகளை
மங்கம்மா பார்த்து,
“மாங்குயிலே! மனைவிளக்கே!
இடித்துவைத்த மாவை,
எடுத்துஒரு பானையில்வை
கடிக்கின்ற குரங்கின்
கைவிரலைப் போலிருக்கும்
பயிற்றங்காய் தன்னைப்
பறிக்காதே, பெருக்கட்டும்
வயலூரு சந்தையிலே
வாங்கிவந்த வெற்றிலையை,
ஈரத்துணி சுற்றி எடுத்துவை”
என்று சொன்னாள்,
ஊருக்கே பேரழகி
உடனே அதைச்செய்தாள்.
★
அங்காடி விற்றுவரும்
மங்கம்மா மறுபடியும்
சங்கீதம் பாடுகின்ற
பெண்வண்டு முகம்நோக்கி,
“ஏடுவிட்டுக் கொண்டிருக்கும்
இளவாழைக் கன்றுக்குப்
பாடுபட்டுக் தண்ணீர்
பாய்ச்சி வளர்த்துள்ளோம்.
வேலி, வெகு மோசம்.
ஆடெல்லாம் ஊசிக்குள்
நூலுபோலே புகுந்து
தின்றுவிடும், பார்த்துக்கொள்.
வயல்நுழையும் காவிரியே,
வளர்ந்துவரும் நெல்குருத்தே!
தயிர்க்காரி இங்குவந்தால்
சில்லரையைக் கொடு” — என்று
நொய்புடைத்துக் கொண்டிருக்கும்
வேலையை நிறுத்தித்தன்
கையெடுத்தாள், தன்சுருக்குப்
பையெடுத்தாள்; அதைஎடுத்துக்
காசையெடுத்தாள், கொடுத்தாள்.
வாரிக்கொண் டையைமுடித்தாள்
வாசமலர் அணிந்த
மங்கைதன் தாயிடத்தில்;
“அடுப்பிலே வைப்பதற்கு
ஒன்றுமே இல்லையம்மா!”
“ஒடித்துவைத்த மிலாறு
ஒருகட்டு இருந்ததெங்கே?”
“மான்கொம்பு போலிருந்த
அந்தமிலா றெல்லாம்
மீன்குழம்பு வைத்து
முடிப்பதற்கே போதவில்லை!”
“அப்படியா! ஆகட்டும்,
குப்பனிடம் நான்சென்று
இப்போதே விறகுக்கு
ஏற்பாடு செய்கிறேன்”
என்றுசொல்லி, ‘வெய்யில்
அதிகரித்த’ தென்றுசொல்லி
தன்கூடையைத் தூக்கித்
தலைமேலே வைத்திட்டாள்.
“வரும்போது பனங்கிழங்கு
வாங்கிவம்மா!” என்றாள்.
“சரி” என்றாள் “வீட்டில்
பத்திரம்” என்றாள். சென்றாள்.
பெற்றதாய் போனஉடன்,
பூத்தமலர்க் கொடியாள்
முற்றாத மாம்பிஞ்சை
வெட்டிவைத்துக் கொண்டிருந்தாள்.
★
கதிரடித்து நெல்குவிக்கும்
களத்தில், ஒருபுறத்தில்
முதிர்ந்த வயதுடையாள்
வியாபாரத்தைத் தொடர்ந்தாள்.
★
செந்தூரப் பொடிபோலே
செக்கச் சிவந்திருக்கும்
அந்திப் பொழுதினிலே
ஆகாயத் தின்மேலே
சாய்ந்திருக்கும் குரியனை
சஞ்சரிக்கும் மேகத்தை,
வாய்திறந்து கூவுகின்ற
வர்ணப் பறவைகளை,
பட்டங்கள் வால் அவிழ்ந்து
பறக்கின்ற காட்சிதனை
சுட்டும் விழியாலே
சுவைபார்த்துக் கொண்டிருந்தாள்,
அங்காடிக் காரிபெற்ற
அருமைமகள் கண்ணம்மா.
மங்கைஅவள் இவ்வாறு
இருக்கும் தருணத்தில்,
செல்லம் குடியிருக்கும்
தெருவில் முழங்குகின்ற
கல்யாண வாத்தியத்தின்
ஓசைவர, அதைக்கேட்டு
பெரியநிலா முளைக்கும்
பன்னீர் இரவுதனில்
பருவமலர் தெளித்த
பஞ்சணையிலே படுத்து
அன்புக்கு அன்புதந்து
ஆனந்தக் காதல்செய்து
பொன் அழகன் தேகத்தைப்
போர்த்தபடி தூங்க, அந்த
அன்னத்தால் இனிமேலே
ஆகும். அதுபோலே
என்றைக்கு அந்த
இன்பம் எனக்குவரும்?
‘பொதிகைமலைச் சந்தனமே!
பூவுலகில் எல்லோரும்
மதிக்கும் தமிழே! என்னை
மயக்குகின்ற போதையே!
ஓடிநிலம் கழுவும்
ஓடையிலே பூத்திருக்கும்
வாடாமலரே, அதன்
வாசனையே, எச்சில்முத்தம்
ஓசையுடன் கொடுத்து
உதவுவாய்’ என்றுஎன்னை
ஆசையுடன் கேட்கஒரு
அத்தான் கிடைப்பதெந்நாள்?
‘முத்துச் சிரிப்புதனை,
மூடிவைக்கும் என்உதட்டைக்
கொத்துங்கள் அத்தான், வாய்க்
கோவைப் பழத்தலே’
என்றுநான் சொல்லி,
இதழ்கள், புதுத்தோள்கள்
கன்னங்கள் கற்கண்டு
முத்தம் கொடுப்பதெந்நாள்?”
என்றுஅடுக் கடுக்காய்
எண்ணமிட்டு கண்ணம்மா
நின்றுகொண் டேயிருந்தாள்
நிற்கும் மரத்தருகில்,
அந்தச் சமயத்தில்
ஆருடம் சொல்லுபவன்
அந்த வழியாக
வருவதைத் தான்பார்த்து
செங்கரும்பு போல்இனிக்கும்
சொல்லாலும், கையாலும்
‘இங்கேவா’ என்றழைத்தாள்
எட்டிப்பழ நிறத்தாள்.
கொட்டுகின்ற தேளின்
கொடுக்குமீசையை முறுக்கி
விட்டுக்கொண்டே வந்தான்,
வேல்விழியாள் வீட்டுக்கு.
வண்ண மலரழகி
வந்தவனிடம் வந்து,
“என்கையைப் பார்த்துச்சொல்”
என்று சொல்லி உட்கார்ந்தாள்.
காவடிப் புருவம் பார்த்தான்
கன்னத்தில் மின்னல் பார்த்தான்
சேவலின் தாடி வர்ணம்
சிவப்பாகும் உதட்டில் பார்த்தான்
பூவுக்குப் புருஷ னாகும்
வண்டோடு கூந்தல் பார்த்தான்
தாவிடும் ஆசை யாலே
தனித்தனி அங்கம் பார்த்தான்.
‘வான்வந்து கண்ணுக் குள்ளே
வளருதே! துள்ளும் கெண்டை
மீனுக்கு இந்தப் பெண்ணின்
முகத்திடம் வேலை என்ன?
மான்விழி இவள் விழிக்குள்
இருப்பதேன்?’ என்று எண்ணி
தேன்பார்த்தான் பேச்சில், ரேகைத்
தொழில்பார்த்தான், பார்வையாலே.
மலர்க்கொடி போலே ஆடி
வளர்கின்ற இடையைப் பார்த்தான்.
‘நிலத்திலே நிலா விழுந்து
விட்டதா? முகமா? இவ்வூர்க்
குளத்திலே பூத்திருக்கும்
தாமரை தானா?’ என்று
தலை தூக்கிப் பார்த்தான், தையல்
தலையைத் தூக்காதபோது!
கண்ணாடி ஓடு போலே
கைநகம், விரல்கள், பொட்டு
உண்டாக்கும் அழகு, காதில்
ஒளிவீசும் வெள்ளைக் கம்மல்,
கண்ணம்மா காலில் ஒட்டிக்
கொண்டுள்ள சிலம்பு, அந்தக்
கன்னியின் கையில் சுற்றிக்
கொண்டுள்ள வளையல் பார்த்தான்.
இடதுகை தன்னில் ஓடும்
கைரேகை தன்னைப் பார்த்து
“வெடித்திட்ட அரும்பே! ஆறு
வாரத்தி லேகல்யாணம்
நடந்திடும்; உனக்குப் பிள்ளை
நானான்கு பதினா” றென்றான்.
உடைக்காத சிறு உளுந்தின்
உட்புறம் போல் சிரித்தாள்.
அரிசியைக் கேட்க வந்த
எதிர்வீட்டுக் கிழவி “ஐயா!
சுரைக்காயின் விதையைப் போலே
சிரிக்கின்ற மாதை, இன்னும்
பறிக்காத பூவை, கொய்யாப்
பழத்தினை,பறிக்கக் காத்து
இருப்பவன், இவளை மாலை
இடுபவன் அழகன் தானா?
படிப்போடு ஒழுக்கம் உள்ள
பையனா? இன்பம் காணக்
துடித்திடும் வயது வந்த
தோகைக்குப் பொருந்து வானா?
எடுத்துரை!” என்று கேட்டு
இடதுகை விரலை நெட்டி
ஒடித்துக்கொண்டிருந்தாள்; மூக்கை
உறிஞ்சி கொண்டிருந்தாள் மங்கை.
மேல்வேட்டி போட்டுக் கொண்டு
மீசையை, ஆட்டுக் குட்டி
வால்போல மேலே தூக்கி
வளர்த்துள்ள இளைஞன், பச்சை
நூல்சேலை உடுத்தி யுள்ள
நங்கையைப் பற்றிக் கேட்ட
கேள்விக்கு பதிலைச் சொல்லத்
தொண்டையை கனைத்துக் கொண்டான்.
“வெண்பஞ்சு போல் நரைத்து
இருக்கின்ற பாட்டி அம்மா!
நண்டுக்கண் போல் இருக்கும்
வேப்பம்பூ மாலை சூடி
மண்டலம் ஆண்ட பாண்டி
மன்னவன் போன்றோன்; கீர்த்தி
கண்டவன், கலைஞன்; இந்தக்
கோதையை மணப்பான்!” என்றான்.
கேட்டதும் மகிழ்ந்தே போனாள்
கிளிப்பேச்சுக் காரி ஆனால்
பாட்டியோ அவளைப் பார்த்துப்
பரிகாசம் செய்தாள் காசை
நீட்டினாள் வாங்கிக் கொண்டான்
அதிரசம் தந்தாள் பெற்றான்.
மூட்டையைக் கட்டிக் கொண்டான்,
விடைபெற்றான் எழுந்தான் போனான்.
போய்க்கொண் டேஇ ருந்தான்
புழுதிமண் வீதி மேலே !
நாய்ஒன்று அவனைப் பார்த்து
குரைத்தது; ஓடிக் கொண்டான்.
காய்க்காத மாம ரத்தின்
காலடி தன்னில் குந்தி
வாய்ப்பாட்டு பாடிக் கொண்டே
முண்டாசு கட்டிக் கொண்டான்.
அதிரசம் தனை எடுத்தான்
அதில்அவள் உருவம் தோன்ற,
‘புதிதாகப் பார்க்கும் உந்தன்
பார்வைதான் இனிப்பா? இல்லை,
மெதுவான பேச்சா? முத்தம்
வளர்க்கின்ற உதடா?’ என்று
மதிதடு மாற்றத் தோடு
மார்பிலே அணைத்துக் கொண்டான்!